Slideshow

"கே.டானியல் கடிதங்கள்" - ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் பயணத்தடங்கள் - கானா பிரபா

"தனி மனித விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டவை பொதுக்கருத்துக்கள் ஆகிவிடமாட்டாது. சில சந்தர்ப்பங்களில் பொதுக்கருத்துக்கு தனிமனிதக் கருத்து மூலவேராகவும் அமைந்துவிடுகின்றது. "
( கே டானியல் 15-12-83, "கே.டானியல் கடிதங்கள் )



வெற்றுத்தாள் எடுத்து ஊற்றுப் பேனாவை ஒரு தடவை உதறிவிட்டு எழுதத் தொடங்கினால் மடை திறந்த வெள்ளம் போல தன் உள்ளக்கிடக்கையைக் கொட்டித் தீர்த்து எழுதி முடிப்பது கடிதங்கள் கொடுக்கும் உபகாரம். ஒருவரின் எழுத்தின் போக்கை வைத்துக்
கொண்டே அவர் என்ன சொல்லவருகின்றார், அவருடைய மன நிலை எப்படி இருக்கின்றது என்பதைக் கடிதங்களில் பொதிந்திருக்கும்
வரி வடிவங்களே சாட்சியம் பகரும். இன்றைய மின்னஞ்சல் தொழில்நுட்பம் என்ற வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துக் கொண்டிருப்பது
இம்மாதிரி மனம் விட்டுக் காகிதத் தாளில் பகிரப்படும் கடிதம் என்னும் கலையை. மேலை நாட்டு அறிஞர்களால் தமது இலக்கிய, வாழ்வியல் பகிர்வுகளைப் பெருமளவு கொட்டித் தீர்ப்பதற்கு இக் கடிதக்கலையே ஒரு வடிவமாகச் செயற்பட்டது. தமிழிலும் கூட மு.வரதராசனார், பேராசிரியர் நந்தி உட்பட்ட எழுத்தாளர் பெருமக்களால் கடிதவடிவிலேயே இலக்கியங்கள் சமைக்கப்பட்டன.


கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இவ்விதமான கே.டானியலின் இளையமகளின் கணவர் மூலம் ஒரு கடித இலக்கியம் என் கை வந்து சேர்ந்தது. அது தான் "கே.டானியலின் கடிதங்கள்". இந்தக் கடித இலக்கியத்தினைத் தொகுத்து வெளியிட்டிருக்கின்றார் அ.மார்க்ஸ் அவர்கள்.
"அடையாளம்" என்ற அமைப்பின் வெளியீடாக டிசெம்பர் 2003 இல் இந்த நூல் 192 பக்கங்களுடன் வெளிவந்திருக்கின்றது.


என் வாசிப்புப் பழக்கம் கால மாற்றத்துக்கேற்ப மாறி வருகின்றது என்பதற்கு இந்த நூலை முழுமூச்சில் வாசித்து முடிக்கக் கொடுத்த வாசிப்பனுபவமே உதாரணம் காட்டியது. இப்போதெல்லாம் சிறுகதைகளையும், நாவல்களையும் தேடிப்பிடித்து வாசிக்கும் ஆர்வம் ஏனோ எனக்குக் குறைந்து, தமது வாழ்வனுபவங்களோடு காட்டும் இலக்கிய மற்றும் சமூக சிந்தனைகளை சமீபகாலத்தில் கட்டுரை வடிவில் தரும் படைப்புக்களைத் தான் தீவிரமாக வாசிக்கத் தூண்டுகின்றது. கற்பனை உலகை விட நிஜ உலகில் படிக்க வேண்டியவை நிறையவே இருக்கின்றன என்பதற்கு இவ்வகையான பதிவுகள் ஒரு எடுத்துக்காட்டு என்பதும் ஒரு காரணம்.


