Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம். - நவஜோதி ஜோகரட்னம் லண்டன் -


[தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினரும் (பிரான்ஸ்), இலங்கை ஜனநாயக ஒன்றியமும் (லண்டன்), இணைந்து ஏற்பாடு செய்த நூல் விமர்சன நிகழ்வானது லண்டனில் (6-12-2008) மிகச் சிறப்பாக நடைபெற்றது.]

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.‘இலங்கையின் சாதி அமைப்புக் குறித்து கறுப்புப்பிரதிகள், பறை ஏனைய சிற்றிலக்கிய சஞ்சிகைகளில் ஆங்காங்கு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இலங்கையில் சாதியப் போராட்டத்தைப் பற்றிய விரிவான ஒரு நூலாக ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான 
போராட்டங்களும்’ என்ற இந்த நூல் அமைந்திருக்கிறது என்று’ இந்த விமர்சன அரங்கிற்கு தலைமை வகித்து உரையாற்றிய தமிழக 
மார்க்சிய ஆய்வாளர் தோழர் ச.வேலு பேசுகையில் குறிப்பிட்டார். 

‘இலங்கையின் தேசிய விடுதலை எழுச்சியின்பின் சாதிய ஒடுக்குமுறைகள் இல்லாமல் போய்விட்டன என்ற கருத்துக்களும்இ 
ஆயுதங்களின் நிழலில் சாதிய உணர்வுகள் பதுங்கிக் கிடக்கின்றன என்றும், தேசியப் போராட்டத்தினால் சாதியப் போராட்டத்தின் கூர்மை
மழுங்கடிக்கப்பட்டது என்றும் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழும்பியுள்ள நிலையில், அவற்றை மதிப்பிடுவதற்கான ஒரு அவசியமாக 
இந்நூல்; அமைகிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் அவர் பேசுகையில் ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலணித்துவவாத எதிர்ப்பு என்று எதிர்ப்பு இலக்கியம் நடாத்திய பார்ப்பனியர்கள் 
இந்துத்துவ அரசியலையும்இ சாதிய நீடிப்பையும் வலியுறுத்தி வந்திருப்பதை இந்திய அரசியலில் காண முடிகிறது’ என்பதையும் 
வலியுறுத்திப் பேசினார்.

‘ஐம்பதுகளில் வடபுலத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் மத்தியில் கம்யூனிச சிந்தனையை விதைத்தவர்களில் அமரர் பொன். கந்தையாவின் இடம் தனித்துவம் வாய்ந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தங்களின் சமூக விடுதலைக்கு மார்க்சிய சிந்தனையே உண்மையான வழிகாட்டி என்பதை அமரர் பொன். கந்தையாவே எங்களில் ஆழப்பதியச் செய்தவராவார். அற்ப ஆயுளில் அவர் மறைந்து போனமை வட புலத்தின் இடதுசாரி கட்சிகளின் வரலாற்றில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியது என்றே கூறவேண்டும். சமூக ரீதியாக ஆலய வழிபாடு, பாடசாலை அனுமதி, தேனீர்க்கடைகளில் சமத்துவம் போன்ற பல்வேறு அம்சங்களிலும் ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் மத்தியில் இந்த அநீதிக்கு எதிராக போராட வேண்டும் என்ற யதார்த்த உண்மையை மார்க்சியமே எங்களுக்கு வெளிப்படுத்தியது’ என்று ஆசிரியர் திரு.கே.தங்கவடிவேல் லண்டனில் நடைபெற்ற ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும், எம்.சி.ஒரு 
சமூக விடுதலைப் போராளி என்ற நூல் வெளியீட்டு விழாவில்’ உரையாற்றும்போது தெரிவித்தார். 

‘எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே டானியல் போன்றோர் சாதிய ஒழிப்புப் போராட்டத்தில் ஆற்றிய பங்கினை மறைத்து அல்லது திரிபுபடுத்தி 
வரலாறு எழுதப்படுவது நேர்மையான செயல் அல்ல என்று கூறிய கே. தங்கவடிவேல் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற ஆலய 
நுழைவுப்போராட்டத்தில் தனது நேரடி அனுபவத்தினை விபரித்தார். அரசநிர்வாகம், பொலிஸ், சாதிவெறியர்கள் ஆகியோருக்கெதிராக 
ஒடுக்கப்பட்ட மக்கள் எத்தகைய வீரம்செறிந்த போராட்டத்தை நடாத்தினார்கள் என்பதை இன்றைய தலைமுறையினர் அறிவதற்கு 
வாய்ப்பில்லாமல் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய போராட்டங்கள் பற்றிய கட்சி சாராத யதார்த்த உண்மைகளை 
உண்மையாகவே பிரதிபலிக்கின்ற வரலாற்று நூல்கள் எழுதப்படவேண்டும்’ என்றும் ஆசிரியர் கே.தங்கவடிவேல் வலியுறுத்தினார்.

‘பேராசிரியர்.சி.சிவசேகரம், பேராசிரியர்.சி.தில்லைநாதன் ஆகிய இருவரும் வழங்கிய முன்னுரைகள் மிகவும் காத்திரமானவை. இந்நூல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மார்க்சியவாதிகளின் சாதியஎதிர்ப்புப் போராட்டங்கள் மிக உன்னதமானவை என்பது இந்த நூல் மூலம் நிறுவப்பட்டுள்ளது. 

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி’ நூல் விமர்சனம்.
‘இலங்கையில் சாதியம் என்பது பற்றி ஆங்காங்கே கட்டுரைகளும், ஆய்வுகளும் வெளிவந்தபோதும் போராட்டங்களை முழுமையாக 
எடுத்துக்கூறும் நூலாக இது இருக்கின்றது. முதற் பதிப்பின்போது கிடைத்த சாதகபாதகமான விமர்சனங்களை உள்வாங்கி 2வது பதிப்பில் வெளிவந்ததாகக் கூறப்பட்டுள்ளது எனினும் மார்க்சிய கட்சி சார்ந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதால் ஏனைய கட்சிக்காரரும், மார்க்சிய கொள்கைளைப் பின்பற்றாதவர்களும் இந்நூலில் புறந்தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்நூலின் உண்மை வரலாற்றை ஏற்றுக்கொள்ளுகின்ற அதே சமயம் வரலாற்று நூலின் நேர்மை கருதி சில கருத்துக்களை முன்வைக்கலாம். முதன் முதலில் மிஷனறிப்பாடசாலையில் கல்வி கற்று பிற்காலத்தில் அம்மக்களின் விமோசனத்திற்காக செயற்பட்டதாக யோவல்போல், எஸ்.ஆர்.ஜேக்கப், ஏ.பி.ராஜேந்திரா ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். ஆனால் அதே சமயம் சூரன், எம்.சி.சுப்ரமணியம்,அ.முருகேசு ஆகியோரும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று மாதவி சிவலீலன் தனது விமர்சன உரையில்தெரிவித்தார்.மற்றும் சூரனால் கட்டப்பட்ட 
“தேவரையாளிசைவ வித்தியாசாலை”க்கூடாக கல்வி கற்று உத்தியோகம் பெற்றவர்கள் தாழ்த்தப்பட்ட தங்களுடைய சமூகத்திலிருந்து தம்மை வேறுபடுத்த முற்பட்டவர்கள் என இந்நூல் ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். அத்துடன் இப்பாடசாலை கட்டப்படாமல் ஏனைய பாடசாலைகளில் இவர்கள் கல்வி கற்பதற்கு போராடியிருக்கலாம் என்ற கருத்தும் இவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கள் விவாதத்துக்குரியவை. ஏனெனில் அச்சமூகம் மேல்நிலை அடைவதற்கு அப்பாடசாலை பெரிதும் உதவியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு சமூகம் கல்வி பொருளாதாரம் பண்பாடு என்பவற்றில் மேல்நிலையாக்கம் பெற்றால் ஈடேற்றம் பெறலாம் என்பதில் உண்மை இருக்கின்றது. இந்நூலில ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கல்வியால் மேல்நிலையடைந்தோர், ரஷ்ய மார்க்சியவாதிகள் ஆகிய 
மூன்று பிரிவினரும் புறந்தள்ளப்பட்டு தாக்கப்படுகின்றனர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து கல்வியால் மேல்நிலை அடைகின்றவர்களை ஏற்றுக் கொள்ளாமல் குற்றம் சுமத்துகின்ற இவர்கள் எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்துக்காக போராட முடியும்? தமிரசுக் கட்சியை தாக்க முற்படுகின்ற போது மாவிட்டபுர வழக்கில் எம்.பி.கதிரவேற்பிள்ளை ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதாடியமை கபடம் என்கின்றனர். பன்றித்தளர்ச்சி அம்மன் கோயில் விவகாரத்தில் எம்பி.நவரத்தினம் நடுநிலையாளராகத் தன்னைக் காட்டிக் கொண்டார் என்கின்றனர். அத்துடன் தமிழரசுக் கட்சியினருக்கு சேவகம் செய்ய தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் இருந்து கல்வியின் மூலம் மேலே வந்தவர்கள் என ஒட்டுமொத்தமாக தமிழரசுக் கட்சியினரை குறை கூறுகின்றனர். ஆனால் கந்தசாமி கோயில், வண்ணை சிவன்கோயில், பெருமாள்கோயில் ஆகியவற்றுக்குள் பிரவேசம் செய்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கான முதன்முதல் ஆலயப் பிரவேசத்தினை தமிழரசுக் 
கட்சியினரேசெய்துள்ளனர். தேனீர்க்கடைப் பிரவேசமும் இவர்களாலேயே முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னரே ஏனைய 
ஆலயங்களுக்கான பிரவேசங்கள் தேனீர்க்கடைப் பிரதேசங்களும் நடைபெற்றன. 1956 ம் ஆண்டு ‘உயர் சாதியினருக்கு வேண்டுகோள்’ 
என்ற தலைப்பில் தமிழரசுக்கட்சியைச்சார்ந்த ஐ.நல்லையா, ஆ.கணபதிநாதன் ஆகியோர் தங்கள் உரிமைகளுக்கான கோரிக்ககைகளை முன் வைத்துள்ளார்கள். தீண்டாமைச் சட்டமும் இக்கட்சியினராலேயே முன் வைக்கப்பட்டுள்ளது. இவை யாவும் இந்நூலில் நேர்மையான முறையில் முக்கியத்துவம் பெறவில்லை. இதேசமயம் தங்கள் கொள்கைகளை பின்பற்றாதவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு செய்த சேவையையும் இருட்டடிப்புச் செய்துள்ளனர். எனவே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலையில் வந்தவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களது கொள்கைகளைப் பின்பற்றாதவர்களை எதிரிகளாகப் பார்த்தனர். இவர்கள் எப்படி நேர்மையான அரசியலை நேர்மையான வரலாற்றை எழுத முடியும்? தங்களது கட்சி நடத்தியது வரலாறு என்போர் மற்றையோர் நடத்திய சாதியப் போராட்டங்களில் கோளாறு பார்க்கின்றனர். இதே சமயம் நாடகக் கலைஞர்கள் மேடை நாடகங்களின் போது தீண்டாமை சம்பந்தமாக பாடல்களை மேடைகளில் பாடி வந்துள்ளார்கள். இவை சாதியத்துக்கு எதிரான போராட்டங்களாகவே இருந்துள்ளன. குறிப்பாக பொன்னாலைக் கிருஷ்ணபிள்ளை தான் மேடைகளில் பாடிய பாடல்களை ‘சந்திப்பாட்டு’ என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். இத்தகைய தகவல்கள்கூட இந்நூலில் விடுபட்டுள்ளது. எனவே வரலாறுகள் உண்மையாக இருக்க வேண்டும்’ என்று மாதவி சிவலீலன் தனது விமர்சன உரையில் மேலும் குறிப்பிட்டார். . 

