Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label பெரியார். Show all posts
Showing posts with label பெரியார். Show all posts

அம்பேத்கர் சிந்தனையே தொடக்கப் புள்ளி - -எஸ்.வி. ராஜதுரை


தமிழில் அம்பேத்கர்என்பது குறித்துப்  பேசுகையில்அண்ணல் அம்பேத்கரையும்அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்திற்கு முதன் முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் பெரியார் ஈ.வெ.ரா. என்னும் உண்மையிலிருந்தே தொடங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான "ரிவோல்ட்', "குடி அரசுஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள்எனக்குத் தெரிந்தவரை, 1929 இல் காணப்படுகின்றன. பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு செம்ஸ்போர்ட் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பாக நியமிக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் 1919 இல் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த நிகழ்வுதான் – அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால்அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்திற்குக் கிடைத்தது எனக் கருதலாம்.

பெரியாரின் தலித் எழுத்து


தலித் எழுத்து – வேதனைகளைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, சமூக விடுதலையையும் இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இது, தலித்தாகப் பிறந்தவர்களுக்கும், அவ்வாறு உணர்கின்றவர்களுக்குமே கைகூடும். பெண் விடுதலைக்காக ஓங்கி ஒலித்ததைப் போலவே, தீண்டத்தகாத மக்களின் உணர்வுகளை முற்றாகப் புரிந்து கொண்டதாலேயே – பெரியாரின் எழுத்து, தலித் எழுத்தைப் போல் அமைந்திருக்கிறது! "நாம்' "நம்மில் கீழ்த்தர மக்கள்' என்றெல்லாம் பெரியார் பிரித்துப் பார்த்து, தலித்துகளை இழிவுபடுத்தினார் என்று அவர் மீது கண்மூடித்தனமாக அவதூறுகளைச் சுமத்தினார்கள்; இன்னும் கூட "கிசு கிசு'த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாபாசாகேப் அம்பேத்கர் எழுதிய "சாதியை ஒழிக்க வழி என்ன?' என்ற நூல் வெளிவருவதற்கு அய்ந்து ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் இக்கட்டுரையை எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் கவனத்திற்குரியது. இப்புரட்சியாளர்கள் இணைந்த புள்ளியும் இதுவே.

"தலித் முரசு' 13ஆம் ஆண்டின் சிறப்புக் கட்டுரையாகபெரியாரின் "தலித் எழுத்தை' வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. "எவனெழுதினாலென்ன?' என்ற புனைப் பெயரில் பெரியார் எழுதிய கட்டுரை – "குடிஅரசு' 25.10.1931 ஆதாரம் : "பெரியார் களஞ்சியம்', தொகுதி 25, பக்கம் : 102 – 114

சகோதரர்களே! தீண்டாதார் என்பதாக ஒதுக்கித் தள்ளி வைத்திருக்கும் நம்முடைய சமூகத்தின் எண்ணிக்கை, இந்தியாவில் சுமார் ஏழு கோடி மக்கள் இருக்கின்றோம். நாம் தெருவில் நடந்தாலும், மற்றவர்கள் கண்ணில் நாம் தென்பட்டாலும், நமது நிழல் மற்ற மனிதர்கள் மேல் பட்டாலும் தீட்டு ஒட்டிக் கொள்ளுமென்றும், தோஷமென்றும், உடனே குளித்தாக வேண்டுமென்றும், சிலர் குளிப்பது கூட போதாதென்று ஏதாவது பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகின்றார்கள்.

இவை தவிர, நமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டுமானால் நாமாகப் போய் மொண்டு கொள்ளும்படியானதொரு பொதுக்குளமோ, குட்டையோ, ஏரியோ, கிணறோ கிடையாது. நாம் எந்தக் குளத்தையாவது, கிணற்றையாவது தொட்டுவிட்டால் அவற்றை மந்திரங்கள் சொல்லி புண்ணியார்ச்சனை செய்து தண்ணீரையும், மாட்டு மூத்திரத்தையும் தெளித்து சுத்தம் செய்தாக வேண்டும். நாம் குடி இருக்க வேண்டிய இடமோ ஊருக்கு ஒரு மைல், அரை மைல் தூரத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு அங்குதான் வாழ வேண்டும். அங்கும் கூட ஓட்டு வில்லை வீடோ, மெத்தை வீடோ கட்டி அதில் நாம் குடி இருந்தால் ஊருக்கே கேடு வந்து விடுமாம். நாம் வாழும் இடத்துக்கு, "சேரி' என்று பெயர். நாம் வாழுகின்ற பக்கம்தான் ஊர் ஜனங்கள் குப்பை செத்தை கொண்டு வந்து போட்டு வைப்பதும், ஊரார் மல ஜலம் கழிக்க வருவதுமான இடமாக உபயோகித்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், அவற்றிற்குக் காவலாய் இருக்குமாம்!

நமக்கு வேலையோ தோட்டி வேலைதான் பாரம்பரியமாய் சொந்தமானது; மற்றும் ஊர் கூட்டி, மலம் அசிங்கம் முதலியவற்றை எடுத்துச் சுத்தம் செய்வதும், பிணம் சுடுவதும், செத்த மிருகங்களை அப்புறப்படுத்துவதும், கழனி வயல் அப்புறப்படுத்துவதும், கழனி வயல் முதலியவைகளுக்கு குப்பை, செத்தை முதலியன கொண்டு போடுவதும் மற்றும் தானியம் விதைத்து அறுப்பு அறுத்து, மிராசுதாரன் வீட்டிற்குத் தானியம் போய்ச் சேரும் வரையில் சுய வேலையும் செய்வதும், வீட்டிலும், வயலிலும் சேருகட்டி வைத்திருக்கும் தானியத்திற்கு காவல் இருப்பதும் மற்றும் இதுபோன்றவற்றுடன், தப்புக் கொட்டுதல், செத்துப் போன பிணங்களுக்காக அழுதல், பிணத்தின் மீது போத்தி இருந்த துணியில் கொஞ்சம் கிழித்து எடுத்துக்கட்டிக் கொள்ளுதல்; இரவிலும், பகலிலும் 10, 20, 30 மைல்கள் தூரமுள்ள வெளியூர்களுக்குச் சேதி கொண்டு போதல் முதலிய காரியங்கள் செய்ய வேண்டியதும் நமது பிறப்புரிமையாகும்.

இவை ஒரு பக்கமிருந்தாலும் நம் பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பது, மேல் ஜாதிக்காரர்களின் கட்டளையாகும். அதுவும் மதத்தை ஒட்டிய கட்டளையாகும். அவற்றை மீறி படிப்பதாய் இருந்தாலும் பள்ளிக் கூடங்கள் கிடையாது. ஏதாவது ஒன்று இரண்டு பள்ளிக் கூட வசதிகள் இருந்தாலும் நமக்கு சம்பளம் கொடுக்கவும், புஸ்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும், துணிமணி கொடுக்கவும், படிக்கவும், பையனுக்கு சாப்பாடு போடவும் சவுகரியம் கிடையாது. கிராமங்களில் இருக்கும் நம்மவர்கள் இவ்விஷயங்களைப் பற்றி நினைக்கவே கூடாது. இவை தவிர, நமக்கு நாவிதன் கிடையாது. வண்ணான் கிடையாது. நாமாகத் துறை வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அதற்கு கிணறு, குட்டையும் கிடையாது. ஒரு கிராமத்தில் 500 வீடு இருந்தால், அங்கு 20 பறையர் வீடு இருந்தால், அந்த 20 வீட்டுப் பறையர்களும் அவர்களது பெண்டு பிள்ளைகளும் எல்லாமுமே மேற்கண்ட 500 வீட்டுக் குடி மக்களுக்கும் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த குடும்பத்தைப் போல் அடிமை வேலை செய்ய வேண்டியதாகும். இரவு பகல் என்கின்ற கணக்கே கிடையாது. கூலி கேட்டால் உதை கிடைக்கும். விவசாய அறுவடையின் போது களத்தில் பிச்சை வாங்குவதும், மற்றபடி சட்டி எடுத்துக் கொண்டு போய் வீடு வீடாய் "பிச்சை போடுங்க சாமி' என்று கூப்பாடு போட்டு பிச்சைச் சோறு கேட்டு வாங்கிச் சாப்பிட வேண்டியதாகும்.

