Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்...

-சுகன்

மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல.

மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது.

விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும்
கற்றுக்கொடுத்தும் வருகிறது.

பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது.

காலம் முழுதும் வதுசாரி பிற்போக்கு முதலாளித்துவ முகாங்களிற்குள் இயங்கியவர்கள் அதன் பன்றித் தொழுவத்தில் வாழ்ந்து சுகங்கண்டவர்கள் திடீரென அரற்றியபடி அலமலந்து துள்ளி எழுந்து

"ஐயோ!அம்மா!! நான் மார்க்ஸிஸ்ட்!!"



"நம்மைவிட கம்யூனிஸ்ட்டுகள் வேறெவர்?"

என்றவாறான பாவலாக்களையும் பச்சோந்தித் தன்மைகளையும் நாம் இன்று நேற்றல்ல , எப்போதுமே கேட்டுவந்துள்ளோம்.

இவ்வகையிற்தான் சாதியின் பேரால் ஒடுக்கப்படுபவர்களின் கூட்டு விழிப்புணர்வாகிய தலித் ஓர்மையையும் எழுச்சிகளையும் போராட்டங்களையும் புகலிடத்தில் ஆதரிப்போர்கட்கும் அதற்காக இயன்றவரை உழைப்போரிற்கும் மார்க்ஸியத்தின் பேரால் அவதூறுபடுத்தி அவர்களைக் கொச்சைப்படுத்தி வேசதாரிகள் என்று அவர்களை எள்ளி நகையாடி கரித்துக் கொட்டி காழ்ப்புணர்ச்சியோடு நீ
ண்டகால அவர்களது மூதாதையரின் சாதி வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கக்கிளம்பியிருக்கிறார்கள் சாதி வெறி தேசியவாத தேசம் நெற்றும் இனிஒருவும்!

அவதூறிற்கும் கிசுகிசுக்களிற்கும் பேர்போன 'தேசம்நெற் இனிஒரு' தனது வால் நிமிராதென்று தொடர்ந்து நிரூபித்துவருகிறது.

நமது ஆசான்கள் இந்த நிலையை இப்படிக் காட்சிப்படுத்துவார்கள்.;

கடவுளோடிருந்த தேவர்கள் பூமியைப்பார்க்க ஆசைப்பட்டார்கள்.

மேலிருந்து எட்டிப்பார்த்தபோது பன்றிகள் பீயிலும் சாக்கடைகளிலும் புரண்டு நெளிந்துகொண்டிருந்தன. தேவர்களுக்கு அந்தக்காட்சி சுவாரசியமாகப் பட்டது.

கடவுளிடம் கேட்டபோது கடவுள் அளித்த விளக்கம் அவர்கள் ஆர்வத்தை அதிகப் படுத்தி தாங்களும் அதுபோல சில நாட்கள் வாழ்ந்து பார்க்கவேண்டு
மென கடவுளிடம் விண்ணப்பித்தார்கள்.

கடவுள் நாட் கணக்கைக் கொடுத்து இத்தனை நாளிற்கப்புறம் நீங்கள் மீண்டுவந்துவிடவேண்டுமெனச்சொல்லி அனுப்பிவிட்டார்.

நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி யுகங்களாகியும் பன்றிகளிற் கூடுபாய்ந்த தேவர்கள் கடவுளிடம் திரும்பியபாடில்லை.

"வர்ர நோக்கம் இல்லையோ!" என கடவுள் கேட்டபோது

"என்ன சுகம்! என்ன சுகம்!! இந்தச்சுகானுபவம்!!"

என மீள மறுத்துவிட்டதாக கதை உண்டு.

அவதூறு கிசுகிசு பரபரப்பு என பீயிலும் சாக்கடையிலும் உழலும் பன்றிகள் சிலநாட்கூட அவையின்றி வாழமுடியாத அபத்தமான நிலையில் பொரு
ளாதார ரீதியாகவும் கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் தமது பிறப்பினடியாக ஒதுக்கப்பட்ட மக்கள் தமக்குள் ஒருங்குசேர முயற்சிக்கும்போது மார்க்ஸியத்தைத் துணைக்கழைத்து அவர்கள் எத்தனங்களை முளையிலேலே கிள்ள நினைப்பது வேடிக்கை, மேற்சாதிவாடிக்கை.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம் ஒடுக்குமுறையிலிருந்து மீள தமக்குக் கிடைக்கும் எல்லாவகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள் என்பது மார்க்ஸியத்தின் அரிச்சுவடி.

சுயமரியாதையையும் தமது தனித்துவத்தையையும் தன்மானத்தையும் எல்லாவற்றிலும் மேலாக தம்மை சமூகத்தில் முதல் மனிதர்களாக சமமானவர்களாக முன்நிறுத்துவதில் "தலித் அரசியல்" பெரும் ஆதர்சத்தையும் ஆறுதலையும் வழங்குகிறதென்றவகையில் அதைப் பற்றிநிற்பதில் எங்கே தவறும் தடுமாற்றமும் இருக்கமுடியும்.

எவ்வளவு தடித்த சாதிகொழுப்பு இருந்தால், தடிப்பிருந்தால் தமக்குரிய சாதிப்பேர்களைக் கடாசிவிட்டு தமக்குத்தாமே சுயமரியாதையுடன் இட்டபேராகிய தலித் என்ற பேரையே வைக்கக்கூடாதென்று இந்த மேற்சாதிநாய்கள் கூறுவார்கள்.

சாதித் திமிரில் வக்கிரத்தில் காலந்தோறும் இட்ட தாங்கள் விழித்துவந்த அவர்கள், பஞ்சமர்கள் என்று கூறும்படி கேட்பார்கள்!

காலங்காலமாக நால்வகை தந்திரங்களுடனும் தத்துவங்களுடனும் ஒடுக்கி அடக்கி வந்தவர்கள்

"தம்புகள் தும்புகள் தம்பட்டக் கம்புகள்" என்றும் "அதுகள்" என்றும் அஃறிணையில் விழித்து வந்தவர்கள் திடீர்க் கரிசன மிகுதியால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைச் சொல்லுங்கோ!

உயர்ந்தவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்று நாங்கள் எங்களைச் சொல்லாமல் சொல்லுகிறோம் என்கிறார்கள்.

இன்னும் புத்திசாலிகள், தலித் என்று நீங்கள் ஏன் உங்களை ஒதுக்கிக் கொள்கிறீர்கள் நாங்கள் எல்லோரும் சூத்திரர்கள்தானே ! என்கிறார்கள்.

புத்திசாலித்தனமும் நயவஞ்சகமும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவரும் முகம் இது.

அடே! உங்களுக்கு உயர் வேளாளர்கள் என்று ஏன் பெயர் வந்தது?

சற்சூத்திரர் என்று ஏன் சொல்லும்படியாயிற்று என உங்களையும் உங்கள் அப்பன்மாரையும் எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா?

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

ஏதாவது ஒரு பெயரில் ஒரு சமூகம் தங்களைத் தாங்களே சொல்லிவிட்டுப் போகட்டுமே?

இதற்கேன் நாம் மல்லுக்கட்டுவான் என்று ஒரேஒருமுறை நீங்கள்
'சமூக ஜனநாயகத்தின்' பேரால் குழப்பமடைந்ததுண்டா?

இனி ஒருவின் ஓரவஞ்சனையான காட்டுரைக்கு இனி வருவோம்!

இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்படுவது தமிழ் அரசியல்!

அதே தர்க்கத்தின் அடிப்படையில் இனந்தெரியாத தன்னை வெளிக்காட்ட திராணியற்ற ஒரு சுயமரியாதையற்ற மனிதனின் அவதூறிற்கும் அபத்தத்திற்கும் நாம் கவனம் கொடுத்து பதில் சொல்லவேண்டுமா என்பது

நமக்குக் கொடுக்கப்பட்ட சவால்!

ஆனால் மார்க்ஸியத்தைக் கேவலப்படுத்த அந்த அனாமதேயம் முடிவெடுத்தபின் மார்க்ஸீயத்தின் பேரால் நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான காவு
ட்ஸ்கியை லெனின்

"ஓடுகாலி;தெருவில் அலையும் விபச்சாரி!"

என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார் ஆனால் அது தனது சொந்தப்பெயரில், அறியப்பட்ட பெயரில்!

அந்த நேர்மையாலேயே மார்க்ஸியம் இன்றும் வாழும் ஒரு தத்துவமாக இருக்கிறது.

ஆனால் யாரிட்ட சாபமோ ! இப்படியான முகமூடிகளையும் இரும்புக்கை மாயாவிகளையும் மார்க்ஸியத்தின் பேரால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாயாவிகள் நமக்குப் பரிச்சயமானவர்கள்.

இராவணேஸ்வரன் நாடகத்தில் மாயாவி ஒரு அதிமுக்கியமான பாத்திரம்.

புராணப்பாத்திரங்களுடன் தம்மை அடையாளப்படுத்துவது நல்ல அறிமுகம்தான்.
சம்புகன் இராமனால் கொல்லப்பட்ட ஒரு சூத்திரன்.


அந்த சம்புகனைக் கேளடா ! நாம் இந்துவா நீ சொல்லடா?

என்று கே.ஏ.குணசேககரனின் ம க இ க பாடல் நாம் எல்லோரும் கேட்டதுதான் .

குணசேகரன் தலித் அரசியலிலும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் பங்களிப்பை நல்கும் அறிஞர்.


திராவிட அரசியலும் தலித் அரசியலும் இத்தகைய புராணப்பாத்திரங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்தையும் மதிப்பையும் வரலாற்றுத் தொன்மையையும் நாம் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

இங்கே சம்புகன் தலைகீழாக நடந்து வருகிறார் ஒரு மேற்சாதிக்காரனின் லாவகத்தோடும் நுட்பத்தோடும்.


நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.


சில நேரங்களில் நமது குசினிக்குள் வெள்ளம் தண்ணி வந்தால் அம்மிக்கல்லுக்குள் அடியில் ஒழித்திருக்கும் தேள் நட்டுவாக்காலி வெளிவருவதில்லையா! அப்படித்தான்.

இப்போதெல்லாம் இது ஒரு பாஸன்.

ஒடுக்குபவர்கள், சூத்திரர்கள் என்ற முகத்தோடுதான் வேட்டையாட வருகிறார்கள்.


இலங்கையில்,இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் பல இருந்தபோதும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு குறிப்பாக பிரான்சில் திடீரென ஆச்சரியப்படத்தக்கவகையில் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது ஏன் என்பதை நீண்டகாலமாக புகலிட அரசியற்போக்குகளை அவதானிப்போர் அறிந்திருப்பர்.
புதிய ஜனநாயகக்கட்சி புகலிடத்தில் பொதுமட்டத்தில் அறியப்பட்டு இருக்கவில்லை. அது அறியப்பட்டதெல்லாம் அதனது தலித் அரசியல் எதிர்ப்பிற்காகவே.


கம்யூனிஸ்டுகளான அண்ணாமலை, விஜயானந்தன்,வினோதன் போன்றோர் கொல்லப்பட்டும் மணியண்ணர் போன்றோர் சிறைவைக்கப்பட்டுமிருந்த சூழலில்
கம்யூனிஸ்டுகள் அதன் சரியான அர்த்தத்தில் புலிஎதிர்ப்பாளர்களாகவே ஏக தேசம் அறியப்பட்டிருந்தனர்.


புலிகள்; வலதுசாரி, குறுந்தேசியவாத, பாஸிச, பயங்கரவாத, மக்கள்விரோத, மார்க்ஸிய விரோத, ஜனநாயகவிரோத....இன்னோரன்ன அடையாளங்களுடன் புகலிட பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் கருத்தரங்குகளில் சந்திப்புகளில் அறியப்பட்டிருந்தார்கள்.

அதற்கு எதிர்நிலையாக புலிஎதிர்ப்பாளர்கள் அறியப்பட்டிருந்தார்கள்... இடதுசாரி.. சர்வதேசிய .. ஜனநாயக...இப்படி.

அப்போதும் புதியஜனநாயகக் கட்சி அறியப்பட்டிருக்கவில்லை.

தனது கம்யூனிஸ்ட் கட்சி (இடது) எனும் பெயரைக் கடாசிவிட்டு புதியஜனநாயகக் கட்சி எனும் பெயரேற்றுக்கொண்டதற்கான காரணங்களையும் சூழல்களையுமிங்கு யாரும் அப்போது தேடுவாரில்லை.


எப்போது அவர்கள் இங்கு தேவைப்பட்டார்களெனில் நிறப்பிரிகை தொடக்கி வைத்த அம்பேத்கர் நூற்றாண்டு, அதை ஒட்டிய தலித் அரசியல் தமிழ்ச்சூழலில் பேசுபொருளாகிய பின்னணியில் புகலிடத்தில் அதை ஒட்டிய தேடலும் கரிசனமும் ஆதரவும் தோன்றியபோது வெள்ளாள தமிழ்த்தேசிய இயக்கப் பின்னணியிலிருந்து வந்த நபர்கள்,

"தலித் அரசியல் தமிழர் ஒற்றுமையையைக் குலைக்கும்,தொழிலாளர் வர்க்கத்தைப் பிளக்கும்" என்றமாறான முன்நோக்குகளை முன்வைத்தார்கள்.

இன்றும்கூட கிழக்குமாகாணத்தின் அரசியல் சுயாதீனத்தை மறுப்பவர்கள் தலித் அரசியல் எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதை இத்தோடு தொடர்புபடுத்தலாம்.

தம்மைத் தமிழ்த்தேசியத்தின் மூலவர்களாகவும் தமிழ்மக்களின் தலைவர்களாகவும் எதிர்காலத்தில் கற்பனை செய்து வைத்திருப்போர்க்கு அவர்கள் ஆதிக்கசாதிப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால்,யாழ்ப்பாணப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால் மற்றெல்லோரையும்விட அவர்கள் தலித் அரசியலை மிகவும் புரிந்துகொண்டிருந்தார்கள்.

எப்படியெனில் தலித் அரசியல் தலித்துகளின் அரசியல் தலைமையை வலியுறுத்துகிறது.நாங்கள் தலித்துகள் அல்ல,வெள்ளாளர்கள், அப்படியானால் நமக்கான இடம் என்ன?


நாம் சொன்னோம் "" ஏன் தலித்துகளின் தலைமையை ஏற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

அவர்கள் சொன்னார்கள்;தமிழ்த்தேசிய இனத்தின் போராட்டத்தைத் திசை திருப்பிவிடும்!"

"அப்போது தலித்துகள் தொடர்ந்து பனை ஏறவேண்டியது தானா?"
" நாம் அவர்களுக்கு நவீன முறையில் தொழில்நுட்ப சாதனங்களைப் பனை ஏற அறிமுகப் படுத்துவோம்", "அவர்கள் தொழிலாளர் வர்க்கம்"

நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள்! நமது வெள்ளாளர்கள் தமிழ் அரசியலில் தலித்துகளிற்கு இப்போதும் இந்தத் தீர்வினைத்தான் வைத்திருக்கிறார்கள்.
புலிகள் சொன்னார்கள்;நாம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம்!

