Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label 3வது பறை. Show all posts
Showing posts with label 3வது பறை. Show all posts

பறை


தோழமைக்குரியவர்களே!

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களிடம்...

இந்த இடைவெளியினை மறைந்த தோழர் கலைச்செல்வன் ஒரு கோமா நிலையென்றார். இன்று மீண்டும் உயிர்ப்புடன் வெளிவருகிறது என்றால் பறைக்கு பலர் மத்தியிலும்ற இது வரை இருந்த ஆவலும், எதிர்பார்ப்பும் மேலும் அதற்கான தேவையும் தான்.

பறையின் தொடர்ச்சியையும், கிரமத்தையும் பாதித்த அரசியல் நெருக்கடிகள் எமக்கு தகுந்த பாடங்களையும் புகட்டியிருக்கிறது. இனி அதன் தொடர்ச்சிக்கு வாசகர்கள் தமது ஆதரவைத் தருவார்கள் என்று நம்புகிறோம். பறையின் புதிய குழு புது உற்சாகத்துடன் அவரவர் நாடுகளிலும் இருந்து செயற்படுவார்கள். பறை ஒரு சஞ்சிகை என்கிற நிலையினைத் தாண்டி அதற்கப்பாலும் அதனை எடுத்துச் செல்வதே அதன் நோக்கம். நோர்வே சுதந்திர ஊடகம் அமைப்பினை பறையின் முன்னணி அமைப்பாக உருவாக்கிக்கொண்டதும் அந்த நோக்கத்திற்காகவே.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்கிற அடிப்படை விடயத்தில் உறுதியாக பறை இயங்கும். கூடவே பேசாப்பொருளை பேசுபொருளாக்குவதும் பறையின் அடிப்படை உள்ளடக்கமாக இருக்கும்.

மொத்தத்தில் குரலற்றோருக்கான குரலாக (Voice for voiceless) அது இருக்கும்.

மாக்சியம், தேசியம், பெண்ணியம், தலித்தியம், சூழலியல், சர்வதேசியம், புலம்பெயர் என்கிற தலைப்புகளில் அதிக அக்கறை காட்டும் பறை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருதலைபட்ச முறிவு, போரின் ஆரம்பம் மற்றும் இன்றைய உக்கிரம், நோர்வேயின் பின்வாங்கல், மக்களின் அவலம், சர்வதேசத்தின் மௌனம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சி என்பன இன்றைய பேசுபொருளாகிவிட்டிருக்கிறது. அடுத்த இதழ்களில் அவை குறித்த காத்திரமான கட்டுரைகள் இடம்பெறும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இதழில்

இந்த இதழில் சிங்கள சாதியமைப்பு பற்றிய கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது. சிங்கள சாதியமைப்பு குறித்து வெளியாக இருக்கிற நூலின் அத்தியாயங்களே இவ்வாறு பறையில் தனித்தனியாக வெளியாகிறது. முந்தி பிறந்து பிந்தியும் வாழும் தமிழ் சாதியமைப்பு குறித்து நாம் பலவற்றை அறிந்திருந்த போதும், பிந்தி பிறந்து முந்தி இறக்கும் சிங்கள சாதியமைப்பு இங்கு ஆராயப்படுவதன் நோக்கம், அது சிங்கள பௌத்த போரினவாத உருவாக்கத்திலும், வியாபகத்திலும் செலுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்வதற்காகத்தான் கூடவே தமிழ்ச் சூழலில் இது வரை சிங்கள சாதியமைப்பு குறித்த எந்த ஆய்வும் வெளிவந்ததில்லை. மேம்போக்காக சாதியம் குறித்த கட்டுரைகளில் சில வரிகளாக மட்டுமே வந்துபோயிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும் என்கிற ஒல்லாந்திலிருந்து கலையரசனின் கட்டுரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை எளிமையாக அம்பலப்படுத்துகிறது. மார்க்ஸ் கூறியது போல முதலாளித்துவம் தனக்குத் தானே சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதை நமது காலத்தில் காண்கிறோம்.


சுவிஸ்-தில்லை சமீபத்திய பெண் கவிஞைகர்ளில் குறிப்பிடத்தக்கவராக தனது படைப்புகளுக்கூடாக வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கிறார். கலாவின் கவிதைகள் இரண்டில் கோணேஸ்வரிகள் கவிதை ஏற்கெனவே சரிநிகரிலும் வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. தேவை கருதி இங்கு மீண்டும் பிரசுரமாகிறது.

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு எனும் கட்டுரை காத்திரமான கட்டுரை. அக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் சரிநிகரில் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. அக்கட்டுரையின் விரிவான வடிவம் இங்கு சில மேலதிக துணைச் செய்திகளுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். துரதிருஸ்டவசமாக அக்கட்டுரையை வெளியிடும் துணிச்சல் சில சஞ்சிகைகளுக்கு இருக்கவில்லை. காலம் பிந்தி அது பறையில் வெளிவருகிறது. நிலவும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அக்கட்டுரைக்கு என்றும் பெறுமதியிருக்கிறது.

தோழர் பொன் கந்தையா பற்றிய டென்மார்க் - கரவைதாசனின் கட்டுரை நீண்ட காலமாக அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கட்டுரை. பொன் கந்தையா பற்றிய விரிவானதொரு பதிவு இது. அதன் தொடர்ச்சி அடுத்த இதழில் முடியும்.ரெஜிஸ் டேப்ரேயின் பேட்டியை இந்தியாவிலிருந்து தோழர் வளர்மதி மொழிபெயர்த்திருக்கிறார். அதன் அளவு காரணமாக இரண்டு இதழ்களில் அதனை பிரசுரிக்கிறோம். சேகுவேராவுடன் பொலிவியாவில் பணியாற்றிய பிரெஞ்சு மாக்சிய அறிஞரான அவர் தற்கால தேசிய இனப்பிரச்சினையை விளங்கிக்கொள்ள எளிமையான தத்துவார்த்த விளக்கத்தை பேட்டியில் தருகிறார்.குறுகிய காலத்தில் பறையின் அடுத்த இதழையும் வாசகர்களிடம் சேர்த்து விடுவோம்.பறையின் தொடர்ச்சிக்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

-பறை

சிங்கள சாதியமைப்பை விளங்கிக் கொள்ளல்......

என். சரவணன்

இலங்கையில் முரண்பாடுகளின் நிரல்படுத்தலின் போது தமிழ்த் தேசப்போராட்­டமானது முதன்மை பெற்றதன் பின் ஏனைய சமூக முரண்பாடுகள் அதன் பின்னர் நிரற்படுத்தலின் போது பின்னுக்குத் தள்ளப்படவும் செய்தன.

எனவே பெருங்கதையாடலாக தமிழ்த்தேசப் போராட்டத்தோடு மையப்பட்ட கருத்தாடல்கள் அமைந்தன. அவ்வாறு நிரல் ஓழுங்கில் பின்னுக்குத்தள்ளப்பட்டவற்றுள் வர்க்க மற்றும் பெண்களின் பிரச்சி­னைகள், சாதியப் பிரச்சினைகள் என்பனவும் முக்கியமாக அடங்குகின்றன. இந்த நிலையில் சாதியம் குறித்த போதிய ஆய்வுகள், விவாதங்கள் தமிழ்ச் சூழலில் அருகி வருவதையும் இனங்காணலாம்.

சிங்கள சிவில் சமூக கட்டமைப்பில் தமிழ்ச் சமூகம் அளவுக்கு இறுக்கமான சாதிய கட்ட­மைப்பு மோசமாக இல்லாவிட்டாலும் அங்கு பல்வேறு ஆய்வுகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. குறிப்பாக தேர்தற் காலங்களில் சிங்களச் சூழலில் சாதியம் தலைதூக்குவதைப் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவரும். தேர்தல் ஆரவாரங்களின் போது அது அதிகமாக தலைகாட்டத் தொடங்கும்.

சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்த ஆய்வுகள் 15ஆம் நூற்றாண்­டிலேயே காணக்கிடைக்கின்ற போதும் இந்த 20ஆம் நூற்றாண்டில் அதுவும் குறிப்பாக 1971இல் ஏற்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியைத் தொடர்ந்து சாதியம் குறித்த ஆய்வுகள் பல கோணங்களில் பல ஆய்வுகளாக வெளிவரத் தொடங்கின. 71 கிளர்ச்சிக்கு காரணமான அம்சங்களில் சாதிய பிரச்சினை முக்கியமான பாத்திரமாற்றியது என்பதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். 71 கிளர்ச்சியின் பின் அது பற்றிய புலனாய்வுப் பணிகளில் ஈடுபட்ட அரச தரப்­பினர் கைது செய்யப்பட்டவர்கள், மற்றும் கொல்லப்பட்ட இளைஞர்களிடமிருந்து சாதியவாரியாக தரவுகளை திரட்டியதும் அதன் காரணமாகத் தான். இந்தத் தரவுகள் பின்னர் பல ஆய்வுக­ளுக்கு மூல ஆதாரங்களாக அமைந்தன.

71 கிளர்ச்சியில் ஜே.வி.பி.யின் படைத் துறையின் ஸ்தாபகரும், முக்கிய தலைவர்க­ளில் ஒருவரும் இன்று வெளிவந்து கொண்டிருக்கும் மாற்றுப் பத்திரிகைகளில் ஒன்றான ”ராவய”வின் ஆசிரியருமான விக்டர் ஐவன் சிங்கள சாதிய கட்டமைப்பு குறித்து இலங்கையில் பல ஆய்வுகளைச் செய்திருப்பவர். அது மட்டுமன்றி இலங்கையின் அரசியலில் எந்த பிரதான நிகழ்வுகளிலும் அதில் உள்ள சாதியத்தின் பங்களிப்பைப் பற்றி தேடித்துருவுபவர்.

இலங்கையில் நிலவுகின்ற சாதிய அமைப்பு முறையானது சிக்கல் வாய்ந்தது. வடக்கு கிழக்குச் சூழலில் நிலவுகின்ற சாதியம், இந்திய வம்சாவழியினர் மத்தியில் நிலவி வரும் சாதியம், மற்றும் சிங்கள சமூகத்தினர் மத்தியில் நிலவுகின்ற சாதியம் ஆகிய மூன்றுவித தமக்கே உரிய கட்டமைப்­பினை கொண்டிருக்கிறது. இவற்றுக்கிடையே உறவுகளும், முரண்பாடுகளும் உண்டு. இவற்றுக்கென்று தனியான பண்புகள் வடிவங்கள் உண்டு. சாதியப் படிநிலை ஒழுங்கிலும் கூட ஏகப்பட்ட வித்தியாசங்கள் உண்டு.

சாதியம் என்பது பிறப்பால் தீர்மானிக்­கப்­படுவது, அகமணமுறை, சாதிய ரிதியி­லான தொழிற்பிரிவினை, அதிகாரப்­படிநிலையமப்பு, அடையாளப்படுத்தலுக்­கான காரணி ஏன் சில சாதிகளுக்கான தீண்டாமை போன்றன கூட சிங்கள சாதியமைப்பில் காணலாம்.

ஆனால் இந்திய சாதிய கட்டமைப்பு மற்றும் வடகிழக்குக்குள் நிலவுகின்ற சாதிய கட்டமைப்புக்குள் நிலவுகின்ற அதிகாரப் படிநிலை ஒழுங்கு (நிரலொழுங்கு) போல சிங்கள சாதிய கட்டமைப்பில் இல்லை. இங்கு அது மிகவும் சிக்கல் வாய்ந்தது, தவிரவும் சில சாதி­களுக்கு சமமான வேறு சாதிக­ளையும் இதில் காண முடியும்.

பௌத்த சித்தாந்தத்தைப் பொறுத்தளவில் அடிப்படையில் அது சாதியத்துக்கு எதிரான ஒன்று. புத்தரின் போதனைகள் பல சாதிய எதிர்ப்புகளைக் கொண்டவை. ”வசல சூத்திரய” எனும் புத்தரின் போதனையானது சாதியத்தைக் கடுமையாக சாடும் ஒன்று. இலங்கை அரசர்க­ளுக்கும் இந்திய அரசர்க­ளுக்­குமி­டையில் ஏற்பட்ட உறவுகள், ஆக்­கிர­மிப்­­புகள், என்பனவற்றுக்­கூடாகவே இந்திய சாதியம் சிங்கள சமூகத்த­வரிடமும் மெல்ல மெல்ல நிறுவப்பட்டதாக பல்வேறு ஆய்வா­ளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். சிங்கள சமூகத்தில் இச்சாதிய கட்டமைப்புக்கு தோதான படிமங்கள் அதன் கட்டமைப்பில் பிறக்கவில்லை. ஆனால் இந்த சாதிய கட்ட­மைப்பை நிலைநிறுத்துவதை அன்றைய அரசர்­களும் நிலப்பிரபுத்துவ சக்
திகளும் சாதகமாகக் கருதினர். (இலங்கைக்கு இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலா­ளர்களை இறக்குமதி செய்த போது ஆங்கி­லே­யரும் தமது நிர்வாகத்தை செவ்வனே நடாத்த அங்கிருந்த சாதிய கட்டமைப்பை அப்படியே தக்க வைப்பது தமது ஆட்சியதி­கா­ரத்­துக்கு சாதகமானது என கருதியிருந்­ததும் இந்த வகையில் தான்) ஏனெனில் ஏலவே உள்ள அதன் படிநிலை கட்டமைப்­பானது தமது நிர்வாகத்துக்கு சாதகமானது என கருதினர். இலங்கையில் பின் வந்த பல பௌத்த துறவிகள் சாதியத்தையும் சிங்கள பௌத்த கட்டமைப்போடு இணைத்து இலக்­கியங்கள், மற்றும் ஓழுக்கக் கோவைகளை அமைத்துக் கொண்டனர். இவை தான் பின்னர் சாதிய கட்டமைப்புக்கு நிறுவன வடிவம் கொடுப்­பதில் பங்காற்றின. கண்டிய ராச்சிய காலகட்­டத்தின் கீழ் அமைந்த நிலப்பிரபுத்துவ கட்டமைப்பின் கீழ் தான் சிங்கள சாதியம் வலுப்பெற்றதாக ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டுகின்றனர்.

பெண்களுக்கு எதிராகவும், அடிமட்ட தொழில்களைப் புரிந்த விளிம்புநிலையி­னருக்கு எதிராகவும் சாதிய ஒழுக்கக் கோவைகளை ”பௌத்த முலாம் பூசி” அளித்ததில் பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்டவராக கருதப்படும் அநகாரிக்க தர்மபாலவின் பாத்திரம் முக்கியமானது.

நாவலர் சைவ சித்தாந்த ஒழுக்கக் கோவையை நிறுவுகின்ற பணியைச் செய்­கின்ற போது பெண்கள் குறித்தும், ஒடுக்கப்­பட்ட சாதியினருக்கு எதிராகவும் மோசமான ஒழுக்க விதிகளுக்கு ஒப்பானவற்றை அநகாரிக்க தர்மபாலவின் ஒழுக்கக்கோவை­யிலும் காணலாம். (இது குறித்து பின்னர் தனியாக பார்க்கலாம்.)

மலைநாட்டுச் சிங்கள சாதிய கட்ட­மைப்பை விட கரையோரச் சிங்கள சாதியக் கட்டமைப்பு நெகிழ்ச்சியானது. ஏனெனில் காலனித்துவ ஆக்கிரமிப்பின் கீழ் கத்தோ­லிக்க மதத்தின் செல்வாக்கு இதில் குறிப்பான மாற்றங்களை ஏற்படுத்தின. என்றாலும் சாதியத்தின் பண்பை அப்படியே குலைக்­காமல் அதன் வடிவத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. காலனித்துவ சக்திகளின் முதல் ஆக்கிரமிப்பாகிய கரையோரங்களில் இருந்து வந்த கராவ (தமிழில் கரையார் சாதியையொத்த மீனவத் தொழிலைச் சார்ந்தோர்) சாதியானது கத்தோலிக்க மதச் செல்வாக்கின் பின் ”கத்தோலிக்க கராவ”, ”பௌத்த கராவ” என்கிற பிரிவுகளாக தம்மை அடையாளப்­படுத்­துகின்ற போக்கெல்லாம் இருக்கின்றன. சிங்கள சமூகத்தில் பிரதான இடத்தையும், பெரும்பாலானவர்களாகவும், ஆதிக்க சாதியாகவும் உள்ள கொவிகம (விவசாய நிலப்பிரபுத்துவத்தைச் சார்ந்த-தமிழ்ச் சூழலில் வெள்ளாளர் சாதிக்கு ஒப்பானவ­ர்கள்) சாதி மற்றும் கராவ சாதி போன்றவற்­றுக்கு தனியான அமைப்புகளும், அச்சாதிகளுக்கான கொடிகளும் கூட இருந்திருக்கின்றன. (பார்க்க படம்)

இலங்கையில் சிங்கள சாதியத்தைப் பற்றிக் குறிப்பிடும் மிகவும் பழமைவாய்நத மானுடவியல் நூலான ”ஜனவங்சய”வில் 26 சாதிகள் குறிப்பிடப்படுகிறது.(பார்க்க அட்டவணை) மத்தியகால இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படும் சாதிகள் 17ஐ ஜே.டி.லெனரோல் குறிப்பிடுகிறார்.

1. நவந்தன்ன - கலைஞர்கள்

2. கராவ - வேட்டையாடல் மீன்பிடி

3. துராவ - கள் இறக்குவோர்

4. ரதா - உயர்சாதியினருக்கு உடைதுவைப்போர்

5. ஹன்னாலி - நெசவு செய்வோர்

6. படஹெல - மட்பாண்டங்கள் செய்வோர்

7. அம்பெட்ட - முடிதிரத்துவோர்

8. ஹாலி - நெசவு, ஐரோப்பியர் காலத்தில் கருவா தொழில்

9. ஹக்குறு - கருப்பட்டி உற்பத்தி

10. ஹணு - சுண்ணாம்பு

11. பண்ண - புல் வெட்டுவோர்

12 பெரவா - தாளவாத்தியம் இசைப்போர்

13 பது - பள்ளக்கு தூக்குவோர்

14. கஹல - கொலைத் தண்டனை நிறைவேற்றுவோர், சுத்திகரிப்போர்

15. ஒலி, பலி - சிரட்டை எரிப்பு, ”குறைந்த” சாதியினரின் உடை துவைப்பு

16. ஹின்ன - மாவு சளிப்போர்

17. கின்னர - பாய் பின்னுவோர்

பேராசிரியர் நந்ததேவ விஜேசேகர எழுதிய ”இலங்கை மக்கள்” எனும் நூலில் 43 சாதிகளின் பட்டியலைக் குறிப்பிடுகிறார்.

