Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

தேர்தலில் சிறுபான்மை மக்கள் சொந்தத் தலைமைகளை நிராகரித்துள்ளனர் - என்.சரவணன்



6வது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான 5வது ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளின் படி மகிந்த ராஜபக்ஷ வென்றுள்ளார். தெர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகள் வழங்கும் செய்தி என்பதன் சாராம்ச விளக்கமே இது.


யாழ் மாவட்டத்தில் 26.66 சதவீத மக்களே வாக்களித்துள்ளனர். அதிலும் அளிக்கப்பட்ட வாக்குகளில் 3,65 வீத வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அளிக்கப்பட்ட வாக்குகளில் 64 சதவீதம் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் ஒரு தெரகுதியில் அதாவது ஊர்காவற்துறை தொகுதியில் மாத்திரமே மகிந்த வென்றுள்ளார் அதுவும் 635 வாக்குகள் மட்டுமே மேலதிகமாக பெற்றுள்ளார்.


வன்னி மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் சரத் பொன்சேகா வெற்றி பெற்றுள்ளார். கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் மகிந்த படு தோல்வியடைந்துள்ளார் சரத் பொன்சேகா 69 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். திருகோணமலையில் சேருவில தொகுதியைத் தவிர மூதூர் திருகோணமலை தொகுதிகளில் மகிந்த தொல்வியடைந்துள்ளார். அம்பாறையிலும், அம்பாறை தொகுதியைத் தவிர எனைய 3 தொகுதிகளிலும் மகிந்த தோற்கடிக்கப்பட்டுள்ளார்.


சரத் பொன்சேகா வெற்றி பெற்ற இன்னொரு மாவட்டம் மத்திய மாகாணத்திலுள்ள மலையகத் தமிழர்கள் அதிகமாக வாழும் நவரெலிய மாவட்டமாகும். அங்கும் சரத் பொன்சேகா வெற்றிபெற்றுள்ளார். கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் தொகுதிகளில் அனைத்திலும் மகிந்த தொல்வியடைந்துள்ளார். 15 தொகுதிகளில் 6 தொகுதிகளில் சரத் பொன்சேகா வென்றுள்ளார்.



தேர்தலுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணிப்புகளின் படி தமிழர்களின் வாக்குகள் திசை தெரியாதபடி சிதைந்துள்ளதாக கணிப்புகள் வெளியிடப்பட்ட போதும், இன்றைய தேர்தல் முடிவுகளானது வேறும் பல செய்திகளை வெளிப்படுத்தியிருக்கிறது.


அரசுடன் இணைந்த அனைத்து தமிழ் கட்சிகளும் இத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அரசுடன் உள்ள முக்கிய தமிழ் கட்சிகளான, வடக்கில் ஈ.பி.டி.பி, புளொட், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் கட்சி, கிழக்கில் டி.எம்.வி.பி என்பன மகிந்தவுக்கு ஆதரவாக எத்தனை பிரச்சாரம் செய்த போதும் அவர்களின் கருத்தை மக்கள் ஏற்காது தமது சொந்த முடிவினையே எடுத்திருக்கிறார்கள் என்பது வெளிப்படை. தமிழ் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவின் கூட்டில் இருந்தது ஒரு பொருட்டல்ல. அவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இதே வெளிப்பாடு ஏற்பட்டிருக்கும் என்று கருதத் தோன்றுகிறது.



சரத்பொன்சேகாவுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்ய அளிக்கப்பட்ட வாக்குகளில்லை. மகிந்தவை தோல்வியடையச் செய்வதற்காக அளிக்கப்பட்ட வாக்குகளே என்று கூறலாம். கிழக்கில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் உள்ள முஸ்லிம் மக்கள் அதிகமாக வாழும் பகதிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் சரத் பொன்சேகாவுக்கே அளிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
கொழும்பில் சரத் பொன்சேகா வென்ற தொகுதிகளில் கிடைத்த வெற்றியில் மனோ கணேசனுக்கு பங்குண்டு என்றும் கூறலாம்.


முல்லைத்தீவு மாவட்டத்தில் 14 வீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. குறைந்தளவு வாக்குகள் பதிவான மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டமே. மக்கள் தேர்தலில் ஆர்வமில்லையென்பதை இவை நிருபித்துள்ளன. வவுனியா மாவட்டத்தில் 43 வீத வாக்குகளும், மன்னாரில் 34 வீத வாக்குளுமே பதிவாகியுள்ளன. ஆக மொத்தத்தலில் வடக்கில் அனைத்து 5 மாவட்டங்களிலும் 50 வீதத்திற்கும் குறைவான வாக்குகளே பதிவாகியுள்ளன. இதற்கு மக்களின் இடப்பெயர்வு ஒரு காரணமாக இருந்த போதும், அது முழுமையான காரணமாக இருக்க முடியாது என்று தெரிகிறது. ஏறத்தாழ கால் நூற்றாண்டுக்குப் பின் வடக்கில் முழு பிரதேசங்களிலும் தேர்தல் இடம்பெற்றுள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த மக்கள் இறுதி நேரத்தில் அவசர அவசமாக குடியேற்றப்படுவதற்கு தேர்தல் ஒரு முக்கிய காரணமாகவே இருந்தது.


ஆக மொத்தத்தில் இம்முறை தேர்தலானது, இலங்கை தேர்தல் வரலாற்றிலேயே சிறுபான்மைத் தேசிய இனங்களான தமிழ், முஸ்லிம், மலையக மக்களில் பெரும்பாலானோர் தெட்டத்தெளிவாக தென்னிலங்கை "தேசிய" அரசியல் நீரோட்டத்தில் இருந்து பிரிந்து நிற்பது வெளிப்படையாகத் தெரிகிறது.


குறிப்பாக தமிழ், மலையக மக்கள் தமது அரசியல் தலைமைகளுக்கு ஆப்பு வைக்கவும் எம்மால் முடியுமென்று நிரூபித்திருக்கிறார்கள். மக்களின் அரசியல் அபிலாசைகளை அத்தலைமைகள் பிரதிபலிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம்.



மகிந்த அரசு வெளிப்படையாகவே ஒட்டுமொத்த அதிகாரத்தையும், அரச வளங்களையும் துஸ்பிரயோகம் செய்து தமது மோசமான அராஜகத்தையும், அட்டுழியங்களையும் செய்தே இந்த வெற்றியை பெற்றனர் என்பது கண்கூடு.


ஊழல், மனித உரிமை உரிமை மீறல், கருத்துச் சுதந்திரப் பறிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இடது சாரிப் போராட்டங்களை மோசமாக அரச இயந்திரத்தைக் கொண்டு தொடர்ச்சியாக நசுக்கி வந்தமை என மகிந்த அரசுக்கு எதிரான அலை மிகுந்திருந்தது.


போர் வெற்றி மாத்திரமே தென்னிலங்கையில் மகிந்தவின் ஒரே ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது. அந்த வெற்றி மயக்கத்திலிருந்து மக்கள் மீள்வதற்குள் அந்த வெற்றியை பயன்படுத்த வேண்டுமென மகிந்த அரசாங்கம் திட்டமிட்டது. அதற்கான தேர்தல் தான் இப்போது நடந்து முடிந்தது. அதே வெற்றியை சம அளவில் பங்கு போடக்கூடியவரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை எதிர் கட்சிகள் பொது வேட்பாளராக நிறுத்தியபோதும் இறுதியில் எதிர்க்கட்சிகள் தோல்வியடைந்திருக்கிறதென்றால் அதற்கான முக்கிய காரணங்கள் அரசின் அதிகார துஸ்பிரயோகமும், போர் வெற்றி மயக்கத்திலிருந்து தென்னிலங்கை மக்கள் இன்னமும் மீளவில்லை என்பதுமே.




வெகு விரைவில் நடத்தப்படவிருக்கிற பாராளுமன்றத் தேர்தலுக்கான ஒத்திகையாகவும் இந்தத் தேர்தலை அரசாங்கம் கருதியிருந்தது. அப்படி நாடிபிடித்தறிவதற்கு இந்தத் தேர்தல் போதுமானதா என்பது கேள்விக்குறியே. இந்த இடைப்பட்ட காலத்தில் நிகழவிருக்கும் தேர்தல் கூட்டணிகள் மற்றும் மக்கள் மீது ஏற்படுத்தப்படும் நம்பிக்கைகளே அதன் முடிவைத் தீர்மானிக்கும். போர் வெற்றி எவ்வளவு காலம் அரசாங்கத்துக்கு கை கொடுக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.


தேர்தல் முடிவுகளை முழுமையாக பார்வையிட


Election Results

காணவில்லை: டானியலின் கல்லறை - ஆதவன் தீட்சண்யா

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஊழியர். இலங்கை தமிழ்ச் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராட கட்சியின் முன்னெடுப்பில் உருவான தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் தலைவர்களில் ஒருவர். மார்க்சீய அறிதல்முறை மற்றும் தலித் உள்ளுணர்வின் வழியே சமூகத்தின் அடிப்படையையும் நிகழ்வுப் போக்குகளையும் விளங்கிக் கொண்டவர். தமிழர் என்ற பொது அடையாளத்திற்கு வெளியே தாழ்த்தப்பட்ட மக்களை நிறுத்திவைப்பதற்கு சாதியம் வழங்கிக் கொண்டிருந்த உளுத்துப்போன நியாயங்களையும் நடைமுறைகளையும் தனது எழுத்தாக்கங்கள் வழியே அம்பலப்படுத்தியவர். அவரது எழுத்துகள் அவரை தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடி என்ற பெருமைக்கு உயர்த்தி நிறுத்தியுள்ளன. விழுங்க முடியாத முள் அல்லது மறக்க முடியாத சொல்லாக அவரது பெயர் மேலெழுந்து வந்தது. அ.மார்க்ஸ், தஞ்சை பிரகாஷ் போன்ற தமிழக எழுத்தாளர்கள் பலருடனும் தோழமை கொண்டிருந்தவர்.
... இப்படி சொல்லிக் கொண்டே போகுமளவுக்கு புரட்சிகரமான வாழ்வைக் கொண்டிருந்த தோழர் கே.டானியல், மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வந்து 1986 மார்ச் 23 அன்று தஞ்சையில் காலமானார்.வெண்மணிக்குப் போய் அந்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திவிட்டு வரவேண்டும் என்ற அவரது விருப்பம் நிறைவேறாமலே போய்விட்டதென்கிறார் அவரது உற்றத்தோழர் வி.ரி.இளங்கோவன். பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளும் டானியல் நினைவுநாளும் ஒன்றுதான். டானியலின் கல்லறையை மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியெழுப்பியிருந்ததாக தோழர்கள் சிலர் கூறினார்கள். அ.மார்க்ஸுக்கும், பொ.வேலுச்சாமிக்கும் இதில் கூடுதல் பங்களிப்பு இருந்திருக்கிறது. கடந்த சிலவருடங்களில் மாதம் ஒருமுறையாவது ஏதேனுமொரு வேலையாக தஞ்சாவூருக்குப் போய்வந்து கொண்டுதானிருக்கிறேன். டானியலின் கல்லறையை இம்முறையாவது பார்த்துவிட்டு வரவேண்டும் என்று ஒவ்வொருமுறை போகும்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. ஆனால் நிகழ்ச்சிகள், அதற்குப் பிறகு தோழர்களுடனான சந்திப்புகள் என்று இருந்துவிட்டு கிளம்பி வந்து வண்டி பிடிப்பதே வழமையாய் இருந்தது. இம்முறையும் அப்படி வந்துவிட்டிருந்தால் மனம் தொந்திரவு அடைந்திருக்காது என்று இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

