Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம்



பள்ளிநேலியனூர், கண்டமங்கலம் அருகில், விழுப்புரம் மாவட்டத்தில் பறயர் சாதிப் பெண் கோகிலா என்பவரின் சந்தேகத்திற்குரிய மரணம் – உண்மை அறியும் குழுவின் அறிக்கை

3.12.2012

சென்னை

பள்ளிநேலியனூர் கிராமத்தில் நவம்பர் 11 அதிகாலை 2.30 மணியளவில் நடந்த குடும்ப / சாதி வெறி திமிர் கொலையில்(கௌரவக் கொலையில்) பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா (வயது 23) என்ற பெண் அதேபகுதியை சேர்ந்த அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25) என்பவரை காதல் திருமணம் செய்தையொட்டி, கோகிலாவின் பெற்றோரால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்றும், அதை தற்கொலை என்று அவர்கள் முடி மறைப்பதாக  செய்திகள் வெளியானது. இதுகுறித்து ஆய்வு செய்ய மாசெஸ் அமைப்பின் சார்பாக, அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம் தலைமையில் மேலும் சில மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த நபர்களை ஒருங்கிணைத்து கீழ்கண்ட 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.

1. நிர்மலா (கொற்றவை), நிறுவனர் மாசெஸ் அமைப்பு

2. அரங்க. குணசேகரன், தமிழக மனித உரிமைக் கழகம்

3. தமிழ் மணி, தமிழக சாக்கிய அருந்ததியர் சங்கம்

4.  மாறன், மனித உரிமை ஆர்வலர்

5.  வழக்குரைஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்

நாங்கள் ஐவரும் டிசம்பர் 2 அன்று சம்பவம் நடந்த பள்ளிநேலியனூர் சென்று கார்த்திகேயனின் தாய் மற்றும் கோகிலாவின் குடும்பத்தார், ஊர் பொதுமக்கள், இந்த வழக்கை விசாரித்து வரும் இன்ஸ்பெக்டர் சரவனன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் இராமமூர்த்தி, இன்றைய தலைவர் தமிழ்குடி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோரைச் சந்தித்தோம். மேலும் கார்த்திகேயன், அவரது சகோதரர் கதிர்வேல், கார்த்திகேயனின் வழக்குரைஞர் லூசி, அவரது சீனியர் வழக்குரைஞர் ஜோஸ் மற்றும் கார்த்திகேயன் நண்பர் இளையரசன் (திராவிட விடுதலைக் கழகம்) ஆகியோரையும் சந்தித்துப் பேசினோம். கோகிலாவின் குடும்பத்தார் தரப்பில் பேசிய அவரது சித்தப்பா முருகன், அந்த தெருவில் வசிக்கும் அண்டை வீட்டர் மற்றும் இன்ஸ்பெக்டர் சரவணன் தெரிவித்த தகவல்களில் பல முரண்பாடுகள் இருப்பதை எங்களால் காண முடிந்தது. எங்கள் குழுவின் விசாரனை விவரங்கள் பின் வருமாறு:

 கோகிலாவின் தந்தை இதை இயற்கை மரணம் என்று சொல்ல, வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் இதை தற்கொலை என்று உறுதியாகச் கொல்கிறார். தற்கொலை என்றால் போஸ்ட்மார்ட்டத்திற்கு ஏன் உடலை தரமறுக்கிறார்கள் என்ற ஒரு சிறு சந்தேகம் கூட காவல்துறைக்கு வராதிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.


பின்னணி:

பறையர் சாதியைச் சேர்ந்த கோகிலா, அருந்ததியர் சாதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கடந்த 9 வருடங்களாக காதலித்துள்ளார், பெற்றோர்களுக்கு தெரியாமல் 1.10.2010 அன்று கடலுரில் இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கோகிலா வீட்டிற்கு விசயம் தெரிந்து ’சக்கிலியனுக்கு’ கட்டிக் கொடுக்க மாட்டோம் என்று சொல்லி கோகிலாவின் பெற்றோர் வேறிடத்தில் அவருக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். கோகிலா கார்த்திகேயனுடன் தான் வாழ்வேன் என்று தீர்மானகரமாக இருந்ததால் அவரது பெற்றோர் அவரை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. பின்னர் 10.11.12 அன்று மாலை 4 மணி அளவில் கோகிலா கார்த்திகேயனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது தந்தை தங்களது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும், அடுத்த நாள் (ஞாயிற்று கிழமை) பெண் பார்க்க வருமாறும் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து இருவரும் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு உறங்கச் சென்றதாகவும், 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக கார்த்திகேயனுக்கு தகவல் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தைராய்ட் நோய் தொந்தரவு முற்றி மூச்சடைத்து இறந்துவிட்டாள் என்று கோகிலாவின் தந்தை நாகராஜன் தெரிவித்திருக்கிறார், வேறு சிலர் அவள் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறுகின்றனர்.  

கோகிலாவின் பெற்றோர் போஸ்ட்மார்ட்டம் செய்ய காவல்துறையினரிடம் பிணத்தை ஒப்படைக்க மறுத்து இடுகாட்டில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாலும், கார்த்திகேயன் தரப்பினர் எவரையும் பிணத்தின் அருகே அனுமதிக்காததாலும், பிணம் கண்களைத்தவிர முழுவதுமாக போர்த்தியிருந்தது என்பதாலும் தனது மனைவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உணர்ந்த கார்த்திகேயன், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தையடுத்து இந்த செய்தி செய்தித்தாள்கள், வார இதழ்களில் வெளிவந்தது. மேலும் அது சமூக இணையதளங்களின் வாயிலாக கதிர்வேல் அவர்கள் அளித்திருந்த தகவல்களின் ஒலிப்பதிவு  மாசெஸ் அமைப்பின் கவனத்திற்கு வந்ததையொட்டி உண்மையறியும் குழு அமைத்து விசாரனைக்குச் சென்றோம்.

1. முதலில் நாங்கள் கார்த்திகேயனின் தாயார் கஸ்தூரியை சந்தித்தோம். கார்த்திகேயன், கலியமூர்த்தி தம்பதிகளுக்கு 5 மகன்கள். கார்த்திகேயன் கடைசி மகன். அவர் செண்ட்ரிங் எனப்படும் கட்டிட வேலை பார்த்து வருகிறார். 12ஆம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கோகிலாவும் கார்த்திகேயனும் ஒன்றாக படித்தவர்கள். 9 வருடங்களாக காதலித்து வந்ததாகவும், அரசல் புரசலாக இந்த காதல் சேதி தனக்கு தெரியும் என்றும் ஆனால் கோகிலாவின் இறப்பிற்கு பிறகே திருமண விசயம் தனக்கு தெரியும் என்றார். அதன்பிற்கு செய்தித்தாளில் வந்த திருமணப் புகைப்படத்தையே தான் பார்த்ததாகச் சொன்னார். கோகிலாவின் தந்தை நாகராஜ் கரும்பு வெட்டும் கூலி வேலைக்கு செல்பவர். சாதிப் பற்றின் காரணமாக, சக்கிலியப் பையனுக்கு எந்த காரணம் கொண்டும் பெண் கொடுக்கமாட்டேன் என்று சொல்லி அவர் அந்தப் பெண்ணை அடித்துக் கொடுமை படுத்தியிருக்கிறார்.

11.11.12 அன்று அதிகாலை 3.30 அளவில் கார்த்திகேயன் நண்பர்கள் வந்து கோகிலா இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் கோகிலாவின் பெற்றோர் கடும் கோபத்தில் இருப்பதால் கார்த்திகேயனின் பாதுகாப்பு கருதி அவரது நண்பர்கள் அவரை வேறிடத்திற்கு அழைத்து சென்று விட்டனர். அடுத்தநாள் ஈம காரியங்கள் செய்ய அவர்கள் பிணத்தை தயார் படுத்திக் கொண்டிருந்திருக்கின்றனர்.” இதற்கிடையில் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகேயன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டான். அதைத் தொடர்ந்து காவல்துறை போஸ்ட்மார்டத்திற்காக உடலை கைபற்றவந்தபோது பெண்கள் எல்லாம் மறித்துக் கொண்டு அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. சிலர் காவல்துறையினரையே நெட்டி தள்ளியபடி பின் தள்ளினர், வேறு சிலர் உடனடியாக பெண்ணின் உடலை கட்டையில் ஏற்றி பெட்ரோல் ஊற்றி கொளுத்திவிட்டனர்.

அதுமட்டுமல்லாது  என் மகனை நான் கொலை செய்வேன், இவன் யார் புகார் கொடுக்க? என்று கனவர் கலியமூர்த்தியை மிரட்டியுள்ளார் நாகராஜ். எங்ககளது வீட்டை இடிக்கப்போவதாகவும், எங்களை சும்மா விடமாட்டேன் என்று நாகராஜ் சொல்லிவருவதாகவும் எனது மகனுக்கு தகவல் கிடைக்க எங்களை உடனே இந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு அவன் சொன்னான். நாங்களும் சென்றுவிட்டோம. காவல்துறையினரிடம் தனது மகன் மிரட்டல் குறித்து தெரிவித்து பாதுகாப்பு கோரியதாகவும், அதனால் அது தடுக்கப்பட்டதாகவும் கூறினார். ஆனால் அதன் பிறகு வேறு தொந்தரவுகள் இல்லை. எனவேசில நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பியதாகவும், இரவில் மட்டும் பங்காளி வீட்டில் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

அந்த ஊரில் பொதுவாக பொதுவெளியிலோ அல்லது நடைமுறையிலோ சாதிய ஏற்றத்தாழ்வுகள் ஏதும் இல்லையென்றும் தெரிவித்தார். தங்களது குடும்பத்தில் கூட தனது சொந்த அண்ணன் மகள் ஒரு பறையர் சாதிப் பையனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதாகவும் கோகிலாவின் தந்தை மற்றும் அவரது அண்டை வீட்டார் சிலருக்கு சாதிவெறி இருந்திருக்கிறது, அருந்ததி சாதியில் பெண் கொடுப்பதை அவர்கள் விரும்பவில்லை. தனது மகன் கோகிலாவின் மரணத்தை கொலை என்றே நம்புவதாகவும், ஊரில் சிலரும் அப்படியே பேசிக்கொள்வதாகவும் தெரிவித்தார். தாங்கள் எந்தவிதத்திலும் குறைவில்லை எல்லா வசதிகளும் வீட்டில் இருக்கிறது, அநியாயமாக ஒரு பெண்ணின் உயிரை இப்படி வாங்கிவிட்டார்களே என்று ஆதங்கப்பட்டார்.

தான் அந்த வீட்டில்தான் இருப்பேன் என்றும் தனக்கு என்ன நேர்ந்தாலும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்தார்.

அந்தத் தெருவில் 3 அருந்ததயிர் குடியிருப்புகள் இருக்கிறது. பறையர் சாதியே பெரும்பான்மை. எதிரில் இருந்த கார்த்திகேயனின் சித்தி கௌரி மற்றும் அவர் கணவர் (கார்த்திகேயன் சித்தப்பா) வீட்டினரை விசாரித்தோம்.

2. சில தனிப்பட்ட காரணங்களால் தாங்கள் கஸ்தூரி குடும்பத்தோடு பேசாதிருந்ததாகவும். இப்போது இந்த சம்பவத்தை ஊரில் பேசிக் கொள்வதாகவும் கேள்விபட்டதாகவும் தெரிவித்தார். தங்கள் வீட்டுப் பையனைக் காதலித்ததால் தான் இப்படி நேர்ந்தது, அவன் கொலைகாரன் என்று கோகிலா குடும்பத்தினர் தூற்றுவதாகவும் வேதனைப்பட்டார். அப்போது கார்த்திகேயனின் சித்தப்பா அழத்தொடங்கினார். விசாரித்தபோது, ஒருவாரத்திற்கு முன் பள்ளிக்கூடச் சாலையருகே நடந்துவந்தபோது கோகிலாவின் சித்தப்பா தனஞ்செயன் (தனசேகர் என்பதை தனஞ்செயன் என்று சொல்லிவிட்டார்) தன்னை வழியில் வைத்து அடித்ததாக கண்ணீர் மல்கச் சொன்னார். இந்த சம்பவம் பற்றி என்ன தெரியும் என்று கேட்டதற்கு, பெரும்பாலும் அவர் குடித்துவிட்டு வருவதால் அவருக்கு எதுவும் தெரியாது என்று அவர் மனைவி தெரிவித்தார்.

3. கார்திகேயன் வீட்டற்கு அடுத்த தெருவில் இருந்த பறையர் சாதியைச் சேர்ந்த அருள் என்பவரிடம் விசாரித்தோம். கோகிலா, கார்த்திகேயன் இருவரும் காதலித்திருக்கிறார்கள், திருமணம் செய்து மறைத்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் கோகிலா வீட்டில் தெரிந்து பிரச்சனையாகி இருக்கிறது, திடீரென்று ஒருநாள் அந்த பெண் இறந்துவிட்டாள் என்று அறியமுடிகிறது. திடீர் மரணம், போஸ்ட்மார்டத்திற்கு உடலைத் தர மறுத்ததால் கார்த்திகேயன் மேலும் சந்தேகம் கொள்கிறார். காவல்துறையினர் வந்தபோது பெண்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு உடலை கைப்பற்றவிடாமல் மறித்துள்ளனர் என்றார்.

ஒருவேளை கார்த்திக் ஊருக்குள் வந்து அவரை எவரேனும் அடித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அதைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம், நிச்சயம் தட்டிக் கேட்போம் உதவிக்கு செல்வோம் என்றார்.

ஆக அந்த ஊரில் ஒட்டுமொத்த சமூகம் சாதிய பாகுபாடு போற்றவில்லை என்று அறியமுடிந்தது. எல்லோரும் நட்புறவுடனேயே இருந்திருக்கின்றனர்.

4.   கோகிலாவின் பெற்றோரை சந்திக்க சென்றபோது அவர்கள் முன் ஜாமீன் வாங்குவதற்காக சென்றுள்ளதாக  கோகிலாவின் சித்தப்பா முருகன் தெரிவித்தார்.

முருகன் (தனியார் பேருந்து ட்ரைவர்) கூறியது:

எங்கள் பெண் காலை 8 மணிக்கு வேலைக்கு செல்வாள், 6 மணிக்கு வருவால். திடீரென்று ஒரு நாள் அவன் தான் திருமணம் செய்து கொண்டதாக தெரிவிக்கிறான் கார்த்திகேயன். அதை வெளியில் சொல்ல அச்சப்பட்டிருக்கிறான். ஒன்றரை வருடங்களுக்கு முன் தான் கோகிலாவை திருமணம் செய்து கொண்டதாக கார்த்திகேயன் கூறுகிறான். இதற்கிடையில் இது ஏதும் தெரியாமல் எங்கள் விட்டுப் பெண்ணுக்கு நாங்கள் மாப்பிள்ளை பார்த்தோம். அவரது தொடர்பு எண் இருந்ததைக் கொண்டு கோகிலா அவரைத் தொடர்பு கொண்டு தான் இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று பேசியிருக்கிறாள், தன்னைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறாள். இதைத் தெரிந்து அவளது தந்தை யாரையாவது காதலிக்கிறாயா என்று விசாரித்தபோது, தைராய்ட் பிரச்சனை இருப்பதால் அப்படிச் சொன்னதாக சொல்லியிருக்கிறாள்.

 அதிகாலை 3 மணியளவில் உறக்க கலக்கத்தில் பார்த்தபோது இறந்து கிடந்தாள் என்றார். தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல் துறையை நாடியிருக்கிறார். எங்கள் பெண் தைராயிட் பிரச்சனையால் அவதியுற்று வந்தாள், மூச்சு விட முடியாமல் சிரமப்படுவாள். அவர் எப்படி இறந்தாள் சூசைடா என்று நாங்கள் கேட்டபோது ஆம் சூசைட் தான், தூக்கு மாட்டிக் கொண்டாள். தன்னால் வாழமுடியவில்லையே என்று மன உளைச்சலடைந்திருக்கிறாள் போலும் அதான் சூசைட் செய்து கொண்டாள் என்றா.

பிறகு காவல்துறை வந்ததா என்றோம்.

மதியம் 3 மணியளவில் காவல்துறை வந்தது, கோகிலாவின் கணவர் என்று சொல்லி கார்த்திகேயன் என்பவர் கோகிலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்திருக்கிறான். காவல்துறை விசாரிக்க வரும்போதுதான் அவர்கள் பதிவுத் திருமனம் செய்து கொண்டார்கள் என்பதே எங்களுக்கு தெரியும்.  காவல்துறை வரும் வேளையில் எங்கள் சாதி வழக்கப்படி உடலை தகனம் செய்வதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம். பெண் எப்படி இறந்தாள் என்று நாங்கள் மீண்டும் கேட்டதற்கு, எந்த பெற்றோர் தான் உடனே காதலுக்கு சம்மதம் தெரிவிப்பார்கள், அந்த அடிப்படையில் அவர்கள் கொஞ்சம் கண்டித்திருக்கிறார்கள் அது தவறா. அதற்குள் அந்தப் பெண் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கார்த்திகேயன் எங்களை நாடாது நேரே காவல்துறையை நாடியிருக்கிறார். ஒருவேளை காலையிலேயே சென்று புகார் அளித்து அவர்களும் காலையிலேயே வந்திருந்தால் நாங்கள் உடலை முறைப்படி ஒப்படைத்து, கணவன் என்ற முறையில் அவனே சடங்குகள் செய்யட்டும் என்று அனுமதித்திருப்போம். உடலைக் குளிப்பாட்டி எல்லாம் தயாரான பிறகு உடலை போட்டுவைப்பது தவறு என்பதால் நாங்கள் கொடுக்கவில்லை, ஒருவேளை ஊர்காரர்கள் அனுமதித்தால் எடுத்துச் செல்லுங்கள் என்று சொன்னதாக எங்களிடம் தெரிவித்தார்.

உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டீர்கள் என்று சொல்லப்படுகிறதே. அது உண்மயில்லை, எங்கள் ஊர் வழக்கப்படி சர்க்கரை கொட்டி, இரப்பர் போட்டு சடங்கு வழக்கப்படிதான் எரித்தோம், அது அவர்களின் வாக்குமூலம் என்றார்.

ஓரிரண்டு நாட்கள் அந்தப் பெண்ணை எங்காவது அழைத்து சென்று குடித்தனம் நடத்தியிருந்தால் நாங்களும் எங்கள் பெண்ணைக் காணவில்லையே என்று தேடியிருப்போம் எங்களுக்கும் முன்னரே இந்த விசயம் தெரிந்திருக்கும்… இல்லையேல் முன்னரே அவன் காவல்துறை உதவியையாவது நாடியிருந்தால் இந்த அளவுக்கு சென்றிருக்காது என்றார்.

அப்போது அங்கு பறையர் சாதியைச் சேர்ந்த தெரு மக்களும் கூடியிருந்தனர். அவர்களும் ஊடே இதே கருத்தை தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

இந்த ஊரில் இதேபோல் சாதி மாறித் திருமணம் நடந்திருக்கிற்தே, கார்த்திகேயன் உறவினர்கூட பறையர் சாதியில் பெண் எடுத்திருக்கிறாரே என்று நாங்கள் கேட்டபோது ஆமாம் என்றார் முருகன் எங்களுக்கும் முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்து வைத்திருப்போம் என்றார். அப்போது, அங்கிருந்த கதிரவன் என்பவர் யார் அவன் சக்கிலி வூட்டில் பெண் எடுத்தது என்று எரிச்சலுடன் கேட்டார்.

தொடர்ந்த முருகன் – ஏன் எங்களிடம் சொல்லாமல் பார்த்து வைத்த மாப்பிள்ளையிடம் சொன்னாய் என்று கோகிலாவின் தந்தை கோபித்திருக்கிறார். இது பெற்றோர்களின் இயல்பான கோபம் தானே, திருமணம் முடிந்து 2 வருடங்கள் வேறு ஆனதால் சேர்ந்து வாழ முடியவில்லையே என்று அவள் மன உளைச்சலடைந்து தற்கொலை செய்யும் மனநிலைக்கு சென்றிருக்கலாம் என்றார்.

பெற்றோர் கோபித்ததற்கும், பெண் இறந்ததற்கும் எத்தனை நாள் இடைவெளி என்று கேட்டபோது மூன்றே நாள் என்றார், அவளை பெண் பார்க்க வருவதாக இருந்தது, அதற்குள் இப்படி நடந்துவிட்டது. இப்போது இத்தனை பேரை அனுகும் கார்த்திகேயன் ஏன் தொடக்கத்திலியே இந்த முயற்சியை எடுக்கவில்லை, எங்களிடமும் வந்து பேசவில்லை என்றார்.