பிச்சைச் சோறு கேட்கும் சட்டி கூட முழுசாய் இருந்தால், அது ஒரு பெரிய குற்றமாகிவிடும். ஏனெனில் கிராமத்தில் பறையன் முழு சட்டி எடுத்துப் பிச்சை எடுத்தால், கிராமத்திற்குக் கெடுதி ஏற்பட்டுவிடும் என்கின்ற ஓர் அய்தீகம் உண்டு. ஆதலால் நம்ம சட்டியாய் இருந்தாலும் வாய்ப்பாடுகளை உடைத்து ஓடு மாதிரியாக ஆக்கிக் கொண்டு தான் சோத்துப் பிச்சைக்குப் போக வேண்டும். சில இடங்களில் ரொம்பவும் மேல் ஜாதிக்காரர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் பறையர்களுக்குப் பிச்சைச் சோறு போட மாட்டார்கள். ஏனெனில், பறையருக்குச் சோறு போட்டால் வீட்டிற்குள் சட்டியில் இருக்கும் சோறெல்லாம் தீட்டாய் (சேஷமாய்) போய் விடுமாம். இது மாத்திரமல்லாமல் இன்னும் ஒரு மதக் கொள்கை உண்டு. அதென்னவென்றால், சில மேல் ஜாதிக்காரர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உள்ள மீதியையும் அவர்களுக்குத் தேவையில்லாத மீதத்தையும் கூட பறையருக்குக் கொடுத்தால் பெரிய தோஷம் ஏற்பட்டுவிடும் என்று கருதி, குழிவெட்டிப் புதைத்து விடும்படி செய்வதும் உண்டு. நமக்குப் பிச்சைச் சோறு போடக்கூடிய ஜாதியாரோ, கெட்டுப் போனதையும், ஊசிப் போனதையும்தான் பத்திரமாய் வைத்திருந்து நமது சத்தம் கேட்டதும் ஓடிப்போய்க் கொண்டு வந்து போடுவார்கள். நிற்க.

துணி விஷயத்திலும் இப்படித்தான். நமக்கோ புதுத்துணி வாங்கிக் கட்ட காசு கிடையாது. கட்டினாலும் பொறாமைப்படுவார்கள். மேல் ஜாதிக்காரர்கள் கட்டிக் கிழித்த கந்தலையே கட்ட வேண்டும். அப்படிக் கட்டுவதற்கும் சில முறைகள் உண்டு. அவை என்னவென்றால், வேட்டியை இடுப்பில் முழங்காலுக்குக் கீழே தொங்கவிட்டு கட்டக்கூடாது. மேலேயும் துணி போடக் கூடாது, பெண்கள் மார்பை மூடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளுடன் மற்றும் தங்கம், வெள்ளி, நகை போடக்கூடாது என்பதும், குடை பிடிக்கக்கூடாது என்பதும், காலில் செருப்புப் போடக்கூடாது என்பதும், பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள் உபயோகிக்கக் கூடாது என்பதுமான பல நிபந்தனைகளுண்டு.

இவ்வளவும் தவிர, தமிழ் நாட்டில் பல ஜில்லாக்களில் பூமிகளை ஒருவருக்கொருவர் விற்கும்போது, அந்த பூமியில் வேலை செய்யும் அடிமைகள் என்பதாக நம் பெரியோர்களின் பெயர்கள் போட்டே அந்த வழி அடிமை என்பதாக நம்மையும் குடும்பத்துடன் விற்றுவிடுவதுமுண்டு. அந்த பூமியை வாங்கினவர்களுக்கு எல்லாம் நாம் அடிமைகளாவோம் மற்றும் பல ஜில்லாக்களில் நம்மவர்கள் படும் பாடு சொல்லவே முடியாது; உங்களில் பலர் காதால் கேட்டுகூட இருக்க மாட்டீர்கள். அதாவது, மலையாள ஜில்லாக்களில் நம்மில் ஒரு வகுப்பாரை "நாயாடிகள்' என்று சொல்லுவது உண்டு. அவர்கள் எந்த ரோட்டிலும் நடக்கக் கூடாது. சுமார் 50 கெஜம் முதல் 100 கெஜத்திற்கு மேற்பட்ட தூரத்தில்தான் எந்த ரோட்டிலும் இருக்க வேண்டும். அவர்கள் எங்கும் எவ்விதத் தொழிலும் செய்ய முடியாது. யாருக்கும் தெரியாமல் ஊருக்கு வெளியில் சாலைத் தெருவில் ஒரு துணியை விரித்துப் போட்டு விட்டு, காட்டுக்குள் ஓடிப்போய் மறைந்து கொண்டு "தம்பிரானே தம்பிரானே' என்று கூப்பாடு போடவே – கூடும் சாலையில் நடக்கும் ஜனங்கள் அதில் ஏதாவது பண்டமோ, காசோ போட்டு

விட்டுப் போனால் – மாலையில் ஒருவருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொண்டு ஓடிவிட வேண்டும். இதைத்தவிர எங்காவது வயல்களில் சிந்திக் கிடக்கும் நெல்லுகளைப் பொறுக்குவதும் மற்றும் ஏதாவது பட்சி, பூச்சி, ஜந்து முதலியவைகளைக் கல்லால் அடித்துப் பிடித்து சுட்டுத் தின்பதும் ஆகியவற்றைத் தவிர வேறு ஒன்றுமே செய்ய முடியாது. இதைத் தவிர மலையாளத்தில் மற்றும் ஒரு கூட்டம் உண்டு. அவர்கள் நம்மிலும் கொஞ்சம் பெரிய ஜாதியென்று சொல்லிக் கொள்ளுவார்கள். ஆனால், அவர்கள் தெருவில் நடக்கும் போதே "ஹா' "ஹா' என்று சத்தம் போட்டுக் கொண்டே வர வேண்டும். ஏனெனில், “தாழ்ந்த ஜாதிக்காரனாகிய நான் வருகிறேன், எதிரில் வரும் உயர்ந்த ஜாதியார்களே விலகிக் கொள்ளுங்கள்'' என்று குறிப்புக் காட்டுவதற்காக, அதாவது மூலை முடுக்குகளில் மோட்டார் கார்கள் வரும்போது, எதிரில் வண்டி வந்தாலும் வராவிட்டாலும் அது "ஹாரன்' ஊதுவது போல் சத்தம் போட வேண்டும். ஆனால், மோட்டார் மூலை முடக்குகளில் மாத்திரம் ஊதும்; இவர்களோ நேர் ரோட்டில் போகும் போதும் மற்றவர்களுக்கு தான் கீழ் ஜாதிக் காரன் என்று தெரிவிப்பதற்காக வேண்டி சத்தம் போட்டுக் கொண்டே வரவேண்டியதாகும்.

இவை தவிர, சமூகத் துறையில் நமக்கு இருக்கும் ஸ்தானமானது, நாம் எந்த விதத்திலும் நமது இன்றைய நிலைமையை விட்டு மாற முடியாமலும், நாம் எப்படியும் பணக்காரர்கள் ஆக முடியாமலும், நாம் ஒரு தனித் தொழில் செய்து சுதந்திரமாயிருக்க முடியாமலும், நமது நிலைமையை உயர்த்திக் கொள்ள படிக்கவோ அல்லது அதிக வரும்படி உள்ள வேறு தொழிலில் போய்ச் சேரவோ மார்க்கமில்லாத நிலைமையிலேயே இறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றோம். எவ்வளவுதான் நம்மவர்கள் முன்னுக்கு வருவதானாலும் சுயராஜிய அரசியலில் பியூன் போலிஸ்காரன் வேலைக்கு லாயக்காகலாம்.

ஸ்தல சுயாட்சிகளில் கக்கூஸ் எடுப்பதில் இருந்து, குப்பை மேஸ்திரி வேலைக்கு லாயக்காகலாம். இதுவும் அந்தந்த இலாகா "தேசியத் தலைவர்கள்' தயவு வைத்து கொடுத்தõல்தான் உண்டு. மற்றபடி குமாஸ்தா வேலைக்கோ அதற்கு மேற்பட்ட ஏதாவது உத்தியோகஸ்தர் வேலைக்கோ வர நமக்கு மார்க்கமே கிடையாது. 50 லட்சம் ஜனத்தொகை கொண்ட கிறிஸ்துவர்கள் வேறு மதக்காரராய் இருந்தும் பார்ப்பனர்களுக்குச் சமமாக அனேகம் பேர் உத்தியோகம் பதவி முதலியவை பெற்று வாழுகின்றார்கள். நம்மைப் போலவே எண்ணிக்கையுள்ள முகமதியர்கள் அன்னிய மதக்காரர்களாய் இருந்தும், அதாவது எட்டுக் கோடி இருந்தும் சற்று ஏறக்குறைய அவர்களது ஜனத்தொகைக்குள்ள விகிதாச்சாரம் எல்லா உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்; மற்றும் இவர்களில் அநேகர் ஏராளமான பணக்காரர்களாகவும், பேங்கர்களாகவும் இருக்கிறார்கள். இந்துக்களில் உள்ள மற்ற வகுப்பார்களும் கூட எவ்வளவோ முற்போக்கடைந்திருக்கின்றார்கள்.

ஆனால், ஏழு கோடி ஜனத்தொகை கொண்ட நாம் (இந்த நாட்டுப் பழங்குடி மக்களாக இருந்தும்) தீண்டாதார் அல்லது பஞ்சமர் என்கின்ற பெயரை உடைய நாம் எந்த அளவில் படித்தவர்களாய் இருக்கின்றோம். உத்தியோகஸ்தர்களாக இருக்கின்றோம். பணக்காரர்களாய், மிராசுதாரர்களாய், பாங்கர்களாய், வியாபாரிகளாய் இருக்கின்றோம் என்பதை யோசித்துப் பாருங்கள். படித்தவர்கள் 1,000க்கு ஒருவர் உண்டா? பணக்காரர் 10,000க்கு ஒருவர் உண்டா? பதவி உள்ளவர்கள் 1,00,000க்கு ஒருவர் உண்டா? இதன் காரணமென்ன?