‘எம்.சி.சுப்பிரமணியம் ஒரு சமூக விடுதலைப்போராளி’ என்ற நூல் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வரலாறாகக் காணப்படுகிறது என்று கூறிய 
மாதவி சிவலீலன் அவர் பற்றிய ஒரு மேன்மையான மதிப்பினை இந்நூல் வெளிக்காட்டுகின்றது என்றார். இந்நூலில் அவர் பற்றிய 
பலரது கட்டுரைகள் மூலம் இதுவரை காலமும் அவர் குறித்து செவி வழியாக கேட்கப்பட்டு வந்த தவறான கருத்துக்கள் இந்நூலில் 
தெளிவுபடுத்தப்பட்டுள்ளன, அந்த வகையில் எஸ் திருச்செல்வம் மற்றும் பலரது கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவையாகும் என்று மாதவி சிவலீலன் தனது விமர்சனஉரையில் மேலும் தெரிவித்தார். ;

‘இலங்கையின் இன முரண்பாடுகள்பற்றி நூற்றுக்கணக்கில் ஆய்வுகளும், நூல்களும் வௌ;வேறு தளங்களில்; வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் வட புலத்தில் சாதியமைப்புக் குறித்தும்இ அவற்றின் போராட்டங்கள் குறித்தும் முறையான ஆய்வுகள் எதுவும் இல்லை என்பது துரதிஷ்டவசமானது என்று விமர்சகர் மு. நித்தியானந்தன் தனது விமர்சன உரையின்போது தெரிவித்தார். இன்று சர்வதேச இலக்கியத்தில் தலித் இலக்கியம் ஒரு தனித் துறையாக அங்கீகரிக்கப்பட்டு வளர்ச்சி பெறும் நிலையில் தலித் என்ற பதத்தை தீண்டத்தகாததாக கருதுகின்ற மனோபாவம் இலங்கையின் வைதீக அரசியல்வாதிகள் மத்தியில் இடம் பெற்றிருப்பது விநோதமானதாகும். தலித்தியம் குறித்த எள்ளலோடும், அவதூறு செய்யும் நோக்கிலும் இந்த நூலில் கருத்துகள் வெளியாகியிருப்பது சமகால அரசியல் சிந்தனையோடு தொடர்பில்லாத பழமைவாதப் போக்கினையே இது தெரிவிக்கிறது’ என்றும் அவர் தெரிவித்தார். சண்முகதாசனுக்கு எதிரான ஒரு கட்சி நிலைசார்ந்த வரலாறாக மட்டுமே இலங்கையின் வடபுலத்துச் சாதியப் போராட்டம் விவரிக்கப்படுவது உண்மையல்ல என்றும் காலாகாலமாக வௌ;வேறு கட்டங்களிலும், வெவ்வேறு தளங்களிலும் மக்களின் எதிர்ப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது 
என்றும் அவர் தெரிவித்தார். வர்க்க ரீதியில் சாதியப் பிரச்சனையை அணுகியதாக பிரச்சாரம் செய்யப்பட்டபோது தலித்மக்கள் எத்தனை 
விதமானோர் என்ற கணக்கெடுப்போஇ வடபுலத்தின் சமூக நிலைமை பற்றிய வர்க்க ஆய்வோ ஒருபோதும் மேற்கொள்ளப்பட்டது 
இல்லை என்பது அந்தக் காலத்திலேயே சீனச்சார்பு கம்யுனிஸ்ட் கட்சிமீது வைக்கப்பட்ட முக்கியமான குற்றமாகும். எனவேதான் ஆலய நுழைவுஇ தேநீர்க்கடை பிரவேசம் என்பவற்றிற்குப்பின்னால் அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்வது என்பது தெரியாத நிலையில் 
போராட்டம் என்பது மட்டுமல்ல அரசியல் கட்சிகள் மட்டுமே நிலைபெறுவதற்கான மார்க்கமின்றி சிதைந்துபோனமையே உண்மையான வரலாறாகும். கடந்த 40 ஆண்டுகளில் இந்தப் போராட்டப் பாதையில் மேலதிகமாக ஒரு அடிகூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது கட்சியின் வெறுமையை மட்டுமே காட்டுகிறது என்றும்’ மு.நித்தியானந்தன் மேலும் பேசுகையில் தெரிவித்தார். 

நோர்வேயிலிருந்து வெளியாகும் பறை என்ற சஞ்சிகையின் ஆசிரியர் ந.சரவணன் பேசும்போது ‘மறு பதிப்புக்கள் வெளியிடும்போது 
மிகுந்த அவதானத்தோடு செயல்படுவது அவசியமென்றும். இலங்கையில் தேசிய இனப் பிரச்சினைக்கு ரோகணவிஜயவீர எழுதிய
நூலானது ஜே.வி.பியின் மத்திய குழுவுடன் ஒப்புதல் எதுவும் இல்லாத நிலையில் முன்னர் வெளிவந்ததாயினும் இன்று அதன் மீள் பதிப்பு ஜே.வி.பி.யின் கொள்கைப்பிரகடனம் போல வெளியிடப்பட்டுள்ளது. மறுபதிப்புக்கள் மனம்போன போக்கில் திருத்தப்பட்டும், திரிக்கப்பட்டும் வெளிவருவது யதார்த்த நிலையை மழுங்கடிக்கவே உதவும். ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்’ என்ற இந்த நூலுக்கு தான் எழுதிய விமர்சனங்கள் அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப்படாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வாக என்மீது புதிய பூமியினால் எழுதப்பட்ட தனிப்பட்ட தாக்குதல்களாகவே அவை முடிந்தன. தங்களது கட்சியின் இன்றைய வறட்சியையும், வெறுமையையும் மூடுநோக்கிலேயே பழைய சாதனைகளில் குளிர்காய முற்படுகின்றது’ என்று சரவணன் தனது விமர்சன உரையில் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலித் மேம்பாட்டு முன்னணித் தலைவர் அ.தேவதாசன் பேசும்N;பாது ‘இன்று 30 வருடத் Nசிய விடுதலைப் போராட்டத்தின்பின் தலித்துகளது விடுதலையில் ஏதாவது மாற்றம் கிடைத்திருக்கிறதா? என்று யோசித்தால் சிறிதும் இல்லையென்றுதான் கூறவேண்டும். எப்போது தமிழ் தேசியம் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டதோ அப்போதே தலித் விடுதலை என்பது சீரழியத் தொடங்கிவிட்டது. புலம்பெயர் நாடுகளில் சாதியம் இல்லை என்ற கருத்தை பலர் முன்வைக்கின்றனர். ஆனால் நாம் புலம் பெயரும்போது சுமந்து வந்த பாரங்களில் மிகக் கனமான பாரம் சாதியப் பாரம் மட்டுமே. நமது தேவையைப் பொறுத்து நமது மொழியைக் கூட தூக்கி எறிந்துவிட்டு கனடாவில் ஆங்கிலத்தையும்இ ஐரோப்பாவில் பிரெஞ்சு மொழியையும்இ ஜேர்மன் மொழியையும் அணைத்துக்கொண்டவர்கள் ஒரு சாதியை மட்டும் தூக்கிப் போட மனம் வருவதில்;லை’என்று தனது உரையில் குறிப்பிட்டார். 

navajothybaylon@hotmail.co.uk

இலங்கையில் அருந்ததியர் நிலை - என்.சரவணன்

சரிநிகரில்18 வருடங்களுக்கு முன்னர் அருந்ததியன் என்கிற பெயரில் தொடராக எழுதி வந்த குறிப்பை மாந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியர் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதால். சென்ற முறை இலங்கை பயணம் பல கூட்டங்கள், சந்திப்புகள், செயற்பாடுகளால் மீண்டும் அவை புத்துயிர்ப்பு பெற்றுள்ளன. இம்முறை ஒரு மாநாட்டுக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
லண்டன் இலக்கிய சந்திப்பில் எடுத்த தலைப்பை முழுமையாக பேச நேரம் போதவில்லை. 20 நிமிடங்களில் என்னத்தை சொல்ல...? ஆனால் அந்த சந்தர்ப்பத்தை எடுத்துக்கொள்வது தான் எங்களுக்குள்ள வழி
Video streaming by Ustream

