Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

இன்னுமொரு யோனி செய்வோம்

தில்லை
14-12-2008


அர்த்தம் அள்ளி
வரிகளை விழுங்கினேன்
வானமும் பூமியும்
வயிறு நிரம்பிற்று
காற்றை உள்ளங்கையில் நக்கி

கடலை குடித்தேன் சிரட்டையில்
ஓங்காளம் வந்து
சுருங்கிற்று கண்கள்
நிமிர்ந்து யானையின் தும்பிக்கை விறைத்து
உருமாறிற்று


தெரிந்தவன்
சிட்டுக்குவி

மலவாசல்
இது கனவு
வயிறு வலித்தது
வரிகளைத் துப்பினேன்
சிட்டுக் குருவியின் மலவாசலில் தும்பிக்கை
இறுகி இது நினைவு
கண்கள் திறந்து
கழிவறையில் கிடந்தேன்
மலவாசலில்

இரத்தம் வழிய






























சிதைதல்

நிவேதா
நெஞ்சுக்குள் நெருடும் என்னமோவொன்று சமயங்களில் நீ உடைத்தெறிய முயலும் நெடும் மௌனங்களினூடு தகர்ந்து போவது என் முள்ளென்புகளும்தான நெருக்கமான உரையாடல்கள் அதன்பின்னரான விடைபெறுதல்கள் உணர்வுகளை அசுரபசியுடன் பிடுங்கித் தின்னும் இந்தக் காதலுடன் தொலைபேசி கைநழுவ கால்களினிடையே முகம்புதைத்து விம்மி விம்மியழும் பொழுதுக்கள் இனிமேலும் வேண்டாமெனக்கு.. எதுவும் பேசிக்கொள்ளாத கணங்களின் வலி தெறிக்கும் குரலில் நினைப்பதனைத்தையும் சொல்லிவிட முடிந்திடுமாயின் சிதைதல் சிலகாலங்களுக்கேனும் தள்ளிப்போகக்கூடும் காத்திருத்தல்களில் வந்துமுடியும் கனவுகளின் கனத்த முடிச்சுகளுடன் தன் வழி ஏகுதலும் பிரியம் கூற விழைதலும் பழம் பஞ்சாங்கங்களாய்க் கசக்க வெறும் வார்த்தைகள் உன்னில் சலனங்களை ஏற்படுத்தக் கூடுமோவென்ற சந்தேகங்களோடு முன்புபோல் எதுவும் ஆறுதலளிப்பதாயில்லை விழிநீரை வீணாக்குவது மட்டுமே அழுகையாகின் அழத்தோன்றினால் அழுவதில் ஒன்றுமேயில்லைதான் நீயற்ற வெறுமைகளின் இறுக்கந்தளர்த்த வழியற்று இரத்தங் கசியக் கசியப் பாடலுறுவதே எனக்கான அழுகையாகிப் போனமை நீயறிவாயா எனதன்பே.

தலைகீழாய்த் தொங்கும் முலைகள்

தில்லை 14-12-2008 உண்ணும் முலைகளையும் இன்னும் பல நூறு யோனிகளையும் எனது உடம்பில் ஆணியில் கொழுவினர் கண்களில் வாழ்வு வழிந்தோட என் தேச பெண்கள் மூக்கை பொத்தி மூன்று தல முறை தாண்டு கடலில் மூச்சு வாங்கினர்; இரத்தம் காய்ந்த உடைகளையும் உடலையும் அலசிக் கழுவினர் எல்லாவயதினருமாக எல்லையிடப்பட்ட பணிமனையில் கணவர்களின் பெயர் சொல்லி வௌ¢ளையுடை வாங்கினர் இன்று பகலும் இன்னும் முப்பத்தி மூன்று ஆயிரம் பெண்கள் முலைகளையும் யோனிகளையும் என்னில் கொழுவிர் எங்கு போகிறீர்கள் என்றேன் எல்லைக் கிராம தடுப்பு முகாமில் வௌ¢ளையுடை வாங்க என்றனர்.

வரி மங்குகிற நினைவு

தில்லை



பொட்டுப் பொட்டாகத்
தாடைவிளிம்பில் தொங்கிற்று.......
ஆற்றுக்கு அந்தப்பக்கம் நிற்கிற
வாழ்வின் புலம்பல்.


அரசல் புரசலாக
ஊர்க்காதில் விழுந்தும் விழாததுமாக
காற்றின் இறுக்கம் தளர்ந்திருந்தது.
வயல் வெளிக்கு நடுவில் போகும்
தென்னைகள் ஓரமிட்டசாலையில்
தலை கிடந்த அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த கன்னநோவில்
நுரையீரல்களும்
விலா எலும்புகளும்
நொறுங்கிய மூச்சடைப்பில்
ஒரு குரல்
நடுங்கி நடுங்கி வீழ்ந்தது.


அவர்கள் உட்கார்திருந்த தரையை இழுத்து
அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்.
குளத்தையும் ஏரியையும் தூர்த்துக்
குப்பை கொட்டினார்கள்.
குப்பைகள் எரிந்து
கட்டைக்கரியும் புகையுமாக
நெடில் வீசிற்று.


அதனூடு அவர்கள் வாழ்க்கையின் வாடை வீசிற்று.
இன்னும் இன்னும்.........
இரத்தக்குட்டைகளில் மயிர் உறைந்து
எனக்கு நாக்குநுனியில் வந்துவிட்டது
மறுகணம் என் தாகம் அடங்கிச் சாம்பலாயிற்று.


