Slideshow

அகமணமுறையும் தலித் மக்களின் மரபியல் நோய்களின் பரிமாணமும் – என்.சரவணன்


கடந்த சில வருடங்களாக சூரியாசிஸ் என்கிற நோயினால் அதிக உபாதைகளை எதிர்கொண்டு வருகிறேன். நோர்வேயில் பல மருத்துவர்களிடமும், இந்த நோய் சார்ந்த நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களிடமும் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் கேட்டுவிட்டேன். சகலரும் இது ஆயுட்காலமும் அனுபவிக்க வேண்டிய நோய் என்று கூறிவிட்டார்கள். இது ஒரு தொற்று நோயல்ல ஆனால் இது ஒரு பரம்பரை நோயென்று அனைவரும் கூறினார்கள். என் குடும்பப் பின்னணி குறித்த விளக்கங்களை ஆழமாக கேட்டுத்தெரிந்துகொண்டார்கள்...

பெற்றோருக்கு இந்த நோய் இருந்தால் 50வீத  வாயப்பிருப்பதாக சகல மருத்துவர்களும் தெரிவித்தர்கள். அதாவது இது ஒரு பரம்பரை நோய் என்கிறார்கள். நான் இது குறித்து வாசித்து அறிந்த ஆய்வுகளும் அதையே ஒப்புவிக்கின்றன. இந்த நோய் என் தகப்பனாருக்கு இருந்தது. எனது பாட்டனாருக்கும் இருந்தது. எனவே அதன் விளைவாக எனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்றே அவர்கள் முடிவு செய்கிறார்கள். சூரியாசிஸ் ஏற்பட வேறு பல காரணங்களும் இருந்தாலும் மரபியல் காரணங்களே அதிகம் செல்வாக்கு செலுத்துகிறது என்கிறார்கள்.

இணையத்தளங்கள் பலவற்றில் இது குறித்த தேடல்களின்போது இரண்டு மருத்துவ முறைகள் இதனை தீர்க்கலாம் என்று உறுதி செய்வதை அவதானித்தேன். அதன்படி அக்குபஞ்சர் மற்றும் ஆயுள்வேதம் இரண்டையும் பரீட்சித்தும் பார்த்தேன். பலஇடங்களில் உறுதிசெய்து தேடி கண்டுபிடித்தே அவற்றை மேற்கொண்டேன். எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் பாணந்துறை பகுதியில் ஒரு சூறியாசிஸ் நிபுனத்துவம்பெற்ற சித்த மருத்துவறை சந்தித்தேன். அங்கிருந்து சிகிச்சையை தொடர்வதற்காக ஒரு சூட்கேஸ் நிறைய பெரிய மருந்து பொட்டலங்கள் பலவற்றை நோர்வே கொண்டுவந்து சேர்த்து, அதனை அவித்து கசக்க கசக்க குடித்தும் உண்டும் பார்த்தாகிவிட்டது மாற்றம் இல்லை. மாறாக சமீப காலமாக அது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

எனக்கு வந்த மூட்டுவலிகளும் இதன் காரணமாக இருக்கலாம் என்று தேடினால் Psoriasis / Psoriatic Arthritis என்று இரு வகை நோய்களும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறுகிறது ஆய்வுகள். Psoriatic Arthritis என்பது எலும்பு மூட்டுகளின் வீக்கம், மூட்டு வலி  என்பனவற்றோடு தொடர்புடையது. எனக்கு இப்போதைக்கு மூட்டுவலி வரை வளர்ந்துள்ளது. இனி விடயத்துக்கு வருகிறேன்.

பரம்பரையாக கடத்தப்படும் நோய்கள் இந்திய உபகண்டத்தில் அதிகமாகவே காணப்படுகிறது எனலாம். அதற்கு அடிப்படை காரணம் அகமண முறை (endogamy). இனக்குழுமங்கள் / சமூகக் குழுக்கள் தமக்குள்ளேயே திருமண பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வதையே அகமண முறை என்கிறோம்.