1. அஹிகுந்தித்த 2. எம்பெட்ட 3. ஒலி 4. கராவ

5. காப்பிரி 6. கஹல 7. ஹாட் 8. கெத்தர

9. கொய்கம 10. ஜா 11. துரய் 12. துராவ

13. நவந்தன்ன 14 நெக்கத்தி 15.பது 16. பன்ன

17. பனிக்கி 18. பட்டி 19. பரவறு 20. பொரோகார

21. பத்கம 22. படஹெல 23. பண்டார 24. பெரவா

25. பெத்தே 26. பாரத்த 27. மரக்கல 28. மிகோ

29. முக்கரு 30. யுரேசியானு 31. ரதா 32. ரொடி

33. லன்சி 34. லோகரு 35. வக்கி 36. வன்னி

37. வக்கும்புர 38. சலாகம 39. ஹக்குரு 40. ஹலாகம

41. ஹின்ன 42. ஹ}ன்னா 43. ஹ}ளவாலி

ரொபர்ட் நொக்ஸ் 12 சாதிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

1. ஹந்துரு 2. ஆச்சாரி-விஸ்வ 3. துருவே எத்தோ 4. பனிக்கியோ

5. கும்பல்லு 6. ரதவ் 7. ஹங்கரவமு 8. பதுவோ

9. ரெதிவியன்னோ 10. கிலியோ 11. கின்னரு 12. ரொடியோ

எவ்வாறிருந்த போதும் சாதிகளின் அளவு மேலும் கீழும் இருந்தாலும் சகலர் முன் வைத்ததிலும் வித்தியாசம் இல்லை. பல சிறிய சாதிகள் வழக்கொழிந்து போய்விட்டன. (”சாதியம், வர்க்கம், மற்றும் மாறிவரும் இலங்கைச் சமூகம்” எனும் காலிங்க டியுடர் சில்வா வின் கருத்தின்படி இவ்வாறு வழக்கொழிந்துபோன சாதியத்தின் எச்சமானது இப்போது 14 இல் தான் இருக்கிறது என்கிறார். அட்டவணையைப் பார்க்க) அவை ஏனைய சாதியினரோடு காலப்போக்கில் கலந்து விட்டன. சிங்கள சாதியமைப்பில் இறுக்கமான சாதிய படிநிலையொழுங்கு இல்லாததும் சில சம அந்தஸ்தான சாதிகள் இருந்ததும் இதற்கான காரணமாக இருக்கலாம்.


என்றாலும் இன்றும் எஞ்சியிருக்கிற வர்க்க நிலையில் பலம்வாய்ந்த ஆதிக்க சாதிகள் பல இன்றும் இலங்கையின் வர்க்க, அரசியல், நிலைகளில் தமது அதிகாரத்துவத்­தைத் தக்க வைத்திருக்கின்றன. இலங்கையின் அரசியலை தீர்மானிக்கின்ற சக்திகளாக நிலப்பிரபுத்துவ பின்னணியைக் கொண்ட, அதேவேளை இன்று பெரும்பாலும் தரகுமுதலாளித்துவ சக்திகளாக தங்களை நிறுவியிருக்கிற கொவிகம மற்றும் கராவ ஆகிய சாதியினர் தான் அதிகாரத்துவ நிலையில் முக்கியத்துவ இடத்தை வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று கீழ் மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் அகமணமுறை உடைந்து கலப்பை நோக்கிச் செல்வது அதிகரிப்பதனூடாக அடித்தட்டு மக்களிடையே சாதியம் ஓரளவு தகர்ந்து வந்தாலும் மத்தியதரவர்க்க மற்றும் உயர் மத்தியதரவர்க்க மேட்டுக்குடியினரிடம் இந்த அகமணமுறை பேணப்பட்டே வருகிறது. சொத்து வேறு சாதியினருக்கு பிரிந்து செல்லாமலிருக்கவும் அது ஓரிடைத்தைநோக்கி (தம்மை) மையப்படுத்­துவதற்காகவும், இந்த சாதிய அகமணை முறை இறுக்கமாக இந்த வர்க்கத்தினடையே பேணப்படுகிறதெனலாம்.

இலங்கையில் திறந்த பொருளாதாரக் கொள்கையைத் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்க­ளும் அடித்தட்டு மக்களிடையே சாதிய கலப்புகளை ஏற்படுத்திவிட்டாலும், மறுபுறம் ஆதிக்க சாதிகள் கேந்திர தளங்களில் தம்மை நிறுவனப்படுத்தவும் செய்திருக்­கின்றன. அதனை இலங்கையில் சகல சாதிய கட்டமைப்புக்குள்ளும் பார்க்கலாம்.

வர்க்க மற்றும் ஏனைய சமூக அந்­தஸ்த்து சார்ந்த விடயங்களில் ஒன்றி­லிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கான வாய்ப்புகள் ஓரளவு இருக்கின்ற போதும் சாதியமானது பிறப்பால் தீர்மானிக்­கப்படுவது என்பது முக்கிய பண்பாகும்.

இலங்கையின் அரசியலில் அன்று இலங்கை தேசிய காங்கிரஸ் தொடக்கம் அதன் பின் வந்த சகல அரசியல் கட்சிகள், அரசியல் நிலைமைகள் அனைத்திலும் சாதியத்தின் செல்வாக்கு இருந்ததை பலர் அறியார். தோற்றப்பாடாக எட்டப்பட்ட நிகழ்வுகள் இந்த உண்மைகளை துலங்க வைக்க வாய்ப்பளிக்கவில்லை. இது தமிழரசியலிலும் சரி சிங்கள அரசிய­லிலும் சாரிபொருந்தும். அதே வேளை இவ்வாறு சாதியம் செல்வாக்கு அந்தந்த சாதிய (சிங்கள, தமிழ்) கட்டமைப்புகளுக்குள் தான் இயங்கின என்றில்லை.
இனங்களுக்கிடையி­லான உறவுகள் முரண்­பாடுகள் என்பனவற்றைத் தீர்மானிப்பதிலும் இந்த சாதியம் பரஸ்பரம் தலையீடு செய்தி­ருக்கிறது. இவை குறித்த ஆய்வுகள் மேற்கொள்­ளப்பட வேண்டும். உதிரிகளாக ஆங்காங்கு இவ்வா­றானவற்றுக்கு தகவல்க­ளாக பல ஆதாரங்கள் கிடைக்கப்பெறுகின்ற போதும் இந்த நோக்கில் அவ்வகை ஆய்வுகள் முறையாக செய்யப்பட்­டதில்லை. அதுவும் முக்கியமாக இலங்கையில் தற்போது நிலவும் தமிழ்த் தேசப்போராட்­டத்தைத் தீர்மானிப்பதில் இவற்றின் பாத்திரம் கண்டறிவது இன்றைய நிலையில் அவசியமானதும் கூட.