திருமணம் செய்து மறைக்கும் அவசியம் ஏன் வந்திருக்கும் என்று கேட்டதற்கு, கோகிலாவின் தந்தை கோவில் நாட்டாமைக்காரராக இருந்திருக்கிறார், ஊரில் ஒரு பெரிய மனிதர் அதனால் அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம் என்றார்.

சரி பெண் ஏன் மறைத்திருப்பார் என்று கேட்டதற்கு, அவருக்கு என்ன 21 வயதுதானே ஆகிறது, என்ன மெச்சூரிட்டி இருக்கும், அதனால் தான் நாங்களே மாப்பிள்ளை பார்த்தோம். பெண் 10 ஆவது படித்திருக்கிறாள், மருந்து கம்பெனியில் வேலை பார்க்கிறாள், காலையில் செல்வாள் மாலையில் வருவாள். ஒருநாள் கூட வேறெங்கும் சென்றதில்லை எங்களுக்கும் சந்தேகம் வரவில்லை என்றார். ஆனால் ஊரில் அரசல் புரசலாக இவர்கள் சந்திப்பை பற்றி பேசிக் கொள்வார்கள். அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றார்கள். நாங்களே காதல் ஜோடிகளை சேர்த்து வைத்திருக்கிறோம், எங்களுக்கு தெரியவே இல்லாதபோது நாங்கள் என்ன செய்ய முடியும் என்றார்.

கார்த்திகேயன் சித்தப்பாவை கோகிலாவின் சித்தப்பா அடித்ததாக சொல்கிறார்களே என்று கேட்டதற்கு அப்படியெல்லாம் இல்லை என்று ஊர்காரர்கள் சொல்ல, முருகன் பெண்ணின் இறப்பு நடந்த ஓரிரு நாட்களில் கோபம் காரணமாக அப்படி ஏதாவது நடந்திருக்கலாம் ஆனால் அதன் பிறகு ஏதாவது நடந்ததா என்று விசாரித்துப் பாருங்கள் என்றார்.

அங்கிருந்த ஓர் பெண்மணியும் எவருக்கும் தெரியாதபோது இப்போது வந்து திருமணம் செய்துகொண்டதாக சொன்னால் என்ன செய்யமுடியும் என்றார் கோபமாக. யாராவது சென்று அவர்களை எதாவது செய்தால் அவர்கள் இன்நேரம் இங்கிருந்திருக்க முடியுமா, அப்படி செய்யாததால்தான் அவர்கள் அதிகம் துள்ளுகிறார்கள் (ரொம்ப போராங்க) என்றார்

முருகன் தொடர்ந்தார், கோகிலாவின் தந்தை அடுத்த நாள் கார்த்திகேயனைப் பெண் பார்க்க வருமாறு போனில் சொன்னதை பதிவு செய்திருப்பதாக அவரே சொல்லியிருக்கிறார் கேட்டுப்பாருங்கள். அதன் பிறகு கோகிலாவின் தாயார் சற்று கோபமாகப் பெண்ணிடம் பேசியிருக்கிறார், அதைத் தொடர்ந்து கோகிலா மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம்.

கோகிலா தைராய்ட் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கார்த்திகேயனோடு திருமணம் செய்யமுடியாதிருக்கிறதே என்று தற்கொலை செய்து கொண்டாரா என்று கேட்டதற்கு, முருகன் அது தன்னால் உறுதியாக சொல்ல முடியாது என்றார், ஆனால் முன்னர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றார். கதிரவன் ஆணித்தரமாக தைராய்ட் பிரச்சனையால்தான் தற்கொலை செய்து கொண்டாள் என்றார்.

கோகிலா புகைப்படம் இருக்கிறதா என்று கேட்டதற்கு அது எதுவுமில்லை எல்லாம் கொளுத்திவிட்டார்கள் என்றார். ஏன் கொளுத்த வேண்டும் என்று கேட்டதற்கு அதை தான் சொல்ல முடியாது, அவர்கள் அப்பா அம்மா இருந்தால் தான் தெரியும் என்றார்.

இது பெரிய விசயமானதற்கு காரணமே வழக்குரைஞர் லூசி தான் காரணம், எங்கள் தரப்பில் எதையும் கேட்காமல் அவர்களாகவே எல்லாவற்றையும் முடிவு செய்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்? என்றார்.

வழக்குறைஞர் கோதண்டபாணி என்பவர் லூசியை மிரட்டியதாகச் சொல்லப்படுகிறதே என்றபோது அது தனக்கு தெரியாது ஆனால் எங்கள் ஊர் விசயத்தில் ஏன் தலையிடுகிறாய், இந்த வழக்கை விட்டுவிடு என்பதுபோல் ஏதாவது சொல்லியிருக்கலாம் என்றார். மேலும் அவர் எங்கள் நெருங்கிய உறவு, கோகிலாவின் தந்தை கூட பிறந்த சித்தப்பா மகன் என்றார்.

5. முன்னாள் ஊராட்சி தலைவர் இராமமூர்த்தி, ஆசிரியர் ரமேஷ் மற்றும் சில ஊர் மக்களை அங்குள்ள கோயில் மண்டபத்தில் சந்தித்தோம்.

இராமமூர்த்தி கூறியது:

கோகிலா இயற்கை மரணமடைந்திருக்கிறார். அவருக்கு தைராய்ட் பிரச்சனை இருந்தது, அதுதான் இறப்புக்கு காரணம் என்றார்.

கார்த்திகேயன் தன்னோடு தான் எப்பொழுதும் இருப்பார் என்றும் மாமன் மச்சான் என்று பழகிவந்ததாகவும் திருமணம் செய்து கொண்டதை தன்னிடம் கூடச் சொல்லவில்லை என்றார்.

ஏன் உடலைக் கொடுக்க மறுத்தார்கள் என்று கேட்டதற்கு, உடலைக் குளிப்பாட்டி எல்லாம் முடித்தபின்னர் ஊர்வழக்கப்படி அப்படி கொடுக்க மாட்டார்கள், அதனால் தான் ஊர்மக்கள் காவல்துறையை தடுத்திருக்கின்றனர் என்றார்.

ரமேஷ் குறுக்கிட்டு எங்கள் ஊரில் சாதிப் பிரச்சனையே இல்லை, முன்னர் சக்கிலியர்கள் செறுப்பு கூட அணிந்து செல்ல முடியாத அளவுக்கு கொடுமைகள் இருந்தது ஆனால் இப்போதெல்லாம் அப்படி எதுவும் இல்ல, நாடார், வள்ளுவப் பறையர், உடையார், ரெட்டியார் என்று அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கின்றொம் என்றார்.

ஆனால் கார்த்திகேயன் எங்கள் மேல் காவல் துறையில் புகாரளித்ததோடு லூசியின் தூண்டுதலின் பேரில் ஊரெங்கும் சாதி வெறியன் நாகராஜை கைது செய்! என்று போஸ்டர் ஒட்டியிருக்கிறார். மன வேதனையாக இருக்கிறது. தலித்தல்லாத லூசி எதற்கு இதில் தலையிடுகிறார், அவர் ஒரு முதலியார் என்று சாதியை குறிப்பிட்டு பேசினார். இரவு வேளைகளில் காவல்துறை வந்து எங்களை தொந்தரவு செய்கிறது, இரவு வேளைகளில் ஊரில் ஆண்களே இருக்க முடியாமல் ஓடி ஒளிகிறோம். இத்தனைக்கும் அவன் தான் காரணம். தொடக்கத்திலேயே அவன் எங்களை நாடியிருந்தால் ஊர்காரகளே அவர்களை சேர்த்து வைத்திருப்போம் என்றார்.

காதிலித்த காலத்திலேயே நாங்கள் யாரும் கண்டிக்கவில்லையே. கார்த்திகேயன் கோகிலாவின் தைராய்ட் நோய் என்பது க்ரானிக் டிசீஸ் அவரை திருமணம் செய்வது பயனற்றது என்பதால் வேண்டுமென்றே அவரை பாலியல் வேட்கையை தீர்த்துக் கொண்டு கைவிட்டிருக்கிறார், இல்லையென்றால் தனது மனைவியை அவர் அழைத்து சென்று வாழ்ந்திருக்கலாமே என்று இராமமூர்த்தி சொன்னர்.

அவர் தவறு செய்துவிட்டு எங்கள் மேல் புகார் அளித்து இப்போது முன் ஜாமீன் பெறுவதற்கு அலையவிடுகிறார். யார் யார் மேல் புகார் அளித்திருக்கிறார் என்று கூட தெரியாமல் ஊரே பயப்படுகிறது என்றார்.

6. கதிர்வேல், கார்த்திகேயன் சகோதரர்:

என் தம்பியை அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தூண்டியதே இராமமூர்த்திதான் (அ.தி.மு.க – முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்) என்றார். அப்போது அவருக்கும் நாகராஜுக்கும் பிணக்கு இருந்தது, என் தம்பி எப்போதும் இராமமூர்த்தியுடனே இருப்பர். இது எல்லாவற்றுக்கும் காரணம் அவர்தான், நீ லவ் பண்ணு நான் பாத்துக்குறேன் என்றவர், பின்னர் நாகராஜோடு ராசியான பின்னர் என் தம்பியை கூப்பிட்டு எச்சரிக்கை விடுத்தார். தனது மாமாவிற்காக எதையும் செய்யத் தாங்கமாட்டேன் என்று சொன்னார். இரண்டு முறை அவர் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்திருக்கிறார், மக்களுக்கென்று அவர் எதுவும் செய்யவில்லை, பின்னர் நாங்கள் தமிழ் குடி என்பவருக்கு எங்கள் 12-15 ஒட்டைப் போட்டோம் அவர் செயித்துவிட்டார். அப்போதும் தம்பி அவரோடு தான் இருந்தார், அவருக்கு தான் ஓட்டு போட்டார். இதற்கு மூலக் காரணமே இராமமூர்த்திதான். தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டார்.

கோகிலா தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்று கேட்டதற்கு: இரவு 10 மணியவரை கோகிலா தம்பியோடு பேசிக்கொண்டிருந்தார். அதற்கு முந்தைய நாள் அதற்கு இரண்டு நாளுக்கு முன்பு கோகிலாவின் தாய் மாமா வீட்டில் கோகிலாவை பயங்கரமாக அடித்து கொண்டு போய் விட்டிருக்கின்றனர். அவள் மனம் மாறும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர். ஆனால் அது நடக்கவில்லை. மீண்டும் தங்களது வீட்டிற்கே அழைத்து வருகின்றனர். சனிக்கிழமை மதியம் 12 மணி வரை அவரது அம்மா கோகிலாவை நன்கு அடித்திருக்கிறார். அதை தம்பி தனது தொலைபேசியில் ஒலிப்பதிவு செய்திருக்கிறார். அதனால் வீட்டை விட்டு ஓடிவிட முடிவெடுத்திருக்கிறார் கோகிலா. இதற்கிடையில் கோகிலாவின் தந்தை கார்த்திகேயனைத் திருமணம் செய்ய சம்மதம் தெரிவிப்பதாகச் சொல்லி மறுநாள் கார்த்திகேயனை பெண் பார்க்க வருமாறு சொல்லியிருக்கிறார். மகிழ்ந்துபோன கோகிலா உடனே கார்த்திகேயனிடம் தெரிவித்திருக்கிறார். நண்பர்களிடமெல்லாம் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். அதை அம்மாவிடமும் தெரிவித்துவிட்டு தூங்கிவிட்டார்.

இரவு 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வருகிறது. கார்த்திகேயனை பாதுகாப்பாக இருக்கச் சொன்னார்கள் அவரது நண்பர்கள். நாங்கள் உடனே வெளியேறிவிட்டோம். காலையில் அம்மாவும் அண்ணியும் அடுத்த நாள் கிளம்பிவிட்டனர். அப்பா மட்டும் இரண்டு நாள்வரை அங்கிருந்தார். மிரட்டல் வரவே அவரும் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

எப்போது கம்ப்ளையிண்ட் கொடுத்தீர்கள்? என்று கேட்டபோது.

11.11.2012 அன்று மதியம் 12 மணிக்கு புகார் அளிக்க சென்றோம். பின்னர்  கோகிலாவின் பெற்றோர்தான் நம்மை எதுவும் செய்யவில்லையே பின்னர் எதற்கு புகார் என்று நான் தெரிவித்தேன். சிறிது நேரம் கழித்து கார்த்திகேயன் நண்பர்கள் உனது பாதுகாப்பிற்காகவாவது நீ முதலில் புகார் கொடு. பிணத்தை அடக்கம் செய்துவிட்டு உன்னை நிச்சயம் தாக்குவார்கள் என்றார்கள். பின்னர் அவர்கள் சென்று தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டதாக புகார் அளித்தார். புகாரளிக்க 11.30 – 12 மணியளவில் சென்றுள்ளார்கள். காவல்துறையினர் புகாரை உடனே பெறாமல் இழுத்தடித்துள்ளனர். ஒருவழியாக 12.30 மணியளவில் புகாரை ஏற்றுக்கொள்வதாக சொல்லி எழுதத்தொடங்கினர். 1.30 மணியளவில் காவல்துறை ஊருக்குள் சென்றது. 3.30 வரை என்னதான் செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. 3.30 மணிக்கு உடலை எடுத்து சென்றார்கள், எங்களிடம் கொடுக்க மறுத்தார்கள், மறித்தார்கள், எரித்துவிட்டார்கள் என்று சொல்கின்றனர்.

அந்த பெண் தூக்கு போட்டு கொண்டதாக நினைக்கிறீர்களா என்ன நினைக்கிறீர்கள் என்றபோது:

இல்லை அவரை தூங்கவைத்து தலகாணி வைத்து அழுத்தி கொன்று தூக்கிலிட்டிருக்கிறார்கள். தானாக தூக்கு போட்டுக்கொள்ளும் அளவுக்கு அவள் இல்லை. அவள் வீட்டை விட்டு ஓடிவிடுவாள் என்று தெரிந்துகொண்டதால், திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, திட்டமிட்டு கொன்றிருக்கிறார்கள் என்றார்.

கோகிலா ஏன் வீட்டை விட்டு வர சம்மதிக்கவில்லை என்றோம்:

இல்லை பெற்றோர் சம்மதத்துடன் கௌரவமாக திருமணம் செய்து ஊரில் வாழவேண்டும், ஒடிப்போய்விட்டால் அப்பா தற்கொலை செய்து கொள்வார் வேண்டாம் என்று தடுத்துவந்தார். நெருக்கடிகள் அதிகமாக 2010 ஜனவரி மாதம் அவர்கள் இரகசியமாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்கள். எங்களுக்கு எதுவும் தெரியாது. இராமமூர்த்தி தம்பியை பேச அழைத்தபோதுதான் எங்களுக்கு விசயம் தெரியும். சாதி வேற்றுமை காரணமாக சேர்ந்து வாழ விடமாட்டார்கள் என்பதால்தான் அவர்கள் மறைத்து வந்தனர்.

அவர்கள் காதலித்தது ஊருக்கே தெரியுமே அப்போது யாரும் தடுக்கவில்லையே என்றபோது:

இல்லை இல்லை, கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை தம்பியை கூப்பிட்டு அடித்திருக்கிறார். அதன் பிறகு தம்பி ஒதுங்கி இருந்தார். கோகிலாதான் அவரை துரத்தி துரத்தி காதலித்தார். இப்போது எங்கள் சித்தப்பாவையும் அடித்தவர் தனசேகர் தான்.

இதில் இராமமூர்த்தியின் பங்கு என்னவாக கருதுகிறீர்கள் என்று கேட்டபோது:

என் தம்பியை அழைத்துப் பேசும்போது எனது மாமா (நாகராஜுக்காக) நான் எது வேண்டுமானாலும் செய்வேன் என்றிருக்கிறார், தப்பா நினைக்காதே, மாமன் மச்சான் என்றெல்லாம் பார்க்கமாட்டேன். கொலையை செய்வதிலும், கொலையை மறைப்பதற்கும் அவருக்கு முக்கிய பங்கிருக்கிறது. ஒருகட்டத்தில் நாகராஜுக்கு பகை இருந்தது, பின்னர் சேர்ந்து கொண்டார். நேரம் போல் மாறிவிடுவார். அவருக்கு சாதிவெறி உள்ளது.

காதலித்தபோது தடுக்காதவர் இப்போது ஏன் இப்படிச் செய்கிறார் என்றதற்கு, இதை அரசியல் ரீதியாக கொண்டு சென்று அடுத்த பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு திட்டமிடுகிறார். அவரை கணிப்பது யாராலும் இயலாத காரியம் என்றார். கூட இருக்கும் ரமேஷுக்குத்தான் தெரியும்.

நீங்கள் தமிழ்குடிக்கு (விடுத்லை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்) ஓட்டு போட்டதால் அவர் வஞ்சம் தீர்க்கிறார் என்று கருதுகிறீர்களா என்றதற்கு ஆம் என்றார்.

தமிழ்குடி தேர்தலில் செயித்தபின்னர் இராமமூர்த்தி அவரை அடித்திருக்கிறார். ஒரே சாதியானாலும் அவர்களுக்குள் பகை இருக்கிறது. அதற்கும் சேர்த்து இப்போது அரசியல் செய்கிறார் என்றார்.

உள்ளூரில் அருந்ததியருக்கும், பறையருக்கும் பிரச்சனை இருக்கிறதா என்றோம். ஆம்! அவர்கள் எங்களை எந்த நேரத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார். பெரும் பாகுபாடு ஏதும் பாராட்ட மாட்டார்கள், ஆனால் பெறும் அன்பும் பாராட்டமாட்டார்கள். விலகியே இருப்பார்கள். நாங்களும் ஒதுங்கியே இருப்போம். பள்ளிநேலியனூரில் எங்கள் தெருவில் அந்த அளவுக்கு கிடையாது, ஆனால் கோகிலா இருக்கும் தெருவில் சாதி வெறி பயங்கரமாக இருக்கிறது என்றார்.

உள்ளூரில் நாகராஜை நிறைய பேருக்கு பிடிக்காது ஏனென்றால் அதிக வட்டிக்கு விட்டு காசு பார்ப்பார், ஆனால் அவருக்கு பயந்து கொண்டு யாரும் உண்மை சொல்ல மாட்டார்கள். மூன்று மாதம் கழித்து உண்மை மெல்ல வெளிவரும் என்றார்.

7. பெயர் சொல்ல விரும்பாத நபர்:

நாகராஜன் சாதி பார்த்ததால் கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்தார். கோகிலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்கள். 10.11.12 அன்று மாலை 7 மணியளவில் கோகிலாஅய்யோ அடிக்குறாங்களே, காப்பாத்துங்க என்று அலறிக்கொண்டே சாலையில் ஓடிவந்திருக்கிராள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஏன் பெண்ணை இப்படி அடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, எங்கள் பெண்ணை நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் உங்கள் வேலையைப் பாருங்கள், இது எங்கள் குடும்பப் பிரச்சனை என்று கோகிலா அம்மா சொல்லவே எல்லோரும் கலைந்து சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் அதிகாலை கோகிலா இறந்துவிட்டதாகச் சொல்கின்றனர். தூக்கு மாட்டிய நிலையில் அவள் உடலை யாருமே காணவில்லை. கண்கள் மட்டுமே தெரியும் வண்ணம் முழுவதும் மறைத்தபடி உடல் கிடத்தப்பட்டிருக்கிறது. காலை 10 மணியளவில் ஊராட்சித் தலைவர் தமிழ்குடி என்னவென்று விசாரிக்கச் சென்றபோது கோகிலாவின் பெற்றோர் அவரை மோசமாக திட்டியுள்ளனர் என்றார்.

11.11.12 அன்று இரவு 12 மணியளவில் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே வந்ததாக சிலர் தெரிவிக்கின்றனர் என்றார்.



