Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

பரமக்குடி : உண்மை அறியும் குழு அறிக்கை



பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி:
உண்மை அறியும் குழு அறிக்கை

21.09.2011
மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்
  1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
  2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
  3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு
  4. வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை
  5. பேரா. ஜி.கே.ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா
  6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி (NDF), ஆந்திர மாநிலம்
  7. ரெனி அய்லின், தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO, கேரளம்
  8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
  9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு
  10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி
  11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்
  12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்
  13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை
  14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்
  15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை
  16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்
  17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
  18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்


இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.
பின்னணி
பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தேவேந்திரர்கள் வசிக்கின்றனர். கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது. பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.


செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:
(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

பரமக்குடி
7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில் பல்லவராயனேந்தல் கணேசன் ( 55), வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50), மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19), கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25), காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப் பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1. சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.

தொடர்பு முகவரி:
பேரா. அ.மார்க்ஸ்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582

வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப்
142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல்
மதுரை - 625 001. செல்: 94898 71185

நன்றி - அ.மார்க்ஸ்

சொல்லிச் சொல்லி மறந்த கதை......... - அறிவழகன்


பரமக்குடி படுகொலை

மீண்டும் ஒரு குருதிக் கறை படிந்திருக்கிறது தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில், இம்முறை கொல்லப்பட்டது ஏழு மனிதர்களின் உயிர், வழக்கம் போலவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்வினைகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தவண்ணம் இருக்கிறது, “இவர்கள் கலவரக்காரர்கள் என்றும், சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே” என்று ஒரு புறமும், “தலித் மக்களைக் குறி வைத்துக் கொன்றிருக்கிறது காவல்துறை” என்று மற்றொரு புறமுமாய் ஏறத்தாழ இரண்டு அணியாய் மாறி இருக்கிறது தமிழ்ச் சமூக மனநிலை.

ஒன்றைத் தெளிவாக இந்நேரத்தில் உணர முடியும், இந்த இரண்டு அணிகளில் ஒன்று “ஒடுக்கப்பட்ட மக்களின் இறப்பை எண்ணிக் கலங்கும், அதிகார வர்க்கத்தின் தொடர் வன்முறைகளை எதிர்க்கும் அணி”, இன்னொன்று “பொதுவாகக் கலவரம் யார் செய்தால் என்ன?, காவல்துறை மீது வன்முறையை ஏவும் நேரத்தில் அவர்களைக் சுட்டுக் கொலை செய்வதும் தவறில்லை என்று வாதிடும் அணி”.

 இப்போது நாம் அனேகமாக இரண்டாகப் பிளக்கப்பட்டிருக்கிறோம், ஆம், மூன்று குற்றம் சுமத்தப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்த தமிழ் மக்கள் இப்போது சரியான நேரத்தில் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், இப்படி நம்மைப் பிளவு செய்யும் ஒரு மிகப்பெரிய காரணியாகவே சாதி பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கிறது.

முதலில் இந்தக் கலவரச் சூழலை யார் துவக்கி இருந்தாலும் அது மிகப்பெரிய குற்றம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, “ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் செய்தால் எதுவும் குற்றமில்லை, அல்லது அவர்கள் எப்போதும் கலவரங்களில் ஈடுபடுவதில்லை” என்று வாதம் செய்வதல்ல நமது நோக்கம், மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலுக்குள் நுழையும் போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதனால் உண்டாக்கப்படுகின்றன என்கிற முழு உண்மையை ஒரு நடுநிலை உள்ள மனிதனால் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்போதும் அச்சம் சூழ்ந்ததாகவே இருக்கிறது, எந்த நேரத்திலும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவனது கொண்டாட்டங்கள் மறுதலிக்கப்படுவதையும் தன்னுடைய தகுதியாகவே வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியின் மனநிலையில் தலித் அல்லது ஒடுக்கப்பட்டவன் “தான் கொடுக்கிற உரிமைகளால் அல்லது உதவிகளால் வாழும் மனிதனைப் போலத் தோற்றமளிக்கிற விலங்கு” என்று தான் கற்பிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வீடுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வது ஊறு விளைவிக்கும் குற்றம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது, ஆதிக்க சாதி மனிதனின் வயல்களுக்கு நடுவே இருக்கும் தன்னுடைய வயல் வெளிகளில் விவசாயம் செய்யும் உரிமையைக் கூடக், கடந்து செல்ல முடியாத காரணத்தால் இழந்து நகர்ப்புறமாக நகரத் துவங்கிய எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும்.