விதைத்தவைகள்

கலா


உங்களுக்குத் தெரியுமோ என்னவோ
எம் இனத்தின் ஒவ்வொரு மனிதரும்
கொல்லப் படுவதற்கென்றே
படைக்கப்பட்டவர்கள்.


கசாப்புக் கடைக்காரனின் பின்
வாசலில் காத்திருக்கும்
ஆடுகளைப் போல்
நாம் காத்திருக்கிறோம்.
எமை பலி கொண்டு
ஒரு தேவதையின்
ஆட்சியை நிலைநிறுத்த
நீங்கள் நம்ப வேண்டாம்.


ஆனால் என் தாய்
மண்டியிட்டுக் கதறுகிறாள்
சிதறுண்டு போன
உடலங்களையாவது
தன்னிடம் தரும்படி
அவள் அழுது புலம்புகிறாள்.
இரத்தத்தில் குளித்து
பிய்ந்து போய் இருக்கும்
உடல்களின் மென் நெற்றி
பொட்டுகளில்முத்தமிட்டு
புதைகுழியில் மூடுவதற்காய்.


இப்போதும் மடுமாதா தன்
வயிற்றிலும் மார்பிலும்
அடித்துக் கதறுகிறாள்.
அந்த 38 பேரின் சாட்சியாக
அவள் உள்ளாள்.

நீங்கள் என் தாயின்
வயிற்றில் விதைத்தவைகள்
அவள் கால்களுக்கிடையால்
இரத்தமாய் கொட்டும்
அப்போது நீங்கள்
அதிர்ச்சியடைய வேண்டாம்


மீண்டும் பொறிப்பதற்கு
பயங்கரவாதிகள் என்ற
வாசகம் இல்லாமலா
போய்விடும்!?

பொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்


நூற்றாண்டின் இரவுகளை
முடிச்சவிழ்க்கிறேன்
இத்தும் புரிபிஞ்சும்
அசவின் கயிறுகள்.
உயிரின் சுவை
கொண்டஇரத்தத்தை
நக்கியும்
கொடுவலிகளைக்
குடித்தும்
பாய்கள்.

விந்தூறி நனைந்தும்
சாயம் வெழுத்தும்
எனது தலைமுறைகளின்
அசைவு.

இறுகியும் இறுக்கியும்
பொட்டைமுடிச்சு.
தகப்பன்கள்
கணவன்கள்
மகன்கள்
தலைமுறைகளின்
ஆதிக்கம்.....

எனது தாய் தனது
சேலைத்தலைப்பில்
முடிந்து வைத்திருக்கும்
சில்லறைகளாய்.

கருப்பன்


நீண்ட
நெடுந்தூரப் பயணம்
களைத்த மனிதர்கள்
இவர்களுடன் எல்லாம்
நானும் ஒருவனாய்
பயணம்
செய்திருக்கின்றேன் - இந்த
அந்நிய மண்ணில்
இருக்கைகள் யாவும்
நிரப்பப்பட்டு
துவண்ட நிலையில்
சிலர்
நின்று வந்தாலும் கூட

என்னருகில்
இருக்கும்
இருக்கைமட்டும்
தனித்து வெறித்து
காத்திருக்கும்-என்
நிறத்தின் பெருமை
பேசியவண்ணம்...
ஏனெனில்
இவர்களின்
அகராதியில்
எந்தன்
நிறத்திற்கு-நரகம்
என்று பொருளாம்.

இரா.சுதாசீலன்-நோர்வே

அக்கினிக் குஞ்சாய் உயிர்த்தெழு!

அவ்வை
சிறிய மலராய் விரிந்து மலரும்
என் மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை
மாசு மறுவற்ற பச்சைக் குழந்தை
காற்றை எல்லாம் தென்றலென்றெண்ணி
கற்பனையில் சஞ்சரித்து
ஒலியெல்லாம் சங்கீதமென
வாழ்வை இனிதாகவே காணத்தெரிந்த
கன்றுக்குட்டி
என் சிறு பெண்
வாழ்வின் முழுமைக்கு
பெண் குழந்தை வேண்டுமென்று
பேரவாக் கொண்டிருந்த என் தாய்மை
பிறந்த நாள் முதலாய்
இளஞ் சிவப்பு வர்ணத்தில்
சட்டைதைத்து
பொட்டு வைத்து காதுகுத்தி
பெண்ணாய் அவளை நினைத்த
என் தாய்மை ....
பெண்ணென்று பிறந்ததற்காய்
பெருமைப்பட வேண்டுமென்று
கனவுகளில் நினைத்திருந்த
என் தாய்மை ....
சிறகொடிக்கப்பட்ட ஒரு
ஒற்றைத் தும்பியாய்
திகைத்து போய் மிரண்டு கிடக்கிறது.
வக்கிரம் நிறைந்த விலங்குணர்வின்
குரூரம் நிறைந்த கயமையின் முன்னால்
சிதறிப் போயிற்று சில்லம் பல்லமாக
சிதறிப் போயிற்று
என மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை .....
மூன்று வயதினும்
பால் முலையருந்தும் பவளவாற்க் குருத்துக்கள்
கொஞ்சி குலவி
நிலாக் காட்டச் சிரிக்கும்
சின்ன வயதிலும்
ஆண் குறிகளால் துளைக்கப்படுவதை
எப்படிக் காட்டுவேன் அள்ளி அணைக்கின்ற அப்பாவோ
ஆசையுடன் கொஞ்சுகின்ற மாமாவோ ஆயினும்
அடி வயிற்றில் துளையிடும்
ஆண்குறியர்களாகிக் போய்விடக் கூடிய
இந்த உலகை
எப்படிக் காட்டுவேன்.
சூழவுள்ள உலகம் முழுவதும்
விறைத்துப்போன
ஆண்குறிகளாய்
அச்சம் தருவதை
எப்படித் தவிர்ப்பேன்
காற்றெல்லாம் தென்றலென்றும்
ஒலியெல்லாம் கீதமென்றும் எண்ணியபடி
சிறகுகளை அகல விரித்து
சிறகடிக்க முடியாது என் பெண்ணே
வெந்து புண்ணாய்
வலியெடுக்கும் இதயத்துடன்
வாழ்தலும் முடியாது
எழு !
உள்ளே அனலாய்
எரிந்து கொண்டிருக்கும்
பூமியின் வடிவாய்
விரித்தெழு
பொட்டும் பிறவும்
அலங்காரிக்கும்
மேனியழகு உன் அழகல்ல
வெறியும்
திமிரும்
அவர்களுக்காய் மலரட்டும் !
அதிகாரமும்
உடைந்து சிதற எழுந்து நில்
உன்னை மீறிய எந்தக் குறியும்
-உனது உடலை தீண்டாதவாறு
அக்கினிக் குஞ்சாய்
உயிர்த்தெழு
இந்த உலகின்
பெண்மை வடிவம்
இது வென்றெழுது