நாம் தானே இந்நாட்டின் பழம்பெரும் குடிமக்கள் என்று ஆதாரம் இருக்கின்றது. நமக்குத்தானே ஆதி திராவிடர், ஆதி ஆந்திரர், ஆதி மராட்டியர், ஆதி கர்நாடகர் என்கின்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த "ஆதி' பட்டமெல்லாம் நாம் என்றும் நிலையாய், அடிமையாய், தீண்டாதாரராய் இருப்பதற்கு அனுகூலமாக கொடுக்கப்பட்டதேயொழிய, மற்றபடி இந்நாட்டின் பழம் பெருங்குடி மக்கள் என்று மரியாதை செய்து முற்போக்கடையச் செய்விப்பதற்குக் கொடுக்கப்பட்டதா? அல்லது உதவுகின்றதா? என்று எண்ணிப் பாருங்கள்.

ஒரு நாட்டிற்கு எவ்வித சுதந்திரமிருந்தாலும், பூரண சுயேச்சை இருந்தாலும், சுயராஜியமிருந்தாலும் அந்நாட்டிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் தீண்டாதார் என்றும், கீழ் ஜாதியார் என்றும், பாடுபட்டு உழைத்து, மற்றவர்களுக்கே போட்டுவிட்டு, தெருவில் நடக்கவும், குளத்தில் தண்ணீர் மொள்ளவும், ஊருக்குள் குடியிருக்கவும் உரிமையில்லாமலும், வயிறார உண்ண முடியாமலும் இடுப்பார உடுத்த முடியாமலும் இருக்கும்படியான மக்கள் உள்ள நாடாயிருந்தால் – அந்த நாடு கொடுங்கோன்மை ஆட்சி உள்ள நாடு என்று சொல்லுவதல்லாமல், அதற்கு ஏதாவது மேற்கொண்ட யோக்கியதை உள்ள பெயர் கொடுக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். நிற்க.

சகோதரர்களே! மற்றொரு விஷயத்தையும், நான் சொல்லாமல் விடுவதற்கில்லை. அதாவது நாம் மேல் கண்டபடியான இழிவுக்கும், கொடுமைக்கும் பாத்திரமானதற்கு நாமே முக்கிய காரணஸ்தராய் இருந்து வரும் நம்முடைய அறிவீனத்தையும், மானமற்ற தன்மையையும் எடுத்துச் சொல்லித் தீர வேண்டுமல்லவா? அதைச் சொல்லுகின்ற போது நீங்கள் வருத்தப்படக் கூடாது. நான் சொல்லுவது உண்மைதானா? அல்லது அல்லவா? என்று யோசித்துப் பார்க்க வேண்டும். உண்மையென்று பட்டால் உடனே கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! நாம் தீண்டாதவர்கள் என்று சொல்லப்படுவதற்கும், தீண்டாதவர்களாய் நடத்தப்படுவதற்கும் முக்கியக் காரணமென்ன என்பதை யோசித்துப் பாருங்கள். வெள்ளைக்காரர்களிலாவது, துருக்கியர்களிலாவது, சீனா, ஜப்பான்காரர்களிலாவது – தங்கள் நாட்டு மக்களில் யாரையாவது தீண்டாத ஜாதியாராகவும், கீழ் ஜாதியாராகவும் நடத்துகின்றார்களா? யாராவது அந்தப்படி நடத்தப்பட சம்மதித்துக் கொண்டிருக்கிறார்களா? நம் நாட்டில் மாத்திரம் ஏன் அம்மாதிரி தீண்டாதார்களாய் நடத்தப்பட வேண்டும்? நாமும் ஏன் வெகுகாலமாகவே அதற்கு இணங்கி, நம்மை நாம் தீண்டாதாரர் என்றே எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்பன போன்ற விஷயத்தை யோசித்துப் பாருங்கள்.

அன்றியும், வெளிநாட்டிலிருந்து வந்த கிறிஸ்தவனாவது, முகமதியனாவது நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்களா? அன்றியும் சீனா, ஜப்பான் ஆகிய இடங்களில் இருந்து வரும் சைனாகாரன், ஜப்பான்காரன் முதலிய பவுத்தர்களாவது நம்மைத் தீண்டாதவர்களாக நடத்துகின்றார்களா? இல்லையே. மற்றபடி யார் நம்மைத் தீண்டாதாராய் நடத்துகின்றார்கள் என்று கவனித்துப் பாருங்கள். நம் நாட்டிலே பிறந்து, நம் நாட்டிலே வளர்ந்து நம்மிடம் வேலை வாங்கி வாழ்ந்து வரும் மக்கள்தான் நம்மைத் தீண்டாதாரர்களாய் நடத்துகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஏன் அவர்கள் அம்மாதிரி நடத்துகின்றார்கள் என்று பாருங்கள். நாமும் அவர்களும் ஒரே தேசத்தார் என்பதற்காகவா? அல்லவே அல்ல. மற்றெதற்காக என்றால், நாமும் அவர்களும் ஒரே மதக்காரர்கள் என்பதற்காகவே அல்லாமல், வேறு எந்தக் காரணத்தாலுமல்ல. அதாவது நம்மையும், நம்மைத் தீண்டாதவர்களாக பாவிக்கும் மக்களையும் ஒரே மதத்தின் கீழ் சேர்த்து – எல்லோரும் இந்துக்கள் என்றும், இந்து மதக்காரர்கள் என்றும் சொல்லிக் கொள்வதாலேயே ஒழிய வேறில்லை.

பெரிதும் வேறு நாட்டாரும், வேறு மதக்காரர்களுமான இஸ்லாம் மதக்காரரையும், பவுத்தரையும், கிறிஸ்துவரையும் தீண்டாதார் என்று யாராவது சொல்லுகின்றார்களா? அல்லது அவர்களாவது மற்றவர்கள் அப்படிச் சொன்னால் பொறுத்துக் கொண்டு இருப்பார்களா? ஒரு நாளும் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் மதத்தில் தீண்டாமை என்பதான ஒரு பிரிவு இல்லாததாலும், சுயமரியாதையே பிரதானமானதாலும் அவர்களை யாரும் அந்தப்படி சொல்ல முடியாது. சொன்னாலும் அவர்கள் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். உடனே "புத்தி கற்பித்து' விடுவார்கள்.

ஆதலால், நம் தலையின் மீது நாம் சுமந்து கொண்டிருக்கும் "இந்து' என்னும் மதம்தான் நம்மைத் தீண்டாதவர்களாக ஆக்கி இருக்கின்றதேயொழிய, வேறு எந்தக் காரணத்தினாலும் நாம் தீண்டாதார்கள் அல்ல என்பதை இப்போது நீங்கள் உணருகின்றீர்களா? ஆகவே, நம்மில் எவன் ஒருவன் தன்னை "இந்து' என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ, அவனெல்லாம் தன்னை மற்றொரு இந்து என்பவன் தீண்டாதான், பறையன், பஞ்சமன் என்று சொன்னால் கோபிக்கவோ, ஆட்சேபிக்கவோ சிறிதும் இடமில்லை என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.

இந்து மதத்தில் தீண்டாமை உண்டு என்பதுடன் வெகு காலமாக நம் முன்னோர்கள் காலம் தொட்டு நாம் "சண்டாளப் பறையராய்' தீண்டாதாரராய் நடத்தப்பட்டு வந்திருக்கின்றோம். நம்மை நாம் இந்து என்று சொல்லிக் கொள்வதன் மூலம் – நாமே நம்மை தீண்டாதார் என்று ஒப்புக் கொண்டும் வந்திருக்கின்றோம். அப்படி இருக்க இன்று நாம் திடீரென்று நமக்குச் சுயமரியாதை வந்து விட்டவர்கள் போல வேடம் போட்டுக் கொண்டு, “நம்மை யாரும் தீண்டாதார் என்று சொல்லக் கூடாது'' என்று சொன்னால், அதற்கு ஏதாவது அர்த்தமுண்டா? இந்தப்படி நாம் சொல்லிக் கொள்வதாலேயே மற்றவர்கள் பயந்து கொள்ளுவார்களா?