சாதியை பேணுவதற்கு அகமணமுறை அவசியம், சாதிய அடையாளத்தை நிலைநிறுத்துவதற்கு அகமணமுறை அவசியம். சொத்தை பாதுகாப்பதற்கு அகமணமுறை அவசியம். இவை யாருக்கு ஆதிக்க சாதியினருக்கு.

ஆதிக்க சாதிகள் தமது சாதிய தூய்மைவாத பெருமிதத்திற்காக இந்த அகமணமுறையை பேணுகின்றனர். அகமண முறை மூலம் மட்டுமே தமது பரம்பரைப் பெருமையை பேணுவது சாத்தியம் என்கின்றனர். சாதியத்தின் அடிப்படை பண்பாக இந்த அகமணமுறை வலுவாக நிலைபெற்றிருக்கிறது. ஒவ்வொரு சாதியும் இந்த “சாதிய புனிதத்தை” காப்பதற்காக அகமணமுறையை பேணிக்கொள்வதாக கூறிக்கொண்டாலும் அடக்கப்படும் தலித் சமூகங்கள் அகமணமுறையை பின்பற்றுவது அதே அர்த்தத்தில் அல்ல. தலித்துகளைப் பொறுத்தவரை சாதிய அடுக்குநிலையில் இறுதி இடமாக இருப்பதால் மேலுள்ளவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோல அவர்களுக்கு கீழென்று ஒன்றில்லை என்கிற நிலை. எனவே அகமணமுறைக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட கொடுமையை சுமப்பவர்கள் தலித் மக்கள்.

ஆக இந்த அகமணமுறையால் கிட்டத்தட்ட பரம்பரை நோய்களுக்கு அதிகம் உள்ளாகியிருக்கும் சமூகமாக இந்திய உபகண்ட இனக்குழுமங்களை கருத இடமுண்டு. அதேவேளை நிச்சயமாக இந்த பரம்பரை நோய்களிலிருந்து விமோசனம் பெறமுடியாத சமூகமாக இருப்பவர்கள் தலித்துகளே. அவர்கள் ஒரு சலுகை பெற்ற சமூகமும் இல்லை, சலுகைபெற்ற வர்க்கமும் இல்லை. எப்படியோ இந்த நோய்களை சுமந்தே ஆக வேண்டிய சமூகமும் கூட. அதுபோல விரும்போயோ விரும்பாமலோ, தெரிந்தோ தெரியாமலோ அடுத்தடுத்த பரம்பரைகளுக்கும் அந்த நோய்கள் கடத்துகின்ற சமூகமாகவும் அவர்கள் ஆளாக்கப்படிருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை.

சாதியமானது அதன் கட்டமைப்பிலும் , அதன் இருப்பு வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கண்டபோதும் சாதியத்தை பேணுவதில் பிரதான பாத்திரத்தை வகிக்கும் அகமணமுறையை விட்டுகொடுக்காத நிலை தீவிரமாக தொடர்ந்தவண்ணம் தான் இருக்கிறது. அதற்காக எந்த விலையையும் கொடுக்க தயாராகவும் இருக்கிறது. அகமணமுறையை அனுசரித்து நடக்காதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது “சாம - தான – பேத - தண்டம்”. பெற்றபிள்ளைகளைக் கூட ஈவிரக்கமின்றி கௌரவக் கொலைபுரியுமளவுக்கு அது துணிச்சல் மிக்கதாக இருக்கிறது. சாதிமாறி கலக்க நினைக்கிற ஏனைய சாதியினருக்கும் அச்சத்தை உருவாக்கும் வகையில் இவை நிகழ்த்தப்படுகின்றன.

நம்மை சுற்றியுள்ள சாதியத்தை சாடும் மனிதர்கள் பலர் திருமணம் என்கிற ஓரம்சத்தில் மாத்திரம் சாதியை கடுமையாகப் பேண விளைகிறார்கள். 

எனவே சாதிய அகமணமுறையின் நுட்பமான பாத்திரத்தை நாம் சரியாக இனங்கண்டுகொள்ள வேண்டியிருக்கிறது.