தானா

வ.ஐ.ச.ஜெயபாலன் தானாவை பார்த்தேன் ஒருவருள் ஒருவர் பாய்ந்த தருணத்தில். கண்டதில்லையா நீங்கள் தானாவின் மனசு பற்றும் நிர்வாணம். அந்தக் கண்ணாடி மேனியில் என் ஆத்ம முகத்தை அடைந்திருந்தேன். துருவத்துப் பனி ஆறு என அலட்சியம் செய்து விடாதீர்கள். தானாவைத் தொடு கணத்தில் தாடி வெண்மயிர் கறுக்க எதிர் விதியில் மிதந்தேனே. நதி கால வெளியில் இருப்பதை முன்னும் வாழ்வதைப் பின்னுமாக அடித்துச் செல்கிறது. கொம்புகள் உரசிச் சடசடக்கும் பனி மான்களோடு முன் நகரும் சறுக்கு வண்டி. அங்கிருந்து காலம் உடைய நாற்புறமும் பாய்கிறது ஒரு லாப்பியனின் பாடல். நூற்றாண்டு முன்னாடி துப்பாக்கியும் பைபிளுமாய் வந்து யேசுவையே மீண்டும் சிலுவை அறைந்தவர்களால் கொல்லமுடியாது போன பாடல் அது. சமிக்ஞை மொழியாக தொலைந்த சந்ததிகளை தேடுகிறது அப்பாடல். தறிபட்ட கலாச்சாரத்தின் விதை அது. நதிகளின் ஆழத்திலிருந்து மீழ்கிறது தலை மறைந்த வாழ்வு தானாவின் சரளைக் கற் கரைகளில் என் அகதி மனசு சிந்துகிறது. எல்லைகள் நூறு தாண்டினாலும் என்னைச் சூழ எரிகிறதே யாழ் நூலகம். பாலி ஆற்றம் கரைகளில் பாடும் மீன் வாவியில் பசும் ஆதிசேடனாகப் படமெடுக்கும் தேயிலை மலைகளில் முட்டாக்கு தலை மறைத்து முழு நிலவு கவிபாடும் வயல் வெளிகளில் அலைகிறது எம் மூதாதையரின் பாடல் பூமிப்பந்தின் புழுதியான எம்மை கூவி அழைத்தபடி

வசந்தம் போனது

சக்கு
மரங்கள் இலைகளை துறக்கிற காலமிது
கிளைகள் இலைகளை விட்டுப் பிரியும் காலமிது -ஏன்
இலைகள் பச்சையிலிருந்து மஞ்சள்,
மஞ்சயிலிருந்து சிவப்பு
சிவப்பிலிருந்து பழுப்பு - என
மாறும் காலமும் கூட
இலை துறந்து - வெறும் கருநிற குச்சிகளாய்
வரப் போகும் இருட் காலத்தில்-
சூழல்
சோகமாய் காட்சிதரும்.
பனியும், இருளும்
தனிமை, விரக்தியுடன் ஒருசேர
செத்துத் தொலையத்தான்
தோணும்
வெண்பனி கொட்டப் போகும்
காலம் அதிகமில்லை.
உடல்
வரண்டு போகும்
நா வரண்டு போகும் - கூடவே
நானும்...?
தெரியாது...!
இறுதியாக
மனம் விட்டு சிரித்த நாள்
நினைவிலில்லை
இரவு பன்னிரண்டரை
வேலை களைப்பில்
நெடுந்தூர நடையில்
கால்களுக்கு மேல்
வலதும் இடதும்
சாய்ந்து சாய்ந்து
தாவித் தாவி பனிக் குளிரில் நான்.
பின் தொடர்ந்த பெரிய வட்டநிலா
இப்போது
இராட்சத மலைகளுக்கு மேல்
பைன் மரங்களின் நடுவில் இருந்து
எட்டிப்பார்த்தது
நிலவு நமக்கு ஊட்டிய
கதைகள்
எங்கு இவர்களுக்கு
புரியப்போகிறது.
இந் நிலவு பேசும் மொழி-மேலும்
இம்சைப்படுத்தியது
வாயினால் மூச்சிழுத்த
படி மீசை முடிகளில் - குளிர்
பனியாக ஒட்டிக்கொண்டிருந்தது.
துயரங்களின் மீதிருந்த
முழு கவனமும்
களைப்பை மூடியிருந்தது...
நடந்தேன் நடந்தேன்...
எட்டிப் பிடித்து விடுவேன்
முடிவை...?