40வது இலக்கிய சந்திப்பு





அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்- ஆதவன் தீட்சண்யா


நம்மில் பலரும் தம்மை சாதிமுறைமைக்கு எதிரானவர்களாக நம்பிக் கொள்கிறோம். கருத்தியல் ரீதியாக சாதியத்தை எதிர்க்க முன்வந்திருக்கிற நாம் நடைமுறையில்- சொந்த வாழ்க்கையில்- சாதியத்தைக் கடக்கத் துணிந்திருக்கிறோமா என்று கேள்வியெழுப்பும் நேரம் வந்துவிட்டது. சாதிக்கெதிரான போராட்டம் என்றதும் தொழிற்சங்க நடவடிக்கையைப் போல கூட்டாக சேர்ந்து ஆர்ப்பாட்டமோ உண்ணாவிரதமோ நடத்தி சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைப்பது அறிவுக்கொவ்வாத அணுகுமுறை. தமக்குள் இருக்கிற சாதிய சிந்தனைகள் குறித்து குற்றவுணர்ச்சி கொள்வது, அச்சிந்தனைகளிலிருந்து விடுபடுவது, சகமனிதரிடம் தீண்டாமை பாராட்டாமல் இருப்பது, எல்லா நிலைகளிலும் சாதியை மறுப்பது, சாதிய ஒடுக்குமுறைகள் நிகழ்கிறபோது தன்னொத்தவர்களோடு இணைந்து போராடுவது- என தனிப்பட்ட வாழ்வில் சாதியத்திற்கெதிரான போராட்டம் மலைப்பூட்டும் வகையில் பெரும் சவாலாக நம்முன் நிற்கிறது.

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு ஒட்டடையடித்து விடலாம் என்று நினைப்பதைபோல, ஒருவார காலம் விடுப்பெடுத்துக்கொண்டு சாதியை ஒழித்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. சமத்துவத்திற்காகப் போராடுவதென்பது நமது இயக்கத்தின் கொள்கையாக மட்டுமில்லாமல் நமது வாழ்வியல் நெறியாக- நமக்குள்ளிருக்கும் இயல்பானதொரு உணர்வாக மாறவேண்டியுள்ளது. 

நமக்குள் நிகழ்த்திக்கொள்ள வேண்டிய இந்த உள்முகப் பயணத்திற்கு உதவும் பொருட்டே இந்த கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சுவாரஸ்யமான சொற்பொழிவின் பெயரால் எல்லாப் பேச்சுக்களையும் ‘செவியின்பமாகவோ, செவிக்குணவாகவோ’ சுருக்கிப் புரிந்துகொள்ளும் போக்கு மிகவும் அபாயகரமானது. நேரத்தையும் உழைப்பையும் வீணடிக்கக்கூடியது. எனவே ஒரு தீவிரமான உரையாடலுக்கும் விவாதத்திற்குமாக நமது சந்திப்புகளை மறுகட்டமைப்பு செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

2.கலை இலக்கியம் என்பவை மனிதமனத்தின் வெளிப்பாடுகள். மனிதமனமோ சமூகத்தின் விளைபொருள். இந்த விளைபொருளுக்கான நிலமாகவும் விதையாகவும் உரமாகவும் சமூகச்சூழலே இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ள சிலருக்குத் தயக்கம் இருக்கிறது. எதன் சாயலும் படியாத ஒரிஜனல் சரக்கு என்று தமது சிந்தனைகளையும் அதிலிருந்து பிறக்கிற படைப்புகளையும் உருவகித்து வைத்திருக்கும் ‘சுயம்புகளான’ இவர்களுக்கு, அவை சமூகத்தின் விளைபொருள் என்று ஒப்பமுடியாமல் போவது இயல்பானதுதான். ஆனால் இப்படி ஒவ்வாமை கொள்கிறவர்கள் நடைமுறையில் தங்களது மறுப்பை நிறுவ எந்தவொரு சான்றாதாரத்தையும் முன்வைக்க முடியாதவர்களாகவே இருக்கின்றனர்.

சமூகம் என்கிற பெரும்பரப்புக்குள் தான் யார்? அந்த பெரும்பரப்பு தனக்குள் எவ்வாறு வினையாற்றுகிறது? சகமனிதரோடு தனக்கிருக்கும் உறவு சமத்துவமானதா? மேல்கீழ் படிநிலை கொண்டதா? அசமத்துவம் நிலவுகிறதென்றால் அதற்கான அடிப்படை என்ன? அந்த அசமத்துவத்தை ஏற்றுக்கொள்ள அல்லது நிராகரிக்கவும் எதிர்க்கவும் உள்ள நியாயங்கள் என்னென்ன என்று மனித மனம் ஓயாமல் தனக்குள் ஓர் உள்முகத்தேடலை நடத்திக் கொண்டேயிருக்கிறது. இந்தத் தேடல் குறித்த பதிவுகளே கலை இலக்கியப் படைப்புகளாக வெளிப்படுவதாகக் கருதுகிறேன்.

அப்படியானால் கலை இலக்கியம் குறித்த மதிப்பீடானது இந்த சமூகத்தைப் பற்றிய மதிப்பீட்டுக்கு நம்மை தவிர்க்கவியலாமல் இட்டுச்செல்கிறது. எனவே இங்கு சமூகம் என்னவாக இருக்கிறது என்பதிலிருந்தே எல்லாவற்றையும் தொடங்க வேண்டியிருக்கிறது.

இந்தியச் சமூகம் ஒன்றாக இல்லை. அது தீண்டப்படுவோர் இந்தியாவாகவும் தீண்டப்படாதோரின் இந்தியாவாகவும் இரண்டாகப் பிரிந்திருக்கிறது. பிரிந்திருக்கிறது என்றால் - அது வெறுமனே நிலவியல் ரீதியாக மட்டுமில்லாமல், வாழ்வின் எல்லா அம்சங்களிலும் இணக்கம் காணமுடியாதபடி பிரிந்திருக்கிறது. இந்தப் பிரிவினையை - இடைவெளியை இட்டுநிரப்ப எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளையும் உள்வாங்கிச் செரித்துவிட்டு காலத்திற்கேற்ற ரூபங்களில் மீண்டும் மீண்டும் நீடித்து நிற்பதாயிருக்கிறது இந்தப் பிரிவினை என்று அம்பேத்கருக்கும் முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது.

தீட்டு-புனிதம், நல்லது-கெட்டது, உயர்வு-தாழ்வு என்பதற்கான விளக்கங்கள் மாறிக்கொண்டே வந்தாலும் ஒவ்வொரு காலத்திலும் ஏதோ ஒன்று புனிதமாக- நல்லதாக- உயர்வாக கட்டமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிற நிலையில் மாற்றமேதுமில்லை. எனவேதான் தீண்டாமையும் ஒடுக்குமுறையும் நீடிக்கிறது. நிலவும் இந்த உண்மைக்கு யார் அல்லது எது மூலகாரணமாய் அமைந்திருக்கக்கூடும் என்று தேடப் புகுந்தால் அது ஆதிக்க சாதியினரை குற்றம் சாட்டக்கூடும் என்ற பதற்றத்தில் இந்தியாவை ஒரே நாடாக - ஒன்றுபட்டு வாழும் ஒரு சமூகமாக முன்னிறுத்துகிற மோசடி நடந்துவருகிறது. இந்த மோசடிக்கு சற்றும் குறையாததுதான் மொழிவழி தேசியமும்.

ஆகவே இந்திய, தமிழ்ச்சமூகத்தின் மனநிலை நெடுங்காலமாகவே ஒடுக்குகிற அல்லது ஒடுங்குகிற நிலைக்குதான் பழக்கப்படுத்தப்பட்டுள்ளது. சகமனிதனை சமமாக கருதுகிற மேன்மையான குணம் அதற்குத் தெரியாத ஒன்று. சமத்துவவுணர்வை ஒருபோதும் துய்த்திராத அந்த மனம்- அதனாலேயே சுதந்திரவுணர்வையும் துய்க்கமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. தத்தமது சாதியின் புனிதத்தைக் காப்பாற்றும் பொறுப்பு ஒவ்வொரு தனிமனிதனின் பொறுப்புகளிலும் தலையாயதாய் நிறுவப்பட்டிருப்பதால் எப்போதும் ஒரு தற்காப்பு மனநிலையிலேயே வாழ வேண்டியராயிருக்கிறார். சற்று அயர்ந்தாலும் மோசம் போய்விடுவோம் என்ற பீதியில் உறைந்துகிடக்கும் ஒருவரது மனநிலை அழுத்தம் தாளாது நிலைபிறழ்ந்து தம்மைச் சுற்றி பாதுகாப்பு அரண்களை நிறுவிக்கொள்ள வேண்டியிருக்கிறது. மாற்றாரைத் தடுக்க அமைக்கப்பட்ட இந்த தடுப்பரணுக்குள் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு தனிமனிதரும் ஒரு கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான் இன்றைய நிலை.