ஒரு மனிதன் தன் மேலெல்லாம் மலத்தை எடுத்துப் பூசிக் கொண்டு வந்து எதிரில் நின்று, “என்னைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது; என்னை எட்டிப் போ என்று யாரும் சொல்லக் கூடாது'' என்று சொன்னால் யாராவது கேட்பார்களா? அல்லது அது நியாயமாகவாவது இருக்குமா? அல்லது “மலம் பூசிக்கொண்டு வருபவர்களைப் பார்த்து யாரும் அசிங்கப்படக் கூடாது, எட்டி நில் என்று சொல்லக் கூடாது'' என்று இண்டியன் பீனல் கோட்டில் அதாவது கிரிமினல் சட்டப் புஸ்தகத்தில் ஒரு செக்ஷன் போட்டு விட்டதனாலேயே, அந்தப்படி அசிங்கப்பட்டு எட்டி நில் என்று சொன்னவர்களில் இரண்டொருவரை தண்டித்து விடுவதாலேயே அசிங்கப்படும் குணத்தை, மக்களிடம் இருந்தும் மாற்றிவிட முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

இது போலவே நான், இந்துக்களில் மற்றொரு சாரார், தங்கள் மதத்தைச் சேர்ந்த மற்ற மக்கள் தங்களைச் சூத்திரர் என்று யாரும் கூப்பிடக் கூடாது என்றும், “சூத்திரரென்றால் ஆத்திரம் கொண்டடி'' என்றும் சொல்லுகிறார்கள்; எழுதி ஆங்காங்கு தொங்க விடுகிறார்கள். இதுவும் பேதத்தன்மை என்றே சொல்வேன். ஏனெனில், தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளும் எவனையும் (அதாவது அவன் பார்ப்பனரல்லாதவனாய் இருந்தால்) அவனைச் "சூத்திரன்' என்று கூப்பிட உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் உரிமை உண்டு. ஏனெனில், இந்து மதத்தில் சூத்திரன் என்கின்ற வகுப்பு உண்டு என்பதானது, பார்ப்பனரொழிந்த ஏனையோருக்கு உரித்தானது என்பதும் இந்துவாய் இருக்கும் ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ள வேண்டியதேயாகும். இந்துக்களுக்குள் எத்தனை உட்பிரிவு சமயக்காரர்கள் இருந்தாலும் – அத்தனை சமயமும் சூத்திரனையும், பிராமணனையும், பஞ்சமனையும் (பறையனையும்) ஒப்புக் கொண்டே இருக்கின்றது.

அன்றியும் இந்த முறையானது, இந்து மத உட்பிரிவுச் சமயங்களாகிய சைவத்தின் சிவபுராணத்திலும், பெரிய புராணத்திலும், 63 நாயன்மார்களிலும் மற்றும் சங்கராச்சாரிகளிலும் இருக்கிறது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த சைவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். அதுபோலவே வைணவத்திலும் அவர்களது ஆழ்வாராதிகளிலும், பகவத் பாகவத பக்தர்களிலும், நாலாயிரப் பிரபந்தம், ராமாயணம் முதலிய இதிகாசப் புராணங்களிலும் ஆதாரம் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்க யாருக்கு, எந்த வைணவனுக்கு உரிமை உண்டு என்று யோசித்துப் பாருங்கள். மற்றும் இந்து மதத்திற்கு ஆதாரமான வேத சாஸ்திரம், ஸ்மிருதி முதலியவைகளிலும் இருப்பதோடல்லாமல் "பகவான் வாக்கு'களிலும், "ரிஷிகள்' வாக்குகளிலும் இருக்கின்றது என்றால், பிறகு இதை ஆட்சேபிக்கின்ற "இந்து' என்பவன் யோக்கியனாகவோ அல்லது அறிவுடையவனாகவோ இருக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, நம்மவர்கள் தங்களுக்குச் சூத்திரப்பட்டமும், தீண்டாதார் – பஞ்சமர் என்கிற பட்டமும் வேறு யாராலோ கொடுக்கப்பட்டதாய் கருதி மற்றவர் பேரில் கோபப்படுவது வடிகட்டின அறிவீனமேயாகும். ஏனெனில், எவன் ஒருவன் தன்னை இந்து என்று சொல்லிக் கொள்ளுகின்றானோ அவனெல்லாம் சூத்திரப் பட்டமும், பஞ்சமப் பட்டமும் – தானே எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு திரிகின்றவனாவானே தவிர வேறில்லை. இந்தியாவில் இந்து மதம் உள்ள வரை சூத்திரனும், பஞ்சமனும் ஒரு நாளும் மறைந்து போகமாட்டார்கள். அதுபோலவே இந்து மத வேதமும், சாஸ்திரமும், ராமாயணமும், பாரதமும், பெரிய புராணம், சிவபுராணம், திருவிளையாடல் புராணம் முதலியவைகளும் உள்ளவரையிலும் – சூத்திரப் பட்டத்தையும், பஞ்சமப் பட்டத்தையும் ஒழித்து விடுவது என்பது முடியவே முடியாது.

திரு. காந்தி எவ்வளவுதான் மகாத்மாவானாலும், "சாமி' வேதாசலம் எவ்வளவுதான் சுவாமியானாலும், "சுவாமி' சகஜானந்தம் எவ்வளவுதான் சுவாமியானாலும் – எது வரையிலும் தங்களை இந்துக்களென்றோ, சைவர்களென்றோ சொல்லிக் கொள்ளுகின்றார்களோ – அது வரையில் அவர்கள் சூத்திரர்கள் என்பதையும் மூன்றாமவர், பஞ்சமர் (பறையர்) என்பதையும் பிரிவு கவுன்சில் வரையில் ருஜுபிக்க முடியும். அவர்களே அப்படிக் கூப்பிட உலக மக்களுக்கு உரிமையுண்டு. மேல்கண்ட இவர்கள் எதுவரை இந்து மதப் பிரச்சாரமும், சைவப் பிரச்சாரமும் செய்கின்றார்களோ அதுவரை இவர்கள் தங்களுள்பட மக்கள் – சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கி நிலை நிறுத்த முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றுதான் சொல்லுவேன்.

சம்பந்தனை ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தன் பாடிய "சாமி'களை ஒப்புக்கொண்ட சைவன், சம்பந்தனின் தேவாரங்களையும், சம்பந்தனின் சமயங்களையும் ஒப்புக் கொண்ட சைவன், சம்பந்தனைப் பார்ப்பனன் என்று ஒப்புக் கொண்ட சைவன் ஒருவன், தன்னைச் சூத்திரன் அல்ல என்று சொல்லிக் கொள்ள யோக்கியதை உண்டா என்று நன்றாய் யோசித்துப் பாருங்கள். அதுபோலவே நந்தனை ஒப்புக் கொண்ட ஒருவன், அதுவும் நந்தன் பறையன், அவன் எங்கள் ஜாதி என்று ஒப்புக்கொண்ட ஒருவன், தன்னைப் பறையன் அல்ல என்றும், தான் தீண்டாதவன் அல்ல என்றும் சொல்ல முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். உத்தியோகப் பார்ப்பனனுடனும், எலக்ஷன் பார்ப்பனனுடனும் சண்டை போடுவதற்கு வேண்டுமானால் ஏதாவது தந்திரம் பேசலாம்; “தமிழ் நாட்டில் ஆதியில் ஜாதியில்லை'' என்று சொல்லலாம். சாமர்த்தியமாய் விவகாரம் செய்யலாம். ஆனால், தன்னை இந்து என்றோ, சைவன் என்றோ, வைணவன் என்றோ சொல்லிக் கொண்டு வேறு ஒருவனிடம் விவகாரம் பேசி – தன்னைச் சூத்திர வகுப்பிலிருந்தும், பஞ்சம வகுப்பிலிருந்தும் விலக்கிக் கொள்ள முடியுமா என்று யோசித்துப் பாருங்கள் ("சற்சூத்திரன்' என்று சொல்லிக் கொள்வதால் தப்பித்துக் கொள்ள முடியாது).

திரு. காந்தியால் வரும்படியான சுயராஜ்யம் அது எப்படிப்பட்டதானாலும், எவ்வளவு பயனுள்ளதானாலும், பயனற்றதானாலும் – இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாக இருக்கும் என்பதில் மாத்திரம் சந்தேகப்பட வேண்டியதில்லை. அதுவும் எப்படிப்பட்ட இந்து மதமென்றால், வர்ணாசிரம தர்மத்தோடு கூடின பரம்பரை ஜாதித் தொழிலையும் வகுப்புப் பழக்க வழக்கங்களையும் நடத்திக் கொடுக்க முயற்சிக்கும்படி கட்டாயப்படுத்தும்படியான, இந்து மதத்தைக் காப்பாற்றும் சுயராஜ்யமாய்த்தான் இருக்கும் என்பதில் யாரும் எவ்வித ஆட்சேபனையும் கொள்ள வேண்டியதில்லை.

ஆகவே திரு. காந்தியின் சுயராஜ்ய காலத்தில் யார் யார் இந்துவோ அவர்கள் எல்லோருமே இந்த மூன்று ஜாதியின் கீழ் தான் வரவேண்டும். அதாவது பிராமணன், சூத்திரன், பஞ்சமன் ஆகிய விதியில் தான் வரவேண்டும். அந்தக் காலத்தில் இந்துக்கள் என்பவர்கள் இன்றைய தினம் சுயராஜ்யமில்லாத காலத்தில் அனுபவிக்கும் உரிமையும், பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கேட்கும் உரிமையுமிக்க ஒரு நாளும் அனுபவிக்க முடியாது என்பதை கெட்டியாய் மனதில் நிறுத்துங்கள். ஏனெனில், காந்தி சுயராஜ்ய காலத்தில் மத சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும், ஜாதி சம்பந்தமான விஷயங்களைப் பற்றியும் பேசுவோர்கள் எல்லாம் சட்டப்படி 124ஏ, 153ஏ என்பது போன்ற துரோக சட்டங்களின் கீழும், துவேஷச் சட்டங்களின் கீழும் குற்றமாகக் கருதித் தண்டிக்கப்பட வேண்டியதாகி விடுவார்கள்.