இழப்பு

கவிதா

எனக்குத் தெரியும்

என் மண்ணில்
வசந்தம் ஒரு நாள்
மலருமென்று!
இழப்புகளையும் ஒரு நாள்
இழப்போம் என்று!
அன்று அழிந்த
வீதயெல்லாம் தோரணங்கள்
கட்டப்படும்...
என் இடிந்த வீட்டை
மாமா புதுப்பித்துத் தருவார்.
பூஞ்செடிகளில் பூக்கள்
புத்துயிர் பெறும்.
என் பழைய சிநேகிதர்கள்
மீண்டும் அறிமுகமாவார்கள்
இருள் மறையும்...
எனக்குத் தெரியும்
இழப்புகளையும்
ஒருநாள் இழப்போம் என்று...
என் அம்மா வருவாள்...
என் மாமா, மாமி
வருவார்கள்...
என் தாத்தா
வருவார்...
என் மச்சான்
வருவான்...
தேசத்திற்காய்
உயிர் நீத்தவர்கள்
என்ற மாவீரர் பட்டியலில்.
என் அப்பாவும் வருவார்....

சிலுவைப் பயணமும் புனித யுத்தமும்: ஊடகங்களின் சித்து விளையாட்டு

நிலா
வரலாறு மெல்ல எட்டிப்பார்க்கின்றது. வரலாற்றில் முன்பொருமுறை ஐரோப்பிய நாடுகளை ஆட்டிப்படைத்த சிலுவை யுத்தம் பற்றி மீண்டும் செய்திகள் இலேசாக ஆங்காங்கே கசியத் தொடங்கியுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அவர்களே இதனை ஆரம்பித்தும் வைத்துள்ளார். அவர் சிலுசை யுத்தம் பற்றி நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் சிலுவை யுத்தம் பற்றிய அறிவிப்பு சிலுவை யுத்தத்தின் அடையாள குறியீடாகவே காணப்படுகிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் போராளிகளால் அடிக்கடி முன்வைப்படும் புனித யுத்தத்திற்கு மாற்றீடாகவே தங்களின் அடாவடித்தனங்களிற்கு நியாயம் கற்பிக்கவுமே தற்போது சிலுவைப் பயணம் பற்றிய கருத்துக்களை வெளியிடத் தொடங்கியுள்ளனர். இதன்மூலம் இவ்வளவு காலமும் தங்களால் மூடிமறைக்கப்பட்டிருந்த மதவெறியையும் இவர்கள் வெளிச்சம் போட்டு வெளிக்காட்டத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு துணை போவதில் வழமை போன்றே ஊடகங்களும் துதிபாடத் தொடங்கிவிட்டன.
நியுயோர்க் மற்றும் வாஷிங்டன் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் பற்றிய செய்திகளை அறியத்தருவதில் அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் ஊடகங்கள் குறிப்பாக மேற்கைரோப்பிய நாடுகளின் ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களும், செய்திகளை வெளிக் கொணர்வதில் அவற்றின் ”கருத்தியல்” நிலைப்பாடும் பெருமளவிற்கு ஒருபக்க சார்பானதாகவே அமைந்திருந்தன. இவ்வாறான நிலைமை முன்பும் பல்வேறு சமயங்களில் ஏற்பட்டிருந்தன. குறிப்பாக ஈராக்-ஈரான் யுத்தத்திலும் பின்பு ஈராக் மீதான யுத்தத்தின் போதும் இவ் ஊடகங்களில் மிக கேவலமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தன. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், பயங்காரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற தலைப்பில் அணிதிரண்டிருக்கும் இவ் ஊடகங்கள் வௌயிடும் செய்திகள் தமது நலன் சார்ந்தும் அரேபிய மக்கள் அனைவரையும் பயங்ரவாதத்தின் வாரிசுகளாக காட்டவும் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன.
அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதலையிட்டு மகிழ்ச்சி தெரிவித்து வீதியில் இறங்கி ஆரவாரம் செய்த பாலஸ்தீன மக்கள் பற்றிய தொலைக்காட்சி செய்திகள் அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனமான சீ.என்.என்இல் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு முறை காட்டப்பட்டது. ஏனைய மேற்கைரோப்பிய மற்றும் வேறு பல தொலைக்காட்சி நிறுவனங்களாலும் இச்செய்தி உடனுக்குடன் பரப்பப்பட்டது. ஊடகங்களின் இவ்வாறான செயல்பாடு பல கேள்விகளை எம்முன் தோற்றுவிக்கின்றது.இச்செய்தி உண்மைதானா (நடுநிலை செய்திஸ்தாபனங்கள் வெளியிட்ட செய்தியில் இவை முன்பு ஈராக் மீதான யுத்தச் சம்பவங்களின் தொடர்ச்சி என கூறப்பட்டது.)