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும்

கலையரசன் ”அமெரிக்கா ஒரு கனவு”. அதிக விலை கொடுக்கும் முதலாளிக்கு தனது உழைப்பை-சேவையை விற்க தயாராகும் பல்லாயிரக்கணக்கான படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கும், தொழில்நுட்ப அறிவற்ற சாதாரண உழைப்பாளிக்கும் உள்ள கனவு. போதுமென்ற மனதை கொண்­டிருக்க சொல்லும் பழமொழியை தற்போது யாரும் நம்புவதில்லை. பேராசை, பேரவா, சுயநலம், இவ்வாறு எவை­யெல்­லாம் தப்பென்று நீதி நூல்கள் சொல்கின்ற­னவோ, அவையெல்லாம் அமெரிக்க கனவின் அடிப்படைத் தகுதிகள். ”அமெரிக்க சுதந்திரம்”சாமானியர்களும் தினசரி உச்சரிக்கும் மந்திரம். ஆனால் அவர்களது சுதந்திரம் கடனுக்குள் கட்டுப்பட்டுக் கிடக்கிறது என்பதை அமெரிக்க மக்கள் அண்மையில் தான் அறிந்து கொண்டார்கள். சுதந்திரம் இருந்தது! முதலாளிகளும், பெரிய நிறுவனங்களும், நிர்வாகிகளும், எல்லையற்ற சுதந்திரம் அனுபவித்தனர். அதிகம் சம்பாதித்தால், வரி குறையும். தாராளமாக செலவு பண்ண சுதந்திரம். லாபம் என்ற பெயரில் பெருகும் பணத்திற்கு எல்லை வகுக்கப்­படவில்லை. அந்தப்பணத்தையும் எப்படியும் சேர்க்கலாம். சட்டப்படி திருடுவதற்கு கணக்காளர் வழிசொல்வார் பங்குச் சந்தையில் சூதாட முகவர்கள் இருக்கி­றார்கள். பொய், புரட்டு, மோசடி, இவையில்லாமல் வியாபாரம் நடக்காது. இதையெல்லாம் யாரும் தட்டிக்கேட்க முடியாது. அரசாங்கம் தலையிட முடியாது. ஏனெனில் அது சந்தையின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும். அமெரிக்கர்கள் ”சுதந்திரம்” என்ற சொல்லை சரியான அர்த்தத்துடன் தான் பயன்படுத்துகின்றனரர் அந்நியர்கள் தான் அது எதோ தனிமனித சுதந்திரம் சார;ந்த விடயம் என்று நம்பி ஏமாந்து விட்டார்கள். பொருளாதாரம் சாமானிய மக்களுக்கு எளிதில் புரியாத ஒன்று. இருப்பினும் அனை­வரும் இன்று சந்தைப் பொருளாதார விதிக­ளுக்கு அமைய பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். சந்தை என்பது இயற்கைப் பொருளாதாரத்தில் ஒரு பகுதி மட்டும் தான். ஆனால் லிபரலிச, (இன்னும் தீவிரமான) நியோ லிபரலிச சித்தாந்தங்கள் தான் சந்தையை பொருளாதார சக்கரத்தின் அச்சாணி ஆக்கின. பங்குச் சந்தை தேசிய பொருளாதாரத்தை தலைமை தாங்கும் வண்ணம், அனைத்தும் தனியார்மயமாக்கப்­பட்டன. அன்று பூரண தனியார்மயமாக்கலை ஆதரித்தவர்கள், இன்று நெருக்கடி காலத்தில் அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்கின்றனர். இப்போது தான் அரசு என்ற ஸ்தாபனத்­தின் சுயரூபம் வெளித்தெரிகின்றது. அதன் அடிப்படை நோக்கம், அதாவது பலமான முதலாளிகளிடமிருந்து, பலவீனமான மக்களை பாதுகாப்பது என்ற வாக்குறுதி, இன்று காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவவசதியின்றி பிணியால் வாடிக்கொண்டிருக்கையில், 30 மில்லியன் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து கொண்டிருக்கையில், அவர்களுக்காக ஒரு சதமும் செலவழிக்காத அரசு, வங்கிகள் திவாலாகாமல் பாதுகாக்க பில்லியன் டாலரர்களை தயங்காமல் அள்ளிக்கொடுத்தது. ஐரோப்­­பிய அரசுகளும் மக்களின் வரிப் பணத்தை அள்ளிக்கொடுத்து சந்தைப் பொருளாதாரம் அழிய விடாமல் காப்பாற்றின. தமது உதாரணத்தை பிற நாட்டு அரசாங்கங்­களும் பின்பற்ற வேண்டும் என்றனர். அனைவரது கவலையும் வெகுவாக குறைந்துள்ள பங்குகளின் பெறுமதியை உயர்த்தவேண்டும் என்பதே. ஒரு நிறுவனத்தின் ஐந்து சதவீதத்திற்கு அதிகமான பங்குகளை அரசாங்கம் வாங்க கூடாது என்றும், அப்படி ஒரு நிலை வந்தால் பாராளுமன்ற அனுமதி வேண்டும் என்று சில நாடுகளில் சட்டம் இருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் காத்திராமல், ஒரே இரவுக்குள் முடிவுகள் எடுக்கப்­பட்டன. தற்போது அரசாங்கம் பங்குகளை வாங்கி, மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குவதன் மூலம், நிறுவனத்தை நன்றாக இயங்க வைத்து விட்டு, பிறகு பழைய நிலைக்கு கொண்டு வருவோம் என்று பகிரங்கமாகவே சொல்கின்றனர். சுருக்கமாக சொன்னால், முதலாளிகள், அவர்களது மூலதனம் காப்பாற்றப்பட வேண்டும். நிதி நெருக்கடியை இடதுசாரிகள் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியாகப் பார்த்தனர். அது தவறு. முதலாளித்துவம்(அதிலும் குறிப்பாக வங்கித்துறை, சந்தை என்பன) அடி வாங்கியுள்ளது. அரசுகள் தலையிட்டு காப்பாற்றி விட்டன. அதே நேரம், இது தற்காலிக பின்னடைவு மட்டுமே, மீண்டும் எல்லாம் பழையபடி வந்து விடும் என்று வலதுசாரிகள் கூறுகின்றனர். அதுவும் தவறு. முதலாளித்துவ பொருளாதாரம் குறிப்பிட்ட காலம் வளருவதும், பின்னர் அளவுகடந்த உற்பத்தி காரணமாக நெருக்கடிக்குள் மாட்டிக் கொள்வதும், பின்னர; அதிலிருந்து மீள்வதும் அடிக்கடி நடப்பது தான். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியானது, பொது மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி, இமாலய பலத்துடன் இருந்த வங்கிகளை பாதித்திருப்பதால், அதன் விளைவு பல இடங்களிலும் எதிரொலிக்கும். இந்த நெருக்கடியால் அமெரிக்க வல்லரசு தகரும் என்ற எண்ணமும் தவறானது. ஜெர்மனியில் அதிகம் விற்பனையாகும் வலதுசாரி சஞ்சிகையான ”டெர் ஸ்பீகல்” கூட அப்படி ஒரு கருத்தை முன்வைத்தது. உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் ஆலோச­னைகளை, மாதிரிகளை, கொள்கைகளை இனிமேல் யாரும் பின்பற்றப்போவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்கா தான் தற்போதும் உலகில் மிகப்பெரிய இராணுவ வல்லரசு என்ற நிலையில் மாற்றமெதுவும் ஏற்படவில்லை. எதிர்காலத்தில், அதுவும் பல வருடங்களுக்குப் பிறகு, ரஷ்யா அல்லது சீனா அமெரிக்காவை விட இராணுவ வளர்ச்சி கண்டால் ஒரு வேளை நிலைமை மாறலாம். அமெரிக்கா தனது பாதுகாப்பு படைகளுக்கு, அதிக பட்ஜெட் ஒதுக்கி வருகின்றது. பல நிறுவனங்கள் இராணுவத்துக்கு தேவையான ஆயுத தளபாடங்களையும், பிற கருவிக­ளையும் உற்பத்தி செய்து வருகின்றன. அவற்றில் பெரும்பகுதியை அமெரிக்க அரசாங்கம் வாங்குவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது. மேலும் சினிமா, இசை, போன்ற கலாச்சார ஏற்றுமதியிலும் அமெரிக்கா முன்னணி வகிக்கின்றது. சமீபத்திய நிதி நெருக்கடியானது, இத்தகைய நிறுவனங்களில் இதுவரை முதலிட்ட வங்கிகளை ஓரங்கட்டி விட்டு, அரசே எடுத்து நடத்தும் நிலையை உருவாக்கலாம். அப்படியானால் அது ஒரு பாசிச சர்வாதிகார ஆட்சியை கூட உருவாக்கலாம். முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களுக்கு நிரந்தர கொள்கை எதுவும் இல்லை. லிபரலிசம், நியோ லிபரிலிசம், டுயளைளநண குயசைந முதலாளித்துவம், சமூக ஜனநாயகம், அல்லது பாசிசம் இவ்வாறு எதை அடிப்ப­டையாக வைத்தாவது முதலாளித்துவத்தை, அல்லது அதனால் பலனடையும் தமது இருப்பை காப்பாற்றவே விரும்புவர். 1930ம் ஆண்டு ஏற்பட்ட மோசமான நிதி நெருக்க­டியில் இருந்து அமெரிக்கா மீண்டு விட்டது தானே, என்று முதலாளித்துவத்திற்காக வாதாடுபவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்கலாம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, அமெரிக்கா, ஜெர்மனிக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடனை உடனே திருப்பி செலுத்துமாறு கோரியதும், அதனால் ஜெர்மனியின் பொருளாதாரம் வீழ்ச்சிய­டைந்து, நாசிசத்தின் எழுச்சிக்கும், ஹிட்லர் அதிகாரத்திற்கு வர வழிவகுத்ததும், அதற்குப் பின்னர் ஏற்பட்ட வல்லரசுப் போரில்(2 வது உலகயுத்தம்) அமெரிக்காவும் குதித்து ஆயுதங்கள் விற்று தனது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டதும் வரலாறு. சரித்திரம் மீண்டும் திரும்பாது என்பது நிச்சயமில்லை. நிதி நெருக்கடியின் விளைவுகள் அமெரிக்காவுக்கும், ஐரோப்பாவுக்கும் ”பொருளாதார தேக்கம்” என்ற பின்னடைவை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி. அதன்படி இயற்கையான பொருளாதாரம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் செலவைக் குறைத்தல் என்ற பெயரில் நிறுவனங்கள் அதிகமான தொழிலாளரை வேலையை விட்டு நீக்குதல், ஒரு பக்கத்தில் உதவிப் பணத்தில் அல்லது வறுமையில் வாழும் மக்களை உருவாக்கும். மக்கள் தமது பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தி, வீட்டிலே சேமிக்க தொடங்குவர். நமது நாட்டு மக்களுக்கு (அமெரிக்க-ஐரோப்பிய) ”சீரழிவு கலாச்சாரம்” பற்றிய புரிதல் மிகக் குறைவு. உண்மையில் இந்த ”சீரழிவு கலாச்சாரம்” தான் இந்த நாடுகளை பணக்கார நாடுகளாக தொடர்ந்து வைத்திருந்த ஊக்கியாகும். அதாவது மக்கள் பணத்தை தாராளமாக செலவழிக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளோடு நிறுத்திக் கொள்ளாது ஆடம்பர தேவைகளுக்கும் செலவழிக்க வேண்டும். அப்போது தான் புதிய புதிய (ஆடம்பர பண்டங்கள் உற்பத்தி செய்யும்) நிறுவனங்கள் உருவாவதுடன், அதனால் தேசிய பொருளாதாரமும் வளர்ச்சியடையும். சாமானியருக்கும் புரியும்படி சொன்னால், ”குடி” மக்கள் அதிகளவில் மதுபான சாலைகளை நாடினால், அந்த துறை வளர்ச்சியடைவதுடன், அரசாங்கத்திற்கும் நிறைய வரி கிடைக்கும். ”பணம் ஓடித்திரிய வேண்டும்” என்பது சந்தையின் பொன்மொழி. இதற்கு மாறாக இலங்கையிலும், இந்தியாவி­லும் வாழும் ஓரளவேனும் வசதிபடைத்த மக்கள், பணத்தை தங்க நகைகளாக வீட்டுக்குள்ளேயே முடக்கி வைப்பதால், ஏற்கனவே அங்கே பொருளாதார தேக்கம் நிலவுகின்றது. உலகமயமாக்கல் அமெரிக்க பாணி கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்பும் பொருளாதார திட்டத்தை நடைமுறைப்படுத்­தியது. அதற்கு இந்தியா போன்ற ”பழமை, பாரம்பரியம்” மிக்க நாடு கூட தப்பவில்லை. காரணம், தனி இனம் போல காட்சியளிக்கும், அந்நாட்டின் ஆளும் வர்க்கம். அன்று தமது பிள்ளைகளை டாக்டர்களாக, எஞ்சினியர்க­ளாக இங்கிலாந்திற்கும், அமெரிக்காவுக்கும் ஏற்றுமதி செய்து பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டினார்கள். அண்மைக் காலத்தில் கணிப்பொறி வல்லுனர்களை அனுப்பி அந்த தேவையை நிறைவேற்றிக் கொண்டனரர். இவ்வாறு ஒருபக்கம் ”தங்கப்பசி” கொண்ட இந்தியர;கள் உலகிலேயே அதிகளவு தங்கத்தை நுகர்வோராக இருப்பதாலும், மறுபக்கம் NRI என்றழைக்கப்படும் வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பும் டாலர்கள் அரச கஜானாவை நிறைப்பதாலும், உலக பொருளாதாரம் இந்தியாவை நெருக்கமாக கட்டிப் போட்டுள்ளது. இந்த நிலைமை, 90 களுக்கு பின்னர; ஏற்பட்ட சந்தைப் பொருளாதார சீர்திருத்தால் ஏற்படவில்லை. சுதந்திரமடைந்து நேருவின் சோஷலிசம் இருந்த காலத்தில் கூட எதோ ஒருவகையில் நிதி நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும். விரிவாக சொன்னால், தங்கமும், டாலரும் உலக வர்த்தகத்திற்கு இன்றியமையாதவை. இவ்விரண்டும் கையிருப்பில் குறைந்தால், அல்லது உலக சந்தையில் பெறுமதி குறைந்தால் அந்த நாடு பெரும் நெருக்கடியை எதிரர்நோக்கும். உலகின் அரைவாசி நாடுகளை தனது காலனிகளாக வைத்திருந்த இங்கிலாந்து தான் தங்கத்தை உலக வர்த்தகத்திற்கான பொது நாணயமாக கொண்டு வந்தது. (இங்கிலாந்து நாணயமான பவுன் என்ற பெயர் அதன் காரணமாக வந்தது தான்) அதன் காரணமாக எல்லா நாட்டு நாணயமும் தங்கத்துடன் ஒப்பிட்டு பெறுமதி பார்க்கப்பட்டது. 2 ம் உலகயுத்தத்தின் பிறகு அமெரிக்கா உலக ஏகபோக வல்லரசாகியதால், டாலரை சர்வதேச வர்த்தகத்திற்கான பொது நாணயமாக்கியத்­துடன், டாலரின் பெறுமதியை தங்கத்துடன் ஒப்பிடுவதில் இருந்து கழற்றி விட்டது. இதனால் அனைத்து உலக நாடுகளும், (சீனா உட்பட) தமது திறைசேரியில் டாலர்களை நிரப்பி வைத்துள்ளன. அனேகமாக அமெரிக்கா தேசத்தில் பாவனையில் உள்ள டாலர் அளவேனும், வெளிநாடுகளில் புழக்கத்தில் உள்ளதால், அதேயளவு டாலரர் தாள்களை அச்சடித்து உள்நாட்டில் புழக்கத்திற்கு விட்டுள்ளது. தற்போது எழுந்துள்ள நிதி நெருக்கடி காரணமாக உலக நாடுகள் தமது டாலர்களை விற்க வேண்டிய நிலை வரலாம். ஆனால் அதனது கேள்வி குறைந்து, பெருமளவு டாலர்கள் அமெரிக்காவுக்கே திரும்புமாயின், அமெரிக்காவில் இன்னொரு நிதி நெருக்கடி­யும், பொருளாதார வீழ்ச்சியும் உருவாகும். ஏற்கனவே எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் மத்தியில் ஈரானும், வெனிசு­வேலாவும் சர்வதேச வர்த்தகத்தில் டாலருக்கு பதிலாக யூரோவை கொண்டு வரவிருந்த முயற்சி தோல்வியடைந்தது. அமெரிக்காவின் இராணுவ மேலாதிக்கம் தான் அப்படி ஒரு முயற்சியை தடுத்த சக்தி. அமெரிக்காவின் செல்வத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து வரும் முதலீடுகளாலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 2 ம் உலக யுத்ததிற்கு பின்னர், அழிவில் இருந்து ஐரோப்பாவை மீட்டு பணக்கார நாடுகளாக மாற்றிய அமெரிக்கா, அதற்கு பிரதிபல­னாக அமெரிக்காவில் முதலீடு செய்ய தூண்டியது. அதே போன்றே எண்ணை ஏற்றுமதியால் பெரும்பணம் ஈட்டிய வளைகுடா ஷேக்கு­களும், தமது லாபத்தில் பெரும்பகுதியை அமெரிக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இதனா­லேயே அந்த நாடுகளும் அமெரிக்க நிதி நெருக்கடிக்குள் சிக்கி பாதிக்கப்பட்டன. இன்றைய நெருக்கடியில் இருந்து தப்பிக்க, அண்மைக்காலமாக பொருளாதார வளர்ச்சி கண்ட சீனா, இந்தியா போன்ற நாடுகளை வந்து முதலீடு செய்யுமாறு அமெரிக்கா கேட்டு வருகின்றது. இந்தியா அதனை செய்யும் சாத்தியம் உண்டு. அணுசக்தி உடன்படிக்கை மூலம் அமெரிக்கா, இந்தியாவை தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் சீனா தயக்கம் காட்டுகின்றது. அது தனது பொருளாதார பழுதுகளை திருத்திக் கொள்வதிலும், உள்நாட்டில் முதலீடு செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது. அப்படியே அமெரிக்காவில் முதலீடு செய்ய முன்வந்தாலும், நிலைமையை பயன்படுத்தி, அமெரிக்க நிறுவனங்களை வாங்க விரும்பலாம். அதனை (நாட்டை விற்பதற்கு சமம் என்பதால்) அமெரிக்கா விரும்பப் போவதில்லை. மேலும் இனிமேல் (சீனாவின் ஒரு பகுதியான) ஹோங்ஹோங் தான் இனிமேல் (நியூயோர்க் போல) சர்வதேச வர்த்தக மையமாக வரப்போவதாக வதந்திகள் அடிபடுகின்றன. இன்று காணும் மாற்றங்கள் யாவும் சீனா உலக வல்லரசாக மேலாண்மை பெறும் சாத்தியக்கூறுகள் உள்ளதை கோடிட்டுக் காட்டுகின்றன. அமெரிக்க-இந்தியா அணு சக்தி ஒப்பந்தம் சீனாவுக்கு எதிரான எதிர்கால அச்சுறுத்தலுமாகும். இந்த ஒப்பந்தமானது, இந்தியா முற்றுமுழுதாக அமெரிக்க முகாமுக்குள் போய்விட்டதை காட்டுகின்றது. அதே நேரம், சீனா இலங்கையில் காலூன்றி வருகின்றது. இவ்வளவு காலமும், இலங்கைக்கு அதிக நிதியுதவி வழங்கி வந்த ஜப்பானை பின்னுக்கு தள்ளி விட்டது சீனா. இலங்கையின் தென்பகுதியில், எதிர்காலத்தில் வரப்போகும்(அல்லது அப்படி ஊகிக்கப்படும்) சீன கடற்படை முகாமானது, இந்து சமுத்திர ஆதிக்கத்திற்கான ஏற்பாடு ஆகும். இலங்கை சீனாவின் ஆதிக்கத்திற்கும் முழுவதுமாக போக முன்னர், இந்தியா தனது முதலீடுகளை பெருக்குவதன் மூலம் தடுக்கப்பார்க்கின்றது. அமெரிக்கா இராணுவ உதவி செய்வதன் மூலம், ஈரானின் தலையீட்டை தடுக்கப் பார்க்கின்றது. இன்றைய நிதி நெருக்கடி இந்த வல்லரசுப் போட்டியை தீவிரமாக்கலாம், அல்லது விரைவு படுத்தலாம். இலங்கையின் பொருளாதாரத்தில் அமெரிக்க அல்லது ஐரோப்பிய முதலீடுகள் மிகக் குறைவு. ஐரோப்பாவில் இருந்து வரும் நிதியில் பெருமளவு பகுதி, ”NGO பொருளாதாரத்திற்கே” செலவிடப்படுகின்றது. வறுமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம் போன்ற திட்டங்களை ஐரோப்பிய பணத்தில் நடைமுறைப்படுத்தும் அரசு சாரா நிறுவனங்கள் இனிமேல் இயங்க முடியாத நிலை வரலாம். அதற்கு காரணம், நிதி நெருக்­கடிக்குள் சிக்கியுள்ள தமது வங்கிகளை காப்பாற்ற பெரும்பணம் செலவிடும் ஐரோப்­பிய அரசுகள், அபிவிருந்தியடையும் நாடுகளுக்கு இதுவரை வழங்கி வந்த நிதியை குறைக்கவிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, சர்வதேச சந்தையில் ஏறிய உணவுப் பொருட்களின் விலை இறங்கவில்லை. உள்நாட்டில் கூட உணவுப்பொருட்களை வாங்குவதும் விற்பதும் (லாபத்தை மட்டுமே முக்கியமாக கருதும் வியாபாரிகளின்) கையில் இருப்பதால், மக்கள் பட்டினியால் செத்தாலும் விலை குறையப் போவதில்லை. இது போன்ற காரணங்களால் இலங்கையிலும், இந்தியாவி­லும் லட்சக்கணக்கான மக்கள், வறுமைக்­குள்ளும், இன்னும் மோசமாக பட்டினிச் சாவுக்கும் தள்ளப்படுவரர் இவற்றைப் பற்றி உலக அக்கறை மிக மிக குறைவாக இருக்கும். இந்த நெருக்கடியான காலத்தில், பணமிருப்பவர;கள் தமது நலன்களை மட்டுமே பார்க்கப்போகின்றனர். இதைப்பற்றி கேட்கபோனால், ”தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்” என்று தத்துவ முத்துகள் உதிரப்போகின்றன. உலக உணவுத்திட்டமும், ஐக்கிய நாடுகள் சபையும் இது குறித்து ஏற்கனவே எச்சரித்து விட்டன.

வரி மங்குகிற நினைவு

தில்லை



பொட்டுப் பொட்டாகத்
தாடைவிளிம்பில் தொங்கிற்று.......
ஆற்றுக்கு அந்தப்பக்கம் நிற்கிற
வாழ்வின் புலம்பல்.


அரசல் புரசலாக
ஊர்க்காதில் விழுந்தும் விழாததுமாக
காற்றின் இறுக்கம் தளர்ந்திருந்தது.
வயல் வெளிக்கு நடுவில் போகும்
தென்னைகள் ஓரமிட்டசாலையில்
தலை கிடந்த அலங்கோலத்தில்
விரல்கள் பதிந்த கன்னநோவில்
நுரையீரல்களும்
விலா எலும்புகளும்
நொறுங்கிய மூச்சடைப்பில்
ஒரு குரல்
நடுங்கி நடுங்கி வீழ்ந்தது.


அவர்கள் உட்கார்திருந்த தரையை இழுத்து
அந்தரத்தில் தொங்கவிட்டார்கள்.
குளத்தையும் ஏரியையும் தூர்த்துக்
குப்பை கொட்டினார்கள்.
குப்பைகள் எரிந்து
கட்டைக்கரியும் புகையுமாக
நெடில் வீசிற்று.


அதனூடு அவர்கள் வாழ்க்கையின் வாடை வீசிற்று.
இன்னும் இன்னும்.........
இரத்தக்குட்டைகளில் மயிர் உறைந்து
எனக்கு நாக்குநுனியில் வந்துவிட்டது
மறுகணம் என் தாகம் அடங்கிச் சாம்பலாயிற்று.


கறுப்பு நிறமும் எதிர் காலமும்!

கல்பனா


ஈழத் தமிழ் சமூகத்தில் சித்தாந்த ரிதியாக மேலாதிக்கம் செய்யும் பிரிவாகவும் ஒட்டு மொத்த ஈழத் தமிழ் சமூகத்தையும் பிரதிநிதித்துவம் செய்யும் தரப்பாகவும் இன்று யாழ் சைவ வேளாள ஆணாதிக்க சுரண்டும் வர்க்கப் பிரிவு திகழ்கிறது. இந்தப் பிரிவினரின் சமூகப் பார்வைகளும் சமூக விழுமியங்களுமே ஒட்டு மொத்த ஈழத் தமிழ் சமூகத்தினதும் சமூக விழுமியங்களாக்கப்­பட்டுள்ளன. இந்தத் தரப்பினால் ஒடுக்கப்படும், அதனால் நேரடியாக நசுக்கப்பட்டு வரும் விளிம்பு நிலைப் பிரிவின­ரும் கூட குறிப்பாக-அடக்கப்பட்ட சாதிப் பிரிவினர், பெண்கள், யாழ்-சைவ-வேளாள-ஆணாதிக்கப்பிரிவின் சித்தாந்தத்திற்குப் பலியாகி அதற்கூடாகவே உலகைப் பார்க்க பழகிவிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆதிக்கப் பிற்போக்குப் பிரிவினால் எது சமூகத்திற்கு ஏற்புடையதாகக் காட்டப்படுகிறதோ அதைத் தகர்ப்பதும், அப்பிரிவினால் எவையெல்லாம் ஒதுக்கப்படுகி­ன்றனவோ அவற்றையெல்லாம் உயர்த்திப்பிடிப்­பதன் மூலம் அச்சமூகத்தை எதிர்ப்பதும், சவால் விடுவதும் எமது நடவடிக்கைகளில் ஒன்றாகிறது. இதை நாம் எமது எதிர்க் கலாச்சார நடடவடிக்கையாக அடையாளங் காணலாம்.

யாழ் சைவ வேளாளஆணாதிக்க சமூகம் தனது மதம் சார்ந்த மூடக் கொள்கைகளின் அடிப்படையில் நல்ல சகுனம், அபசகுனம், மங்களம் அமங்களம், சுபம், அசுபம், தீட்டு, துடக்கு, விலக்கு போன்ற பல பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்க­ளையும் சமூகத்தில் ஆழப் பரப்பி விட்டுள்ளது. இவற்றில் நிறங்களும் அடங்கும். யாழ்சைவ வேளாள ஆணாதிக்கப் பிரிவு மஞ்சள் நிறத்தை மிகவும் விரும்புகிறது. அதை மங்கள நிறமாக போற்றுகிறது. இதை நாம் கூட்டணியின் கொடியிலும் சிறிலங்கா தேசியக் கொடியில் தமிழரைக் குறிக்கும் நிறமாக மஞ்சள் நிறம் காணப்படுவதிலிருந்தும் கண்டு கொள்ள முடியும். அது மாத்திர­மின்றி, பொதுவாக பல்கலைக்கழகங்களின் மேலங்கிகள் கறுப்பு நிறத்தில் இருக்க யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மேலங்கி மாத்திரம் மஞ்சள் நிறத்திலிருப்பதிலிருந்தும் யாழ்-சைவ வேளாள ஆணாதிக்க சமூகம் ”மங்களகரமான” நிறத்திற்கு கொடுக்கும் அழுத்தத்தை நாம் கண்டு கொள்ள முடியும். மஞ்சள் போன்ற பிரகாசமான நிறங்களையே இப் பிற்போக்கு ஆணாதிக்கப்பிhpவு விரும்புகிறது. அதே நேரம் மங்கிய இருண்ட நிறங்களை அபச குனம் எனக் கூறி ஒதிக்கி விடுகிறது. கறுப்பு நிறம், யாழ்-சைவ-வேளாள- ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கப் பிரிவால் புறக்கணிக்கப்பட்ட நிறமாகும்.

ஆனால் அதன் மனு நிறம் கறுப்பு நிறம் எதிர்ப்பின் நிறமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகளாவிய அளவில் எதிர்ப்பியக்கங்கள் கறுப்பு நிறத்தை நிலவும் சமுக அமைப்புக்கு சவால் விடும் (Challenge) அச்சமூக அமைப்பை எதிர்க்கும் நிறமாக கறுப்பு நிறத்தை உபயோகிக்கின்றனர். அதே போல் பெண்கள் இயக்கங்களும் நிலவும் சமூகத்தின் ஆணாதிக்க கலாச்சார முறைமைக்கு சவால்விடும் எதிர்க் கலாச்சார நிறமாக கறுப்பு நிறத்தை பிரயோகிக்கின்றனர். (குறிப்பாக உலகளாவிய அளவில் காணப்படும் women in black பிரிவினர்)

இதை விட சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்­பட்ட இருளில் வாழும் மக்களது அடக்கு முறைத்தன்மையின் குறியீடாக கறுப்பு நிறமுள்ளது. பாலியல் தொழில் செய்யும் பெண்கள் கறுப்பு நிற உடையாலேயே அடையா­ளப்­படுத்தப்படுகின்றனர். அடக்கப்பட்ட சாதிப் பிரிவுகளினதும்- உழைக்கும் மக்களதும் தோலின் நிறம் கறுப்பென்பதே அடக்கும் பிரிவின் மதிப்பீடு. பிராந்திய ரிதியாக எடுத்துக் கொண்டாலும் வட இந்திய பிராமணிய ஆதிக்கப் பிரிவின் தோலின் நிறமான வெள்ளை நிறம் உயர்வான­தாகக் கருதப்பட, அப்பிரிவால் ஒதுக்கப்படும் பிரிவினர் கறுப்புத் தோலையுடையவர்களே. உலகளாவிய ரிதியில் பார்த்தால் வெள்ளை உயர்வானதாகவும் கறுப்பு அருவருப்புக்குரியதாகவும் வெள்ளை நிறவெறியினரால் சித்திரிக்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற வெறி ஆதிக்கப்பிரிவே உலகின் கறுப்பு நிறமான ஆசிய ஆப்பிரிக்க மக்களை பாரபட்சம் காட்டியும் நசுக்கியும் வருகின்றனர்.