8.  கோகிலாவின் தோழி தொலைபேசி வழியாக:

நாங்கள் இருவரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தோம், அந்த நிறுவனம் இழுத்து முடப்பட்ட பின்னர் தொடர்பில்லாமல் இருந்தோம். எப்போதேனும் ஒருமுறை தான் பேசுவோம். கோகிலாவும் கார்த்திகேயனும் சிறு வயது முதலே காதலித்து வந்தனர். திடீரென்று ஒருநாள் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களைக் காட்டினாள் கோகிலா. அவள் இறப்பதற்கு ஒருவாரம் முன்பு வீட்டில் விசயம் தெரிந்துவிட்டதால் கொடுமைபடுத்துகிறார்கள் என்று மற்றொரு தோழியிடம் கூறியிருக்கிறாள். ஒருவாரமாக வேலைக்கு வராததால், அந்த தோழியின் அப்பா கோகிலாவின் அப்பாவைத் தொடர்பு கொண்டு என்ன ஆச்சு ஏன் பொண்ணு வேலைக்கு வரவில்லை என்று கேட்டதற்கு, அவளுக்கு உடம்பு சரியில்லை என்றிருக்கிறார்கள். ஆனால் கோகிலாவை அடித்து துன்புறுத்தி அவளது தாய்மாமா வீட்டில் கொண்டுபோய் விட்டிருக்கின்றனர். அதன் பிறகும் அவள் மனம் மாறவில்லை என்பதால் அவளை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். 10.11.12 அன்று சனிக்கிழமை மதியம் அந்த தோழி தொலைபேசியில்  தொடர்பு கொண்டு பேசிக்கொண்டிருந்தபோது இதற்கிடையில் அறைக்குள் வந்த கோகிலாவின் அம்மா அவளை கொடூரமாக அடித்திருக்கிறார், நான் ஏன் சாக வேண்டும் வாழ்ந்தால் அவனோடு தான் வாழ்வேன் என்று கதறியிருக்கிறாள். பின்னர் அன்று மாலை தனது தந்தை திருமணத்திற்கு சம்மதித்து விட்டதாகவும், கார்த்திகேயன் நாளை பெண் கேட்டு வரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறாள். பின்னர் அதிகாலை 2.30 மணியளவில் அவள் இறந்து விட்டதாக தகவல் வந்தது. தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவள் கோழை இல்லை. எங்களுக்கெல்லாம் தைரியம்  சொல்லக்கூடியவள். அவளை இழந்து நாங்கள் தவிக்கிறோம். இருவரும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். கார்த்திகேயன் அவளை இழந்து இப்போது கஷ்டப்படுகிறார் என்றார்.

9.  கண்டமங்கலம் காவல்நிலையம் – இன்ஸ்பெக்டர் சரவணன்:

11.11.2012 அன்று மதியம் 2.30 மணியளவில் கார்த்திகேயன் என்பவர் தனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் அளிக்க வந்தார். தாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டு தனித்தனியே வாழ்ந்ததாகவும் ஒரு கட்டத்தில் அது பெண் வீட்டில் தெரிந்து அதை கடுமையாக எதிர்த்ததாகவும், 10.11.12 அன்று மாலை தனது தந்தை திருமணம் செய்துவைக்க சம்மதித்து விட்டார், பெண் பார்க்க வா என்று கோகிலா சொன்னதாகவும், இரவு பத்து மணி வரை சந்தோசமாக தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டதாகவும். 11.11.12 அன்று அதிகாலை 2.30 மணியளவில் கோகிலா இறந்துவிட்டதாக தகவல் வந்தது இந்த சாவில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று புகார் அளித்தார். எஃப்.ஐ.ஆர் போடும்போதே நான் எஸ்.ஐ மற்றும் சில ஏட்டுகளை சம்பவ இடத்திற்கு அனுப்பினேன். ஊர் கூடி அவர்களை உள்ளே விட மறுத்தது. நான் கிளம்பிச் செல்லும் முன் அவர்கள் பிணத்தை எரித்து விட்டனர் என்றார்.

போஸ்ட்மார்டத்திற்கு காவலரிடம் உடலைக் கொடுக்காதது, பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகியவை ‘offense’ ஆச்சே அதற்கு நீங்கள் ஏதும் வழக்கு போடவில்லையா என்றோம். சற்று தயங்கி, இல்லை உடலைக் கைப்பற்றும் அதிகாரம் இன்ஸ்பெக்டருக்குத் தான் உள்ளது, ஆனால் நான் செல்வதற்குள் எரித்து விட்டார்கள். அதனால்தான் தடையங்களை மறைத்ததற்காக 201 போட்டிருக்கிறோம் என்றார். அதற்கு முன் 174 மட்டும் தான் போட்டிருந்தோம் ஆர்.டி.ஓ விசாரனைக்கு சிபாரிசு செய்திருந்தோம்.

மேலும் கார்த்திகேயன் 4 மணிக்கு கோகிலாவோடு தொலைபேசியில் பேசியபோது, அவரது தாயார் கடுமையாக கோகிலாவைத் தாக்கியதும், நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும், நான் ஏன் சாக வேண்டும், அவன் என்ன உங்களிடம் பணம் கேட்டு நிற்கிறானா. வாழ்ந்தால் அவனோடுதான் வாழ்வேன் என்று கூறியதும் பதிவாகியிருக்கிறது. இதன் அடிப்படையில் 174ஐ மாற்றி தற்கொலையை மறைத்த வழக்கில் 306ம் போட்டுள்ளோம் என்றார்.

யார் யார் மேல் வழக்கு போட்டிருக்கிறீர்கள் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் மற்றும் இராமமூர்த்தி, ரமேஷ் மீது என்றார்.

கைது செய்வீர்களா என்று கேட்டதற்கு. கோகிலாவின் பெற்றோர் முன் ஜாமீன் வழக்கு விசாரனையில் உள்ளது. மற்ற இருவரை நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றார்.

வி.ஏ.ஓ வட்டாரத்தில் விசாரித்தவரை கோகிலா தற்கொலைதான் செய்து கொண்டதாகச் சொல்கிறார்கள் என்றார்.

கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்ததா, வெளியிலா என்றோம், தெரியாது என்றார். 2.30 மணி அளவில் தனியாகத் தூங்கிக் கொடிருக்கும் பெண்ணின் அறையைத் திறந்து அவள் தூக்கில் தொங்கிவிட்டாளா என்று பார்ப்பதற்காக அவள் பெற்றோர் கதவைத் திறந்திருப்பார்களா என்று கேட்டோம்…தெரியவில்லை என்றார்.





10.  கார்த்திகேயன் (வயது 27), கோகிலாவின் கணவர்:

கடந்த 9 ஒன்பது வருடங்களாக காதிலித்து வந்தோம். ஒரே வகுப்பில் படித்ததால் சிறுவயதிலிருந்தே காதல். இருவர் வீட்டிலும் சொல்லாமல் இரகசியம் காத்தோம். வீட்டில் பெரியவள் ஓடிப்போய் திருமணம் செய்தால் தவறாகிவிடும், அப்பா உயிர் விட்டுவிடுவார், பெற்றோர் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொள்வோம் என்றதால் நானும் சரி என்றேன்.  நான் தான் தினமும் திரிபுவனத்திலிருந்து வேலைக்கு அழைத்து சென்று விடுவேன், கூட்டி வருவேன்.

ஒரு மாதத்திற்கு முன்னர் எங்கள் பதிவுத் திருமண விசயம் எவர் மூலமோ கோகிலாவின் அப்பா தெரிந்துகொண்டார். அந்த ஒரு மாதத்திலேயே 4 மாப்பிள்ளைகள் பெண் பார்க்க வந்துவிட்டனர். எவரையும் தனக்கு பிடிக்கவில்லை என்று கோகிலா சொல்லிவந்தார். அதற்கு காரணம் கேட்டபோது கோகிலா உண்மையை சொல்லிவிட்டார். அதற்கு அவரது தந்தையார், அவன் என்ன சாதி, நம்ம என்ன சாதி எப்படி திருமணம் செய்து வைக்க முடியும் என்று கேட்டிருக்கிறார். அவன் யாராக இருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை நான் அவனோடுதான் வாழ்வேன் என்று கோகிலா உறுதியாக சொல்லியிருக்கிறாள். அதன் பிறகு ஒரு மூன்று நாள் கோகிலாவை வீட்டில் வைத்தே மிகவும் சித்திரவதை செய்துள்ளனர். அக்கம் பக்கம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கொத்தாம்பாக்கத்தில் உள்ள தாய்மாமன் வீட்டில் கொண்டு விட்டனர். அங்கும் வைத்து அடித்து துன்புறுத்தி சொந்தத்தில் உள்ள பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.  அதற்கு அவர் மறுக்கவே, சரி அவனுக்கே திருமணம் செய்து தருகிறோம் என்று சொல்லி அழைத்துவருமாறு அந்த வீட்டாருக்கு போன் வரவும், 9.11.12 அன்று இரவு 8.30 மணியளவில் தாய்மாமா கோகிலாவை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர். அப்போதே எனக்கு தகவல் சொல்லிவிட்டார் கோகிலா.

இரவு முழுக்க அவளை என்ன செய்யப்போகிறாய் என்று அவரது அப்பா, அம்மா கேட்டதற்கு, அவனை திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லித்தானே அழைத்து வந்தீர்கள். இப்போது மீண்டும் பழைய பேச்சை பேசுகிறீர்களே என்றதற்கு, கோகிலாவின் தந்தை அவரை மீண்டும் அடித்திருக்கிறார். பின்னர் எனக்கு ஃபோன் செய்து கோகிலா இதைச் சொன்னார். இரவு 1 மணி வரை இருந்த தாய் மாமா பின்னர் சென்றுவிட்டார். 10.11.12 அன்று காலை 10 மணிக்கு இராமமூர்த்தி என்னிடம் பேசவேண்டும் என்று நேரில் வரச்சொன்னார்.

அந்தப் பெண் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளை வேறு யாராவது ஒரு பையனை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி நீயே சொல்லு என்று இராமமூர்த்தி கூறினார். கோகிலாவின் அப்பா உன்னிடம் பேசுமாறு என்னைப் பணிந்தார். அதற்கு நான் மறுத்துவிட்டேன், நான் அப்படிச் சொன்னால் அவள் உயிரையே விட்டுவிடுவாள், வாழ்ந்தாள் அவளோடுதான் வாழ்வேன் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றேன்.

நீங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்ட விசயத்தை அவரிடம் சொல்லவில்லையா என்றோம். இல்லை சொல்லவில்லை எவரிடத்தும் நான் அதைச் சொல்வதில்லை, ஆனால் அவருக்கு விசயம் தெரியாமல் இருந்திருக்காது என்றார்.

அதற்கு இராமமூர்த்தி, சரி இந்த விசயத்தை நான் கோகிலாவின் தந்தையிடம் கூறுகிறேன், ஆனால் அவர் என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்யத் தயங்கமாட்டேன், மாமன் மச்சான் என்று கூடப் பார்க்க மாட்டேன், அவருக்காக எதுவும் செய்யத் தயங்கமாட்டேன் என்றார். நான் கிளம்பி சேலைக்குச் சென்றுவிட்டேன் என்றார் கார்த்திகேயன்.

நீங்கள் காதலித்துவந்தபோது உங்களை யாரும் கண்டிக்கவில்லையா என்றோம்:

ஒருமுறை கோகிலாவின் சித்தப்பா தனசேகர் ஒருமுறை எங்களைக் கோவிலில் பார்த்துவிட்டார். உன்னை எத்தனை தடவை அடித்தாலும் நீ அடங்கமாட்டேங்குறாய் உன்னை ஏதாவது செய்தால் தான் சரிவரும், என் அண்ணன் மகளை ஏன் காதலிக்கிறாய் என்று சொல்லி மிகவும் மோசமாகத் திட்டினார்.

முன்னர் எப்போது அடித்திருக்கிறார் என்றோம், அவர் நேரடியாக வந்து அடிக்கவில்லை திருபுவனையில் ஆட்களை வைத்து அடித்தார்கள். இந்த தொடர் மிரட்டலின் காரணமாகத்தான் பிரித்துவிடுவார்களோ என்று அஞ்சி பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.

தாய்மாமன் கிளம்பிய பின்னர் 10.11.12 அன்று என்ன நடந்தது என்றோம்.

அன்று காலை 11 மணியளவில் எனக்கு ஃபோன் வந்தது. என்னை கயிறு மாட்டி தூக்கில் தொங்கச் சொல்கிறார்கள் என்று கோகிலா சொன்னார். உடனே புறப்பட்டு அவர் வீடு வழியாக சென்று பார்த்தபோது வீட்டிற்கு வெளியே பூட்டு போடப்பட்டிருந்தது. போன் செய்து கேட்டேன், என்னை உள்ளே வைத்து பூட்டி வைத்திருக்கிறார்கள், சாகச் சொல்லி அடிக்கிறார்கள், புடவையை மாட்டி விட்டு தூக்கு மாட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள் என்றார். அதுபோல் ஏது செய்துவிடாதே என்று நான் சொன்னேன். கோகிலா இல்லை நான் அப்படிச் செய்ய மாட்டேன், உன்னுடன் தான் வாழ்வேன், என்னை என்ன அடித்தாலும் நான் நாளை வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் நாம் எங்காவது சென்று விடுவோம் என்று உறுதியாகக் கூறினார். நான் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் அப்பாஅம்மா கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தார்கள். அவளைத் தூக்கு மாட்டி தொங்கவிட்டுவிட்டு வெளியில் தாப்பால் போட்டுவிட்டு வெளியில் வந்துவிடு…என்று சொல்லி அம்மாவை உள்ளே அனுப்பிவிட்டு அவர் அப்பா வெளியில் சென்று வருகிறேன் என்று அவர் அப்பா சொன்னார் நான் லைனில் இருந்ததால் எனக்கு அது கேட்டது ஆனால் அப்போது நான் பதிவு செய்யவில்லை. சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்ததால், உடனே வீட்டிற்கு சென்று பதிவுத் திருமணம் செய்த சான்றிதழ்களை சேகரித்துக் கொண்டு நண்பருடன் கிளம்ப்பிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் கோகிலாவிற்கு ஃபோன் செய்து விசயத்தை சொல்லிக் கொண்டிருந்தேன் அப்போது மீண்டும் உள்ளே வந்து தூக்கு மாட்டி சாகச் சொல்லி அடித்துக் கொண்டிருந்தார்கள். வெளியே தாழ் போட்டு சென்றுவிட்டார்கள்.  நான் எஸ்.பி அலுவலகம் சென்று புகார் கொடுக்கப்போகிறேன், இதற்கு மேல் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது கோகிலாவிடம் போனில் கூறிவிட்டு சென்று கொண்டிருக்கையில், உடனே எனக்கு ஃபோனில் அழைப்பு வந்தது. அம்மா அப்பா மேல் புகாரெல்லாம் அளிக்க வேண்டாம், நாம் தான் நாளை கிளம்பிவிடுவோமே, புகாரெல்லாம் வேண்டாம் என்றார் கோகிலா. அவரது பேச்சைக் கேட்டு நான் வீடு திரும்பிவிட்டேன்.

மீண்டும் மாலை 4 மணி அளவில் கோகிலாவை மிகவும் அதிகமாக அடித்து டார்ச்சர் செய்கின்றனர். உன்னை அடித்துக் கொன்றாலும் கொல்வோமே தவிர, அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டோம் என்றார். அப்போதுதான் நான் அந்த பேச்சைப் பதிவு செய்தேன்.

பின்னர் ஒரு மாலை 6.30 மணியளவில் கோகிலா அழைப்பு வந்தது, அப்பா சம்மதித்து விட்டார், நாளை பெண் பார்க்க வரச்சொன்னார் என்று கோகிலா சொன்னார். நான் (கோகிலா) நம்பமாட்டேன் என்றதற்கு, இல்லை அப்பா சொன்னர் உன்னிடம்தான் ஃபோன் இருக்கிறதே நீயே தொடர்பு கொண்டு அவனிடம் சொல் என்றார் என்று கோகிலா சொன்னார். உடனே எங்கள் நண்பர்களையெல்லாம் தொடர்பு கொண்டு விசயத்தை சொல்லி அழைப்பு விடுத்தேன். பிறகு 8.30 மணி முதல் 10 மணி வரை மிகவும் சந்தோசமாகப் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தோம். காலையில் அப்பா அம்மாவை அழைத்துக் கொண்டு வந்துவிடு, காலை எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் தான் எழுந்து எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்றதால், நானும் சரி என்று சொல்லி உறங்கச் சென்றேன்.

இரவு 12 மணியளவில் எனக்கு திடீரென்று உடல் பதறியது, ஏதோ விபரதீமாக தோன்றியதால் உடனே எழுந்து அவர் செல்லுக்கு ஃபோன் செய்தேன். சுவிச் ஆஃப் என்று வந்தது. வழக்கமாக செல் சார்ஜ் போடும்போது அதை அனைத்துவைத்துவிடுவார், அப்படிதான் இருக்கும் என்று நினைத்து நானும் தூங்கச் சென்று விட்டேன். 2.30 மணியளவில் நண்பர்கள் தகவல் சொல்ல ஃபோன் செய்திருக்கிறார்கள், நான் நல்ல உறக்கத்தில் இருந்திருக்கிறேன், கேட்கவில்லை. நான் எடுக்காததால், வீட்டிற்கு வந்து தகவல் சொல்லியிருக்கின்றனர். அந்தப் பெண் இறந்துவிட்டாள், அவன் ஏதாவது செய்து கொள்ளப் போகிறான் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். 2.45 / 3 மணியளவில் என்னை எழுப்பி, பக்கத்து ஊரில் இருக்கும் அண்னனுக்குப் பிரச்சனை நீ உடனே கிளம்பி அங்கே போ என்றார்கள். நான் சட்டைய மாட்டிக் கொண்டு வண்டிஎடுக்க சென்றேன், செல்லை மறந்துவிட்டோமே என்று மீண்டும் வீட்டிற்குள் சென்று செல்லை எடுத்தபோது நண்பர்களின் (பறையர் சாதியைச் சேர்ந்தவர்கள்) மிஸ்டு கால் நிறைய இருந்தது. தொடர்பு கொண்டு என்னவென்று விசாரித்தபோது கோகிலா இறந்துவிட்டாள் என்றார்கள். என்னால் நம்பமுடியவில்லை. அங்கு சென்று பார்ப்போமே என்று கோகிலா வீட்டுத் தெரு அருகில் சென்றேன். பெண்களின் அழுகைக் குரல் கேட்டது, அதற்கு மேல் என்னால் தாங்கமுடியவில்லை, அருகில் ரைல்வே கேட் இருந்தது, அதை நோக்கி ஓடினேன், அண்ணன் எல்லோரும் சேர்ந்து தடுத்து, கண்டமங்கலத்தில் கொண்டு சென்று விட்டனர்.

விசயம் அறிந்து நண்பர்கள் எல்லோரும் வந்தனர். 12.11.12 அன்று காலை 7.30 மணியளவில் நாங்கள் 20 பேர் சேர்ந்து எங்கள் வீட்டிற்கு சென்றோம். உடலை பார்க்க வேண்டும் என்றேன். கோகிலா வீட்டருகில் இருக்கும் நண்பர்களிடம் ஃபோன் செய்து விசாரித்தேன். நீ இங்கு வந்துவிடாதே உன்னை அடித்தே கொன்று விடுவார்கள் என்று சொன்னார்கள். நண்பர்கள் மட்டும் சென்று பார்த்தனர். அங்கிருப்பவர்களிடம் கேட்டதற்கு இரவு 11 மணியளவில் என்னை அடிக்கிறார்கள், சாகடிக்கப்பார்க்கிறார்கள் என்று கதறிக் கொண்டே வீட்டிற்கு வெளியே ஓடிவந்தாள், நாங்கள் சென்று என்னவென்று கேட்டதற்கு, பெண்ணின் அம்மா, இது எங்கள் வீட்டு விசயம் நீங்கள் யாரும் தலையிடாதீர்கள் என்று சொல்லியிருக்கிறார். அவளது உடல் கண்களைத் தவிர முழுவதும் மூடியிருந்திருக்கிறது. இடது கண்களின் கீழ் காயம் இருந்தது, வலது கண்களின் மேல் காயம் இருந்தது என்றனர். நான் சென்று பார்க்க முடியவில்லை.

அதன் பின்னர் காலை 11 மணிக்கு புகார் அளிக்க கண்டமங்கலம் காவல் நிலையம் சென்றோம். அவர்கள் புகாரைப் பெறவே இல்லை. இண்ஸ்பெக்டர், எஸ்.ஐ இருவரும் இல்லை, 2 ஏட்டுகள் மட்டும் இருந்தனர். நாங்கள் இந்தப் புகாரைப் பெற முடியாது என்று சொல்லி தவிர்த்து வந்தனர். நாங்கள் 20 பேர் கெஞ்சிக்கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் அலைகழித்து 12.30 மணிக்கு புகாரைப் பெற்றனர். பின்னர் எஸ்.ஐ சேதுராமன் வந்தார், புகாரை வாங்கிப் பார்த்தவுடனே அவர் சம்பவ இடத்திற்கு முதலில் சென்றார். ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பின்னர் இன்ஸ்பெக்டர் வந்தார், ஒரு அறைமணி நேரத்தில் அவரும் கிளம்பிச் சென்றார். அப்போது 1.30 மணி இருக்கும். புகார் வந்திருக்கிறது போஸ்ட்மார்ட்டம் செய்ய வேண்டும் என்றதற்கு கோகிலாவின் பெற்றோர் உடலைத் தர மறுத்துள்ளனர். அதனால் அதிரடிப்படையை வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளார் இன்ஸ்பெக்டர்.  அதற்குள் பாடையைக் கூட முழுமையாகக் கட்டாமல் எஸ்.ஐ யைக்கூட அடித்து தள்ளிவிட்டு, பிணத்தை உடனடியாக எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர். எங்களால் அவர்களைத் தடுக்கவே முடியவில்லை என்று இண்ஸ்பெக்டர் சொன்னதாக கார்த்திகேயன் கூறினார்.