எனவே இந்திய- தமிழ்ச் சமூகத்தின் மனம், பாரபட்சங்களையும் புறக்கணிப்பையும் அநீதியாக பார்ப்பதற்குத் துணிவதில்லை. அம்மாதிரியான அநீதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்வதும் அதை சகமனிதர்மீது நிகழ்த்திப் பார்க்கத் துணிவதாயுமே இருக்கிறது. அசமத்துவத்தை, ஒடுக்குமுறையை இயல்பானதாக ஏற்றுக்கொள்கிற இந்த மனநிலைதான் - சமூக ஒடுக்குமுறைக்கு ஆளாகிற- அதன் காரணமாகவே அரசியல், பொருளாதார, பண்பாட்டுத்தளங்களிலும் ஒடுக்கப்படுகிற- தலித்துகளையும்கூட, தமக்குள் உட்சாதிப் பிளவுகளை பேணுவதிலும் தம்வீட்டுப் பெண்களை ஒடுக்குவதிலும், இழிவாக- தம்மிலும் கீழானவர்களாகக் கருதுவதற்கு நெட்டித்தள்ளுகிறது.

இந்தப் பின்புலத்தோடு கலைஇலக்கியத்தை மதிப்பீடு செய்யப் புகுந்தால் அங்கும் அசமத்துவமான பிரதிநிதித்துவமும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் ஊடாடி வழிநடத்தும் சாதிய/ பால்நிலைச் சாய்மானமும் வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். நிலவும் ஏற்றத்தாழ்வான நிலைகளை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொண்ட ஒரு சமூகத்தின் அங்கத்தினராய் இருக்கிற ஒருவர் தம் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து எதை- ஏன்- எப்படி- எதற்காக வெளிப்படுத்த முன்வருகிறார் என்ற தொடக்கப் புள்ளியிலேயே அவரது சாய்மானமும் உள்ளுறையாக இணைந்துவிடுகிறது. தன் படைப்புமனதை வெளிப்படுத்த அவர் வாய்மொழி மரபைத் தெரிவு செய்கிறாரா அல்லது எழுத்துவழியாக வெளிப்படுத்துகிறாரா என்பதிலும்கூட அவரது சாய்மானம் இணைந்தே இருக்கிறது. அதாவது இந்த நாட்டில் கல்வி கற்கும் உரிமை யாருக்கு எப்போது கிடைத்தது அல்லது கிடைக்கவில்லை என்பதோடு அது தொடர்புடையதாய் அமைகிறது.

ஆனால் இப்படி சொல்கிறபோது சிலர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாய் தவ்விக் குதிக்கிறார்கள். இலக்கியமும் கலைகளும் எல்லோருக்கும் பொதுவானது என்று கழுத்துநரம்பு புடைக்க கர்ஜிக்கிறார்கள். அப்படி இருந்தால் சரிதான் நண்பர்களே. ஆனால் இல்லை என்பதுதானே எதார்த்தம்? நிலம் நீர் காற்று ஆகாயம் பணம் காசு பண்டம் அனைத்தையும் சாதிப்பாஷாணத்தில் தோய்த்து தொங்கவிட்டிருக்கிற இந்த சமூகத்தில் இலக்கியம் மட்டும் எப்படி எல்லோருக்கும் பொதுவாய் இருக்கமுடியும் என்ற எளிய கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை. இளமையில் கல் என்ற அவ்வையின் மரபும், எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்ற வள்ளுவர் மரபும் அழித்தொழிக்கப்பட்டு கற்கும் உரிமையை சில சாதிகளின் ஆண்களுக்கு மட்டுமே வார்த்துக்கொடுக்கும் நிலை உருவாகி நிலைத்து நின்றுவிட்ட இச்சமூகத்தில் கல்வியோடு மிகநேரடியாக தொடர்பு கொண்டிருக்கும் கலையும் இலக்கியமும் எல்லாவற்றிலிருந்தும் விலகி சுயம்புவாக எப்படி வெளிப்பட முடியும்?

மொழி எல்லோருக்கும் பொதுவென்றால் ஏன் சமஸ்கிருதம் மட்டும் தேவபாஷையாக அறிவிக்கப்பட்டது? நமஸ்காரம் என்ற சமஸ்கிருதச் சொல்லை பொற்கொல்லர்கள் உச்சரிக்கக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசிடம் மனுபோட்டு தடையுத்தரவு பெறப்பட்டது எதனால்? இழிசனர் வழக்கென்ற பதம் எதன்பொருட்டு உருவானது? இசை புனிதமென்றால் இசைக்கருவிகளும் புனிதம்தானே? எனில் ஏன் திருவையாற்றில் ‘நன்னா வாசிக்கிறவாள்’ ஒருத்தரும் பறையைத் தொடுவதில்லை? இந்தியாவின் தமிழகத்தின் செவ்வியல் மரபின் கலை வடிவங்களாக முன்னிறுத்தப்படுபவை எந்த சாதிக்குரியவை? கலாச்சாரப் பரிவர்த்தனைகளின் பெயரால் இந்தியாவிலிருந்து பிறநாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறவை இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களுக்குரியவையா? பார்ப்பனர்களின் அனைத்தும் பார்ப்பனர்களின் கைச்சரக்குகள் அனைத்தும் தேசிய கலைவடிவங்களாக அந்தஸ்துப்படுத்தப்படுவதும், பார்ப்பனரல்லாதவர்களின் கலைவடிவங்களை ‘எதினிக்’ அல்லது‘ ‘ஃபோ(ல்)க்’ என்றோ வகைப்படுத்தப்படுவதும் தற்செயலான நிகழ்வுகளா?

இப்படி எல்லாமே சாதியாகத்தான் இருக்கிறது. இதற்குள் இருக்கிற படைப்பாளியும் சாதிவயப்பட்டவராகவே இருக்கிறார். அவர் அறிந்தவற்றை தன் படைப்பாக வெளிப்படுத்துகிறார் என்றால் அவர் அறிந்திருப்பதெல்லாம் அவரது சாதி கற்றுக் கொடுத்ததைத்தான். அவரவர் சாதி அவரவருக்கு விதித்த வரம்புகளை மீறி எழுதவும் பேசவும் ஒருவர் இயல்பாக முயற்சிப்பதில்லை. (மிகுந்த அரசியல் விருப்புறுதி கொண்ட விதிவிலக்கான சிலரை இங்கே பொருட்படுத்தி பேசவேண்டியிருந்தாலும் அவர்கள் மிகவும் சொற்பமானவர்கள் என்றே குறித்துக்கொள்ள வேண்டும்.)

தன் சாதி பிறரை என்னவாகப் பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்திருக்கிறதோ அந்த பொதுப்புத்தியிலிருந்து தன்னை ரத்தம் சொட்டச் சொட்ட அறுத்துக்கொண்டு வெளியேறாமல்- அப்படி அறுத்துக்கொள்ளும்போது ஏற்படும் வலியையும் வாதையையும் வாய்விட்டுக் கதறி வெளிப்படுத்தத் துணியாமல்- நிலவும் சூழலை நியாயப்படுத்துகிற ஒருவரிடமிருந்து- அவர் கொம்பாதி கொம்பு படைப்பாளியாயிருந்தாலும் அவரிடமிருந்து வெளிப்படுகிற படைப்புகளை- அவை எத்தனை உன்னதமானதென்று உலகம் கொண்டாடினாலும் - அவை காகிதத்திற்குக் கேடானது என்பதே என் கருத்து.

எனவே இதுவரையான கலைஇலக்கியப் படைப்புகளை வாசிப்புக்கு உட்படுத்துகிற ஒரு தலித் மனம் அவற்றை தன் அகநிலை சார்ந்தே அணுகுகிறது. அவற்றில் சித்தரிக்கப்பட்டுள்ள வாழ்க்கை எவருடையது? அதில் தலித்துகள் இடம் பெற்றிருக்கிறார்களா இல்லையா? இடம் பெற்றுள்ளனர் என்றால் எவ்வாறு? என்றெல்லாம் அது படைப்புகளை பரிசீலிக்கிறது. பொத்தாம்பொதுவானதென்று நீங்கள் அறிவித்துக் கொண்ட எல்லாமே போலியானவை. அவை உங்கள் சாதிப் பெருமிதங்களை- சகமனிதரை ஒடுக்குவதற்கான நியாயங்களை- ஒடுங்கிக்கிடக்க வேண்டியதன் அவசியத்தைப் போதிக்கவே கைக்கூலிச் சரக்குகளாக சந்தைக்கு வந்துள்ளன என்று கடைசியில் அறிவிக்க வேண்டியதாயிற்று. இப்படி உருவானதுதான் தலித் விமர்சன மரபு.

3.இதுவரையான கலைஇலக்கியங்கள் மீதான விமர்சனத்தோடு தலித் மனம் நிறைவடைந்துவிடவில்லை. அது தன் சொந்த வாழ்க்கையை தன் சொந்த மொழியில் படைக்கத் தொடங்கியது. எழுத்தறியும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாய்மொழி மரபிலும் நிகழ்த்துக்கலைகளிலும் தமது வளமார்ந்த படைப்புமனத்தை தக்கவைத்துக் கொண்டிருந்த தலித்துகளிடமிருந்து வெளிப்பட்ட படைப்புகள் இதுவரை இந்திய சமூகத்தின் வாசகப்பரப்பு அறியாதவை. வாய்மொழி மரபும் எழுத்துமரபும் இணைந்த - கூகி வாங் தியாங்கோ சொல்கிற ‘ஓரேச்சர்’ மாதிரியான ஒரு புதுவகைமையான தலித் படைப்புகளில் புதைந்திருந்த உலகமும் அதை வெளிப்படுத்திய மொழியும் திடுமென எங்கிருந்தோ உதித்த அல்லது குதித்த மாந்திரீக வஸ்துவல்ல. ரவிதாசர், சொக்கமேளா, ஜோதிராவ் பூலே, டேனியல் என்று சாதியடுக்குமுறைக்கு எதிரான ஒரு நீண்ட பாரம்பரியத்தில் உருவாகி அது வளர்ந்திருக்கிறது.