நான் சார்ந்த இந்திய வம்சாவழி பின்னணியைக் கொண்ட இலங்கை வாழ் அருந்ததியர் சமூகத்தில் நான் பரவலாக எல்லோரிடமும் சில நோய்களையும் அறிகுறிகளையும் அவதானித்து வந்திருக்கிறேன். 2012 இல் பத்து வருடங்களுக்குப் பின்னர்  நோர்வேயிலிருந்து இலங்கை சென்று என் சொந்தங்கள் வாழும் இடங்கள் பலவற்றுக்கு போய் பார்த்த போது பலர் சூரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் குறிப்பாக என் தலைமுறையினர் தான் அதிகம். எனக்கு முந்திய தலைமுறையினர் பலர் மூட்டுவீக்கம், மூட்டுவலி போன்றவற்றால் அல்லலுறுவதை காணக்கூடியதாக இருந்தது. வீட்டுக்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதுவும் இளம்தலைமுறையினர், சிறியவர்கள் கூட பாதிக்கப்பட்டிருந்தார்கள். சிலர் கால்கள் வெட்டப்பட்டும், விரல்கள் வெட்டப்பட்டும் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தார்கள். படுக்கையிலேயே மருத்துவ உதவி பெற்றுக்கொண்டிருந்தவர்கள் சாகக்கூடாத வயதில் செத்துப்போனார்கள்.

சிலருக்கு மனநோய் இருந்தது. அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டிருந்தது. என் தாத்தா, அவர் மகள் (என் மாமி ), அவர் மகள் (என் மச்சாள்), அவரின் மகன் (என் மகன்முறை) என நான்கு தலைமுறை உதாரணங்களை அருகிலேயே கண்டேன்.

தலையில் சூரியாசிஸ் நோய் வந்தவர்களுக்கு அதிக மருத்துவ செலவை சமாளிக்கமுடியாமல் அப்படியே விட்டுவிட்டிருந்தார்கள். அந்த மருந்துகள் பல ஆயிரக்கணக்கான ரூபாய்களாக இருந்தது. அவர்களுக்கு அந்த நோய் முற்றிக்கொண்டு வருவதை அவதானித்தேன். 2013 இல் இலங்கை சென்றிருந்தபோது நோர்வேயில் எனக்காக வாங்கப்பட்ட மருந்துகளை மேலதிகமாக வாங்கிகொண்டு சென்று கொடுத்ததில் கணிசமான மாற்றம் கண்டிருந்தது. (நிச்சயமாக அது பூரணமாக குணமடையாது).

இவற்றை கவனித்தபோது ஒன்றை உணர்ந்துகொண்டேன். இந்த சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலை பற்றிய ஒரு தொழில்ரீதியிலான ஆய்வு (profesional research) ஒன்று தேவைப்படுகிறது.

சென்றவருடம் என் துணைவி கருவுற்றிருந்தபோது நோர்வேயில் சில மருத்துவர்களை பிரேத்தியேகமாக சந்தித்து எனக்கிருக்கிற சூரியாசிஸ் நோய் என் குழந்தைக்கு வர வாய்ப்பிருக்கிறதா அதனை கண்டுபிடித்தால் பிறக்குமுன் கருவிலேயே செய்யக்கூடிய முற்பாதுகாப்பு சிகிச்சைகள் மேற்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்று இரங்கிக் கேட்டேன். அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். வரலாம் வராமலும் போகலாம் இப்போது கவலைப்படாதீர்கள் என்றே மருத்துவர்கள் கூறினார்கள். இலங்கை சென்றும் இரு வேறு மருத்துவமனைகளில் விசேட மருத்துவர்களிடம் கேட்டதற்கும் அதற்கு நிகரான பதில் மட்டும்தான் கிடைத்தது.