2. நடந்த சம்பவங்களின் முழுமையான விபரமும் அம்மக்களிற்கு தெரிவிக்கப்பட்­டிருந்ததா? அல்லது அரைகுறை செய்திகள் அதாவது விமான விபத்தில் முக்கிய கட்டடங்கள் தகர்ப்பு என்றோ அல்லது இஸ்லாமிய தீவிரவாதிகளால் விமானம் மூலம் (பயணிகள் விமானம் அல்ல) வர்த்தக ஸ்தாபனம் அழிக்கப்பட்டது மட்டுமே தெரிந்திருந்ததா?.
3. அப்படியே பாலஸ்தீன மக்கள் நடத்திநர;தாலும் அதற்கான அகபுற சூழ்நிலைகளை விளங்கிக் கொள்ளாமல் பாதிக்கப்பட்ட அனைவரினதும் மனம் பாதிக்கும்படியும் செய்திகளை வெளியிடலாமா?
மேற்கூறிய கேள்விகள் மட்டுமின்றி சரியான விசாரணை முடிவுகள் வருவதற்கு முன்பே இவ் ஊடகங்கள் தாமே விசாரணை நடாத்தி முடிந்து தீர்ப்பும் கூறிவிட்டன. இதன் மூலம் தொடரும் விசாரணை ஆராய்வுகளை தமது நோக்கிலேயே தொடரக்கூடியதாக மறைமுகமான ஒரு அலுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இச் சம்பவங்களைப் பற்றி நோர்வேஜிய தொலைக்காட்சி சேவையொன்று வெளியிட்ட செய்தியில் (செப்டம்பர் 12ஆமட் திகதி) பாலஸ்தீன மக்கள் இருதயமற்றவர்கள் அவர்களின் ஜெருசலேம் நிருபர்கள் என கூறியிருந்தார். (hjerte lose menesker ) ஆனால் தமது சொந்த நாட்டிலே அகதிகளாகி இஸ்ரேலிய சியோனிசவாதிகளால் இம்மக்களின் இருதயம் இரும்மு கரம் கொண்டு அடக்கப்பட்டது பற்றியோ அல்லது அம்மக்களின் சொந்தப் பிரதேசத்தில் அத்துமீறி குடியேறி மாடடாளிகைகள் கட்டி உல்லாச வாழ்வு வாழும் இஸ்ரேலிய குடியேற்றவாதிகளின் செயல்களால் அம்மக்களின் இருதயம் தீயிட்டு கொழுத்தப்பட்டு வருடங்­கள் பல கடந்துவிட்டது பற்றியோ இவ் ஊடககங்கள் பெரிதாக அலட்டிக்கொள்­ளவில்லை. பொதுவில் தமது அடிப்­படை நலன்களிற்கு பாதிப்பு வரும் போது இவ் ஊடக­கங்களில் சுயநலமே தலைநிமிர்ந்து நிற்கின்றது. இதுவே கடந்த கால வரலாறு.
நோர்வேஜிய ஊடகங்­க­­ளைப் பொறுத்தவரை இவ்விடயத்தில் நன்றிக்டன் செலுத்தவதில் ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே இவர்களும் முன்னணி வகிக்கிறார்கள் அதாவது அமொரிக்கா என்ற ஒரு நாடு இராணுவ பலத்துடன் இருந்தால் தாங்களும் இறுதிவரை பாதுகாப்பாக இருக்கலாம் என்பதாகும். ஆனால் இதில் சிறிளவும் உண்மையில்லை. பொரளாதார சமத்துவமும் பங்கீடும் சரியான முறையில் பகிரப்­படாதவரை உலகின் எந்த தேசிய இனமும் நிரந்தர பாதுகாப்புடன் இருக்க முடியாது. இதை ஏனோ பெரும்பாலான ஊடகங்கள் புரிந்துகொள்வதில் அடக்கப்படும் ஒடுக்கப்படும் மக்கள் சார்பாக சில அனுதாபங்களை தெரிவிப்பதன் மூலம் அம்மக்களின் சார்புநிலை கொண்டவர்க­ளாக தங்களைக் காட்டிக் கொள்ள முனையும் இவ் ஊடகங்கள் உண்மையில் தமது எஜமான விசுவாசத்திற்கு சேவகம் செய்ய எப்போதும் தயாராகவே இருக்­கின்றனர். இதற்கு ஒரு நல்ல உதாரணம் நோர்வேஜிய தேசிய தொலைக்காட்சி நிறுவனமான NRK வில் ஈரானியத் திரைப்படமான”smakenavkirsebar”என்ற திரைப்படம்செப்டம்பர் 14ஆம் திகதி காண்பிக்கப்படும் என நீண்ட நாட்களிற்கு முன்பே தெரியப்படுத்தியிருந்தனர்.