உண்மையில் தலித்துகள் புதிதாக எதையும் படைக்கவில்லை. தங்களது வாழ்வை பாசாங்கின்றி வெளிப்படுத்துகிறார்கள், அவ்வளவுதான். தீட்டு தோஷம் என்கிற கெடுங்குணங்களால் வழிநடத்தப்படும் சாதிய மனம் தலித்துகளின் வாழ்வை அருகிருந்து நேரில் பார்க்கத் தவறிவிட்டது இத்தனைக் காலமும். இப்போது இலக்கியப் படைப்புகள் வழியே தரிசிக்கிறபோது புதியனவாக அவை தெரிவதில் வியப்பொன்றுமில்லை. இவ்வளவு காலமும் எட்டிப் பார்க்காமல் இருந்த தன் சாதியமனம் குறித்து குற்றவுணர்வு கொள்வதற்குப் பதிலாக, இலக்கியத்திற்குள் சாதியா? இலக்கியத்தில் இடஒதுக்கீடா? என்று பொருமத் தொடங்கினார்கள். மராட்டியத்தில் தொடங்கிய இந்த பொருமல் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

தலித் இலக்கியம் என்று ஒன்று இருந்தால், மற்ற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனியாக இலக்கியம் இருக்கிறதா என்று அப்போது ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மிகுந்த பொறுப்புணர்வோடு தலித் இலக்கியத்தின் முன்னோடிகள் பாகுராவ் பாகுல், அர்ஜூன் டாங்ளே போன்றவர்கள் பதிலளித்துவிட்டார்கள். தலித் இலக்கியம் என்பது என்ன, தனியாக அது உருவாக வேண்டிய அவசியம் என்ன வந்தது, தலித் இலக்கியத்தின் நோக்கம் எவையெவை என்றெல்லாம் ஒருபாடு விளக்கம் கொடுக்கப்பட்டாகிவிட்டது அப்போதே. ஆனால் நாற்பது வருடத்துக்கு முந்தைய அரதப் பழசான அந்த கேள்விகளைத் தூக்கிக்கொண்டு - அவை புத்தம்புதிதாக தம் சொந்த மூளையில் (இப்பகுதி நகைச்சுவைக்கானதல்ல) உதித்தவை என்ற பாவனையோடு இன்றும் சிலர் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமீ’ என்று முதல் மரியாதை வீராசாமிபோல அலைந்தால் நாமென்ன செய்வது? ஆனாலும் இந்தக் கேள்வியை தூக்கிக்கொண்டு திரிய இமையம், சோ.தருமன் போன்று யாராவது 2008லும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், சம்பளம் இல்லாத போர்ட்டர்கள்.

இன்னும் சா.கந்தசாமி வெளிப்படையாகவே கேட்கிறார்- தலித் இலக்கியம்னு ஒன்னு இருந்தா செட்டியார் இலக்கியம்னு, நாடார் இலக்கியம்னு, வெள்ளாளர் இலக்கியம்னு இருக்குதா? என்று. அய்யா சாதி கடந்த சமத்துவத் திலகமே, நீங்களெல்லாம் சேர்ந்து இலக்கியத்தை அந்த லட்சணத்தில்தான் சாதிவாரியாக சீரழித்து வைத்திருக்கிறீர்கள், அதை அம்பலப்படுத்தி சரிப்படுத்தத்தான் தலித் இலக்கியம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது என்று நாம் மெத்தப் பணிவோடு சொல்ல வேண்டியிருக்கிறது.

சாதியடுக்குமுறைக்கு பணிந்துபோவது, சாதியடுக்குமுறையை எதிர்த்து நிற்பது என்ற இருவகைப் பண்புகள் தலித்தகளிடம் காணப்படுகிறது. அதில் பணிந்துபோகும் குணத்தை வலியுறுத்தவே தலித்தல்லாதவர்களது படைப்பின் நோக்கமாய் இருந்துவருகிறது. ஆனால் தலித்துகளின் மீறல் குணத்தை மேலும் வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டதே அசலான தலித் படைப்புகள். உடலுழைப்பை இழிவாய் எண்ணும் ஆதிக்கசாதி மனோபாவத்தை வெளிப்படுத்துவது பிறரது படைப்புகளென்றால், உழைக்கும் மக்களாகிய தலித்துகளின் படைப்புகள் உழைப்பைக் கொண்டாடுவதாய் இருக்கும்.

4.பொத்தாம் பொதுவான இலக்கியம் என்கிற மோசடியை அம்பலப்படுத்தி தனித்துவமான அழகியலையும் உட்பொருளையும் வடிவஒழுங்கையும் நிறுவிக் கொண்டுள்ள தலித் இலக்கியம் உள்வயமான சில கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அது இந்தியாவில் இருக்கிற 1088 தலித் சாதிகளின் - அல்லது தமிழ்நாட்டிலிருக்கிற 77 சாதிகளின் குரலையும் பிரதிநிதித்துவம் செய்கிறதா? ஆம் என்றால், எவ்வாறு? இல்லையென்றால், ஏன்? இப்படிக் கேட்டதுமே, தலித் என்றால் தலித்து தான், இதில் என்ன பறையன் பள்ளன் சக்கிலி என்ற பாகுபாடு? என்று சாமார்த்தியமாக எதிர்கேள்வி வைக்கப்படுகிறது. இது சமதர்மி சா.கந்தசாமியிடம் இரவல் பெற்ற குரல்தான். (ஒருவேளை, இதைத்தான் சிலர் கூடுவிட்டு கூடுபாய்தல் என்கிறார்களோ?) அல்லது, இலக்கியத்தின் புனிதத்தைக் கெடுத்துவிடாதீர்கள் என்ற இலக்கிய உபாசகர்கள் வெற்றிலைக்காம்பை கிள்ளிக்கொண்டே வைத்த கோரிக்கையின் மறுபிரதிதான்.

இந்தியர் என்ற பேரடையாளத்தின் பலன்கள் பார்ப்பனர்களுக்கும், தமிழர் என்ற பேரடையாளம் பார்ப்பனரல்லாத உயர்சாதியினருக்கும் பயன்பட்டதைப்போல தலித் என்ற அடையாளத்தின் பலன்கள் ஒருசில தலித் சாதிகளுக்கு மட்டுமே கிடைத்துக்கொண்டிருக்கிறதா? என்று சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டுத் தளங்களில் எழும் இந்தக் கேள்விக்கான பதில், தலித் இலக்கியத்திற்கும் பொருந்தும். உண்மையில் தலித் இலக்கியம் என்ற பெயரால் வெளிப்படும் வாழ்வு எவருடையது என்ற கேள்வியானது, வெளியை ஜனநாயகப்படுத்துவதை உட்கிடக்கையாகக் கொண்டது. அதாவது, அசமத்துமான சமூகச்சூழலை சமத்துவமுடையதாய் மாற்றியமைப்பதை நோக்கமாய் கொண்டுள்ள தலித் இலக்கியமும் தலித் இயக்கமும், தாமேயொரு முன்னுதாரணமாய் மாறிக் காட்ட வேண்டியுள்ளது. தலித் என்ற பொது அடையாளத்தை மெய்யாகவே தமது பொது அடையாளமாக தலித்துகள் அனைவரும் உணரும்படியாக செயல்வழியே நிறுவ வேண்டியுள்ளது. அதன்பொருட்டு அது தனக்குள்ளிருக்கும் உள்முரண்களை தீர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. (தீர்த்துக்கட்டுவதல்ல)

5.தலித்துகளில் மிகவும் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருக்கும் அருந்ததியர்களது வாழ்வுரிமையானது எல்லா முனைகளிலும் கீழ்ப்படுத்தப்பட்டிருக்கிறது. கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல்தொழிலை இழந்து மலமள்ளுகிறவர்களாகவும் துப்புரவுப் பணியாளர்களாகவும் சீரழிக்கப்பட்டுள்ளார்கள். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தலித்துகளை ஈடேற்றியதாய் சொல்லிக் கொண்டிருக்கும் சிலர், அருந்தியர்களை மலமள்ளிகளாக மாற்றியது அந்த ஆட்சிதான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
நவீன விஞ்ஞான தொழில்நுட்பங்கள் எவ்வளவோ வளர்ந்துவிட்ட நிலையிலும் கையால் மலமள்ளும் கொடுமையிலிருந்து அருந்ததியர்களை விடுவிப்பதற்கான தொழில்நுட்பங்கள் இங்கே வர மறுக்கின்றன. 1993ம் ஆண்டிலேயே, கையால் மலமள்ளுதல் தடை செய்யப்பட்டுவிட்டாலும், இன்னும் 13 லட்சம்பேர் இத்தொழிலில் பலவந்தமாய் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அருந்ததியர்களுக்கு கல்வியளித்து ஆற்றல்படுத்தும் முயற்சி 1920களிலேயே திரு.எல்.சி.குருசாமி போன்றவர்களால் தொடங்கப்பட்டிருந்தாலும் அந்த நோக்கு எட்டப்படாததாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு என்ற நியாயமான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வால்மீகி பஞ்சாயத் என்ற அமைப்பின் கோரிக்கையாகத் தோன்றி பின் நாடெங்கும் பரவியது இம்முழக்கம். பஞ்சாபில் 1975 ஆம் ஆண்டிலிருந்தும், தொடர்ந்து அரியானாவிலும், 01.04.2000 முதல் ஆந்திரத்திலும் இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக ஆதிக்கசாதிகள் என்னென்ன வாதங்களை முன்வைப்பார்களோ அதே வாதங்களை இரவல் வாங்கி ஆந்திரத்து மாலாக்கள் வழக்காடினர். உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு ஆந்திரத்தில் மட்டுமல்லாது அதற்கும் முன்பாகவே அமலில் இருந்த பஞ்சாப், அரியானாவையும் பாதித்தது. இப்படியாக 5.11.2004 உடன் உள்ஒதுக்கீடு கோரிக்கை முடிவுக்கு வந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

ஆனால் உள்ஒதுக்கீடு என்பது அருந்ததியர்களின் மிக அடிப்படையான கோரிக்கை. அதை நீதிமன்ற அல்லது சட்டவிளக்கங்கள் வழியாக புரிந்துகொள்ள முடியாது. சமூகநீதி, பாரபட்சமான நியாயம் என்ற அரசியல் நிலைபாட்டிலிருந்தே விளங்கிக் கொள்ள முடியும். தவிரவும் இது சாத்தியம் தான் என்பதற்கு குஜ்ஜார் மக்களின் போராட்டமும் இப்போது அவர்கள் கோரிக்கை ஏற்கப்பட்டிருப்பதும் சமீபத்திய உதாரணங்கள். தமிழகத்தில் ஓபிசி இடஒதுக்கீட்டில் எம்பிசி என்று புதிதாக வகைப்படுத்தி 20 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்ற முன்னுதாரணம் இருக்கிறது.