அருந்ததியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் தலித்துகளிலும் தலித்துகளாகவே எங்கெங்கிலும் உள்ளார்கள். காலவளர்ச்சியில் பல ஒடுக்கப்பட்ட சாதியினரில் ஓரளவு வளர்ச்சி மாற்றம் கண்டாலும் கூட இவர்களின் வளர்ச்சி வேகம் மிக மிக கீழ் நிலையிலேயே உள்ளது. அதற்கான காரணம் அவர்களின் பலர் இன்றும் நகரசுத்தி தொழிலை அண்டிய வாழ்க்கையும், மோசமான குடியிருப்பு வாழ்க்கையுமே. இலங்கையில் இலகுவாக ஒரு சாதி அடையாளம் காண முடியுமென்றால் அது அருந்ததியர் சமூகம் தான்.

இவர்கள் அகமண முறையை பின்பற்ற தள்ளப்பட்டவர்கள். அகமணமுறையை தவிர வேறு வழியில்லை. விதிவிலக்குகளை இங்கு கணக்கில் எடுக்கவில்லை. அப்படி விதிவிலக்காக சாதிக்கு வெளியில் திருமணமுடித்தவர்கள் தமது சொந்தங்களிடமிருந்து தள்ளியே போய்விட்டனர். அப்படி தள்ளி போகாவிட்டால் அதுவே தமது புதிய வாழ்க்கையையும், எதிர்கால சந்ததியையும் பாதிக்கும் என்று நம்புகிறார்கள். இவை சாதி கலப்பு திருமணமே தவிர சாதி மறுப்பு திருமணமல்ல. இதனை விளங்கி செய்துகொண்ட ஒரு காலம் இருந்தது.

இலங்கையில் திராவிட கழகம், பெரியார் இயக்கங்கள் செயற்பட்ட காலத்தில் தலித் பெயர்களை மாற்றி திராவிட பெயர்களை சூட்டுவது, கலப்பு திருமணம் நடத்தி வைப்பது போன்றவை நிகழ்த்தப்பட்டன... ஆனால் கலப்பு திருமணங்கள் தலித் சாதிகளுக்குள் மட்டுமே நடந்தன. அதற்கப்பால் விதிவிலக்காகவே நிகழ்ந்தன. ஆனால் அது சாதி மறுப்பு திருமணமாக இருந்தது. வெறுமனே சாதி கலப்பாக இருக்கவில்லை.

தனது இளம்வயதில் 30 வருடங்களுக்கு முன்னர் ஒரு யாழ்ப்பாணப் பெண்ணோடு மாயமான எனது பெரியப்பாவை என் அப்பா உள்ளிட்ட அவரின் சகோதரர்கள் அவரை அவர் இறந்தபோது சவப்பெட்டியில் தான் பார்த்தார்கள். அவர் மாளிகாவத்தை பகுதியில் எங்கள் குடியிருப்பில் இருந்து அருகாமையில் தான் அத்தனைகாலம் வாழ்ந்து வந்திருக்கிறார். ஆனால் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. யாழ்ப்பாண “இடைச்சாதி” பெண் ஒருவரைத்தான் அவர் திருமணம் முடித்திருந்தபோதும், அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர் அவர்; என்பது தெரிந்துவிடும் என்பதற்காக அவர் சொந்த உறவுகளுக்குத் தெரியாமல், எவர் கண்களிலும் படாமல் வாழ்ந்து மடிந்தார். அவரின் இறப்பு செய்தி கேட்டு ஒப்பாரி வைத்தபடி பதறியடித்துக்கொண்டு ஓடிப்போன என் மாமிமாரும் அப்பா சித்தப்பா அனைவரும் அழுத அழுகை  இன்னமும் என் கண்களில் தெரிந்துகொண்டே இருக்கின்றன. “இவ்வளவு நாளாத்தான் ஒன்ன பாக்க கெடக்கல இனிமேலும் ஒன்ன பாக்கமுடியாம போச்சேடா…” என்று கதறினார்கள். அவர்களின் பிள்ளைகள் அதிர்ச்சியில் இருந்தார்கள். அவரின் பிள்ளைகள், இறப்பு சோகத்தில் எம்மோடு ஒன்று கலந்து அத்தை, மாமா.. என உறவு பாராட்டினார்கள். அவரின் மரண சடங்குகளின் பின்னர் “...இனி இவர்களுக்கு நாங்கள் தொந்தரவாகி விடக்கூடாது, அவர்கள் பிள்ளைகள் எல்லோரும் இதுவரை வாழ்ந்ததைப்போலவே சாதி தெரியாமல் நன்றாக வாழட்டும்...” என்று எங்கள் பெரியவர்கள் மிகுந்த வேதனையுடன் முடிவெடுத்தார்கள். அதன் பின்னர் எங்கள் கூட்டுக் குடும்ப வலைப்பின்னலுக்குள் அவர்கள் இல்லை.