"கே.டானியலின் கடிதங்கள்" என்ற நூலை எடுத்துப் பக்கங்களை விரிக்கும் போது கண் முன்னே கே.டானியலும் அ.மார்க்சும் உட்கார்ந்து விடுகின்றார்கள். தொடர்ந்து இறுதிப் பக்கம் வரை டானியலே பேச ஆரம்பிக்கின்றார். 1982 ஆம் ஆண்டு ஆரம்பித்து 1986 ஆம் ஆண்டு வரை தேதிவாரியாக இலங்கையில் நடைபெறும் சமூக, அரசியல், இலக்கிய நிகழ்வுகளைத் தன் பாணி விமர்சனத்தோடு மார்க்சுக்குச் சொல்லுக் கொண்டே போகின்றார். முறையாக நாள் குறித்து ஒரு வார சஞ்சிகைக்கு எழுதப்படும் சமுதாய விமர்சனப்பதிவுகளோடு ஒப்பிடும் போது கே.டானியலின் இந்தக் கடித எழுத்துக்களில் உள்ள நேர்மை ஒரு படி உச்சமாகவே இருக்கின்றது. காரணம் இந்தக் கடிதங்கள் இப்படியான நூலுருப் பெறும் என்று அப்போது கடிதம் எழுதிய டானியலோ அல்லது பெறுனர் அ.மார்க்சோ நினைத்திருக்கமாட்டார்கள்.



தான் வாழும் சமூகம் குறித்த அங்கலாய்ப்புக்களை இன்னொரு தேசத்தில் இருக்கும் ஒருவருக்குக் கடித வடிவில் காட்டிப் போன டானியலுக்கு கடிதங்களை எழுதும் போது எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களையோ, சமரசங்களையோ அல்லது பயத்தையோ காட்டவேண்ட்டிய அவசியம் இல்லை. அதை விட இன்னொரு காரணம் இவையெல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட மனிதர் இவர் என்பதும் ஒரு நியாயம்.


இந்நூலில் பின்னட்டையில் குறிப்பிடுமாற் போல தமிழ் தலித் இலக்கியத்தின் முன்னோடியும் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவருமான கே.டானியல் 1982 - 1986 காலகட்டத்தில் அ.மார்க்சுக்கும் அவரது தோழர்களுக்கும் எழுதிய கடிதங்கள். தனி நபர் சார்ந்த வெறும் கருத்துப் பரிமாற்றங்கள் என்ற நிலைமையைத் தாண்டிய இக்கடிதங்கள் தலித் இலக்கியம், சாதியம், தேசிய இனப்பிரச்சனை குறித்த ஒரு தலித்தியப் பார்வை எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு சிறந்த ஆவணமாக இத் தொகுப்பு அமைகின்றது.
தோழர் அ.மார்க்ஸ் அவர்களுக்கும், அவரது நண்பர்களும் காலப்பகுதியில் தஞ்சையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமது பஞ்சமர் தொகுதியை வெளியிட வந்த எழுத்தாளர் கே.டானியலின் அறிமுகம் கிடைக்கின்றது. பின்னர் கே.டானியல் தஞ்சையில் இருந்து யாழ்ப்பாணம் சென்றது முதல் (ஜூன் 1982) இரண்டாம் முறையாக அங்கே யாழில் இருந்து வருவதற்காகப் புறப்படும் காலப்பகுதி (சனவரி 1986) வரை அ.மார்க்சுக்கும் அவரது நண்பர்களுக்கும் எழுதிய கடிதங்களின் தொகுப்பே இது. ஆனால் பெருமளவு ஆக்கிரமிப்பது கே.டானியல் எழுதி அ.மார்க்சுக்கு அனுப்பப்பட்டவையே.
கடிதங்களை வாசித்த கணமே கிழித்துப் போடும் பண்பைக் கொண்ட மார்க்ஸ் இடமிருந்து தப்பிப் பிழைத்தவை தான் இக்கடிதங்கள். அதுவும் தன் மனைவி கே.டானியலின் கடிதங்களைப் எப்படியோ பத்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்துப் பாதுகாத்ததால் தான் இவை இப்போது நூலில் வருமளவு வழியேற்பட்டது என்கின்றார் மார்க்ஸ்.



இக்கடிதப் போக்குவரத்து நிகழ்ந்த காலகட்டத்தில் அ.மார்க்சின் வயது 33, டானியலுக்கோ 54. நூலின் தொகுப்புரையில் மார்க்ஸ் குறிப்பிடுவது போன்று இவரின் தந்தை வயதினையொத்த டானியல் எந்த விதமான வயது வேறுபாடுகளுமின்றி ஈழத்துச் சாதியச் சூழல், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள், இலக்கிய முயற்சிகள், அன்றைய கால்கட்டத்து ஆயுதம் ஏந்திப் போராடிய விடுதலை இயக்கங்கள் குறித்த பார்வை, அரச அடக்குமுறைகள் என்பன இந்தக் கடிதப் பேச்சுக்களில் அடங்கியிருக்கின்றன. வெறும் மூன்றாண்டுப் பழக்கத்திலேயே மார்க்சையும் அவரது தோழர்களையும் தன்னுடைய நேசிப்புக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு தூரம் இவர்கள்பால் டானியல் அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார் என்பதைக் காட்டுகின்றது.