ஓபிசிக்குள் சாத்தியம் என்றால் தலித்துகளுக்குள்ளும் சாத்தியம்தான் என்ற புரிதலில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனது தேர்தல் அறிக்கையொன்றில் அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ஆதரித்திருந்தது. ஆனாலும் அது தன் நிலைபாட்டில் உறுதியாயில்லை. புதிய தமிழகம் போலவே விடுதலை சிறுத்தைகள் அமைப்பும் உள் ஒதுக்கீட்டை எதிர்க்கின்றன. சமூக வளங்களை தலித்துகளுடன் பகிர்ந்துகொள்ள மறுக்கிற ஆதிக்கசாதி மனோபாவத்தை இந்த அமைப்புகள் கைவிட வேண்டும் எனபது என் விருப்பம்.
6.மனித மாண்புகளுடன் வாழ்வதில் பேரார்வம் கொண்டிருக்கிற அருந்ததிய மக்களை தமிழிலக்கியம் பெரிதாக கவனப்படுத்திவிடவில்லை. ஒருசில படைப்புகளிலும் அவர்கள் இழிவாகவே சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். ‘ஒரு மனிதன் தன் வயிற்றைச் சுத்தம் செய்ய மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால் மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்பவேண்டிய கொடுமை அருந்ததியர்களுக்கு நேர்ந்திருக்கிறது’ என்ற தோழர்.ஜக்கையனின் துயரம் பொங்கும் வார்த்தைகளை உள்வாங்காத இந்த சமூகத்தின் மீது பீயைத்தான் கரைத்து ஊற்ற வேண்டியிருக்கிறது.

(2008 ஜூலை 27 அன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட மாநாட்டையொட்டி நடைபெற்ற ‘அருந்ததியர் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கருத்தரங்கின் தலைமையுரை) 

நன்றி - கீற்று

தலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து



சில நாட்களுக்கு முன் நடந்த தலித் தொடர்பான கூட்டமொன்றில் நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தபோது "இக்கூட்டத்தில் வழங்கப்படும் சாப்பாட்டில் மாட்டுக்கறியெல்லாம் இல்லையே ! அதுவும் தலித் கூட்டத்தில் மாட்டுக்கறி இல்லாமல் சாப்பாடா?" என்றார். வேறொரு தருணத்தில் எழுத்திலும், பேச்சிலும் கொச்சையான சொற்களை கையாளும் எழுத்தாளர் ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது "அந்த எழுத்தாளர் தலித் அதனால் அவர் அப்படி பேசுவதுதானே சரியாக இருக்க முடியும்" என்றார்.

     மாட்டுக்கறியும், கொச்சையாக பேசுவதும் தலித்துகளின் அடையாளம் என்பது இதன் பொருள். தலித் பிரச்சனையில் கரிசனம் காட்ட விரும்பும் இடது சாரிகள் குறித்து ஒரேவிதமான கருத்தினையே வெளிப்படுத்துகின்றனர். குடி, அழுக்கு போன்றவற்றையும் தலித்துகளின் அடையாளமாக பேசமுனைந்த அறிவுஜீவிகளும் இங்கிருந்தனர்.

ஆனால் இது குறித்து தலித் மக்கள் நினைப்பது என்ன? இவை தலித் அடையாளங்கள் தானா? என்பதே இக்கட்டுரை எழுப்ப விரும்பும் வினா. ஒருவகையில் சொல்லப்படும் இந்த அடையாளங்கள் யதார்த்தத்தில் நிலவுவைதான். சாதிரீதியாக தொழிலும், இருப்பிடமும், வாழ்முறையும் பாகுபடுத்தப்பட்டு திணிக்கப்பட்டுள்ளது. தலித்து களுக்கென்று ஒதுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து மாறுபடுவது சாதி மீறலாகும். அதை சாதிசமூகம் அனுமதிப்பதில்லை. விரும்பும் தொழிலை, உணர்வை, வாழ்முறையை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கான சுதந்திரத்தை சாத்தியப்படுத்துவதே சாதிய மறுப்பாக இருக்க முடியும்.

எனில் தலித்துகளிடம் நிலவும் இன்றைய அடையாளங்களை அவர்களுக்கேயுரியது என்று சொல்வது சாதி மறுப்பாகுமா? மாட்டுக்கறியோ, பறையடிப்பதோ அவர்களின் விருப்பமாக இருக்குமானால் அது பிரச்சினையில்லை. ஆனால் அதை அவர்களின் அடையாளம் என்று சொல்வதன் மூலம் இச்சமூகத்தின் பிற தளங்களில் அவர்களின் பங்களிப்பு மறுக்கப்படுகிறது. பொதுத்தளத்தின் மீதான அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. உண்மையில் தலித் மக்கள் அவர்களின் இன்றைய அடையாளங் களிலிருந்து விடுபட்டு சுயமரியாதை மிக்க வாழ்வை அடைய விரும்புகின்றனர். ஆனால் அத்தகைய புரிதலை உள்வாங்கி செயற்படும் அமைப்புகளாக களமும், அரசியல் தளமும் இல்லையென்பது வருத்தமே.    
இப்புரிதலை நம் சூழலில் பெறாமல் போனதன் காரணம் என்ன? தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும், கடந்த கால இயக்கங்களின் தொடர்ச்சியிலிருந்தும் தலித் அடையாளத்தை யாரும் உருவாக்கிக் கொள்ளவில்லை.

கடந்த கால தலித் அமைப்புகளும், தலைவர்களும் பெரும் திரட்சியை சாத்தியப்படுத்தாவிட்டாலுங்கூட இத்தகைய புரிதலிலிருந்து செயற்பட்டனர். சாதியும், சாதிசார்ந்த கீழான அடையாளங்களும் தலித் மக்கள் மீது சுமத்தப்பட்டதன் தொடர்ச்சியாகவே அவர்களுக்கு உணவு, தொழில் இருப்பிடம் போன்றவை ஒதுக்கப்பட்டன. எனவே திணிக்கப்பட்ட தொழிலை, உணவை, மறுப்பதும். மறுக்கப்பட்ட அடையாளங்களை தங்களுக்குரியதாக பேசி மீட்டெடுத்தும் செயற்பட்டனர். அத்தகைய முன்னோடி முயற்சிகள் அறியப்படாமல் போனதின் அடிப்படையான பின்னணி எதுவெனில் தலித் மக்களின் போராட்டம்.

இயக்க வரலாறு போன்றவற்றை யாரும் அறிய மறுத்ததே ஆகும். ஒவ்வொரு இயக்கமும் தங்களின் வருகைக்குப் பின்னர்தான் இம்மக்கள் கண்விழித்தனர். அதுகாறும் அடிமை நிலையிலேயே இருந்ததாக கருதுவதும் இதனால்தான் ஆனால் இத்தகைய எண்ணங்களை மறுக்கும் பதிவுகள் இப்போது எழுத்துகளாக வந்துக் கொண்டிருக்கின்றன. அத்தகைய பதிவுகள் குறித்து நிலவும் மௌனத்தை கடக்க இக்கட்டுரை முயற்சிக்கிறது.

தலித் எழுத்து, வரலாறு, பண்பாடு என்று நிலவி வரும் கருத்துக்களிலிருந்து முற்றிலும் விலகிய தலித் எழுத்தை அண்மையில் வாசிக்க முடிந்தது. டி.எம். உமர் ஃபாரூக் என்றழைக்கப்படும் டி.எம். மணி என்ற தலித் தலைவர் எழுதிய நூல்களே அவை. 1960கள் இறுதி தொடங்கி தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரங்களில் இயற்றப்பட்ட நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் அவர். அமைப்பாக நின்று இப்பகுதி கிராமங்களில் இயங்கியபோது எற்பட்ட அனுபவங்களையும், அதன் வாயிலாக பெற்றுக் கொண்ட கருத்தியல்களையும் 'சாதி ஒழிந்தது' 'செந்தமிழ் நாட்டு சேரிகள்' என்னும் இரண்டு நூல்களாக எழுதியுள்ளார்.