*****************




அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,திராவிட இயக்கங்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொண்டிருந்தது மட்டுமல்ல தம்மைச்சுய விமர்சனமும் செய்துகொண்டிருந்தார்கள்.
பெரியார்..அம்பேத்கர் என்று தம்மை விரிவுபடுத்திக்கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலித்துகள் கெளரவத்தோடும் மரியாதையோடும் போற்றப்பட்டார்கள்,அதன் முக்கிய பொறுப்புகளிற்கு

வந்தார்கள்,கட்சிகளுக்கு புதிய தார்மீக பலம் கிடைத்தது.

ஆனால் நமது புதிய ஜனநாயகக் கட்சி கிணற்றுக்குள் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.

தனது அரசியலில் சுயாட்சி,சுயநிர்ணய உரிமை இவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்கத்தொடங்கியது.இன்றுவரை புதிய ஜனநாயகக்கட்சி கிழக்கின் அரசியல் சுதந்திரத்தை மறுப்பதன் பின்னணி அதனது தமிழ்த்தேசிய அடிபணிவுதான். இந்தலட்சணத்தில் ஆதிக்க சாதியினரின் தமிழ் அரசியலிற்கு ஆபத்பாந்தவனாக கிடைத்த சிறுதுரும்புதான் புகலிடத்தில் புதிய ஜனநாயக (யாழ்ப்பாணக்) கட்சி.

(முன் கதைச் சுருக்கம்)

ஆனால் புகலிடத்தில் இடதுசாரிய மரபு இருக்கவில்லையா என நீங்கள் கேட்பீர்களாயின்; இருந்தது தோழர்களே!

தோழர்,பரா இடதுசாரி மரபிலிருந்து பிறழாமல் தலித் அரசியலை ஆதரித்த குற்றத்திற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். விமர்சிக்கப்பட்டார்.

தோழர்.சிவலிங்கம் நிலை இன்னும் பரிதாபகரமானது.அவர் இணைந்திருந்த எஸ்.எல்.டி.எவ் தலித்முன்னணியை ஆதரித்த குற்றத்திற்காக அவரும் வஞ்சத்தில் வீழ்ந்தார். எஸ்.எல்.டி.எவ் தலித் முன்னணியை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அதற்கு எந்தப்பிரச்சனையும் வந்திராது.

ஈ.என்.டி.எல்.எவ் முஸ்தபா வுடன் ரேடியோவில் தோழர்.சிவலிங்கம் அவர்கள் கடைசிவரை அரசியல் ஆய்வு நடத்துமட்டும் அவர் வஞ்சத்தில் வீழவில்லை.ஆனால் அவர் அமைப்பு தலித் மாநாட்டை லண்டனில் நடத்தும்போதுதான் அவர் வஞ்சத்தில் வீழ்ந்தார்.

இப்போது நித்தி.

சரவணனும் அப்படியே!

அன்றுமுதல் இன்றுவரை சரிநிகரையும் சரவணனையும் ஏந்தி இருந்தவர்கள் அவர் தலித் நெற் என்னும் இணையத்தளம் தொடங்கியபோதுதான் அவரைத் தொம்மெனக் கீழே போட்டார்கள்.அவர் புலிகளிடம் அடிவாங்கியபோது ஐயோ!!

அம்மா!! நான் நிர்வாணமாக நிற்கிறேன் என்றவர்கள் அவர் தலித் நெற் தொடங்கியபோது புலியிலும் மோசமாக அவர்களால் எதிர்கொள்ளப்படுகிறார்.
இத்தகைய தனிமைப்படுத்தல்களுக்கு நீண்ட தொடர்ச்சியுண்டு.

சிறூபான்மைத் தமிழர் மகாசபையிலிருந்து தலித் நெற்வரை இது தொடர்கிறது.
சரி இவர்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொள்ளவேண்டாம்,தலித் அரசியலுக்கு மாற்றாக இவர்கள் போக்குக்காட்டும் கம்யூனிட்ஸ்கட்சிகளுடன் உறவு எப்படி இருக்கிறது?

பூச்சியம்தான் .ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சியுடன் உங்களை இணைத்துக்கொண்டதுண்டா?

தமிழ்த்தேசியத்தைத் தவிர.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்துடனும் கள்ள உறவு. புலிகளே இவர்களது ஆதர்சம்.

பிரபாகரனின் பேட்டி போடுவதும் லோகநாதனைக் காட்டிக்கொடுப்பதும், வரலாறு எல்லாவற்றையும் குறித்துத்தான் வைத்திருக்கிறது!

காட்டுரைக்கு வருவோம்!

சாதி ஒடுக்குமுறையைத் 'தணிப்பதில்'அந்நியத்தலையீடு பங்காற்றிய அளவிற்கு பெளத்தமும் பங்காற்றியுள்ளது.

இந்திய, யாழ்ப்பாணச் சூழலில் இந்துத்துவத்தின் பிடிப்பைப் பேசுபொருளாக்குவதைத் தவிர்ப்பதற்காக தென்னிலங்கையில் பெளத்தத்தைத் தவிர்ப்பது மொள்ளமாறித் தனம். ஏமாற்று.

பெளத்தத்தின் நால்வருண முறைக்கெதிரான போராட்டத்தின் விழுமியம் இன்னும் தென்னிலங்கைப் பெளத்தத்தில் உண்டு.அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு தென்னிலங்கையில் பிறப்பும் சாதியும் ஒரு தடையாய் அமைவதில்லை.

யாழ் குடாநாட்டில் சகல துறைகளிலும் வலுவாக இருந்த சாதியத்தின் பிடிப்பு யாரால் ? எதன்பேரால் ?எந்தச்சாதியின் பேரால் என்று சொல்வதற்கு சம்புகனுக்கு என்ன தயக்கம்?

ஏனிந்த ஒழிப்பு மறைப்பு?

யாரைக்காப்பாற்ற?

'இருந்த' என்று இறந்தகாலத்தில் குறிப்பிடுவதை நிகழ்காலம் குறித்துத்தான் வைத்திருக்கிறது.

'சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களு'மென்ற முதற்பதிப்புத் தலைப்பில் இலங்கையில் என்று சேர்க்கவேண்டி வந்ததற்கான காரணத்தை ரொம்பவும் சின்னப்புள்ளத்தனமாகச் சம்புகன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டதால் அப்படி ஆகிவிட்டதென்று.

தமிழகத்தின் தலித் எழுச்சி,அதை ஒட்டி எழுந்த தலித் அரசியல் ,தலித் இலக்கியம் ,தலித் பண்பாடு இவை குறித்த ஆயிரக்கணக்கான வெளியீடுகளும் ஆய்வுகளுந்தான் ஈழச்சூழலில் சாதியம் குறித்த கரிசனையை மீளக் கொண்டுவந்தது.

ஈழத்தில் சாதியம் குறித்த பல்வேறு ஆய்வுகள் தமிழகத்தில் கவனம் பெற்றது. டானியல் தலித் இலக்கியத்தின் மூலவராகப் போற்றப்பட்டார்.(இதில் அ.மார்க்ஸின் பங்களிப்பிற்காகவே இன்றுவரை கூட்டுச்சேர்ந்து தாக்கப்படுகிறார்.)

முக்கியமான ஒரே ஒரு வரலாற்று ஆவணம் என்ற ரீதியில் 'சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' முதற்பதிப்பு தேடியும் கிடைக்காத அளவிற்கு பிரபல்யமானது.அதனது குற்றங்குறைகளுடன் எல்லோராலும் தேடப்பட்டது.

நான் பலருக்கு அதைப் பரிந்துரை செய்திருக்கிறேன். 1990இல் நாங்கள் பாரிசில் அதை எடுத்து வினியோகித்துப் போதாமல் போட்டோக்கொப்பி அடித்து வினியோகித்தோம்.

அதனது விற்பனை நோக்கங்களுக்காக, 'இலங்கையில்' என்று முன்னொட்டு சேர்க்கப்பட்டதேயல்லாமல் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டதாலல்ல.

அதை வண்ணார்பண்ணையில் பதிப்பித்தாலும் இந்தியாவில் விற்பனைக்குப் போகும்போது இலங்கைக்குரிய அடையாளம் இருந்துதான் தீரும்.

தமிழகத்தில் அதைப் பரவலாகுவதற்கான எத்தனமே அப்பெயர்மாற்றம்.

இன்னும் சரியாகக் கேட்போமானால்" அப்போது இலங்கையில் இருக்கும் வாசகர்களுக்காக இரண்டாம் பதிப்புப் போடவில்லையா??" என்று கேள்வி எழுமே!

என்ன சொல்வீர்கள்?

மட்டக்களப்பில் திருகோணமலையில் மலையகத்தில் என்று பதிப்புகள் போடும்போடு மாறி மாறித் தலைப்பையும் மாற்றவேண்டியிருக்குமே?

'இந்தியாவில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' என்று ஈழத்தில் பதிப்பு ஒன்று போடவேண்டியிருக்குமே?

ரொம்பவும் சின்னப்புள்ளைத்தனமாகவெல்லோ உங்கள் சால்யாப்பு இருக்கிறது.
"தமிழகத்தில் தலித் அரசியல் ஏற்படுத்திய, இலங்கையில் சாதியம் குறித்த தேடல், டானியலின் நூல்கள் மற்றும் ஈழத்து இலக்கியம் இவை குறீத்த கரிசனம் மீண்டும் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவரக் காரணமாயிற்று..."

என்று பெருமிதத்துடன் கூறுவதற்கு என்ன பிரச்சனை? ஏன் தயங்கவேண்டும்?
அப்படியாயின் தேசிய கலை இலக்கியப்பேரவை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் அல்லவா 'இலங்கையில்' என்று முன்னொட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.

டானியலின் காலத்தில் தலித் அரசியல் தமிழகத்திலும் தமிழ்ச்சூழலிலும் பேசுபொருளானதில்லை என்ற சாதாரண உண்மைகூட சம்புகனுக்குத் தெரியவில்லை. "டானியல் தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளவில்லை,தமது நூல்களில் பயன்படுத்தவில்லை" என்று கூறும் சம்புகன் டானியல் எப்போது இறந்தார் என்பதையாவது அறீந்திருப்பாரா ?

டானியல் இறந்தது 1984 இல்!

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் அரசியல் பேசுபொருளானது 1992இல்!

சரி டானியலை விடுவம், இப்போது டொமினிக் ஜீவாவும் சரவணனும் தேவதாஸனும் பயன்படுத்துகிறார்களே! ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே!

எப்படி மார்க்ஸியத்தின் பேரால் தலித் அரசியலைத் தவிர்த்துத் திண்டாடுகிறார்களோ அதே அடிப்படையிற்தான் அப்போது சிறூபான்மைத்தமிழர் மகாசபை, எம்;சி,கொம்யூனிஸ்கட்சி (மொஸ்கோ சார்பு)இவற்றின் பங்களிப்பையும் வரலாற்றையும் தவிர்ப்பதில், அதீத அக்கறை காட்டி வந்துள்ளார்கள். சண்முகதாசனை நூலில் 'மன்னித்தவர்கள்' எம்.சி.யை மன்னிக்கவில்லை.கடைசியில் எம்.சி.சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் ஒரு துரோகியாகவே நூலில் சித்தரிக்கப்படுகிறார்! சரவணன் சொன்ன கட்சிப்பிரச்சார நூலாகத்தானே, அப்பட்டமாக புதிய ஜனநாயகக்கட்சியின் தலித் அரசியல் விரோத பிரச்சார நூலாகத்தானே இரண்டாம் பதிப்பு வந்துள்ளதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

இதன் மறுபக்கமாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறாக தற்சமயம் வந்துகொண்டிருக்கிற புதிய வெளியீடுகளான

1) ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி(என் .கே.ரகுநாதன்)
2)வாழ்வும் வடுவும்(இ.வே.செல்வரட்ணம்)
3)எம்.சி ஒரு சமூக விடுதலைப் போராளி(எஸ்.சந்திரபோஸ்)
4)எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்(டொமினிக் ஜீவா)
5)வரலாற்றில் வாழ்தல்(எஸ்.பொ)

போன்ற தன்வரலாற்று நூல்கள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு பக்கங்களையும் இருட்டடிப்புச்செய்யப்பட்ட பக்கங்களையும் சுட்டிச் செல்கிறதே!
"1964ற்குப்பிறகு தமிழர்களிடையே சாதி எதிர்ப்புப் போராட்டத்தை மார்க்ஸிய லெனினிய வாதிகளே முன்னெடுத்தனர்" என்று தலித்துகள் வேறாகவும் மார்க்ஸிய லெனினிய வாதிகள் வேறாகவும் இன்றுவரையும் இருக்கின்ற நிலையை 'மார்க்ஸியம்' ஏற்றுக்கொள்கிறதா?

இதே அளவுகோலையும் ஆவேசத்தையும் மைய,மேற்சாதிய கட்சிகளுக்குப் பாவித்ததுண்டா?

மாதவி தலித் அரசியலின் மிகவும் அடிப்படையான விடயத்தை தொட்டுச் சென்றார்; தலித் அரசியலின் வெளிச்சத்தில் தலித் உளவியலைப் புரிந்தோர்க்கு மாதவியின் கருத்தில் பிரச்சனை ஏதுமிருக்கவில்லை.

தலித்துகளிடமிருந்து கற்றுக்கொள்ள வெள்ளாளர்களுக்கு மட்டுமல்ல, முதலாளித்துவக்கட்சிகட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகட்கும் நிறைய இருக்கிறது.

எஸ்.ரி.என்.நாகரத்தினம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அவரது படத்தைத் தாங்கிய முதற்பதிப்பு முக்கியமான விடயத்தைச் சொல்கிறது.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ரி.என்.சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒரு கட்டத்தில் தலைமை தாங்கியது தலித் அரசியல் முன்வைக்கும் 'தலித் தலைமை' என்ற முன்நிபந்தனையுடன் தொடர்புள்ளது.

தலித்துகளின் தலைமையை தொட்ர்ந்து சகிக்கப்பழகாத மனநிலையே இரண்டாம் பதிப்பில் எஸ்.ரி.என் படத்தை அகற்ற வேண்டிய முடிவிற்கு வந்தது.

வாசகர்கள் இவ்விடத்தில் தலித் தலைவர்களின் படங்களை சிலைகளை அகற்றியும் சேதப்படுத்தியும் மேற்சாதி வெறீயர்கள் தமிழகத்தில் நடத்தும் வன் கொடுமையை இவ்விடத்தில் நினைவுபடுத்தவும்.

தம்மை நளவன் என்றும் தலித் என்றும் பொது அரங்குகளில் சந்திப்புகளில் மாநாடுகளில் பிரகடனப்படுத்தும்போது வெள்ளாளர்கள் கூனிக் குறுகித்தான் போகிறார்கள். குற்ற உணர்ச்சி கொள்கிறார்கள்.

அவை ஏற்படுத்தும் 'சங்கடங்களிலிடருந்து' தப்புவதற்கு தலித் என்று சொல்லாதே என எழுத்திலும் பேச்சிலும் முறையிடுகிறார்கள்.

அதுவும் மார்க்ஸியத்தின் பேரால்.

நம் காலத்தின் மிகப்பெரும் மார்க்ஸியரான தோழர் டொமினிக் ஜீவா சொல்கிறார்:

தலித் என்ற சொல் மிகமிக வலிமை வாய்ந்தது. ஆழமானது. அகலமானது.
அர்த்தபுஸ்டி வாய்க்கப்பெற்றது.

இந்தச்சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட ,தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக- புழக்கத்தில் வந்துவிட்டது.