2010 ஜனவரி 22 அன்று தஞ்சை மாவட்ட தமுஎகச செயலாளர் களப்பிரனின் தங்கை திருமணம். மண்டபத்திலிருந்து அறைக்குத் திரும்பி தோழர்கள் தஞ்சை சாம்பான், சோமலிங்கம் ஆகியோருடன் உரையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்சநேரத்தில் எழுத்தாளர் கீரனூர் ஜாகிர் ராஜாவும் திரைத்துறையில் பணியாற்றி வரும் தோழர் சசிகுமாரும் வந்து சேர்ந்தார்கள். உரையாடல் எனது இலங்கைப் பயணம் குறித்து திரும்பியது. ( ஆதவன் எப்படி போய்வந்தார் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று விஷமத்தனமாக பாவ.செயப்பிரகாசம் பழிபோட்டுக் கொண்டிருக்கிறாரே அந்த பயணம் பற்றியதுதான். அவருக்கு பதில் சொல்ல இதுவல்ல இடம். வேறு இடம் கிடைத்தாலும் அவரது ஊத்தை உளறல்களுக்கு பதில் சொல்லி ஆகப்போவதென்ன?) மலையகத்திலாகட்டும் கொழும்பு அல்லது யாழ்ப்பாணத்திலாகட்டும் அங்குள்ள எழுத்தாளர்கள் மறைந்த தோழர் டானியல் மீது வைத்திருக்கும் ஈடுபாடு அளவற்றதாய் இருப்பதையும், ஹரிகிருஷ்ணனின் மணல்வீடு டானியல் சிறப்பிதழாக வெளியானதை அவர்களில் பலர் நினைவு கூர்ந்ததையும் சொல்லிக் கொண்டிருந்தேன். டானியலின் நாவல்கள் குறித்து புதுவிசையில் லெனின் மதிவானம் எழுதிய கட்டுரை, டென்மார்க்கிலிருக்கும் தோழர் கரவைதாசன் கொண்டு வரவிருக்கும் இனி இதழில் வி.ரி.இளங்கோவன், சிவசேகரம், சி.கா.செந்திவேல், எஸ்.சந்திரபோஸ் ஆகியோர் டானியல் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் என்று அவரைப் பற்றியே பேசிக்கொண்டிருந்த போதுதான், டானியல் கல்லறைக்குப் போவமா தோழர் என்று கேட்டேன். பிறகென்ன, ஐந்துபேரும் கிளம்பினோம்.

தஞ்சையின் ராஜகோரியும் அதையடுத்துள்ள இடுகாடும் திறந்தவெளி பீக்காடாக நாறிக் கொண்டிருக்கின்றன. உயிருள்ள மனிதர்கள் வாயில் மலத்தை திணிக்கிற கேடுகெட்ட நாட்டில் செத்தவர்கள் மேல் கழிந்துவைப்பதில் யாருக்கு என்ன வருத்தமிருக்கப் போகிறது? பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறைக்கு அருகில்தான் டானியலின் கல்லறை என்று உறுதியாக தெரிவித்த சாம்பான் அவ்விடத்திற்கு அழைத்துப்போனார். (பாவம் திமுக. யாராவது ஒரு அழகிரியை மட்டும் பார்த்துக்கொள்கிற வலுவும் மனமும்தான் அதற்கிருக்கிறது போலும். பட்டுக்கோட்டை அழகிரியெல்லாம் இனி எதற்கு? சீந்துவாரற்று கிடக்கிறது அந்த கல்லறை).

தஞ்சை சாம்பானும், சசிகுமாரும் அங்குமிங்குமாக தேடிச் சலித்துவிட்டு கடைசியில் உதட்டைப் பிதுக்கி நின்றனர். இத்தனைக்கும் அவர்கள் ஏற்கனவே டானியல் கல்லறைக்கு வந்துபோனவர்கள்தான். ஆனால் அப்படியெதுவும் அங்கு தென்படவில்லை. சந்தேகம் வந்துவிட்டால் பானையைத் திறந்து யானையைத் தேடுகிற மாதிரி அவரும் சசியும் அங்குமிங்குமாக அலைந்தார்கள். ராவணன் என்கிற தோழரை செல்போனில் அழைத்து சரியான இடம் குறித்த விவரங்களைத் கேட்டுக்கொண்டு மீண்டும் தேடினோம். ஒருவேளை இவர்கள் சரியான இடத்தை மறந்திருக்கக்கூடும் என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன்.
தோழர்.அ.மார்க்ஸ் சரியான இடத்தை சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையில் அவரை அலைபேசியில் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. ஒருவேளை யாராவது இடித்துத் தள்ளியிருப்பார்களோ என்று யோசிக்கக்கூட எனக்கு தைரியம் வரவில்லை. சோர்வும் ஏமாற்றமும் பீடித்த மனநிலையோடு அறைக்குத் திரும்பிய கொஞ்நேரத்தில் தோழர் மார்க்ஸ் லைனில் வந்தார். விசயத்தை சொன்னதும் அவரும் பதறிவிட்டார். அவருக்கும் டானியலுக்குமான நெருக்கமும் தோழமையும் அப்படியானது. அழகிரியின் கல்லறைக்குப் பக்கத்தில் அதேவரிசையில்தான் டானியல் கல்லறை என்று உறுதியாக தெரிவித்தார். பிப்ரவரி 2ம் தேதி தஞ்சை வரவிருப்பதாகவும் அப்போது நேரில் சென்று பார்ப்பதாகவும் அவர் கூறியது சற்றே ஆறுதலாயிருந்தது. இடுகாடு முழுவதும் மண்டிக் கிடக்கும் முட்புதருக்குள் டானியலின் கல்லறை சேதமின்றி இருக்கிறது தோழரே, நீங்கள்தான் சரியாய் தேடிப் பார்த்திருக்க தவறிவிட்டீர்கள் என்று மார்க்ஸ் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்.

தோழர்கள் சசியும் கீரனூர் ஜாகீர் ராஜாவும் அலைபேசியில் தெரிவித்த அண்மைச்செய்திகள்:
மொழிப்போர் தியாகிகள் கூட்டத்திற்காக தஞ்சை வந்திருந்த தமிழச்சி தங்கபாண்டியனிடமும், எஸ்.தேன்மொழியின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்காக வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமாரிடமும் டானியலின் கல்லறைக்கு நேர்ந்துள்ள கதியை சசி எடுத்துரைத்திருக்கிறார். இதனிடையே தஞ்சை மாநகராட்சி உறுப்பினராயிருக்கும் சசியின் நண்பர் குமார், “உலகம் போற்றும் ஒரு எழுத்தாளரின் கல்லறையைக்கூட நம்மால் பாதுகாக்க முடியவில்லையே” என்கிற அவமானமும் ஆதங்கமும் கொண்டு இப்பிரச்னையை 25.01.2010 அன்று அவைக்கூட்டத்தில் எழுப்பியிருக்கிறார். டானியலின் கல்லறைக்கு நேர்ந்த கதியை தஞ்சை நாளிதழ்களும் கவனப்படுத்தி வெளியிட்டுள்ளன. டானியல் இப்போது ஒரு பேசுபொருளாகியிருக்கிறார் தஞ்சையில். “சரியான இடத்தை கண்டுபிடித்து சொல்லுங்கள், அவருக்கு நேர்ந்த அவமானத்தைப் போக்கும் வகையில் மிகச்சிறப்பாக கல்லறையை எங்கள் செலவில் எழுப்பித் தருகிறோம் என்று பலர் முன்வந்திருப்பதாக சசி கூறிய தகவல் நெகிழ்ச்சியளிக்கிறது. புனரமைப்புக்கு உதவி தேவையெனில் தயங்காமல் கேளுங்கள் தோழரே என்று உயிர்மெய் தமயந்தியும் (நார்வே) கூறியிருக்கிறார்.

தோழர் டானியலின் நினைவுநாளான மார்ச் 23 நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு கம்யூனிஸ்டாக இருந்து போராடி ஈட்டிய வெற்றிகள், அவரது நூல்கள், அவர் உருவாக்கிய அறிவுப் பாரம்பரியம், முன்னெடுத்த தலித் இலக்கியம் ஆகியவற்றின் வழியாக நம்முடனேயே இருக்கும் தோழர் டானியலுக்கு அவரது கல்லறையையாவது மீட்டுத்தர என்ன செய்யப்போகிறோம்? அந்த பீக்காட்டில் அவரது கல்லறையை மறுபடியும் தேடப்போகிறோமா அல்லது அவருக்குரிய மரியாதையுடன் புனரமைக்கப்பட்ட ஒரு கல்லறையின் முன் அஞ்சலி செலுத்தப்போகிறோமா என்பதை அரசாங்கமும், தஞ்சை மாநகராட்சியும்தான் இனி சொல்லியாக வேண்டும்.

2. கல்லறைகளைப் பற்றிய பிற நினைவுகள்

அ) லண்டன் ஹைகேட் இடுகாட்டில் இருக்கும் காரல் மார்க்சின் கல்லறையைப் பார்க்க இப்படித்தான் நானும் ஷோபாசக்தியும் கீரனுடன் கிளம்பிப்போனோம் ஒரு சாயங்காலப் பொழுதில். சுடுகாட்டை பூட்டிவைப்பார்கள் என்று எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடுங்குளிர் காலமானதால் மாலையில் 4.30 மணிக்கே கதவடைத்துவிட்டார்கள். எதெதற்கோ சுவர் தாண்டுகிறவர்கள் இருக்க, மார்க்ஸ் கல்லறையைப் பார்க்க சுவரேறி குதித்தால் என்ன என்றுகூட யோசித்தோம். கீரன்தான் நாளைக்கு வருவோம் என்று சமாதானம் சொன்னார். பிறிதொருநாள் நானும் காண்டீபனும் போய் பார்த்தோம். யாரோவொரு தனிநபர்தான் தன் சொந்த செலவில் மார்க்சின் கல்லறையைக் கட்டியதாக சொன்னார்கள். அந்த கல்லறைத் தோட்டத்தில் 300 வருடங்களுக்கு முந்திய பல கல்லறைகளைக்கூட காணமுடிந்தது.

ஆ) கலை இலக்கிய ஆளுமைகளின் கல்லறைகள் ஆழ்ந்த பொறுப்புணர்வுடனும் அழகுணர்ச்சியுடனும் பிரான்சில் பராமரிக்கப்படுவதை நேரில் கண்டு நெகிழ்ந்த அனுபவத்தை ஓவியர் ட்ராட்ஸ்கி மருது பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இ) இலங்கை மலையகப்பகுதியில் வீறுடன் செயல்பட்ட செங்கொடி சங்கத்தின் தலைவர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் அவர்களின் கல்லறையைப் பார்த்ததும்கூட இப்படியான ஒரு அனுபவம்தான். கடும் மழையில் சிக்கிக் கொண்டு வெகுவாக தாமதமாகி இருட்டும் நேரத்திற்குதான் அங்குபோய் சேர முடிந்தது. ஒரு தேயிலைத் தோட்டத்தினூடே நீளும் சாலையொன்றின் ஓரத்தில் சுந்தரத்தின் கல்லறை இருந்தது. தொழிலாளி வர்க்கத்திற்காக தோழர் சுந்தரம் ஆற்றிய பணிகள் குறித்து மரியாதை கொண்டிருந்த சிங்களவரான ஒரு கம்யூனிஸ்ட் தன் சொந்த செலவில் அந்த கல்லறையை கட்டியதாக தோழர்கள் ஜேம்சும் மகேந்திரனும் தெரிவித்தார்கள்.
தொழிலாளர்களை ஒடுக்கி தனக்கு ஆதாயம் தேடித் தந்த பெரிய கங்காணிகளின் கல்லறைகளை எஸ்டேட் நிர்வாகங்களே கட்டி வருடந்தோறும் நினைவுதினத்தை அனுஷ்டித்து வருவதும், தமக்காக உழைத்து மாண்ட ஒரு தலைவரின் கல்லறையை தொழிலாளிவர்க்கம் கண்டுகொள்ளாதிருப்பதும் ஏனோ இவ்விடத்தில் நினைவில் தோன்றி உறுத்துகிறது.