இன்ஸ்பெக்டர் ஊருக்குள் சென்றாரா என்று கேட்டபோது, வழக்குறைஞர் லூசி சொன்னது:

எஸ்.ஐ தள்ளி விட்டனர், ஸ்குவாட் போகும்போது பெண்களை விட்டு மறித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் எங்கிருந்தார் என்றபோது இளையரசன் என்பவர் குறுக்கிட்டு, இன்ஸ்பெக்டரும் அங்குதான் இருந்தார். சம்பவ இடத்தில் இருந்த 5 போலீசில் அவரும் ஒருவர்.  பின்னர் தான் ஸ்குவாட் சென்றது என்றார். தங்களையும் மீறி அவர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்று என்னிடம் சொன்னதே இன்ஸ்பெக்டர் தான் என்றார்.

உடனே கார்த்திகேயன் குறுக்கிட்டார். அந்த ஊர் பஞ்சாயத்து தலைவர் தமிழ்குடி சம்பவ இடத்தில் அப்போது இருந்திருக்கிறார். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஏம்பா நீ ஊர் பஞ்சாயத்து தலைவர் நீயாவது அவர்களிடம் சொல்லக் கூடாதா என்று இன்ஸ்பெக்டர் கேட்டிருக்கிறார்.

தமிழ்குடியை (ஜனார்தனன் என்கிற தமிழ் குடி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், வழக்குறைஞர்) பேச அனுமதிக்காமல் இது எங்கள் குடும்ப விசயம் நீங்கள் தலையிட வேண்டாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் என்றார் இளையரசன்.

இன்ஸ்பெக்டர் எங்களிடம் சொன்ன தகவலை வைத்துத்தான் எஃப்.ஐ.ஆர் காபியே நாங்கள் இம்ப்ளீட் செய்தோம். எங்களையும் மீறி பெட்ரோல் ஊற்றி எரிக்கிறார்கள், எங்களைத் தடுக்கீறார்கள் என்றால் இது கொலைதான் சந்தேகமில்லை, ஆதலால் தடையங்களை மறைக்கிறார்கள் என்கிற அடிப்படையிலும் வழக்கு பதிவு செய்யலாம் என்று காவல் துறையினர் சிலர் கூறினார்.

பிணம் பாதி எரிந்து கொண்டிருக்கையிலேயே, அவர்கள் திரும்பிவிடுகின்றனர். என்ன நடந்தது என்று கேட்டபோது, அது தற்கொலைதான் என்று இன்ஸ்பெக்டர் வலியுறுத்தத் தொடங்கினார். அதற்கு அழுத்தம் கொடுத்தார் என்று இளையரசன் தெரிவித்தார்.

11. வழக்குரைஞர் லூசி கூறியது:

உங்களை சந்திக்கவந்த ஊர் மக்களை நீங்கள் சந்திக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறதே என்றோம்:

ஆம், பொதுவாக வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது எதிர் தரப்பினரை சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் மனித உரிமை இயக்கமாக செயல்பட்டு வருகிறோம். வழக்கமாக எஸ்.சி, எஸ்.டி வழக்குகள், பெண்கள் பிரச்சனைகளைத் தொடர்ந்து எடுத்து போராடி வருகிறோம். வழக்குறைஞர்களுக்கெதிராக செயல்படக்கூடாது என்றெல்லாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரீட்டா மேரி வழக்கு எடுத்தது உட்பட அவர்களுக்கு என் மேல் கோபம்.

பலம் உள்ள எதிர் தரப்பினர் பெரும்பாலும் மிரட்டவும், சமரசம் செய்யவும் பேச வருவார்கள் அதனால் நாங்கள் அவர்களை சந்திப்பதில்லை. வழக்கு மன்றத்தில் பார்ப்போம் என்று சொல்லி விடுவேன்.

கோதண்டபாணி என்ற வழக்குறைஞர், கோகிலாவின் பெரியப்பா அவர் என்னை பார்த்து இது எங்கள் குடும்ப வழக்கு விலகிக்கொள் என்று சொன்னதற்கு நான் மறுத்துவிட்டேன். அதைத் தொடர்ந்து நான் நீதிமன்ற வளாகத்தில் வேலை பார்க்க செல்லும் போதெல்லாம் கோதண்டபாணி, பவாணி என்ற பெண் வழக்குரைஞரையும் இணைத்துக் கொண்டு மிகவும் ஆபாசமாகவும், ஆணாதிக்க மனநிலையோடும் அவதூறாக பேசியதாக சக வழக்குறஞர்கள் தெரிவித்தனர். என்னை பாரிலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்றும் பேச்சு நடந்திருக்கிறது.

இதைத் தொடர்ந்து நான் மூத்த வழக்குரைஞரிடம் முறையிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கோதண்டபாணி, ஒரு கும்பலோடு வந்து அவதூறாக பேசியபடி என்னை அடிப்பது போல் பாய்ந்தார். போய்யா என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டு என் கைப்பையை எடுத்துக் கொண்டு புறப்படச் சென்றேன்..அப்போதும் துரத்திக் கொண்டே என்னை அடிக்க வந்தார். இளையரசன் அப்போது என்னோடு தான் இருந்தார், ஆனால் அவராலும் ஏதும் செய்ய முடியவில்லை. வழக்குரைஞர் என்றால் கோர்ட்டில் பேச வேண்டும், ரோட்டில் பேசக்கூடாது என்று சொல்லி விட்டு சென்றேன். அடுத்த நாள் எங்கள் இயக்கத் தலைவர் ஜோஸிடம் கூறினேன். முறைப்படி புகார் அளிக்கச் சொன்னார்கள்.

கார்த்திகேயனுக்கு ஏன் பாதுகாப்பளிக்கிறாய், ஏன் இதில் தலையிடுகிறாய் விலகிவிடு என்பதே அவர்களது வாதம்…இந்த காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நான் கோதண்டபாணியை சாதிப் பெயர் சொல்லி திட்டியதாக என் மேல் எஸ்.சி. எஸ்.டி வழக்கு தொடர்ந்தார்கள்.  ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்னுடைய மற்ற தோழிகளையும் ஆபாசமாக பவாணி என்கிற வன்னியர் சாதியைச் சேர்ந்த வழக்குறைஞர் திட்டினார். எங்களுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை வைத்து ஆண்களோடு தொடர்புபடுத்தி, கொச்சையான பாலியல் சொற்களைச் சொல்லி ஆபாசமாக ஒன்றரை மணி நேரம் திட்டினார். பாருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொன்ன போது, நான் நீதி மன்றத்திற்கெதிராக ஏதும் செயல்படவில்லை என்று சொல்லிச் சென்று விட்டேன்.

கோகிலா எப்படி மரணமடைந்தார் என்று கருதுகிறீர்கள் என்று கேட்டபோது, ஸ்ரீனிவாசன் என்ற அருந்ததியர் சாதியைச் சேர்ந்த ஒரு நியூஸ் தரகர் எங்கள் ஆலோசனைக் கூட்டங்களுக்கு வருவார். அவரிடமே கோகிலாவின் தந்தை தான் தான் பெண்ணை அடித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். அதற்காக என்னை ஏன் தேவையில்லாமல் அசிங்கப்படுத்துகிறார்கள் என்று கேட்டிருக்கிறார். கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து வைப்பதாகச் சொல்லி ஏமாற்றி திட்டமிட்டு அவரை வரவழைத்து அவளை கொலை செய்திருக்கிறார்கள். கார்த்திகேயன் நண்பர்கள் உடலைப் பார்க்கச் சென்றபோது கோகிலாவின் கண்களின் கீழ், புருவத்தின் மேல் காயங்கள் பார்த்திருக்கிறார்கள். உடலை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறார்கள் என்றார்.

அப்போது கார்த்திகேயன், கோகிலாவின் கழுத்தில் தூக்கு மாட்டிக் கொண்டதற்கான எந்த தடயங்களும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது என்றார்.

தொடர்ந்த லூசி, ஊரில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் 11 மணியளவில் கோகிலா அலறிக் கொண்டு வெளியில் ஓடி வந்ததாகவும், 12 மணியளவில் முன்னாள் தலைவர் இராமமூர்த்தி கோகிலாவின் வீட்டிலிருந்து வெளியே சென்றதைப் பார்த்ததாகவும் கூறுகின்றனர்.

அப்போது வழக்குறைஞர் ஜோஸ் கூறியது:

தவறேதும் இல்லையென்றால் அவர்கள் ஏன் தடயங்களை மறைக்கிறார்கள். காவல்துறையினரே இந்த கேள்வி எழுப்புகிறார்கள்.

தொடர்ந்த லூசி:

11 மணிக்கு புகார் அளிக்க கார்த்திகேயன் தரப்பு சென்றுவிட்டது, 12.30 மணிக்கு புகாரை வாங்குகிறார்கள். அதன் பிறகு காவல்துறை சம்பவ இடத்தில்தான் இருந்தது. 3.30 மணிக்கு பிணம் எரிக்கப்பட்டிருக்கிறது. இடையில் என்ன நடந்தது என்பதே சந்தேகத்திற்குரியது. 

ஊரில் விசாரித்தபோது, வழக்குறைஞர்கள் சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உடலைத் தர மறுத்துள்ளனர். வேறு இருவர் பெட்ரோல் வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். கோகிலாவின் தந்தை அதை ஊற்றி எரித்திருக்கிறார். அவர் கையில், மாமாவுக்கும் முகத்தில் காயம் இருக்கு.

பெண்களை வைத்து மறித்திருக்கிறார்கள், ஆனால் காவல்துறை நினைத்திருந்தால், எரியும் நிலையிலேயேகூட பிணத்தை மீட்டிருக்கலாம். அவர்கள் அதைச் செய்யவில்லை. அதிரடிப்படை 3 குழுக்களாக இறக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலரை கண்டமங்கலம் எல்லையிலேயே நிறுத்தி வைத்துள்ளனர், சிலர் மட்டும் தான் ஊருக்குள் சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது.  ஏன்? அ.தி.மு.க கவுன்சிலர் கண்ணா என்பவர் அந்த காவல்நிலையத்திற்கெதிராகத்தான் வசிக்கிறார். அவரை மீறி இங்கு எதுவும் நடக்காது. அதிரடிப்படையும் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டது சந்தேகத்தைக் கிளப்புகிறது என்றார்.

11.11.12 அன்று மாலை 4 மணியளவில் இன்ஸ்பெக்டர் சரவணன் என்னிடம் தொலைபேசியில் பேசினார், என்ன மேடம் உங்களுக்குத் தெரியாதா, இந்த வழக்கெல்லாம் எப்படி நிற்கும் என்றார். அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், உடலைக் கொடுக்க மறுத்திருக்கிறார்கள், மறித்திருக்கிறார்கள் அதற்கு முதலில் எஃப்.ஐ.ஆர் போடுங்கள், ஃபாரன்சிக்கிற்கு உடனடியாகத் தகவல் தெரிவியுங்கள் என்று சொன்னேன் என்று லூசி தெரிவித்தார்.





எமது பார்வைகள், கேள்விகள், பரிந்துரைகள்:

1.  கோகிலா தைராய்ட் பிரச்சனையால்தான் இறந்தார் என்று அவரின் தந்தை நாகராஜன் 5.12.2012 தேதியிட்ட தமிழக அரசியல் இதழில் குறிப்பிட்டிருக்கிறார். கோகிலாவின் மாமா முருகனோ, அவர் மன உளைச்சல் தாங்காமல் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்கிறார். இக்குடும்பத்திற்கு உறவினரான முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இராமமூர்த்தி அது இயற்கை மரணம் என்கிறார். இப்படி குடும்ப உறவுகளே வெவ்வேறு தகவல்களைத் தருவது கவனத்திற்குறியது. ஆகவே கோகிலாவின் மரணத்தில் சந்தேகம் எழுகிறது.

2.  ஒருவேளை கோகிலா தற்கொலை செய்து கொண்டார் என்றிருந்தாலும், அதை காவல்துறையினருக்குச் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள். தடையங்களை ஏன் மறைத்தார்கள். உடலை போஸ்ட்மார்ட்டத்திற்கு தர மறுத்தது, மேலும் பெண்களை ஒன்று திரட்டி காவல்துறையினரை மறித்து, வழக்கத்திற்கு மாறாக பெட்ரோல் ஊற்றி எரித்தது ஆகிய செயல்கள் கூடுதல் சந்தேகத்தை எழுப்புகிறது.

3.  முன்னரே தெரிந்திருந்தால் சேர்த்துவைத்திருப்போம், காலையிலேயே கார்த்திகேயன் வந்து உடலைக் கேட்டிருந்தால்  தந்திருப்போம் என்று சொல்லும் அவர் மாமன் முருகனோ அல்லது கோகிலாவின் குடும்பத்தாரோ, கார்த்திகேயன், அதாவது கோகிலாவின் கணவருக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவோ, கணவன் என்ற முறையில் சடங்குகள் செய்யவோ ஏன் அழைப்பு விடுக்கவில்லை. இரண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் வீட்டிற்கு சென்று கார்த்திகேயனையோ, அவரது பெற்றோரையோ எவரையும் அழைக்காமல், உடலைக் காட்டாமல் அவசர அவசரமாக ஏன் எரித்தார்கள்?

உடலை எரித்த பின்னர் ஒரு சம்பிரதாயமாகவேனும் சாம்பல் கணவனிடம் ஒப்படைக்கப்படவில்லை.

4.  சடங்கு, சம்பிரதாயம் என்று சொல்லி உடலைக் கொடுக்க மறுத்த அந்த தெரு அண்டைவீட்டார் ஏன் கணவன் வந்து முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. அவருக்கு அழைப்பு விடுக்கவில்லை.

5.  இயற்கை மரணமோ, தற்கொலையோ…. ஊர்தலைவர் இராமமூர்த்தி கார்த்திகேயன் தன்னோடு மிகவும் நெருக்கமாக இருந்ததாக ஒப்புக்கொள்கிறார், அந்த உறவின் அடிப்படையில் அவராவது கோகிலாவின் உடலை முறைப்படி கார்த்திகேயன் காண வழிசெய்திருக்க வேண்டும்.  செய்யவில்லை. அதுமட்டுமல்லாது, கோகிலா இறந்ததற்கு முந்தைய நாள் அவர் கார்த்திகேயனை கூப்பிட்டு மனம் மாறிவிடும்படி அறிவுறுத்தியிருக்கிறார், நாகராஜனுக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டேன் என்று அவர் சொன்னதும், மரணம் நிகழ்ந்திருக்கும் நள்ளிரவு 12 மணியளவில் அவர் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றதைப் பார்த்ததாக வரும் தகவல்களும் பெறும் சந்தேகத்தை எழுப்புகின்றன. ஆளும் கட்சியான அ.தி.மு.க பிரமுகராக இருப்பவருக்கு சட்டம் நன்றாக தெரிந்திருக்கும், அத்தோடு அவருக்கு காவல்துறையினரிடம் செல்வாக்கு இருந்திருக்கும் அப்படியிருக்க அவர் நினைத்திருந்தால் சடங்கு செய்ய, உடலை ஒரு முறை பார்க்க கார்த்திகேயனுக்கு உதவியிருக்க முடியும். அவர் அதைச் செய்யவில்லை என்பது அவர் மீதும் சந்தேகத்தை எழுப்புகிறது.

மேலும் கோகிலா தன்னை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று அலறிக்கொண்டு இரவு 11 மணி அளிவில் வீட்டிற்கு வெளியே ஓடிவந்ததாக சொல்லப்படுகிறது. ஊர்மக்கள் என்ன பிரச்சனை என்று கேட்க, கோகிலா தாயார் இது எங்கள் குடும்ப பிரச்சனை என்று சொன்னதும் ஊர்மக்கள் ஒதுங்கிவிட்டிருக்கின்றனர்.  பின்னர் 12 மணி அளவில் இராமமூர்த்தி அந்த வீட்டை விட்டு வெளியில் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். இரவு 2.30 மணிக்கு கோகிலாவின் மரணம் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர். போஸ்ட்மார்ட்டம் செய்யாததால் கோகிலா எத்தனை மணிக்கு இறந்தார் என்பதை உறுதியாக அறியமுடியவில்லை. இரவு 11 முதல் 12 மணி வரை ஏதோ நடந்திருக்கிறது என்பதும் இராமமூர்த்திக்கும் அதில் தொடர்பிருக்கலாம் என்பதும் கார்த்திகேயன் குடும்பத்தார் மற்றும் ஊர்மக்கள் சிலரின் சந்தேகமாக இருக்கிறது. உடலைத் தரமறுத்தது இதற்கு கூடுதல் வலு சேர்க்கிறது.

மரணத்தில் சந்தேகம் என்று வந்தபின்னர் – கோகிலாவின் உறவினர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், ஆளும் கட்சி பிரமுகர் என்கிற செல்வாக்கில் இராமமூர்த்தி உடலை மீட்டு போஸ்ட்மார்டத்திற்கு கொடுக்க வழிவகை செய்திருக்கமுடியும்.

இப்போதைய ஊராட்சி மன்ற தலைவர் தமிழ் குடி மீது அவர் கடும் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகச் சொல்லப்படுகிறது. மேலும் கார்த்திகேயன் குடும்பத்தார் அவர்களுக்கு ஓட்டு போட்டு செயிக்க வைத்துவிட்டார்கள் என்பதில் அவர்கள் மீதும் கோபத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  அவர் ஒரு முறை தமிழ்குடியை அடித்ததாகவும் சொல்கிறார்கள். தொடக்கத்தில் கார்த்திகேயனை காதலிக்க தூண்டியவரே இராமமூர்த்திதான் பின்னர் அரசியல் ஆதாயங்களுக்காக நாகராஜனுக்கு ஆதரவாக மாறிவிட்டார். நாகராஜனுக்காக எதுவும் செய்வேன் என்று இராமமூர்த்தி சொல்லியிருப்பது கூட அடுத்த தேர்தலில் செயித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்கள் செய்த கொலையை மறைக்கப்பார்க்கிறார், 12 மணியளவில் கோகிலா வீட்டை விட்டு வெளியே சென்றார் என்பதை வைத்துப் பார்க்கும்போது கொலையிலும் அவருக்கு பங்கிருக்கிறது என்று கார்த்திகேயன் அண்னன் கதிர்வேலின் கருத்து கவனிக்கத்தக்கது.

6.  புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆசிரியர் ரமேஷும் இராமமூர்த்திக்கு மிகவும் நெருக்கமானவர், இரமமூர்த்திக்காக மிகவும் பரிந்து கொண்டு பேசினார், மேலும் வழக்குறைஞர் லூசி மீது கடும் கோபமான  சொற்களைப் பிரயோகித்தார். அவர் தலித்தல்லாதவர், முதலியார் இந்த பிரச்சனையில் அவருக்கு என்ன ஆர்வம் என்று சொன்னபோது அவருடைய சாதி வெறுப்பை எங்களால் உணரமுடிந்தது. ஒரு பெண்ணின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்ட விஷயத்தில், மனித உரிமையில் அக்கறையுள்ள யாரும் தலையிட உரிமையுள்ளது. இதில் தலித் உயிர், முதலியார் உயிர் என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. லூசியை சாதி ரீதியாக தனிமப்படுத்திவிட்டால் வழக்கு இல்லாமல் செய்யல்லாம் என்றே ரமேஷ் கருதுகிறார்.

7.  கோகிலாவின் வீட்டருகே உள்ளவர்களின் பேச்சுக்களிலும் சாதிப் பற்றை காண முடிந்தது.

8. கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகாரை உடனே வாங்காமல் காலம் தாழ்த்தியுள்ளார்கள். ஆனால் எங்களிடம் இன்ஸ்பெக்டர் சரவணன் 2.30 மணிக்குத்தான் அவர்கள் வந்தார்கள், உடனே புகாரைப் பெற்றுக் கொண்டு தன் சகாக்களை அனுப்பியதாகவும், தான் செல்லும் முன்னரே பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார்கள் என்றும் சொன்னார்.

மாறாக 5.12.12 தமிழக அரசியல் நாளிதழில் “கோகிலாவின் உடலை எடுக்கச் சென்றபோது எடுக்க விடாமல் கோகிலாவின் குடும்பத்தினர் என்னைத் தடுத்தனர். நாங்கள் செய்த விசாரணையில் அந்தப்பெண் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. தற்கொலையை மறைத்தது தவறு. அதற்காக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார்.