எனவே தேசத்தின் அடக்கியொடுக்கப்­பட்ட விளிம்பு நிலைப் பிரிவின் நிறமாக கறப்பு நிறம் உள்ளது. ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களே ஈழத் தமிழ் தேசத்தை உண்மையில் பிரதிநிதித்துவப் படுத்துகிறவர்களாகவும் இருப்பதால் அவர்களது குறியீட்டு நிறமான கறுப்பு நிறமே ஈழத் தமிழ் தேசத்தின் குறியீட்டு நிறமாகும்.

உலகலாவிய ரிதியில் உடல் நிறம் குறித்த ஐதீகமும் வெறுப்பும் ஒரு படிநிலை வரிசை கொண்ட மேலாதிக்க கருத்தமைப்பை கொண்டிருப்பதைக் காணலாம்.

இதற்கொரு உதாரணமாக, மேற்கு ஐரோப்பிய வெள்ளையர்கள் கிழக்கு ஐரோப்பியர்களின் நிறத்தை நோக்கும் விதம், இவ்விரு சாராரும் மத்தியகிழக்கு மற்றும் கிழக்காசியர்களை (மஞ்சல் நிறத்தவர்களாக) புறக்கணிப்பதும், கிழக்காசியர்கள், மத்திய கிழக்காசியர்கள் அனைவருமாக தெற்காசி­யர்களை பிரவுன், கருப்பு நிறத்தவர்கள் என்றும் அழைப்பார்கள். ஆக இறுதியாக நம் தெற்காசியர்கள் ஆப்பிரிக்கர்களை கருப்பு, கருவல் என நகைப்பார்கள்.

ஆக நிறங்களில் அடித்தட்டு அடக்கப்­படும் நிறத்தவர்களாக இதில் வேடிக்கை என்னவென்றால் கருப்பு இனத்தவர்களே இருக்கிறார்கள். இடையில் உள்ள அனைத்து நிறத்தவரும் மெலே உள்ளவர்கள் தம்மை பாரபட்சமாக பார்க்கிறார்கள் என்று கூறிக் கொண்டே அவர்களுக்கு கீழே உள்ள­வர்களை அசிங்கமாக பார்ப்பார்கள். இது நமது சாதிய முறையில் காணப்படுகின்ற அதே பாரபட்ச படிநிலையை ஒத்ததாக இருக்கும்.

நம்மிடையே இருக்கின்ற மேலாதிக்க கருத்தாக்கங்களின் பாதிப்பு இனம், மதம், நிறம், பால், சாதி, ஊர், வர்க்கம் என அனைத்து வேறுபாடுகளிலும் காணக்கூடியதாகவே இருக்கிறது.

அடக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களே புரட்சியின் கருப்பு நட்சத்திரமாகும்.
ஆக ஒன்றை அடக்கிக்கொண்டு இன்னொன்றுக்கு விடுதலை வேண்டிநிற்பதில் என்ன தார்மீகம் நமக்குண்டு என்கிற வினாவை நம்மை நொக்கி எழுப்புவது அவசியம்.

அதுவே நமது விடுதலை கோரிக்கைக்கான முன்நிபந்தனையான தகுதியும் கூட.

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு!


என்.சரவணன்
போரின் போது முதலாவது பாதிக்கப்படுவது பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்று ஒரு பழமொழியுண்டு. அனைத்து சமூக அமைப்பிலும் பாரிய நெருக்கடிநிலை தோன்றுகிற வேளை விளிம்பு நிலையினரே முதலாவதும், அதிகளவிலும் பாதிக்கப்படுவதை பல்வேறு சமூகவியலாளர்கள் மீள, மீள சுட்டிக்காட்டி வந்துள்ளனர்.

அந்தவகையில் பெண்கள் விளிம்புநிலை சக்தியினர் தான். போரின் போது பாதிக்கப்படுபவர்களில், பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள், அங்கவீனர்கள் என்போர் அதிக கரிசனைக்கும், கவனத்துக்கும் உள்ளாவது இந்த அடிப்படையில் தான். இதனை நிறுவுவதற்கு சுனாமி கூட நமக்கோர் நல்லதொரு உதாரணம்.

பஞ்சம், பட்டினிச்சாவு, நோய், இயற்கை அனர்த்தம், போர் என அத்தனைக்கும் இது பொருந்தும்.



போரின் போது பெண்கள் இன்னும் பிரேத்தியேகமான முறையில் பாதிப்புக்குள்ளாக்கப்படுகிறார்கள். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுவதும் இடம்பெற்றுத்தான் வருகின்றன. நமது சங்க இலங்கியங்கள் கூட இதனை பதிவு செய்திருக்கின்றன.

ஸ்ரீ லங்காவில்

இன்றைய நிலையில் சிங்கள பௌத்த பேரினவாத கட்டமைப்பில், தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்­களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்­டது.

இந்தப் பேரினவாதக் கட்டமை­ப்பை வளர்த்தெடுக்க எந்த ஆதிக்க அரசியல் சக்திகள் காரணமாக இருந்தனவோ இன்று அதே சக்தியானது, தானே, விரும்பி­னாலும் கூட தான் வளர்த்துவிட்டுள்ள கட்டமைப்­பானது அப்படிப்பட்ட ஒரு தீர்வுக்கு இடமளிக்கப் போவதில்லை என்பதையும், அது ஆதிக்க சக்திகளின் இருப்புக்கே உலை வைத்துவிடும் என்பதும் அம்பலப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமாதான முயற்சி..., பேச்சுவார்த்தை..., போர் நிறுத்தம்..., தீர்வு... என்பவற்றை எதிர்க்க சிவில் சமூகமே தயாராக்கப்பட்டு வருவதை தென்னிலங்­கையின் அண்மைய நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு விரும்பியோ விரும்பாமலோ தனது இருப்புக்காக போர்க் கெடுபிடி நிலையை பேணி வருகிறது. அதற்காக எவ்வளவு பெரிய இழப்புகளுக்கும் முகம் கொடுக்க சிவில் சமூகம் பழக்கப்பட்டு - பழக்கப்படுத்தப்பட்டு வருகிறது. தென்னிலங்கையில் தொழிலாளர்க­ளின் வேலை நிறுத்தம், பொருள் விலையு­யர்வு, தீர்வைகளின் அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம் என்பவ­ற்றைக் கூட போரின் பேரால் நியாயப்­படுத்துவதை எதிர்த்து பெரிய எதிர்ப்பு ”நடவடிக்கைகள்” எதுவும் இல்லை.

அரசாங்கங்களின் இருப்புக்கான அரசியல் தந்திரோபாய நடவடிக்கைகளில் ஒன்றாகவே போர்ச்சூழல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. போரின் போது படையினரின் உளப்பலத்தை பாதுகாப்பதும், உற்சாகத்தை பேணச் செய்தலும் அரசின் கடமையாகிறது. படையினரின் உயிரிழப்புகள், இராணுவத்தினாரின் உயிரிழப்­புகள், பொருளிழப்புகள், முகாம் இழப்­புகள் எனபனவற்றால் படையிலிருந்து வெளியேறு­வோரின் தொகை அதிகரித்து வந்த அதே நேரம் படைக்கு புதிதாக சேருவோரின் தொகை குறைந்துக் கொண்டே வருகிறது. தென்னிலங்­கையில் சிங்கள இளைஞர்கள் பலர் தமது வீடுகளில் பெற்றோரை மிரட்டு­கின்ற வார்த்தைப் பிரயோகமாக ”படையில் போய் சேர்ந்து விடுவேன்” என்பது சர்வசாதாரணமாக ஆனது.

இந்த நிலையில் இருக்கின்ற படையி­னரை தொடர்ந்து தக்க வைக்கவும், புதிதாக படைக்குச் சேருவதை ஊக்குவிக்கவும் பல வழிமுறைகளை அரசு கையா­ள்கிறது. படையில் இணைவோ­ருக்­கான சம்பள, சலுகைகள் அதிகரிப்பு அவற்றில் முக்கியமா­னவை. இது போன்ற வழிமுறைகளில் ஒன்றே படையினரின் போர்க்கால குற்றங்களை பொருட்­படுத்தாமை என்பது.

அந்த போர்க்கால குற்றங்களில் பாரிய ஒன்றாக தமிழ்ப் பெண்களின் மீதான பாலியல் வல்லுறவு நிகழ்கிறது. இது வெளிப்படையாக பாலியல் இச்சை சார்ந்ததாக காட்டப்பட்டாலும் அதற்கும் அப்பாலான பொருண்­மைகள் உள்ளன.

இதற்கான உள்ளார்ந்த அனுமதியும், ஆசீர்வாதமும் படைத் தரப்பில் வழங்கப்பட்­டுவருவதை சம்பவங்கள் பல நிரூபித்துள்ளன. வெளியில் செய்தி கசியாமல் எதனையும் செய்யலாம் என்கின்ற நிலைப்பாடு இராணுவ வட்டாரத்தில் இருக்கிறது.

1994இல் பதவிக்கு வந்த பொ.ஐ.மு. அரசாங்கம் அதே ஆண்டு இறுதியிலிருந்து நடத்திய பேச்சு வார்த்தைகள் 1995 ஏப்ரலில் முறிவடைந்தது. 1995 ஒக்டோபரில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்­கையின் மூலம் யாழ் குடா நாட்டைக் கைப்ப­ற்றிய அரசாங்கம் அது தொடக்கம் யாழ் குடா நாட்டை ஒரு மூடுண்ட பிரதேச­மாகவே ஆக்கி வந்தது. வெளியுல­கத்துக்கு அங்கு இராணுவத்தைக் கொண்டு சிவில் நிர்வாகத்தை நடாத்தி வருவதாகவும் பிரச்சாரப்ப­டுத்தியும் வந்தது.

போரினால் அரசு சந்தித்து வந்த தொடர் தோல்விகளினால் படை­யினரின் உளநிலை வீழ்ச்சி கண்டிருந்தது. இதேவேளை மூடு­ண்ட பிரதேசமாக இருந்த யாழ் குடா நாட்டில் பல நூற்றுக்கணக்­கானோர் காணாமல் போனோர்­கள். அடிக்கடி ஆங்காங்கு சடலங்கள் கிடைத்துக் கொண்டிருந்தன. காணாமல் போவோரின் தொகை அதிகரித்துக்கொண்டே சென்றது.

இப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் வல்லுறவு சம்பவங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருந்தன. வடக்கு கிழக்குப் பகுதிகளில் படையினரின் கட்டுப்­பாட்டுப் பிரதேசங்களில் படையின­ராலேயே மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிக் கொணர்வது எவருக்கும் அவ்வ­ளவு இலகுவான காரியமாக இருக்கவில்லை. அரச பயங்கரவாதம் சட்டபூர்வமான முறையில் அவசரகால சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றினூ­டாகவும், ஊடகத் தணிக்கை போன்றவற்றினூ­டாகவும் மேற்கொள்ளப்பட்டது. அச்சட்டங்கள் மக்களின் மீதான இராணுவ அட்டுழியங்க­ளுக்கும், படுகொலைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்குமான அனுமதிப்பத்திர­மாகவே அமைந்தது.

1971 ஏப்ரல் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி.யை அடக்குவதாக கூறிக்கொண்டு சிங்கள இராணுவம் தனது சொந்தத் தேசத்து சிங்கள யுவதிகளையே பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர். மனம்பேரி எனும் ஜே.வி.பி. இளம் பெண்ணின் கதை மட்டுமே மேற்பூச்சுக்­காக வழக்கு நடாத்தி சம்பந்தப்பட்ட படையின­ருக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஜே.வி.பி.யை அடக்கவென சிறிமாவோ பண்டாரநாயக்கவினால் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம் உதவி கோரப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை வந்தடைந்த இந்திய இராணுவமும் இந்த காலத்­தில் பாலியல் வல்லுறவினை மேற்­கொண்டது தொடர்பாக பதிவுகள் பெரிதாக வரவில்லை. ஆனால் அன்றைய ஜே.வி.பி.க்கு தலைமை தாங்கிய பலர் இன்றும் அந்தக் கொடு­ர­ங்­களை நினைவு கூர்ந்த வண்ணமுள்ளனர்.

அதே இந்திய இராணுவத்தை 1987ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பெண்கள் மாலையிட்டு, திலகமிட்டு வரவேற்றபோது நாளை இவர்கள் தம்மையும் தமது பிள்ளைகளையும் கொன்றொழிக்கப்போகிறார்கள் என்றோ தமது பெண் பிள்ளைகளை பாலியல் வன்முறைக்­குள்­ளாக்கப் போகிறார்கள் என்பதையோ அறிந்திராதிருந்தனர்.

இந்திய இராணுவ நுழைந்ததுமே இதனை தொடங்கி விட்டனர். 1987இல் ஒக்டோபர் முதல் டிசம்பர் வரையான காலத்திலேயே அதிக­மான பாலியல் வல்லுறவுச் சம்ப­வங்கள் பதிவாகியுள்ளன. இராணுவ நடவடிக்கையின் அங்கமாகவே இது மேற்கொள்ளப்பட்டதென பல நூல்­க­ளிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

இந்திய இராணுவம் யாழ் பல்கலைக் கழகத்தினுள் புகுந்து தமிழ் மாணவிகளை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி அவர்களின் பாலுறுப்புகளை சிதைத்து பின் கொன்று புதைத்திருந்தனர். பின் அச்சடலங்கள் அப்புதைகுழிகள் தோண்டியெடுக்கப்பட்டன.

உளவியலாளர் தயா சோமசுந்தரத்தின் Scarred Minds எனும் நூலில் இது பற்றிய பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

மூன்று இந்திய இராணுவத்திர் துப்பாக்கி முனையில் பாலியல் வல்லுறவு புரிய முற்பட்டபோது அவர்களை நோக்கி -என்னை இப்படி செய்யாதீங்கோ! என்னை சுட்டுக்கொல்லுங்கோ- என கதறியழுத சம்பவமும். திருநெல்வேலியில் ஒரு பெண் ஓடிப்போய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்தமை போன்ற சம்பவங்க­ளையும் அந்நூலில் பதிவாக்கியிருக்கிறார்.

இது தவிர 1968இல் வியட்நாமில் அமெரிக்காவுக்கு ஒரு மை லாய் கிராமம் போல, 1989இல் இந்திய இராணுவத்துக்கு ஒரு வல்வை படுகொலையை குறிப்பிடுவது வழக்கம். 1989 ஓகஸ்ட் 2, 3, 4 ஆம் திகதிகளில் வல்வெட்டித்­துறையையும், அதனை அண்டிய ஊர்களுக்கும் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்து ஆயிரக்கணக்­கான வீடுகள் கடைகளை உடைத்தும் எரித்தும்

சேதத்துக்கு உள்ளாக்கிய­துடன், பெண்கள், வயோதிபர், சிறுவர்கள் என 63 பேரை வெட்டியும், சுட்டும் தாக்கியும் படுகொலை செய்ததுடன், 15 திருமணமான பெண்களையும், 50க்கும் மேற்பட்ட இளம் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினர்.

உலகம் முழுவதும் இது தான்....

பொதுவாக போர்க்காலங்களில் பாலியல் வல்லுறவுக்கூடாக ஒரு சமூகத்தை அவமானத்துக்குள்­ளாக்குள்ளாக்கலாம் என்று எதிhpத் தரப்பு நம்புவது வழக்கம். இது ஹிட்லரின் நாசிப் படைகள் தொடக்கம் அண்மைய பொஸ்னிய-சேர்பிய போர் வரை காணமுடியும். பொஸ்னிய இனத்­தின் தூய்மையைக் கெடுக்க வேண்டுமானால் அவ்வினத்தின் பெண்களின் மீது பாலியல் வல்லுறவு கொண்டு இனக்கலப்பு செய்து விட்டால் அது நடக்கும் என சேர்பியர்கள் கருதினார்கள். அதன் விளைவாக பொஸ்னியப் பெண்களை சிறைப்படுத்தி அவர்க­ளுக்கென்று தனியான முகாம்களை அ­மைத்து (Rapd Camps) அவர்களை சேர்பியர்கள் சென்று மாறி மாறி பாலியல் வல்லுறவு­க்குள்ளாக்கி அவர்களை கர்ப்பம் தரிக்கச் செய்து பிள்ளை பெற செய்தனர். அதன்பின்னர் பிறந்த அப்பிள்ளை என்ன இனம் என்று கேலி செய்தனர். நூற்றுக் கணக்கான பெண்களுக்கு இந்த கதி ஏற்பட்டது. இந்த இனக்கலப்புக்கூடாக இனக்கலப்பை செய்துவிட்டதாகவும், அப்பெண்களுக்கு பிறந்தவர்கள் எவரும் இனி பொஸ்னியர்களாக அறிவித்துக் கொள்ள முடியாதென்றும், தான் இனக்கலப்பை செய்துவிட்டதாகவும் அறிவித்துக்கொண்டார்கள். அவ்வினத்தின் தூய்மையைக் கெடுத்து விட்டதாகவும், களங்கப்படுத்தி விட்டதாகவும், புனிதம் கெடச் செய்து விட்டதாகவும் பொஸ்னி­யர்களுக்கு அறிவித்தார்­கள். 1992 அளவில் 20ஆயிரத்துக்­கும் மேற்பட்டபெண்களும், இளம் யுவதிகளும் இதன்போது பாலியல்வல்லுற­வுக்கு உள்ளாக்­கப்பட்டார்கள். பொஸ்னியாவில் நிகழ்ந்தது பெண்களின் மீதான வல்லுறவு அல்ல. ஒட்டுமொத்த மனித்தத்தின் மீதான களங்கம் (“The war on women in Bosnia was truly the rapd of humanity”2)

போர்க்காலங்களில் பெண்களை கைது செய்வது, சித்திரவதைக்கு உள்ளாக்குவது, குறிப்பாக பாலியல் வல்லுறவு உள்ளிட்ட பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குதல் அன்று தொடக்கம் இன்று வரை நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

போர் நடந்த பங்களாதேஸ், கம்போடியா, சைப்பிரஸ், ஹைட்டி, லைபீரியா, சோமாலியா, உகாண்டா போன்ற நாடுகளில் இச்சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.