ஈ) சேகுவேராவை கொன்றவர்கள் அவரை எங்கே புதைத்தார்கள் என்பது 30 வருடங்கள் கழித்தே வெளியுலகுக்கு தெரியவந்தது. கொன்றபிறகும் ஆத்திரமடங்காமல் சேவின் கரங்களை மணிக்கட்டுடன் வெட்டியெடுத்துவிட்டு புதைத்தார்கள் என்கிற குறிப்புதான் கண்டுபிடிக்க உதவியாய் இருந்தது. தோண்டியெடுக்கப்பட்ட அவரது எலும்புக்கூடு வழியே உலகம் மீண்டும் சேகுவேராவை கண்டது.

உ)டானியலின் கல்லறையை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதற்கு வருந்திய தோழர்.அழகிய பெரியவன், பெருநகரத்தின் கழிவுகளால் திணறி அழுக்கேறிப் போன கடலின் ஓரத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சமாதி முறையான பராமரிப்பின்றி இருந்ததைக் காணநேர்ந்ததாக கவலை தோயக்கூறினார்.

நிச்சாமம்

புலம்பெயர்வும்-இடம்பெயர்வும் - தோழர் தங்கவடிவேல்

அன்பர்களே நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். நான் சமாதானத்திற்கான கனடியர் அமைப்பினர் நடாத்தும் இந்தக் கூட்டத்தில் பேசுவதையிட்டு நான் பெருமைப் படுகிறேன். எனக்குத் தரப்பட்ட தலைப்பு இடம்பெயர்ந்தவர்களும் புலம்பெயர்ந்தவர்களும். இது ஒரு அருமையான தலைப்பு. அன்பர்களே முதலில் இடம்பெயர்வு என்ற பதத்தை எடுப்போமாக இருந்தால் இலங்கையில் தமிழர்களாக இருந்த தமிழர்களோடு இருந்த ஒருசாரார் அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள்தான் முதன் முதலில் இடம்பெயர்வுக்கு உள்ளானார்கள். நண்பர்களுக்கு நான் இதை ஞாபகப்படுத்த ஆசைப்படுகிறேன். முற்றுமுழுதாக தமிழர்கள் வாழுகின்ற யாழ்ப்பாண மண்ணிலே தாழ்த்தப்பட்ட மக்கள் ஏழை மக்கள் உயர்சாதி என்று சொல்லப்படுபவர்களால் பலதடவை இடம்பெயர்வுக்கு வற்புறுத்தப்பட்டார்கள். பலர் மனபங்கப்படுத்தப்பட்டார்கள். பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவர்கள் அங்கவீனர்களாக்கப்பட்டார்கள். விசேடமாகப் பெண்கள்.

பலரது குடிசைகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதேபோல ஓரிடத்தில் நிரந்தரமாக வாழுகின்ற தங்களது அடிப்படை உரிமையை இழந்து யாழ்ப்பாண மண்ணிலே இருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் திருகோணமலைக்கும் வன்னிப் பகுதிக்கும் இடம்பெயர்ந்த வரலாறு ஏராளம் ஏராளம்.
இது ஒன்றும் கற்பனைக் கதையல்ல. நிதர்சனமான வரலாற்று உண்மைகள்.

இந்தச் சாதித் துவேசம் என்கின்ற அடிப்படையான கேவலமான மிருகத்தனமான மிலேச்சத்தனமான இந்தக் கட்டமைப்பிலிருந்து எங்களுடைய இலங்கை அரசியலில் இனவாதமும் சரி மதவாதமும் சரி முளைத்திருக்கின்றன. முளைக்கின்றன. தமிழ் மொழியைவிட வேறுமொழி தெரியாது. வேறு மொழிகளைப் படிப்பதற்கு வாய்ப்பளிக்ப்படாத மக்கள். பாடசாலைகளிலே படிக்க்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்கள்.தாங்கள் நினைத்தது போல் உடைதரிக்க முடியாது போன மக்களை மிகவும் கீழ்த்தரமான வாழ்நிலைக்குத் தள்ளி மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்தவர்கள் இலங்கை வரலாற்றிலே மேட்டுக் குடியினர் என்று சொல்லப்படும் சாதிமான்களான யாழ்ப்பாணத்துக் கனவான்களே என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

யாழ்ப்பாணத்துத் தமிழ்த் தலைவர்கள் யாழ்ப்பாண மண்ணிலே வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களது உரிமையை கொடுக்க மறுத்து செய்த கொடுமைகள் ஏராளம். இப்படியான தலைவர்கள் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு அதாவது 1948ம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் எப்படிச் சிங்களத் தலைவர்களோடு உறவாடினார்கள் என்பதைநாங்கள் நிதானமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். உதாரணத்திற்குச் சொல்லலாம், டி.எஸ் சேனநாயக்கா குடும்பம் பின் பண்டாரநாயக்கா குடும்பம் அதன்பின் வந்தவர்கள் என அனைவரோடும் மிகநெருங்கிய உறவை வைத்துக் கொண்டிருந்தவர்கள் இராமநாதன், அருணாசலம், ஜி.ஜி. பொன்னம்பலம் அதன்பின் வந்த சுந்தரலிங்கம் திருச்செல்வம் போன்றவர்கள்.

இந்த இரண்டு இனவாதிகளும் இந்த இரண்டு சாதிவாதிகளும் தான் இலங்கையில் நடைபெற்ற அனைத்து அட்டூழியங்களுக்கும் மோதல்களுக்கும் அடாத்துக்களுக்கும் விதை விதைத்தார்கள் என்று சொல்வது ஒன்றும் பொய்யல்ல. கட்டுக்கதையல்ல. நண்பர்களே… சிங்கள அரசியல் தலைவர்கள் முழு இலங்கையையும் ஆண்ட காலத்திலே அதாவது உதாரணத்திற்கு டி.எஸ். சேனநாயக்கா காலத்திலே அவர்பிரதமராக இருந்த காலத்திலே அவருக்கு சகல விதமான உதவிகளையும் ஒத்தாசையையும் செய்தவர்கள் ஜி.ஜி. பொன்னம்பலம், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்கள். ஏனெனில் அவர்கள் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கொருவர் உதவியாகவும் பாதகாப்பாகவும்தான் இருந்திருக்கிறார்கள். சேனநாயக்கா அவர்கள் குடியேற்றத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்த பொழுது சிங்களக் குடியேற்றம் என்று சொன்னார்கள். அன்றைய தமிழ்த் தலைவர்கள் அவர்களுக்கு உடன்பாடாய்த்தான் இருந்தார்கள். ஒத்தசையாகத்தான் இருந்தார்கள்.

அப்போது இதனைத் தவறு என்றும் பிரச்சனைக்குரியவை என்றும் இடதுசாரிகள் சொன்னபொழுது இந்தத் தமிழ்த் தலைவர்கள் சிங்களத் தலைவர்களோடு சேர்ந்து நின்று தமது கைங்கரியங்களை புரிந்தார்கள். தமிழ் மக்களில் ஒரு சாராருக்கு உரிமைகள் கொடுக்கக் கூடாது என்று பேசியவர்கள் சிங்களத் தலைவர்கள் அல்ல. முதல் பேசியவர்கள் இராமநாதன் போன்ற தமிழ்த் தலைவர்கள். பின்னர் அந்த அடக்கப்பட்ட மக்கள் அடக்குமுறைக்கெதிராக வீறு கொண்டெழுந்து தெளிந்த மனதோடு மார்கிய லெனினிச சோசலிச கொள்கையோடு சேர்ந்து எடுத்த நடவடிக்கைக்கு எதிராக நின்றவர் வவுனியா சி.சுந்தரலிங்கம் அவர்கள். இவர்களுக்கு எதிராக சிங்கள அரசு எந்த நடவடிக்கையும் எடக்கவில்லை. தட்டிக் கேட்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள்தான் கேட்டார்கள். நண்பர்களே சாதிவாதம் மொழிவாதம் இனவாதம் வர்க்க வாதம் எல்லாமே கிட்டத்தட்ட ஓரிடத்தில் இருந்துதான் பிறக்கின்றது.

சாதி அடக்குமுறை எவ்வளவு பயங்கரமானதோ அதேயளவு பயங்கரமானதுதான் இனவாதம். வர்க்க வாதமும் அப்படித்தான். வர்க்கமுரண்பாடு உலகம் முழுமைக்கும் பொதுவானது. அடுத்து, பண்டார நாயக்கா ஆட்சிக்கு வருகிறபொழுது இரண்டே இரண்டு கட்சிகள்தான் சிங்களவர்களிடம் இருந்தது. ஒன்று ஐக்கியதேசியக்கட்சி மற்றது சிறீலங்கா சுதந்திரக் கட்சி. பண்டாரநாயக்கா 1947இலேயே தமிழத் தலைவர்களான எஸ்.ஜே.வி. செல்வநாயகம் போன்றவர்களிடம் இலங்கையில் ஒரு இனப்பிரச்சனை இருக்கிறது இது பிற்காலத்தில் வளர்ந்து பெருத்து வெடித்து பேராபத்தை உண்டுபண்ணக்கூடியது. ஆனபடியால் இரண்டுபகுதித் தலைவர்களும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வருவதன் மூலம் இதை விஸ்பரூபம் எடுக்காமல் தடுக்கமுடியும் என்று சொல்லியிருக்கிறார். இது எஸ்.டிபிள்யூ.ஆர்.டி. பண்டபரநாயக்காவின் மனதில் எழுந்த எண்ணம். இது எங்கள் தமிழ்த் தலைவர்களது மனதில் தோன்றியதல்ல. பின்னர் பண்டாரநாயக்காவும் தந்தை செல்வநாயகமும் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றை எழுதினார்கள். இது பூரணமானதாக இல்லாவிடினும் பின்னர் எழுந்த மிகப்பெரிய பிரச்சனைகளை தவிர்க்க அது காத்திரமான பங்களிப்பைச் செய்தது.

ஜே.ஆர். ஜெயவர்த்தனா என்ன செய்தார் என்று உங்களுக்குத் தெரியும். ஜே.ஆர். ஜெயவர்த்தனா அவர்கள் பண்டாரநாயக்காவும் செல்வநாயகமும் செய்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்து கண்டி யாத்திரை செய்தார். கண்டி யாத்திரை செய்ததன் மூலம் சிங்கள இனவாதத்தை தூண்டினார். நான் சிங்களப் பேரினவாதம் என்று சொல்ல மாட்டேன். நண்பர்களே நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. இனவாதம் என்பது தமிழர்களிடமும் இருந்தது. அது தமிழ் இனவாதம். சிங்களவர்களிடமும் இருந்தது சிங்கள இனவாதம். இந்த இனவாதத்தை மக்களுடைய தொகையைக் கொண்டு நாங்கள் தீர்மானிக்க இயலாது. தமிழ் இனவாதம் என்பது இந்த வெறி என்பது, இந்த மிலேச்சத்தனமென்பது சிங்கள இனவாத்தை விட எந்தளவிலும் குறைந்ததல்ல. ஜே.ஆர்.அவர்களது கண்டியாத்திரையின் பிற்பாடு யூ. என்.பி கட்சி சிங்கள மக்களிடத்தில் கணிசமான ஆதரவைப் பெற்று வளருகிறது. அதற்கான ஆதாரம், மூலதனம் இனவாதமே. இன்றுவரை அனைத்துப்பிரச்சனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மூலகாரணம் பொருளாதாரம் தான் அந்த ஏற்றத்தாழ்வுதான் என்று சொன்னவர்கள் இடதுசாரிகள்தான். இடதுசாரிகள் ஒன்றையே நினைத்து நேரான பாதையில் சென்றதனால்தான் ஒருபோதும் இடறவில்லை. ரஸ்சியா என்றும் மொஸ்கோ என்றும் ரொஸ்கியம் என்றும் பிளவுபட்டு நின்றதும் இவர்கள் ஒற்றுமைப்படாததும் தவறுதான். இந்த மூவரும் ஒற்றுமைப்பட்டு நின்றிருந்தால் இலங்கையில் நடைபெற்ற அரசியல் அனர்த்தங்கள் நிட்சயம் தவிர்க்கப்பட்டிருக்கும். தவிர்க்கப்படுவது மாத்திரமல்ல ஒரு பெரிய ஐக்கியம் இந்த மக்களிடையே வந்திருக்கும்.