இந்தத் தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் பரவலாகவும் தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்பட்டு வந்துள்ளது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது.

அந்தச்சொல்லின் வலிமை என்னையும் ஆட் கொண்டகாரணத்தினாலேயே நான் எனது சுய சரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன்.


" நாங்களும் மனுசங்கடா"

தலித் இயக்கம் கற்றுத்தந்த மூல மந்திரம் இது!



********************************


அடிக்குறிப்பிற்காக!


  • அநாமதேயப் பெயர்களில் தனிமனித தாக்குதல்களையும் அவதூறுகளையும் நடத்தி அவர்களே கட்டுரை எழுதிவிட்டு தமது சொந்தப்பெயர்களில் யோக்கியவான்களாக அதைக் கண்டித்து பின்னூட்டம் விடுவது மனித மாண்புமல்ல மார்க்ஸியமுமல்ல.
  • நூல்வெளியீடுகளும் விமர்சனக்கூட்டங்களும் அந்த நூல்களைப் பிரபல்யப்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மேலும் மேலும் நம்மைச் செழுமைப்படுத்தவும் முக்கியமானவை.
  • "சுதந்திரம் என்பதே எப்போதும் மாற்றுக்கருத்திற்கான சுதந்திரந்தான் "என்பார் ரோசா லுக்ஸம்பேர்க்
  • களங்கமற்ற மனது மிகச்சிறந்த அறிவாற்றலைவிட மேலானது(இஸ்ரவேல் பழமொழி)

'உலாவும் காழ்ப்புணர்வு வைரஸ்'


அறிக்கை -
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

‘‘சாதியத்திற்கெதிரான போராட்டங்களும் புலம்பெயர்ந்த வேஷக்காரர்களும்‘‘ என்ற தலைப்பிடப்பட்டு சம்புகன் என்பவராலேயே அக்காழ்ப்புணர்ச்சி வைரஸ் பரப்பப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தனிநபர்கள் மீதான தாக்குதலுக்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வழமைபோல இவ்வாறான செய்திகளுக்கு முன்னுருமை கொடுப்பதற்கென்றே தமது வாழ்வை அர்ப்பணித்து தியாகம் புரியும் ‘இனியொரு‘, ‘தேசம்‘ போன்ற இணையங்களிலேயே சம்புகனின் காழ்ப்புணர்ச்சிச் செய்தியும் வெளியாகியுள்ளது.


தேழர் சி.கா.செந்தில்வேல் அவர்களும், தோழர் ந.ரவீந்திரன் அவர்களும் எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ எனும் நூலும், சு. சந்திரபோஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி‘ எனும் நூலையும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம் பிரான்சில் முதலில் அறிமுகப்படுத்தியதோடு அந்நூல் பற்றிய விமர்சன நிகழ்வையும் ஏற்பாடுசெய்தோம். பிற்பாடு லண்டனில் இலங்கை ஜனநாயக ஒன்றிய உறுப்பினர்களுடன் நாமும் இணைந்தே அங்கும் மேற்படி நூல்களின் அறிமுக, விமர்சன நிகழ்வையும் ஏற்பாடு செய்தோம்.


எனவே சம்புகனின் காழ்ப்புணர்வையும் அவரது நிதானமற்ற எழுத்துகளையும் நூல் ஆசிரியர்களுக்கும், தலித் சமூக ஆர்வலர்களுக்கும் விளக்குவது எமது கடமை எனக்கருதியே இதை எழுதுகின்றோம். இதனூடாக ‘சம்புகன்களை‘ வெற்றிகொள்வதென்பதோ, ‘சம்புகன்களிற்கு‘ விளக்கமளிப்பதென்பதோ எமது நோக்கமல்ல.


தோழர் செந்தில்வேல் அவர்களை நாம் பிரான்சில் சந்திக்கும்போது ‘சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும்‘ என்ற நூல் பல புதிய மேலதிக இணைப்புகளுடன் மறுபதிப்பு செய்வதாக அவர் கூறியபோது நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அப்புத்தகம் ஒன்றே முதல் முதலாக யாழ்ப்பாண சாதிய ஒடுக்குமுறைகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பதிவு செய்த புத்தகம் அது மீளவும் மறுபதிப்பு செய்வது மிக அவசியமானதே எனக்கூறி, அது வெளிவரவேண்டியதன் அவசியம் பற்றியும் அவருடன் கலந்துரையாடினோம். பிற்பாடு அவரே எமக்கு சில புத்தகங்களையும் அனுப்பி வைத்தார்.


விமர்சனம் என்பது நிறை,குறைகளை பரிசீலிப்பது. அதுவே ஒரு படைப்பாளியின் பன்முக வளர்ச்சிக்குரிய தளம் என்பதுவும் பலர் அறிந்த விடயம். அப்படியான விமர்சனங்கள் சரியாக முன்வைக்கப்பட்டதா இல்லையா என்பது வாசகர்களின் புரிதலின் எல்லைக்குட்பட்டது. இதை நூலாசிரியர்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். காரணம் நூலாசிரியர்களும் அவ்வாறான குறை, நிறை விமர்சனங்களை முன்வைத்தே தமது பார்வைகளை அகலப்படுத்த முனைந்துள்ளார்கள் என்பதை ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ எனும் நூலை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வர்.




மீண்டும் சொல்லுகின்றோம் நாம் பிரான்சில் ஏற்பாடு செய்த அறிமுக, விமர்சன நிகழ்வில் விமர்சனம் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. புத்தகத்திலுள்ள உயர்சாதிய ஒடுக்குமுறை செய்திகள் குறித்தே அதிகமாக பேசப்பட்டது. அந்தவகையில் ‘இலங்கையில் சாதியமும் அதெற்கெதிரான போராட்டமும்‘ என்ற நூலின் அவசியமும் தேவையும் அதன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே பிரான்சில் உரையாற்றியவர்களின் கவனத்திற்குள்ளானது. ஆனால் சாதியம் குறித்து நூலில் பேசப்படும் அரசியல் குறித்தோ, அதில் பேசப்படும் சாதியப் போராட்ட நடைமுறைகள் பற்றியோ, அந்நூல் ஆசிரியர்கள் பிறர் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்தான விவாதங்களோ பிரான்சில் நடைபெறவில்லை. ஆனால் லண்டனில் நடைபெற்ற நிகழ்வானது நூல்பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ப்பட்டதாகவே நாம் நம்புகின்றோம்.


பிரான்சில் நடைபெற்ற நூல் விமர்சனக் குறைபாட்டை அங்கு நடந்த கலந்துரையாடலின்போது சோபாசக்தி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதோடு இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் மீதான தனது அபிப்பிராயத்தையும் சுருக்கமாகக் கூறினார். ஆனால் . ‘‘ பாரிசில் சோபாசக்தி இந்த நூல் எம்.சி.சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன்‘‘ என்று சம்புகன் குறிப்பிட்டுள்ளார். இதே சோபாசக்திதான் ‘‘இது வந்து மிக முக்கியமான புத்தகம். கிட்டத்தட்ட இலங்கையிலுள்ள சாதியமைப்பின் தோற்றம், அதனுடைய போராட்டங்கள் பற்றிய தகவல் அடங்கிய மிகக் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம்.....இந்தப் புத்தகம் வந்து ஒரு ஆவணக் களஞ்சியம். கடந்த நூறு வருடங்களாக இலங்கையில் நடந்த தலித் போராட்டங்கள்..., எத்தனை தலித் அமைப்புக்கள் இருந்தன, அவை எங்கே முடக்கப்பட்டன, 1966 இன் ஒக்டோபர் எழுச்சி என்ற பலவகையான விடயங்களைக் கொண்ட ஆவணம். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் எங்களைப்போல சமூக அக்கறையுடையோருக்கு இது ஒரு கைநூல்...., ஒரு பைபிள்...‘‘. என்றும் சொன்னார். (பார்க்க ) இத்தகைமைகளையும் சம்புகன் மறுப்பதாகத்தானே அர்த்தம்!! ஏனெனில் சோபாசக்தி புத்தகம் வாசிக்கவில்லை எனில் மேற்படி சோபாசக்தி சொன்ன நூலுக்குரிய தகைமைகளும் வெறும் கற்பனைதானோ!!. சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கும், சமூக அக்கறையுடையோருக்கும் உகந்த புத்தகம் இல்லை என்பதாகத்தான் சம்புகன் கருதின்றார்.



இப்புத்தகத்தை உன்னிப்பாக படிப்பீர்களாயின் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை இந்நூல் கடுமையாக விமர்சிப்பதை நீங்கள் அறிவீர்கள். எம்.சி சுப்பிரமணியம் அவர்கள் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்பதாகக்கூட சொல்லப்படுகிறது.‘‘ என்பதாகவும் சோபாசக்தியின் விமர்சனம் இருந்தது. இந்த நூலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை குறித்து பதிவு செய்யப்பட்ட ஏழாவது அத்தியாயத்திலிருந்து எட்டாவது அத்தியாயம் வரை பேசும் விடயங்களை அவதானிக்கும் வாசகர்களுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபை மீதும், அதன் முன்னணித்தலைவர்கள் மீதும் நூல் ஆசிரியர்கள் பகைமை பாராட்டுகிறார்கள் எனும் முடிவிற்கு வரும் வாய்ப்புகளும் உள்ளது. அதே நேரம் எம்.சி சுப்பிரமணியத்தின் நற்பண்புகளும், அவர் தலித் சமூகங்களுக்கு ஆற்றிய சேவைகளும் கூட பதிவு செய்யப்படடிருக்கின்றதை வாசகர்கள் அறியக்கூடியதாகவும் உள்ளது.


சோபாசக்தியின் விமர்சனம் தவறு எம்.சி அவர்களை நூல் ஆசிரியர்கள் உதாசீனப்படுத்தவில்லை என்று வாதாடுவதற்கான வாய்ப்புகளும் நூலில் இருக்கின்றது. சம்புகன் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக இந்த நூலையும், இதன் ஆசிரியர்களையும் தனிநபர்கள் மீதான தனது வஞ்சகங்களைத் தணிப்பதற்காகவே பயன் படுத்துகின்றார். நூலைப் பிரதானமாக முன்வைத்து அதன் அடிப்படையில் தனிபர்கள் விமர்சிக்கபடுவதென்பது ஒருவகை. ஆனால் சம்புகனுக்கோ நூலின் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது.





நூலில் எம்.சி குறித்தும், சிறுபான்பைத் தமிழர் மகாசபை குறித்தும் எழுதப்பட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டிருக்கவேண்டும். உதாரணமாக எம்.சி அவர்களின் சேவை குறித்து: ‘‘...இக் கால கட்டத்தில் மகாசபையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எம்.சி சுப்பிரமணியம் மகாசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எம்.சி அவர்கள் மகாசபையின் ஆரம்ப உறுப்பினர் மட்டுமன்றி வடபகுதியில் மு.கார்த்திகேசன் அவர்களோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். எம்.சி சுப்பிரமணியம் மிகவும் கஷ்டப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆங்கிலக்கல்வியில் மெற்றிக்குலேசன் வரை படித்து சித்தி பெற்றவர். இளைமைக்காலம் தொட்டு திராவிடக் கருத்துக்களால் கவரப்பட்டுப் பின் மார்க்சியவாதியாகி மிகத்துடிப்புடன் செயலாற்றி வந்த ஒருவர். தன் இளைமைக் காலத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அர்ப்பணித்து செயலாற்றி வந்தவர்.‘‘ (பக்கம் 125 இரண்டாம் பந்தி) என ஆசிரியர்கள் எழுதியுள்ளதைக் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் சம்புகன் ‘‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘‘ எனும் தலித்தியப் பிரதியை தனது தனிநபர்கள் மீதான பகைமையை (அது அரசியல் பகை, கருத்தியல் பகை, சொந்தப் பகை என எந்தப்பகைமையாகவும் இருக்கட்டும்) வெளிப்படுத்துவதற்காக பயன் படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை. நூலிலிருந்து எவ்விதமான மேற்கோள்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இந்த நூலின் அவசியமும் தேவையும் கருதுபவர்கள், அதன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதிப்பவர்கள் மனங்களிலிருந்து இவ்வாறான காழ்ப்புணர்வு செய்திகள் வெளிவரமுடியாது தனிநபர்கள் மீது தமக்கிருக்கும் காழ்ப்புணர்விற்காக ‘இலங்கையில் சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும்‘‘ எனும் நூலை பயன்படுத்த நாம் அனுமதிக்க முடியாது.




சம்புகன் சரவணன் மீதான தனது காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு ஏதோவெல்லாம் எழுதிவிட்டு (பார்க்க) ...சரவணன் இந்நூலை கட்சிப்பிரச்சார நுலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன? என்று மமதை கொள்கிறர். நூலில் பெரும்பகுதிகளில் அதன் ஆசிரியர்கள் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைகளும், அதன் பணிகளுமே சாதி ஒழிப்பப் போராட்டத்திற்காகன முன் நிபந்தனைகள் என்பதையே வலியுறுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்கள் எழுத்துகளில் ஸ்தூலமாக படிந்திருக்கிறது. அதை இனம் காண்பதொன்றும் கடினமானதல்ல. இந்நூலின் முதல் பதிப்பிற்கு மதிப்புரை எழுதியுள்ள பேராசிரியர் தில்லைநாதன் அவர்களே தனது பதிப்புரையில் . இந்த அத்தியாயங்களில் ஒரு பிரச்சாரத்தொனியையும் உணர்ச்சி வேகத்தையும் உணரமுடிகிறது. சரியானஎன்ற சொல் அடிக்கடி பயன்பட்டமையும் சில இடங்களில் ஏறத்தாழ நேரடியான வர்ணனையும் இருப்பது நூலாசிரியர்கள் இப் போராட்டங்களில் நேரடியாகவே பங்கு பற்றினர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. (ப.14.) என தனது அபிப்பிராயத்தை பதிவு செய்திருக்கின்றார். இது எந்தவகை விமர்சனம் என்பதை வாசகர்கள் உணரவேண்டும்.