சாதாரண நடைமுறையாகி விட்ட தலித்துகளின் இழிவாழ்வு. அதற்கு எதிரான தொடர் போராட்டங்கள், சளைக்காத அர்ப்பணிப்பு என்று இயங்கியதால் தலித் மக்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களைச் சொல்வது இந்நூல்கள் 30 ஆண்டுகால ஆவணமாய் மாறிநிற்கின்றன. தலித்துகள் குறித்த பழமையான சித்தரிப்புகளோடு முரண்படாத எழுத்துக்களே 'தலித்வாழ்வாக' மாறிவிட்ட சூழலில் இந்நூல்கள் வாசகர்களுக்கு வேறொரு உலகை காட்டுகின்றன. இவ்வாறு காட்டப்படும் இப்பதிவுகளே எதார்த்தமானவை. தான் இழிவு படுத்தப்பட்டதை இப்பதிவுகள் மறைக்கிறது. என்பது இதன் பொருளல்ல, 'எதார்த்தமாகி விட்ட இழிவுகளுக்கு எதிரான போராட்டங்களையும் அதில் பெற்ற வெற்றிகளையும் இவை சொல்கின்றன என்பதே தனித்துவத்திற்கு காரணமாகின்றன'

இழிவுகளை மறுத்து, மறுக்கப்பட்ட கல்வி உள்ளிட்ட தன்மான வாழ்வுக்கான அம்சங்களைப் பெற முயற்சிக்கிற அப்போராட்டங்கள் சாதி இழிவுகளை சுயமானதாக கருதுவதில்லை இவ்விடத்தில் சாதி தங்கள் மீது திணிக்கப்பட்டவை தானே ஒழிய 'விரும்பி' ஏற்றக் கொண்டவை அல்ல என்னும் புதிய உள்ளடக்கத் தினையும் அவர்கள் உருவாக்குகின்றனர். அதனால்தான் இழிவை சுமத்துவதைக் காட்டிலும், அதற்கு எதிரான போராட்டத்தில் கடுமையாக நடந்து கொள்கின்றனர் ஆதிக்க வகுப்பினர். ஆனால் பெறவிருக்கும் விடுதலையுணர்வுகளுக்கு முன்னால் போராட்டத்தின் வலி தலித்துகளுக்கு லேசாகிப்போகின்றன. தலித் விடுதலைக் கருத்தியலுக்கு இத்தகைய புரிதலை இந்நூல்கள் தருகின்றன.

     சுய அனுதாபத்தை வேண்டாமல் எழுதப்பட்ட தலித் எழுத்துக்கள் மிகக் குறைவே, தலித்துகள், தவிர்த்தமற்ற எழுத்தாளர்கள் யாரும் தங்கள் முன்னோர்களும். வகுப்பினரும் நடத்திய சாதிநடைமுறைகளைக் குறித்து வெளிப்படையாக எழுதவே இல்லை. ஆனால் உலகத்தின் எந்த பாகுபாடுகளுக்கும் குறையாத சாதிப்பாகுபாடு இங்குதான் நிலவுகிறது. இக்குறைகளைத் தவிர்த்த தலித் அனுபவத்தை தரக்கூடிய நூல்களாக இவை மாறியிருக்கின்றன. எழுதுவது இந்நூலாசிரியரின் முன்கூட்டிய திட்டமோ, முழுநேர வேலையோ, அல்ல, நான் இலக்கியவாதியோ எழுத்தாளனோ இல்லை என்று அறிவிக்கும் அவரின் அசாதாரண எழுத்து நடை இது.

அடர்ந்த காடு, இருண்ட சூழ்நிலை, உடைந்த மனம், பதுங்கி முடங்கிக் கிடக்கிற அற்பமான வாழ்க்கை ஏன் இந்த அவலம்? எதை வாரிக்கட்டிக் கொள்ள இப்படி அவதிப்படுகிறோம்? சொத்துசுகம் சேர்த்துக் கொள்ளவோ? இந்துக்களின் நிலபுலத்தில் மாடி மனையில் பங்கு கேட்கவோ? இல்லையே! நாங்களும் மனிதர்கள் தானே.. என்று விரிகிறது அந்த எட்டாம் வகுப்பு மட்டுமே படித்தவரின் எழுத்து.

முதல் நூலின் தொடர்ச்சிதான் இரண்டாம் நூல் அமைப்பு கட்டி போராட்டம் நடத்திய ஊரின் பெயர் சாதிப் பிரச்சினைக்கு எதிராக பேராடியவரின் பெயர் போன்றவற்றை தலைப்புகளாகக் கொண்டு சாதி ஒழிந்தது நூலில் கட்டுரைகளையும், செந்தமிழ் நாட்டு சேரிகள் நூலில் கட்டுரைகளையும் கொண்டுள்ளார். சில கட்டுரைகளை மட்டும் சமூகம் தொடர்பான தம் கருத்துக்களையும், விமர்சனங்களையும் எழுத பயன்படுத்தியிருக்கிறார். இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிகழ்விற்குள்ளும் டி.எம். மணி இருக்கிறார் நேரடி அனுபவத்திலிருந்து குறிப்பிடத்தக்க சம்பவங்களை மட்டும் தொகுத்து எழுதியுள்ளார்.

கும்பகோணம், திருப்பனந்தாள் வட்டாரம் காவிரிப்பாயும் நிலப் பரப்பு யாவும் கோவில்களுக்கும், மடங்களுக்கும் உரிமை. இந்நிலங்களில் உழைக்கும் பண்ணையடிமைகளாய் தலித்துகள் இருந்தனர். "உயர்ந்த மதில் சுவர்களுடைய மடம் ஒருபுறம்,. சிவன் கோவில் மறுபுறம்... ஒவ்வொரு சிவன் கோவிலுக்கும் ஒரு தலவரலாறு இருக்கும். இப்படி ஒவ்வொரு சேரிக்கும் ஒரு தல வரலாறு போல. இது கட்டுக் கதையல்ல, காலங்காலமாக சாட்சியங்களாய் இன்னும் சேரிகளில் உயிரோடு இருக்கிறார்கள்." என்பதை சொல்லும் டி.எம். மணி அவ்வாறான 'தலவரலாறு' ஒன்றையும் சொல்கிறார். திருலோகி என்னும் கிராமத்தின் சேரிப்பெண் ஆயிபொன்னு என்பவர் வழக்கமாக செல்லும் மணியக்காரர் பண்ணை சாணியள்ளும் வேலைக்கு 3 நாட்களாக செல்லவில்லை. காரணம் அவருக்கு பிரசவம் ஆகியிருந்தது. இருந்தும் மூன்றாம் நாளே பண்ணை வேலைக்குத் திரும்பினார், கோபத்தோடு அவளை திட்டித்தீர்த்த மணியக்காரர் அவளின் மேலாக்கை பிடித்துக் கொண்டு மூங்கில் கழியால் அடித்தார். பண்ணையாரின் 'மண்ணான' சேரியிலிருக்கும் அவரின் குடிசையில்யாரும் நுழையாதவாறு வேலியும் வைத்தார்.

ஆயிப்பொன்னுவின் கணவரையும் பண்ணைக்கு வரும்படி சொல்லி அனுப்பினார். கணவனுக்கு நேரவிருக்கும் கதி, தனக்கு ஏற்பட்ட அவமானம் இரண்டும் சேர்ந்து இரண்டு வயதான தன் மூத்த மகன் மணிக்குஞ்சுவை பிறந்த குழந்தைக்கு காவல் வைத்துவிட்டு கூரையிலேயே தூக்குமாட்டி செத்தார் ஆயிபொன்னு. இவைதவிர படி நிலை சாதியமைப்பில் மேலேயுள்ள எல்லா சாதிகளுக்கம் இழிவு வேலை செய்யவேண்டிய நிலை டி.எம்.மணி விவரிப்பதைப் போல "இந்து வீட்டில் ஒருவர் இறந்து விட்டால். முன்னதாகச் சென்று வெட்டியான் சுடுகாட்டில் காத்திருக்க வேண்டும்.

பிணம் வருவதற்குள் சுடுகாட்டை சுத்தம் செய்து எரிபொருள் சேகரித்து விறகுக் கட்டைகளை அடியில்வைத்து அதன்மேலே விராட்டிகளை அடுக்கி அஸ்திவாரமிட்டு வைத்திருக்க வேண்டும். பிணம் சுடு காட்டிற்கு வரும்போது கட்டாயம் தயார்நிலையில் இருக்க வேண்டும். அடுத்து வண்ணான் செத்தவர் வீட்டிற்குச் சென்று மூங்கில் வெட்டிவந்து பாடைசெய்யும் பணியைச் செய்யவேண்டும். பிணம் தூக்கிச் செல்லும்போது. நோக்கர் கொம்பு ஊதியும், சேங்கண்டி அடித்தும் செல்லவேண்டும். பிணம் இறக்கும்போது வெட்டியான் விலகிக் கொள்ள வேண்டும். அவன் தீண்டாத சாதி அல்லவா? வண்ணானும் அம்பட்டரும் பாடையிலருந்து பிணத்தை எடுக்க வசதி செய்து கொடுக்க வேண்டும். இதற்குள் நாவிதர் கத்தியை எடுத்துக் கொண்டு கொள்ளிவைப்பவர் முடியைச் சிரைப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்.

இதில் யாராவது ஒருவர் கடமை தவறினால் அந்தக் கிராமத்தில் சிக்கல் ஏற்பட்டுவிடும். கடமை தவறிய வருக்கு எந்த மாதிரியான தண்டனை என்பது ஊரைப் பொறுத்து. சூழ்நிலையைப் பொறுத்தது" இவை கிராமங்களின் நிலை. இழிதொழில்களுக்கு எதிரான தலித்துகளின் போராட்டம் எந்தக் கிராமத்திலும் எளிதில் நடந்தேறிவிடவில்லை. பெரும் கலவரங்களை ஏற்றபடியே போராட்டங்கள் நடந்தன கலவரத்தோடு பிரச்சினை நிற்பதில்லை. ஏற்கனவே சொந்தமாக நிலமற்ற இம்மக்களுக்கு வேலை மறுப்பு, தானாகவே எரிவதைப் போல கொளுத்தப்படும் குடிசைகள், தாக்குதல், வழக்கு அலைக் கழிப்பு என்பவைகளாக நீடித்தன. இப்படியே முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள்.

இப்பகுதி அரசியல் கட்சிகளென்றால் தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், போன்றவை இருந்தன. கீழ்த்தஞ்சை மாவட்டம்போல கம்யூனிஸ்ட் கட்சி இப்பகுதியில் பரவலாகியிருக்கவில்லை. நக்சல்பாரி பாதையை ஆதரிக்கும் இடது சாரிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தலித்துகளிடம் தென்பட்டனர். பொதுவாக சுடு காட்டுப்பாதை போன்ற சிவில் உரிமைகளை வலியுறுத்தும் கம்யூனிஸ்ட்கள் சுடுகாட்டில் பிணம் புதைப்பதும் யார் என்பன போன்ற அழுத்தமான பார்வையை இன்று வரையிலும் பெறவில்லை.