ஆனால் அன்று அத்திரைப்படம் காண்பிக்கப்படவில்லை. மாறாக கிரேக்க திரைப்­படமான ”Eviggetenog endag ” என்ற திரைப்­படம் காண்பிக்கப்பட்டது. ஈரானிய திரைப்படமான ”smakenav kirsebar” 1997இல் வெளியாகி பல பரிசில்களைக் குவித்த சிறந்த ஒரு திரைப்படம். 1977இல் Cannes திரைப்­பட விழாவில் தங்கப் பதக்கத்தையும் அதே­யாண்டு யுனெஸ்கோ தங்க விருதையும் பெற்றிருந்தது. படத்தின் இயக்குனர் பிரபல்ய இயக்குனர் Abbas Kairostami.இத்திரைப்படத்தின் உள்ளடக்கம் தற்கொலை மனநிலையுள்ள ஒரு ஈரானிய மனிதன் சுயமாக தற்கொலை செய்து கொள்ள முடியாத சூழலில் அதனை செய்யக்கூடிய ஒரு நபரை தேடி அலைந்து கொண்டிருக்கிறான். தன்னை கொலை செய்பவனிற்கு அதற்கு ஈடாக ஒரு பெருந்தொகை பணத்தையும் தரத் தயாராக இருக்கிறான். தேடித் தேடி அலைந்து கடைசியில் ஒரு ஆப்கானிஸ்தான் நபரை தேடி பிடிக்கிறான். மிகுந்த மத நம்பிக்­கையில் ஒரு வகையில் மதவெறியனென கூறத்தக்க அவ் ஆப்கானிஸ்தான் நபரிடம் தன்னை கொலை செய்யும் பொறுப்பை ஒப்படைக்கிறான். ஆனால் படத்தின் இறுதியில் தனது தற்கொலை முயற்சியை அவ் ஆப்கானிஸ்தான் நபரின் வழிகாட்டலினால் தூக்கியெறிந்துவிட்டு தெளிவான மனநிலையுடன் வாழத் தொடங்குகிறான். இத்திரைப்படம் இயக்குனரின் சமாதானம், சுதந்திரம் மாற்று கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலை போன்றவறறிற்கு கிடைத்த வெற்றியாகும். உண்மையில் NRK தொலைக்காட்சி நிறுவனம் இஸ்லாம் பற்றியும் அதற்கு எதிரான ஒரு பக்க கருத்துக்கு மாற்று சூழலை ஏற்படுத்த விரும்பியிருந்தால் இதைவிட அருமையான வாய்ப்பும் சூழ்நிலையும் கிட்டியருக்க முடியாது ஆனால் அன்றைய பகல் முழுவதும் அடுத்த நாள் செய்தியிலும் ஜோர்ஜ் புஷ்ஷின் சிலுவைப்பயணம் பற்றியும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் புனித யுத்தம் (ஜிகாத்) பற்றிய செய்திகளையுமே முக்கியத்துவப்படுத்தியிருந்தது.
மேற்கூறப்பட்ட சம்பவத்தில் இருந்து நாம் புரிந்து கொள்வது யாதெனில் ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு பக்க செய்தியையே முக்கியத்துவப்­படுத்துகின்றன. பல சமயங்­களில் ஊடககங்களினால் வெளியி­டப்­படும் ”செய்தி வடிவங்கள்” அவற்றின் அப்­பட்­டமான நோக்கத்தை புடம்போட்டு காட்டுவதாக அமைந்து விடுகின்றன. உதாரணமான ஒரு செய்தியை பார்ப்போம். முதலில் பயங்கரவாத செயலினால் பாதிக்கப்பட்ட நியுயோர்க் நகர காட்சிகள் இடம்பெறும் அதை தொடர்ந்து அமெரிக்கா ஜனாதிப­தியின் பேச்சு அவரது அறிக்கைகள் வெளியிடப்படும். இதை தொடர்ந்து ஆப்கான் தலிபான்கள் பற்றியும் அவர்களின் கொடுமையான அடக்கு­முறைகள் பற்றி செய்தி இடம்பெறும். இதை தொடர்ந்து ஐரோப்பாவில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முயற்சிகள் பற்றிய செய்தி இடம்பெறும்.
தொடாந்து ஆப்கானிஸ்தான் வருமையும் மக்களின் அவலமும் இடம் பெறும் இதைத் தொடர்ந்து நியுயோர்க்கில் பாதிக்கப்பட்ட மக்களின் சோகம் கண்ணீருடன் வர்ணிக்கப்படும் அதைத் தொடர்ந்து அமெரிக்க அரசும் ஐரோப்பிய யூனியனும் ஆப்கான் மக்களின் பசி பட்டினியை போக்க பெருந்தொகை பணமும் உணவு பொருட்களும் அனுப்பி வைக்கப்­படும் என்ற செய்தியுடன் தொலை­க்­காட்சி நிறுவனமும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் பற்றிய தனது செய்தியை முடித்துக்கொள்ளும்.
மேற்கூறிய செய்தியின் ஒழுங்கு முறைகளை சீர்தூக்கிப் பார்த்தால் இவ் ஊடகங்கள் எவ்வாறு திட்டமிட்டு ஒரு பக்க சார்பான கருத்துக்களை திணித்து வருவ­தையும் ஒரு இனத்திற்கு அல்லது குறித்த ஒரு மதத்திற்கு எதிரான எதிர்ப்புணர்வை திட்டமிட்டு நடத்தி வருவதையும் உணர்ந்து கொள்ளலாம்.