குறிப்பாக நூலின் ஏழாவது அத்தியாயத்திலிருந்து எட்டாவது அத்தியாயம் வரை மகாசபையின் பணிகள் அதன் முன்னணித் தலைவர்கள் பற்றியெல்லாம் பலவாறாகப் பேசப்படுகிறது. பின்பு 1964 ஆண்டில் கம்யயூனிஸ்ட் கட்சிப்பிளவு படும் தருணத்திலிருந்து ஆசிரியர்கள் தாம் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைப் போராட்டத்திற்கான நியாயத்தைக் கூறுவதோடு மகாசபையின் பணிகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தும் போக்கையும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணம்: ‘‘1967ம் ஆண்டு நடுப்பகுதியில் சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக நடைமுறைப் போராட்டங்களை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற பிரச்சனை கட்சியின் முன்னால் எழுந்தது. தேநீர்க் கடைகளிலும் ஆலயங்களிலும் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று கட்சி தீர்மானித்தது. ஏனெனில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கீழ் இயங்கி வந்தவர்கள் இக்காலத்தில் கிராமங்களில் சலூன், சலவைத் தொழில் நிலயங்களில் முதலில் சமத்துவத்தை நிலைநாட்ட முற்பட்டுக் கொண்டனர். (அழுத்தம் இ.த.ச.மே.மு) இதனைக் கட்சி எதிர்த்தது. உண்மையில் சாதி அடக்குமுறையினதும் தீண்டாமையினதும் பிரதான மையங்களாகப் பெரும் ஆலயங்கள், பிரதான தேநீர்க் கடைகள் உணவகங்கள் என்பனவே திகழ்கின்றன. அவற்றைச் சுற்றியே சாதிவெறிப் பிற்போக்கு வாதிகள் அணிதிரண்டுள்ளனர் என்பதே யதார்த்தமாக இருந்தது. ஆதலால் பலமான அந்த மையங்களில் சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடுத்து வெற்றி பெறுவதே பிரதானமானது. அத்தகைய போராட்டம் வெற்றி பெறுங்கட்டத்தில் சலூன், சலவை நிலையங்கள் போன்றவை தாமாகவே சமத்துவ நிலையை வந்தடையமுடியும் என்பதையே கட்சி வலியுறுத்தியது. அவ்வாறின்றி சலூன், சலவை நிலையங்களில் மோதுவது பலமான எதிரி எங்கோ இருக்க உரிமைகள் பல மறுக்கப்பட்ட உயர் சாதிவாதிகளின் தயவில் தொழில் புரியும் சலவை, சலூன் தொழிலாளர்களுடன் மோத முனைவது தவறான தந்திரோபாயம் மட்டுமன்றி ஐக்கியப்படவேண்டிய சக்திகளைப் பகைத்து தம்மை தாமே பலவீனப்படுத்திக் கொள்வதாகவே அமையும் என்பதை கட்சி சுட்டிக்காட்டி நின்றது இது சாதிய ஒடுக்குமுறையின் முரண்பாட்டின் தன்மையையும் போராட்டத் தந்திரோபாயத்தினையும் தெளிவாக வரையறுத்துக் காட்டியது.‘‘ (ப.154)


இதுபோன்று கட்சியின் நலன்களிலிருந்தே சாதிய ஒடுக்கு முறைக்கான தீர்வுகளையும் முன்வைத்து எழுதியுள்ளார்கள்.


இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் இனம் காண்கின்றோம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்கள் நலன் குறித்து எதை செய்தாலும் தாம் சார்ந்த கட்சியின் நலன் கருதியும், அதன் தனித்துவம் கருதியும் தமது கட்சிப் பிரட்ச்சாரத்தையும் புகுத்த முனைவதென்பது அனைத்துக் கட்சி மட்டங்களிலும் நடைபெறும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. அத்தோடு புரட்சிகரக் கம்யூனிஸ்ட கட்சியின் ஒரு ஸ்தாபனமாகவே ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்‘ இயங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தலித் சமூகமேம்பாட்டு முன்னணியைப் பொறுத்தவரையில் மகாசபைமேற்கொண்ட பணிகளும், தீண்டாமை வெகுஜன இயக்கம் மேற்கொண்ட பணிகளும் தலித் சமூகங்களுக்கு ஆற்றிய அளப்பெரிய சேவையாகவே கருதுகின்றது. எமக்கு கட்சிகள் முக்கியத்துவம் அல்ல சாதியொழிப்புப் போராட்டத்திலும், தலித் மக்கள் நலன்களுக்காகவும் செயல்பட்ட மனிதர்களையும் தியாகிகளையும் தான் நாம் மதிக்கின்றோம்.


அப்போதைய கம்யூனிஸ் கட்சியும் இடதுசாரிச் சிந்தனையுமே சாதி எதிர்ப்புப் போராட்டத்திற்கான உந்துதலை கொடுத்ததென்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் எமது இன்றைய பார்வையில் பிற கட்சிச் சித்தாந்தம், கோட்பாடுகள் என்பன தலித் சமூக விடுதலைக்கு ஒரு இடையூறாகவே நமக்குத் தோன்றுகின்றது. கட்சிகளின் வரலாறுகள் அனைத்தும் தம், தம் கட்சி நலன்களுக்கே முன்னுருமை கொடுத்து செயல்பட்டு வரும் வரலாறாகவே இருந்து வருவதால் தலித்துக்களுக்கு என்று ஒரு கட்சியிருந்து அது தனது நலன்சார்ந்து செயல்படுவதொன்றும் தவறில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும். இதற்கு தலித்துகளெல்லாம் சாதிக்கட்சிகளாகவே பிரிந்து நிற்குதே என்று வியாக்கினம் பண்ணினால் எந்தக்கட்சிக்குள் பிளவில்லை என்று கேட்கின்றோம். கம்யூனிசக் கட்சிகளுக்கிடையே ஏன் பல பிரிவுகள் இருக்கின்றது, இடது சாரிகள் எனப்படுவோர் ஏன் ஓர் அணியில் திரள முடியாமல் போனது? அந்தப் பிளவுகளையும், முரண்பாடுகளையும் சம்புகனின் வைரஸ் செய்தி ரெக்னிக்கை பயன்படுத்தி நிறுத்தச் சொல்லுங்கள் நாமும் சாதிக் கட்சிகளெல்லாம் சிதறி ‘வெயிலிலும் மழையிலும் அலையாமல்‘ அவர்களை ஒரு ‘குடைக்குள்‘ கொண்டு வந்து நிறுத்துகின்றோம்.





அடுத்து மு.நித்தியானந்தன் பேசிய விடயங்கள் அதிகமாக புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை வாசித்துக்காட்டியே அவர் தனது விமர்சனத்தை மேற்கொண்டார். ‘‘...அம்பேத்கர், ஈ.வெ.ரா போன்றோர் சாதிய ஒடுக்குமுறையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள வர்க்க ஒடுக்குமுறையை ஏதோ வகையிற் புறக்கணித்ததால் பரந்துபட்ட ஐக்கியத்தின் வழியில் சாதி ஒடுக்குமுறைக்கும் சாதியத்திற்கும் எதிரான வெகுஜனப் போராட்டத்தை அவர்களால் முன்னெடுக்க இயலாது போயிற்று. (அழுத்தம் இ.த.ச.மே.மு) அதனாலேயே அவர்களது பேரைச் சொல்லிக்கொண்டு தலித்தியம் என்ற பேரில் சாதிய அரசியலை சிலரால் முன்னெடுக்க இயலுமாயிற்று. (ப.8) ‘‘ என திரு.சிவசேகரம் அவர்கள் எழுதியதைச் சுட்டிக்காட்டியே பெரியார், அம்பேத்கர் வெகுஜனபோராட்டங்களில் ஈடுபடவில்லை என்பது சிவசேகரத்தின் வஞ்சக நோக்கம் என்று நித்தியானந்தன் கூறினார். இதற்கு சம்பகன்‘‘பெரியார், அம்பேத்கர் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா. அந்த விதமான சாடையிற் கூட எதுவும் எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏன் இந்த வன்மம் பிடித்த அயோக்கித்தனம்?‘‘ என்று சொல்கிறார். (பார்க்க) (தயவு செய்து சம்புகனுக்காக காவடி எடுக்கும் இணையங்களையும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.) இப்படியெல்லாம் தனது தனிநபர் விரோதங்களைக் காட்டும் ஒரு பையித்தியத்திற்கு எமது தலித் புத்தகங்கள்தானா பலிக்கடா? சம்புகன்தான் ஒரு மனநோயாளி அவருக்கு கடைவிரித்து வியாபாரம் பண்ணும் ‘தேசம்‘இனியொருஇணையத்திற்கும் என்ன மதி, மீண்டும், மீண்டும் ஏன் எங்களை வெள்ளாளப் புத்தி, உயர்சாதி திமிர் என்றெல்லாம் சொல்ல நிர்ப்பந்திக்கின்றீர்கள்.







நித்தியானந்தன் ‘இலங்கையில் சாதியத்திற்கும் அதற்கெதிரான போராட்டங்ளும்‘ எனும் புதிய பதிப்பையும் முன்னைய பதிப்பான ‘சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும் எனும் இரண்டு நுல்களையும் காண்பித்துத்தான் உரையாற்றியவர். முன்னைய பதிப்பில் கெளரவிக்கப்பட்ட எஸ்.ரி.என்.நாகரத்தினம் ஏன் இரண்டாவது பதிப்பிலும் கெளரவிக்கப்படவில்லை என்ற மு.நித்தியானந்தனின் கேள்வி எமக்கும் நியாயமாகவே படுகின்றது. அன்றைய சுழலில் சமூக விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் ஒரு ‘முன்னணிப் போராளியாக‘ செயல்பட்டதாக நாம் காணமுடியாதிருக்கின்றது. ஆனால் ஓர் முன்னணிப் போராளியாக கட்சி அங்கத்தவர் இல்லாமல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடன் எஸ்.ரி.என். நாகரத்தினம் அவர்கள் செயல்பட்டது ஆச்சரியமாகவே உள்ளது. எனவே அந்தவகையிலும் நாம் அவரைத் தொடர்ந்து கெளரவிக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடடமையாகவே கருதுகின்றோம்.


சம்புகனின் காழ்ப்புணர்வுச் செய்தியின் சில விடயங்களுக்கே நாம் விளக்கமளித்துள்ளோம். அவர் புசத்திய பிற விடயங்களுக்கெல்லாம் நாம் பதிலளிப்பதற்கு அதொன்றும் விமர்சனம் அல்ல என்பதை நூல் ஆசிரியர்களுக்கும் தலித் சமூக அக்கறையுடையோருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.


இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் ! - என்.சரவணன்


அந்தந்த காலத்துக்குரிய பொது அபிலாசைகளைக் கண்டறியாத, கண்டபின் அதனை நிறைவு செய்யாத ஒரு தலைமைதனது லட்சியத்தில் வெற்றிகொண்ட ஒரு தலைமையாக இருக்கமுடியாது.ஆனால் இந்த "பொது" என்கிற விடயமானது கூர்ந்து நோக்க வேண்டிய ஒன்று. .பெரும்பான்மை அபிலாசைகளை நிறைவேற்றுதல். என்பது ஜனநாயகப் பண்பின் பிரகாரம் சரியானதாகவே பட்டாலும், அடிப்படை தர்மத்தை (ethics) நிறைவு செய்வதாகத்தான் அது இருக்குமென்றில்லை. சில பலமான கருத்துக்கள், நியாயமானதாகவும் சிறுபான்மையானதாகவும் கூட இருக்கமுடியும். எளிமையாக சொல்லப்போனால், நாம் இன்று நம்பி ஏற்றுக்கொண்டுள்ள அத்தனையும் உண்மையாகவும் நியாயமாகவும் தான் இருக்குமென்பதில்லை. அது அப்போதைய நேரத்தின் இன்பமூட்டுபவையாகவும், சுயகளிப்பூட்டுபவையாகவும் இருக்கும். மாறாக நாம் மறுக்கின்ற பல விடயங்கள் நமக்கு கசப்பானவையாகவும் உண்மையாகவும் இருக்க முடியும்.


இந்த இடத்தில் மீண்டும் பொது என்கிற விடயத்துக்கு வருவோம். பெரும்போக்காக (mainstream) இருக்கிற அனைத்தும் நிச்சயம் உண்மையாகவும், சரியாகவும்தான் இருக்கும் என்றில்லை. மாறாக சிறுபான்மை கருத்துக்களாக இருப்பதால் அது பிழையாகத்தான் இருக்குமென்றில்லை.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது என்பதை நாம் அனைவரும் உணர்வோம்.ஒரு இனத்தின் சமூக கட்டமைப்பானது, வரலாற்று ரீதியில் பல மரபுகளையும், அந்த மரபோடிணைந்த பல்வேறு புனைவுக் கூறுகளையும், மூட நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், மாயைகள், புனைவுகள், திரிபுகள் என்பன கலாசார பண்பாட்டு படிமங்கள் மீது குந்திக்கொண்டு தான் இருக்கும். இது நமது தமிழ் மரபில் மட்டுமல்ல உலகின் பல இனங்களின் மரபிலும் காணக்கிடைக்கின்ற கூறுகள்.சமூக உருவாக்கமானது, பல கட்டங்களைத் தாண்டி சமூகமாற்றங்களை கால வளர்ச்சிக்கமைய எதிர்கொள்கிற பொழுது, இவற்றில் இருக்கின்ற பல்வேறு பிழையான கூறுகளைக்களைவதில் தான் அந்த சமூகத்தின் ஆரோக்கியமான, புரட்சிகர சமூக மாற்றத்தின் வெற்றி தங்கியிருக்கிறது.நாட்டில் நமது போராட்டமானது ஒரு தேசிய போராட்டம் என்கிற ரீதியில், தேசிய உணர்வையும், அதன் கூறுகளையும் பாதுகாப்பதிலேயே நமது தேசியவாதத்தை தக்கவைக்கலாம் என்கிற வாதத்தின் விளைவாக புரையோடிப்போயுள்ள பல பிழையான மரபுகளைத் தோளில் சுமந்தபடி நமது சமூகம் பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை உளச்சுத்தியுடன் ஒப்புக்கொள்வோம்.

நம்மை வழிநடத்தும் உண்மைகள் பல நமக்குக் கசப்பானவை, நம்மால் ஜீரணிக்க முடியாதவை, நம்மை மகிழ்வூட்டடாதவை. மாறாக நம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பல பிழையான ஐதீகங்கள், மற்றும் புனைவுகள் நமக்கு களிப்பூட்டுபவையாக உள்ளன.கசப்பான உண்மைகளை விட்டுத் தப்பியோடுபவர்களாகவும், களிப்பூட்டும் பிழையான ஆதிக்க மரபுக்கூறுகளை தொடர்பவர்களாகவும் நாம் உள்ளோம். இதனை பண்பாட்டின் பேரால், கலாசாராத் தின் பேரால், தேசியத்தின் பேரால் நாம் தொடர்ந்து வருகிறோம் என்பதே யதார்த்தம்இந்த யதார்த்தத்தை உணராதவரை, இதன் மீது எமது தேடலை செய்யாதவரை, இதில் தேவையான மாற்றங்களை கொணடுவராதவரை, நமது உள்ளார்ந்த வளர்ச்சியில் மாற்றம் காணப் போவதில்தில்லை நாம். அது போல நமது அடுத்த சந்தியினரின் ஆரோக்கியமான வெற்றியையும் இது பாதிக்கச்செய்யும். இது நமது ஆரோக்கியமான சமூகமாற்றத்தில் வெற்றியையும் இறுதியில் ஒட்டுமொத்த பாதிப்பை ஏற்படுத்தும்.

(டென்மார்க்கிலிருந்து வெளிவரும் "இனி" இதழில் வெளிவந்த பத்தி)

சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல் மற்றும் சுகனின் விமர்சனம்.


சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் தேசம்நெட் கண்ட நேர்காணல் கைநூலாக தேசம் நெட் வெளியிட்டிருக்கிறது. அந்த நேர்காணல் நன்றியுடன் இங்கு வெளியிடுவதுடன், சுகன் அனுப்பி வைத்த விமர்சனமும் கீழே இடம்பெறுகின்றது.


இக்கைநூலின் மின்நூலினை நூலகத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.




நூல் விமர்சனம்: சுகன்

“சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”.


-த.ஜெயபாலன்
‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40

நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல்.


சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் ‘ஒரு வண்ணான்’ தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர முடியுமா? ஒரு பள்ளிக் கூடத்தின் அதிபராகக் கூட வரமுடியாது என்று கூறுகிறார் தோழர் செந்தில்வேல்: “இன்றுவரை சிறீ சோமஸ்கந்த கல்லூரியில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்தான் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாசூக்காகச் சமாதான காலத்திலை சென்று மேல் மட்டங்களிலை அலுவல் பார்த்து இருக்கிறார்கள். 75 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிற ஒரு பாடசாலையில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர், அவரும் தன்னை மறைச்சு அப்படி இப்படி என்று இருக்கிறார். இப்படிக் கன பாடசாலைகளில் அதிபராக வர முடியாது.”


இலங்கை அரசியல் நெருக்கடிக்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும், தேடல்களையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிற அய்ரோப்பிய புகலிட சூழலில் தலித்துகள் ஆட்சி செய்யும் இனமாக மாறுதல், வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் போன்ற செயற்திட்டங்களை விவாதப் பொருளாக்கி வருவதும் தலித் மாநாடுகளின் பின்னணியுமான பகைப்புலத்தில் இச் சிறு கைநூல் வெளிவந்துள்ளது.
தலித்துகள் அரசியல் அதிகாரங்களை எப்படிக் கைப்பற்ற முடியும்? ஆட்சி செய்யும் இனமாக எப்படி மாற முடியும்? வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து எப்படி அகற்றவது? போன்ற மிக அடிப்படையான கேள்விகளைத் தவிர்த்து ஏதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட ‘சாதிக் கலவரத்தை’ எப்படிச் சமாதானப்படுத்தலாம் என்ற மனோபாவமே கேட்கப்பட்ட 50ற்குட்பட்ட கேள்விகளிலும் தொக்கி நிற்கிறது.
உதாரணத்திற்கு பக்கம்: 36ல் “இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தலித்தியம் என்ற கோசம் அதே கருத்தாக்கத்துடன் இலங்கையிலும் பயன்படுத்தப்படுகிறதே?” என்ற உள்குத்துக் கேள்வி. ‘கோபுரம் அக்மார்க் மஞ்சள் தூள்’, ‘கோபால் பற்பொடி’ மாதிரி தலித்தியம் என்ற கோசம் வட்டுக்கோட்டைச் சந்தியிலுள்ள பெட்டிக்கடையில் விற்கப்படுவதாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கேட்பவரும் பதில் சொல்பவரும் விவாதிக்கின்றனர்.
தலித்தியம் என்ற தனித்துவத்திற்கு நிறையவே விளக்கமளித்தாயிற்று. ‘தலித்தியக் குறிப்புகள்’ என்று தோழர் சரவணன் சரிநிகரில் காத்திரமான தொடர் எழுதி வந்துள்ளார். தோழர் டொமினிக் ஜீவா ‘தலித்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் தலித்தியம் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். லண்டன் தலித் மாநாட்டில் வாசிக்கப்ட்ட தோழர் ந. இரவீந்திரனின் கட்டுரை தெளிவாகவே இலங்கையில் தலித் அரசியலின் தேவையை முன்னிறுத்துகிறது. கடைசி முட்டாளுக்கும் தலித்தியம் என்பது ‘சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்களின்’ கூட்டு விழிப்புணர்வு என்று புரிகிறது. சாதித் திமிரில் இப்படியான கேள்விகளைக் கட்டமைத்து உலாவ விட்டவர்களிடம் கைமாற்றாக வாங்கிப் போகுமிடமெல்லாம் இத்துப்போன கேள்விகளை காவிக்கொண்டு திரிவதை நிறுத்துவது தமது மேற்சாதிய உணர்வுகளை மறைப்பதற்கான புத்திசாலித்தனமான வழிகளில் ஒன்று என நாம் தொகுப்பாளருக்குப் பரிந்துரைக்கிறோம்.


பதிலாளர் சொல்கிறார்: “நாங்கள் எங்களுடைய வெளியீடுகளில அந்தச் சொல்லைப் பயன்படுத்துறதில்லை. (பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ?) வேறுசிலர் பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் இருக்கு. ஆனால் இவை சொல்லிற அர்த்தத்தில தலித் என்று வியாக்கயானம் கொடுத்து அதுக்கு ஒரு கொள்கை கோட்பாடு வரையறை கொடுப்பது எதுவுமே அங்கு இல்லை”. ( அங்கு என்னதான் இருக்கு தோழர் இயனக் கூட்டையும், ஏறுபட்டி தளநாரையும், பறையையும் தவிர.) ஒரே ஒரு விதிவிலக்கு நடந்திருக்கிறது. ஒரு இழவு வீட்டிற்கு ‘பறைமேளம்’ பிடிக்கப்போய் கேட்டிருக்கிறார்கள். “இந்தா கிடக்கு மேளம் எடுத்துக்கொண்டு போய் அடியுங்கோ” என்று சொல்லியிருக்கிறார் நமது பெரியவர்.


“தாழ்த்தப்பட்டவர்கள் மாத்திரம் என்பார்கள் பிறகு முஸ்லீம்களும் அடங்கும் என்பார்கள்.இப்படிச் சொல்லாடல்கள் இருந்துகொண்டு வருகிறது. இவை சொல்லிற அர்தத்தில யாழ்ப்பாணத்துக்கோ வடக்குக் கிழக்கிற்கோ அது பொருந்தக் கூடியதாய் அந்தச் சமூக நிலைமை இல்லை. தாழ்த்ப்பட்ட மக்களுடைய பிரச்சினை இருக்கு. அதற்குத் தனித்தட்டு வியாக்கியானம் கொடுத்து வேற வேற அர்த்ங்கள் கொடுத்து –அதுவொரு பிழைப்புவாதம், வியாபாரம் என்றுதான் நான் சொல்லுவன்” என்கிறார் செந்தில்வேல்.


தலித் அரசியலை எதிர்க்கும் ‘நபர்’கள் சிரித்துச் சிரித்து பிரான்ஸில் அவ்வளவு உற்சாகமாக இவ்வெளியீட்டைக் கொண்டு திரிவதன் நோக்கம் இந்தக் கேள்வியிலும் பதிலிலும் உள்ளோடியிருக்கிறது. இப்படியான ‘இன்விசிபிள் தியேட்டர்’ (Invivible theatre)களின் பின்னாலிருந்து கள்ளக் குரலில் பேசாமல் நேரடியாகவே அரங்கிற்கு வருமாறு அவர்களை நாங்கள் அழைக்கிறோம்.


‘மார்க்ஸியத்தின் பேரால் முட்டாள்தனமாக மட்டுமே பேசுவோம்’ என்று லெனினில் அடித்துச் சத்தியம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது. அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்று அணுகாது சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் என்ற உணர்வோடு அணுகியிருந்தால் இப்படியான பதில்கள் கூறவேண்டிய தேவையிருந்திருக்காது.


கடந்த அய்ந்து வருடங்களிற்கு மேலாக 2002ற்கு மேல் வடபகுதியில் தென்மராட்சி, வட்டுக்கோட்டை ( வட்டுக்கோட்ட சாதி மோதல்களுக்கு உடனடித் தீர்வு தேவை என்று தினக்குரலில் ‘கொட்டை எழுத்தில்’ செய்தி வந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.) அராலி, வேலணை என்று நிகழ்ந்துவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் மட்டக்களப்பில் சிகை அலங்கரிப்பாளர்களுடைய சலூன் கொழுத்தப்படுவதும், சாவீட்டு மேளம் அடிக்க தலித்துகள் வற்புறுத்தப்படுவதும் மறுப்பதும் தலித் அரசியலின் தேவையை வலியுறுத்துகிறதா? தமிழ்த் தேசியத்தின் தேவையை வலியுறுத்துகிறதா? ‘தலித்’ என்பது தமிழ்ச் சொல்லல்ல என்று சொல்பவர்கள் அங்கேயே நின்று கொட்டைவடி குழப்பியைக் குடிக்க வேண்டியதுதான். போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் தைரியமூட்டியும் முன்னின்று செயற்படுவதுதான் ஜனநாயகமும் மார்க்ஸியமும்.


மற்றொரு சுவாரசியமான கேள்விக்கு வருவோம்.


தேசம்: “தேசிய ஒடுக்குமறை நிகழ்கின்ற காலகட்டத்தில் சாதிய ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் அந்த சாதிய ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை எந்த அடிப்படையில் கொண்டு செல்வது?”


தோழர் செந்தில்வேல்: “ஒரு எல்லைக்குட்பட்ட அளவில்தான் கொண்டுசெல்ல வேண்டும். போராட்டம் என்ற நிலையைவிட அதனை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரரீதியாகத்தான் கொண்டுசெல்ல வேண்டும். இது தமிழ்த் தேசிய இனத்துடைய ஐக்கியத்திற்கும் நிலைப்பிற்கும் கருத்தியல்ரீதியில் அதை (சாதியத்தை) உடைப்பதற்கான வேலைகளைச் செய்யும்.அதற்கு அப்பால் போராட்டமாக எடுப்பமாக இருந்தால் ஒட்டுமொத்தமாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கு பாதகமான விடயங்களைத் தோற்றுவிப்பதாகத்தான் முடியும்.”


நமது தோழர் சங்கானை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் அ.அமிர்தலிங்கம் எடுத்த நிலைப்பாட்டை 40 வருடங்கள் கழித்து எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் இவற்றை ஒரு போராட்டமாகக் கூட தோழர் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இப்போதும் இனியும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒரு மேற்சாதிக்காரத் தமிழ் அரசியல்வாதியினதும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களினதும் முடிவிற்கு மார்க்ஸயத்தின் பேரால் செந்தில்வேல் வருவதை நமது விதி என்று நொந்துகொள்வதா? சதி என்று நொந்துகொள்வதா? ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போன்ற தலித் அரசியற் கட்சியினது தேவை இப்படியான சொதப்பல்களிலிருந்தே எழுகிறது.


“கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதால் சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகம் அடைந்தது. நாங்கள் பாராளுமன்றப் பாதையைக் கைவிட்டு புரட்சிகரப் பாதையைத் தெரிவு செய்தவர்கள். அது போராட்டத்திற்கு உந்துதலை அளித்தது” என்ற தோழரின் கூற்று மிகவும் அபத்தமானது (பக்: 4) .


சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகத்துடன் நடைபெறுவதற்கு கொம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டிருக்க வேண்டுமா என்பது முதலாவது கேள்வி.


தேர்தல்பாதை திருடர்பாதை
புரட்சிப்பாதை மக்கள்பாதை


என்று தலித்துகளிற்குக் கோசத்தைக் கொடுத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வெள்ளாளர்கள் போகக் கட்சி உடைந்து போனது கடந்த காலம். கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவால் வலதுசாரிகள் அரங்கிற்கு வந்ததும் தலித் மக்கள் உரும்பிராய் போன்ற இடங்களில் கட்சியின் பேரால் மோதிக்கொண்டதும்; சொற்பமாயினும் சிறந்ததாக இருந்த ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ செயலிழந்து போனதும் (கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவோடு அது செயலிழந்து போனதாகத் தோழர் கூறுகிறார் பக்:6) பல்வேறு தலித் அமைப்புகள் இயங்க முடியாமற் போனதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிளவும் ஒரு காரணமாகயிருந்தது என்பதே கடந்த காலம். கட்சியிலிருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பவுத்ததிற்கு மாறியதைக் குறித்துக் கட்சி எடுத்த நடவடிக்கைகள் (பக்கம்: 15) இன்னும் மிகப்பெரிய அபத்தம்.


நூலின் தலைப்பு “சாதியப் போராட்டம்: சில குறிப்புகள்” உண்மையில் தலைப்பு “சாதி எதிர்ப்புப் போராட்டம்: சில குறிப்புகள்” என்று இருந்திருக்க வேண்டும். இது கவனக்குறைவால் விடப்பட்ட தவறாகத் தெரியவில்லை. பல்லாயிரம் முறை சாதி எதிர்ப்பு என்றும் தீண்டாமை ஒழிப்பு என்றும் பேசியும் எழுதியும் வந்தாயிற்று. சாதி எதிர்ப்பிலுள்ள எதிர்ப்பைத் தவிர்ப்பது திட்டமிட்டு கவனமாகத் தவிர்க்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.


பக்: 39ல் ‘சமூக நீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்று இருக்கிறது. அது ‘சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்’ என்று இருந்திருக்க வேண்டும். ‘எதிர்ப்பு’ வரவேண்டிய இடத்தில் வராமலும் வரக்கூடாத இடத்தில் வந்தும் இருக்கிறது. ‘சமூக அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்றும் வந்திருக்கலாம். திருத்தப்பட்டிருக்க வேண்டிய சொற்பிழையும் பொருட்பிழையும்.


பக்: 5ல் “வெள்ளாளரைப் போல் கரையார சமூகத்தை ஆதிக்க சமூகமாகப் பார்க்க முடியுமா?” என்று கேள்வியாளர் கேட்கிறார். அது ‘கரையார் சமூகம்’ என்றிருந்திருக்க வேண்டும். ‘தமிழர் சமூகம்’ என்பதைப் போல. ‘கரையாரச் சமூகம்’ என்பது ‘கரையாரப் பயல்’, ‘வண்ணாரப் பயல்’ என்ற இழித்துரைப்புடன் தொடர்புபட்டது. தோழர். செந்தில்வேலும் ‘கரையாரச் சமூகத்தை’ என்றே பாவிக்கிறார். தனது சாதியைக் குறிப்பிடும்போது ‘வண்ணார் சமூகத்தில்’ என்று விழிப்புணர்வுடன் கவனமாகவே குறிப்பிடுகிறார். பக்கம் 24ல் ‘தமிழர் சமூகம்’ என்பதை வெள்ளாளர் சமூகமாகவே குறித்துக்காட்டுகிறார்.


மேலும் ‘சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்’ என்று நூலின் தலைப்பிருக்கிறது. 50 வருடங்களாக இடதுசாரி இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலும் இருக்கும் சமூகத்தின் முதற் பிரதிநிதி என்ற வகையில் ஒரு மரியாதையுடன் அவர் பெயரைக் குறித்திருக்கலாம். ‘தோழர். சி.கா. செந்தில்வேல் அவர்களுடன்’ என்றோ வேறுவிதமாகவோ.


தலைவர். அ.அமிர்தலிங்கம் அவர்கள், தந்தை செல்வநாயகம் அவர்கள் என்பதைப்போல முன்னட்டையில் கனம் பண்ணியிருக்கலாம். மேலைத்தேய மரபில் இதற்கு முக்கியத்துவம் குறைவானாலும் நமது மரபில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. தவிர்ப்பது எங்கோ இடிக்கத்தான் செய்கிறது. யாழ் பல்கலைக்கழகத்தில் தோழர் டொமினிக் ஜீவாவிற்கு கௌரவம் மறுக்கப்பட்டதும் ஞாபத்தில் உறுத்துகிறது.


இறுதியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று சதா வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். “வருந்தி அழைத்தாலும் வாராது வாரா! பொருந்துவன போமின்றால் போகா” என்பது அவ்வையார் வாக்கு. வடக்குக் கிழக்கில் தலித்துகளிற்கு ஒரு சர்வதேச சமூகம் இருக்குமென்றால் அது இலங்கை அரசுதான். அது கடந்த காலங்களில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. தலித் மக்களிடையே கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி பொருளாதாரரீதியில் சற்றேனும் கைதூக்கி விட்டது. தலித் மக்களின் குடியிருப்புகளில் பாடசாலைகளை உருவாக்கியது. அது சாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் தேசவழமைச் சட்டங்களையும் பெருமளவில் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேயர் செல்லன் கந்தையன் அவர்களை துணைமேயர் ரவிராஜ் சாதி சொல்லித் தாக்கியது போன்ற தருணங்களில் புதிய தேசவழமைச் சட்டங்கள் மீண்டு வரத்தான் செய்கின்றன. சர்வதேசச் சமூகத்திற்கு பிரச்சனைகள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.