தனது படைப்புக்கள் குறித்துக் கடிதங்களில் சம்பாஷிக்கும் போது,
அ.மார்க்சோடு சம்பாஷிக்கும் கடிதங்களில், கே.டானியல் தனது நூல்களை அச்சாக்குவதில் வடிவமைப்பில் இருந்து, அவற்றை யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவது வரையான விபரங்களையும் அடக்கியிருக்கின்றார். ஒரு கட்டத்தில் ஈழத்து மொழி வழக்கில் அமைந்த தனது நாவலின் எழுத்துப் பிழைகளைச் சரிபார்க்க மார்க்சையே தேர்ந்தெடுக்கின்றார்.


யூன் 82 இல் தனது பஞ்சமர் நாவல் வெளியீட்டை பொருத்தமற்ற ஒரு சூழ்நிலையில் நடத்தியதைச் சொல்கின்றார். பஞ்சமர் வெளியீட்டைத் தொடந்து யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தர்க்கவாதங்களையும், பத்திரிகை விமர்சங்களையும் காட்டுகின்றார்.


கோவிந்தன் நாவலின் முகப்புப் படம் எப்படி அமையவேண்டும் என்பதில் இருந்து அந்த நாவல் அச்சாவது வரையான கவனமும் தென்படுகின்றது.1889 ஆம் ஆண்டு காலத்தில் இருந்து 1956 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான 200 பக்கங்கள் கொண்ட "அடிமைகள்" நாவலை எழுதும் போது தன் உடம்பில் இருந்த நோய் நாவலை எழுதும் போது பயங்கொள்ள வைத்ததையும் குறிப்பிடுகின்றார்.


தோழர் மூர்த்தி யாழ்ப்பாணத்திற்கு வந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல், இலக்கிய நிகழ்வுகளையும் காட்டும் அதே வேளை கே.டானியலின் அன்றைய காலகட்டத்துப் படைப்புக்கள் (கானல், கோவிந்தன், அடிமைகள், ) எவ்வளவு நிதி ரீதியான நெருக்கடிகளைச் சந்தித்தன என்பதையும் கடிதங்கள் சொல்லிச் செல்கின்றன. தஞ்சாவூர் பல்கலைக்கழகம் அப்போது சிறந்த படைப்புக்கு ஒரு லட்சம் பணப்பரிசை வழங்கும் அறிவிப்பைச் செவியுற்று மார்க்சிடம் பழுதாகாத நல்ல பிரதியாக பஞ்சமர் நாவலை எடுத்து லமினேட் செய்து
அனுப்பும் படியும் பரிசு வந்தால் அதை மார்க்சே வைத்திருந்து எதிர்கால அச்சிடல்களுக்குப் பயன்படுத்துமாறு டானியல் கேட்கின்றார். பல இடங்களில் தனது நூல்கள் தமிழகத்தில் அச்சேறும் காலத்தில் மார்க்ஸ் எதிர்நோக்கும் இடையூறுகளுக்கு மன்னிப்பும் கேட்கின்றார். ஆனால் எந்த விதமான விட்டுக் கொடுப்புக்களுக்கும் தயாராகித் தனது நூல்கள் வேண்டப்படாதவர்களால் அச்சிடப்படக்கூடாது என்பதில் கே.டானியலின் முரட்டுப் பிடிவாதமும் பல ஆதாரங்களுடன் கிடைக்கின்றன.


மார்க்சியம் குறித்த பார்வையில் " 'எதையும் , எப்போது மாக்சியப் பார்வைக்குள் வைத்து அளவு செய்ய வேண்டும் என்பதற்கு உலகில் எதுவுமே விதிவிலக்காக இருக்க முடியாது' என்ற கருத்தை யார் மறுக்கின்றார்களோ அவர்கள் பயந்தாங்கொள்ளிகள் - கோழைகள் என்று தான் நான் கருதுவேன்" என்கின்றார்.