1990இல் 5000க்கும் மேற்பட்ட குவைத் பெண்கள் ஈராக்கிய துருப்புக்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர்.


ருவாண்டாவில் 5 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளா­னார்கள். அல்ஜீரியாவில் சில கிராமங்களில் புகுந்த ஆயுததாரிகள் ஒட்டுமொத்த கிராமத்து பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உள்­ளாக்­கினர். சில தரவுகளின் படி அங்கு 1600 இளம் பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்திருக்­கின்றனர்.

இரண்டாவது உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது 1937இல் ஜப்பான் துருப்புக்களால் சீனாவின் நான்கின் எனும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்ட வேளை அங்குள்ள 20,000க்கும் மேற்பட்ட சீனப்பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்காக உலகப்போhpன் பின்னர் விசாரணை நடந்தது.

ருவாண்டாவில் போhpல் தப்பிய இளம் அப்பாவிப் பெண்களை பாலியல்வல்லுறவுக்கு உட்படுத்த ஆயுததாரிகள் பணிக்கப்பட்டனர். இவ்வாறு கர்ப்பம் தாpக்கப்பட்ட பெண்கள் அவர்களது குடும்பங்களிலும், சமூகத்திலும் விரும்பத்தகாதவர்களாக ஆனார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொண்ட சம்பவங்க­ளும் பதிவானது. இவ்வாறான செயற்பாடுக­ளின் மூலம் அப்பெண்யையும், அப்பெண் சார்ந்த குடும்பத்தையும், அவர்களின் இனக்குழுமத்தின் உளப்பலத்தை குறைப்பதும், இனத்தூய்மை மீதான மாசுபடுத்தலும், அவர்களின் அடையா­ளத்தை உருக்குலைப்­பதும், அவர்களின் கலாச்சார நம்பிக்கைகளை கேலிக்குரியதாக்­குவதும் நோக்கமாக இருந்திருக்கின்றன. இவை எதிரிப்படைத் தலைமைகளால் ஊக்குவிக்கப்பட்டுமிருக்­கின்றன.

இலங்கையில் அனுராதபுரத்தில் படையி­ன­­ரை நம்பியே மிகப் பாரிய அளவிலான பாலியல் தொழில் விடுதிகள் நடத்தப்படுகின்­றன. எல்லைப்புக் கிராமங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பல பெண்கள், குறிப்பாக கணவரை இழந்தவர்கள் பலர் இதில் ஈடுபடுத்­தப்­பட்டுள்ளனர். இவ்வாறான விடுதிகள் இராணுவ அதிகாரிகள் சிலரது சொந்த விடுதி­களாகவும் உள்ளன. பெண்கள் அமைப்புக்கள் பலவற்றின் அறிக்கைகளில் இந்த விடுதிகள் குறித்து சுட்டிக்காட்டப்­பட்டுள்ளன.

இப்படி யுத்த காலங்களில் எதிரித் தரப்பின் பெண்கள் படை­யினருக்கு விருந்தாக ஆக்கப்படு­வதும் பலருக்­கான பாலியல் போகப்பொரு
ளாக, பாலுறவு இயந்திரமாக ஆக்கப்படுவ­தும் அங்கு மட்டுமல்ல இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானியப் படைகள் கிழக்காசிய நாடுகளில் புரிந்த கொடுமையும் இவை தான். அவை நீண்ட காலமாக வெளித் தெரியாமல் இருந்து மிக அண்மையில் தான் பெண்களை பாலியல் அடிமைக­ளாக முகாம்களில் வைத்திருந்த விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. ஜப்பான் அன்று இந்தோ­னேசிய, பிலிப்­பைன்ஸ், மற்றும் கொரியா உள்ளிட்ட நாடுகள் பலவற்றில் பெண்கள் பலரை தடுத்து வைத்து படையினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தி வந்த சம்பவங்கள் உலகையே உலுக்கி­யது. எதிரி நாட்டுப் படையினர் மீது நடத்தப்­பட்டு வந்த இத்தகைய மனிதநேயமற்ற சம்ப­வங்­களே இலங்கையிலும் நடந்து வருகின்­றன.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் கூட இந்தோ­னேசியாவில் சுகர்னோ அரசாங்கத்­துக்கு எதிரான கிளர்ச்சியின் போது சீன நாட்டைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்­ளாக்­­கப்பட்ட செய்தி இன்று உலகப்புகழ் பெற்றவை.
ஸ்ரீ லங்கா அரசின் யுத்த அணுகுமுறைகள் எதிரி நாட்டுடனான யுத்தமென்பதையும் தமிழ்ப் பெண்கள் தங்கள் நாட்டுப் பெண்களில்லை வேற்று நாட்டுப் பெண்களே என்பதையும் நமக்கெல்லாம் தெளிவு­றுத்தியதும் இதே அரச படை தான். சிங்கள இராணுவத்திற்கான சிங்கள இராணுவ ஆட்சேர்ப்பு, தமிழ் மக்கள் மட்டும் தேடி வேட்டை­யாடப்படல், தமிழர் பகுதிகளின் மீதான குண்டுவீச்சுக்கள், அழிப்புக்கள் என்பவற்றின் வெளிப்­பாடுகள் அத்தனையும் இது சிங்களப் படை தான் என்பதை நிரூபித்தது. எனவே ஸ்ரீ லங்கா அரச படையும் வேற்று நாட்டுப் படையெனும் உணர்­வும், ஆக்கிரமிப்பு இராணுவம், எதிரிப் படை என்கின்ற மனப்பதிவுக்கும் தமிழ் மக்கள் எப்போதோ உள்ளாக்கப்பட்டுவிட்டனர்.

ஸ்ரீ லங்கா படையை அவ்வாறு ”சிங்களப் படை”, ”எதிரிப் படை” யென்று சொல்வதற்கு முழுத் தகுதியையும் படிப்படியாக குறுகிய காலத்தில் அடைந்தது இவ்வாறுதான்.

(சிங்களப் படையென்ற சொல் இனவா­தத்தை வெளிப்படுத்துவ­தாக விமர்சிக்கப்பட்ட காலமொன்று இருந்தது. ஆனால் சிங்களவ­ர்களை மட்டுமே கொண்ட படையாக­வும் எதிரிநாட்டின் மீது யுத்தம் செய்வது போல யுத்தக் குற்றங்களில் ஈடுபடுவ­தாலும் இப்பதம் பொறுத்தமானதே)

எனவே இப்படிப்பட்ட சிங்க­ளப் படையினரால் மேற்கொள்ள­ப்பட்டு வருகின்ற பாலியல் வல்லுறவுகள் தமிழ் மக்களின் இனத்துவத்தை அவமான­ப்படுத்த பயன்படுத்­துகின்ற ஒன்றாகவே கொள்ள முடிகிறது.

ஆனால் தற்செயலாக கிருஷா­ந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு­ள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்­டதும், கிருஷாந்தியைத் தேடிச் சென்ற அவரது தாயார், சகோதரன், அயலவர் ஆகியோரையும் கொன்று புதைத்த சம்பவம் தற்செயலாக அம்பலத்துக்கு வந்ததும் (கிருஷாந்தி குடும்பத்தின் வர்க்கப்பின்னணி காரணமாக அதற்கு தொடர்புசாதனங்கள், பெண்கள் அமைப்புகள், சட்ட உதவிகள் வாய்ப்­பாக அமைந்­ததால்) அது உலக அள­வில் அரசை அம்பலத்துக்கு கொண்டு வந்தது.

தவிர்க்க இயலாமல் சிங்கள அரசு, தாம் போர்க் குற்றங்க­ளுக்கு எதிராக எப்போதும் உறுதியாக இருப்பதாக பிரச்சாரப்படுத்துவதற்­காக கிருஷாந்தி வழக்குக்கு அரசினால் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்­டது. அதன்படி 20 மாதங்களாக நடந்த கிருஷாந்தி வழக்கின் தீர்ப்பாக 6 பொலிஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை சாதகமாக்கியபடி அரசு இன்றும், பாதிக்கப்படும் பெண்கள் மீதான தனது காpசனையை பிரச்சாரப்படுத்தி வருகி­றது. இந்த பிரச்சாரங்களின் முன்னால் ஏனைய சம்பவங்கள் அனைத்தையும் மூடி மறைத்து வருகிறது. ஏனைய சம்பவங்களில் பாதிக்கப்­பட்டவர்­கள் சமூக அளவிலும் அந்தஸ்து­டைய­­வர்­கள் அல்லர்.

இன்று வெளிக் கொணரப்ப­டுகின்ற சம்பவங்கள் அனைத்துமே பாதிக்கப்­பட்ட பெண் செத்தால் மாத்திரம் தான் சாத்தியமாகிறது. பெண்கள் ஊடக நிறுவனத்தைச் சேர்ந்த பெண்ணியவாதியான ஷாமினி பெர்ணாண்டோ இது குறித்து அப்போது கருத்துதெரிவிக்கையில் ”ஒரு பெண் படையினரால் தனக்கு ஏற்பட்ட அவலத்தை சட்டத்தின் முன் கொண்டு வர வேண்டு­மெனில் நிச்சயம் சாகத்தான் வேண்டுமா,” என வினவுகிறார். உண்மையில் இன்று வழக்கு தொடரப்­பட்டிருக்கும் சொற்ப சம்பவங்களைத் தேடிப்பார்த்தால் அவை பாலியல் வல்லுறவின் பின்னர் கொலை செய்யப்பட்டவர் குறித்தானதாகத் தான் இருக்கின்றது. கிருஷாந்தி, ராஜினி, கோணேஸ்வரி போன்றன நல்ல உதாரணங்கள்.

இதே வேளை இது வரை சிங்களப் படையினரால் மேற் கொள்ளப்பட்டு வந்திருக்­கிற பாலியல் வல்லறவு சம்பவங்கள் அனைத்­திலும் பெண்கள் அதிக சித்திரவதைக்குள்­ளாக்­கப்பட்­டுள்ளனர்.

ஈழப்போராட்ட வரலாற்றில் அதிகளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானது சந்திரிகா என்கிற பெண்ணொருவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தான் (1994-2005) என்பது பதிவாகியிருக்கிறது. சர்வவல்லமை பொருந்திய நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும், முப்படைகளின் தளபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் சந்திரிகா தான் இருந்தார் என்பது இங்கு கவனிக்கவேண்டிய ஒனறு.

1996 இல் மாத்திரம் 150 தமிழ் பெண்கள் படையினரின் பாலியல் வதைக்கு உள்ளாக்கப்­பட்டதாக சீனப்பத்திரிகையொன்று அறிக்கை வெளியிட்டது. (South China morning Post, 11 January 1997)

97 ஒக்டோபர் 16 அன்று அம்பாறையில் பொலிஸாரும் படையி­னரும் தங்கநாயகி எனும் பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு கொண்டு விட்டு அப்பெண்ணின் பெண்குறியை வெட்டி சின்னாபின்னப்படுத்தி விட்டே சென்றனர். அதே போல 97 மே 17 அம்பாறையில் கோணேஸ்வhp பாலியல் வல்லு­றவுக்குள்ளாக்கப்பட்ட பின்னர் கோணேஸ்வ­ரியின் பெண்குறியில் கிரனைட் வைத்து சிதறச்செய்தனர். பெரும்பாலான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களின் பின் இறுதியில் கொலை புரிந்து வந்திரு­க்கின்றனர். இதன் மூலம் சகல சாட்சிகளையும் இல்லாது போய்­விடுமென்றே சிங்களப் படையினர் நம்புகின்றனர்.

இதை விட இது வரை காலம் போhpன் போது கைது செய்யப்­பட்ட பெண் புலிகள் பலரை பாலி­யல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்­டமை குறித்த சம்பவங்கள் 94க்கு முன்னர் அதிகளவு தகவல் கிடைத்திருந்தன. ஆனால் உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்­பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்­படுத்தி பாலுறுப்­புகளில் போத்தல்­களாலும், கம்பிகளாலும் சேதப்படுத்­தியதை நிரூபிக்கின்ற புகைப்படங்­கள் எமக்கு கிடைத்த போது மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம். குறிப்பிட்ட தாக்குதல் சம்பவம் முடிந்ததும் மரணமுற்ற பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்­தப்பட்டதை தொலைக்காட்சி செய்திக­ளிலும் காட்டப்பட்டது. அவை பற்றிய புகைப்படங்களும் கிடைத்திருக்கின்றன.

இதன் மூலம் எதிர்பார்க்கப்ப­டுவது என்ன? குறிப்பிட்ட சமூக­த்தை அவமானப்படுத்தி விட்டதன் வெற்றிக் களிப்பையல்லவா? ஏற்கெனவே சமூகத்தில் ஒருவர் தனக்கு வேண்­டாத இன்னொரு­வரை அவமான­ப்படுத்த வேண்டு­மென்றால் அவ­ருக்கு கிட்டிய பெண்ணை வல்லுற­வு­க்குள்ளாக்கு­வேன் என்று (வழக்கிலுள்ள துஷனம்) கூறி­னாலே மற்றவர் ஆத்திரப்­படுவார் அல்லவா? அப்படிப்பட்ட வெளிப்பாடொ­ன்றே இந்த நிர்வாணக் காட்சிப்ப­டுத்தலும்.

”தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடமி­ருந்து மீட்டெடுப்பதற்காக நடத்தப்படும்” சமாதான யுத்தத்தின் மறு பக்கம் எவ்வளவு கோரமானது என்பதைக் காட்ட தமிழ் மக்களுக்கு எதிரான இந்த சம்பவங்கள் போதுமானது. அரசாங்கத்­தின் சர்வதேச பிரச்­சாரங்கள் சமீப காலமாக தோல்வியடைவதற்கு ஒரு காரணம் போர்க்கால கொடுமை­களின் அத்தனை விபரிதங்களும் எல்லைத்தாண்டி போகுமளவுக்கு அதிகாரித்திருப்பதே.

அரசு இவ்வாறான இம்சை­களின் வாயிலாக தமிழ் மக்களை பணிய வைத்து அரசு தரும் தீர்வி­னை ஏற்கச் செய்கின்ற நடவடிக்­கையாக, போரின் கருவி­யாக, வதையின் கருவியாக, பாலியல் வல்லுறவு தொடர்ச்சியாக பாவிக்கப்­பட்டு வருகிறது. அரச பயங்கரவாதத்தின் உச்ச வடிவம் இது தான். இது இனிமேல் தொட­ராது என்பதற்கான உறுதியை எவரும் தந்துவிடமாட்டார்கள்.