எரிக் பிறீட்டின் (1921- 1988) கவிதையுடன் இந்த நூல்விமர்சனத்தை முடிக்க விரும்புகிறேன்:
பொஸ்டனிற்கு ஒரு இறுதிக் கடிதம்
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்குத் தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிவேனாயின்
சிலவேளை
அது அர்த்தமற்றுப் போகலாம் ஆனால்
அர்த்தம் ஒன்று இருக்குமெனில்
என் தொடர்ந்த போராட்டத்தினால் மட்டுமே
அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாமென்பது
அப்போது எனக்குத் தெரிய வரக்கூடும்.
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்கு எதுவுமே தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிய விரும்பவில்லையாயின்
என் தொடர்ந்த போராட்டம்
என் அறிய விரும்பாமைக்கு மட்டுமே
அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் அவ்வாறான போராட்டம்
அதன் அர்த்தம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கெதிராகப்
போராடுகிறது.
நான் தொடர்ந்து போராட விரும்பாவிடின்
எனது தொடர்ந்த போராட்டத்தினது
அர்த்தத்தினை
நான் அறியவே முடியாது போகலாம் என்றுதான்
நான் நினைக்கிறேன் என்பதறிவேன்…



/

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்...


டென்மார்க்கிலிருந்து வெளிவரும் இனி சஞ்சிகையில் 2006இல் வெளிவந்த இதழில் வெளிவந்த செவ்வியை நன்றியுடன் மறுபிரசுரிக்கின்றோம்.
என்.சரவணன்

90களின் ஆரம்பத்தில் விடிவு சஞ்சிகையின் ஆசிரியர் குழவில் இணைந்து தனது எழுத்துப் பணிகளை ஆரம்பித்த சரவணன் 1992 தொடக்கம் 8 வருடங்களாக சரிநிகர் ஆசிரியர் பீடத்தில் பணியாற்றிவிட்டு தற்போது சுதந்திரப் பத்திரிகையாளராகவும், ஆய்வாளராகவும், விமர்சகராகவும் இருந்து வருகிறார். மார்க்சியம், பெண்ணியம், தலித்தியம் மற்றும் தமிழ்த்தேசியம் சார்ந்த விடயங்களில் அதிகளவு படைப்புகளை தமிழிலும் சிங்களத்திலும் செய்து வந்த இவர் நடைமுறைச் செயற்பாட்டாளரும் கூட. தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்துவரும் இவர் நோர்வேயிலிருந்து வெளிவந்த பறை என்கின்ற சஞ்சிகையின் ஆசிரியராக இருந்தவர். இவரது ஒரு சில நூல்களில், பெண்களின் அரசியலும் அரசியலில் பெண்களும் என்கிற நூல், இலங்கையின் பெண்களின் அரசியல் வரலாறு குறித்து தமிழில் பேசப்படுகின்ற ஒரே வரிவான நூலாக உள்ளது. இலங்கையில் ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டம் பாசிசத்தை நோக்கி எவ்வாறு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது குறித்த கருத்தாக்கங்களில் சமீப காலமாக அதிகளவு தேடல்களை செய்துவருபவர்.
புகலிடம் பற்றிய சிந்தனைப் போக்கின் இன்றைய வடிவத்தை எவ்வாறு விளக்குவீர்கள்?

தமிழ்த் தேசப் பிரச்சினை முனைப்பு பெற்று தமிழர்கள் இங்கு உயிர்வாழ்வுக்கு உத்தரவாதமில்லாமல் ஆக்கப்பட்டதன் பின்னரும், தமது அடிப்படை உரிமைகளை சொந்த நாட்டில் அனுபவிக்க முடியாமல் ஏற்பட்டதன் காரணமாகவும், 80களில் தமிழர்களின் புலப்பெயர்வு அதிகரித்தது. அதன் இன்றைய நிலை வடக்கு கிழக்கின் மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இன்று புலம்பெயர்ந்துள்ளனர். இன்று தேசியம் பற்றிய பல்வேறு சிந்தனைகளின் போது உலகில் புகலிடம் என்பது தனித்து பார்க்கப்படவேண்டிய கருத்தாக்கமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. உலகில் உள்நாட்டு நெருக்கடி மிகுந்த நாடுகளிலிருந்தெல்லாம் இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் எத்தனை பேர் திரும்பி தமது தாயகங்களுக்கு திருப்பிப் போகப் போகிறார்கள் என்கிற கேள்வியும் மிகவும் அழுத்தமாக இன்று எழுப்பப்படுகின்றன. பிரச்சினை தீரும் பட்சத்தில் புலம்பெயர்ந்த தமிழர்களில் 5 வீதமாவது திரும்பி வருவார்களா என்கிற கேள்வி பலமாகவே இருக்கிறது. இந்த பின்னணியை வைத்துத் தான் புலம்பெயர்ந்தவர்களின் அரசியல் எதிர்காலம், அவர்களின் தனித்துவமான தேவைகள், பண்பாட்டு மாற்றங்கள், தேசத்துடனான உறவுகள் எல்லாமே பார்க்கப்பட வேண்டும். எனவே தான் புகலிட இலக்கியங்கள், புகலிட அரசியல், புகலிட சிந்தனைப் போக்குகள் என்றெல்லாம் நவவடிவம் பெறும் தமிழியப் போக்கை காண்கிறோம்.


இவற்றின் விளைவுகளை எவ்வாறு இலக்கியத்தில் காண்கிறீர்கள்?


ஏலவே இலக்கியத்துறை சார்ந்திருந்தவர்களின் படைப்புகள் போக அங்கு போனதன் பின்னர் இலக்கியப் படைப்புருவாக்கங்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் பலர். ஆரம்பத்தில் இந்த இலக்கியங்கள் அவர்களது தாயக நினைவுகளை அடியொற்றியதான படைப்புகளாக வந்துகொண்டிருந்தன. ஆனால் அதன் இன்றைய பரிமாணம் தாயக நினைவுகளுக்கு அப்பால் சென்று இன்றைய புகலிட வாழ்வு குறித்த அனுபவங்களையும், அவலங்களையும் வெளிப்படுத்துகின்ற படைப்புகளையே அதிகளவு காணக்கூடிய¬தாக இருக்கின்றன. இன்று புகலிடத்தில் அடுத்த தலைமுறை தோன்றி விட்டது. தம்மை இலங்கையர் என்றும் கூறமுடியாத, தாம் நோர்வேயில் பிறந்திருந்தால் தம்மை நோர்வேஜியர்கள் என்றும் கூற முடியாத, Nortamils, Dantamils னுயவெயஅடைள என தம்மை அடையாளப்படுத்துகிற நிலை வளர்ந்து வருகிறது. முழுமையாக அவர்கள் நோர்வேஜியர்களாகவும், டனிஷர்களாகவும் அடையாளப்படுத்துவதற்கு இன்னும் சில சந்ததிகள் கடக்கவேண்டியிருக்கும்.

அவர்களின் பெற்றோரின் தாயகத்தை அறியாத, அது குறித்த பிரக்ஞைக்கு அப்பாற்பட்டு, புகலிடத்தையே தமது தாயகமாக்கிவிட்ட தலைமுறை அது. இவர்களிடமிருந்து தமிழில் இலக்கியங்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் கற்ற அந்தந்த நாட்டு மொழிகளில் இலக்கிய ஈடுபாடுகளை காட்டுகின்ற போக்கு வளரத்தொடங்கியுள்ளது. தமிழிலிருந்தும் அந்தந்த மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்கின்ற முயற்சிகளும் கூட நடப்பதை அறிகிறோம். உலக புகலிட இலக்கியம் என்பது ஒரு சர்வதேச அளவில் கருத்திற்கொள்கின்ற இலக்கியமாக ஆகிவிட்டது. ஐந்திணை பற்றிய கருத்தாக்கங்களை விரித்து ஆறாந்திணையாக தகவல் தொழில்நுட்ப வெட்டவெளி எனப்படும் சைபர் ஸ்பேசை குறிப்பிடுகிறோம். ஏழாந்திணையாக இன்று புகலிடத்தை குறிக்கின்ற கருத்தாக்கங்¬களும் முன்மொழியப்படுகின்றன என்பதை கருத்திற் கொள்ளவேண்டும்.

மொத்தத்தில் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தமிழில் புலத்து இலக்கியத்தின் ஆயுள் கேள்விக்குரியது.

புகலிடத்தில் அரசியல் செயற்பாடுகள் பற்றி..?

புகலிடத்தில் தமிழர்களின் அரசியல் செயற்பாடு இன்னமும் தமிழ்தேசிய அரசியலுக்கு அப்பால் எட்டவில்லை. விதிவிலக்காக அந்தந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்த நாட்டு அரசியலுடன் இணைத்துக் கொண்டுள்ளனர் என்பது பொய்யில்லை. ஆனால் அது மீண்டும் தமிழ்த்தேசிய அரசியலைத் தாண்டி செல்லவில்லை என்பதே யதார்த்தம். இனி இதுவே தமது நாடாக ஆகிவிட்ட நிலையில் இந்த நாட்டவர்களுடனும், நாட்டு நலன்களுடனும், அதன் அரசியலுடனும், இணைவாக்கம் செய்துகொள்வது அவசியமானது. வெளிநாட்டவர்கள் சம்பந்தமாக இந்த நாட்டவர்கள் கொண்டுள்ள பொதுவான குற்றச்சாட்டுக்களில் ஒன்று, அவர்களின் சமூக இணைவாக்க பிரக்ஞையின் போதாமை பற்றியது.

அடுத்தது மாற்று அரசியல் கருத்துடையவர்கள் திட்டமிட்ட ரீதியில் நலமடிக்கப்பட்டமை பற்றியது. இன்று மாற்று அரசியல் கருத்துடையவர்கள், அல்லது விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றாதவர்கள், அவர்களுக்கு நிதி வழங்காதவர்கள் அவர்கள் தமிழ்த்தேச ஆதரவாளர்களாக இருந்தாலும்சரி அனைவருமே எதிரிகளாகவும், துரோகிகளாகவும் மிக எளிமையாக முத்திரை குத்தப்படுகிறார்கள்.

இவர்கள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டும், அந்நியப்படுத்தப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் சில சந்தர்ப்பங்களில் எதிரியின் முகாமுக்கே தள்ளப்பட்டுவருவது ஆரோக்கியமான ஒன்றல்ல.

இன்று புகலிடத்தில் மாற்று அரசியல் செயற்பாடுகள் நிறுவனமயமாக இல்லை.
யுத்தநிறுத்த ஒப்பந்தம், பின் "ஏகப்பிரதிநிதித்துவ" அரசியல், அதனைத் தொடர்ந்து அனைத்து ஊடகங்களும், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள் என அனைத்துமே தமிழ்த்தேசியத்தின் பெயரால் உண்மைகள் இருட்டடிப்பு செய்வது சர்வசாதாரண ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. இதில் சிறிது ஒதுங்கிநின்று கிடைத்த சந்தர்ப்பத்தில் உண்மைபேசினால் ஓரங்கட்டப்பட்டுவிடுவோமோ, தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சி அதில் சரணடைந்தோர் பலர், சமரசம் செய்து கொண்டோர் பலர். தம்மை ஊமைகளாக ஆக்கிக்கொண்டோர் பலர். பலரதும் அரசியல் முகமூடிகள் கிழிந்தன. எப்போதும் பலமானவர்கள் பக்கம் இருப்பது லாபம் என்றுணர்ந்து தமது நேர்மை அரசியலை துறந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம்.

நிச்சயமாக ஒரு ஆரோக்கியமான விடுதலையை இது பெற்றுத்தரப் போவதில்லை. பல்வேறுபட்ட மாற்றுக் கருத்துக்களும், ஜனநாயக குரல்களுமே கடந்த காலங்¬களில் தேச விடுதலைப் போராட்டத்தில் பாசிசப் போக்கை கணிசமான அளவு மட்டுப்படுத்தியது. இனி வரும் அத்தனை ஜனநாயக விரோதப்போக்குகளுக்கு வழங்கும் ஆசீர்வாதமும், அங்கீகாரமுமே இந்த "ஏகபிரதிநிதி" சித்தாந்தம். ஆரம்பத்திலேயே இதனை நாங்கள் எச்சரித்திருந்தோம். அனைத்து ஜனநாயக விரோத போக்குகளும் தேசியத்தின் பேரால் விதிவிலக்கு கோரும் நிலை மாற்றப்படவேண்டும். இந்த நிலை தளத்தில் மட்டுமல்ல புலத்திலும் தான்.


பாசிசம் பற்றிய எச்சரிக்கைகளை ஏற்படுத்தும் பல கட்டுரைகளை எழுதிவந்திருக்கிறீர்கள், இதன் அண்மைய வடிவம் பற்றிய உங்கள் புரிதல் என்ன?

வீரவிதான இயக்கம் 1995ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்ட போது அது வெறும் இயக்கமாகத் தான் பார்க்கப்பட்டது. ஆனால் அது எத்தனை பெரிய அபாயகரமான இயக்கம் என்பதை அதன் வியூகங்களும் திட்டங்களும், வேலைமுறைகளும் நிரூபித்துக்கொண்டு வந்தபோதுகூட பலரும் அதனை அசட்டைச் செய்தார்கள். ஒரு காலத்தில் சிங்களத் தேசியவாதம் என்கிற பதப் பிரயோகத்தைப் பாவித்தோம், அதன் பின் குறுந்தேசியவாதம் என்கிற பதப்பிரயோகத்தை பாவித்தோம், அதன் பின் இனவாதம், அதன் பின் பேரினவாதம் என்றெல்லாம் பதங்களை பாவித்தோம், இந்த பதங்களுக்குப் பின்னால் அர்த்தங்களும், அந்தந்தக் கட்ட பாசிசத்தின் வளர்ச்சிக் கட்டங்களையும் சேர்த்தே உணர்த்தியது. ஆனால் இன்று அது முழு அளவிலான செயற்பாட்டுக்கு தன்னை பலப்படுத்திக் கொண்டுள்ள பாசிச இயக்கம், முழு சிங்கள மக்களையும் ஓரணிக்குள் திரட்டியுள்ள, திரட்டி வருகின்ற சிங்கள மக்களை பாசிசமயப்படுத்துவதில் மிகவும், நுணுக்கமாக செயற்பட்டு வருகின்ற இயக்கம்.