நியுயோர்க் வாஷிங்டன் சம்பவங்களை முன்னிட்டு வரிந்துகட்டிக்கொண்டு புறப்பட்டுள்ள இவ் ஊடகங்கள் ஏற்கெனவே குறிப்பிட்டது போல் எஜமான விசுவாசம் மட்டுமன்றி பல சமயங்களில் முழுப்­பூசனிக்காயை சோற்றில் மறைப்பதிலும் ஈடுபட்டு வருகின்றன-வந்திருக்கின்றன. இன்றைய தலிபான் அரசக்கும் பின்லாட­னுக்கும் நேரடியான இராணுவ பயிற்சியை அமெரிக்க உளவு ஸ்தாபனமே வழங்கியது. என்பது பற்றியொ முன்னைய சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் இவ் தலிபான்களும் பின்லாடனும் அமெரிக்க உதவியை பெற்றுக்கொண்டே அப்பாவி ஆப்கான் மக்கள் மீதான ஒடுக்குமுறை­யையும் பெண்கள் மீதான அதிதீவர கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டபோது இவ் ஊடகங்கள் எங்கிருந்தன. ஈரான்-ஈராக் யுத்தத்தில் ஈராக்கை தமது செல்லப்பிள்­ளையாக அங்கீகரித்து வாரி வாரி வழங்கியபோது அவ்வுதவிகளை கொண்டே குர்திஸ்தான் மக்களை கொடுரமாக வேட்­டையாடிய சதாம் உசேனைப் பற்றி ஏன் இவ் ஊடகங்கள் அப்போது வாய்திறக்க­வில்லை. மாறாக சதாம் தமது நலன்களிற்கு எதிராக திரும்பியதும் மனித உரிமைமீறல் ஜனநாயகம் பற்றி கூக்குரலிட்ட இவ் ஊட­கங்களின் போலித்தனத்தை எங்கே போய் கூறுவது இவையெல்லலாவற்றையும் விட மிகவும் வேடிக்கையான செயல் நோபல் சமாதான பரிசிற்கு ஜோர்ஜ் புஷ்ஷின் பெயரும் முன்மொழியப்பட்டது தான்.
கடந்த செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி நோர்வேயின் பிரபல்யமான பத்திரிகையான Aftenposten பத்திரிகையில் பிரபல எழுத்தாளர் Gerts Nygardshaug எழுதிய அமெரிக்காவிற்காக ஒளியெற்றாத நாங்கள்” என்ற புத்தகம் பற்றிய விபரம் வெளிவந்துள்ளது. நியுயோர்க் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் சர்வதேச அரங்கில் அமெரிக்கா மீதான வெறுப்பிற்கு காரண­த்தை தேடுகின்றார். CNN தொலைகாட்­சியை தொடாந்து இரு நாட்களாக பார்த்த பின்பே இப்புத்தகத்தை எழுத தோன்றி­யதாக குறிப்பிடும் இவர் பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம் என இவ் ஊடகங்கள் எழுப்பும் குரலொழி­யையிட்டு தான் ஆச்சரியப்படவில்லை என கூறுகின்றார். ஏனெனினல் இவ் ஊடகங்கள் எப்போது பிரச்சினைக்குரிய விடயங்களிற்கு சரியான காரணங்களை தேடும் தேடலில் ஈடுபடுவதில்லை என குறிப்பிடுகின்றார். அமெரிக்க ஜனாதிபதிக்கு நோபல் சமாதான பரிசு வழங்குவது பற்றிய முன்மொழிவு, ஒருவகையில் பிரச்சினைக்குரிய காரணங்களை தேடுவதற்கு விருப்பமில்லாத அல்லது அதன் விளைவுகளுக்கு ஈடுகொ­டுக்க முடியாத நிழலயில் ஏற்பட்டுள்ள பயத்தின் காரணமாகவே நோபல் சமாதான பரிசுக்கு புஷ் பெயர் முன்மொழியப்­பட்டுள்ளதாக இவர் குறிப்பிடுகின்றார்.
இன்றைய நவீன உலகின் ஊடகங்களின் தாக்கம் சமூகத்தின் பல்வேறு மட்டங்க­ளிலும் நிலவுகின்றது. தனிமனிதனிற்கும் சரி அல்லத ஒரு சமுதாய இனத்திற்கும் சரி ஊடகங்கள் இன்றியமையாத பங்களிப்பை நல்குகின்றன. பொதுவில் ஒரு உடகம் தனது செய்தி வெளிப்படுத்தலில் பொதுமக்கள் கருத்துருவாக்கத்திற்கு முன்னின்று உழைக்க வேண்டும். ஆனால் பெரும்பாலான சமயங்­களில் ஊடககங்கள் தாமே பொதுமக்கள் கருத்தை உருவாக்கி விடுகின்றன. பின்னைய நிலையோ பெரும்பாலான ஊடகங்களின் சமுதாய பங்களிப்பாக விளங்குகின்றன. இந்நிலை மாறாதவரை சிலுவை பயணங்­களும் புனித யுத்தமும் தொடரும் ஜோர்ஜ் புஷ் மட்டுமல்ல இஸ்ரேலிய பிரதம் ஏரியல் சரோனிற்கும் நோபல் பரிசு கிட்டும் ஊடகங்களும் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகளாக ஆடிக்கொண்டே இருக்கும்.