கற்பு -ஒழுக்கம் - பாலுறவு: புனைவுகள்

என்.சரவணன் பாலியல் குறித்த விடயங்கள் புலமைத்துவ மட்டத்தில் பேசுபொருளாக ஆக்கப்பட்டு வருகிறது. இதே வேளை பெண்களின் மீதான பாலியல் வன்முறைக­ளின் சமீபகால அதிகரிப்பையும் அதன் கொடுரத்தையும் கூடவே அறிந்து அனுபவித்து வருகிறோம். இளையதம்பி தர்சினி (வயது 20) எனும் பெண் இரு வருடங்களுக்கு முன் டிசம்பர் 18 அன்று கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொலை செய்து பின் கல்லொன்­றுடன் கட்டி கிணற்றொன்றில் போட்டிருந்த செய்தி அனைவருக்கும் தெரியும். இந்தச் செய்தி வெளியான போது கூடவே இந்தப் பெண்ணின் ஒழுக்கப்பண்புகள் குறித்த செய்தியும் சிலரால் பரப்பப்பட்டன. படையி­னரின் இந்த காடைத்தனத்தை மூடிமறைக்க அரச இயந்திரமும், போpனவாத கட்டமைப்பும் அப்பெண்ணின் ஒழுக்கப்­பண்புகள் மீது கேள்வியெழுப்பும் வண்ணம் கதைபரப்பியதை பெண்கள் அமைப்புக்கள் கண்டித்தன. இத்தனை கோரத்தனத்தின் பின்னும் கூட அதிகாரத்துவம் படைத்த ஆணாதிக்கம் தனது ”ஆண்மைத்துவ” செய்கையை மறைக்கவென, பலியாக்கப்பட்ட பெண்ணையே மீண்டும் மோசமாக சித்தரித்து அக்காடைத்தனத்தை நியாயப்படுத்தவோ அல்லது அதனை சமப்படுத்தவோ முனைவதைக் காண்கிறோம். இதுவரை காலமும் பாலியல் வல்லுறவுக்­குள்­ளான பெண்ணை ஆபாசமான உடைய­ணிந்­திருந்தாள், ஆபாசமாக காட்சி தந்தாள், மோசமான இடத்திலிருந்தாள், பிழையான பாதையில் வந்தாள், பிழையான நேரத்தில் வந்தாள் என வல்லுறவுக்கு நியாயம் சொல்லும் வழக்கம் சாதாரண சமூக பேச்சாடலில் மாத்திரமல்ல, சட்டத்தின் முன் கூட காணப்படுகிறது. இது ஒரு சட்ட வலுவாகவும் எதிரிக்கு சாதகமாக அமைந்த எத்தனையோ வழக்குகளைக் காண முடிந்திருக்கிறது. எனவே தான் இந்த கற்பொழுக்கம் குறித்தும் பாலுறவு குறித்தும் நிலவுகின்ற விடயங்களை ஆராய்வது அவசியமாகிறது. பெண்ணின் உயிhpயல் அம்சமான பாலுறுப்புகள் மீதான அதிகாரத்துவத்துக்கு ஆணாதிக்க மரபு வழிவந்த சமூக-பண்பாட்டுக் காரணிகள் முக்கியத்துவம் செலுத்துகின்றன. ஆண்மை-பெண்மை குறித்த மரபுப் புனைவுகளின் வாயிலாகவும், ஐதீகங்களின் வாயிலாகவும் இது பலமாக வேரூன்றியுள்ளன. இவற்றை எமது கல்வி, தொடர்பூடாக, மத விவகாரங்கள் பாதுகாத்து, வற்புறுத்தி வந்துள்ளன.
தனது கன்னித்தன்மையைப் பாதுகாக்க வேண்டியவளாக பெண் பழக்கப்படுத்தப்பட்­டுள்­ளாள். பாலியல் பற்றிய புரிதல் பெண்க­ளுக்கு மறுக்கப்பட்டதாகவும், வரையறுக்கப்­பட்டதாகவும் ஆக்கப்பட்டுள்ளன. பாலியலா­னது இரகசியத்துக்கும், அந்தரங்கத்­துக்கும் உரிய ஒன்றாகவும் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாலியல் குறித்த வேட்கைகள், நாட்டங்கள் செயற்கைத்தனமானதாக கற்பிதம் செய்யப்பட்டுள்ளது. பேசாப்பொருளாக வைத்­தி­ருக்­கப்பட்டாலும் கூட அது பெண்களுக்கு மட்டும்தான் என வரையறுக்கப்­பட்டது. பெண்கள் மத்தியில் இவை பேசாப் பொருளாக இருக்கும் வரை அவர்களின் பாலியல் வேட்கைகள் தணிக்கப்படுமென்ற நம்பிக்கை ஆணாதிக்கச் சூழலில் நிலவுகின்றது. ஒரு தாரமணம், குடும்பம், வம்சாவழி, ஒழுக்க மரபுகள் என்பன தனிச்சொத்துட­மையின் வழிமுறைகள். இதில் ஒரு தார மணமானது தந்தை வழிச்சமூகத்தின் இருப்புக்கு (அதாவது தனது விந்தின் விளைவே­யென்பதை நிறுவுவதற்கு முன்நிபந்­தனையாக திகழ்கிறது.) அவசியமாக இருக்கிறது. குறிப்பிட்ட குழந்தை தனது ஆண்மைத்துவத்தின் விளைவு-வெளிப்பாடு எனக் கருதுகிறது.
எனவே தான் ஆணாதிக்கமானது ”கற்பு” என்பதை பெண்ணின் மீதான விதியாக ஆக்கிய அதே நேரம் ஆணின் ”கற்பு மீறலை” அது தனது ஆண்மையின் வெற்றியாகவும் நிறுவி விட்டிருக்கிறது. இந்த கற்பொழுக்கமானது வரலாற்று பூர்வமாகவே பெருங்கதையாடலாக சித்திரித்து வரப்பட்டுள்ளது. அதன் விளைவாக இது இன்றும் பலமாக நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கதையாடலின் மத்தியில் விஞ்ஞானபூர்வமான உண்மைகள் வைதீக பிற்போக்கு சக்திகளால் காலாகாலமாக காயடிக்கப்பட்டு வருகின்றன. பெண்ணின் இந்த கற்பொழுக்கத்துக்கு பெண்ணின் மீதான ”யோனி மைய வாதம்” ஆற்றுகின்ற பாத்திரம் கரிசனைக்குரியது. இது தான் பெண்ணின் மீதான இயற்கையான உயிரியல் ”கொடுமை”. இனப்பெருக்க மையமாக அமைந்திருக்கிற உயிரியல் இயல்பை பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக இது ஆகியது. இந்த பயத்தின் அடிப்படையிலேயே ஆண்-பெண் உறவு கட்டமைக்கப்பட்டு குடும்ப அமைப்பு எனும் அதிகாரத்திற்கு ஒடுக்கியது. ”ஒருத்திக் கொருவன்” எனும் சித்தாந்தத்தை பெண்ணுக்கு திணித்தது. இவை கெடாம­லிருக்க ஒழுக்கநியதிகள், கண்காணிப்புகள், விட்டால் போதுமென்ற உடனடித் திருமணங்கள், ஆணுறுப்பு லிங்கமாகவும் வழிபாட்டுக்­குரிய ஒன்றாகவும் கருதப்படுகிறது. (இது எப்படி வழிபாட்டுக்கு வந்தது என்பதை பெட்டியில் உள்ள கதையைப் பார்க்க) அதற்கு கோவில் கட்டி கும்பிடுகின்ற அதே நேரம் பெண்ணின் யோனியானது தீட்டு, தூய்மை, துடக்கு, விலக்கு, அசிங்கம், அருவருப்பு, அவமானம் என்கின்ற புனைவுகளையும், அதன் மீதான வெறுப்­பையும் ஏற்படுத்தியுள்­ளது. பாலுறவு தவிர்த்தால் யோனியை ஒரு வேண்டத்தகாத ஒன்றாகவே ஆணாதிக்க சூழல் கற்பிதம் கொண்டிருக்கிறது. இன்றுள்ள தூஷண வார்த்தைகளைப் பார்த்தால் இதன் விளை­வினை விளங்கிக் கொள்ள முடியும். நிலவுகின்ற தூஷண வார்த்தைகள் அனைத்­துமே பெண்களின் பாலுறுப்புகளைக் குறித்து கேலி செய்கின்றவையாகவே உள்ளன. இதன் மூலம் வேண்டாதவரை அவமானப்படுத்த முடியும் என்கின்ற ஐதீகம் நிலவுகிறது. ஒருவரைத் துன்புறுத்த முடிவு செய்தால் எதிhpக்கு நெருக்கமான பெண்ணின் (தாய், சகோதரி, மனைவி) பாலுறுப்புகள் மீது கேலி செய்தால், அவமானப்படுத்தினால் கோபம் கொள்ளச் செய்யலாம் என்கின்ற ஐதீகமும் நிலவுகிறது. அதே வேளை இதே யோனி புனிதம் கெடா­மல் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்­புகளும், அவற்றுக்கான விதிகளும் கட்டுப்பா­டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. ஆண் பல பெண்களுடன் கொள்ளும் பாலுறவுத் தொடர்புகள், ஆண்மையின் சிறப்பாகவும் பெண் தனது கணவனைத் தவிர்ந்த எவ­ருடனும் வைத்துக் கொள்கின்ற பாலுறவுத் தொடர்புக­ளினால் அவளது ”கன்னித்தன்மை” புனிதம் கெட்டதாகவும், கற்பிழக்கப்பட்­டதாகவும், நடத்தை கெட்டதாகவும், ஒழுக்க மீறலாகவும் புனை­யுமளவுக்கு கருத்தியல்கள் கட்டமைக்கப்­பட்டுள்ளன.

இன்றும் பாலுறவானது விஞ்ஞான பூர்வமான பரஸ்பர புரிதலுடனான கூட்டுச் செயற்­பாடாக இல்லை. பாலுறவின் போது பெண்ணானவள் வெறும் போகப் பொருள் மாத்திரமே ஆண் விரும்பிய போது ”சகலவற்றையும்” சகித்துக் கொண்டு இசைந்து கொடுக்கும் இயந்திரம் மாத்திரமே. எனவே இந்த யோனி மையவாதம் தான் யோனியை மையமாகக் கொண்ட பாலுறவுக்கு அப்பால் - எல்லாமே வக்கிரம் என்ற புனைவை­யும் ஏற்படுத்தியது.

எதிர்பாலுறவுக்­கூடாகத்­தான் (retro sexual) பாலியல் இன்பம் கிட்டும் என்கின்ற புனைவுகளும் இதன் வெளிப்பாடே. எனவே தான் பின்னர் புட்ட உறவு, வாய் உறவு மற்றும் ஒரு பாலுறவு வரை எல்லாமே அபத்தமானதா­கவும், வக்கிரம் கொண்டதாகவும், இயற்கைக்கு முரணானதாக­வும், சட்டவிரோதமானதாகவும் பிரச்சாரம் செய்யப்பட்டன. இது ஆணின் பாலாதிக்கத்­துக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது. மேலும் நிலவுகின்ற சமூக அமைப்பைப் பொறுத்தளவில் தனது சொந்த பாலுறுப்பு தவிh;த்து ஏனையோரின் பாலுறுப்புக்களை அருவருப்பாக பார்க்கின்ற உளவியல் ஆண்களிடம் இருப்பதாக சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு எதிர்மாறாக, பெண்கள் இருக்க கற்பிக்கப்பட்டுள்ளனர். கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக குழந்தைகளுக்கு குண்டி கழுவுவது முதல் கொண்டு ஏனையோரின் உள்ளாடைகளை கழுவுவது மற்றும் குழந்தைகள், பிள்ளைகளின்-ஏன் வீட்டிலுள்ள அனைவரதும் பாலுறுப்புகள் உள்ளிட்ட சுகாதார மருத்துவ விடயங்களில் அக்கறை கொள்வதும், ஏன், சொந்த பாலுறுப்பு மீதான சுகாதார மற்றும் மறு உற்பத்தி குறித்தும் சகல வழிகளிலும் பெண்ணே, பொதுவாக எந்தவித அருவருப்­புக்­குமுள்ளாகாமல் சகிப்புடன் பாலுறுப்பு நலன்களில் ஈடுபாடு கொள்ள கற்பிக்கப்பட்­டுள்ளாள். இப்படியான பொறுப்­பு­க­ளி­­லிருந்து விலகி வரும், ஆணாதிக்கத்திடம் இப்படிப்­பட்ட அருவருப்புகள், வெறுப்­புணர்வுகள் இருப்பது குறித்து பின்னென்ன ஆச்சரியப்­பட இருக்கிறது. எனவே தான் இந்த கற்பு, கன்னித் தன்மை, போன்ற மரபான ஐதீகங்கள் இன்று பாலியல் வல்லுறவை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கொண்டு சென்று விடுகிறது. சமூகத்தில் உள்ள பாலொடுக்­குமுறைகளை இனங்காணாமல் செய்து விடுகிறது. குடும்பத்தில் கணவனால் பாலியல் வன்முறைகள் மேற்கொள்ளப்படு­கின்ற வேளைகளில் அது அவனின் உரிமையாக கொள்ளப்படுகிறது. பெண்கள் அதனை சகிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்­படுகிறது. இருக்கின்ற ஆணாதிக்க கட்டமைப்புடன் சமரசம் செய்து கொள்ளச் செய்துள்ளது. இந்த கட்டமைப்பின் மீதான மீறல் மேற்கொள்ளப்­படுமாயிருந்தால், மீறியவளை நடத்தை கெட்டவளாக ஆக்கிவிட்டுள்ளது. பாலியல் குறித்த இந்தப் புனைவுகளைத் தகர்ப்பதே பெண் விடுதலையை சாத்தியமாக்கும். இன்றைய பெண்கள் மீதான வன்முறைக­ளில் பாலியல் வன்முறையானது அதிகரித்து வருவதானது அதிகாரமற்ற பாலாரின் மீதான ஆண்களின் கையாலாகாத்தனத்தையே குறிக்கிறது. அதிகாரத்துவத்தின் அடக்கு­முறைக்குள்ளாவதால் அதிகாரம் முதலில் அவசியம். இன்று இந்த அதிகாரத்துக்கான ஒரு பயணத்தையே மேற்கொள்ள வேண்டியிருக்­கிறது. ஒரு புரட்சிகர சமூக மாற்றத்துக்கான பயணத்தில் தங்களின் விடுதலைக்கான பாத்திரத்தை ஆற்றுவது, விடுதலையில் அக்கறையுள்ள அனைத்து பெண்களினதும் கடமை.

யுத்த காலங்களில் பெண்கள்

என்.சரவணன்
யுத்த காலங்களில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நமது இந்து மத புராணங்கள், இதிகாசங்கள் என்ன கூறுகின்றன என்பதை பின்வருமாறு பெரியார் விளக்குகிறார். பெரியார் சிந்தனை -3 இலிருந்து பெறப்பட்டவை இவை.
எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டாராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ”ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!”148 என்று சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும். வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது -வைப்பாட்டியாக-வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடுரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன். சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். திரௌபதி இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர; அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை புர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்­தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தை கொண்டிருக்­கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்­ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனைய­வில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்­தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்­சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணா­திக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. ”அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர”133 என்ற கூற்றின் அர்த்தம் ” கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது”133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதே போல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்­டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
”தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன் கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ”133 இதன் அர்த்தம் ”என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்.”133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய திமிர;கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம். ”ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி”133 இதன் அர்த்தம் ”குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்”133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.

விதைத்தவைகள்

கலா


உங்களுக்குத் தெரியுமோ என்னவோ
எம் இனத்தின் ஒவ்வொரு மனிதரும்
கொல்லப் படுவதற்கென்றே
படைக்கப்பட்டவர்கள்.


கசாப்புக் கடைக்காரனின் பின்
வாசலில் காத்திருக்கும்
ஆடுகளைப் போல்
நாம் காத்திருக்கிறோம்.
எமை பலி கொண்டு
ஒரு தேவதையின்
ஆட்சியை நிலைநிறுத்த
நீங்கள் நம்ப வேண்டாம்.


ஆனால் என் தாய்
மண்டியிட்டுக் கதறுகிறாள்
சிதறுண்டு போன
உடலங்களையாவது
தன்னிடம் தரும்படி
அவள் அழுது புலம்புகிறாள்.
இரத்தத்தில் குளித்து
பிய்ந்து போய் இருக்கும்
உடல்களின் மென் நெற்றி
பொட்டுகளில்முத்தமிட்டு
புதைகுழியில் மூடுவதற்காய்.


இப்போதும் மடுமாதா தன்
வயிற்றிலும் மார்பிலும்
அடித்துக் கதறுகிறாள்.
அந்த 38 பேரின் சாட்சியாக
அவள் உள்ளாள்.

நீங்கள் என் தாயின்
வயிற்றில் விதைத்தவைகள்
அவள் கால்களுக்கிடையால்
இரத்தமாய் கொட்டும்
அப்போது நீங்கள்
அதிர்ச்சியடைய வேண்டாம்


மீண்டும் பொறிப்பதற்கு
பயங்கரவாதிகள் என்ற
வாசகம் இல்லாமலா
போய்விடும்!?

பொட்டை முடிச்சு - தில்லை-சுவிஸ்


நூற்றாண்டின் இரவுகளை
முடிச்சவிழ்க்கிறேன்
இத்தும் புரிபிஞ்சும்
அசவின் கயிறுகள்.
உயிரின் சுவை
கொண்டஇரத்தத்தை
நக்கியும்
கொடுவலிகளைக்
குடித்தும்
பாய்கள்.

விந்தூறி நனைந்தும்
சாயம் வெழுத்தும்
எனது தலைமுறைகளின்
அசைவு.

இறுகியும் இறுக்கியும்
பொட்டைமுடிச்சு.
தகப்பன்கள்
கணவன்கள்
மகன்கள்
தலைமுறைகளின்
ஆதிக்கம்.....

எனது தாய் தனது
சேலைத்தலைப்பில்
முடிந்து வைத்திருக்கும்
சில்லறைகளாய்.

நினைவில்...... தோழர் பொன். கந்தையா


கரவைதாசன்


வர்க்க உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும் வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை!


அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர் பொன். கந்தையாதான். இல்லையேல் சரித்திரம் ஒட்டுமொத்த தமிழர்களையே பிற்போக்குவாதிகள் என்று நாமாகரணம் சூட்டியிருக்கும்.


தோழர் பொன்.கந்தையாஅவர்கள் 1956 இல் பருத்தித்¬துறைத்தொகுதியில்தான் வெற்றியீட்டினார். (அந்நாட்களில் உடுப்பிட்டித்தொகுதியென்று ஒன்று இருக்கவில்லை. பின்னாட்களில்த்தான் பருத்தித்துறைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு பருத்தித்துறைத் தொகுதி தனியாகவும் உடுப்பிட்டித்தொகுதி தனியாகவும் உருவாக்கப்பட்டது.) அது 1953 ஹர்த்தால் மூலம் அந்நாள் இலங்கைப் பிரதம மந்திரியாகவிருந்த டட்லி சேனனாயக்காவை கொழும்பு துறைமுகத்தில் நின்ற போர்க் கப்பலுக்குள் தஞ்சம் புகும்படி வெருட்டியடித்த தொழிலாளர் போராட்டத்தின் பின் நடந்த தேர்தலாகும். அன்று நூறு தொகுதிகளில் லங்கா சமசமாஜக்கட்சி தேர்தலில் நின்றது. முன்னீடாக தேர்தல் காலத்திலேயே அமைச்சரiவை அட்டவணையைத் தயாரித்து தேர்தல் விஞ்ஞாபனத்¬தில் சேர்த்திருந்த காலம் அது. அன்று ஆட்சியைக் கைப்பற்றும் முன்னோக்கு லங்காசமசமாஜக் கட்சிக்கோ அல்லது இலங்கைக் கம்யூனிசக்கட்சிக்கோ இருந்திருந்தால் தொழிலாளிவர்க்கம் ஒரு துளி இரத்தமும் சிந்தாமலே ஆட்சியைக் கைப்பற்றியிருக்¬கலாம். அந்த மட்டத்திற்கு வர்க்கத் துருவப்படுத்தல் இலங்கை முழுவதும் நடைபெற்றிருந்தது. அந்தப் புறநிலைச் சூழல்தான் கந்தையாவையும் பாராளுமன்றத்திற்கு அனுப்பியிருந்தது. தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கைக் கொம்யூனிசக் கட்சியின் சார்பிலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அரசியலிலே புறநிலைக்காரணி மாத்திரமல்ல அகயவயக்காரணியும் தீர்க்கமான பாத்திரத்தை வகுப்பதாகும். இலங்கை முழுவதும் காணப்பட்ட வர்க்கத் துருவப்படுத்தலின் வீச்செறிவின் வெளிப்பாடாய் வடமராட்சியில் கந்தையாவும் அவரோடொத்த தோழர்களும் காணப்பட்-டார்கள். அந்தத் தேர்தலில் இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சிக்கும், லங்காக சமசமாஜக் கட்சிக்குமிடையே தேர்தலில் போட்டியில்லா ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் கீழ் இடதுசாரிகள் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால்1960 தேர்தலிலே இந்தக் கட்சிகளிடையே போட்டியில்லா ஒப்பந்தம் நிலவவில்லை. 1960 உடுப்பிட்டித் தொகுதியில் கொம்யூனிஸ்ட்கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட பொன் கந்தையாவை எதிர்த்து சமசமாஜக் கட்சி வேட்பாளரான ஆர்.ஆர். தர்மரத்தினம் போட்டியிட்டார். இடதுசாரி வாக்குகள் இரண்டாகப் பிரிந்தன. ஆதலால்தான் பொன் கந்தையா அவர்கள் தோல்வியினைச் சந்திக்க நேர்ந்தது. அந்தத் தேர்தலில் கிடைத்த கொம்யூனிஸ்ட் வாக்குகளையும் லங்காசமசமாஜக் கட்சிக்குக் கிடைத்த வாக்குகளையும் கூட்டினால் அன்று தேர்தலில் வெற்றிபெற்ற எம்.சிவசிதம்பரத்திற்குக் கிடைத்த வாக்குகளிலும் பார்க்க பல ஆயிரம் கூடியதாகும்.