இந்த இரண்டு தகவல்களிலும் முரண் இருக்கிறது. உடலைக் காணாதபோது, ஊரே கூடி உடலை தர மறுத்து, மறித்து போஸ்ட்மார்ட்டமும் நடக்காதபோது ஒரு காவல்துறை ஆய்வாளராக அது கொலையாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் கொள்வதே யதார்த்தம் ஆனால் இவர் தற்கொலைதான் என்று அழுத்தமாகச் சொல்வதின் பின்னணி என்ன என்று ஆய்வு செய்ய வேண்டும்.

உடல் எரிக்கப்பட்டிருந்தாலும் ஃபாரென்சிக் துறைக்கு தகவல் சொல்லுங்கள் என்று வழக்குறைஞர் லூசியா சொல்லியும் இதுவரை ஃபாரென்சிக் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை, ஆய்வு செய்யப்படவுமில்லை.

காவல்துறையினர் பணி செய்யவிடாமல் தடுத்ததற்காக சம்பந்தபட்ட ஊர் மக்கள் மீது எந்த வழக்கும் பதியப்படவுமில்லை.

குற்றம் சாட்டப்பட்டுள்ள இராமமூர்த்தியையும், ரமேஷையும் நாங்கள் எளிதாக பார்த்துபேச முடிந்தபோது அவர்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இன்னும் அகப்படவில்லை அதனால் கைது செய்யமுடியவில்லை என்று இன்ஸ்பெக்டர் சரவணன் தெரித்தது வேடிக்கையாக இருந்தது.

கோகிலா தூக்கில் தொங்கிய அறையில் அவள் எப்போதும் தனியாகவே தூங்குவாள் என்று சரவணன் தெரிவித்தபோது, அப்படியென்றால் அதிகாலை இரவு 2.30 மணிக்கு என்ன காரணத்திற்காக கோகிலாவின் பெற்றோர் அந்த கதவைத் திறந்து பார்த்திருப்பார்கள் என்று கேட்டதற்கு அவரிடத்தில் பதில் இல்லை. மேலும் உள் தாழ்பால் போடப்பட்டிருந்ததா, வெளிதாழ்ப்பால் போடப்பட்டிருந்ததா என்ற கேள்விக்கும் அவரிடத்தில் பதில் இல்லை. ஆனால் விசாரனையில் அவள் தற்கொலைதான் செய்து கொண்டதாகத் தெரிகிறது என்று எங்களிடமும் உறுதியாகக் கூறினார். அப்படியென்றால் இதுபோன்ற அடிப்படை கேள்விகளைக் கூட கேட்காமல் அவர் என்ன விசாரனை செய்திருப்பார் என்பது கேள்வியாக இருக்கிறது. 

9. கோகிலாவின் பெற்றோர் அடித்து துன்புறுத்தியிருப்பதாக எல்லோரும் ஒப்புக்கொள்கின்றனர். மேலும் தன்னை சாகச்சொல்வதை எதிர்க்கும் கோகிலாவின் பேச்சும் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நாள் தாய் மாமன் வீட்டிலிருந்த கோகிலாவை கார்த்திகேயனுக்கு திருமணம் செய்துவைப்பதாகச் சொல்லி வரவழைத்திருக்கிறனர். அதன் பிறகும் கோகிலாவை அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். தற்கொலைக்கும் தூண்டியுள்ளனர். இந்த முரண்பட்ட செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும்போதும், சக்கிலியப் பையனுக்கு கட்டிக் கொடுப்பதா என்ற அவர்களின் பேச்சைக் கொண்டு அவர்களுக்குள் ஒரு சாதி வெறி இருந்திருப்பதைக் காணமுடிந்தது.

இந்த சாதி வெறிக் கொலையில் சாதியத்தின் பங்கும், வர்க்க அரசியலின் ஆதிக்கமும்

பரந்த அளவில் சாதி மறுப்பை பேசுபவர்கள் கூட ஆண் தாழ்த்தப்பட்ட சாதியில் இருந்தால் பெண் கொடுப்பதை விரும்புவதில்லை. பெண்ணை அடக்கி வைப்பதுன் மூலமே பல்லாண்டு காலமாக சாதிகள் கட்டிக் காக்கப்பட்டுள்ளன. அந்த உளவியல் படி பார்த்தால் மேல் சாதியில் (அப்படி வகுக்கப்பட்ட) உள்ள ஆணை காதலித்தால் ஏற்றுக் கொள்ளும் மனம் தாழ்த்தப்பட்ட சாதியில் உள்ள ஆணை ஏற்றுக் கொள்வதை அவமானமாகவே கருதுகிறது. சாதிய அடுக்கில் தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கும் இருசமூகத்திற்குள்ளும் (பறையர்-அருந்ததியர்) இத்தகைய ஒரு சாதியப் பற்றை வெளிப்படுத்துகிறது. அந்த ஆண் ஒரு தாழ்த்தப்பட்ட சாதி என்ற ஒரே காரணம் ஒரு பெண்ணின் உயிரைக் குடிக்கும் அளவுக்கு சென்றிருக்கிறது.

பள்ளிநேலியனல்லூரில் கார்த்திகேயன் வசிக்கும் பகுதியிலும் ஊரின் மற்ற பகுதிகளிலும் பொதுவாக சாதிய பாகுபாடு வெளிப்படையாக கடைப்பிடிக்கப்படவில்லை என்றபோதிலும் கோகிலாவின் தாய், தந்தை சாதி பார்த்த்தால் தான் கார்த்திகேயனுக்கு திருமணம் செய்து கொடுக்கவில்லை, அதைத் தொடர்ந்து அவரை சித்திரவதை செய்திருக்கிறார். இன்று அந்தப் பெண் மர்மமான முறையில் இறந்திருக்கிறார். இத்தனை நாள் பதுங்கியிருந்த சாதியப் பூனை இப்போது வெளிவந்திருப்பதாகவேத் தோன்றுகிறது, ஏனென்றால் அந்த தெருவேச் சேர்ந்து (பறையர் பெரும்பான்மையினர்) உடலை எரித்திருக்கிறது. விசாரணைக்கு சென்றபோதும் ஒன்று கூடி நாகராஜன் குடும்பத்தாருக்கு சாதகமாகவே பேசுகின்றனர். ஊராட்சி மன்றத் தலைவரும் வெளிப்படையாக பேசமுடியாத அளவுக்கு வர்க்க செல்வாக்கும், அதே சாதியைச் சேர்ந்த ஆளும் கட்சி அரசியல் பிரமுகரின் ஆதிக்கத்தையும் காண முடிகிறது. பறையர் பெரும்பான்மையினர் தங்களின் சாதியைச் சேர்ந்த ஒரு நபரை காக்கும் முயற்சி வெளிப்படையாகத் தெரிகிறது.

தருமபுரி தலித் கிராமங்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கு பெரும் ஆர்பாட்டங்களைச் செய்த அமைப்புகள், கட்சிகள் அருந்ததியினர் இன மக்கள் ஒடுக்கப்படும்போதும் அப்படிப்பட்ட ஆர்பாட்டங்களைச் செய்கிறார்களா என்பது ஒரு கேள்வியாக வைக்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்னர் அருந்ததியர் சாதியைச் சேர்ந்த விவேகானந்தா கல்லூரி மாணவி காயத்திரி மர்மமான  முறையில் இறந்து போனார். அப்போதும் அருந்ததியர் அமைப்புகளும், பெரியார் திராவிடக் கழகமும், எஸ்.எஃப்.ஐ போன்ற மாணவ அமைப்புகளும் சிறு சிறு போராட்டங்களை நடத்தின ஆனால் தர்மபுரி தலித் கிராமங்கள் தீக்கிரையான பிரச்சனையில் கூட்டியக்கங்கள் வரை அமைத்து நீதி கேட்டுப் போராடும் அமைப்புகள் ஏன் காய்த்ரி பிரச்சனையில் முழுவீச்சான ஒரு போராட்டத்தை முன் எடுக்கவில்லை என்ற கேள்வி அருந்ததியர் மத்தியில் எழுகிறது.

பரிந்துரைகள்:

1.  காவல்துறையினரின் முரண்பட்ட தகவல்களும், தற்கொலை என்று அழுத்தம் கொடுப்பதாலும் இந்த வழக்கு விசாரனை சிபி-சிஐடிக்கு மாற்றப்பட வேண்டும்.

2.  புகாரளிக்க வந்தபோது காலம் தாழ்த்தி, உடனடியாக நடவடிக்கையில் இறங்காததால் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது, தடையங்களும் அழிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே காவல்துறையினரின் தாமத நடவடிக்கை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. வரதட்சனைக் கொடுமைக்கெதிராக அல்லது குடும்ப வன்முறைக்கெதிராக பெண்ணின் கணவரோ அல்லது உறவினரோ செய்யும் துன்புறுத்தலுக்கெதிராக ஐ.பி.சி 498 ஏ என்று ஒரு சட்டம் இருக்கிறது, ஆனால் சாதி மறுப்பு காதலைத் தொடர்ந்து பெற்றோர் பெண்கள் மிது நிகழ்த்தும் குடும்ப வன்முறைக்கெதிராக ஏதும் கடுமையான சட்டங்கள் இல்லை, ஆகவே பெற்றோர் பிள்ளைகள் மீது செலுத்தும் வன்முறைக்கெதிராக உடனடியாக அரசு ஒரு முழுமையான, கடுமையான சட்டத்தை வகுக்க வேண்டும். அதில் உடல்ரீதியாக, மனரீதியாக தொடுக்கப்படும் ஒடுக்குமுறை, வன்முறை ஆகியவையும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும்.  அதன் கீழும் கோகிலாவின் பெற்றோர் கைது செய்யப்பட வேண்டும். 



4. உடலைத் தர மறுத்து, மறித்து காவல்துறையை பணியாற்றவிடாமல் செய்த சம்பந்தப்பட்ட நபர்களை, ஊர் மக்களை ஐ.பி.சி  பிரிவு 353 படி வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்.  (Section 353 of the Indian Penal Code for causing obstruction in discharge of official duty which was applied in Koodankulam )

5.  கோகிலாவின் பெற்றோர் கார்த்திகேயனை சக்கிலியப் பையன் என்று வசை பாடியிருப்பது தெரிகிறது இந்த சாதியப் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

6.  கார்த்திகேயனை மிரட்டியவரும், அவரின் சித்தப்பாவை அடித்தவருமான சித்தப்பா தனசேகர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

7. சாதி மறுப்பு திருமணங்களுக்கெதிராக பிரச்சாரங்கள் செய்து வரும் கட்சிகளும், அமைப்புகளும் இதுபோன்ற கௌரவக் கொலைகளுக்கு மறைமுக காரணமாகக் கருதப்பட வேண்டும். அக்கட்சிகள் மேலும் அத்தகைய மக்கள் விரோதப் பிரச்சாரங்களைச் செய்யாமல் இருக்க அரசு உடனே தடை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் அத்தகைய சாதிக் கட்சிகளை, சங்கங்களை, பேரவைகளை தடை செய்ய வேண்டும்.

8.  கௌரவக் கொலைகளுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பிரச்சாரத்தை அரசு பரவலாக மேற்கொள்வதோடு. இந்திய அரசியல் சாசனம் கொடுத்திருக்கும் பெண்ணுக்கு இருக்கும் துணை தேடும் உரிமை குறித்த பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

9. மாநில பெண்கள் ஆணையம் இது போன்ற கொலைகள் நடந்தவுடன், அவ்விடங்களுக்கு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அனுப்பி விசாரிக்க வேண்டும். அவர்களின் தகவல் அறிக்கைகள் பொதுத் தளங்களில் பதியப்பட வேண்டும்.

10. இவ்வழக்கை கையாளும் லூசியா மற்றும் அவரது மூத்த வழக்குறைஞர் ஜோஸ் ஆகியோருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். லூசியாவை அவதூறாகப் பேசிய அணைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11. கார்த்திகேயன் மற்றும் தற்போது அவருக்கு உதவியாக இருக்கும் அவரது நண்பர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

டென்மார்க்கில் நூலறிமுகமும் புத்தகக்கண்காட்சியும்



காலம்: 06.11.2011. மதியம்13.00 மணி
இடம்: lindetorvsalen, lindetorvet 2, 6600 Vejen (லூபியா சுப்பர் மார்க்கட்டுக்குமேல்)

பாலசுகுமாரின் கொட்டியராம் இலக்கிய மரபு
விமல் குழந்தைவேலின் கசகறணம்
பானுபாரதியின் பிறத்தியாள்

கருத்துரை வழங்குவோர்
த.யோகராஜா
க.ஆதவன்
திருரவிச்சந்திரன்


கரவைதாசன்
ந.முரளிதாஸ்
வீ.ஸ்ரீகதிர்காமநாதன்
கொக்குவில்கோபாலன்
கி.சே.துரை
த.தர்மகுலசிங்கம்
எம்.சி. லோகநாதன்

ஏற்புரை:
பாலசிங்கம் சுகுமார்
விமல் குழந்தைவேல்
பானுபாரதி விமல்

கவிதைக்களம்
எம்.சி.லோகநாதன்
வேலனையூர் பொன்னண்ணா
அம்பிகுலம்
சுஜிகா மயில்வாகனம்

ஒருங்கமைப்பு:
இனி வாசகர்வட்டம் டென்மார்க்
தொடர்புக்கு:
தாஸ் 41427562
கோபால் 20658961
கந்தசாமி 32148760

பரமக்குடி : உண்மை அறியும் குழு அறிக்கை



பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் 6 தலித்கள் பலி:
உண்மை அறியும் குழு அறிக்கை

21.09.2011
மதுரை

கடந்த செப்டம்பர் 11, 2011 அன்று பரமக்குடி ஐந்து முக்குச்சாலையில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 6 தலித்கள் கொல்லப்பட்டும், சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றும் உள்ளதை பல்வேறு அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்பினரும் கண்டித்துள்ளனர். இதுதொடர்பாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் கொண்ட உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க்கண்டவாறு அமைக்கப்பட்டது.

உறுப்பினர்கள்
  1. பேரா.அ.மார்க்ஸ் - மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை.
  2. கோ.சுகுமாரன் - மக்கள் உரிமை கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
  3. வழக்குரைஞர் ஏ. முஹம்மது யூசுப், NCHRO – தமிழ்நாடு
  4. வழக்குரைஞர் ரஜினி, PUHR, மதுரை
  5. பேரா. ஜி.கே.ராமசாமி மக்கள் ஜனநாயக மன்றம் (PDF), கர்நாடகா
  6. வழக்குரைஞர் கார்த்திக் நவயான் - தேசிய தலித் முன்னணி (NDF), ஆந்திர மாநிலம்
  7. ரெனி அய்லின், தேசிய ஒருங்கிணைப்பாளர், NCHRO, கேரளம்
  8. பேரா.பிரபா.கல்விமணி - மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
  9. பி.எஸ்.ஹமீது - SDPI, தமிழ்நாடு
  10. பேரா.சே.கோச்சடை - மக்கள் சிவில் உரிமைக் கழகம் (PUCL), காரைக்குடி
  11. ஏ. சையது ஹாலித் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, இராமநாதபுரம்
  12. மு.சிவகுருநாதன் - PUHR, திருவாரூர்
  13. கவிஞர் குட்டி ரேவதி - ஆவணப்பட இயக்குநர், சென்னை
  14. முனைவர் தி.பரமேஸ்வரி - கவிஞர், காஞ்சிபுரம்
  15. கு.பழனிச்சாமி – PUHR, மதுரை
  16. வழக்குரைஞர் முஹம்மது சுஹைப் செரீஃப் – NCHRO,கர்நாடகம்
  17. வழக்குரைஞர் தய்.கந்தசாமி – தலித் பண்பாட்டுப் பேரவை, திருத்துறைப்பூண்டி
  18. தகட்டூர் ரவி - PUHR, கல்பாக்கம்


இக்குழு செப்டம்பர் 19, 20 ஆகிய தேதிகளில் பரமக்குடி, சுற்றுவட்ட கிராமங்கள், இராமநாதபுரம், மதுரை ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களையும், அரசு அதிகாரிகளையும், பொதுமக்களையும் சந்தித்து, விரிவாக அவர்களிடம் பேசி அவற்றை ஒலி - ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொண்டது. முதல் தகவல் அறிக்கைகள், காவலில் வைக்கப்பட்டோருடைய விவரங்கள் ஆகியவற்றையும் தொகுத்துக் கொண்டது.
பின்னணி
பரமக்குடி, கமுதி, இராமநாதபுரம் முதலானவை சாதி முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள பகுதிகள். கடந்த 50 ஆண்டுகளாகவே இங்கு பல கலவரங்கள் நடைபெற்று வருகின்றன. 1957ல் நடைபெற்ற முதுகுளத்தூர் கலவரம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது கொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரன் அப்பகுதி தேவேந்திரகுல வேளாளர்களின் வணக்கத்திற்குரிய பெருந்தலைவராக (icon) உருப்பெற்றுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் எப்படி தேவர்கள் மத்தியில் ஒரு திருஉருவாக உருப்பெற்றுள்ளாரோ அதே வடிவில் தேவேந்திரர்களுக்கு இம்மானுவேல் சேகரன் உருவாகியுள்ளார்.
முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை அவர்களது சமூகத்தவர்களால் அவரது பிறந்த நாளன்று பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. ‘தெய்வத்திருமகனார்’ என அவர் வழிபடப்படுகிறார்.

இப்பகுதியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தேவேந்திரர்கள் வசிக்கின்றனர். கல்வி முதலிய வளர்ச்சிகளின் விளைவாக இம்மானுவேல் சேகரனின் காலம் தொடங்கி அமைப்பு ரீதியாக ஒருங்கு திரளும் போக்கு இவர்கள் மத்தியில் உருவாகியுள்ளது. ஒடுக்குமுறையை ஏற்காத மனநிலையும், அடையாளத்தை உறுதி செய்துகொள்ளும் சுயமரியாதைப் போக்கும், அதற்குரிய வகையில் வரலாற்று உருவாக்கமும் நடைபெற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை இதுகாறும் ஆதிக்கம் செய்து வந்த சாதியினரும், அரசு எந்திரமும் சகித்துக்கொள்ளாத நிலையின் விளைவாக சமூக முரண்கள் கூர்மையடைகின்றன.

கல்வி மற்றும் ஜனநாயக உணர்வுகள் வளர்வதன் ஊடாக மேலெழும் அடித்தள மக்களின் அடையாள உறுதிப்பாட்டை ஆதிக்க சமூகமும், ஆதிக்க சமூகத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கும் அரசும் ஏற்காததன் உச்சகட்ட வெளிப்படையாகவே இன்று இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

1987 முதல் பூ. சந்திரபோஸ் அவர்களின் தலைமையிலான ‘தியாகி இம்மானுவேல் பேரவை’ என்கிற அமைப்பு இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை (செப்டம்பர் 11) கொண்டாடத் தொடங்குகிறது. ஆண்டுக்காண்டு கூடுகின்ற கூட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. 1995 - 97ல் தென்மாவட்ட சாதிக்கலவரங்கள் ஏற்படுகின்றன. ‘புதிய தமிழகம்’ கட்சியும் இங்கே வேர் பதித்துச் செயல்படத் தொடங்குகிறது. இப்பகுதியில் தேவேந்திரர்களின் முக்கியத் தலைவர்களாக ஜான்பாண்டியன் முதலானோர் உருப்பெறுகின்றனர்.

இதே காலகட்டத்தில் தேவர் குருபூஜை, அரசே பங்கேற்று நடத்தக்கூடிய விழாவாக மாறுகிறது. 2007ல் தேவருடைய மறைவின் 50வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவிடத்திற்கு அருகில் வசித்துக் கொண்டிருந்த சுமார் 100 தேவேந்திரர்களின் குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அரசே முன்னின்று இதைச் செய்தது.

இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளும் இதேபோல பெரிய அளவில் கொண்டாடப்படுவதை ஆதிக்க மனங்கள் ஏற்க மறுத்தன. தங்களைப் போலவே தேவேந்திர குலத்தினரும் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை ‘குருபூஜை’ என அழைப்பதையும் அவர்கள் ஏற்கவில்லை. 2007 தொடங்கி ஆகஸ்ட் - செப்டம்பர் - அக்டோபர் ஆகிய மாதங்களில் ஏதேனும் ஒரு வன்முறையை தேவேந்திரர்கள் மீது ஏவும் போக்கு இருந்துள்ளது. 2007ல் வின்சென்ட் என்பவரும் 2009ல் அறிவழகன் என்பவரும், சென்ற ஆண்டு (2010 ஆகஸ்ட் 30 ) “குருபூஜைக்கு அணி திரள்வீர்” என சுவரெழுத்துக்கள் எழுதிய கொந்தகை அரிகிருஷ்ணனும் ஆதிக்கச் சாதியினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேவேந்திரர்களின் அரசியல் கட்சியாக அடையாளம் காணப்பட்டுள்ள புதிய தமிழகத்தைச் சேர்ந்த இருவர் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாள் சிறையிலிருந்த ஜான்பாண்டியனும் விடுதலையடைந்தார். இவையெல்லாம் தேவேந்திரர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை வேறெப்போதைக் காட்டிலும் அதிகமாக ஏற்படுத்தியுள்ளது. சென்ற ஆண்டு (2010) இம்மானுவேல் சேகரனின் குரு பூஜையில் பங்கேற்ற அ.இ.அ.தி.மு.க தலைவர் நயினார் நாகேந்திரன் தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக நடத்துவோம் என அறிவித்ததும், 2010 அக்டோபர் 9 அன்று இம்மானுவேல் சேகரனின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் தேவேந்திரர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியையும் நிறைந்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஆதிக்க சாதியினர் இதை மிகவும் வெறுப்புடன் பார்த்து வந்தனர். ஆப்ப நாடு மறவர் சங்கம் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில் இவ்வாறு இம்மானுவேல் சேகரனின் குருபூஜை முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜைக்குச் சமமாக மேலெழுந்து வருவதைத் தடுக்க வேண்டுமென கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூலித்தேவனுக்குச் சமமான மன்னராக ஒண்டி வீரனை அருந்ததியர்கள் முன்னிறுத்துவதை நடராஜன் (சசிகலா) முதலானோர் கண்டித்து வருவது இத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 9ம் தேதியன்று கமுதிக்கு அருகில் உள்ள மண்டல மாணிக்கம் கிராமத்தை ஒட்டிய பள்ளப்பச்சேரி எனும் தலித் கிராமத்தைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற 16 வயது தேவேந்திரர் குலச் சிறுவன் கொடுமையாக வெட்டிக் கொல்லப்பட்டான். இது தொடர்பாக தேவர் சாதியைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டனர். கொல்லப்பட்ட சிறுவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டார்.

இதே நேரத்தில் (செப்டம்பர் 7 ) அரசுப் போக்குவரத்து கழக பட்டியல் சாதித் தொழிற்சங்கத்தினர் “தேசியத் தலைவர் தெய்வத் திருமகனார்” என இம்மானுவேல் சேகரனை விளித்து, பிளக்ஸ் போர்டு ஒன்றை பரமக்குடி நகரத்தில் வைத்தனர். உடனடியாக இதனை எதிர்த்து ‘மறத்தமிழர் சேனை’ என்கிற அமைப்பும் தேவர் சாதியைச் சேர்ந்த வழக்குரைஞர்களும் களம் இறங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினருக்கு அழுத்தம் கொடுத்தனர்.தெய்வத்திருமகனார் என்கிற அடைமொழியைத் தேவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இம்மானுவேல் சேகரனுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று அவர்கள் புகார் செய்தனர்.

இது பட்டியல் சாதியினரின் சட்டப்பூர்வமான உரிமை என்று கூறி பாதுகாப்பளித்திருக்க வேண்டிய ரெவின்யூ நிர்வாகமும், காவல் துறையும் பட்டியல் சாதி அமைப்பினரை வரவழைத்து, அந்த ஃப்ளக்ஸ் போர்டிலுள்ள இவ்வார்த்தைகளை நீக்க வேண்டுமென வற்புறுத்தின. அவர்களும் பணிந்து அச்சொற்களை நீக்கினர். இது தேவேந்திரர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தவே தெய்வத் திருமகனார் என இம்மானுவேல் சேகரனை விளித்து பல பிளக்ஸ் போர்டுகளை ஆங்காங்கு அடுத்தடுத்த நாட்களில் அவர்கள் நிறுவினர். இதைக் கண்டு இப்போது ஆதிக்க சாதியினர் மட்டுமல்ல, காவல் துறையும் அரசு நிர்வாகமும் சேர்ந்து ஆத்திரமடைந்தது. பரமக்குடியிலுள்ள எந்த ஃப்ளக்ஸ் போர்டு அச்சகமும் இதுபோன்ற ஃப்ளக்ஸ் போர்டுகளை அச்சிடக் கூடாதென காவல்துறை மிரட்டியது.

இந்தப் பின்னணியில் தான் செப்டம்பர் 11 அன்று இம்மானுவேல் சேகரன் நினைவு நாளில் அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களுக்கும் காவல் துறைக்கும் இடையில் முரண்பாடு எழுந்து, துப்பாக்கிச் சூட்டில் 6 அப்பாவி உயிர்கள் பலியாகவும், ஏராளமானோர் படுகாயமடையவும் நேரிட்டது.


செப்டம்பர் 11 துப்பாக்கிச் சூடு குறித்து நாங்கள் அறிந்த உண்மைகள்

1. துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தி துப்பாக்கிச் சூட்டை விடவும் கொடுமையான மொழியில் சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா இரண்டு தவறான தகவல்களைக் கூறியுள்ளார். அவை:
(அ) முத்துராமலிங்கத் தேவரை இழிவு செய்து மண்டல மாணிக்கம் கிராமச் சுவற்றில் எழுதியதாலேயே பழனிக்குமார் கொல்லப்பட்டான் என்றது. இது உண்மையல்ல. மண்டல மாணிக்கம் தேவர் சாதி ஆதிக்கம் உச்சமாக உள்ள ஒரு ஊர். இதன் காரணமகவே இந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பயில்கிற தேவேந்திரர் குலப் பிள்ளைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டு வேறு ஊர்களில் உள்ள பள்ளிகளில் சேர்கின்றனர். 2010-11 கல்வியாண்டில் மண்டல மாணிக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற 28 தலித் பிள்ளைகளில் இவ்வாண்டு 23 பேர் இவ்வாறு டி.சி. பெற்றுச் சென்றுள்ளனர். இக்கிராமத்திற்குள் தலித் மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக உலவக்கூட முடியாத நிலையில் வேற்றூரில் படிக்கக்கூடிய 16 வயது சிறுவன் பழனிக்குமார் அங்கு சென்று ஏழரை அடி உயரமுள்ள ஒரு சுவற்றில் தேவரை இழிவு செய்து எழுதினான் என்று சொல்வதை யாரும் ஏற்க இயலாது.
(ஆ) ஜான் பாண்டியன் இந்த கிராமத்திற்கு படை திரட்டிச் சென்றதால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டி வந்தது என்பது முதல்வர் சொன்ன இரண்டாவது பொய். ஜான் பாண்டியனைப் பொருத்தமட்டில் அன்று தூத்துகுடியில் நடைபெற்ற ஒரு பூப்பு நீராட்டு விழாவிற்கு வருகிறார். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு அவர் செல்லக்கூடாதென இராமநாதபுரம் ஆட்சியர் தடையுத்தரவு இட்டதை அறிந்து அவர் திரும்பவும் திருநெல்வேலி செல்கிறார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள துப்பாக்கி சுடும் பயிற்சிப் பள்ளியில் வைக்கப்படுகிறார். எவ்வகையிலும் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் உத்தரவுகளை மீறுவது என்கிற முனைப்பு ஜான்பாண்டியனிடம் இருக்கவில்லை என்பதே உண்மை. தடையை மீறி அவர் படைதிரட்டிச் சென்றதாக முதல்வர் கூறியுள்ளது, அதிகாரிகளின் கூற்றை அவர் அப்படியே ஏற்றுக் கொண்டதையே காட்டுகிறது.

2. செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு முழுக்க முழுக்கக் காவல் துறையின் திட்டமிட்ட செயலாகத் தெரிகிறது. தேவேந்திரர்களின் ஓர் அடையாளத் திருவிழாவாக மாறிப்போன ஒரு நாளில், அஞ்சலி செலுத்த வந்த அவ்வினத் தலைவர் ஒருவரைத் தடுத்தது ஒரு முட்டாள்தனமான செயல் மட்டுமல்ல; கலவரத்தைத் தூண்டக்கூடிய செயலும் கூட. தவிரவும், தடுத்தவுடன் பணிந்து திருப்பியவரைக் கைது செய்து, இது குறித்த செய்தி அஞ்சலி செலுத்த வந்த மக்கள் மத்தியில் பரவக் காரணமாக இருந்தது இன்னொரு மிகப்பெரிய வன்முறையைத் தூண்டும் செயலாக அன்று அமைந்துள்ளது.

3. டி.ஐ.ஜி சந்தீப் மிட்டல், ஐந்து முக்கில் பொறுப்பாக நிறுத்தி வைக்கப்பட்ட சென்னை அடையாறு காவல் துறை ஆணையர் செந்தில்வேலன், பரமக்குடி நகர காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அன்று தேவேந்திரர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பாடம் புகட்டியே தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் வந்து நின்றதாகவே தெரிகிறது. தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைத் தலைவர் பூ.சந்திரபோஸ் அவர்கள் மிகுந்த நல்லெண்ணத்துடன் அதிகாரிகளை அணுகி ஜான் பாண்டியனை அன்று கைது செய்தது நல்லதல்ல எனவும், அவரை விடுதலை செய்து சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் எனவும் கோரிய போது, “சட்டம் ஒழுங்கு பற்றி நீங்கள் பேச வேண்டாம்; முதலில் அவர்களைக் கலைந்து போகச் சொல்லுங்கள்” என சந்தீப் மிட்டல் கூறி எந்தவித சமாதானத்திற்கும் வாய்ப்பளிக்காமல் நடந்துள்ளார்.

4. , ஐந்து முக்கில் அன்று குவிக்கப்பட்டிருந்த காவல் துறையினரின் எண்ணிக்கை சுமார் 2000 என நேரில் பார்த்த பலரும் எங்களிடம் கூறினர். சாலை மறியலுக்கு அமர்ந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 தொடங்கி அதிகபட்சமாக 200 அல்லது 300 என்ற அளவிலேயே இருந்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என எதிர்பார்த்து அவ்வழியே போக்குவரத்து முன்னதாகவே தடை செய்யப்பட்டது என்பதை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண் ராயே எங்களிடம் ஒத்துக்கொண்டார். தவிரவும் அவ்வழியே இதர மக்கள் சென்று அஞ்சலி செலுத்தி வரவும் அவ்வழியே வந்த வாகனங்கள் சென்று வரவும் சாலை மறியலால் எவ்விதத் தடையும் ஏற்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் 2000 ஆயுதம் தாங்கிய காவல் துறையினர் கூடியிருந்த 200 மக்களை, அவர்கள் உண்மையிலேயே கல்லெறிந்து வன்முறையில் ஈடுபட்டிருந்தால் கூட இலேசான தடியடி அல்லது கண்ணீர்ப்புகையைப் பிரயோகித்துக் கலைத்திருக்க முடியும். ஆனால் எவ்வித முன்னெச்சரிக்கையும் இன்றி துப்பாக்கிச்சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்றுள்ளனர் சந்தீப் மிட்டல், செந்தில்வேலன், சிவக்குமார் ஆகியோர் தலைமையில் இருந்த காவல் துறையினர்.

5. செந்தில் வேலன் ஐ.பி.எஸ் ஏற்கனவே இதே பகுதியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தவர். அவர் இங்கு பணியாற்றியபோது இதேபோல இம்மானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களை நியாயமற்ற முறையில் கைது செய்து (2008 செப்டம்பர் 11) தலித் விரோத அதிகாரி என்கிற பெயரை ஈட்டியவர். இவரை அடையாறில் இருந்து இங்கு கொண்டு வந்து அன்றைய தினத்தில் ஐந்து முக்கில் நிறுத்தியதும் உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட செயலாகவே தெரிகிறது.

6. காவல் துறையின் ‘வஜ்ரா’ வாகனத்தைக் கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வதையும் நம்ப இயலவில்லை. ஐந்து முக்கில் சாலை மறியல் செய்து கொண்டிருந்தவர்களைக் கலைப்பதற்குக் கொண்டு வந்து நிறுத்தப்பட்ட காவல் துறையினர் மதுரை- இராமநாதபுரம் சாலையில் நீளவாக்கில் நின்றிருந்தனர். தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் மக்கள் எதிரே உள்ள முதுகுளத்தூர் சாலையில் ஓடுவது மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது. இந்நிலையில் காவல் துறை அணிவகுப்பிற்குப் பின்னால் வந்து நின்ற வஜ்ரா வாகனத்தை கலவரக்காரர்கள் எரித்தனர் என்று சொல்வது ஏற்கத்தக்கதாக இல்லை.

பரமக்குடி
7. துப்பாக்கிச் சூட்டின்போது அங்கு நின்று நெற்றிப்பொட்டில் குண்டடிபட்டு, இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணிக்கம், குண்டடிபட்டு இறந்த ஒருவரை தூக்கிச் சென்று காப்பாற்ற முயன்ற மணிநகர் அம்பேத்கர் இளைஞர் மன்றச் செயலாளர் சுரேஷ், கடுமையாக அடிக்கப்பட்டு இன்று இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலரும் எம்மிடம் நேரில் கூறியதிலிருந்து, அன்று எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி தண்ணீர் பீய்ச்சியடித்தல், கண்ணீர்ப்புகை பிரயோகம் முதலிய முன் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் திடீரென்று துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர். அதே நாளில் மதுரை சிந்தாமணி அருகே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து இன்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு.வைகோ அவர்களால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 19 வயதான டி.ஜெயபிரசாந்தும் அவ்வாறே கூறினார். துப்பாக்கிச்சூடு நடந்து ரொம்ப நேரத்திற்கு பிறகு உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த செய்தி மூலமாகவே தான் அதைத் தெரிந்து கொண்டதாக மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பல நிமிடங்கள் கழித்தே தானும் தெரிந்து கொண்டதாகத்தான் இராமநாதபுர மாவட்ட ஆட்சியரும் எங்களிடம் தெரிவித்தார்.

8. துப்பாக்கிச் சூட்டையும் தடியடியையும் மேற்கொண்ட காவல் துறையினரும் அதிகாரிகளும் கடும் தலித் விரோதப் போக்குடன் இருந்துள்ளனர். சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிய வண்ணமே அவர்களை அடித்தும் சுட்டும் வீழ்த்தியுள்ளது பற்றி எம்மிடம் பலரும் முறையிட்டனர். இது அரசு நிர்வாகத்தின் மேல்சாதி ஆதரவு மனப்பான்மை, தலித் விரோதப் போக்கு, தலித்கள் என்றாலே கலவரம் செய்யக்கூடியவர்கள் என்கிற எண்ணத்துடன் அவர்கள் செயல்படுவது ஆகியவற்றிற்குச் சான்றாக உள்ளது.

9. துப்பாக்கிச் சூட்டில் பல்லவராயனேந்தல் கணேசன் ( 55), வீராம்பலைச் சேர்ந்த பன்னீர் செல்வம் ( 50), மஞ்சூரைச் சேர்ந்த ஜெயபால் ( 19), கீழ்க்கொடுமாநல்லூர் தீர்ப்புக்கனி ( 25), காட்டுப் பரமக்குடியைச் சேர்ந்த முத்துகுமார் ( 25), காக்கனேந்தல் வெள்ளைச்சாமி ( 55) ஆகிய ஆறு பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கணேசன், வெள்ளைச்சாமி, ஜெயபால் ஆகிய மூவரின் இல்லங்களுக்கும் சென்று அவர்களது உறவினர்களைச் சந்தித்தோம். இவர்கள் அனைவருமே அந்த நேரத்தில் அங்கு வந்து சிக்கிக் கொண்டவர்களே அன்றி, அஞ்சலி செலுத்தும் நோக்குடன் வந்தவர்களோ ஜான் பாண்டியனின் அமைப்பைச் சேர்ந்தவர்களோ அல்ல. கணேசன் தன் மகளின் திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கலகம் செய்ய வந்தவர்கள் என காவல் துறை கூறுவதை ஏற்க இயலாது. பெரும்பாலான துப்பாக்கிச் சூடு இடுப்புக்கு மேலேயே நடத்தப்பட்டுள்ளது. மாணிக்கம் நெற்றிப்பொட்டில் சுடப்பட்டுள்ளார்.

10. சுடப்பட்டவர்களில் சிலர் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் காப்பாற்றப்பட்டிருக்கலாம். இன்று இறந்து போயுள்ள தீர்ப்புக்கனி உயிரிருக்கும் போதே பிணவறையில் கொண்டுவந்து போடப்பட்டுள்ளார். பிணவறையில் உயிருடன் ஆட்கள் இருப்பதை அறிந்து புகார் செய்தபின் உயிருடன் இருந்த குமார் என்பவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அதற்குள் தீர்ப்புக்கனி இறந்துள்ளார். தவிரவும் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் இரண்டு பேரேனும் காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டுப் பின்னர் சுடப்பட்டுள்ளனர் என்ற ஐயம் பலருக்கும் உள்ளது. வெள்ளைச்சாமியின் உடலைக் கொண்டு வந்த காவல் துறையினர் அவரின் உடலை விரைவாக எரிக்கச் சொல்லி உறவினர்களைக் கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர்களும் அச்சத்தில் அவ்வாறே செய்துள்ளனர். அவரின் உடலில் குண்டுக்காயம் எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை எனவும் அவருடைய உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தனர். இறந்துபோன ஜெயபாலின் காலிலும் கூட துப்பாக்கிக் கட்டையால் அடித்து உடைத்தது போன்ற காயம் இருந்ததாக அவரது மாமியார் குறிப்பிட்டார். இவையெல்லாம் மக்களின் சந்தேகத்தில் உண்மை இருக்கலாம் என்பதைக் காட்டுகின்றன.

11. குண்டடிபட்டு இறந்துபோன ஜெயபால் மற்றும் அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவரும் ஜெயபிரசாந்த் ஆகியோருக்கு குண்டுகாயம் முதுகுப்புறத்திலிருந்தே தொடங்குகிறது. அவர்கள் தப்பி ஓடும்போது காவல் துறையினர் சுட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெரியவருகிறது.

12. காயம்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. நெற்றியில் குண்டடிபட்ட மாணிக்கம், ஜெயபிரசாந்த் ஆகியோர் இதை எம்மிடம் கூறினார். ஸ்கேன் எடுப்பது முதலான ஒவ்வொன்றிற்கும் ஜெயபிரசாந்த்திடம் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. “வைகோ அய்யா தான் என் மகனின் உயிரைக் காப்பாற்றினார்” என்று அவரது பெற்றோரக்ள் எம்மிடம் புலம்பினர். நீதிமன்றத்தை அணுகி இன்று மாணிக்கம், கார்த்திக் ராஜா ஆகிய இருவரும் மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்...

1. சுமார் 10 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாரை வேண்டுமானாலும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யத்தக்கதாக இந்த முதல் தகவல் அறிக்கைகள் எழுதப்பட்டுள்ளன. 1500 பேருக்கு மேல் கைது செய்ய இருப்பதாக காவல் துறை திட்டமிட்டுச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்கள் மத்தியில் பீதியை ஊட்டுகிறது. தவிரவும், அவ்வப்போது கிராமங்களுக்குச் சென்று பேருந்து முதலிய பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டிற்காக கைது செய்ய ஆட்களைக் கொடுங்கள் எனவும் காவல் துறையினர் மிரட்டுகின்றனர். பரளை என்ற கிராமத்திலிருந்து வந்த நாகவல்லி, ரேணுகாதேவி உள்ளிட்ட பெண்கள் செப்டம்பர் 18ம் தேதியன்று ஒரு போலிஸ் வேனில் வந்த காவல் துறையினர் இவ்வாறு மிரட்டியதை எம்மிடம் குறிப்பிட்டனர். தவிரவும், சாதாரண உடையில் வந்த போலிசார் சீருடையில் இருந்த போலிசாரை நோக்கிக் கற்களை வீசித்தாக்குவது போல பாவனை செய்து வீடியோ படம் எடுத்ததாகவும் எம்மிடம் குறிப்பிட்டனர். நயினார்கோயில், பரமக்குடி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள சுமார் 50 கிராமங்களில் இரவில் ஆண்கள் பயந்து வீட்டில் தங்காத நிலை இன்று உள்ளது. எஸ்.காவனூர் என்கிற ஊரில் இருந்த அடிப்பட்ட ஒருவரைக் காண இரவு 8 மணி வாக்கில் நாங்கள் வாகனங்களில் சென்றதைக் கண்ட அக்கிராமத்திலுள்ள அத்தனை ஆண்களும், வருவது காவல்துறையோ என அஞ்சி ஓடியதை நாங்கள் நேரில் கண்டோம்.

2. தொடக்கத்தில் இரவு நேரத்தில் இவ்வாறு கிராமங்களுக்குச் சென்று மிரட்டினோம் எனவும், பின்னர் அதை நிறுத்திக் கொண்டதாகவும் எம்மிடம் விரிவாகப் பேசிய இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அருண்ராய் கூறினார். ஆனால் மறுபடியும் பேருந்துகள்மீது கல்வீச்சுகள் நடந்ததால் அப்படிச் செய்ய வேண்டி இருந்தது எனவும், இனி அப்படி நடக்காது எனவும் அவர் எங்களிடம் குறிப்பிட்டார்.