நான் 1956ம் ஆண்டு கல்லோயா அபிவிருத்தி சபையிலே பணிபுரிந்தேன். இலங்கை வரலாற்றிலே முதலாவது இனக்கலவரம் அங்கேதான் வெடித்தது. இனக்கலவரம் அம்பாறையில் வெடித்தபொழுது எனக்கு அப்போது 23 வயது. அந்தநேரம் எங்களை ஒரு துன்பமும் இல்லாது பாதுகாத்தவர்கள் எங்களது சிங்கள நண்பர்கள். நான் ஒரு உதாரணத்திற்குச் சொல்லுகிறேன். பிரேமரட்ணா என்று அம்பாந்தோட்டையில் இருக்கின்ற எனது நண்பன் என்னையும் இன்னும் மூன்று தமிழ் இளைஞர்களையும் ஒரு பேக்கரியிலேயே கொண்டு போய் பத்திரமாக இருக்கச் சொல்லி விட்டார். அது முதலாவது அனுபவம். அங்கே பார்த்தால் ஒவ்வொருவரும் வெவ்வேறு கோலங்களில் இருக்கின்ற தொழிலாளிகள். பார்க்க எங்களுக்கு மிகவும் அச்சமாக இருந்தது. தமிழன்ர குணம் என்ன பார்த்தவுடன் எல்லோரையும் சந்தேகிப்பது. அங்கிருந்த கத்திகள் கோடாலிகளைப் பார்க்க எனது நண்பர்களுக்குப் பயம் வந்துவிட்டது. ஆனால் தனது தம்பியினது பேக்கரிதான் இது. நீங்கள் இங்கிருந்து வெளியில் போக யோசிக்க வேண்டாம். வெளியில் நிலைமை படுமோசமாகவுள்ளது. என்பதை பிரேமரட்ண விளக்கினார். தனது தம்பியும் என்னைப் போல்தான் ஆதலினால் பயப்படவேண்டாம் என்றார்.

நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால், அடிமட்டத்து மனிதர்கள் தொழிலாளிகள் உறவு கொள்வது என்பது திடீரென ஏற்படும் சிக்கல்களிலும் அல்லது அளவு கடந்த அன்பிலும்தான். 1987களில் பலாலி இராணுவமுகாமைச் சுற்றியுள்ள கிராமத்து குடும்பங்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயரவேண்டிவந்தது. அனைவரும் ஒட்டுமொத்தமாக இடம்பெயர்ந்தார்கள். அந்தநேரம் இரண்டுநாள் தங்குவதற்கு அரசாங்க அதிபரும் பொலிசும் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட பொழுது, சாதியிலே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருபகுதியிலேயே விடப்பட்டு சாதிமான்கள் வேறுபகுதியிலே போய்ச் சேர்ந்தார்கள். பின்பு நடந்த உள்நாட்டு யுத்தத்திலே எங்களுடைய மக்கள் உயிருக்குப் பயந்து அநாதைகளாக ஓடி ஒழிந்து கொண்ட இடங்களிலே தாழ்த்தப்பட்ட மக்கள் தண்ணியள்ளிக்குடிக்க முடியாமல் தடைசெய்யப்பட்டார்கள்.

நண்பர்களே அன்பர்களே நான் உங்களுக்குச் சொல்லுவது, இந்த அடிப்படை இன்றுவரை இருக்கிறது. அது செத்து விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்தவர்களைப் பார்க்கிறேன். இங்கே மிகக் கவனமாக அது பாதுகாக்கப்படுகிறது. குடியிருக்க வீடு வாங்கப் போகும் போது அயலிலே யார் இருக்கிறார்கள் என்தான் பார்க்கிறார்கள். என்ன சாதிக்காரர் இருக்கிறார் என்றுதான் பார்க்கிறார்கள். இதுதான் தமிழர்களது மனோபாவமாக இருக்கிறது. இனி, தமிழீழ விடுதலைப் போரை நடாத்திய புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்டார்கள். தோற்கடிக்கப்பட்டது என்று சொல்லுவதற்கும் எதிர்ப்பானவர்கள் இருப்பார்கள். புலிகள் பொரில் தோற்கடிக்கப்ட்ட பின் அங்குள்ள அரசும் அரசுக்கு சார்பானவர்களும் தூண்டிவிட்டதின் பேரில் சிங்கள மக்கள் பெரிய கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள். புத்தர் அதையா சொன்னார்? பஞ்ச சீலம் என்கின்ற அன்பைப் போதித்த புத்த சமயத்தைத் தழுவுகிற மக்கள் பல்லாயிரம் மக்கள் சாகடிக்கப்பட்டதை கொண்டாட்டமாகக் கொண்டாடினார்கள்.

இது அந்த மக்களுடைய குற்றமல்ல. அந்த மாதிரி அவர்களுடைய மூளைகள் சலவை செய்யப்பட்டுள்ளன. நான் இப்படிச் சொல்கிற பொழுது இன்னொரு விடையத்தையும் சொல்ல வேண்டும். 1999,2000ம் ஆண்டுகளில் ஓயாத அலைகள் என்ற புலிகளுடைய இராணுவ நடவடிக்கையின் பொது நடந்த சம்பவங்கள் பூண்டோடு அழிக்கப்பட்ட இராணுவ முகாம்கள், சிங்களக் கிராமங்கள், முஸ்லீம் மக்கள் அழிக்கப்பட்டு இரசு தடுத்து நிறுத்த முடியாது பின்வாங்கியபோது நாங்கள் எல்லாம் கொண்டாடினோம். எமது வீடுகளில் விழாவாகக் கொண்டாடினோம். நமது நாட்டிலல்ல. இங்கே புலம் பெயர்ந்து வந்து சர்வ பாக்கியங்களையும், வாழ்க்கைக்குத் தேவையான சகலவசதிகளையும் அதற்கும் மேலால் மனித உரிமைகளைப் பாதுகாக்கின்ற, மதிக்கின்ற நாட்டில் வந்திருக்கின்ற நாங்கள் கொண்டாடினோம். அது தவறு எனில் இது எவ்வகையில் சரியானதாக இருக்கமுடியும்? ஆகவே இனவாதம் என்பது தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான விடையம். இடதுசாரி என்று சொல்கிற நாங்கள். இனவாதம் என்ற உணர்வுக்கோ அந்த மனநிலைக்கோ எங்களை உள்ளாக்காமல் இருந்தபடியால்தான் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களது சம உரிமைக்கான போராட்டத்தில் எதிர்பார்க்காதளவு வெற்றியை அடைந்துள்ளோம்.

காரணம் எங்களது போராட்டத்திலே நம்மிடம் இனவாதம் இருக்கவில்லை. சிங்களமக்கள் நிறையளவு உதவி செய்தார்கள். முஸ்லீம் மக்கள் உதவி செய்தார்கள். அதேபோல் நல்லெண்ணம் படைத்த, தெளிந்த சிந்தனையுள்ள, இடதுசாரி மனப்பாங்குள்ள உயர்சாதித் தமிழர்களும் தங்களுடைய உயிரைக் கொடுக்கிற அளவுக்கு முன்வந்தார்கள். இவற்றையெல்லாம் நாம் பெருமையாகப் பேசவேண்டும். முடிவாக புலம்பெயர்ந்து வந்திருக்கிற தமிழர்கள் பற்றிப் பேசவேண்டும். இங்கு சகலவிதமான வசதிகளுடன் வாழ்ந்து கொண்டு அழிவையே நோக்காக்கொண்ட அழிந்துபோகின்ற இயக்கங்களுக்கு தாராளமாக அள்ளிக் கொடுத்து அங்கே நடக்கின்ற போருக்கு வித்திட்டவர்கள், அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம் என்று நம்பியவர்கள் இந்தப் புலம் பெயர்ந்தவர்கள்.

எங்காவது யாராவது நூறுபேர் சென்று உண்மையான சமாதானம் வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உண்மையாக அமைதி வேண்டும். தமிழர்களுக்கு மாத்திரமல்ல ஏழைச் சிங்களவர்களுக்கு, மலையக மக்களுக்கு உண்மையான அமைதி வேண்டும் என்று சொன்ன ஏதாவது ஒரு இயக்கம் இங்கிருந்திருக்கிறதா? இல்லை. தற்போது இங்கிருந்து அரசு அமைப்பது பறிறியும் தேசியக்கொடி எது என்றும் விவாதித்துக் கொண்டிருப்பதை விட்டு புலம்பெயர் சமூகம் இனிச் செய்யவேண்டியது இலங்கையில் இருக்கின்ற அனைத்து சமூகங்களும் இன ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு ஒரு புரிந்துணர்வுடன் வாழ வழிசெய்கின்ற ஒரு அரசை அங்கு ஏற்படுத்துவதுதான் சரியாக இருக்கமுடியும் என்று சொல்லி எனது பேச்சை முடித்துக் கொள்கின்றேன்.

நன்றி: வைகறை

இலங்கைப் பயணம்: தேவதாசன் நேர்காணல்

பிரான்சிலுள்ள இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னனியின் தலைவர் தேவதாசன் அவர்கள் அண்மையில் இலங்கை சென்று வந்தார். அச்செய்தியறிந்து ‘மற்றது’ சஞ்சிகையின் ஆசிரியர் கற்சுறா அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டவை.
கற்சுறா:- தங்களது இலங்கைப் பயணத்திற்கான அடிப்படை நோக்கம் என்னவாக இருந்தது? எவ்வளவு காலம் அங்கிருந்ததீதீர்கள்?
தேவதாசன்: மே பதினெட்டு 2009க்கு பின்பான இலங்கை அரசியல் சூழல் எவ்வாறு உள்ளது என்பதை அவதானிக்கவும். முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் முடிவிற்குப்பின்னாலான தமிழ் மக்களின் மனோ நிலையை தெரிந்து கொள்ளவும், குறிப்பாக தலித் சமூக மக்களின் வாழ்வியல் சூழல், அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சமூக அழுத்தங்களை அறிவதே எனது பிரயாணத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. ஒரு மாத கால குறுகிய அவகாசமாகவே எனது பிரயாணம் அமைந்தது. மேலும் கணிசமான பணிகளை மேற்கொள்வதற்கு குறைந்தது மூன்று மாதங்களாவது தங்கியிருக்க வேண்டும்.

கற்சுறா: வன்னி மக்களை இலங்கை அரசு அகதி முகாம்களில் தடுத்து வைத்திருப்பது குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் ஊடகங்களாலும், ஜனநாயக முற்போக்கு சக்திகள் என தங்களை அடையாளப் படுத்துபவர்களாலும் முன்வைக்கப்படும் அரச எதிர்ப்பு பிரச்சாரம் குறித்து என்ன கூறுகிறீர்கள்? உங்கள் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி அந்த அகதி மக்களுக்கு உதவும் திட்டம் ஏதும் கொண்டிருந்ததா?
தேவதாசன்: நீங்கள் குறிப்பிடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் பற்றியோ, அரச எதிர்ப்பு பிரச்சார ஊடகங்கள் பற்றியோ அபிப்பிராயம் கூறுவது எனக்கு அவசியமாகப் படவில்லை. முப்பது வருட காலமாக யுத்தம், கொலை, மிரட்டல், அச்சம் போன்ற சூழலில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் என்பது இவாகளுக்கு மே 18 2009 இற்கு பிறகு மறந்துபோன நிகழ்வாகத்தான் இருக்கிறது. அந்த மக்களின் இன்றைய அவசியமான தேவைகளின் கருணையில் இருந்து பிறக்க வேண்டும் கேள்விகள் என்று நான் நினைக்கின்றேன். நான் அங்குபோன பிற்பாடும், அங்குள்ள மக்களுடன் உரையாடியதன் பிற்பாடும் தான் புரிகிறது. எம்மத்தியில் அதிகமாக நடைபெறுவது ‘திண்ணைப் பேச்சு’ என்பதாக.