அன்றியும் ஒரு மனிதன் தான் “இந்து மதத்தை விட்டு வெளியில் போய் விடுகிறேன்'' என்பதும், வெளியில் போவதும் குற்றமானதாகவே கருதப்பட்டாலும் கருதப்படலாம். அதற்காக சட்டமுமியற்றப்படலாம். ஏனெனில், இந்து மதக் கோட்பாட்டின்படி ஒரு மனிதன் பிறவியில் எந்த மதத்தில், எந்த ஜாதியில் பிறந்தானோ, அந்த மதத்தில் அந்த ஜாதியில்தான் சாகின்ற வரையில் இருந்தாக வேண்டும். அதனால்தான் திரு. காந்தியும், “நான் கோரும் சுயராஜ்யம் வந்தால் கிறிஸ்து மதத்திற்குப் பிரச்சாரமாகிய ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் முதலியனவை வைத்து நடத்தும் பாதிரிமார்களையெல்லாம் இந்தியாவை விட்டு விரட்டி விடுவேன்'' என்று துணிந்து சொன்னார். அந்தப்படி அவர் சொன்னதானது, வேண்டுமென்று சொன்னதாக யாரும் நினைத்து விடக் கூடாது. மதம் மாறுவது அவ்வளவு இழிவானதென்றும், பாபமானதென்றும், அதற்கு இடம் கொடுப்பது அவ்வளவு தோஷமானதென்றும் இந்து மத தத்துவத்தில் சொல்லப்பட்டிருக்கின்றது.

திரு. காந்தியவர்கள் கிறிஸ்துவர்களைச் சொன்னது போல் மகமதியர்களைச் சொல்லாததற்குக் காரணம், மகமதியர்களிடத்தில் இருக்கும் "முரட்டுத்தனத்தின்' காரணமாக பயமேயொழிய, மற்றபடி முகமதியர்களை மதமாற்றம் செய்ய அனுமதிப்பது குற்றமாகாது என்கின்ற எண்ணத்தாலல்ல. ஆகையால், காந்திய சுயராஜ்யமென்பது, இந்துக்களில் சூத்திரர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும், பஞ்சமர் என்னும் தலைப்பின் கீழ் வரும் மக்களுக்கும் மிகவும் ஆபத்தானது என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

திரு. காந்தியவர்கள் பல தடவை சொல்லியிருக்கும் சமத்துவத்தின் விளக்கத்தையும் நினைப்பூட்டிக் கொள்ளுங்கள். அதாவது, “சமத்துவமென்பது ஆத்துமாவுக்கேயொழிய சரீரத்திற்கல்ல'' என்று சொல்லியிருக்கின்றார். மற்றும் அவர் 191929 இல் “தீண்டாமையொழியாமல் நான் ஒரு நாளும் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இந்து முஸ்லிம் ஒற்றுமை ஏற்படாததற்கு முன் நான் சுயராஜ்யம் கேட்க மாட்டேன்'' என்றும் சொன்னதோடு, “இவை இரண்டும் ஒழியாததற்கு முன் கிடைக்கும் சுயராஜ்யம் நிலைக்காது'' என்றும், “நிலைத்தாலும் மக்களுக்குள் ரணகளமாகும்படியான கலகம் ஏற்படும்'' என்றும் சொல்லியிருக்கின்றார்.

இப்படிப்பட்ட இவர் இப்போது தைரியமாய், “தீண்டாமை ஒழிய வேண்டியதும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் நாட்டை என் வசம் ஒப்புவித்து விட்டு விலகிக் கொள்ளுங்கள். மற்றவைகளை நான் பார்த்துக் கொள்ளுகின்றேன்'' என்று பிரிட்டிஷாரை கேட்கின்றார். இதன் அருத்தமென்ன என்று யோசித்துப் பாருங்கள். ஆட்சி தனது கைக்கு வந்து விட்டால், பட்டாளம் தனது கையில் ஒப்படைத்து விட்டால், பார்ப்பனர்களையும் பனியாக்களையும் (முதலாளிகளையும்) பட்டாளத்தில் சேர்த்து ராணுவச் சட்டத்தினால் முஸ்லிம்களையும், தீண்டாதார்களையும் அடக்கி ஒடுக்கிவிடலாம் என்கின்ற எண்ணமில்லாமல் வேறு என்ன எண்ணம் இருக்கக்கூடும் என்று யோசித்துப் பாருங்கள்.

ஆகவே, எனதருமைச் சகோதரர்களே! தீண்டப்படாத சகோதரர்களே! தெருவில் நடக்க குளத்தில் தண்ணீர் மொண்டு குடிக்க கண்ணில் தென்பட உரிமை இல்லாத சகோதரர்களே! நீங்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டுமானால் ஒன்று இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்; இரண்டு முகமதியர்களைச் சாருங்கள். இந்த இரண்டு காரியத்தாலும் நாம் உலக மக்களுக்கே சுயமரியாதை கொடுக்கலாம். மற்றபடி நமக்கு வேறு விமோசனமே இல்லை! இல்லை! இல்லை!

(நன்றி : தலித் முரசு பிப்ரவரி 2009)

வெள்ளாளர்க்கு நாத்திகமும்….சுடலையும்…. தலித்துகளிற்குக் கோவில்களும்….ஆளுமையும்…. - சுகன்


கடந்த 28.12.2008 அன்று பிரான்சில் நடைபெற்ற தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல் நிகழ்வின் வெங்காயத் தேசியம் என்னும் கருப்பொருளிலான கலந்துரையாடல்(கூட்டு விவாதம்) வேளையில், கவிஞர்.சுகன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு வடிவம் இது.

ஈழத்து அரசியல் அதனை இன்றும் ஆளுகின்ற இறுக்கமான (வெள்ளாள)சமூக அமைப்பு, புலம் பெயர்ந்தும் மாறாத மனோநிலை, இவைகளுக்கிடையே பெரியாரிசம் பேசுகின்ற நம்மவர்கள் அப்பப்போ இலங்கையில் மலருகின்ற நிர்வாக கட்டமைப்புக்களில் தலித்மக்களின் பிரதிநிதித்துவம் படிப்படியாகவாவது மேலோங்க அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேறகொள்வாகளா……..?

இதுவே தலைகீழ் அமர்வு தொடர்பான எமது கணை…..


கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது அவ்வையார் வாக்கு.
அது அனேகமாக வெள்ளாளர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கவேண்டும். யாழ்ப்பாண சமூக அமைப்பில் மட்டுமல்ல,தமிழ்ச்சமூக அமைப்பிலும், அதிகார அமைப்பிலும் கோவில்களின் இடம் திட்டவட்டமாகவே அசைக்கமுடியாதவாறு வெள்ளாளர்களால் உறுதிப்படித்தப்பட்டிருக்கிறது எனச்சொன்னால் அதை இறந்தகாலமாகக் கருதி உலாந்தாக்காறர்களின் தோம்புப் பதிவுகளைத்தேடி நாம் ஆய்விற்குப் போகவேண்டியதில்லை.

தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக்கூடாது என்பது ஆறுமுக நாவலர் வகுத்த சமய நெறி,சைவநெறி,வாழ்க்கை முறை.

நிர்மலா அக்கா தேசிய உருவாக்கத்தில் கிரேக்க தொன்மக்கடவுளை உதாரணப்படுத்தி அக்கடவுளிற்கு முன்னுக்கு ஒரு முகமும் பின்னுக்கு ஒருமுகமுமாக இருமுகக்கடவுளை அழகாக உதாரணப்படுத்தினார்.

நமது வெள்ளாளர்களிற்கு ஆறுமுகம் கொண்ட கடவுள் உண்டு. கோவில் என்பது வெள்ளாளர்களிற்கு வணக்கத்தலம் மட்டுமல்ல. அது சமூக அதிகாரத்தின் அதிஉச்சமான வடிவம். அதிகாரமற்றவர்களாக ஏனைய சமூக மக்களை தொடர்ந்து வைத்திருப்பதன் ஆயுதவடிவம்.

கந்தபுராணக்கலாச்சாரம், யாழ்ப்பாணக் கலாச்சாரம் என்பதன் ஆய்வுப்புலமும் அதுதான். ஏனைய சமூகக் குழுக்களோடு யுத்தம் புரிவதற்கு வெள்ளாளர்களிற்கு வீரபாகுத்தேவர்கள் எப்போதும் தேவை என்பதே கந்தபுராணக் கலாச்சாரத்தின் சாரம்.
இங்கு பன்முகப் பார்வையில் தோழர்கள் காத்திரமாக பெரியாரின் காலமும் கருத்தும் அவரது இயக்கமும் பற்றி பேசினார்கள்.