3. 21 பேர் இன்று ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். வேறு யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் பலர் பிடித்துச் செல்லப்பட்டு, அடித்துப் பின்னர் விடப்பட்டுள்ளனர். மற்றபடி நகர்ப்புறங்களில் 144 தடை உத்தரவு இருந்த போதிலும் பெரிய கெடுபிடிகள் இல்லை. எங்கள் குழு சென்று வருவதற்கும், மக்களைச் சந்திப்பதற்கும் பெரிய தடை எதுவும் இருக்கவில்லை. எனினும், பெரிய அளவில் பரமக்குடி பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டிருப்பது, வருவோர் போவோர் அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்படுவது முதலான நிகழ்வுகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை தொடர்ந்து ஏற்படுத்தியுள்ளது.

4. இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 இலட்சம் மட்டும் அரசால் வழங்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 கொடுக்கப்பட்டுள்ளது. பலர், அந்தத் தொகை இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை என எங்களிடம் குறிப்பிட்டனர். இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு தி.மு.க சார்பாக 1 இலட்சமும், காங்கிரஸ் கட்சி சார்பாக ரூ. 50,000மும் கொடுக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

1. சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் தலித் விரோதப்போக்குடனும், உயர்சாதி ஆதிக்க ஆதரவுப் போக்குடனும் அது வெளிப்பட்டுள்ளது. இது தலித் மக்கள் மத்தியில் தமக்கு எந்தவிதமான நீதியும் கிடைக்காது என அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. முதல்வர் தம் பேச்சிற்கு வருத்தம் தெரிவித்து, அதைத் திரும்பப் பெற வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்த இது உதவும்.

2. துப்பாக்கிச் சூடு குறித்து அரசு நியமித்துள்ள ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி விசாரணை வெறும் கண்துடைப்பே. இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.

3. தாக்குதல் நடத்திய போலிஸ் அதிகாரிகளிடமே புலன் விசாரணையை அளித்திருப்பது கேலிக்குரியது. சி.பி.ஐ விசாரணை ஒன்று உயர்நீதிமன்ற மேற்பார்வையின்கீழ் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.

4. சந்தீப் மிட்டல், செந்தில் வேலன், சிவக்குமார் ஆகிய காவல் துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட வேண்டும்.

5. இறந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்டுள்ள வெறும் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு கேலிக்கூத்தாக உள்ளதை அரசியல் தலைவர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த இழப்பீட்டுத் தொகையை 10 இலட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும். அது, சத்துணவு உதவியாளர் என்பது போன்ற வேலைகளாக அல்லாமல் வேறு உயர்ந்த வேலைகள் அளிக்கப்பட வேண்டும்.

6. காயமடைந்தவர்களுக்கு அவர்களது காயத்திற்குத் தகுந்தாற்போல, குறைந்தபட்சம் 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

7. தலித் கிராமங்கள் பலவும் கடுமையாக அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையை நாங்கள் நேரில் கண்டோம். எடுத்துக்காட்டாக, கொல்லப்பட்ட பழனிகுமாரின் பள்ளப்பச்சேரி கிராமத்தில் குடிநீர் வசதி, சாலை வசதி ஏதுமில்லை. சாதி இறுக்கம் மிகுந்த மண்டல மாணிக்கம் ஊரின் வழியாகவே வெளியூர் செல்லக்கூடிய நிலை மாற்றப்பட்டு புறவழிச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பது அவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. அரசு இவற்றில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

8. மண்டல மாணிக்கம் போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் தலித் குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வெளியேறுவது மிகவும் கவலையளிக்கக்கூடியதாக உள்ளது. இது குறித்த விசாரணை ஒன்றை மாவட்டக் கல்வி அலுவலரும், ஆதி திராவிட நலத்துறையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

9. பரமக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, உளவுத்துறை ஆகியவற்றிலுள்ள அதிகாரிகளில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர், தலித்கள் எவ்வளவு பேர் என்ற விவரத்தை அரசு வெளியிட வேண்டும். இந்தத் துறைகள் ஒவ்வொன்றிலும் போதிய அளவில் இப்பகுதிகளில் தலித் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

10. இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் அல்லது பிறந்த நாளை அரசு அங்கீகரித்து விழா எடுக்க வேண்டும். இம்மானுவேல் சேகரனின் நினைவிடம் உள்ள சாலை அகலப்படுத்தித் தூய்மை செய்யப்பட வேண்டும்.

11. அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் தலித் விரோத மன நிலையும், ஆதிக்கச் சாதி ஆதரவுப் போக்கும் உள்ள நிலைக்கு எதிராக அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். திருமதி. சிவகாமி ஐ.ஏ.எஸ். ஆதிதிராவிட நலத்துறைச் செயலாளராக இருந்தபோது, அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தலித் பிரச்சனைகளில் உணர்வூட்டுதல் என்ற பயிற்சியைத் தொடங்கினார். எனினும், அது விரைவில் நிறுத்தப்பட்டு விட்டது. அரசு இதைத் தொடர வேண்டும். அருண்ராய் போன்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமே தலித் தலைவர்கள் என்றால் ரவுடிகள் என்பது போன்ற ஒரு பார்வையும், ஆதிக்கச் சாதிக்குச் சமமாக அடித்தள மக்கள் உரிமை கோரும்போது, அது சட்டப்பூர்வமானதாக இருப்பினும் பொறுப்பற்ற செயல் என்பதாகக் கருதும் போக்கும் இருப்பது கவலையளிக்கிறது.

12. துப்பாக்கிச் சூட்டை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. சாதிக் கட்சிகள், குறிப்பாக முக்குலத்தோர் சார்ந்த சாதிக் கட்சிகள் கண்டிக்காதது வருந்தத்தக்கது. துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்துள்ள அரசியல் கட்சிகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்துவது குறித்த அழுத்தத்தைத் தொடர்ந்து அரசுக்கு அளிக்க வேண்டும்.

13. பாதிக்கப்பட்டோருக்காக நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிவரும் வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், பசுமலை, ரஜினி ஆகியோரை இக்குழு பாராட்டுகின்றது.

தொடர்பு முகவரி:
பேரா. அ.மார்க்ஸ்
3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர்
அடையாறு, சென்னை - 600 020. செல்: 94441 20582

வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுப்
142, வடக்கு வெளி வீதி, 2வது மாடி, யானைக்கல்
மதுரை - 625 001. செல்: 94898 71185

நன்றி - அ.மார்க்ஸ்

சொல்லிச் சொல்லி மறந்த கதை......... - அறிவழகன்


பரமக்குடி படுகொலை

மீண்டும் ஒரு குருதிக் கறை படிந்திருக்கிறது தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில், இம்முறை கொல்லப்பட்டது ஏழு மனிதர்களின் உயிர், வழக்கம் போலவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்வினைகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தவண்ணம் இருக்கிறது, “இவர்கள் கலவரக்காரர்கள் என்றும், சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே” என்று ஒரு புறமும், “தலித் மக்களைக் குறி வைத்துக் கொன்றிருக்கிறது காவல்துறை” என்று மற்றொரு புறமுமாய் ஏறத்தாழ இரண்டு அணியாய் மாறி இருக்கிறது தமிழ்ச் சமூக மனநிலை.

ஒன்றைத் தெளிவாக இந்நேரத்தில் உணர முடியும், இந்த இரண்டு அணிகளில் ஒன்று “ஒடுக்கப்பட்ட மக்களின் இறப்பை எண்ணிக் கலங்கும், அதிகார வர்க்கத்தின் தொடர் வன்முறைகளை எதிர்க்கும் அணி”, இன்னொன்று “பொதுவாகக் கலவரம் யார் செய்தால் என்ன?, காவல்துறை மீது வன்முறையை ஏவும் நேரத்தில் அவர்களைக் சுட்டுக் கொலை செய்வதும் தவறில்லை என்று வாதிடும் அணி”.

 இப்போது நாம் அனேகமாக இரண்டாகப் பிளக்கப்பட்டிருக்கிறோம், ஆம், மூன்று குற்றம் சுமத்தப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்த தமிழ் மக்கள் இப்போது சரியான நேரத்தில் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், இப்படி நம்மைப் பிளவு செய்யும் ஒரு மிகப்பெரிய காரணியாகவே சாதி பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கிறது.

முதலில் இந்தக் கலவரச் சூழலை யார் துவக்கி இருந்தாலும் அது மிகப்பெரிய குற்றம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, “ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் செய்தால் எதுவும் குற்றமில்லை, அல்லது அவர்கள் எப்போதும் கலவரங்களில் ஈடுபடுவதில்லை” என்று வாதம் செய்வதல்ல நமது நோக்கம், மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலுக்குள் நுழையும் போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதனால் உண்டாக்கப்படுகின்றன என்கிற முழு உண்மையை ஒரு நடுநிலை உள்ள மனிதனால் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்போதும் அச்சம் சூழ்ந்ததாகவே இருக்கிறது, எந்த நேரத்திலும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவனது கொண்டாட்டங்கள் மறுதலிக்கப்படுவதையும் தன்னுடைய தகுதியாகவே வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியின் மனநிலையில் தலித் அல்லது ஒடுக்கப்பட்டவன் “தான் கொடுக்கிற உரிமைகளால் அல்லது உதவிகளால் வாழும் மனிதனைப் போலத் தோற்றமளிக்கிற விலங்கு” என்று தான் கற்பிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வீடுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வது ஊறு விளைவிக்கும் குற்றம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது, ஆதிக்க சாதி மனிதனின் வயல்களுக்கு நடுவே இருக்கும் தன்னுடைய வயல் வெளிகளில் விவசாயம் செய்யும் உரிமையைக் கூடக், கடந்து செல்ல முடியாத காரணத்தால் இழந்து நகர்ப்புறமாக நகரத் துவங்கிய எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும்.

பல்வேறு சமூக வெளிகளில் புறக்கணிக்கப்படுகிற அல்லது துரத்தி அடிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வலியை அறிய முடியாத எவராலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான அழுத்தமான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியாது, ஏனென்றால் பல நேரங்களில் அந்த வழியைத் தோற்றுவிப்பவர்களாக அவர்களே இருக்கிறார்கள், விழாக்காலங்களில் தாம் விரும்புகிற தலைவரின் படங்களை மரியாதை செய்கிற உரிமை நமது சமூகத்தில் ஆதிக்க சாதி மக்களின் கைகளில் இருந்தே புறப்படுகிறது.

பிறப்பின் மூலமே கிடைக்கிற இந்தத் தகுதியின் உதவியால் கல்வி அறிவாலும், தனது கடின உழைப்பாலும் மேலெழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வளர்ச்சிப் பாதையை, அவனது சுய மரியாதையைக் கேள்வி கேட்கும் அல்லது சீண்டிப் பார்க்கும் நிலையை அடைகிறான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லப்படுகிற மனிதன். இந்தச் சீண்டல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மனிதனின் உளவியலில் அழுத்தத்தையும், நெருக்கடியையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்த்துக் குரல் எழுப்புகிற எவரையும், அவர் எப்படியான கருத்தியலைக் கொண்டிருக்கிறார் என்கிற காரணங்கள் ஏதும் அறியாமலேயே ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞன் பின் தொடர்கிறான், தனது வாழ்க்கையின் மீது சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருக்கிற சாதி அடக்குமுறை வடிவங்களைக் கடந்து தான் நிம்மதியாக வாழ்வதற்கு இத்தகைய தலைவர்களில் யாரேனும் ஒருவர் உதவி செய்வார் என்று அவன் முழுமையாக நம்பத் துவங்குகிறான்.

ஆழி சூழ்ந்த நிலப்பரப்பில் அச்சத்தோடு வாழும் இத்தகைய ஒடுக்கப்பட்ட மனிதனின் மனநிலையே ஒரு வழிபாட்டு மனநிலைக்கு அவனைத் தள்ளி விடுகிறது, ஏறத்தாழ கடவுள் கோட்பாட்டினைப் போலவே தன்னால் அவிழ்க்கவே முடியாத சமூகச் சிக்கல்களின் ஒரு முனையைத் தலைவர்களின் மீது கட்டி விட்டு இன்னொரு முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான், தலைவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்ட மற்றொரு முனையில் சரணடைந்து தன்னுடைய அச்சத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டதாக நம்பி பெருமூச்சு விடுகிறான்.

ஆனாலும், தனது பிறப்பின் அதிகாரத்தைப் பறிக்கவே தோற்றம் கொண்டவர்கள் இந்தத் தலைவர்கள் என்று நம்புகிற பிறவி ஆதிக்க சாதி மனிதனால் ஒடுக்கப்பட்ட மனிதனின் நிம்மதிப் பெருமூச்சைப் பொருக்க முடிவதில்லை, தனக்குச் சேவகம் செய்யும் ஒரு கீழான நிலையிலேயே ஒடுக்கப்பட்ட மனிதன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக எண்ணுகிற ஒவ்வொரு ஆதிக்க சாதி மனிதனும் அதற்கான அடிப்படை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான், அவன் மட்டுமன்றி அவனது சந்ததியும் அப்படியே இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்கிறான்,

பிறப்பால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையை இழப்பதையோ, விட்டுக் கொடுப்பதையோ அவமானமாய் உணரும் ஆதிக்க சாதி மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனை ஒரு சக மனிதன் என்றோ, சக உயிர் என்றோ உணரத் தலைப்படுவதே இல்லை, சக மனிதனை தன்னோடு இப்பூவுலகில் வாழும் இன்னொரு உயிர் என்கிற உயிரியல் அல்லது வாழ்வியல் உண்மையை வசதியாக மறந்தே போகிறான், அது தான் இறுதியாக இந்த மனித குலம் அடையத் துடிக்கும் உண்மையான நாகரீகம் என்பதை அவனது மதமும், சாதியும் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதே இல்லை.
பரமக்குடி கலவரம்

இனி பரமக்குடி நிகழ்விற்கு வருவோம்,

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக பரமக்குடி சுற்றுப் புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு (பெயருக்கு) என்கிற பெயர் கொண்ட ஆதிக்க மனப்போக்கு அப்பகுதி இளைஞர்களிடையே ஒரு விதமான கிளர்ச்சியான சூழலை உண்டாக்கி இருக்கிறது, தான் தலைவராக ஏற்றுக் கொண்டவரை அவரது நினைவு நாளை அல்லது பிறந்த நாளைக் கொண்டாடும் உரிமையைக் கூட இந்தச் சமூகம் எனக்கு வழங்கவில்லை என்கிற தார்மீகக் கோபமே ஒரு வன்முறை மனநிலையை நோக்கி இந்த இளைஞர்களைத் தள்ளி இருக்கிறது.

பிள்ளையாருக்கும், பிள்ளையார் ஊர்வலங்களுக்கும் இருக்கும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடும் இது போன்ற இடங்களுக்கு இல்லை என்பதே இந்தச் சமூகத்தின் மாற்றாந்தாய் மனநிலையை நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது, காவல் நிலையங்களில் பெயர்களைப் பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்திய காவலர்கள், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சென்று விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிகழ்வில் ஏழுக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது காவலரோ அல்லது ஒடுக்கப்பட்ட மனிதனோ, தமிழனோ, தெலுங்கனோ, மலையாளியோ என்கிற ஆய்வுகளுக்கு முன்னாள் இறந்து போனவை நம்மைப் போலவே உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கிற மனித உயிர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதே நிகழ்வு மற்றொரு சாதி அணிவகுப்பில் அல்லது தலைவரின் நினைவு நாளில் நிகழ்ந்து அங்கேயும் ஏழு மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்குமேயானால் சக மனிதனாகக் குரல் கொடுக்கும் பண்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகத்தின் மனநிலையைப் போலவே அரசின் ஒவ்வொரு அடுக்கும் செயல்படும், காவல் துறையில் பணியாற்றும் மனிதராகட்டும், அமைச்சரைவையில் பணியாற்றும் மனிதராகட்டும் நீங்களும் நானும் என்ன சிந்திக்கிறோமோ அதனையே எதிரொலிக்கிறார்கள், சாதி ஒழிப்பிற்கும், வர்க்க வேறுபாடுகளுக்கும் பகல் முழுதும் குரல் கொடுக்கும் பல தலைவர்கள் இரவு நேரங்களில் தமது சொந்த சாதி நலன்கள் குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக நாம் அவர்களை மாற்றி வைத்திருக்கிறோம், நாமே நமது சொந்தக் குழந்தைகளுக்கு ஒரு மிகக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறும் ஆற்றலை வழங்க ஒப்புவதில்லை, மாற்று சாதி அல்லது பக்கத்துக்கு வீட்டு மனிதன் குறித்த வன்மத்தையே பல நேரங்களில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஒரு மிக நுட்பமான சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் இருக்கிறோம் என்கிற உள்ளுணர்வு இல்லாத காவல்துறை அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்தக் கொடுமையான நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது என்பதில் துளியும் ஐயம் இல்லை, தலைமைப் பண்புகளும், ஆளுமைத் திறனும் இல்லாத சில குறிப்பிட்ட மனிதர்களின் தவறுகளால் ஏழு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது, மேலும் ஆதிக்க மனப்போக்கும் அதிகார மையங்களும் ஒருங்கிணைகிற காவல் துறையின் மனசாட்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பொது மக்களின் கூடுதலின் போதும், போராட்டங்களின் மீதும் கட்டவிழ்க்கப்படுகிற இந்த அரச வன்முறையை ஒரு மிகப்பெரிய தேசத்தின் சட்டங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பதை மீள்பார்வை செய்யும் ஒரு சிக்கலான பாடத்தை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகிறது. இத்தகைய இக்கட்டான தருணங்களில் யார் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அல்லது அனுமதியை வழங்குகிறார்கள்?, யார் வழங்கினார்கள்?, மனித உயிர்களை அரசுகள் கொல்வது இத்தனை எளிதானதா? போன்ற சட்டக் கேள்விகளை நாம் தீவிரமாக எதிர் கொண்டாக வேண்டும்.

காவல்துறையினர் உடனோ அல்லது ஆதிக்க சாதி மனிதர்கள் உடனான முரண்பாடுகளின் போதோ எப்படியான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும், அவற்றின் முன்னணித் தலைவர்களும் தங்களின் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். மிகப் பெரிய இழப்புகளில் இருந்தும், தேவையற்ற முரண்பாடுகளில் இருந்தும் எளிய மக்களைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது இயக்கங்களின் தலைவர்களும் உணர வேண்டும்.

இந்த நிகழ்விற்கு அடிப்படைக் காரணமான ஒரு பள்ளிச் சிறுவனின் மரணத்துக்கு பின்னே மனித நேயத்தோடும், நமது பதவிக்கான உயர் தகுதி அடையாளங்களோடும் நாம் பணியாற்றினோமா என்கிற கேள்வியை ஒவ்வொரு காவலரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும் இன்றைய தமிழ் இளைஞர்களின் உளவியலில் இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொடுக்காதபடி வழி நடத்திச் செல்கிற தங்கள் பொறுப்பை ஒவ்வொரு சாதியின் தலைவரும் உணர்ந்து இறந்து போன மனித உயிர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் கடந்து இறந்த மனிதர்கள் அனைவரும் போராட வந்தவர்களா?, இல்லை வேடிக்கை பார்த்தவர்களா?, கல்லெறிந்தவர்கள் மட்டுமே குண்டடிபட்டிருக்கிறார்களா? என்கிற பல உண்மைகளை நாம் அறிய வேண்டியிருக்கிறது, காயமடைந்த காவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சக மனிதர்களாகவும், சக உயிர்களாகவுமே நாம் உணர வேண்டியிருக்கிறது.
பல்வேறு விழாக்கள், ஒன்று கூடல்கள், தலைவர்களின் பிறந்த நாட்களின் போதெல்லாம் நிகழாத வன்முறையும், துப்பாக்கிச் சூடுகளும் தலித் மக்களின் ஒன்று கூடல்களின் போது தவறாது நிகழ்வதன் பின்னிருக்கும் சமூக மன நிலையை அல்லது அரசியல் காரணங்களை அறிந்து அவற்றை நீக்குவதற்கான மிக அடிப்படையான பலவேறு செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைய வேண்டிய ஒரு கட்டாயம் நிகழ்ந்திருக்கிறது,

இறந்த மனிதர்களின் குழந்தைகளை, அவர்களின் அழுகுரலை, அந்தக் குடும்பங்களில் நிகழவிருக்கிற அவலங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், அந்த அழுகுரலும், அவலங்களும் மரணத்தின் பெயரால் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது, நாம் தூக்கிலடப்படும் மூன்று உயிர்களைக் காக்கத் தன்னெழுச்சியாகப் புறப்பட்டவர்கள், நமது மண்ணில் உயிர்களைப் பலியிடும் அரச நடைமுறைக்கு எதிராகக் கிளர்ந்தவர்கள், நாம் வரலாறு நெடுகிலும் நாகரீகத்தின் பல்வேறு கூறுகளை விதைத்து முன்னேறியவர்கள், தொடர்ந்தும் அப்படியே இருப்போம் நண்பர்களே.........