அகதி முகாம்களில் உள்ளவர்கள் பற்றி கூறுவதானால் நான் இலங்கை சென்ற காலத்திலேயே இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்கள். யாழ்ப்பாணத்துக் குடாநாட்டை நோக்கி அனுப்பப்பட்டவர்களில் பலருக்கு யாழ்ப்பாணம் புதியதொரு பிரதேசமாகவே இருக்கிறது. தமது தலைமுறையினர் அப்பகுதியில் பிறந்தவர்கள் என்ற காரணம் அறியப்பட்டதாலேயே யாழ்ப்பாணம் நோக்கி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். மீதி இருக்கக் கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் மலையக மக்களாகும். அவர்களால் மலையகத்துக்கு திரும்பமுடியால் உள்ளது. அவர்கள் வாழ்ந்த வன்னிப்பிராந்தியத்தில் கண்ணி வெடிகள் அகற்ற தாமதிப்பதால் அம்மக்கள் முகாம்களில் முடங்கிப் போயுள்ளனர்.

வன்னியில் இருந்து யாழ்ப்பாணம் வந்த பலரிடம் என்னால் உரையாடக்கூடியதாக இருந்தது. அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்களை விபரிப்பதானால் ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். ஆனாலும் அவர்களிடம் மறுவாழ்விற்கான அத்தியாவசியமான பணம், பொருட்கள் என்பன கணிசமாக கிடைத்து வருகின்றதையும் காணக்கூடியதாக இருந்தது. சர்வதேச நிறுவனங்களும், அரசும், மற்றும் சமூக அக்கறையாளர்களாலும் மேற்படி உதவிகள் கிடைத்து வருகிறது. வன்னி தவிர வடபகுதியில் சொந்தமான வாழ்விடங்கள் இல்லாததன் காரணத்தால் பலர் தமது உறவனர்களுடனும். அரசினால் உருவாக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களிலும் வாழ்கின்றனர். அரச நிறுவனங்களின் பணியாளர்கள் வன்னிக்கு விரைவாக சென்று தமது பணிகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொளள்ப்பட்டுள்ளனர். ஆனால் சாதாரண மக்களோ மீண்டும் வன்னியில் யுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்னும் அச்சம் காரணமாக அங்கு செல்வதற்கு அவர்கள் தயங்குவதையும் என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

வன்னி அகதி மக்களுக்காக எமது தலித் சமூக மேம்பாட்டு முண்ணனியின் ஆதரவாளர்களிடமிருந்து பெறப்பட்ட சிறதொகையை நான் கொண்டு சென்றேன். அவ்வுதவியை வன்னி அகதி மக்களுக்கு என்னால் பயன்படுத்த முடியவில்லை. யாழ்நகரிலுள்ள ‘திருநகர்’ எனும் ஊரிலுள்ள சென் சாள்ஸ் எனும் பாடசாலையில் உள்ள மாணவர்களுக்கான சில அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக அத்தொகையை நான் பயன் படுத்தவேண்டி ஏற்பட்டது. காரணம் அப்பாடசாலையில் மிக வறுமைப்பட்ட தலித் மாணவர்கள் கல்வி கற்பதோடு, அக்கல்லூரியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதையும் என்னால் நேரில் காணக்கூடியதாகவும் இருந்தது. அங்கு மதிய உணவு வழங்கப்படும்போது ஒரு சிறுமி தனக்கு கிடைத்த இரண்டு கவள உணவையும் தான் சாப்பிடாது பத்திரப்படுத்தி தனது பையுக்குள் வைப்பதைப்பார்த்து நான் கேட்டேன் ஏன் நீங்கள் சாப்பிடவில்லையா என்று. அதற்கு அந்தச் சிறுமி அம்மா வேலையால் வந்து சமைக்க நேரம் செல்லும் அது தான் நான் தங்கச்சிக்கு கொஞ்சம் கொண்டு போறேன் எனக் கூறியது. அப்படி மிக வறுமையிலுள்ளவர்களே அப்பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்கள்.

கற்சுறா: நீங்கள் முன்நாள் தலித்போராளிகள் யாரையாவது சந்தித்தீர்களா? அவர்கள் யார்? இருப்பின் அவர்களது யுத்தகால அனுபவங்களும், சமூகம் சார்ந்த மனநிலையும் எவ்வாறுள்ளது?

தேவதாசன்: ஆம் தலித் போராளிகள் பலரை சந்தித்தேன். அவர்களில் படைப்பாளி தெணியான், மற்றும் இராஜேந்திரன், அன்ரனி மாஸ்டர் போன்ற முன்னோடிகளையும் சந்தித்தேன். அவர்களை சந்திப்பதும், அவர்களுடன் உரையாடுவதும் எனது பயணத்தின் முக்கிய நோக்கமாகவும் இருந்தது. சாதிய விடுதலைப் போராட்டத்தில் எதிர்கொண்ட பல அனுபவங்களை அவர்களுடனான உரையாடல் மூலமாக அறிந்துகொண்டேன்.

தமிழீழ விடுதலைப் போராட்டமானது ஆயுதப்போராட்டமாக மாறிய பின் போராளிக்குழுக்களின், குறிப்பாக விடுதலைப் புலிகள் சாதிய விடுதலை இயக்கங்களை தடை செய்த பின்னர் பல சாதிய விடுதலைப் போராளிகள் வாய் மூடி மௌனமாக்கப்பட்டதாகவும், அவர்களில் பலர் கிழக்கு மாகாணம், கொழும்பு போன்ற பகுதிகளில் மறைந்திருந்ததாகவும் தெரிவித்தனர். தமக்கான தலைமை ஒன்று இல்லையே என்பதும், தாம் தொடர்ந்தும் அனாதைகளாக ஆக்கப்பட்டிருக்கின்றோம் என்ற ஆதங்கமும் அவர்களிடத்தில் மேலோங்கியிருப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேலும் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை வெகுஜன இயக்கம் போன்ற அமைப்புகளின் அவசியம் இன்றும் உணரப்படுகின்றது.

கற்சுறா: யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் ஊடகங்களை நீங்கள் அணுகும் வாய்ப்பிருந்ததா? யுத்தத்திற்கும் புலிகள் அழிவிற்கும் பிற்பாடு அங்குள்ள பத்திரிகைகளின் அடிப்படை சார்பு நிலை எவ்வாறு பிரதிபலிக்கிறது?

தேவதாசன்: யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகங்கள் என்பது உயர் சாதியினரின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் நிறுவனமாகவே இயங்கி வருகிறது. அதற்கு பல உதாரணங்களைக் கூறலாம். கடந்த 13-12-2009 இல் இருந்து சிறுபான்மைத் தமிழர் மகாசபை தனது சமூகப் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பதான அறிக்கை ஒன்றை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் சகல பத்திரிகைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தும் அது பற்றிய செய்தியை அவர்கள் இதுவரை வெளியிடவில்லை. தெங்குப் பனம்பொருள் உற்பத்தி விற்பனைக் கூட்டுறவுச் சங்கம் கடந்த 12-12-2009 இல் மாபெரும் எழுச்சி மாநாடொன்றை நடாத்தியது. அம்மாநாட்டில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தமது தேவைகளையும், உணர்வுகளையும் வெளிப்படுத்தினர். இம்மாநாட்டிற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர், பல்கலைக்கழக துணைவேந்தர் என பல ஆய்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விடயத்திற்கு எந்தப்பத்திரிகைகளும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

அன்று புலிகளின் தேசியத்திற்கு புகழ் பாடியவர்கள் இன்று சேர்.பொன். இராமநாதனதும், ஆறுமுநாவலரதும் சைவத்தையும், தமிழையும் போற்றிப் புகழ்பாடி தமது பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பி வருகின்றார்கள். சார்பு நிலை என்பது பற்றி கேட்டீர்கள் நான் முன்னர் குறிப்பிட்டது போல் யாழ் மேலாதிக்கத்தின் மன நிலையிலிருந்துதான் பத்திரிகைகள் செயல்படுகின்றது. வெளிப்படையாகவே சொல்வதென்றால் அனைத்துப் பத்திரிகைகளும் சாதி காப்பாற்றும் பத்திரிகைகளாகவே உள்ளது.

கற்சுறா: « இத்தனை ஆண்டுகால போராட்டத்தின் விளைவாக தமிழர்களை அவர்களுடைய எதிரிகளிடம் கையளிப்பதில்தான் முடிந்திருக்கிறது. கோட்டையிலும், பலாலியிலும், ஆனையிறவிலும் நின்ற இராணுவத்தை எங்கள் வீட்டு முற்றத்திலும் கோடியிலும் கொண்டு வந்து நிறுத்திவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்…கடிநாயாக இருந்தாலும் அவர்கள் (புலிகள்) காவல் நாயாக இருந்தவர்கள் » என்பதாக தொடர்ச்சியான தமிழ்-சிங்கள இனவாதத்தை வலுப்படுத்திப் பேணும் வகையிலும், தமிழ்த் தேசிய மனநிலை கொண்டதுமான கட்டுரை ஒன்றை (நிலாந்தன் என்பவர் எழுதியது) பல புகலிடப் புலி எதிர்ப்பாளர்கள் தமது தோள்களில் காவித்திரிகின்றனர் (இணையங்களில் மீழ் பிரசுரிப்பு) உங்கள் யாழ் பயண அனுபவத்தில் அங்குள்ள மக்கள் தாங்கள் தோற்று விட்டதாகவும். தமிழ்த் தேசிய விடுதலையின் அவசியம் கருதுபவர்களாகவும்; இருக்கிறார்களா?

தேவதாசன்: சிரிக்கிறதா…அழுகிறதா…தெரியவில்லை. புலிகள் கடி நாயாகவும், காவல் நாயகவும் இருந்ததென்பதென்னவோ உண்மைதான். அது எந்தவகையிலென்றால் வடக்கு கிழக்குக்கு வெளியில் இருந்த தமிழர்களுக்குத்தான் புலிகள் கடி நாயாகவும், காவல் நாயாகவும் இருந்துள்ளார்கள். கொழும்பில் இருக்கக்கூடிய சிலர் கருதினார்கள் புலிகள் இருப்பதினால் தான் கொழும்பில் தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் நடத்தவில்லை என்றும். புலிகள் இல்லை என்றால் தாங்கள் சிங்கள அரசாலும் சிங்கள காடையர்களாலம் அழிக்கப்பட்டிருப்போம் என்றும்.
அத்தோடு புகலிடப் பெரும்பான்மை தமிழ்த் தேசிய பற்றாளர்களின் வளமான-பாதுகாப்பான இருப்புக்கும் வசதிகளுக்கும் புலிகள் கடி நாயகவும், காவல் நாயாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் வடக்குக்-கிழக்கு வாழ் மக்களைப் பொறுத்தவரை அரசபடைகளையும் , புலிகளையும் ‘கடி நாயாக’ மட்டுமே பார்த்தார்கள். அங்கு வாழ் மக்களிடம் தாம் தோற்று விட்டதாகவோ, தமிழ் தேசிய விடுதலை என்பது அவசியம் என்ற கருத்தோ நிலவுவதைக் காணமுடியாதுள்ளது. மாறாக தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற கருத்தே அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது.

கற்சுறா: மகிந்த அரசு மீதான விமர்சனங்களையும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுயநிர்ணயம் என்றெல்லாம் பேசப்படுவதையும் நீங்கள் எப்படி எதிர்கொள்கின்றீர்கள்?