சூரியனைத் தேடி

-செல்வி
நிராசைகளால் சூழப்பட்ட எனது ஆன்மா
வாழ்வுக்காகத் துடிக்கிறது.
எங்கு நான் திரும்பினும்
ஆதி மனிதனாய்
சதையைப் பிளந்து இரத்தம் குடிக்கும்
மஞ்சள் பற்களின் அழுக்கு வாய்கள்
எச்சிலை வழிய விட்டபடி
கோர நகங்களும் குரூரக் கண்களுமாய்...
வென்றுவிட்ட எக்களிப்பில்
கும்மாளமடிக்கும்
மேதா விலாசங்கள் ஒன்றும் புதியதல்ல.
நட்சத்திரக் கனவுச் சிந்தனைகளில்
சிம்மாசனங்களைத் தேடி
கால்களை இழந்தாயிற்று
பௌர்ணமிகள் வருவதாய் பலமுறை
ஏமாந்து
சலிப்புத்தான் மிஞ்சியது.
வானிருந்து தேவர்கள் வழங்கும் ஆசிகளை
எண்ணிப் பூரித்த கற்பனைகள்
காலைப் பனியும் உலர்ந்து போன
பின் கருகிய புற்களாயின.
போரடிக்கும் எருதுகளாய், முடிவில்லாது
எத்தனை நாள்களாய் வளைய வருவது...
ஆர்ப்பாட்டமான கொச்சைத் தனத்துள்
அமிழ்ந்து போவது எவ்வாறு...?
பிரகாசமான பகல் பொழுதுகளைக்
காண்பது சுலபமில்லைத்தான்
ஆனாலும்,
மந்தார வானத்துள்ளும்
சூரியனை நான் தேட வேண்டும்.

நான் லிங்கமாலா ஆனேன்


ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை.


வெசாக்தின முழுநிலவு தலையில்
கைவைத்து அழுகிறது
அதன் மூக்குச் சளி
சாரளம் வழியால்
தெறிக்கின்றது
அயல் வீட்டில்
இன்னும் வாடவில்லை
ஐந்நூற்று ஐம்பது
புராணக் கதைகளை
சுருக்கி, நவீனப்படுத்தி
தூரத்தில் அமைத்த
வெசாக் பந்தலில்
இடைக்கிடை
விருது பாடுவது கேட்கின்றது
என்முன்
வெற்றுக் காகிதத் தாள்
கவிதைக்காக
விழித்திருக்கின்றது
சடுதியாக எங்கிருந்தோ
மிதந்து வந்த
இறைச்சித் துண்டமொன்று
காகிதத்தில் வீழ்ந்து
யோனியின் வடிவமைந்தது
கோணேஸ்வரியினுடையது
அம்பாறையிலிருந்து
கொழும்பு வர
இத்தனை நாளா?
எவ்வளவு தூரத்தில்
நம்
கண்களில் கண்ணீர்
குளிர்கின்றது
கண்ணீருக்கு மத்தியில் நான்
அங்குலி மாலாவாக அல்ல
லிங்க மாலா வாகினேன்
எனக்கு விரல்கள்
தேவையில்லை
ஆண்குறிகளே தேவை
வெகு பக்தியாக வலது கரத்தில்
இறைச்சியையும்
மறு கரத்தில் இறுக்கமாக
ஆயுதத்தினையும்
எடுத்துப் புறப்படலானேன்
வழியில் சந்திக்கும்
வீடுகளை தட்டி
சகல சிங்கள ஆண் குறிகளையும்
வெட்டி நூலாகக் கோர்த்து
இறுதியில் எனது
ஆ..........
வேதனையை தாங்கிக் கொண்டு
ஸ்ரீபாத மலையின் கழுத்திற்கு
ஆண்குறிகளை மாலையாய்
சூட்டினேன்
என்னை தடுத்து நிறுத்த போதி
மாதவன் இல்லாததால்
நான் இதனைச் செய்தேன்
சகோதர பாசமற்ற
உணர்வு அற்ற
இனம் ஒன்று எதற்கு
என் முன் வெற்றுக்
காகிதம் அதன் மீது
இரத்தக்கறை
இது ஒரு தமிழ்க் கவிதை
அதனால் சிங்களவருக்கு
இது புரியவில்லை

இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை

- உமா
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ. .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டு புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லையே.
உயிரை உயிர்க்கும் வேள்வியொன்றை இன்று செய்குவோம் . .
விதியே வெல்லும் என்ற சொல்லைத் தூர வீசுவோம்
கதவும் திறந்து கைககள் நீட்டி வாழ்வை நேசிப்போம்
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . .
சிட்டுக் குருவியின் சிறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை.
இசை
பூட்டி பாட்டி காத்த முறைகள் பரணில் துயிலுதே
தூசித்தட்டி பேணும் மரபு அற்பமான
தேகாலில் இடறும் கற்கள் யாவும் துச்சமானதே
வாழ்வின் அர்த்தம் புரியும் வேளை மீள ஜனிப்போம்.
நிஜத்தின் முத்தம் கன்னம் தொட்டு உயிரைத் தரிசிக்கும்
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லை
இசை
விலக்கப்பட்ட கனிகள் யாவும் எட்டிப் பறிப்போம்
சபிக்கப்பட்ட கற்கள் என்று ஒன்றுமில்லையே
கரியும் புகையும் எரித்த மூச்சை மீட்டுக் கொள்வோம்
வியர்வைத் துளியை மதிக்கச் செய்து இருப்பை வெல்லுவோம்
கனவாய்த் தோன்றிய காலம் கையில் நடனமாடுமே
நானும் நீயும், நீயும் நானும் வேறு இல்லையே. .
தீயை எரிக்கும் வலிமை கொண்டோம் புன்னகைசொந்தம்.
காற்றைக் கிழித்து வானம் எட்டும் பாடல் வரியோ . . .
சிட்டுக் குருவியின் இறகைக் கொண்டுப் புவியைச் சுற்றுதே
வாழும் வாழ்க்கை எங்களுக்குச் சொந்தம் சொந்தமே . .
இரவல் சுவாசம் எங்களுக்குத் தேவையில்லையே.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More