நான் சாதிக்கு வெளியில் திருமணமுடித்த போது என் அக்கா ஒருவர் “இனி ஒன்ன இழக்க போறமே டா” என்று கட்டிப்பிடித்து அழுததை என் வாழ் நாளில் மறக்க முடியாது. நான் அப்படி இல்லக்கா. நமக்கு நாம மட்டுந்தான் அக்கா.. நான் எங்கேயும் போயிற மாட்டேன்..” என்று பதிலுக்கு நான் ஆறுதல் கூறி விடைபெற்றேன்.

இதை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் தலித்துகளுக்கு சாதிக்குள் திருமணம் முடிப்பது என்பது ஒரு பாதுகாப்பும் தான் என்று உணர்கிறார்கள். பரஸ்பர ஆதரவு மட்டுமே அவரவருக்கு கிடைகிறது. அது இந்த அகமணமுறைதான் பாதுகாக்கப்படுகிறது என்று நம்புகிறார்கள்.

புதிய தலைமுறை வாய்ப்புகிடைத்தால் அகமணமுறையை தகர்க்கிறார்கள். அதேவேளை உறவுகளை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்துக்கோ பிரிந்து செல்கிறார்கள். 

90களின் ஆரம்பத்தில் அருந்ததிதியர் மீட்பு முன்னணி என்கிற ஒரு அமைப்பை பல இளைஞர்களை ஒன்று சேர்த்து தொடங்கினேன். கூட்டங்கள் அனைத்தும் கொட்டாஞ்சேனையில் உள்ள எங்கள் வீட்டிலும், புதுக்கடையில் உள்ள அருந்ததியர் வாழும் குடியிருப்பிலும் நடத்தினோம் ஆரம்ப கூட்டங்களில் அகமணமுறையை இல்லாதொழிப்பது பற்றி அதிகம் கலந்துரையாடினோம். எங்களுக்குள் அனைவரும் ‘சொந்த சாதிக்குள் திருமணம் முடிப்பதில்லை’ என்று உறுதிமொழி எடுத்தோம். அதுவே சாதியை இல்லாதொழிப்பதற்கான பேராயுதம் என்று கூறிக்கொண்டோம். சமீபத்தில் இலங்கை சென்று அவர்களில் பலரை சந்தித்தேன் அவர்கள் அனைவரும் சாதிக்குள் தான் திருமணம் செய்திருந்தார்கள். அகமணமுறை உடைப்பு என்பது அருந்ததியர்களுக்கு அவ்வளவு இலகு இல்லை என்பதை எனக்குள் உறுதி செய்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

அரசியல் ரீதியாக மட்டும் அல்லாமல், அறிவியல் மற்றும் மருத்துவரீதியாகவும் சொந்தங்களுக்குள், சொந்த சாதிக்குள் நடைபெறும் திருமணம் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியவை என்று மரபணு ஆய்வு முடிவுகள் திரும்பத் திரும்ப நினைவூட்டி வந்திருக்கின்றன. நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்யும்போது, பரம்பரை நோய்கள் மரபணுரீதியாகத் தொடர்வதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பிறக்கும்போதே ஊனமுற்ற குழந்தைகளையும், வளர்ந்ததன் பின்னர் நோய் அறிகுறிகள் தெரியவந்த சம்பவங்களை பலவற்றை நாம் கண்டிருக்கிறோம். பிள்ளைகள் பிறக்குமுன்னரே வயிற்றில் இருக்கும் போதே ஸ்கேன் செய்து பாதிப்புகளை கண்டுகொண்டவுடன் கருச்சிதைவு செய்துகொள்ளும் வசதியுடையவர்கள் அல்ல இவர்கள்.