தேசியவாதத்துக்கு பல முகங்கள் உள்ளன. பல சந்தர்ப்பங்களில் அது இனத்தேசிய சித்தாந்தத்தை உயர்த்திப் பிடிக்கின்ற பண்புகளை உருவகப்படுத்திக் கொண்டுள்ள சித்தாந்தமாக இருந்தாலும், வேறு சந்தர்ப்பங்களில் அது சோசலிச முகமூடிகளையும் கூட அணிந்து வரும். ஹிட்லரின் பாசிச சித்தாந்தம் கூட தேசிய சோசலிசம் பற்றிய கருத்தாக்கத்துடன் தான் தன்னை அடையாளப்படுத்தியதுஅதற்கூடாகவே தன்னளவில் அது வளர்த்துக்கொண்டது. இன்று சிறிலங்காவில்; சிங்கள பாசிசத்துக்கு வடிவம் கொடுக்கும் சம்பிக்க ரணவக்கவின் சித்தாந்த¬மும் கூட தேசிய சோசலிசம் தான் என்பதை கவனியுங்கள். ஆரம்பத்தில் ஜே.வி.பி.யுடன் இணைந்து பணியாற்றிய சம்பிக்க ரணவக்க அதிலிருந்து விலகி ஜனத்தா மித்துரோ எனும் இயக்கத்தை ஆரம்பித்து இலங்கைக்கான சோசலிச பொருளாதார கட்டமைப்பு குறித்த ஆய்வுகளையும், கருத்துருவாக்கங்களையும் செய்து இயங்கிக்கொண்டிருந்த போது அதன் ஒரு கட்டத்தில் சோசலிச கோசம் சரிவராது என்கிற கருத்தையும், சோசலிசத்தை தேசிய சித்தாந்தத்தோடு இணைத்து புதுவகை சிங்கள பௌத்த சித்தாந்த மற்றும் அமைப்புத் துறைக்கான வேலைகளை தொடங்கினார். அதன் வடிவம் தான் 1995இல் சிங்கள வீரவிதானவின் தோற்றம். மிகவும் நுணுக்கமாக இயங்கி அது வரை சிங்கள பௌத்தம் பேசிய இயக்கங்களை தம்மோடு சுவீகரித்தும், சிலவற்றை நாசூக்காக இயங்கவிடாமல் பண்ணியும், ஒட்டுமொத்த சிங்கள பௌத்த அமைப்புகளையும் ஒரே இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. பௌத்த மகா சங்கத்தினரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. சமூகத்தில் கருத்துருவாக்கங்களை பலப்படுத்தும் நிறுவனங்களான தொடர்பூடகங்கள் அiனைத்திலும் ஊடுருவியது. திவய்ன போன்றவற்றை தமது கைக்குள் போட்டுக் கொண்டது லங்காதீப, சண்டே டைம்ஸ் போன்றவற்றை அச்சுறுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது, ஏனைய இலத்திரனியல் சாதனங்களுக்குள் சிங்கள தேசிய உணர்வு கொண்டவர்களை அடையாளம் கண்டு தமது வலைக்குள் சிக்க வைத்தது.

அரசியல் கட்சிகளுக்குள் ஊடுருவி அதன் அதிகார மற்றும் நிறைவேற்று அங்கங்களுக்குள் சென்று அரசியல் முடிவுகளை எடுக்க வைத்தது. அவ்வாறு எடுக்க வைப்பதற்கு வெளியில் இருந்து அழுத்தங்களை பிரயோகிக்க பெருமளவான முன்னணி அமைப்புகளை உருவாக்கியது. ஒரு அரசை கொண்டுள்ள சிறிலங்கா கூட இணையத்தளம் உருவாக்காத காலத்தில் 96ஆம் ஆண்டே தமக்கான இணையத் தளத்தை வீரவிதான தோற்றுவித்தது. சிங்கள வர்த்தகர் சங்கத்தை ஆரம்பித்து குறுகிய காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கிளைகளை நாடளாவ ஏற்படுத்தியது. பெண்கள் அமைப்புகள், வேலை வாய்ப்பு அணி, என பல அமைப்புகளை உருவாக்கியது.

அரசியல்வாதிகள், கலைஞர்கள், விளையாட்டுவீரர்கள் என சமூகத்தில் உள்ள பிரமுகர் வட்டார சகாக்களை குறுகிய காலத்தில் சுவீகரித்தது மட்டுமல்லாமல் இராணுவத்தில் சமகாலத்தில் பெரிய அதிகாரிகள் பலரையும் இணைத்துக் கொண்டது. தப்பியோடிய இராணுவத்தினரை உள்வாங்கி இரகசிய பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பற்றிய செய்திகளை ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள்.

ஜாதிக ஹெல உறுமய என்பது இந்த பாசிச அமைப்புகளின் ஒரு முன்னணி அமைப்பாக இயங்குகிற ஒரு கட்சி மட்டும் தான்.

ஜே.வி.பி. இன்று சிஹல உறுமயவின் நிகழ்ச்சி நிரலை கைப்பற்றிக்கொண்டுள்ளது. ஆனாலும் ஜே.வி.பியின் மூலோபாயம் அதுவல்ல. அது அரசியல் சந்தர்ப்பவாத தந்திரோபாயம் மட்டும்தான். ஆனால் இதற்கான சித்தாந்த பலத்தை தயாரித்தளிப்பதும், அதனை விரவவிடுவதும் அதற்குப் பின்னாலுள்ள பலமான சிங்களப் பேரினவாத அணிகள் தான்.

முன்னரெல்லாம் பல பெயர்களைக் கொண்ட பேரினவாத அமைப்புகள் நிறையவே இருந்தன. அவற்றுக்கு பொதுவான சித்தாந்த வடிவம் இருக்கவில்லை. பொதுவான அமைப்பு வடிவம் இருக்கவில்லை. பொதுவான அரசியல் வடிவம் இருக்கவில்லை. ஆனால் இன்று அப்படியல்ல சிங்கள சிவில் சமூகத்தில் ஆழமாக வேர்விடுகின்ற அளவுக்கு அனைத்தையும் மையப்படுத்துகின்ற பலமான சித்தாந்த வடிவம் அதற்கு உண்டு. உறுதியான அமைப்பு வடிவம் உருவாக்கியாகிவிட்டது. அது போல அரசியல் வடிவமும் அதற்கு ஏற்படுத்தியாகிவிட்டது. இனி அது இராணுவ வடிவம் பெறவேண்டியதும், அரசை கைப்பற்றுகின்ற வேலையும் தான் பாக்கி என்று கூறி வந்தோம். அதற்கு இராணுவ வடிவம் இருப்பதை இராணுவ பயிற்சிகள் பற்றிய செய்திகள் ஊர்ஜிதப்படுத்துகின்றன. சாதாரண தமிழ் சிவிலியன்களின் மீதான வன்முறைச் சம்பவங்கள் பல செய்திகளை நிரூபித்தன. தென்னிலங்கையில் பிரதான அரசியல் அமுக்கக் குழுவாக இந்த சக்திகள் இன்று ஆகிவிட்டிருக்கின்றன.

இதில் இடதுசாரி இயக்கங்களின் பங்கு..?

வரலாற்றில் இதற்கு முன்னரும் பல பேரினவாத இயக்கங்கள் இருந்திருக்கின்றன அல்லவா?

இப்பின்னணியில் பாசிசத்தின் இராணுவ மயத்தன்மையை மேலும் விளக்குவீர்களா?

உங்களுக்குத் தெரியும் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்ட செய்தி, சிங்கள வீரவிதான ஹெருவன எனும் பத்திரிகையொன்றை கடந்த மூன்று வருடங்களாக வெளியிட்டுக் கொண்டிருப்பதை அறிந்திருப்பீர்கள், இதனைத் தவிர அவர்கள் ஒரு செய்தி ஏடு நியுஸ்லெட்டர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் வெளியான வொய்ஸ் ஒப் த நேசன் எனும் பெயர் கொண்ட இந்த செய்தி ஏட்டின் கடைசி பக்கத்தில் ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி கூறப்படுகிறது. -கொழும்பில் இருந்து கொண்டு கொஞ்சம் கூட அச்சமின்றி புலிக்கு வால்பிடித்துக் கொண்டு இருந்த புள்ளிமாடு இனந்தெரியாத நபரால் புதைகுழிக்கு அனுப்பப்பட்டதானது, நமது தேசத்தை பாதுகாக்க சிங்கள இனத்தைப் பாதுகாக்க தற்போது இருக்கின்ற சக்திகளுக்கு அப்பாலும் ஒரு அமைப்பு இருப்பதை உணர்த்தியதானது நம்மெல்லோருக்கும் தைரியமளிக்கின்றது.- என்று இருந்தது. அந்தச் செய்தியில் இவ்வாறானவர்களுக்கு என்ன நேரும் என்கின்ற எச்சரிக்கையும், அவ்வாறான இயக்கமொன்று இருப்பதை பற்றிய சிங்கள மக்களுக்கு தைரியத்தையும் அளிக்கும் செய்தியாகவே அது இருந்தது. இதை விட முக்கியமாக கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அதே பக்கத்தில் 7 கோசங்கள் இருந்தன. அந்த கோசத்தில் இறுதியானது என்ன தெரியுமா, நாட்டையே யுத்தத் தாயாரிப்புக்கு உட்படுத்துவோம், புலி எதிர்ப்பு தேசிய முன்னணியை கட்டியெழுப்புவோம் என்பது தான் அந்த கோசம். உங்களுக்குத் தெரியுமா குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு உரிமை கோரிய இயக்கமும் இது தான். National front against tigers இதனை நீங்கள் உன்னிப்பாக கவனியுங்கள். இந்த விடயம் எங்கும் கவனிக்கப்பட்டதாக இது வரை நான் அறியவில்லை.

அவர்களின் கொலைபட்டியல் அடுத்தது யார் என்கிற கேள்வி பல புத்திசீவிகள், அரசியலாளர்கள் மத்தியில் தோன்ற ஆரம்பித்தன. அந்த பட்டியல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

சமீபத்தில் லக்பிம பத்திரிகையில் சம்பிக்கவின் பேட்டி ஒன்று வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியில் ஒரு கேள்வி. இந்த குறுகிய காலத்தில் நீங்கள் கண்டடைந்த வெற்றிகள் என்ன? அதற்கு சம்பிக்கவின் பதில் இப்படி இருந்தது. இது வரைகாலம் செக்கியுலரிசம் பற்றி பேசிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சி இன்று ரணில் தலைமையில் மகாசங்கத்தினரை சந்தித்து பன்சில் எடுக்கிறார். இது வரைகாலம் மார்க்சியம், பேசிக்கொண்டி¬ருந்த ஜே.வி.பி. தங்கள் ஐந்தாண்டுத் திட்டத்தின் முதல் பிரதியை மகாசங்கத்தினருக்கு கொடுத்து ஆசி பெற்று "அடபிரி" செய்கின்றனர். இது யார் கண்ட வெற்றி என்பதை நீங்கள் தீர்மானியுங்கள் என பதிலளிக்கிறார் சம்பிக்க.

இந்தப் புள்ளி தான் நாங்கள் அவதானிக்க வேண்டிய முக்கிய புள்ளி. இன்று ஒட்டுமொத்த அரசியல் நீரோட்டத்தையும் கட்டுப்படுத்தும் வலிமையை பாசிசம் பெற்றுவிட்டது. ஆயுதப் புரட்சி பற்றி பேசிக் கொண்டிருந்த ஜே.வி.பி.யை சிங்களத் தேசியம் பற்றி பேசவும், அதற்கு எதிராக போகாமலும் பண்ணியிருக்கிறது. குறைந்தபட்சம் சமவாய்ப்புச் சட்டத்தைக் கூட பாராளுமன்றத்தில் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியாமல் போனது எவரது வெற்றி? தமிழர்களின் உரிமைகளுக்கே வேட்டு வைக்க இருந்த தீர்வுப்பொதியைக் கூட பாராளுமன்றத்தில் நிறைவேற்ற விடாமல் செய்தது யாரது வெற்றி. சிறிமா அம்மையாரை பதவி விலக்கி சிங்கள வீரவிதானவுக்கு நெருக்கமான ரத்னசிறி விக்கிரமநாயக்கவை பிரதமராக போட்டு மகாசங்கத்தினரை அணுக வைத்தது யாரது வெற்றி. புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செல்லாக்காசாக்கியது யாரது வெற்றி, ரணிலின் ஆட்சி கவிழ்ப்பு, சந்திரிகாவுக்கு எதிரான சதி, மகிந்த ராஜபக்ஷவை ஆட்சியமர்த்தல், ஆட்சியை நிழலில் இருந்து வழிநடத்துதல் என சகல வெற்றிகளையும் அது தொடர்ந்துகொண்டே இருக்கி¬றது. இந்த நிலைமைகளை விளங்கிக்¬கொள்ளவும், அதற்கேற்ப தங்களை தயார்படுத்தவும் தமிழ்த் தேசம் அதிக அக்கறை செலுத்த வேண்டிய கட்டம் இது.

இன்று முழு சிவில் சமூகத்தையும், அரச கட்டமைப்பையும், பாசிசம் தான் வழிநடத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். இதற்குப் பின்னால் முதலாளித்¬துவ நலன்கள், பல்வேறு சக்திகளின் நலன்கள் கலந்திருக்கும் என்பது உண்மை. ஆனால் அவற்றின் அறுவடை அனைத்தும் பாசிசம் சுவீகரித்துக் கொள்கிறது. சிஹல உறுமய இன்று ஒட்ட இருந்த சுவரொட்டியை நேற்றே ஜே.வி.பி.யினர் ஒட்டிவிடுகின்றனர். சிங்கள வீரவிதானவுக்கு வேலை மிச்சம். ஜே.வி.பி. மட்டுமல்ல சிங்கள கட்சிகள் அனைத்தினதும் இன்றைய நடவடிக்கையின் அறுவடையை பாசிசம் தனக்குரிதாக்கி விடுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். 30களில் மேற்கில் சோசலிசத்தை பாசிசம் வெற்றிகண்ட வரலாற்றனுபவத்தை இன்னமும் இலங்கை இடதுசாரிகள் உணரவில்லை, என்றே நான் கூறுவேன். இனி பாசிசத்துடனான கொடுக்கல் வாங்கல்களை செய்து கொள்ளாமல் எந்தவொரு தென்னிலங்கை அரசியல் சக்திகளும் இருப்பு கொள்ள முடியாது. பேரினவாதம் நிறுவனமயப்படுதல் என்பது எந்தவொரு இடைஞ்சலும் இல்லாமல் இலங்கையில் நிகழ்கிறது.

பாராளுமன்ற அரசியல் வாதத்தைப்பொருத்தவரை பேரினவாதத்தை திருப்திபடுத்துகின்ற சக்திகளே ஆட்சியதிகாரத்தை கைப்பற்றமுடியும், அதனை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்கிற நிலை இன்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த போக்கில் அடிப்படை மாற்றங்கள் நிகழவேண்டுமென்றால் ஒரு அதிசயம் தான் நிகழவேண்டும்.

பேரினவாத முலாம் பூசப்பட்ட பௌத்த மதமும், அதில் நிலையூன்றச்செயய்ப்பட்டுள்ள அரச அதிகார கட்டமைப்பு மேலும் கல்வி, மற்றும் சிவில் அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் என அனைத்¬தும் பேரினவாதமயப்படுத்தப்பட்டிருக்கிறது. புறநிலையாக இவற்றுக்கு எதிராக இடதுசாரி இயக்கங்கள் சில ஜனநாயக நிறுவனங்களுமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற போதும் அது அவ்வளவு பெரிய வெற்றியை எய்த முடியவில்லை.