“நாம் இப்படி சண்டையிட்டுக் கொள்வதையே நமது எதிரிகள் விரும்புகிறார்கள், ஏனென்றால் நமது வலிமையும், பலவீனமும் என்னவென்பதை அவர்கள் நம்மைவிட நன்கறிவார்கள்.”

நன்றி - கை.அறிவழகன்

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை - டி.அருள் எழிலன்.


பரமக்குடி படுகொலைகள்


எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.
பள்ளர் சமூகத்தலைவர்களுள் முக்கியமானவர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜாண்பாண்டியன், பசுபதி பாண்டியன் ஆகியோர்தான். இதில் கிருஷ்சாமியைத் தவிற எனைய இரண்டு தலைவர்களும் அரசியல் ரௌடிகள், கட்டப்பஞ்சாயத்து, கொலை போன்ற பல் வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள். தேவர் சமூகம் வழிபடும் முத்துராமலிங்கம் என்பவர் எப்படி அந்த சமூகத்தை தவறான பாதையில் வழி நடத்தி, அனைத்து தேவர் மக்களையும் தலித் மக்களுக்கு எதிராக திருப்பினாரோ அது போன்று பள்ளர் இன மக்களை அரசியல் மயப்படுத்துவதை விட்டு விட்டு உணர்ச்சி மயபட்ட வன்முறை விளிம்பில் நிறுத்துபவர்தான் இந்த ஜாண்பாண்டியன். நீண்டகாலமாக சிறையில் இருந்த ஜாண்பாண்டியன் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது சிறையிலிருந்து வெளியில் வருகிறார். தமிழக முன்னேற்றக் கழகம் என்னும் அமைப்பை நடத்தும் ஜாண்பாண்டியன் சிறையில் இருந்து வெளியில் வந்த வுடன் அவரது ஆதரவாளர்கள் தலைவர் வெளியில் வந்து விட்டார் ஆகவே இமானுவேல் சேகரன் பிறந்த தினத்தை புத்தெழுச்சியோடு கொண்டாட முடிவு செய்து.பரமக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே பிளெக்ஸ் போர்டுகள் விளம்பரப்பலகைகளை அமைக்கின்றனர். இது ஆதிக்க சாதியான தேவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்குவதோடு, ஆதிக்க சாதியினர் ஆதிக்கம் செய்யும் மதுரை, இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்திலும் கொதிப்பை உருவாக்கியிருக்கிறது. இதனால் கடந்தப் ஒரு வராமாக போலீசார் தலித் சேரிகளுக்கும் கிராமங்களுக்கும் சென்று இமானுவேல் சேகரனின் பிறந்த நாள் விழாவுக்குச் யாரும் செல்லக் கூடாது அப்படிச் செல்கிறவர்கள் காவல் நிலையத்தில் வந்து பெயர் பதிய வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள். இயல்பாகவே கடுப்பான தலித் மக்களோ இதனால் ஆவேசம் அடைந்திருக்கின்றனர். இந்நிலையில்தான் தலித் மாணவனான பழனிக்குமார் படிக்கும் பள்ளியிலும் இது தொடர்பான முரண்பாடுகள் எழ பழனிக்குமார் தேவர் சாதி மாணவர்களுக்கு எதிராகவும் இமானுவேல் சேக்ரனுக்கு ஆதரவாகவும் பேசியுள்ளார். பழனிக்குமார் இதை தனது காலனியிலோ அல்லது வீட்டிலோ சொல்லாத நிலையில் தேவர் சாதி மாணவர்கள் தங்கள் ஊரில் உள்ளவர்களிடம் தேவரை இழிவு செய்த பழனிக்குமார் பற்றி சொன்னதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் நேற்று கோவில் திருவிழாவுக்குச் சென்று வந்த பழனிக்குமாரை தேவர் சாதி வெறியர்கள் கொடூரமான முறையில் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். பழனிக்குமார் கொலையும், போலீசின் அடக்குமுறையும் சேர தலித் மக்கள் மிகவும் கோபமாக காணப்பட்டுள்ள நிலையில்,
நேற்று  காலையிலிருந்தே பரமக்குடி மெயின் ரோட்டில் இருக்கும் இமானுவேல் சேகரன் சுடுகாட்டில் தலித் மக்கள் குழுமத் தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களை பல் வேறு இடங்களில் போலீசார் விழாவுக்க்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் அதையும் மீறி திரண்ட தலித்துக்களில் ஜாண்பாண்டியனின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்திருக்கின்றனர். அவர்கள் ஜாண்பாண்டியனின் வருகைக்காக காத்திருந்த போது அவரை தூத்துக்குடியில் தடுத்த போலீசார் வல்லநாடு போலீஸ் டிரெயினிங் அக்காடமிக்கு கொண்டு சென்றுள்ளனர். ( இங்கே வல்லநாடு பயிற்சிப்பள்ளியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும் போலீஸ் நிகழ்த்தும் பல சட்ட விரோத என்கவுண்டர்களை இந்த காட்டுப்பகுதிக்குள் வைத்துத்தான் செய்யும்) இந்தப் பகுதிக்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் என்ற செய்தி எட்டியதும். அவரை போலீஸ் சுட்டுக் கொல்லப் போகிறது என்றும், கைது செய்திருக்கிறார்கள் என்ற செய்தி பரவியதும். இமானுவேல் சுடுகாட்டில் திரண்டிருந்த மக்கள் பரமக்குடி சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். மிரட்டிப் பார்த்த போலீசுக்கு அஞ்சாமல் கோஷமிட்ட படியே இருந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்த சிதறி ஓடிய தொண்டர்கள் போலீசார் மீது கற்களை வீசியிருக்கிறார்கள். சற்றும் எதிர்பாராத வகையில் அந்த மக்கள் மீது போலீஸ் கண்மூடித்தனமாக  பலரும் குண்டடி பட்டு விழுந்திருக்கிறார்கள். ஜாண்பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி பரவ இது மதுரையிலும் மறியலாக மாற அங்கும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கிறது.ஆக மொத்தம் ஆறு பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். போலீஸ் இதுவரை எந்த செய்திகளையும் கசிய விடாமல் பார்த்துக் கொள்ளும் நிலையில் ஆறு பேர் கொல்லப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படுகிறது. தாமிரபரணி படுகொலையின் பின்னர் மிகப்பெரிய இனப்படுகொலையாக கணிக்கப்படும் பரமக்குடி, மதுரை தலித் இனப்படுகொலையை தமிழக அரசும், ஊடகங்களும் மறைத்து பொய் செய்தியை வெளியிட்டு வருகின்றன. போலீசைத் தாக்கிய செய்திகளை மீண்டும் மீண்டும் சொல்லும் தமிழ் தொலைக்காட்சிகள் கொல்லப்பட்ட மக்கள் குறித்து ஒரு வரியைக் கூட மறந்தும் சொல்ல மறுக்கின்றன. நமது ஊடகங்கள், நமது போலீஸ், நமது அரசு என எல்லாம் பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் கைகளுக்கு முழுமையாக சென்று விட்டதை இது காட்டுகிறது. திராவிட இயக்கங்கள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக செய்த அயோக்கியத்தனமான சாதி அரசியலின் விளைவாய் இன்று தலித்துக்கள் நிர்கதியாய் விடப்பட்டிருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகள் செல்வாக்குச் செலுத்தும் தமிழ் அரசியலோ தலித் படுகொலைகள் குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறது. இதுவரை 6 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தென் தமிழகம் முழுக்க ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ஒரு விதமான அச்சத்துள் உரைந்து போயுள்ளனர். சாதி இந்து அமைப்பு, அரசு நிர்வாகம். போலீஸ் என அதிகாரவர்க்கங்களின் சாதிக் கொடூரங்களில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். 
பரமக்குடி தலித் படுகொலைகள்

* பரமக்குடியில் நடத்தப்பட்டுள்ள போலீஸ் துப்பாக்கிச் சூடு அவசியமற்ற பேச்சுவார்த்தை மூலம் மீறிச் சென்றால் லேசான தடியடி மூலமும் கலைந்து போகச் செய்திருக்க வேண்டிய ஒரு விஷயத்தை காட்டுமிராண்டித்தனமாக ஒடுக்கியதன் மூலம் கேள்விக்கிடமற்ற வகையில் 6 பேரை கொலை செய்துள்ளார்கள். ஜாண்பாண்டியனுக்கு இமானுவேல் சேகரன் அவர்களின்  சமாதிக்கு சென்று மரியாதை செய்யும் உரிமையை மறுத்ததன் மூலம்  வன்முறைக்கு போலிசார் வித்திட்டுள்ளனர். தவிறவும் ஜாண்பாண்டியனை வல்லநாடு மலைப்பகுதிக்குக் கொண்டு சென்று என்கவுண்டர் செய்யப் போகிறார்கள் என்ற செய்தி பரவியதன் மூலமே தலித் மக்கள் ஆவேசமடைந்து பரமக்குடி, மதுரையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்த கோபமுற்ற மக்கள் கற்களை போலீசார் மீது வீசியுள்ளனர். பதிலுக்கு போலீசாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கற்களை வீசியதோடு எந்த விதமான எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். போலீசார் சுடுவதை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் போலீஸ் வாகனங்கள் உள்ளிட்ட அரசு வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.
* ஆறு பேர் போலீசால் கொல்லப்பட்டு விட்ட நிலையில் இன்று அச்சு, காட்சி ஊடகங்கள் எல்லாம் அவர்கள் வன்முறையை ஏவினார்கள். வேறு வழியில்லாமல்  போலீஸ் சுட்டது என்று செய்தி வெளியிட்டுள்ளதோடு, தாக்கப்பட்ட , தீ வைத்து எரிக்கப்பட்ட போலீஸ் வாகனங்களையும் பெரிது படுத்தி புகைப்படச் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கில் காயமடைந்தவர்களையோ, சுட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் தரப்புகளையோ முழுமையாக இருட்டடிப்பு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்க வேண்டும். இந்த நிலை சட்டக் கல்லூரி தாக்குதல் சம்பவத்தில் தமிழ் ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தைப் போன்றதுதான். 
* கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட இயக்கம் தமிழகத்தில் அதிகாரம் பெற்று விட்ட நிலையில் அவர்கள் ஊட்டி வளர்த்ததுதான் இந்த பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி அரசியல். பெரும்பான்மை பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்கு வங்கிகளை குறி வைத்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே வளர்ந்து வந்த நிலையில் அதிமுக தென் தமிழக தேவர் வாக்கு வங்கியை பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறது. கடந்த திமுக ஆட்சியின் போது அதிமுகவின் வாக்கு வங்கியான தேவர் சாதி ஒட்டுகளை கைப்பற்ற திமுக பல் வேறு முயர்சிகளை முன்னெடுத்தது. அதில் ஒன்றுதான் 2007- ல் பசும் பொன் முத்துராமலிங்கன் என்பவரின் பிறந்த நாளை மூன்று நாள் விழாவாக அரசே கொண்டாடியது. இது தலித் மக்கள் மனங்களில் தீராத வேதனையை உருவாக்கியுள்ளது.  தந்தை பெரியாரின் சாதி ஒழிப்பை கைவிட்ட திராவிட இயக்கங்கள் அவரது சமூக நீதி அம்சங்களை உள்வாங்கி அதை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளுக்கு விரிவு படுத்தியதோடு, எந்தெந்த தொகுதிகளில் எது பெரும்பான்மை சாதியோ அதை ஊட்டி வளர்த்ததன் விளைவுதான் இத்தகைய தாக்குதல்கள். அரசு, போலீஸ்ம் அதிகாரிகள் என கடந்த முப்பதாண்டுகளில் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வளர்ச்சி சகல தளங்களிலும் விரிவு படுத்தப்பட்டது. இதுவே பாதிக்கப்பட்ட தலித் மக்கள் அரசு நிர்வாகத்தில், போலீசில் நீதி கேட்கவோ, பாதிப்புக்கு நியாயம் கேட்கவோ முடியாத நிலையை தோற்று வித்துள்ளது.
*தமிழ் தேசிய இயக்கங்களைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்திற்கும் தமிழ் குழுக்களுக்குமான முரண் என்பது அவர்கள் தென் மாநிலங்களில் அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைத்துக் கொள்கிறார்கள். தமிழனை தமிழனே ஆளட்டும் வந்தேரிகள் எல்லாம் ஓடட்டும் என்பதுதான் தமிழ் குழுக்களின் அணுகுமுறை. தமிழர்களின் மலங்களை காலம் காலமாக தங்கள் தலையில் தூக்கிச் சுமந்த அருந்ததிய மக்கள் தெலுங்கு மொழி பேசும் மக்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. எப்படி திராவிட இயக்கத்தின் தலைமை பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதிகளின் அதிகாரமாக உள்ளதோ அது போன்றே தமிழ் தேசியக் குழுக்களும், இதை தலித்துக்கள் அனுபவ பூர்வமாக உணர்கிறார்கள். இவர்கள் ஈழம், தமிழ் மொழி, என்று போராடுகிறார்களே தவிற தமிழர்களின் வேறு எந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதும் இல்லை குரல் கொடுப்பதும் இல்லை. முருகன்,சாந்தன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனைக்கு எதிராக மட்டுமல்ல அப்சல்குரு, கஸாப், உள்ளிட்ட அனைவருக்காகவும் குரல் கொடுப்பதோடு இந்தியாவிலிருந்தே மரணதண்டனை நீக்கப்பட வேண்டும் என்பதுதான் முற்போக்கு மனித உரிமையாளர்களின் நீண்ட கால கோரிக்கை. பாராளுமன்றத் தாக்குதலில் மரணதண்டனை விதிக்கப்பட்டு பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப் பட்ட பேரா.கீலானி வேலூருக்கு வந்து மூவரையும் சந்தித்து மரணதண்டனைக்கு எதிராக குரல் கொடுப்பார். ஆனால் அப்சல் குரு குறித்தோ, கஸாப் குறித்தோ மறந்தும் தமிழ் தேசியவாதிகள் பேசி விட மாட்டார்கள். காரணம் இந்து முன்னணி கும்பலையும் அர்ஜூன்சம்பந்த் போன்ற இந்துப் பாசிஸ்டுகளையும் பகைத்துக் கொள்ள நேரிடுமே என்ற அச்சம். பெரியார் திக, தோழர் தியாகு, கொளத்தூர் மணி உள்ளிட்ட வெகு சில அமைப்புத் தலைவர்களைத் தவிற பெரும்பலான தமிழ் தேசியவாதிகள் தலித் சாதி ஒடுக்குமுறைகள் குறித்து எப்போதுமே பேசியதில்லை. நீங்கள் ஏன் பேசவில்லை என்று கேட்டால் எங்களை ஏன் கேட்கின்றீர்கள் கொன்றவனைப் போய் கேளுங்கள் என்கிறார்கள். 
* திராவிட இயக்கத்திற்கும் தமிழ் தேசிய இயக்கத்திற்குமான வேறு பாடு என்பது துளியளவுதான். அதிகாரத்தில் இருக்கும் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடிய இந்து மதத்திற்கு நெருக்கமான அதிமுகவாக இருந்தாலும், பச்சைத் தமிழ் திராவிட இயக்கம் என்று சொல்லக்கூடிய திமுகவாக இருந்தாலும்  இவர்களின் அதிகாரத்தால் பலன் அடைவது பார்ப்பனர் அல்லாத முற்படுத்தப்பட்ட வகுப்பினரும், பிற்படுத்தப்பட்ட சாதியினரும்தான். திராவிட இயக்கத்திற்கென குறைந்த பட்ச சமூக சீர்திருத்த கோட்பாடுகள் உள்ளன. தமிழ் தேசியத்திற்கு அது கூட இல்லை. ஆனால் திராவிட இயக்கத்தால் அதிகாரம் பெற்று அரசு நிர்வாகத்தில் வீங்கிச் செல்லும் முற்பட்ட, பிற்படுத்தப்பட்ட குறிப்பாக தேவர் சாதி அரசியலே தமிழ்  தேசியத்தையும் வழி நடத்துகிறது. இன்றைக்கு திருமாவளவன் தலித்தே என்றாலும் தமிழ் தேசிய அரசியலில் இருந்து ஒதுக்கப்படுவதையும் அவர் தார்மீக நெறிகளுக்கு அப்பால் நூறு தள்ளி நிற்கிறேன். 200 அடி தள்ளி நிற்கிறேன் நாம் இணைந்து ஈழ மக்களுக்காக உழைக்கலாம் என்று தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பதும் தமிழ் தேசியவாதிகள் திருமாவை ஒதுக்கி வைப்பதையும் காண முடிகிறது. மௌனம் என்பது எவளவு பெரிய வன்முறை என்பதை தமிழ் தேசிய குழுக்களின் அணுகுமுறைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும். 
* தலித்துக்கள் மீதான இந்த மரணதண்டனையை, இனப்படுகொலையை எவன் ஒருவன் கண்டிக்கத் தயங்குகிறானோ அப்போதே அவன் பயங்கரவாத இலங்கை அரசை கண்டிக்கும் உரிமையை இழந்து விடுகிறான். மூவருக்கும் மரணதண்டனை வேண்டாம் என்று சொல்லுகிற ஒருவன் தலித்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட விரோத மரணதண்டனைக்கு எதிராகவும் பேசத் தவறுகிறான் என்றால் அவன் பகுத்தறிவுக்கு புறம்பானவனாக போலி முற்போக்காளனாக வாழ்கிறான் என்று பொருள்.
* மாணவர் பழனிக்குமாரை படுகொலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், தலித்துக்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை நடத்திய காவலர்கள், உத்தரவிட்ட அதிகாரிகள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மிக முக்கியமாக தென் மாவட்ட அரசு அதிகாரிகள், போலீசார், போலீஸ் அதிகாரிகள் சொந்த ஊரில் இருந்து மாறுதல் செய்யப்பட்டு அவர்களை சென்னை போன்ற நகரங்களில் பணியமர்த்துவதோடு, கலவரக் காலங்களில் வெளி மாநில போலீசாரைக் கொண்டு பதட்டச் சூழலை எதிர்கொள்ள வேண்டும்.  பெரும்பலான காவல்துறை அதிகாரிகள், போலிசார் தேவர் சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை பல் வேறு உண்மையறியும் குழுவின் அறிக்கைகள் வெளிப்படுத்தியுள்ள நிலையில், தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் தேவர் சாதி போலீசுக்கு மிக முக்கிய பங்கிருப்பதையும் நாம் கொடியங்குளத்தில் தொடங்கி தாமிரபரணி படுகொலை, பரமக்குடி படுகொலை வரை புரிந்து கொள்ள முடியும். தலித்துக்களுக்கு போலீஸ், அரசு நிர்வாகத்தில் உரிய பங்கீடுகளை வழங்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சாதியை போலீஸ் துறையில் கட்டுப்படுத்தும் படி சட்டம் இயற்றப்பட வேண்டும். 
* தேவர் சாதித் தலைவர் என்று சொல்லக்கூடிய முத்துராமலிங்கம் என்பவரின் பிறந்த நாள் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவது போல தலித் மக்களின் தலைவரான இமானுமேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அல்லது முத்து ராமலிங்கத்தின் விழாவை அரசு விழாவாக கொண்டாடுவதை தடை செய்ய வேண்டும்.
* படித்தவர்கள் எல்லாம் சாதி பார்க்க மாட்டார்கள் என்ற தமிழனின்  பொதுப்புத்தி இன்று உடைந்திருக்கிறது. கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளார்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் சொந்த சாதியை மீற முடியாதவர்களாக இருக்கும் நிலையோடு அவர்கள் காக்கும் மௌனமும் இங்கே குறிப்பிடத்தக்கது.சொந்த சாதியை மறுத்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள்க்காக போராடும் பார்ப்பன நண்பர்களையும், தேவர் சாதி உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட ஆதிக்க சாதி நண்பர்களையும் நாம் பாராட்டுகிறோம். பல பத்தாண்டுகளின் பின்னர் இருண்ட மேகமாய் தலித் மக்கள் மீது பாய்ந்துள்ள தமிழக சாதி வெறி போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை கண்டிப்போம்.

நன்றி - அருள் எழிலன். முகநூல்

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப் போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.


இமானுவேல் சேகரன்
ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

- குருசாமி மயில்வாகனன்

நன்றி வினவு

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More