பல்வேறு சமூக வெளிகளில் புறக்கணிக்கப்படுகிற அல்லது துரத்தி அடிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வலியை அறிய முடியாத எவராலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான அழுத்தமான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியாது, ஏனென்றால் பல நேரங்களில் அந்த வழியைத் தோற்றுவிப்பவர்களாக அவர்களே இருக்கிறார்கள், விழாக்காலங்களில் தாம் விரும்புகிற தலைவரின் படங்களை மரியாதை செய்கிற உரிமை நமது சமூகத்தில் ஆதிக்க சாதி மக்களின் கைகளில் இருந்தே புறப்படுகிறது.

பிறப்பின் மூலமே கிடைக்கிற இந்தத் தகுதியின் உதவியால் கல்வி அறிவாலும், தனது கடின உழைப்பாலும் மேலெழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வளர்ச்சிப் பாதையை, அவனது சுய மரியாதையைக் கேள்வி கேட்கும் அல்லது சீண்டிப் பார்க்கும் நிலையை அடைகிறான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லப்படுகிற மனிதன். இந்தச் சீண்டல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மனிதனின் உளவியலில் அழுத்தத்தையும், நெருக்கடியையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்த்துக் குரல் எழுப்புகிற எவரையும், அவர் எப்படியான கருத்தியலைக் கொண்டிருக்கிறார் என்கிற காரணங்கள் ஏதும் அறியாமலேயே ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞன் பின் தொடர்கிறான், தனது வாழ்க்கையின் மீது சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருக்கிற சாதி அடக்குமுறை வடிவங்களைக் கடந்து தான் நிம்மதியாக வாழ்வதற்கு இத்தகைய தலைவர்களில் யாரேனும் ஒருவர் உதவி செய்வார் என்று அவன் முழுமையாக நம்பத் துவங்குகிறான்.

ஆழி சூழ்ந்த நிலப்பரப்பில் அச்சத்தோடு வாழும் இத்தகைய ஒடுக்கப்பட்ட மனிதனின் மனநிலையே ஒரு வழிபாட்டு மனநிலைக்கு அவனைத் தள்ளி விடுகிறது, ஏறத்தாழ கடவுள் கோட்பாட்டினைப் போலவே தன்னால் அவிழ்க்கவே முடியாத சமூகச் சிக்கல்களின் ஒரு முனையைத் தலைவர்களின் மீது கட்டி விட்டு இன்னொரு முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான், தலைவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்ட மற்றொரு முனையில் சரணடைந்து தன்னுடைய அச்சத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டதாக நம்பி பெருமூச்சு விடுகிறான்.

ஆனாலும், தனது பிறப்பின் அதிகாரத்தைப் பறிக்கவே தோற்றம் கொண்டவர்கள் இந்தத் தலைவர்கள் என்று நம்புகிற பிறவி ஆதிக்க சாதி மனிதனால் ஒடுக்கப்பட்ட மனிதனின் நிம்மதிப் பெருமூச்சைப் பொருக்க முடிவதில்லை, தனக்குச் சேவகம் செய்யும் ஒரு கீழான நிலையிலேயே ஒடுக்கப்பட்ட மனிதன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக எண்ணுகிற ஒவ்வொரு ஆதிக்க சாதி மனிதனும் அதற்கான அடிப்படை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான், அவன் மட்டுமன்றி அவனது சந்ததியும் அப்படியே இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்கிறான்,

பிறப்பால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையை இழப்பதையோ, விட்டுக் கொடுப்பதையோ அவமானமாய் உணரும் ஆதிக்க சாதி மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனை ஒரு சக மனிதன் என்றோ, சக உயிர் என்றோ உணரத் தலைப்படுவதே இல்லை, சக மனிதனை தன்னோடு இப்பூவுலகில் வாழும் இன்னொரு உயிர் என்கிற உயிரியல் அல்லது வாழ்வியல் உண்மையை வசதியாக மறந்தே போகிறான், அது தான் இறுதியாக இந்த மனித குலம் அடையத் துடிக்கும் உண்மையான நாகரீகம் என்பதை அவனது மதமும், சாதியும் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதே இல்லை.
பரமக்குடி கலவரம்