தேவதாசன்: முதலில் ஒருவிடயத்தில் நாம் கவனமாக செயல்படவேண்டும். அதாவது எதிர்காலத்தில் எந்தவகையிலும் இனவாத உணர்வுகள் பரவாத வகையில் எமது செயல்பாடுகள் அமையவேண்டும். எந்தத் தலைவர்களையும, எந்தக் கருத்தியலையும் நாம் தொடர்ச்சியாக கொண்டாடிக் கொண்டிருக்கமுடியாது. எமது சமூகம் பல்வேறு குறைபாடுகளைக் கொண்ட சமூகமாக இருக்கிறது. குறிப்பாக எம்மத்தியில் நிலவும் சாதிய ஒடுக்கு முறைகளின் அடிப்படைக்காரணிகளை கண்டறிவதில் எமது கல்விமான்களில் கூட பல குறைபாடுகள் நிலவுகின்றது. அதையெல்லாம் நாம் தொடர்ச்சியாக பேசி உரையாடவேண்டியிருக்கிறது. பல வருடகாலத்தையும், பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், உடைமைகளையும் இழந்து புலிகள் எமது சமூகத்தை என்ன நிலையில் விட்டுச் சென்றுள்ளார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். பல்வேறு சமூக-சிந்தனை வளர்ச்சிக்கு தடையாக இருந்தது புலிகள். அந்த நிலை இன்று மாறியுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் மகிந்த ராஜபக்ச என்பதுதானே உண்மை.

இலங்கையில் வாழும் மற்ற இனங்கள் சிங்கள மக்கள் உட்பட, எல்லாவித நிறைவுடனும் வாழ்கின்றார்கள் என்று கூறிவிட முடியாது. கடந்த காலங்களில் தமிழ் அரசியல் தலைமைகளானது தமிழ் பேசும் மக்களின் அனைத்துப்பிரிவினரின் நலன்களின் அடிப்படையில் தமது அரசியலை முன்னெடுத்தவர்களல்ல. தமது மேட்டுக்குடி நலன்கள் சார்ந்த அரசியலையே அவர்கள் முன்னெடுத்தவர்கள். அவர்களின் அதே அரசியல் நிலைப்பாட்டில் தீவிரம் போதாது என்ற குறைபாட்டின் அடிப்படையில்தான் பிற்பாடு இளைஞர்கள் அவர்களது அரசியலை ஆயுங்களுடன் இணைத்து மேற்கொண்டார்கள். முன்னைய தலைமைகள் மேற்கொண்ட அரசியல் சிந்தனைப் போக்கை இளைஞர்கள் கண்டறிய முற்படவில்லை.

இருப்பினும் இடையில் பல்வேறு இயக்கங்கள் சர்வதேச முற்போக்கு இடதுசாரி கருத்தியலைப் பயின்று இலங்கையிலுள்ள அனைத்து ஒடுக்கப்படும் இனங்களின் விடுதலையைக் கருத்தில் கொண்டும் தமது செயல்பாடுகளை மேற்கொண்டார்கள். ஆனால் துரதிஸ்டவசமாக புலிகளின் அராஜக நடவடிக்கைகளால் அவர்கள் அப்பணிகளை தொடர்ந்து பேணமுடியாத சூழல் நிலவியது.
இறுதியில் புலிகள் அழியும் வரை குறந்தபட்சம் பல்வேறு கருத்துக்களையும் பேசுவதற்கான ஒரு ஜனநாயகச் சூழல் எமது பிரதேசங்களில் ஏற்படவேண்டும் என்பதே அடிப்படைத் தேவையாக இருந்தது. இந்த இடைப்பட்ட காலங்களில்தான் நாம் எமது அரசியல் சமூக வராலுறுகளை சீர்தூக்கிப் பார்க்க முற்பட்டோம். எமது இதுவரை கால அரசில் வரலாற்றுச்சாதனை என்ன என்பதை நாம் நிதானத்துடன் சிந்தித்துப் பார்க்கவேண்டும். எமது இதுவரை கால அரசியல் சாதனை என்பது தமிழ் மக்களை இனவாதக் கருத்தியலுக்குள் பேணிப் பாதுகாத்துக் கொண்டதேயாகும்.

இவ்வாறான போக்கு வருங்காலங்களில் தவிர்க்கப்படவேண்டும். எனவே மகிந்த அரசு, தமிழ் மக்கள் பிரச்சனை என்கின்றபோது தமிழ் என்கின்ற அடையாளத்தை நாம் முற்றாக தவிர்க்க எண்ணுகின்றோம். கிழக்கைப்போல் வடக்கிலும் மாகாண அதிகாரங்கள் பெறப்படவேண்டும். கிழக்கில் மாகாண அரசு நிறுவப்பட்டபோதும் அதிகாரங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படாமல் மகிந்த அரசு தட்டிக்கழித்து வருவதையும் நாம் காண்கின்றோம். எனவே மாகாணங்களுக்கான நிறைவான அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ள போராடுவதும். அதேபோல் இலங்கையில் வாழும் அனைத்துச் சிறுபான்மை இனங்களும் கௌரவமாக நடத்தப்பட வேண்டும். குறிப்பாக மலையக மக்களுக்கு நாம் இளைத்த கொடுமைகளுக்கு பிராயச்சித்தம் தேடியாகவேண்டும். இவ்வாறாகத்தான் எமது அரசிற்கு எதிரான போராட்டங்கள் அமையும். இதனூடாக தழ்பேசும் மக்களின் பிரச்சனைகளுக்கும் தீர்வுகளைக் கண்டடையமுடியும் என நம்புகின்றோம்.

கற்சுறா: இலங்கையில் புலிகள் அழிக்கப்பட்ட பிற்பாடு பல்வேறு புலி எதிர்ப்பாளர்கள் இலங்கை சென்று வரும் வாய்ப்புகள் நிலவுகிறது. அந்த வகையில் இந்தியாவிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிடமிருந்தும் பல புலி எதிர்ப்பாளர்கள், ஜனநாயகத்தை வலியுறுத்திப் பேசி வருபவர்கள் இலங்கை சென்று வந்துள்ளனர். இருப்பினும் அவர்கள் மிகவும் ஆவேசம் கொள்கின்றனர். புலிகள் எவ்வாறான ஜனநாயக மறுப்பைக் கடைப்பிடித்து வந்தார்களோ அதற்கு நிகரான ஒடுக்குமுறைகளை இலங்கை அரசு தனது இராணுவத்தின் மூலமாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் ஒரு புகலிட ஜனநாயகப் பற்றாளர் பி.பி.சி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார் இவ்வாறு. « .”You need to wait at least three hours to board the plane. And all the buses only leave once a day, so that security officials could check the buses at once and relax for the rest of the day,” Mr Kumar says.”The biggest mistake of the Tamil Tigers was not to allow any other Tamil voice to operate in their territory.”But the irony is that the government is now behaving in the same way as the Tamil Tigers, and I could not see any attempt at reconciliation or to create a vibrant democratic society in Jaffna,” he said ».‘’தம்மை இரணுவம் விமானம் ஏற மூன்று மணிநேரம் காக்கவைத்துவிட்டது. புலிகளின் மிகப்பெரிய தவறு மாற்றுக்குரல்களுக்கு அவர்கள் விதித்த தடை உத்தரவாகும். ராஜபக்ச அரசாங்கமும் அதே பாணியில் தான் நடந்து கொள்கிறது. யாழ்ப்பாணத்தில் ஒரு ஜனநாயக சமூகம் தோன்ற முடியாதவாறு அரசாங்கம் நடந்து கொள்கின்றது.’’ இவ்வாறு மேற்படி பேட்டிகளும் கொடுத்துவருகிறார்கள். அதுபற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

தேவதாசன்: இலங்கையில் என்ன உலகத்தில் எங்கையுமே நாம் எதிர் பார்க்கும், உண்மை சொல்லப் போனால் நாம் கனவு காணும் நிறைவான, திருப்திகரமான ‘ஜனநாயகம்’ ஒன்று கிடைக்கப் போறதில்லை. ஆனால் இலங்கையில் இன்று பேசுவதற்கும், எழுதுவதற்கும் பயம் இன்றி நடமாடுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இந்த சூழலை நாம் பயன்படுத்தி வளர்த்தெடுக்கவேண்டும்.

விமான நிலையத்தில் மூன்று மணித்தியாலம் தாமதிப்பதென்பது ஜனநாயக மறுப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. அது இன்று ஒரு நிர்வாகப் பிரச்சனையாக உள்ளது. அது இலங்கைக்கானது மட்டுமல்ல. விமான நிலையத்தில் தாமதிப்பதென்பது இன்று உலகப் பிரச்சனையாக உள்ளது. அதற்கு நான் பெரிதாக விளக்கம் தரத்தேவையில்லை. ஐரோப்பாவில் உள்ள ஜனநாயகத்தையும், முப்பது வருடங்களாக யுத்தம் நடந்த இலங்கையில் இருக்கும் ஜனநாயகத்தையும் பிரித்தறிதலில் தான் சிக்கல் வருகிறது. ஆனாலும் சகலரும் தாம் தாம் விரும்பிய அரசியலை மேற்கொள்வதற்கான கதவு திறக்கப்பட்டுள்ளது. புலிகளின் யுத்தத்தையும், கொலைகளையும் அரசியலையம் நியாயப்படுத்தி வாக்காளத்து வாங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று யாழ்ப்பாணத்தில் கூட்டங்கள் நடத்துகின்றது. தமது வழமையான அரசியலைச் செய்கின்றது. இது வந்து ஒரு ஆரோக்கியமான சூழலாகத்தான் நான் பார்க்கின்றேன். எமக்கு தமிழ்த் தேசிக் கூட்டணியோடு கோபமும், வெறுப்பும், அவர்களது அரசியலோட உடன்பாடும் இல்லாது போனாலும் கூட அவர்கள் இன்று சுதந்திரமாக அரசியல் செய்வதென்பது ஒரு ஜனநாயக அம்சமாகத் தான் நான் கருதுகின்றேன்.

கற்சுறா: ஈழத்துத் தமிழ் சமூகம் கடந்த 30 வருடமாக கொடிய யுத்தத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்ட்டது. 60களில் எழுந்த சமூகவிடுதலை சாதிய விடுதலை போராட்டங்களெல்லாம் 80களில் எழுந்த தேசியவிடுதலை போராட்டத்திற்குள் முடங்கியது வரலாறு. இன்று இத்தனை அழிவுகளுக்குப்பின்னால் ஈழத்தில் சாதிய சிந்தனை எப்படியிருக்கிறது. ஆரம்பகாலங்களில் இருந்ததுபோல் இருக்கிறதா? அல்லது வீரியம் குன்றியிருக்கிறதா?

தேவதாசன்: முதலில் நாம் எமது சமூக விடுதலை குறித்துப் பேசுவதானால் அது அரசியல் பொருளாதார அடிப்படையில் இருந்து நோக்குவதற்கு முன்பாக எமது சமூகம் ஒரு சாதிய சமூகம் எனும் புரிதலில் இருந்து நோக்கவேண்டும். எமக்கிடையிலான பிளவுகளும், உறவுகளும் சாதிய உணர்வுகளால் பேணப்பட்டு வருகிறது. நாம் சிங்கள அரசுடன் போராடி எமக்கு அரசியல் விடுதலையையோ, பொருளாதார விடுதலையையோ நாம் பெற்றுவிடுது இலகுவாக இருக்கும். ஆனால் நாம் மேற்கொண்ட சமூக விடுதலைக்கான முயற்சிகள் 70 பிற்பகுதியுடன் தடுக்கப்பட்டுள்ளது. எமது சமூகமே சாதிய சமூகமாக இயங்கும் நிலையில் சாதிய சிந்தனையில் வீரியம் குன்றியிருக்கின்றதா? கூடியிருக்கின்றதா எனும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.

கற்சுறா: ஈழத்தில் வடக்குக் கிழக்கு பிரிந்தபின் கிழக்கு மாகாணம் தனித்த நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டுவருகிறது. வடக்கிலும் புதிய நிர்வாகம் செயற்படத்தொடங்கி அபிவிருத்திகள் பலதரப்பாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் கிளிநொச்சி முல்லை போன்ற வன்னி மாவட்டங்களது எதிர்காலம் யார் கையில்? கொடியயுத்தம் அழித்த தடையத்திலிருந்து அந்த மக்களை மீட்க யார் கைகொடுப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த மக்களை இன்னுமொருதரம் தமது அரசியலுக்காக யாரும் பயன்படுத்த முனைவார்களா? ஈழத்து தள நிலவரம் நீங்கள் பார்த்தளவில் எப்படியிருக்கிறது?