தலித்துகளை பொறுத்தவரை சொத்தையும் சாதியையும் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. இழக்க சொத்துமில்லை, சாதியைப் பாதுகாக்க அவர்கள் சலுகைபெற்ற சாதியுமில்லை.

‘அகமணமே சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்கிறார் அம்பேத்கர்.

அகமணமுறையின் பக்கவிளைவுகள் என்பது வெறும் தலித்துகளுக்கு மட்டும் உரித்தானதல்ல. அகமணத்தை பேணும் அனைத்து குழுமங்களின் எதிர்கால சந்ததியினருக்கும் மிகப் பெரிய அபாய அறிவித்தல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மரபணுக் கோளாறுகள், உடல்/மனம் குன்றிய குழந்தைகள் பிறப்பதை தடுத்து எதிர்காலத்தில் ஆரோக்கியமான சந்ததியை பெற்றெடுக்க வேண்டுமெனில் அகமணமுறையை தகர்த்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒரே காரணத்திற்காக கலப்பு மணத்தை ஏற்கவா போகிறார்கள். சாதிய பெருமிதம் எல்லாவற்றையும் விட வலிமையானதல்லவா நண்பர்களே.

5 comments:

அன்புள்ள சரவணன் நான் உங்கள் கருத்துகளை மதிக்கின்றேன். புலம் பெயர் தமிழ் சமூகத்திலும் தலித் சமூகம் என்ற உணர்வு இருக்கின்றதா? நான் தலித்மேம்பாட்டுமையம் என்ற பெயரில் முகப்புத்தகம் ஆரம்பித்திருகின்றேன். நான் மன்னார் பகுதியில் வசிக்கின்றேன். எனது பெயர் Thevethas Peiris சிங்கள தமிழ் கலப்பு கொண்ட ஒரு கத்தோலிக்க கிறிஸ்தவன். ஒரு இணைய வானொலி நடத்துகின்றேன். www.aruloli.com எனது இலத்திரன் முகவரி theivethas@hotmail.com SMS 004792278528 நோர்வே பேர்கன் வசிப்பிடம் நன்றி

நீங்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ஏன் இஸ்லாத்தை தழுவக்கூடாது?. ஏன் அந்த வர்ணதர்ம ஹிந்து ஜாதிசாக்கடையில் உழலவேண்டும்?

முஸ்லிமாகிவிட்டால், பாப்பான் ஷத்திரியன் வைசியன் தலித் அனைவரும் சரிசமமாக அமர்ந்து, ஒரே தட்டில் கோமாதா பிரியாணி சாப்பிடலாம். ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம். யார் வேண்டுமானாலும் திருக்குரானை ஓதலாம். இமாமாக முன்னின்று தொழவைக்கலாம்.

இஸ்லாத்தில் ஜாதிகள் இல்லையடி பாப்பா.

தலித் எனும் பாதாளசாக்கடையிலிருந்து வெளியேற இஸ்லாத்தை தழுவு. திருக்குரானை எடு. பள்ளிவாசலுக்கு செல். இமாமாக முன்னின்று தொழுகையை நடத்து. வன்முறை தானாக மறைந்துவிடும்.

வன்னியரும் தேவரும் உன்னைக்கண்டால், வாங்க பாய் உக்காருங்க பாய் என மரியாதை தருவர். இல்லாவிட்டால், உதைவாங்கி சாவு.

அகமணமுறை என்பது தலித் குடிகளுக்கானது அல்ல; தலித் குடிகள் எந்த மொழியினரையும் எந்த தேசிய இனத்தவரையும் எந்த குழுவைச் சார்ந்தவரையும் மனம் முடித்துக் கொள்ளும் இயல்பினர். ஜாதியற்றவர்க்கு அகமணமுறையை அடிப்படையாக்கி இந்த மூட்டுவலி நோயை பார்ப்பது சரியாகாது என நினைக்கிறேன். ஆயினும், ஜாதியின் வழி தோன்றும் பல இழிவுகளையும் உங்கள் கட்டுரை விளக்க வல்லது.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More