இனி பரமக்குடி நிகழ்விற்கு வருவோம்,

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக பரமக்குடி சுற்றுப் புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு (பெயருக்கு) என்கிற பெயர் கொண்ட ஆதிக்க மனப்போக்கு அப்பகுதி இளைஞர்களிடையே ஒரு விதமான கிளர்ச்சியான சூழலை உண்டாக்கி இருக்கிறது, தான் தலைவராக ஏற்றுக் கொண்டவரை அவரது நினைவு நாளை அல்லது பிறந்த நாளைக் கொண்டாடும் உரிமையைக் கூட இந்தச் சமூகம் எனக்கு வழங்கவில்லை என்கிற தார்மீகக் கோபமே ஒரு வன்முறை மனநிலையை நோக்கி இந்த இளைஞர்களைத் தள்ளி இருக்கிறது.

பிள்ளையாருக்கும், பிள்ளையார் ஊர்வலங்களுக்கும் இருக்கும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடும் இது போன்ற இடங்களுக்கு இல்லை என்பதே இந்தச் சமூகத்தின் மாற்றாந்தாய் மனநிலையை நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது, காவல் நிலையங்களில் பெயர்களைப் பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்திய காவலர்கள், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சென்று விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிகழ்வில் ஏழுக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது காவலரோ அல்லது ஒடுக்கப்பட்ட மனிதனோ, தமிழனோ, தெலுங்கனோ, மலையாளியோ என்கிற ஆய்வுகளுக்கு முன்னாள் இறந்து போனவை நம்மைப் போலவே உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கிற மனித உயிர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதே நிகழ்வு மற்றொரு சாதி அணிவகுப்பில் அல்லது தலைவரின் நினைவு நாளில் நிகழ்ந்து அங்கேயும் ஏழு மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்குமேயானால் சக மனிதனாகக் குரல் கொடுக்கும் பண்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகத்தின் மனநிலையைப் போலவே அரசின் ஒவ்வொரு அடுக்கும் செயல்படும், காவல் துறையில் பணியாற்றும் மனிதராகட்டும், அமைச்சரைவையில் பணியாற்றும் மனிதராகட்டும் நீங்களும் நானும் என்ன சிந்திக்கிறோமோ அதனையே எதிரொலிக்கிறார்கள், சாதி ஒழிப்பிற்கும், வர்க்க வேறுபாடுகளுக்கும் பகல் முழுதும் குரல் கொடுக்கும் பல தலைவர்கள் இரவு நேரங்களில் தமது சொந்த சாதி நலன்கள் குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக நாம் அவர்களை மாற்றி வைத்திருக்கிறோம், நாமே நமது சொந்தக் குழந்தைகளுக்கு ஒரு மிகக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறும் ஆற்றலை வழங்க ஒப்புவதில்லை, மாற்று சாதி அல்லது பக்கத்துக்கு வீட்டு மனிதன் குறித்த வன்மத்தையே பல நேரங்களில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஒரு மிக நுட்பமான சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் இருக்கிறோம் என்கிற உள்ளுணர்வு இல்லாத காவல்துறை அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்தக் கொடுமையான நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது என்பதில் துளியும் ஐயம் இல்லை, தலைமைப் பண்புகளும், ஆளுமைத் திறனும் இல்லாத சில குறிப்பிட்ட மனிதர்களின் தவறுகளால் ஏழு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது, மேலும் ஆதிக்க மனப்போக்கும் அதிகார மையங்களும் ஒருங்கிணைகிற காவல் துறையின் மனசாட்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பொது மக்களின் கூடுதலின் போதும், போராட்டங்களின் மீதும் கட்டவிழ்க்கப்படுகிற இந்த அரச வன்முறையை ஒரு மிகப்பெரிய தேசத்தின் சட்டங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பதை மீள்பார்வை செய்யும் ஒரு சிக்கலான பாடத்தை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகிறது. இத்தகைய இக்கட்டான தருணங்களில் யார் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அல்லது அனுமதியை வழங்குகிறார்கள்?, யார் வழங்கினார்கள்?, மனித உயிர்களை அரசுகள் கொல்வது இத்தனை எளிதானதா? போன்ற சட்டக் கேள்விகளை நாம் தீவிரமாக எதிர் கொண்டாக வேண்டும்.