தேவதாசன்: யாழ் மேலாதிக்கத்தின் விளைவாகவும், புறக்கணிப்புகளாலுமே கிழக்கு மக்கள் தமக்கான அரசியலை தாமே நிர்வகிப்பதற்கு முன்வந்தார்கள். கிழக்கு நிர்வாகம் அவர்கள் கைக்கு போய்விட்டது. அதேபோல் வன்னி மாவட்டமும் பின்தள்ளப்பட்டு புறக்கணிக்கப்படுமானால் வன்னி மக்கள் எதிர்காலம் அவர்கள் கைக்குத் தான் போக வேண்டும்.அதற்கு பிரிந்து போவதென்பது அர்த்தமல்ல. அங்குள்ள மக்கள் தமது அரசியலை முன்னெடுக்க வேண்டும். வன்னி மக்கள் நந்திக் கடல் ஏரியில் தத்தளித்தபோது கைகொடுத்து மீட்டதும் அரசுதான். இன்றும் அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்து கைகொடுப்பதும் அரசுதான். யாருடைய அரசியலுக்கும் பயன்படாது இருக்க வன்னி மக்கள் தான் எதிர்காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும். ஈழத்து தள நிலவரம் என்பது தற்போது பல்வேறு தளங்களிலும் ஜனநாயகப் பணிகள் புரிவதற்கு சாதகமாகவே உள்ளது.

ஒடுக்கப்பட்டோர் விடுதலை… சாதி என்பது வர்க்கமே

இம்மானுவேல் சேகரன் என்கிற‌ பெயர் சாதிய சமூக‌ அமைப்பு நீடிக்கும் வரை ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக போராடிய அடையாளமாக நினைவுத்தூண் போன்று சாட்சியம் அளிக்கும்.

தியாகி இம்மானுவேல் சேகரன்
யாரைக் கடித்து குதறலாம் என்று நாக்கை தொங்கவிட்டுக்கொண்டு உலகை வலம் வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தியம் என்கிற‌ வெறி நாயின் நடு மண்டையில் விழுந்த கல்ல‌டியாய் குறிக்கப்படும் நாள் செப்டம்பர் 11 .

பார்ப்பனிய கட்டமைப்பில் உள்ள இந்தியாவில் பார்ப்பனியத்தை நடைமுறையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஆதிக்க சாதி இந்துக்களுக்கெதிராக போராடி தன் இன்னுயிரை நீத்த பார்ப்பனீய எதிர்ப்பு போராளி இம்மானுவேல் சேகரன் தன் குருதியை விதையாய் விதைத்த நாள் செப்டம்பர் 11 .

1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் நாள், தென்மாவட்டங்களில் அப்போது நடந்த தேர்தலுக்கு பின் நடந்த ஆதிக்க‌ சாதி ஒடுக்குமுறையின் மீது அமைதியை(!) நிலைநாட்ட இராமநாதபுரம் ஆட்சியரால் கூட்டப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டத்தில் வெவ்வேறு சமூகத்தை (சாதி) சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அக்கூட்டத்திற்கு ஒடுக்கபட்ட மக்களின் பிரதிநிதியாக,தலைவராக‌ இம்மானுவேல் சேகரனும் அழைக்கப்பட்டிருந்தார். இது பார்ப்பனியத்தின் அடியாளான முத்துராமலிங்கத்துக்கு பொறுக்குமா ? பொறுக்கவில்லை, இம்மானுவேலை எப்படி இந்த கூட்டத்திற்கு அழைக்கலாம், இம்மானுவேல் தனக்கு சமமான தலைவனா என்றெல்லாம் கொதித்து போய் கேள்வி எழுப்பினார். இதற்கு தியாகி இம்மானுவேல் சேகரன், தான் தேவருக்கு சமமான தலைவனா இல்லையா என்பதைப் பற்றி தன்னை தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெரியும் என்று பதிலளித்தார். கூட்டத்திலிருந்து கடுகடுவென்று வெளியே வந்த முத்துராமலிங்கம்,தாழ்த்தபட்ட சமூகத்திலிருந்து வந்த ஒருவன் தனக்கு சரிசமமாக காலுக்கு மேல் கால் போட்டு உட்கார்ந்து பேசுகிற அளவிற்கு வளரவிட்டு விட்டீர்களே என்கிற தனது சாதிவெறியை தொண்டர்களிடம் கொட்ட‌, அந்த கோபத்தை தணிக்கும் பொருட்டு அடுத்த நாளே (செப்டம்பர் 11ம் நாள்) தேவர் சாதிவெறியர்கள் இம்மானுவேல் சேகரனை கொடூரமாக வெட்டி சாய்த்தார்கள். தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 52ம் ஆண்டு நினைவு நாளையொட்டி பரமகுடியில் இவ்வருடமும் நினைவஞ்சலிக்காக ஆதிக்க சாதிக்கெதிரான தன் வலிமையை காட்டும் குருபூஜைவிழா 11-09-09 அன்று நடைபெற்றது.

மதுரையில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ள பரமகுடியில் இவ்விழா வருடந்தோரும் நடைபெறுகிறது. மதுரையிலிருந்து பரமகுடி நோக்கி போகும் வழி நெடுகிலும் மக்கள் கட்டியெழுப்பியுள்ள பிளெக்ஸ் பேனர்களில் தியாகி இம்மானுவேல் சேகரன் கம்பீரமாக வரவேற்கிறார். அம்மாவீரனின் கம்பீர தோற்றம் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருடைய உள்ளத்திலும் ஒன்று குவிந்துள்ள ஆதிக்க சாதிகெதிரான சினமாக‌ காட்சியளிக்கிறது.

நினைவஞ்சலி செலுத்த வரும் மக்கள் வண்டிகளில் வரும் போது சில அவசர காரியமாக‌ மரத்தின் ஓரமாக‌ வண்டியை நிறுத்தினாலும் காவல் துறையினர் கலகலத்து போய் விடுகிறார்கள். ஆளும் வர்க்கத்தின் ஏவல் ஆட்களான இந்த காவல்துறையினர் ஆதிக்க சாதி பெரும்பாண்மையினர்‌ வாழும் ஊர்களின் எல்லைகளிலும், முத்துராமலிங்கத்தின் சிலையை சுற்றிலும் கண் இமைக்காமல் காவல் காக்கின்றனர். தாழ்த்தபட்ட மக்கள் அவ்வூர்களில் எல்லாம் நுழைந்து கலகம் செய்வதற்காகவே வருவது போலவும் அதை தடுப்பதற்காகவே இவர்கள் இருப்பது போலவும் சிறப்பு அதிரடி படை, அந்த படை, இந்த படை என்று பரமகுடியை சுற்றி குவிந்து கிடக்கிறார்கள். இந்த‌ காவல்துறை அடிமைகள் முத்துராமலிங்கத்தின் குருபூஜை நடக்கும் போதும் பாதுகாப்புக்கு(!) வருவார்கள். ஒடுக்கபட்ட மக்கள் மீது வன்மத்தை செலுத்துவதில் வெறி கொள்ளும் ஆதிக்க சாதி வெறியர்கள் தாங்கள் செல்லும் வழிகளில் எல்லாம் ஓநாய்களைப் போல தமது இரத்தவெறிக்கு தாழ்த்தபட்ட மக்கள் வாழும் ஊர்களில் புகுந்து நாசம் செய்யும் போது மட்டும் காக்கிகள் கிராபிக்ஸ் காட்சி மாதிரி காணாமல் போய்விடுவார்கள்.


ஒடுக்க‌ப்பட்ட சிறுமி‌
தியாகி இம்மானுவேல் சேகரன், அண்ணல் அம்பேத்கரின் உருவம் பொறித்த நுழைவு வளையத்திலிருந்து பரமக்குடி துவங்குகிறது. அங்கிருந்து சுமார் 3கி.மீ தொலைவில் நினைவிடம் உள்ளது. ராணுவ உடையில் காட்சியளிக்கும் அம்மாவீரனின் அணியில் இளைஞர்கள் சேருவது போல் நினைவிடத்தை நோக்கி அணி வகுத்து செல்கின்றார்கள். பல கிராமங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆண்டாண்டு காலமாய் ஆதிக்க சாதி வெறியர்களால் ஒடுக்கபட்டும் நசுக்கப்பட்டும் வருகிறார்கள். சிதைக்கப்படும் தமது வாழ்க்கை பற்றி உள்ளத்தில் புகைந்திருக்கும் தன் உள்ளக் குமுறல்களை, உணர்ச்சியை சிலம்பாட்டம், தப்பாட்டத்துடன் கூடிய கிராமிய கலையில் வெளிப்படுத்துகிறார்கள். ஆதிக்கத்தை எதிர்த்து தன் இன்னுரை நீத்த ஈகைக்கு நன்றி செலுத்தும் நாளாக இவ்விழாவில் பால் குடம் ஏந்தி தன் குடும்பத்துடன் கலந்து கொள்கின்றனர்.

ஒடுக்கு முறைகளுக்குள்ளாகும் இம்மக்கள் தமது அவலங்களுக்கெல்லாம் தீர்வு என்ன என்று திக்குத்தெரியாமல் தவிப்பது அவர்களின் முகத்தில் தெரிகிறது. ஆனால் அவர்களின் அவலங்களை தன் கட்சியின் விளம்பரத்திற்காகவும், அவர்களின் ஓலங்களை தன் கட்சியின் ஒலிபெருக்கிக்காகவும் பயன்படுத்தி தேர்தலில் ஆளும் வர்க்கத்துடனும், ஆதிக்க சாதி வெறியர்களுடனும், ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சியினருடனும் தஞ்சம் அடைந்த தலைவர்களோ மக்கள் நடந்து செல்லும் வழி முழுதும் தியாகி இம்மானுவேல் சேகரன் பேனரில் பளிச்சென பல்லிளித்து போஸ் கொடுக்கிறார்கள். ம‌க்கள் அதையும் பார்த்து எந்த உணர்ச்சியுமற்று கடந்து தான் செல்கிறார்கள். தன்னை ஆண்ட பறம்பரை என்று கூறும் ஆதிக்க சாதியினரிடம் அடிமைசாதியாய் ஒருபுறம். தன்னை வைத்து அரசியல் வியாபாரம் செய்யும் தனக்கான தலைவனிடம் தான் அடிமை என்று உணராமலேயே அடிமையாய் இருப்பது மறுபுறம். இதுதான் இன்று தாழ்த்தபட்ட மக்களின் நிலை, மிகவும் அவலமான‌ நிலை.

இப்பெல்லாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்று அப்பாவித்தனமாய் (!) கேட்பவர்க‌ளும், மக்கள் போராடுவதற்கு தயாராக இல்லை என்றும் அரசு தான் எதையாவது பார்த்து செய்ய வேண்டும் என்று அரசிடம் சலுகைகளை எதிர்பார்க்கும் சமரசவாதிகளும் தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். சாதி கொடுமையென்றால் என்ன என்பதையும் அதற்கெதிரான மக்களின் எழுச்சியையும் அவர்களின் அன்றாட வாழ்வில் அவர்கள் எதிர்கொளும் போராட்டங்களையும் காண வேண்டும்.