எழுபத்தியேழு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு சிறுபான்மைத் தமிழரை வேட்பாளாராக நியமிப்பதென்று முடிவெடுத்தது. சிறுபான்மைத் தமிழரைப் பெரும்பான்மையாகக் கொண்ட கோப்பாய் தொகுதியிலேயே நியமிக்க வேண்டும் என்று பலரும் பிரேரித்திருந்தனர். அதற்குப் பதிலிறுத்த அமிர்தலிங்கம் ”நாம் கோப்பாயிற் போட்டியிட்டால் வெற்றியீட்டுவது உத்தரவா¬தமில்லை. ஒரு சிறுபான்மைத்தமிழர் வெற்றியீட்டக்கூடிய வாய்ப்பு உடுப்பிட்டியில்தான் இருக்கிறது. அந்தத் தொகுதி கொயூனிஸ்ட் கந்தையா வெற்றியீட்டின தொகுதியாகும்.” எனக் கூறினார். அதன் பின்பே உடுப்பிட்டித் தொகுதியில் ஒடுக்கப்பட்டவர்களுள் ஒருவரான திரு.த.இராசலிங்கம் தேர்தலிற் போட்டியிட்டு வெற்றியீட்டினார்.


உடுப்பிட்டி கிராமசபைத் தலைவராக வரலாறு முழுவதும் எண்பதுகளில் கிராமசபை கலைக்கப்படுமட்டும் சமசமாஜக் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர். தர்மரத்தினமே இருந்தார். வல்வெட்டித்துறையின் நகரசபைத் தலைவராக திருப்பதியென்ற கொம்யூனிஸ்டே அறுபதுகளின் பின்பகுதி மட்டும் இருந்தார். பருத்தித்துறை மாநகரசபைத் தலைவராக அறுபது மட்டும் கொம்யூனிஸ்டான சேனாதிராசாவே இருந்தார்.


1942 இல் கண்டியிலுள்ள போகம்பரைச் சிறையிலிருந்து தப்பியோடிய என்.எம் பெரேராவும் பிலிப் குணவர்த்தனாவும் வல்வெட்டித் துறையீனூடேயே தப்பிச் சென்றனர். அந்த மட்டத்திற்கு அந்தப் பிரதேசத்தில் இடதுசாரிச் சம்பிரதாயம் இருந்தது.


அந்த நாட்களில் அந்தப் பிரதேசத்திலுள்ள கற்சுவர்கள், மதில்கள், சுமைதாங்கிகள், கிணற்றுச் சுவர்கள், கிட்டங்கிகள், மதகுகள் என்று பார்த்த இடமெல்லாம் சிவப்புப் பெயிண்டால் கீறப்பட்ட அரிவாளும் சுத்தியலும் சின்னம் கண்கொள்ளாக் காட்சியாகத் தோன்றும். வீட்டு நிலைகளிலே கூட அரிவாளும் சுத்தியலும் பொறிக்கப்பட்ட நிலைகளைக் காணலாம். பெண்கள் அணிந்திருந்த தாலியின் குடத்தில்கூட அரிவாளும் சுத்தியலும் பொறித்திருந்ததாககச் சிலர் சொல்லக்கேள்விப்பட்டிருக்கின்றேன்.. பொன். கந்தையாவின் உருவப் படங்கள் ஏறத்தாள எல்லா வீடுகளிலும் வைக்கப்பட்டிருக்கும். கம்பர்மலையென்ற கிராமத்திலுள்ள இரண்டு வாசிகசாலைகளிலும் பொன். கந்தையாவின் உருவப் படங்கள் மாலை அணிவிக்கப்பட்டு அதன் உள் அறைகளில் இன்றுவரை வைக்கப்பட்டிருக்கிறது. கரவெட்டிகிழக்கு வளர்மதிக்கிராமத்தில் இன்றும் பொன்கந்தையா அவர்களின் நினைவுதினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கன்பொல்லைக்கிராமத்தில் கனுவில் சனசமூகம் என்னும் பெயரினிலேயே அவர்களது வாசிகசாலை அமைந்திருந்தது. அதன்தலைவராக வ.தங்கமணி அவர்களும் அவரைத் தொடர்ந்து ஆசிரியர் க.இராசரத்¬தினம் அவர்களும் தலைவராக இருந்தபோது பொன்கந்தையா அவர்களது நினைவு தினம் தொடர்ச்சியாக நினைவுகூரப்பட்டு வந்திருக்கிறது. 1966க்குப் பின் சாதியத்திற்கு எதிரான போராட்டத்தில் கைக்குண்டு தயாரிக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டு கன்பொல்லைக் கிராமத்தினைச்சேர்ந்த மூன்று போராளிகள் தோழர்கள் மாணிக்கம்.சீவரத்தினம், கந்தன்.செல்வராசா, கிட்டினர்.வேலும் மயிலும் (நாகேஸ்) ஆகியோரின் தியாகத்தின் பின் அக்கிராமத்தில் அத்தியாகிகளின் நினைவு தினம் முன்னிறுத்தப்பட்டு இன்றுவரை நினைவு கூரப்பட்டு வரும்பொழுது கந்தையாவை இன்றிருக்கும் சந்ததி மறந்துவிட்டதா? எனச் சந்தேகிக்கத் தோன்றுகிறது. கம்பர்மலை அரசினர் பாடசாலையில் இன்றுவரை பொன். கந்தையாவின் உருவப் படம் சரஸ்வதி போன்ற சாமிப் படங்களோடு வைக்கப்பட்டுள்ளது. இப்படி வடமராட்சியிலுள்ள ஏறத்தாள எல்லாக் குக்கிராமங்களிலும் அவருடைய உருவப்படத்தினை பொது இடங்களிலும் அவரது தோழமைக்குரியவர்களது வீடுகளிலும் காணலாம்.


கந்தையாவை விளங்கிக் கொள்ள வேண்டுமாக இருந்தால், அவர் அரசியலுக்கு வந்த காலத்தில் அமைந்திருந்த சமூகபொருளாதார அபிவிருத்திகளைக் கருத்தில் கொண்டால்த்தான் அது விளங்கும். பொன். கந்தையா பாராளுமன்றத்தில் ஒரு மாதிரி கிராமம் ஆக்கவேண்டும் என்று பேசிய கம்பர்மலைக் கிராமத்தின் வாழ்சூழல் நிலமைகளையும் கன்பொல்லை, கரவெட்டிகிழக்கு வளர்மதிகிராமம் போன்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கிராமத்து மக்களுடன் இவர் வாழ்ந்த வகையை எடுத்துப் பார்ப்போம். முதலில் கம்பாமூலையென அந்நாட்களில் அழைத்துவரப்பட்ட கம்பர்மலை:- ’கம்பர்மலை’ உடுப்பிட்டிக்கும், வல்வெட்டித்துறைக்கும் இடையேயுள்ள குக்கிராமமாகும்.. இந்தக் கிராமத்திற்கு ஐம்பதுகளில் கந்தையா அரசியல் வேலைக்கு வந்தபொழுது அந்தக் கிராம சூழலையும் அந்த மக்களின் வாழ் நிலமைகளையும் கண்டு திடுக்கிட்டார். அந்தக் காலத்தில் அங்கே சேட்டுப்போடுகின்ற ஒரு ஆண்களும் அந்நாட்களில் கிடையாது. மேற்சட்டை அணிந்த பெண்களும் அருமையாகவே இருந்தார்கள். எஸ்..எஸ்.சி சித்தியெய்திய ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. உத்தியோகம் பார்க்கும் ஒரு மனிதர்கூட இருக்கவில்லை. ஒரு சரியான ஆளமான ரோட்டு இருந்திருக்வில்லை. மழைக்காலங்களில் வண்டில் சென்றால் வண்டில் சில்லு அச்சாணியளவுக்குப் புதைந்துவிடும். அங்கே மண்ணெண்ணை நெருப்புப்பெட்டி வாங்க ஒரு பெட்டிக் கடை கிடையாது. அங்கே ஏறத்தாள எல்லோருமே காணியற்ற குத்தகை விவசாயிகளும், கூலிவிவசாயிகளும், மரமேறுபவர்களும், மேசன் வேலைக்குப் போகும் அல்லது கல்லுடைக்க அல்லது கிணறு வெட்டப்போகும் கூலிகளுமே இருந்தனர். வயற்காணிகள், தோட்டக்காணிகள், பனங்காணிகள், குடியிருப்பு நிலங்கள், குளங்கள், கிணறுகள் எல்லாமே வல்வெட்டி, உடுப்பிட்டியைச் சேர்ந்த பெரிய வெள்ளாளர் என்று சொல்லப்படும் நிலக்கிழார்களுக்கே சொந்தமாக இருந்தது.


அந்நாளில் வல்வெட்டித்¬ துறையே வல்வெட்டியின் சின்னத்துறைமுகமாக இருந்தது: வல்வெட்டித்துறையின் முக்கால்வாசிக் காணிகள் இந்தப் பெரிய வெள்ளாளருக்கே சொந்தமாக இருந்தது. கந்தையா அந்தப் பின்தங்கின கிராமத்¬திற்கு அரசியல் வேலை செய்ய முதல்நாள் வந்தபொழுது இரவுகாலம் ஆனதால் மீண்டும் தனது சொந்த இடமான கரவெட்டிக்குப் போவதற்கு அப்பொழுது போக்குவரத்து வசதிகள் இருக்கவில்லை. அந்நாளில் அங்கிருந்த போக்குவரத்து வசதி திருக்கல் வண்டிதான். அந்நியனான கந்தையாவைத் துயிலவைப்பதற்கு அந்தக் குடிசைகள்கூட அனுமதிக்க மறுத்தன. அன்று கந்தையாவோடு சொற்ப அறிமுகமான வைத்திலிங்கம் என்ற ஒருவர் தனது வீட்டிற்குச் சொற்ப தூரத்தி¬லுள்ள செம்பாடு என்னுமிடத்திலுள்ள செம்மறிப் பட்டிக்கு நடுவேயுள்ள அட்டாளையில் துயில வைத்தாரென்று அந்தக் கிராமத்திலுள்ள வயதான கிராம வாசிகள் இன்றும் கூறுவர்கள். காடுமேடு சொந்தம். கல்லு முள்ளு இன்பம் என்றே அரசியல் வாழ்வைத் தொடங்கியவர். மணிக்கூடோ கலண்டரோ இல்லாத அந்தக் கிராமத்திற்கு அவர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் கிரமமாக வரத் தொடங்கினார்.


அந்தப் பிரதேசத்து மக்கள் செறிவின் நூதனமென்னவென்றால் பெரிய வெள்ளாள¬ரின் அடிமை குடிமையாக வாழ்ந்த மக்களினங்களை நாட்டின் எல்லைப்புறங்களில் சுடலைக் கருகாமையில், முட்புதர்க்காட்டின் தொடக்கத்தில், பனங்கூடற் கரையில், வயல்வெளிக் கரையில் என்று குடியேற்றி வைத்திருந்தனர். நாட்டின் மையங்களில் ஒருவரையும் குடியிருக்க அனுமதிக்கவில்லை. இந்த உண்மையை முதலிற் கண்டுபிடித்து அம்பலப் படுத்தியவரும் பொன். கந்தையாதான்.


அந்தக் கிராமத்தில் பொன் கந்தையா அவர்கள் நடாத்திய முதலாவது போராட்டம்.-அந்தக் கிராமத்து எல்லையில் உள்ள வயல் நிலங்களை நிலக் கிளார்கள் வாரமுறையில் விவசாயம் செய்யும் படி விட்டிருந்தார்கள். வாரமுறையென்பது விளைச்சலில் மூன்றில் ஒன்றை நிலக்கிளாருக்குக் கொடுக்க வேண்டும். பருவ மழையை நம்பி விவசாயம் செய்பவர்கள் போகம் சரியான சாகுபடியைக் கொடுக்கவில்லையென்றால் நிலக்கிளார்கள் அப்பொழுது விவசாயம் செய்த விவசாயிடமிருந்த காணியைப் பறித்து வேறு விவசாயிகளிடம் கொடுத்து விடுவர். அதனால் அங்கே தொடர்ந்து விவசாயிகள் குத்துவெட்டுப் பட்டுக்கொண்டிருப்பர். பருத்தித்துறை நீதவான்கோட்டில் கம்பர்மலை விவசாயிகளின் வழக்குகள் நிறைந்திருக்கும். அதிகமான சந்தர்ப்பங்களில் விவசாயி மூன்றில் ஒன்று தானியம் கொடுக்க வேண்டியதற்குப் பதிலாக அரைவாசி நெல்லைக் கொடுப்¬பதன் மூலம் சமரசத்திற்கோ, இணக்கத்திற்கோ வந்து விடுவர். ஓற்றுமை இல்லாமையை வர்க்கக் குணாம்சமாகக் கொண்ட அந்த விவசாயிகளோடு பொன.; கந்தையா தொடர்ந்து கலந்துரையாடி, ஒரு சின்ன விழிப்புணர்வையும் விளக்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். ஓருவர் செய்த வயற்காணியை இயற்கை வஞ்சித்ததால் ஏற்பட்ட துர்அதிஷ்டத்திற்காக நிலக்கிளார் பறித்து மற்றவரிடம் கொடுப்பதை அனுமதிப்-பதில்லை என்ற முடிவுக்கு வரப்பண்ணினார். இப்பேற்பட்ட இக்காட்டான பிரச்சனைகளை கூட்டுமுயற்சியால் தீர்ப்பதற்காக ஒரு ’கிராமமுன்னேற்றச் சங்கம்’ ஒன்றை ஏற்படுத்தினார்.


இந்தக் கிராம முன்னேற்றச் சங்கத்தின் துணையோடு 1953 அந்தக்கிராமத்தில் ஒரு சனசமூக நிலையத்தை ஏற்படுத்தி அதற்குப் ’பாரதிவாசிகசாலை’ என்ற பேரையும் சூட்டப்பண்ணினார். கம்பர்மலையென்று இன்று அழைக்கப்படும் அந்தக் கிராமத்தின் அக்காலப் பெயர் கம்பாமூலை என்பதாகும். ஓடுக்கப்பட்ட மக்களின் ஊர்பேர்களை அந்தக்காலத்து விதானைகளும் றிஜிஸ்டாரென்று சொல்லப்படும் பதிவுகாரர்களும் மணியகாரர்களும் கொச்சையாகப் பாவிப்பதை கந்தையா பலமுறை எதிர்த்திருந்தார். கந்தையா கம்பாமூலையைக் கம்பர்மலை என்று மாற்றும் படிக்கு கிராமச்சங்கத்திற்கு புத்திமதி கூறிமாற்றியதோடு இனிமேல்வரும் பதிவுகளை ’கம்பர்மலை’ என்று பதியும்படி கிராம முன்னேற்றச் சங்கத்தின் மூலம் அந்த விண்ணப்பத்தைத் தானே ஆங்கிலத்தில் எழுதி கிராம முன்னேற்றச்சங்க நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கி விண்ணப்பித்தார். அந்தக் கிராமத்தை ஊடறுத்தச் செல்லும் சேறும் புழுதியுமாக இருந்த ஒழுங்கைக்கு கிழக்குத்தெரு என்ற பெயரே அந்நாளில் இருந்தது: அந்தக் கிழக்குத்தெருவை பாரதிவீதியென்று அழைக்கும்படி புத்திமதி கூறினார். கிழக்குத்தெருவை பாரதிவீதியென்றழைத்தால் தபாலை விநியோகிக்க மாட்டோ¬மென்று தபால்காரர்களும், தபால்கந்தோரும் எதிர்ப்புத் தெரிவிக்கவே, கந்தையா போஸ்ட்மாடர் ஜெனறலுக்கு கிராமமுன்னேற்றச் சங்கத்தின்பேரால் கடிதமொன்றை எழுதினார். கிழக்குத்தெருவை பாரதி வீதியென்றழைப்பதால் அரசாங்கத்திற்கோ தாபால் இலாகாவிற்கோ எந்தவித நட்டமும் ஏற்பாடாதென்றும் அந்த ஒடுக்கப்பட்ட கிராமத்தைத் தலைநிமிர அனுமதிக்க வேண்டும் என்றும் எழுதி அதில் வெற்றியும் கண்டார்.


இன்னும் அந்தக் கிராமத்தில் ஒடுக்கப்¬டவர்களினுள்ளே ஒடுக்கப்பட்டவர்களாக ஒரு குறிச்சியிருந்தது. இரண்டு, மூன்று குளிநிலத்¬திலேயே மூன்று நான்கு குடும்பங்கள் வாழும் அந்தக் குறிச்சியில் பதினாறு பதினேழு வயதிலேயே கலியாணம்செய்திடுவர்கள். பிள்ளைச் செல்வங்களும் மின்னலுக்கொன்று முளக்கத்திற்கொன்றாய் கீரியும் நாரியுமாகப் பொரித்திருந்து எப்பொழுதும் கலகலப்பும் குய்யோ முறையோ ஐயோ என்ற ஒலியோடும் ஓலத்தோடும் விளங்கிய அந்தக் குறிச்சியை மல்லிகைத்தெரு என்று அழைக்கும்படி வேண்டியிருந்தார்.