மேலும் முற்போக்கான புத்திஜீவித்துவ சக்திகள், புலமையாளர்கள் என்போர் பல சமயங்களில் அரசியல் மாற்றங்கள் நிகழும் என்று நம்பி பூர்ஷ்வா சக்திகளை சார்ந்தும் அச்சக்திகளை பலப்படுத்தியும் வந்துள்ளனர். இந்தத்தவறை காலப்போக்கில் சிலர் திருத்திக்கொண்ட போதும் கணிசமானோர் அதனை திருத்திக்கொள்வதை தமது மானப் பிரச்சினையாகக் கொண்டதும் உண்டு. இதன் விளைவு அவர்கள் எதிரியின் கைக் கூலிகளாகவும், பகடைக்காய்களாகவும், ஆகி ஈற்றில் அவர்களின் உரிய இடத்தை முழுவதும் இழந்ததும் நமது நாட்டில் நடந்தது. பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சி காலங்களில் பூர்ஷ்வா வர்க்கம் முற்போக்கனாதாக காட்டிக்கொண்டதும், அது அறிவாளிகளையும், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற உபயோகித்ததையும், அது அதிகாரத்தை கைப்பற்றிய பின்பும் தொடர்ந்தது போல இங்கும் நிகழ்ந்தது. 1956இல், 1970இல் 1994இல் இதுபோன்ற நிகழ்வுகள் இலங்கையில் நிகழ்ந்தன.

ஆனால் 2005இல் பேரினவாத சக்திகள் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற போதிய பலமுள்ளதாக இருநதது. மார்க்சிய தோல் போர்த்திய பேரினவாதிகள் இலகுவாக அதிகாரத்தை கைப்பற்றினர்.

இன்றைய யதார்த்த நிலையொன்று உள்ளது. அது தான். ஊடகச் சந்தையில், ஊடக முதலாளிகளின் மூலதனம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால், அந்த மூலதனம் லாபத்தை ஈட்டவேண்டுமென்றால் தேசியத்தை உயர்த்திப்பிடித்தல் என்பது தவிர்க்கமுடியாததாகிறது. இது ஒரு சந்தைக்கான தந்திரோபாயமாக (Marketing stretegy) ஆகிவிட்டிருக்கிறது. சிங்களத் தேசியத்தை உயர்த்திப்பிடிக்காத எந்தவொரு ஊடகமும் வர்த்தக ரீதியில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது போலவே, தமிழ்த் தேசியத்தை உயர்த்திப் பிடிக்காத எந்த ஒரு ஊடகமும் வியாபார அளவில் வெற்றியடைய முடியாத நிலை தோன்றியிருப்பது தான் யதார்த்தம். இந்த இடத்தில் இருந்து உங்கள் பார்வைகளை விசாலப்படுத்துங்கள் மேலும் பல உண்மை நிலைகளை அறிந்து கொள்வீர்கள்.
ஆக, முழு நாடும் பாசிசத்தின் நிகழ்ச்சிநிரலின் கீழ் கொண்டு செல்லப்படுவதாகக் கூறுகிறீர்கள்..?

இனிவரப்போகும் காலம் அபாயகரமானது என்றா எச்சரிக்கிறீர்கள்..?

இதில் ஊடகங்களின் பாத்திரம் பற்றி...?

தற்போதைய அரசியல் தீர்வு முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புகள் பற்றி..?

அடிப்படையில் நோர்வே அமெரிக்காவின் பொம்மையாகவே பாலஸ்தீன தீர்வு முயற்சியிலும் தன்னை ஆக்கிக் கொண்டிருந்தது. சமீபகாலமாக உலகில் தேசியப் பிரச்சினைகளின் மீதான தீர்வுகளுக்கு அமெரிக்கா நேரடியாக தலையிடாமல் நோர்வே மூலம் தமது நலன்களை நிறைவேற்றி வருவதை பார்க்கலாம். அடக்கப்படும் தேசங்களுக்கு தீர்வு தருவதைப் பார்க்க அடக்கப்படும் மக்களின் போராட்டங்களை சரணடையச் செய்கின்ற முயற்சியையே நோர்வே மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மேலும் உலகின் சமாதான தேவதையாக நோர்வே நோக்கப்படும் அதே நேரம் நோர்வே தனது நாட்டுக்குள் ஏனைய தேசங்களை எப்படி அடக்கிவைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு உண்டு. அங்குள்ள சாமிர் எனும் இனத்தவர்களின் தனியான பண்பாடு, மொழி, கலாசாரம் என்பனவற்றை சிதைத்தும், அவர்களின் இன அடையாளத்தை பேணவிடாமல் நுணுக்கமாக இயங்கியும் வந்திருக்கிறது. நோர்வேயின் வடக்குப் பகுதியில் இந்த இனத்தவர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை நோர்வேயின் பிரதான வருமானமான எண்ணெய் வளங்களை அனுபவிக்கலாம். இப்படிப்பட்ட நோர்வேயின் தலையீட்டை சந்தேகத்தோடு நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. மேலும் அடிப்படையில் தமிழ் மக்களின் எதிரிகளாகிவிட்டிருக்கிற அமெரிக்கா, இந்தியா போன்ற சண்டியர்களிடம் தான் இலங்கை பிரச்சினை தொடர்பாக யோசனைகளை நோர்வே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ளுங்கள். ஒரு புறம் குர்திஸ்தான் மக்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்குவதாக வேடம்போட்டுக் கொண்டு. மறுபுறம் குர்திஸ்தான் மக்களின் போராட்டத்தை அடக்க துருக்கி அரசாங்கத்திற்கு ஆயுத தளபாடங்களை விற்பனை செய்து வருகிறது நோர்வே. நோர்வேயின் நடவடிக்கைகள் குறித்து பேரினவாதிகள் சந்தேகிப்பதற்கும் தமிழ் மக்கள் சந்தேகிப்பதற்கும் இடையில் அடிப்படை வித்தியாசம் உண்டு என்பதையும் கவனியுங்கள்.
மாற்று அரசியலின் தேவை பற்றி..

தமிழ்த்தேசிய விடுதலையுடன் நமது தேவை நின்றுவிடவில்லை. இன்றைய முதன்மைத் தேவை என்கிற பேரில் ஏனைய சமூக அடக்குமுறைகள், ஏற்றத் தாழ்வுகள் என்பவற்றுக்கெதிரான போராட்டம் மறுக்கப்பட்டு வருவதை கண்மூடித்தனமாக தமிழ்தேசம் எதிர்கொண்டபடி இருக்கிறது. வர்க்கப் பிரச்சினை, சாதியம், பிரதேசவாதம், பால்வாதம், என்கிற விடுதலையின் தேவை இல்லாமல் போய்விடவில்லை. மேற்பூச்சுக்காக இன்று இவற்றையும் உள்ளடக்கியது தான் இன்றைய தேசப்போராட்டம் என்று கூறப்பட்டாலும் கூட, ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்குரிய எந்த நம்பிக்கையையும் இன்னும் கிஞ்சித்தும் காணவில்லை.

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது. அதற்கப்பாற்பட்ட போராட்டத்தின் தேவை இன்னமும் உள்ளது.

-நேர்காணல்- தாஸ்

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல் - 2


என்.சரவணன்

இந்த கட்டுரைத் தொடர் விரைவில் வெளிவரவிருக்கும் சிங்கள சாதியமைப்பு குறித்த நூலில் உள்ளடக்கப்படுவதற்கான கட்டுரைகளாகும். ஏற்கெனவே சிங்கள சாதியமைப்பு குறித்த வெவ்வேறு தலைப்பிலான கட்டுரைகள் சரிநிகர், இனி, ஆதவன், மற்றும் 'பறை” யிலும் வெளிவந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சி இங்கு தொடர்ந்து பதிவாகிறது.


இந்திய சாதியமைப்பை மூல வடிவமாகக்கொண்ட தமிழ் சாதியமைப்பின் அடிப்படை தன்மையான சாதியப்படிநிலையானது சிங்கள சாதியமைப்பு படிநிலைக்கு ஒப்பானதல்ல.


குறிப்பாக இந்திய மூல சாதியமைப்பில் எந்தவொரு சாதிக்கும் இன்னொரு சாதி நிகரில்லை. ஆனால் சிங்கள சாதியமைப்பானது தனக்கான சாதிய படிநிலைமைப்பைக்கொண்டிருக்கிற போதும் அது தெட்டத்தெளிவான படிநிலை வரையறையைக்கொண்டதாக இல்லை என்பதை வாசகர்கள் அறிவத முக்கியம். மேலும் அது நெகிழ்வானது. எனவேதான் சென்ற இதழில் கூறியது போல முந்தி பிறந்து பிந்தியும் வாழும் தமிழ் சாதியமைப்பு என்றும் பிந்தி பிறந்து முந்தி இறக்கும் சிங்கள சாதியமைப்பு என்றும் குறிப்பிட்டிருந்தேன். இந்த நெகிழ்ச்சி அதன் படிநிலையில் மட்டுமல்ல, தீண்டாமையிலும் தான்.


மேலும் காலனித்துவம் தமிழ் சாதியமைப்பில் ஏற்படுத்திய மாற்றத்தை விட அதிகளவில் சிங்கள சாதியமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஏற்கெனவே இருந்த சில சாதித் தொழில்கள் காலனித்துவத்தோடு மாறியிருக்கின்றன. உதாரணத்திற்கு தொழில் ரிதியில் பாரம்பரிய படைவீரர்களாக துராவ சாதியினர் இருந்திருந்த போதும் அவர்கள் காலனித்துவத்திற்குப்பின் கள் இறக்குபவர்களாக கொள்ளப்படுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ்ச் சமூகத்தில் இருக்கக்கூடிய கள் இறக்கும் நளவர்களுக்கு ஒப்பாக அழைக்கப்படுகின்றபோதும், அவர்கள் -தமிழ்ச்சமூகத்தில் நளவர்களின் இடமான - பஞ்சமர்களின் ஸ்தானத்தில் அவர்கள் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.


பின் காலனித்துவத்திற்குப் பின்னர் சாதிமைப்பு முறையிலும், அதன் செயல்வடிவத்திலும், அதன் வர்க்க கட்டமைப்பிலும், அதன் இடையீட்டு செயற்பாடுகளிலும், நிறையவே மாற்றங்களை ஏற்படுத்தின. பெரும்பாலான சாதிகள் வழக்கொழிந்து போயின. சில சாதிகளைத் தவிர பல பெயரிழந்து போயின. சாதித் தொழில்கள் மாற்றங்களுக்கு உள்ளாயின. சில சாதியினர் மட்டும் ஒன்றாக அணிதிரண்டன.

போர்த்துக்கேயர் 1505இல் இலங்கையை கைப்பற்றிய பின்னர் ஒல்லாந்தர் வரை இலங்கையின் கரையோரங்களை மட்டுமே கைப்பற்றி ஆண்டு வந்தனர். ஆங்கிலேயர்களே 1818இல் கண்டியைக் கைப்பற்றியதன் மூலம் முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.



இலங்கையின் கரையோரப்பகுதிகளை கரையோரத்தை அண்டி வாழ்ந்த கராவ சாதியினர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோருக்கூடாக மதமாற்றத்துக்கு பலியான முதல் சமூகத்தவர்களானார்கள்.
வடக்கு-கிழக்கு மற்றும் சிங்கள கரையோரப் பகுதிகளையும் சாந்த கராவஃகரையார் சாதியனர் கிறிஸ்தவர்களாகவே இருப்பார்கள் என்கிற ஐதீகம் சாதாரணர்களிடம் இருப்பதை கண்டிருப்பீர்கள்.


இந்த மத அடையாளமே கராவ சாதியினரை சாதியப்படிநிலையில் மேலும் ஒரு நிலைக்கு கீழே தள்ளியது.

சிங்கள சாதியமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்திய மூன்று வரலாற்றுத் திருப்புமுனைகளை சாதியம் குறித்த ஆய்வாளர்கள் சுட்டுவது வழக்கம்.

1. காலனித்துவம்,

2. கண்டி ராஜ்ஜியம் 1818இல் கைப்பற்றப்படல்

3. திறந்த பொருளாதாரக்கொள்கை.

சாதிகளும் தொழில்களும்


சிங்கள சாதியமைப்பினை இரு பெரும் பிரிவினைக்குள் உள்ளடக்கி பார்ப்பது எளிமையாக இருக்கும். கண்டி சிங்களவர்கள் (மலைநாட்டுச் சிங்களவர்) மத்தியில் நிலவும் சாதியமைப்பு மற்றும் கரையோரச்சிங்களவர்கள் (தெற்குச் சிங்களவர்) மத்தியில் இருக்கின்ற சாதியினர்.

கண்டியச் சிங்கள சாதியினர்


1. அஹிங்குந்தய (நாடோடிகள்)

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பத்கம - பாரம்பரிய விவசாயிகள் (பிரித்தானிய ஆட்சியின் போது இவர்கள் பள்ளக்குத் தூக்கிகளாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.)

4. பெராவ - பறையடிப்பவர்

5. கொவிகம - பாரம்பரிய விவசாயிகள் பண்ணையாளர்கள்.

6. ஹாலி - நெசவாளர்கள்

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹூனு - சுன்னக்கல் செய்பவர்கள்.

9. கின்னரய - பாய் பின்னுபவர்கள். 'தாழ்ததப்பட்டோர்”;.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பன்ன - புல்வெட்டுவோர்,

13. பனிக்கி - முடி திருத்துவோர்

14. பட்டி - கால்நடைவளர்ப்போர்

15. பொரவக்கார - மரம்தரிப்போர்

16. ரதல - நிலப்பிரபுக்கள். (குறிப்பாக கண்டி ராச்சிய காலத்தில்)

17. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

18. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

19. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்



கரையோரச் சாதியினர்


1. அஹிங்குந்தய - நாடோடிகள்

2. பட்டஹல (கும்பள்) - குயவர்

3. பெராவ - பறையடிப்பவர்

4. கட்டர - விவசாயிகள்

5. தெமல கட்டர - தமிழ் 'தாழ்த்தப்பட்டோர்”;.

6. துராவ - பாரம்பரிய படைவீரர் - காலனித்துவத்திற்குப் பின் கள் இறக்குவோர்.

7. ஹன்னலி - தையற்காரர்

8. ஹின்ன - சலாகம சாதியனருக்கான சலவைத்தொழிலாளர்

9. கராவ - பாரம்பரிய மீனவர்கள்.

10. நவந்தன்ன - பொற்கொல்லர். - (பல கிளைச்சாதிகளைக்கொண்டது)

11. பமுனு - கூலி விவசாயிகள்

12. பனிக்கி - முடி திருத்துவோர்

13. பொரவக்கார - மரம்தரிப்போர்

14. ராஜக்க, ஹேன - சலவைத்தொழிலாளர்கள்.

15. ரோடியோ - 'தாழ்ததப்பட்டோர்”;.

16. சலாகம - பாரம்பரிய படைவீரர், கருவா பட்டை உரிப்போர்.

17. வக்கும்புர - வெல்லம் தயாரிப்பாளர்



வட கிழக்கு தமிழ் சாதியமைப்பில் உள்ள சாதிகளுக்கு இணையாக
கருதப்படும் சிங்கள சாதிகள்


வெள்ளாளர் - கொவிகம

கரையார் - கராவ

பறையர் - பெராவ

நளவர் - துராவ

பள்ளர் - பத்கம

சாலியர் - சலாகம

துரும்பர் - ஹீன

சிவியார் - பத்கம

அம்பட்டர் - பனிக்கி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More