டொமினிக் ஜீவா போன்றோர் மீதான விமர்சனக் கருத்துக்கள் மிகவும் காட்டமாகவே கடிதங்களில் தென்படுகின்றன, அதே வேளை பேராசிரியர் சிவத்தம்பி, பேராசிரியர் அ.கைலாசபதி, பேராசிரியர் சண்முகதாஸ், போன்றோரோடு நட்புணர்வோடு டானியல் செயற்பட்டத்தையும் காணக்கூடியதாக இருக்கின்றது. எழுத்தாளர் செ.யோகநாதன் இந்தியா செல்லும் வேளை (6/5/84) அவர் குறித்த டானியலின் வெளிப்பாடும் காட்டப்படுகின்றது.


பேராசிரியர் கைலாசபதியின் இறுதி நாட்களை வருத்தம் தோய்ந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தியிருப்பதோடு நோயுற்று மறைந்த இவரின் நினைவஞ்சலிக் கூட்டத்தை ஜனவரி 3, 1983 இல் நடத்திய நிகழ்வுகளும் கடிதங்களில் காணப்படுகின்றன. 24/0//83 இல் எழுதிய கடிதத்தில் " அமரர் கைலாசபதிக்கான அனுதாபக் கூட்டங்கள் இங்கு பல நிகழ்ந்து விட்டன - நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. பல பல விதமானவர்கள் பல பல விதமாகப் பேசித் தள்ளுகின்றன. பூசை புனஸ்காரங்கள் கூட நடக்கின்றன. அப்படிப்பட்ட கூட்டமொன்றில் சண்முகலிங்கம் என்னும் ஒருவர் என் மனதைத் தொடும்படியாகப் பேசிய பேச்சு ஒன்றில் "கைலாசபதியைத் தெய்வம் ஆக்காதீர்கள்; தமிழர்கள் தமிழைத் தெய்வமாக்கியதனால் தான் தமிழ் வைத்த இடத்திலேயே வைத்தபடி இருக்கின்றது. இத்துரதிஷ்ட கெதி கைலாசபதிக்கும் ஏற்பட்டு விடக்கூடாது" என்று சொன்னதாகக் குறிப்பிடுகின்றார்.


வெறும் வெற்றுத் தாள் போராளியாக இல்லாது சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான களங்களில் ஒலித்த டானியலின் குரலையும் பலகடிதச்சாட்சியங்கள் காட்டுகின்றன. கொடிகாமத்தில் நிகழ்ந்த சாதிக்கலவரம் உட்பட்ட பல உதாரணங்கள் இங்கே உள்ளன.


தனது அன்றைய கால அரசியல் பார்வைகளில்,
"நம்மவர்கள் உறவு கொண்டிருக்கும் திரிபுவாதப் பிரிவினர் உலகரீதியில் நம்மவர்களை விடப் பலம் உள்ளவர்கள். நான் முன்னர் குறிப்பிட்டது போல காலக்கிரமத்தில் நாம் விழுங்கப்படலாம். உலகத்தைப் பங்குபோடுவதற்கான போட்டியில் இருமுனைகளில் நிற்பவர்களுக்கு நடுவே விட்டுக்கொடுப்பு அல்லது தாராள மனப்பான்மை என்பது மிகவும் பிழையான முடிவையே தரும். " (5/3/83)


ஈழம், தனி நாடு போன்ற கருத்துக்களில் டானியலின் பார்வை வேறுபட்டு நிற்கின்றது. அதற்கு அன்றைய காலகட்டது ஆரம்ப கால அரசியல் களமும், அண்மையில் ஒரு செவ்வியில் புதுவை இரத்தினதுரை அவர்கள் சொன்னது போல் பத்துப் பேர் சேந்தால் ஒரு போராளி இயக்கம் என்று பெருக்கெடுத்த பல இயக்கங்களின் தோற்றமும், அவற்றின் செயற்பாடும் காரணமாக இருந்திருக்கலாம்.