காவல்துறையினர் உடனோ அல்லது ஆதிக்க சாதி மனிதர்கள் உடனான முரண்பாடுகளின் போதோ எப்படியான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும், அவற்றின் முன்னணித் தலைவர்களும் தங்களின் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். மிகப் பெரிய இழப்புகளில் இருந்தும், தேவையற்ற முரண்பாடுகளில் இருந்தும் எளிய மக்களைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது இயக்கங்களின் தலைவர்களும் உணர வேண்டும்.

இந்த நிகழ்விற்கு அடிப்படைக் காரணமான ஒரு பள்ளிச் சிறுவனின் மரணத்துக்கு பின்னே மனித நேயத்தோடும், நமது பதவிக்கான உயர் தகுதி அடையாளங்களோடும் நாம் பணியாற்றினோமா என்கிற கேள்வியை ஒவ்வொரு காவலரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும் இன்றைய தமிழ் இளைஞர்களின் உளவியலில் இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொடுக்காதபடி வழி நடத்திச் செல்கிற தங்கள் பொறுப்பை ஒவ்வொரு சாதியின் தலைவரும் உணர்ந்து இறந்து போன மனித உயிர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் கடந்து இறந்த மனிதர்கள் அனைவரும் போராட வந்தவர்களா?, இல்லை வேடிக்கை பார்த்தவர்களா?, கல்லெறிந்தவர்கள் மட்டுமே குண்டடிபட்டிருக்கிறார்களா? என்கிற பல உண்மைகளை நாம் அறிய வேண்டியிருக்கிறது, காயமடைந்த காவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சக மனிதர்களாகவும், சக உயிர்களாகவுமே நாம் உணர வேண்டியிருக்கிறது.
பல்வேறு விழாக்கள், ஒன்று கூடல்கள், தலைவர்களின் பிறந்த நாட்களின் போதெல்லாம் நிகழாத வன்முறையும், துப்பாக்கிச் சூடுகளும் தலித் மக்களின் ஒன்று கூடல்களின் போது தவறாது நிகழ்வதன் பின்னிருக்கும் சமூக மன நிலையை அல்லது அரசியல் காரணங்களை அறிந்து அவற்றை நீக்குவதற்கான மிக அடிப்படையான பலவேறு செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைய வேண்டிய ஒரு கட்டாயம் நிகழ்ந்திருக்கிறது,

இறந்த மனிதர்களின் குழந்தைகளை, அவர்களின் அழுகுரலை, அந்தக் குடும்பங்களில் நிகழவிருக்கிற அவலங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், அந்த அழுகுரலும், அவலங்களும் மரணத்தின் பெயரால் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது, நாம் தூக்கிலடப்படும் மூன்று உயிர்களைக் காக்கத் தன்னெழுச்சியாகப் புறப்பட்டவர்கள், நமது மண்ணில் உயிர்களைப் பலியிடும் அரச நடைமுறைக்கு எதிராகக் கிளர்ந்தவர்கள், நாம் வரலாறு நெடுகிலும் நாகரீகத்தின் பல்வேறு கூறுகளை விதைத்து முன்னேறியவர்கள், தொடர்ந்தும் அப்படியே இருப்போம் நண்பர்களே.........

“நாம் இப்படி சண்டையிட்டுக் கொள்வதையே நமது எதிரிகள் விரும்புகிறார்கள், ஏனென்றால் நமது வலிமையும், பலவீனமும் என்னவென்பதை அவர்கள் நம்மைவிட நன்கறிவார்கள்.”

நன்றி - கை.அறிவழகன்

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்.


பரமக்குடி படுகொலைகள்


எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில்,
நேற்று  காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக  பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். 
பரமக்குடி தலித் படுகொலைகள்

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின்  சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம்  வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.
* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல்  போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான். 
* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது.  தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.
*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை. முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள். 
* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும்  இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ்  தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். 
* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.
* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும்.  பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும். 
* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின்  பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.

நன்றி - அருள் எழிலன். முகநூல்

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப் போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.


இமானுவேல் சேகரன்
ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

- குருசாமி மயில்வாகனன்

நன்றி வினவு

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More