பெண்ணியம், பத்திரிகைத்துறை, கலகம் இவற்றில் பெரியாரின் உழைப்பு (பெரியாரின் பாசையில் சொன்னால்: தொண்டு), சரியானதைப் பிழை எனவும் பிழையானதைச் சரி எனவும் தலைகீழாக அவர் மாற்றிவைத்த முறைகள் குறித்துப் பேசினார்கள். இந்துத்துவம், வருணாச்சிரமம் இவைகளின் சாதியப் படிநிலைகள் குறித்துப் பேசினார்கள்.

சுயமரியாதை இயக்கத்தின் அதேதளத்தில் இயங்கிய தலித்துகளின் அரசியல் போராட்டம் இவைகளின் ஒத்திசைவுகள்,அவ்வவற்றின் தனித்தன்மைகள், வித்தியாசங்கள்,வேறுபாடுகள் குறித்துப் பேசவேண்டியது முக்கியமானது.

மிகக் குறுகிய நேரத்தில் இவற்றைப் பேசமுடியாவிடினும் அவற்றைச் சுருக்கமாகவேனும் பேசுவது முக்கியமானது.

கோவிலுக்கு வராதே!!!என்று தலித்துகளை தடைபோடும் சூழ்நிலையில்
தலித்துகளிடம் நாம் நாத்திகம் குறித்துப் பேசமுடியுமா?

எந்த வெள்ளாளன் ஈழச்சூழ்நிலையில் முழுமையான நாத்திகனாக இருந்திருக்கிறான்?

அமரிக்க நாசாவிலும் விஞ்ஞானியாகவோ ஆய்வாளனாகவோ இருந்துகொண்டு
தனது சமய நெறியிலும் வெள்ளானால் இருக்கமுடியும்,அதுகுறித்து அவன் எப்போதும் குழம்பியது கிடையாது.

வெள்ளாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட யாழ்ப்பாண சமூக அமைப்பில் பெரியார் இயக்கம் தோன்றாமைக்கான காரணத்தை இந்தப் பின்னணியிலேயே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற பேதமின்றி இந்துத்துவத்தையும் அதன் சாதிய அணுகுமுறைகளையும் எவரும் கேள்விக்கு உள்ளாக்கவில்லை.

இடதுசாரிகளின் ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் தலித்துகள் ஆலயத்திற்குள் போய் கும்பிடும் உரிமையை உறுதிப்படுத்த முயன்றன. அதற்கப்பால் வெள்ளாள அதிகாரத்தைத் தலைகீழாகக் கவிழ்த்துப்போடும் முயற்சியை வலது சாரிகளாலும் எடுக்க முடியவில்லை, இடதுசாரிகளாலும் எடுக்கமுடியவில்லை.

ஆனால் சிங்கள பெளத்தமும் இலங்கை அரசும் இதில் பெரிய பங்களிப்பைச் செய்தன.

அகில இலங்கை தமிழ் பெளத்த சங்கத்தின் தோற்றம் இங்குதான் கவனத்தில் வருகிறது. வரலாற்றின் அதிசயம் அது.அதன் தலைவர் வைரமுத்து அவர்கள் ஈழத்தில் தோன்றிய மிகவும் தீர்க்கதரிசமான தலைவரும் என்னைப் பொறுத்தவரை தமிழர்களின் நேர்மையான ஒரே பெருந்தலைவரும் அவர்தான்.

ஆக இங்கே கோவில்களைக் கைவிடுவதற்கு வெள்ளாளார்கள் கேணையர்கள் அல்ல.
அவர்கள் எப்போதுமே நாசூக்கானவர்கள். உலகத்திலேயே சாதியின் பேரால் கிறிஸ்தவக் கோவிலைப் பூட்டிவைத்த பெருமை இளவாலை வெள்ளாளர்களைச் சாரும்.

பள்ள அந்தோனியாரையும் நாலுபரப்புக் காணியையும் தலித்துகளிற்கு வழங்கியபோது எப்போதுமே வெள்ளாளார்களே அதிமேற்றீராணீயாராகவரும் யாழ் வெள்ளாள சமூகத்தின் முகம் இங்கு தெரியவரும்.

நமது இணையத் தளங்களில் சுகனுக்கும் சோபாசக்திக்கும் இனிப் பரந்த மைதானம் கிடைக்கப்போகிறது,புலிகள் பி.ஜே.பி யின் ஆதரவைக்கேட்டுவிட்டார்கள், இடிக்கப்படுவது இந்துக் கோவில்கள் என்று சங்கராச்சாரியாரிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் முறையிடுகிறார்கள் என்றவாறான ஆதங்கங்கள் வெளியிடப் படுகின்றன.

பெரியாரின் பாசையில் சொன்னால் உங்களுக்கு யோக்கியமும் மானமும் இருந்தால் 22 பாராளுமன்ற உறூப்பினர்களில் ஒருவர்கூட ஏன் தலித் இல்லை ?
அரசியல் அதிகாரமும் தமிழர் பிரதிநிதித்துவமும் பஞ்சமர்களுக்கு இப்போதும் தீண்டப்படாததுதானா?

தீண்டத்தகாதவர்கள் உட்பிரவேசிக்கக் கூடாது என்பது கோவில் முறைகளில் தானா?

தமிழ் அரசியலில் அதி உட்சபட்ச அபத்தமாக அது இப்போது தொழிற்படுவதில்லையா?

தமிழ்ச்சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளையும் கோவில் பிரச்சனையாக தமிழ் அரசியல் சார்ந்து முன்வைக்கும் வெள்ளாள அரசியல், சமூகத்தில் வெள்ளாளார்களின் கோவில் மதம் சார்ந்த அதிகார உச்சப் படிநிலை,சாதிவெறீ இவை அல்லாமல் வேறென்ன?

கூட்டு வெள்ளாளப் பிரக்ஞை என்பது இதுதானா?

தலித் அரசியல் பேசும் நாம் இது குறித்து விழிப்பாக இருக்கவேண்டும்.
வெள்ளாளர் பஞ்சமர்களுக்கு ஆலயத்தையும் தேவாலயத்தையும் மறுப்பதன் அரசியல் இதனோடு இணைந்துவருமொன்று.

லக்சுமி அக்கா அழகாக குறிப்பிட்டார். வெள்ளாளார்களூக்குச் சுடலைதான் என்று.
தங்களூக்குக் கோவிலையும் தலித்துகளிற்கு சுடலையையும் வழங்கி வருவதுதானே வெள்ளாளத்துவம்.

சுடலையுடன் சேர்ந்த வாழ்க்கையை தலித்துகளிற்கு வழங்கிவரும் வெள்ளாள அதிகாரம் அனைத்துத் தளங்களிலும் ஒழிக்கப்பட்டாக வேண்டும்.

பிணத்தை எரித்து வெளிச்சம் காணும் வாழ்க்கை மாறியாகவேண்டும்.

வெள்ளாளார்கள் சுடலைக்கிருத்தியங்களை தமது சாதிக்குரிய தொழிலாக கைக்கொள்ள வேண்டும்.

அதிகார மறுப்பிற்கும் மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளும் பக்குவத்திற்கும் மிகச்சிறந்த உதாரணம் பெரியார். இரண்டு கோணங்களிலும் இங்கு பேசப்படவில்லை. ஈழச்சூழலில் எந்த வெள்ளாளன் அதிகார மறுப்பாளனாக இருந்திருக்கிறான்?

இன்று குறிப்பாக இடதுசாரி அரசியல் பேசும் அல்லது சனநாயத்திற்கான அரசியல்பேசும் வெள்ளாளப் பின்னணியிலிருந்து வந்த, போராட்டப் பின்னணியிலிருந்துவந்த தோழர்கள் ஈழத்து அரசியலைப் பொறுத்தவரை கடைசிவரை அதிகாரத்தில் பங்குகொள்ளாத பெரியாரின் சுயமரியாதை இயக்கம்போல் தமக்கு நாத்திகத்தையும் தலித்துகளிற்கு அரசியல் அதிகாரத்தையும் உறுதிப்படுத்தவேண்டும்.

அடுத்து மாற்றுக்கருத்தை எதிர்கொள்பவர் என்ற ரீதியில் பெரியாரிய உதாரணத்தைக் குறீப்பிடலாம்.

ஒருமுறை பெரியார் வண்டியில் போய்க் கொண்டிருக்கும்போது அவருக்குச் செருப்பு வீசப்பட்டது. பெரியார் வண்டியை விட்டு இறங்கி அந்தச் செருப்பை எடுத்து வண்டியைச்செலுத்தியவரிடம் அச் செருப்பு வந்த இடத்துக்குப் போகச்சொன்னார். ஏனையா என்றார் வண்டியைச்செலுத்தியவர்.

ஒருசெருப்பு என்னிடம் இருக்கிறது.மற்றச்செருப்பு இனி யாருக்கும் பயன்படாது,
மற்றச்செருப்பும் இருந்தாற்தான் உபயோகமாகும் என்று அதை ஏலத்தில் விட்டவர் பெரியார். மாற்றுக்கருத்தை எதிர்கொள்வதில் நமக்கு இந்தப்பக்குவம் வேண்டும்.