யூலை 83 கலவரத்தினைத் தொடர்ந்த கடிதத்தில்,
"மனிதாபிமானம்" என்ற வரம்புக்குள் நின்று பார்க்கும் போது தமிழர்களுக்கு நேர்ந்த இழப்புக்கள் மிகவும் வருத்தத்திற்கும் கவலைக்குமுரியவைகளே. ஆனால் மாக்சியப் பார்வைக்குள் நோக்கும் போது அவை பேரினவாதத்தின் இயல்பான செயல்வடிவங்களே என்றும், இந்நாட்டின் பொருளாதார இக்கட்டுக்களில் இருந்து பெரும்பான்மைச் சிங்கள மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் செயல்பாடுகளே இவை என்பதோடு , ஆயுத வல்லரசுகளின் போட்ட போட்டியில் நாட்டை ஒரு பக்கத்தில் சேர்த்துவிடுவதற்கான எத்தனிப்புக்களிலும் இவை அடங்கும் என்று அன்று சொன்ன டானியலின் கூற்று, இன்று வெள்ளிடை மலையாகவே நம் எல்லோருக்கும் புரிகின்றது.
இந்திரா காந்தியின் ஈழப்பிரச்சனை தொடர்பான அணுகுமுறை, பார்த்தசாரதியின் வரவில் ஈழத்தமிழர்கள் கொண்டுள்ள நம்பிக்கை, ஈழப்பிரச்சனையில் மார்க்சிற்கும் டானியலுக்கும் இடையிலான மாறுபட்ட கருத்துக்களில் எழும் தர்க்க ரீதியான வாதங்கள், இந்திரா காந்தியின் மரணம் அப்போது ஈழத்தில் விளைவித்த தாக்கம், தொடர்ந்த பிரச்சனையில் இந்திய அரசின் தலையீடுகள் என்று டானியல் தன் கடிதங்களில் தன் விமர்சனப் பாங்கோடே எழுதிச் செல்கின்றார்.


மார்ச் 23, 1986 ஆம் ஆண்டு தஞ்சாவூரில் உள்ள தங்க சாரதா மருத்துவமனையில் கே.டானியல் உயிர் பிரிகின்றது. "தோழமை" அமைப்பின் சார்பில் செங்கொடி போர்த்தி அவர் உடல் வடவாற்றங்கரை ராஜாகோரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட இறுதி நிகழ்வு அடங்கிய அ.மார்க்சின் கடிதமும் (மார்ச் 25, 1986) , டானியலின் இறப்பு தாங்கிய செய்தியோடு யாழ் சென்ற வி.ரி.இளங்கோவனின் கடிதத்தில் டானியலின் வீட்டுக்காரரின் துயர் நிலை, அப்போது நிகழ்ந்த டானியலின் நினைவஞ்சலிக் கூட்டங்கள் அடங்கிய செய்தி பதிவாகியிருக்கின்றது. "டானியலின் எதிரிகள், துரோகமிழைத்தவர்கள் (அரசியலில்) அவரில் பழிப்பதில் இன்பம் கண்டவர்கள் கூட அஞ்சலி உரையாற்றுகின்றார்கள்" வி.ரி.இளங்கோவன் 16/4/1986


இக்கடிதத் தொகுப்பின் நிறைவில் கே.டானியல் மகன் டா.புரட்சிதாசன் 8-4-1986 இல் அ.மார்க்ஸ் இற்கு எழுதிய கடிதத்தோடு நிறைவு பெறுகின்றது. பிற்சேர்க்கையாக அ.மார்க்ஸ், ஜூன் 1982 இல் கே.டானியல் உடன் நிகழ்த்திய விரிவான நேர்காணலும், சிறுப்பிட்டி மேற்கு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரமும், பஞ்சமர், கோவிந்தன் நூல்களின் வெளியீட்டு விழா அழைப்பிதழ்களும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த வெட்டிக் கொலை செய்யப்பட்ட வெள்ளையன் அண்ணாசாமியின் புகைப்படமும் வெளியாகியிருக்கின்றது.


"அறைக்குத் திரும்பி படுக்கையில் விழுகிறோம். அடுத்த நாள் பிரிவை எண்ணி இதயம் கனக்க, இமைகள் மூட மறுக்கின்றன.
இரவு வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது."


கே.டானியலுடன் முதன் முதலில் சந்திப்பு ஏற்பட்டு அடுத்த நாள் அவர் தாயகம் திரும்பு முன் உள்ள நினைவை இப்படிப் பகிர்ந்து முடிக்கின்றார் அ.மார்க்ஸ். நூலை வாசித்து முடித்ததும், போராடி வாழ்ந்து மடிந்த ஒரு சாதி ஒழிப்புப் போராளியின் மனக்குமுறல்களின் வெளிப்பாடு சுமையாக மனதில் ஏறிக்கொள்கின்றது.


பி.கு- பெப்ரவரி 2008 இல் மேற்கண்ட பதிவை எழுதி பரணில் (ட்ராப்டில்) போட்டிருந்தேன், இன்று தான் இதை வெளியிட வேளை வாய்த்தது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More