கந்தையாவின் அடுத்த சாதனை.- கம்பர்மலைக் கிராமத்திலேயுள்ள விவசாயிகளும் கூலித்தொழிலாளர்களும் தங்களின் சொந்தப் பிள்ளைகளைத் தாங்களே சுரண்டி உழைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வர்ப் பிள்ளைகளில் சொற்ப வீதத்தினர் மாத்திரம் பக்கத்தூர்களிலுள்ள ஆரம்ப பாடசாலைக்குச் சென்றனர். அவர்களைக் கூட நாலாம் ஐந்தாம் தரத்தோடு மறித்து விவசாயத்தில் பயன் படுத்தவதோ கூலி வேலைக்கு அனுப்புவதோ வழக்கமாக இருந்தது. பால்மணம் மாறாத அந்தப் பிள்ளைகள் தமது தாய் தந்தையாரோடு தாமும் கோழியோடு எழும்பி, கோட்டானோடு உறங்குமளவுக்கு பன்னிரண்டு பதின்மூன்று மணித்தியாலங்கள் வேலை செய்வார்கள். இதிலே மாடு, ஆடுகளைப் பராமரிப்பதும் அடங்கும். அந்த ஊர்மக்களுக்கு கந்தையா துணிந்து சொல்லியிருந்தார்;. இந்த ஊர்மக்களை மாதிரிச் சொந்தப் பிள்ளைகளைச் சுரண்டுவதைத் தான் காணவில்லையென்று. அந்த ஊர்மக்களுக்குக் கந்தையா சொல்லியதோடு பள்ளிகூடத்திற்குப் போகாமல் மறிக்க வேண்டாமென்று தொடர்ந்து போராடிக்கொண்டிருந்தார். இவையெல்லாம் கந்தையா தேர்தலில் வெல்வதற்கு முன்பு நடந்த சம்பவங்கள். கந்தையாவின் போராட்டம் வீண்போகவில்லை. கந்தையா அறுபதுகளின் முற்பகுதியில் மரணிக்க முன்னரே இந்தக் ’கம்பர்மலைக்’ கிராமத்தில் பலர் எஸ்.எஸ்.சிசித்தியெய்தி, அரசாங்க எழுது
வினைஞர்களானதோடு ஏச்.எஸ்.சி சித்தியெய்தி சர்வகலாசாலைக்கும் போயினர். ஏன் அறுபதுகளின் பிற்பகுதியில் வல்வெட்டி வல்வெட்டித்துறை, உடுப்பிட்டியிலும் பார்க்கக் கூடியவர்கள் இக்கிராமத்திலிருந்து சர்வகலாசாலைக்குப் போனார்கள் என்றால் மிகையாகாது. கந்தையா இதனோடு நிற்கவில்லை. அந்தக்கிராமத்தில் ஓர் மாதர் முன்னேற்றச் சங்கத்தையும் ஏற்படுத்தியிருந்தார். தான் தேர்தலில் வெற்றியீட்டியதன் பின் அந்த மாதர் முன்னேற்றச் சங்கத்தை கச்சேரியிற் பதிவு செய்து அதற்கு அரசமானியம் பெறும் வழிகளையும் செய்திருந்தர்ர். அதிலே பெண்களுக்கான தையற் கலை, நெசவு வேலை போன்றவை கற்பிக்க வழிதுறைகள் ஏற்பட்டதோடு தாய்மைப்பேறு பெறுபவர்க¬ளுக்கு அறிவுரைவழங்க பயிற்றப்பட்ட தாதிகள் மாதந்தோறும் வரும் வழிகளையும் செய்திருந்தார்.


அதனோடு அவர் நிற்கவில்லை. அங்கேயொரு முதியோர் கல்விக்கூடத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்திருந்தார். அது அந்த ஊர்மக்களின் பழமையை உடைக்க முடியாமையால் நிதர்சனமாகவில்லை.


கந்தையா தேர்தலுக்காக அரசியலுகு;க வரவில்லை. கொம்யூனிச அரசியல் செய்பவர்களின் சம்பிரதாயமும் அதுவாகாது. லெனின் காத்துமழைக்குக் தாங்கக் கூடிய கொள்கையை வைத்திருந்தவர். கொண்ட கொள்கையை நிர்மாணிப்பதற்காக களைக்காமற் சளைக்காமற் பாடுபட்டவர். அதிலே அவர் பரிபூணர ஆனந்தைத்தைக் கண்டவர். லெனின் 1917 புரட்சிக்கு முன் கால்நூற்றாண்டுகாலம் அரசியல் வாழ்க்கை வாழ்ந்தவர். அவரது 30 வருடகால சுறுசுறுப்பான அரசியல் வாழ்வில் ஆறு வருடங்களே ஆட்சியதிகாரத்தில் இருந்தவர். அதற்கு முந்திய இருபத்தினாலு வருடத்தில் அவர் ஓர் சட்டவிரோதி, நாடுகாடற்ற நாய், ஒரு தலைமறைவுப் போராளி, ஒரு அரசியற் கைதி, ஓர் அகதி. இந்த இருபத்திநாலு வருடங்களும் அவர் உளத்திருப்தியைத் தவிர வேறு ஒரு லாபத்தையம் எதிபார்க்கவில்லை. புரட்சிக்குச் சில மாதங்கள் முன்னதாக 1917 ஜனவரியில் லெனின் ஒரு பிரசித்தமான கூட்டத்தில் கூறினார்:-தானும் தன்னோடு இணைந்துள்ள தோழர்களும் ரசியப் புரட்சிவரை உயிர்வாழ மாட்டோமென்று. இதுதான் பொன். கந்தையாவின் சம்பிரதாயம். மேற் சொல்லிய லெனின் பற்றிய வசனங்களை இந்தக் கட்டுரை எழுதுபவரின் முந்திய எழுத்தறிவில்லாத கொம்யூனிசப் பரம்பரை வாய்மொழி வாய் மொழியாகப் பரப்பியிருந்தனர். இதை எழுதும் எனக்கு இத்தகவல்க¬ளைத் தந்த அழகலிங்கம் அவர்கள் கூறினார். தனக்கு முதன் முதலாக ஏங்கல்ஸ்சின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிக் கூறியவர் கற்கண்டன் என்ற கிணறு வெட்டும் தொழிலாளி. 1958 கிணறு வெட்டுவதை விடுப்புப்பார்க்கச் சென்ற பொழுது காலை உணவருந்தும் ஓய்வு நேரக் கலந்துரையாடலில் அவர் ஏங்கல்ஸ்சைப் பற்றிக் கூறியிருந்தர். அந்த ஊரிலுள்ள ஒரு நாளும் பள்ளி;க் கூடம்போகாத கூலிவேலைசெய்யும் தொழிலாளர்கள் லெனினைப் பற்றி ரசியப்புரட்சியைப் பற்றி ரசியாவின் வாழ்நிலமைகளைப் பற்றி தொழிற்சாலைச் சௌகரியங்களைப் பற்றி கதைகதையாகச் சொல்லியதாக. அந்தப் படிப்பறிவில்லாத மக்களுக்கு கற்பூரபுத்தியும் போட்டோகிராபிக் ஞாபகசக்தியும் இயற்கை தந்த பாதுகாப்புப் பரிசாக இருந்தது.. அவர்கள் வாய்மொழி மூலமாக அனேக விடயங்களைக் கற்றிருந்தனர். பலர் தங்களின் பிள்ளைக¬ளுக்கு லெனின் ஸ்டாலின் என்றெல்லாம் பேர் வைத்திருந்தனர். ரசியாபோன்று தமது நாடும் ஒருநாள் வாழ்வதற்கு அனுகூலமுள்ள நாடாக வரும் என்பதிலே அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் இவையெல்லாவற்றையும் கட்டாயம் கந்தையாவிடமிருந்துதான் கற்றிருக்க வேண்டும். ஏனினில் சண்முகதாசன் 1965 இன் ;பின்புதான் அவ்வருக்கு வந்தார். அல்லது வி.பொன்னம்பலம் ஏ.வைத்திலிங்கம்; டொமினிக் ஜீவா போன்றவர்களிடம் கற்றிருக்க வேண்டும். இவர்கள் எல்லோரும் அக்கிராமத்தின் வழமையான விருந்தாளிகள்.


கந்தையா 1956 இல் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போனது ஓர் அரசியற் சகாப்தமாகும். தென்னிலங்கையில் இடதுசாரிகள் அதிகம் பேர் தேர்தலில் வென்று பாராளுமன்றம் போன சகாப்தமாகும். பாராளுமன்ற முதற் கூட்டத்திலேயே கந்தையா தன்னை அமிலப் பரிசோதனையால் உரைத்துக்காட்ட வேண்டியிருந்தது. ”தனிச்சிங்களச் சட்ட மசோதா” பாராளுமன்ற விவாதத்தில் கொல்வின் ஆர். டி.சில்வாவின் விவாத மொழி நடையோ கர்ணகடூரமான பொறிப்பறக்கும் விவாதமாகும் . கொல்வின். ..தாய்மொழி எங்கே? தேவையில்லையென்றால் வெளிநாடுகளிலுள்ள விபச்சாரவிடுதியில் மாத்திரம்தான்..... இந்த நாட்டில் இரண்டுமொழியும் ஒரு நாடும் தேவையோ? அன்றேல் ஒரு மொழியும் இரண்டு நாடுகளும் தேவையோ?... என்ற கோடையிடிபோன்றதே கொல்வினின் பேச்சு நடையாகும். கொல்வின் அந்நாளில் மாக்சியத்திலிருந்து சீரழியாமல் இருந்தார்.


கந்தையா, இங்கிதமாகவும் இதமாகவும்; பேசுவதற்குப் பழக்கப்பட்டவர். மிருதுவான மொழிநடையே மனதைக் கௌவக்கூடியவை என்ற எண்ணங்கொண்டவர். சிந்தனைச் செறிவும் மக்கள் விசுவாசமும் இல்லாதவர்கள் தான் மேடைகளிலே வார்த்தைமொங்கான்களைத் துணைக்கழைப்பவர்களாகும்.


பொன். கந்தையா தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்த்து வாக்களித்துவிட்டு பண்டாரநாயக்கா கொண்டு வந்த எல்லா முற்போக்கு நடவடிக்கைளையும் ஆதரித்து வாக்களித்தார். பொன். கந்தையா தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிராக் உரையாற்றுகையில் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் குடிமகன் ஒருவன், தனது மனைவியுடன் அல்லது தனது பிள்ளைக¬ளுடன் அல்லது தனது உறவினர்களுடன் எந்த மொழியில் உரையாடுவது? என்பதைத் தீர்மானிக்கும்படி கோர வரவில்லை எனவும், பதிலாக இந்த நாட்டின் தமிழ்ப் பிரஜை என்ற வகையில், தனது அரசாங்கத்துடன் எந்த மொழியில் உறவாடுவது? என்பதைத் தீர்மானிக்கும்படி கோருவதாக மிகவும் நறுக்காகவும் மிக இங்கிதமாகவும் தெரிவித்தார். தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பின்னாளில் தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் விரோதச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்த அதே வேளை யூ.என்.பியோ சிறீலங்கா சுதந்திரக் கட்சியோ கொண்டு வந்த எல்லாப் பிற்போக்கு நடவடிக்கைளையும் ஆதரித்தே வாக்களித்து வந்தனர். இவற்றில் ஆகக் கேவலமானது இலங்கையிலிருந்து பிரித்தானியக் கடற்படைத் தளத்தை உடனே எடுக்கவேண்டு மென்ற தீர்மானத்தை கந்தையாவைத் தவிர்ந்த எல்லாத் தமிழ் பாராளுமன்ற அங்கத்¬தவர்களும் எதிர்த்தே வாக்களித்தனர். அதனோடு நில்லாமல் உடனே மகாராணியைத் தலையிடும்படி தந்தியும் அடித்தனர். இந்த வருந்தி அடிமையாகும் கேவலமான செயலுக்காகவாவது நான் இவர்களை எதிர்த்துத்தான் தீரவேண்டும் என்று கந்தையா பலமுறை பேசியிருக்கிறார்.


பொன். கந்தையா பாராளுமன்றம் சென்ற ஒரு மாதகாலத்தினுள்ளேயே கம்பர்மலைக் கிராமத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் பிள்¬ளைகளும் போய் கற்கக்கூடிய சாதிபேதம் பாராத ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். ஆரம்¬பத்தில் அந்தப் பாடசாலை கிடுகுக் கொட்டிலில் தொடங்கப்பட்டு அவ்வரிலும் பாக்கத்தூரிலுமுள்ள சொற்ப படித்த இளை¬ஞர்கள், யுவதிகளை ஆசிரியர்களாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது. பிள்ளைக¬ளைப் பள்ளிக்கனுப்பாத தாய் தந்தையர்களைத் தங்கள் பிள்ளைகளை புதிதாகத் தொடக்கப்¬பட்ட பாடசாலைக்கு அனுப்பும்படி வேண்டியதோடு அப்பாடசாலையை எப்பாடுபட்டும் ஒரு பாடசாலைக்குரிய அத்தனை தராதரமும் உள்ளதாக ஆக்கித் தருவேன் என்று அவர் உத்தரவாதமளித்தார்:


இந்தப்பாடசாலை தொடங்கப்பட்டதுதான் தாமதம் அவ்வரைச் சூழவுள்ள நிலக்கிளா;க¬ளும் சாதிவெறியர்களும் யாழ்பாணக் குடநாட்டிலுள்ள தனியார் இந்துப பாடசா¬லைக¬ளின் சொந்தக்காரான இந்து போர்ட் இராசரத்தினத்தைப் பிடித்து அந்தப் புதிதாகத் தொடங்கப்பட்ட பாடசாலைக்குப் பக்கத்தில் துரிதகதியில் ஒரு பாடசாலைக் கட்டிடத்தை சீமெந்தால்; கட்டி ஓடு போட்டு இந்துப் பாடசாலை ஒன்றைத் தொடங்கினார்கள். இந்தப் பிற்போக்குப் பாடசாலை கட்டத்தொடங்கிய செய்தியை ஊரவர்கள் போய் கந்தையாவுக்குச் சொன்னார்கள். சொன்னவுடன் அந்தக் கணமே கம்பர்மலைக்கு வந்து புதிதாகக் கட்டப்படும் பாடசாலைக் கட்டிடத்தைப் பார்வையிட்டார். அவர் மறுநாளே கொழும்புக்குப் பயணமாகி அப்பொழுது கல்வி மந்திரியாக இருந்த டபிளியூ.தகநாயக்காவோடு கதைத்து யாழ் குடாநாட்டில் கோரத் தாண்டவமாடும் சாதி ஒடுக்குமுறை சுரண்டல் போன்றவற்றை விளங்கப்படுத்தி கொட்டில் பாடசாலையை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பண்ணியதோடு அந்தப் பாடசாலையைச் சீமெந்தால் கட்டுவதற்கும் அதற்கான நிலத்தைக் கொள்வனவு செய்வதற்கும் தளபாடங்கள் வாங்குவதற்கும் வேண்டிய நிதியையும் ஒதுக்குவித்தார். கந்தையா அதனோடு நிற்கவில்லை. பக்கத்தில் சாதிவெறியர்களினால் தொடங்கப்பட்ட இந்துப் பாடசாலையை அங்கீகரிப்பதையும் தடைசெய்தார். சாதிவெறியர்கள் எப்படி முயன்றும் அந்தச் சாதிபேத இந்துப் பாடசாலையை அரசாங்கம் அங்கீகரிப்பதைக் கந்தையா தொடர்ந்து தடைசெய்தார். ஈற்றில் இந்தப் பிரச்சினை பாராளுமன்றத்திற்கு எடுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் திரு.எஸ் ஜே.வி. செல்வநாயகத்திற்கும் பொன் கந்தை¬யாவிற்குமிடையே நீண்டவிவாதம் ஏற்பட்டது.


பாராளுமன்றத்தில் கந்தையா:- கம்பர்மலை ஒர் இருண்ட ஒடுக்கப்பட்டவபர்களும் வறியவர்களும் வாழும் பின்தங்கிய கிராமம். இந்தச் சமுதாய அமைப்பின் இருண்டகோடி அங்கேதான் அஸ்தமித்துள்ளது. அங்கேயுள்ள மக்கள் அனைவரும் குப்பையிற் பிறந்து குப்பையில் வளர்ந்து குப்பையில் மடிபவர்கள். அங்கே வீதியோ ஒரு பெட்டிக்கடையோ கிடையாது. அங்கே இன்றுவரை படித்தவர்கள் என்று சொல்லப்படுவதற்கு ஒருவருமில்¬லை. அங்குவாழும் அதிகமான மக்களுக்குக் குந்தியிருக்கக் குடிநிலம் இல்லையாகும். உயர்சாதி நிலச்சுவாந்தர்களால் அக்கிராம மக்கள் தலைநிமிரவிடாமல் காலங்காலமாக நசுக்கப்பட்டே வந்தார்கள். அந்த மக்களை நாகரீக உலகத்திற்கு அழைத்து வருவதற்காக ஏற்கனவே ஓர் அரசாங்க பாடசாலை தொடங்கப்பட்டுவிட்டது.

அப்பொழுது செல்வநாயகம் அங்கே இரண்டு பாடசாலை இருப்பது அந்த மக்களுக்கு இரண்டுமடங்கு வாய்ப்புகளை அளிக்கும்தானே. அக்கிராமத்திற்கு அது இன்னும் நல்லது தானே என்றார். அதை மறுதலித்த கந்தையா இந்த இந்துப்பாடசாலை வந்தால் அந்த அரசினர் பாடசாலையின் வளர்ச்சி குன்றிவிடும். அது மாத்திரமல்ல அங்கே இந்தப் பாடசாலையை அங்கீகரிப்¬பதென்பது சாதிவெறியை அங்கீகரிப்பதாகி விடும். இறுதியாக கந்தையா, தந்தை செல்வநாயகத்திற்கு தனிப்பட்ட முறையிற் சொன்னார். ”திரு. செல்வநாயகம் அவர்களே நீங்கள் உங்கள் தொகுதியான காங்கே¬சன்துறைத் தொகுதியின் பிரச்சனைகளைக் கவனியுங்கள்.” பருத்தித்துறை தொகுதி மக்கள் தங்கள் தொகுதியின் சுகதுக்கங்களைக் கவனிப்பதற்கும் அவர்களைப் பிரதிநிதித்¬துவப் படுத்துவதற்குமாக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆதலால் என்னுடைய தொகுதிப் பிரச்சனை எனக்குத் தெரியும்.


கந்தையா இந்தப் பாடசாலை தொடங்கப்¬பட்ட அனுபவத்தை யாழ் குடாநாடு எங்கணும் விஸ்தரித்தார். அவர் அன்று சிறுபான்மைத் தமிழர் மகாசபை என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருபத்தொன்பது பாடசாலைளை உருவாக்கியிருந்தார்.

தகவல்: அழகலிங்கம், மு.தவராசா(தவம்)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More