ஆனால் ஆண்ட பர‌ம்பரையினருக்கு எதிராக தாங்களும் ஆண்ட பர‌ம்பரையினரே என்று தாழ்த்தப்பட்டவர்களில் சிலர் கூறுகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூறுவது ஆண்ட பர‌ம்பரையினர் என்னும் குலப்பெருமையில் வாழ ஆசை படுவதையே காட்டுகிறது. ஆனால் தாழ்த்தபட்டவர்கள் ஒருகாலத்தில் வரலாற்றில் ஆண்டபறம்பரையினராய் இருந்திருந்தாலும் அவர்கள் ஆண்ட பரம்பர‌ையாய் வாழ்ந்ததற்கு ஒரு அடிமை சமூகமும் இருந்திருக்கும். இன்று இவர்கள் எவ்வாறு அடிமை தீயால் வேகின்றனரோ இதே அடிமை தீ அன்று அந்த அடிமைகளையும் சுட்டிருக்கும். ஆண்ட பர‌ம்பரையினர் எனும் ஆதிக்க சாதியினர் தேவர் என்றால் நாங்கள் தேவேந்திரர் என்றும், தாழ்த்தபட்ட மக்களுடன் எங்களை சேர்க்க வேண்டாம் என்றும், நாங்கள் தாழ்த்தபட்ட மக்கள் அல்ல என்றும் என்று சிலர் கூறுவது சற்று வேதனையான உண்மை. நினைவிடத்தில் மக்கள் எழுச்சியை பார்த்துகொண்டிருந்த நேரத்தில் ஒரு துண்டு பிரசுரம் கைக்கு கிடைத்தது. இதில் சில கருத்துகள் மக்களை ஏய்க்கும் ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பது பற்றி இருந்தாலும் கீழ்காணும் கருத்துக்கள் நெருடலை உண்டாக்குபவையே.
தேவேந்திரகுலப் பெருமக்களே!

1. தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரிலேயே அரசியலாக்குவோம் தலித்திய வியாபாரிகளிடமிருந்து விலகி நிற்போம்!
2. சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர் என்ற பெயரிலேயே தலைவரை அடையாளப்படுத்துவோம்!

3. தேவேந்திரர்களை ஏமாற்றும் இந்திய, திராவிட மாயையிலிருந்து விடுபட்டு, தமிழ் தேசியம் குறித்துப் பார்வையைச் செலுத்துவோம்!

4. தேவேந்திரர்களை ஆதிதிராவிடராக மாற்றும் அரசியல் சதியை முறியடிப்போம்!

இவர்கள் தங்களை ஒடுக்கபட்டவர்கள் அல்லது தாழ்த்தபட்டவர்கள் என்று கூறிக்கொள்வதற்கே கூச்சப்படுகிறார்கள். அதனாலேயே தவறுதலாக கூட தாழ்த்தபட்டவர்கள் அல்லது ஒடுக்கபட்டவர்கள் சாயம் தன் மீது பூசப்பட்டுவிடக்கூடாது என்று கவனமாய் ‘தேவேந்திரர்’ என்றே தங்களை ஒவ்வொரு முறையும் அடையாளப்படுத்திக்கொள்கின்றனர். இதில் ஆதிக்க சாதியினரின் மனோபாவமே இவர்களிடமும் தெரிகிறது.


பார்ப்பனீய கொடுங்கோன்மை
மேலும் ஒடுக்கபட்ட மக்களிடையே பள்ளர், பறையர், அருந்ததியர் என்னும் பிரிவை தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்களே வலிமைப்படுத்துகின்றனர்.

பார்ப்பனியத்தால் தன் அடையாளம் பறிக்கப்பட்டு ஊருக்கு ஒதுக்கு புறமாய் சேரியில் வாழும் தாழ்த்தபட்ட மக்களை பார்ப்பனியத்திற்கெதிரான போருக்கு அணி திரட்ட வேண்டிய கடமையுள்ள தலைவர்களே பார்ப்பனியத்தின் படிநிலையை சார்ந்து நின்று அதன் முகவர்களாக இருக்கிறார்கள். பள்ளர் சமூகத்தை சேர்ந்த தலைவர் பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவரை தன் தலைவர் என்று ஏற்றுக்கொள்வதில்லை. பறையர் சமூகத்தை சேர்ந்த தலைவர்கள் அருந்ததிய சமூகத்தை சேர்ந்த தலைவரை ஒருபோதும் தன் தலைவர் என்று ஏற்றுக் கொள்வதில்லை. அவரவர், அவரவர் சமூகத்தின் தலைவராகவே தம்மை அடையாளபடுத்திக்கொள்கிறார்கள். இவர்கள் அனைவரும் ஓட்டு சீட்டு அரசியலில் ஆதாயம் தேடி நமது மக்களை அடகு வைக்கும் வேலையை கச்சிதமாக குழப்பமின்றி செய்து முடிப்பதற்கும் இந்த தனி அடையாளம் பயன்படுகிறது. இத்தலைவர்கள் தன் வர்க்க நோக்கத்திற்காகவும் அரசியல் அதிகாரத்திற்காகவும் தாழ்த்தபட்ட மக்களின் பிரிவினையை மேலும் விசாலமாக்குகின்றனர்.

மற்ற அரசியல் தலைவர்கள் மேல்த்தட்டு மக்களையும், நடுத்தர மக்களையும், அடித்தட்டு மக்களையும் ஒரு சேர ஏய்க்கும் வேளையில், ஏற்கனவே கசக்கி பிழியபட்ட அடித்தட்டு மக்களின் தலையில் மேலும் மேலும் மிளகாய் அரைக்கும் வேலையை தான் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று மார்த்தட்டிக்கொள்கிறவர்களும், மீசையை முறுக்குகிறவர்களும் இன்று செய்து வருகிறார்கள். உழைக்கும் வர்க்கமாய் எழ வேண்டிய மக்களை தன் உட்சாதிய பிரிவின் பெரும்பாண்மையை கொண்டு எழ விடாமல் அவர்களை அழுந்தி, வர்க்க பார்வை கிடைக்கா வண்ணம் வெற்று வாய் சவடால்களின் மூலம் மக்களின் உள்ளக் கிளர்ச்சியை, போராட்டக் குணத்தை வேறொரு பக்கத்திற்கு மடைமாற்றி கொண்டு சென்று வரப்புக்கிழைத்த நீராய் அவர்களின் உணர்வுகளை வடித்து விடுகின்றனர். சில நேரங்களில் தனது ரெளடி அரசியலுக்காகவும் கட்டபஞ்சாயத்துக்காவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். பெரும்பாண்மை இளைஞர்களை பிழைப்புவாதிகளாகவும் மாற்றியிருக்கிறார்கள்.

தியாகி இம்மானுவேலை படுகொலை செய்தவர்களின் பிறந்தநாள் அன்று அரசு விடுமுறை நாள் என்று அறிவிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தது ஆதிக்க சாதி தலைவர்கள் அல்ல. இதே தாழ்த்தபட்ட மக்களின் பிரதிநிதி என்று சொல்லிகொள்ளும் ‘நிதி’ பிரியர்களே! இவர்கள் என்றும் மக்களுக்கு நேர்மையாய் இருக்கபோவதுமில்லை. தமது மக்களின் விடுதலையை தமது பிளக்ஸ் பேனர்களில் தவிர உண்மை வாழ்வில் முன்னெடுக்கப் போவதுமில்லை.



பிரமாண்டமாய் “இங்கு புரட்சியாளர் விதைக்கப்பட்டுள்ளார்” என்ற வாசகத்தை பின் சுவராக பெற்ற தியாகி இம்மானுவேலின் நினைவிடைத்தை அடையும் மக்கள், நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும் தமது பால் குடங்களை வைத்தும், தம் வாழ்நிலை திணித்திய கருத்தியலில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

முதலாளியத்தை ஒழிக்க மார்க்சிய‌ ஆயுதத்தை வழங்கிய மேதை மார்க்ஸ்
சாதி என்கிற வகையில் பார்ப்பனிய சாதி அமைப்பின் ஒடுக்குமுறைகளும், வர்க்கம் என்கிற வகையில் ஆளும் அதிகாரவர்க்கத்தின் சுரண்டலும் இரண்டற கலந்து ஒரு சேர தன் வாழ் நாள் முழுதும் வெள்ளபெருக்கு போல் தாழ்த்தபட்ட மக்களை அடித்துகொண்டே இருக்கிறது. அவைகளுக்கு எதிராக அவர்கள் எதிர் நீச்சல் போட்டு கொண்டே வாழ வேண்டியுள்ளது. சுரணடலுக்கு உள்ளாகும் இம்மக்கள் வர்க்க உணர்வோடு எழ வேண்டிய சமயத்தில் பருண்மையாய் சாதி ஒடுக்குமுறை எனும் கொடுமைகளையும் எதிர்க்கவேண்டியுள்ளது.

ஒடுக்கப்பட்ட தேசிய இனமான “கருப்பின மக்களின் போராட்டம் என்பது வர்க்க போராட்டமே” என்றார் மாவோ .

நிலபிரபுத்துவ சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நிலபிரபுக்களின் வாரிசுகள் சாதியின் பெயரால் இன்று கோலோச்சுவதை எதிர்த்தும் அடிமைகளாய் இருந்தவ்ர்களை இன்றும் தாழ்ந்த சாதி என்னும் பெயருடன் தன்னை அடிமை படுத்துவதை எதிர்த்தும் ஆளும் வர்க்கத்திற்கெதிராக தாழ்த்தபட்ட மக்கள் போராடும் போராட்டமே இது.

தாழ்த்தபட்ட மக்களின் போராட்டம் என்பதும் வர்க்க போராட்டமே.

ஆனால் இதை ஆளும் வர்க்கமும், அவ்வர்க்கத்தை சேர்ந்த பலரும் சாதிப்பிரச்சனை என்று சுருக்கி அம்மக்களின் போராட்டங்களை அங்கீகரிக்க மறுப்பதுடன் ஆளும் வர்க்கத்தின் அதிகார மையதுடன் இணைத்து அற்ப சலுகைகளை அளிப்பதன் மூலம் இம்மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்கும் வேலையையும் செய்கின்றனர். தாழ்த்தபட்ட மக்களின் தலைவர்களும் தம் மக்களை ஆளும் கும்பலிடம் அடகு வைக்கிற‌ அரசியலை தான் ‘வீரதீரமாக’ செய்து கொண்டிருக்கிறார்கள்.


பார்ப்பனீயத்தை ஒழிக்க தன்னையே ஆயுதமாக வழங்கிய அண்ணல் அம்பேத்கர்
உலகில் எங்கும் இல்லாத சாதி எனும் சிறப்பு அம்சத்தை கொண்ட இந்த‌ நாட்டில் சாதிகொடுமைக்குள்ளாகும் மக்களிடமுள்ள‌ ஆதிக்க சாதிக்கெதிரான போராட்ட உணர்வை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் வர்க்க உணர்வோடு இணைத்து போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டாமல் சாதியை எதிர்க்கும் போராட்டங்களை முன்னெடுக்க இயலாது. அதே போல ஆதிக்க சாதியிலுள்ள ஜனநாயக சக்திகளை தமது சொந்த சாதி்க்கு எதிராகவும், தாழ்த்தபட்ட மக்களுக்கு ஆதரவாகவும் திருப்பாமல் சாதிய ஒடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தையும் முன்னெடுக்க இயலாது.

ஒடுக்கப்படும் மக்களையும், ஒடுக்கும் சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களையும், ஜனநாயக சக்திகளையும் பார்ப்பனியத்திற்கெதிரான போராட்டத்திலும் ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்திலும் அணிதிரட்டி ஒன்றிணைக்காமல் பார்ப்பனீயத்தையும் வீழ்த்த முடியாது ஏகாதிபத்தியத்தையும் வீழ்த்த முடியாது.

சாதிய சமூகத்தை அடித்து தகர்ப்பதற்கு இது ஒன்றே வழி, இதற்கு மாற்றாக முன் வைக்கப்படும் ஏகாதிபத்திய தத்துவங்களாக ‘தலித்தியம்’ , ஒட்டுப்பொறுக்கி அரசியல் மைய்ய நீரோட்டத்தில் பங்கு பெறுவது, அதிகார மைய்யங்களில் பங்கேற்க வைப்பது, இடஒதுக்கீடு போன்ற‌ சில்ல‌ரை சலுகைகள் அனைத்தும் ‘பார்ப்பனீய‌ சாதிய சமூகத்தை’ என்றைக்குமே ஒழிக்காது. மாறாக அதை அதே நிலையில் அப்படியே தக்க வைக்கவே பயன்படும்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More