பெரியார் உரை ஒலி வடிவத்தில்


பெரியாரின் பேருரைகள் இங்கு ஒலிவடிவில் தொகுத்திருக்கிறோம். மிகவும் சுவாரஸ்யம் வாய்ந்ததும், எளிமை மிகுந்ததும், சிந்திக்கச் செய்வதும், சமூகக் கொடுமைகளின் மீதான ஆத்திரத்தை ஏற்படுத்துவதுமான இந்த உரைகள் அவரின் குரலில் கேட்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நீங்களும் கேளுங்கள்.

"...சமுதாயத் தொண்டு செய்றவனுக்கு கடவுள் பக்தி இருக்கக்கூடாது, மதபக்தி இருக்கக்கூடாது, மற்றும் தேச பக்தி இருக்கக்கூடாது, மொழி பக்தி இருக்கக்கூடாது. சமுதாய பக்தி ஒன்னுதான் இருக்கனும். அவனால தான் சமுதாயத் தொண்டு செய்யமுடியும்.எந்தப்பய கடவுளையோ மதத்தையோ, சாத்திரத்தையோ மொழியையோ வச்சுகிட்டு சமுதாய தொண்டு செய்யனுமுன்னு நினைக்கிறானோ அவன் சோத்தையும் பீயையும் கரைச்சு குடிக்கிறதா தான் அர்த்தம்..."

காரைக்குடி உரை-2 இல் 5வது நிமிடத்தில் இது வருகிறது. அதிலேயே

"...நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்; நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்; நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்; நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி.இதை உயர்ந்த மொழி என்கின்றனர். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் ஆண்டுகளாக இருக்கும் தமிழ் மொழி - சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கின்றது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று..."


"...கடவுள் இல்லை...கடவுள் இல்லை... கடவுள் இல்லவே இல்லை... கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை பரப்புனவன் அயோக்கியன்! கடவுளை கும்பிடுறவன் காட்டுமிராண்டிப்பயல்! இதை நம்புகிறவன் மடையன்! இதனால் பலன் அனுபவிப்பவன் மகா மகா அயோக்கியன்..."

(காரைக்குடி உரை-2 இல் 15வது நிமிடத்தில் இது வருகிறது.)


இதைச்சொல்லும் துணிச்சல் நம் பெரியார் ஒருவருக்குத் தான் இருந்தது. அவருக்குப் முன்னும் ஏன் பின்னும் கூட அந்தத்துணிச்சல் வேறு யாருக்கும் வரவில்லை. நம்மீது சுமத்தப்பட்டிருக்கிற ஆதிக்க சித்தாந்தங்களில் மதத்தின் பாத்திரத்தை பெரியார் பல இடங்களில் தோலுரித்துக் காட்டுகிறார்.

இந்தத் ஒலித் தொகுப்பில் இன்னமும் இணைக்கப்படும்...


பிரான்சில் - தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்






தலைகீழ்’
தந்தை பெரியாரின் 35வது நினைவேந்தல்

நாள்: ஞாயிறு 28 டிசம்பர் பி.ப. 2 மணியிலிருந்து 8 மணிவரை.
இடம்: Salle De Recontre,Rue Jean francois, 95140 Garges Les Gonesse
வழித்தடம்: RER D, Garges Sarcelles - Bus: 133




“ஈ.வெ.ராமசாமி என்கிற நான் திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல் மானமும் அறிவும் உள்ள சமுதாயமாய் ஆக்கும் தொண்டை மேற்போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ இல்லையோ இந்த நாட்டில் அந்தப் பணி செய்ய யாரும் வராததினால் நான் அதை மேற்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன்;. இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும் பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டுக்குத் தகுதி உடையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன்”



View Larger Map


தலைமை: விஜி
உரைவீச்சுகள்
திராவிட இயக்கமும் சினிமாவும்: அருந்ததி
பெரியாரின் பெண் விடுதலை: நிர்மலா
பெரியார் என்ற பத்திரிகையாளர்: என்.சரவணன்
கலகக்காரத் தோழர் பெரியார்: அசுரா
‘பறை’, ‘உயிர்மெய்’ சிற்றிதழ்கள் குறித்த திறனாய்வு: பௌசர்
பெரியார் நினைவுப் பேருரை: ஷோபாசக்தி
கூட்டு விவாதம்: ‘வெங்காயத் தேசியம்’ விவாத ஒருங்கிணைப்பு: தேவதாசன்

அனைவரும் வருக
இலங்கை தலித் சமூக மேம்பாட்டு முன்னணி
மின்னஞ்சல்: vadu.world@hotmail.fr

தொலைபேசி: 06 61 80 36 90, 06 60 36 88 04

“பாஷாபிமானம், தேசாபிமானம், மதாபிமானம், குலாபிமானம் ஆகியவற்றை விட்டொழிப்பதே ஈடேற வழி” – பெரியார் ஈ.வெ.ரா.

யுத்த காலங்களில் பெண்கள்

என்.சரவணன்
யுத்த காலங்களில் பெண்கள் எவ்வாறு பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு நமது இந்து மத புராணங்கள், இதிகாசங்கள் என்ன கூறுகின்றன என்பதை பின்வருமாறு பெரியார் விளக்குகிறார். பெரியார் சிந்தனை -3 இலிருந்து பெறப்பட்டவை இவை.
எதிரியை தோற்கடிக்க எதிரியின் மனைவியை கற்பழிக்க சிவன் வழிகாட்டுகின்றார். இந்து மதத்தின் மூத்த கடவுள் சிவனுக்கும் சங்காசுரனுக்கும் 100 வருடமாக யுத்தம் நடந்ததாம். சங்கரன் என்ற அசுரனை கடவுளால் கொல்லமுடியவில்லையாம். ஏன் என்று ஆராய்ந்த சிவன் காரணத்தை கண்டறிந்தாராம். சங்கரனின் மனைவி கற்புடையவள் என்பதால் சங்காசுரனை அழிக்கமுடியாது எனக் கண்டாராம். சிவன் சங்காசுரன் வேடம் போட்டுச் சென்று துளசியை கற்பழித்தபின், சங்காசுரனைக் கொன்றாராம். இதன் பின் துளசி உண்மை அறிந்து ”ஓ! விஷ்ணு, கல்நெஞ்சம் படைத்த வஞ்சகனே! என் கணவரைச் சதி செய்து கொன்று விட்டாய். நீ கல்லாக போ!”148 என்று சபித்தாள். மகாபாசுவத புராணம் (9,24,25) இல் கீழ் சாதி பெண் இகழ்ந்தாலும், மேல் குலத்தைச் சேர்ந்தவன், பெண்ணின் கற்புரிமையை அழிக்க தர்மசாஸ்திரம் அங்கீகரிப்பதுடன், இது மேல் சாதிப்பிரிவின் பெருமையை கொடுப்பதாகும் என்று விளக்கி கற்பழிப்பை ஊக்குவிக்கின்றது. துளசி கீழ் சாதிப் பெண்ணாக இருப்பதால் அவளை கற்பழித்த சிவனின் வெற்றியை இந்து மதம் போற்றுகின்றது. இதை புராணமாக கூற, நாம் கேட்டு மௌனம் சாதித்து ஆணாதிக்க மரப்பில் அங்கீகரிக்கின்றோம். இந்த இந்து மதத்தை பெண்கள் எப்படி போற்றமுடியும். வரலாற்றில் மதயுத்தங்கள் முதல் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் வரை பெண்களை கைப்பற்றுவதும், கற்பழிப்பதும், தொடர் விபச்சாரத்தில் தள்ளுவதும், தமது -வைப்பாட்டியாக-வைத்திருப்பது என்ற ஆணாதிக்க கொடுரம் எதையும் இராவணன் செய்ததில்லை. இராவணன் சீதையை விரும்புகின்ற போது, அவளின் விருப்பமின்றி தொடுவதைக் கூட கைவிட்டவன். சீதையை இராவணன் தொடாது நிலத்துடன் தோண்டி சென்ற போது, சீதை தனது மேலாடைகளை களைந்து எறிந்த நிர்வாணமான நிலையிலும், இராவணன் காமம் கொண்டு சிதைக்கவில்லை. மாறாக பெண்ணை பெண்ணாக மதித்தான். இராவணன் பெண்ணை தொடுவதால் மண்டை வெடித்துவிடும் என்றால், கற்பழிப்பை வேறுவழியில் நடத்தியிருக்கமுடியும். இராமாயணத்தின் நீதி இராவணன் தளத்தில் இருந்து சொல்லப்பட வேண்டி பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதே ஒழிய, இதை மறுத்து இராமனின் ஆணாதிக்க வக்கிரத்தை சொல்லுவதே இராமாயணம். திரௌபதி இந்த ஐவரில் அருச்சுனன் பந்தயம் ஒன்றில் திரௌபதி என்ற பெண்ணை வென்று எடுத்ததை தொடர்ந்து, அவளை ஐவரும் தமது பாலியல் தேவைக்கு பயன்படுத்தினர். இவர்களிடையே இருந்த போட்டியைத் தணிக்க வேதவியாசன் ஆண்டு ஒருவர; அவளை வைத்திருக்க ஆலோசனை கூறினான். ஐவரின் பாலியல் தேவையை புர்த்தி செய்யும் பொது மகளிர் என்பதால், அவளை துணிந்து பந்தயத்தில் பணயம் வைத்­தனர். முன்பு பந்தயத்தில் வென்ற அப்பெண்ணை வேறு இடத்தில் வைத்தபோது தோற்கின்றனர். அவளை வென்றவர்கள் பொதுவிபச்சாரத்தில் உரிந்து பார்க்க, (இப்படி கூறிய வரலாற்றை தாண்;டி எந்த இடத்திலும் அப்படி உரிந்த ஆதாரத்தை கொண்டிருக்­கவில்லை. பாண்டவர்கள் யுத்த மற்றும் மரபை தாண்டி அநியாயமாக கிருஷ்ண சதி மூலம் நடத்திய யுத்த உபதேசம் மூலம் பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்த, உரிந்த வரலாறு புதிதாக கீதையில் இணைக்கப்பட்டதே. இங்கு கீதையே புனைவானதுதான். ஆனால் துரௌபதை உரிந்த கதை இடைச் செருகலாக முன்னைய புனைவில் இணைக்கப்பட்டது.) பலர் முன்னிலையில் உரிந்த போது, முன்பு பொது விபச்சாரத்தில் பந்தயத்தில் வென்ற உரிமையுடன்; அனுபவித்தவர்கள், ஒரு பெண்­ணுக்கு நடக்கும் அநியாயமாக எந்த நிலையிலும் எதிர்த்து போராட முனைய­வில்லை. பெண் ஆணின் தனிப்பட்ட பந்தயச் சொத்து என்ற ஆணாதிக்க அடிப்படையில் உரிவதை பார்த்து நின்றனர். இங்கு யாரும் நீதியைக் கோரவில்லை. இந்த திரௌபதை பண்டவருடன் வாழ்ந்த காலத்தில் கர்ணனுடன் உறவு கொள்ள துடித்ததை, கண்ணன் என்ற அடுத்த ஆணாதிக்க பொறுக்கி பாண்டவரிடம் கூறியதாக பண்டவர் வரலாறு. பீஷ்மனை நேரடி யுத்தத்தில் வெல்ல முடியாத அருச்சுனன், சிகண்டி என்ற அலிப் பெண்ணை அருச்சுனன் முன் நிறுத்தி(இங்கு பெண்கள் யுத்தத்தில் பணயம் வைப்பது நிகழ்கின்றது), அதன் மறைவில் நின்று சதி மூலம் கொன்றான். இப்படி நிறைய வரலாற்று மோசடியே நீதி நூலாக இருப்பதும், இந்து விளக்க நூலாக இருப்பதும், இவைகளை நம்புவதும் சமூக முட்டாள்த்தனத்தை காட்டுகின்றது. காட்டிக் கொடுப்பும், சதியும், மோசடியும் கொண்ட இந்த பாண்டவர் வரலாற்று நீதி, இன்று நாட்டை ஏகாதிபத்­தியத்திடம் தாரைவார்க்கும் ஆணாதிக்க இந்து வானரங்களின் செயலை மறைமுகமாக ஊக்குவித்து நிற்கின்றது. பாரதப் போரின் விளைவுபற்றிய அருச்­சுனனின் கண்ணோட்டம் முற்றாக ஆணா­திக்கம் கொண்டதாக வெளிப்படுகின்றது. ”அதர்ம்மாபிபவால் க்ருஷ்ண! ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரீய ஸ்தரீஷீதுஸ்டாஸீ வார்ஷ்ணேய! ஜாயதேவர்ணஸங்கர”133 என்ற கூற்றின் அர்த்தம் ” கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குலப் பெண்கள் கெட்டுப் போகிறார்கள். வருஷ்ணி குலத் தோன்றலே, பெண்கள் கெடுவதனால் வருணக் குழப்பம் உண்டாகிறது”133 என்று கூறும் போது, வருணக் கலப்பையும், பெண்ணின் கற்பையும் குறித்தே கவலைப்படுகின்றான்; இதனால் அமைதியை விரும்புகின்றான். இதே போல் வர்க்கமுரண்பாடற்ற அமைதியான சுரண்­டலை நடத்த விரும்புவோரும், சொத்து சிதைவை தடுக்கவும், ஆணாதிக்க சிதவை தடுக்கவும் என சமுதாயத்தின் சூறையாடல்கள் மீதே, தனிமனித உரிமைகளை பேணமுனைகின்றனர்.
பார்ப்பனியம் தனது எதிரிகளை இட்டு பகவத் கீதையில் அவர்களின் பிறப்பை இழிவுபடுத்தியே சாபம் இடுகின்றது.
”தானஹம் த்விஷத க்ரூரான் ஸம்ஸாரேஷீ நராயமானன் கஷபாம்ப ஜட்ரமஸீபானா ஸீரீஷ்வேவ யோனிஷீ”133 இதன் அர்த்தம் ”என்னைப் பகைக்கும் கொடியோரை- உலகத்தின் எல்லாரிலும் கடைப்பட்ட இந்தக் கீழ்மக்களை நான் எப்போதும் அசுரயோனிகளில் பிறக்கும்படி எறிகிறேன்.”133 என்று இழிந்த சாதிகளை ஆணாதிக்க வக்கிரத்துடன் உருவாக்கிய சாதித்திமிரை இது வெளிப்படுத்துகின்றது. கடவுள்களின் இந்த திமிர்பிடித்த சாபங்கள் எல்லாம் நிஜ உலக ஆணாதிக்க பார்ப்பனிய திமிர;கள்தான். இந்த தீமிரில் பிதற்றுவதைப் பார்ப்போம்;. மறுபிறவியில் கரடி, சிங்கம் முதலியவற்றின் யோனிகளில் பிறக்க பண்ணுவேன் என்று கூறத் தயங்கவில்லை. இதை மேலும் பார்ப்போம். ”ஆஸீரீம் யோனிமாபான்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கவுந்தேய! ததோயாந்த்ய யமாம் கதி”133 இதன் அர்த்தம் ”குந்தியின் மகனே, பிறப்புதோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே ஒன்றுக்கொன்று மிகவும் கீழான பிறவியை அடைகிறார்கள்”133 என்று அருச்சுனக்கு கூறும் போதே சாதியத்தை கட்டிக்காக்க பிறப்பை அடிப்படையாக கொள்ள ஆணாதிக்கத்தை ஆயுதமாக கையாள்வதைக் காணமுடிகின்றது.

சாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........

பெரியார்
நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ”நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி”யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ”கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக்கூடாது”, நம்பவேண்டும்”, அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டும்” என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல, அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி, ”கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது, நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்யவேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?” என்பது போன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக்கூறுவேன். நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்து, சிந்தித்து அறிவில் ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கும் இல்லாமல் தெரிந்துகொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமல் போய்விட்டது. தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் சாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்றால் அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி சாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ” நான் சாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி சாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் சாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி சாதி வந்தது?ஆகவே இந்த சாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ”சாதி கெடுதி, சாதி சுடாது” என்று சொல்லத்தான் சில ”பெரியவர்கள்” முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை. ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் சாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே சாஸ்திரத்தையும் ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் சாதி மறையும், சாதி ஒழியும் மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு சாதி சாகாது. ஆகவே, சாதி ஒழியவேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுஙகள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவது தான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! சாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச்சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது, கண்டிப்பாய் இருக்கக்கூடாது. (12.08.1963 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி - ”விடுதலை” - 17.08.1962)நாதியற்ற நாங்கள் கைதட்டி சிரிக்க இங்கொன்றும் இல்லை - எனினும்கை கொடுத்துதவுங்கள் இதுவோர் அனாதையின் கதை. இதுவோர் அனாதையின் கதை காலங்காலமாய்...போராடும் இனமொன்றின் கண்ணீர் புஸ்பங்கள் வரிவரியாய் எழுதியவோர் சோகக்கதை!இதுவோர் சோகக்கதை! அம்மையார் எமையாண்டு அனாதையாக்கி அரசியல் தஞ்சம்புகவைத்தாள் வெளிநாட்டில் சொந்தநாடோ எமக்கில்லை சொந்த மொழியோ செல்லாது சொல்லவோ வெட்கம்! அம்மையார் மாண்டார் வந்தான் ஓர் அரக்கன் எமையாட்சி செய்யயாருக்கையா சொல்ல பெற்ற தாயுமில்லை பிறந்த பொன்னாடு மில்லை இருக்கவோ இடமுமில்லை வந்தோம் வெளிநாடு கலைக்கின்றனர் கறுப்பர் என்கின்றனர் யாருக்கு சொல்லயாருக்கு விளங்கும் எம்நிலை இழப்பதற்கு எதுவுமில்லை வெல்வதற்கு ஈழமுண்டு என்றோ ஒரு நாள் கிடைக்கின்றன எம் ஈழம் எம்மை யெல்லாம் காக்கும்.அனாதைப்பிடியிலிருந்து....அந்நாள் எந்நாளோ!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More