சாத்திர இழிவு ஒழிப்புக்காக பாடுபட்ட திராவிடர் கழகம் அச்சாத்திரர்களால் தலித்துகள் மீது சுமத்தப்படும் இழிவுகளைக் கண்டித்து போராடிய வரலாற்றைப் பெறவில்லை. இந்நிலையில் இழிவு ஒழிப்பு போராட்டங்களை தலித்துகளே தனியாகவும் அமைப்பாகவும் நடத்தவேண்டிய நிலை. அப்படித் தான் தனித்துப் போராடியது நீலப்புலிகள் இயக்கம். இவ்வட்டாரத்தை ஒட்டி தென்னார்க்காடு அமைந்திருந்தமை சாதகமான அம்சமாய் இருந்தது. அப்பகுதியில் இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிப் பெற்றிருத்தார் எல். இளையபெருமாள்.

நீலப்புலிகளின் போராட்டத்திற்கு கைக்கொடுப்பவராக, காங்கிரஸில் இருந்த தலித்தலைவராக இவர் இருந்தார் இந்த இரண்டு நூல்களிலும் பல்வேறு கட்சிகளை, தலைவர்களை விமர்சித்து எழுதிச் செல்லும் டி.எம்.மணி மதிப்போடு 'தலைவர்'என்று விளிக்கிறார் என்றால் அவர் எல். இளையபெருமாள்தான் இதேபோல் வடஆர்காடு பகுதியிலும் இழிவு ஒழிப்புப் போராட்டங்களை குடியரசுக்கட்சி நடத்தியது தமிழகத்தின் பிறபகுதிகளைக் காட்டிலும் தலித்துகள் சற்றுமுன் கூட்டியே 'மேம்பாடு' பெற்றதற்கு இத்தகைய அரசியல் விழிப்புணர்ச்சியும் ஒரு காரணம் இப்பகுதியில் கிராமங்கள்தோறும் இவ்வகையான போராட்டங்களை தொகுக்கும்போது தலித் போராட்டத்தின் வலிமை உணரப்படும் கிராமங்களில் பெரும்பான்மை ஆதிக்கசாதியினருக்கு எதிராக நடத்தப்படும் சாதி மறுப்பு போராட்டங்கள் சாதாரணமானவை அல்ல. இவ்வாறான போராட்டங்களை தலித்சார்ந்து எழுதுவோரும்கூட அறியவில்லை. இப்போராட்ட வரலாற்றை ஏற்காமல் தலித் அடையாளத்தை "செஞ்" சோற்று கடனுக்காய் கம்யூனிஸ்டுகளிடம் விற்றுக் கொண்டிருக்கும் ஒருவர் கிராமங்களில் தலித் இயக்கங்களில் போராடிய துண்டா? என்று அண்மையில் எழுதியிருக்கிறார். போராட்ட வரலாற்றை பதிவுசெய்ய வாய்ப் பில்லாமல் போனதற்கு தலித்துகள் மட்டுந்தான் பொறுப்பா?

இழிவு ஒழிப்பு போராட்டங்களாகவே இப்போராட்டங்கள் நின்று போய் விடவில்லை. கிராமங்கள்தோறும் "கல்விப்பணிகள் நடந்து கொண்டிருந்தன ஊக்கத் தொகை, உதவித் தொகை, உயர்கல்வி நிதி, பகுதி நேரக்கல்வி, இப்படி ஏராளமான பட்டதாரி இளைஞர்கள் தொண்டாற்றிச் கொண்டிருந்தனர். சட்டப் பூர்வமாகவும். சாதுர்யமாகவும் சாதிக் கொடுமைக்கு எதிராகப் போராடி வந்தார்கள் இவ்வகை மாற்றங்கள் இழிவுமறுப்பு போராட்டங்கள் நடந்த மற்ற பகதிகளிலும் நடைபெற்றன. வடஆர்காட்டுப் பகுதியில் தொடங்கி நடத்தப்பட்ட இரவுப்பள்ளிகள் ஏராளம். தொடக்கம் முதலே தலித் தலைவர்கள் கல்வி மேம்பாட்டுக்காகப் பாடுபட்டனர்.

இத்தகைய செயற்பாடுகள் சாதிகுறித்த தனித்துவமான கருத்தியல்களை உருவாக்கிவிட்டன. அதாவது சாதி இழிவோடு இருந்தாலும் அந்த இழிவுதான் நம்முடைய காலகாலமான அடையாளம் என்ற பார்வை அவர்களிடம் இல்லை. அவ்வாறு கருதும்போதுதான் அதிலிருந்து விடுபடுவதற்கான நியாயம் உருவாகிறது. சாதியற்ற தளத்தில் இவர்களின் இடம் என்ன? எனும் கேள்வியும் எழுகிறது. அப்போது தான் சாதிக்கென்று பகுக்கப்பட்ட தொழில் உள்ளிட்ட அடையாளங்களை மறுத்துவிட்டு, மறுக்கப்பட்ட கல்விமேம்பாடு போன்ற சுயமரியாதைமிக்க அடையாளங்களை கையெடுக்கின்றனர். இம்மாற்றத்தின் கருத்தியல் வகிபாகம் என்ன? சாதிசார்ந்த அடையாளங்களை ஏற்பதை மறுத்து விரும்பும் தொழிலையும், அடையாளத்தையும் ஏற்பதே சாதிமறுப்பு என்பதாகிறது. தலித் தலைவர்களின் போராட்டம் இத்திசை நோக்கி இயங்கியிருக்கிறது.

பண்ணையின் விசுவாசியாக இருந்து பட்டினிகிடந்தே மடிந்த தாத்தா, அடிமைப்பட இன்னொரு பண்ணையைத்தேடி கிடைக்காமல் ஊர் ஊராய் கூலி வேலைக்கு அலைந்த தாய் தந்தை, ஆறாவது தலைமுறையாக அடிமை முறை வந்தபோது நீதிக்கட்சிக்கு ஓட்டுப் போடவில்லையென பண்ணையார் மாணிக்கம் பிள்ளையால் பறிக்கப்பட்ட வேலை என்ற குடும்பப் பின்னணியைக் கொண்ட டி.எம்.மணி யின் அப்பா ஒருமுறை ஈரத்துண்டை உலர்த்துவதற்காக தோளில் போடப்பட்ட போது மணியக்காரரை விட அவர் எத்துணை சிறந்த அறிவாளி. "அப்பா எவ்வளவு நாகரீகமானவர், அந்தக் காலத்திலேயே இலக்கணம் (நிகண்டு) படித்தவர். ராமாயணம், மகாபாரதம், அரப்பலிசதகம், குமரேச சதகம், சீவகசிந்தாமணி போன்ற நூல்களிலுள்ள பாடல்களை யெல்லாம் மனப் பாடமாகவேபாடுவார்" இதையெல்லாம் எந்த சூழ்நிலையில் அவர் படித்தார்.

இந்துக்களின் தெருவிலுள்ள பள்ளியில் நுழைய தீண்டாமை தடுத்ததால் வெளியே அரசமர நிழலில் அமர்ந்து படித்தவர். அந்தக் காலத்தில் முக்கியப் படிப்பான நிகண்டுகளைப் படிப்பதில் அவர் தேர்ந்தவர் தலித்துகளின் இழிவை மட்டும் சொல்ல விரும்பினோமென்றால் இத்தகைய ஆற்றல்களை யார் சொல்வது? தலித்துகளின் நிலவும் இழிவையே நிரந்தர அடையாளமாக தக்கவைப்பதில்தான் இன்றைய தலித் கலை, இலக்கிய முயற்சிகள் நிற்கின்றன. இந்நிலையை மாற்றும் கல்வி, பொருளாதாரம் குறித்த எவ்வித பார்வையும் செல்வாக்குப் பெற்றுள்ள தலித் இயக்கங்களுக்கு இல்லை. இந்நிலைமை சாதிமறுப்பதாக மாறுவதில்லை. இதை சார்ந்து டி.எம். மணி இந்நூல்களில் எழுதியுள்ள விமர்சனங்கள் முக்கியமானவையாகும் அவை "பறை எனப்படும் தப்பு ஒரு ஓசைக் கருவிதான் சேரியை ஒதுக்கினார்கள், அதற்காக தொழிலை ஒதுக்கினார்கள், தீண்டாமை பாராட்டி மனிதர்களை ஒதுக்கினார்கள். (அதன்படியே அவர்களுக்கென்று) இசையும் கலையும் ஒதுக்கப்படுகிறது.

நண்பர் கே.ஏ. குணசேகரன் போன்ற அறிவுஜீவிகளுக்கு நன்றாக தப்பு அடிக்கத்தொரியும் என்பதற்காக அதையே இசையாகத் தலையில் கட்டுகிறார்கள். அதைப் போலவே கல்வி மறுக்கப்பட்டதால் தலித்துகளிடம் உருவான ஊனத்தமிழ் வார்த்தைகளை நன்றாகப் புரிந்துக் கொண்ட 'பாமா' போன்ற எழுத்தாளர்கள், இந்த ஊனத் தமிழுக்கு வடிவம் கொடுத்து தலித் இலக்கியம் என்று அதை எங்கள் தலையில் கட்டுகிறார்கள்" என்று எழுதுகிறார்.

சாதி கற்பிக்கப்பட்ட காலத்தில சாதிக்கென்று ஒதுக்கப்பட்ட தொழில்களை மறுப்பதற்கு பதிலாக அதையே தங்களின் அடையாளமாக சொல்லிக் கொள்ளும்போது சாதிசார்ந்த கருத்தியல் மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. பொதுத்தளத்தில் மறுக்கப்பட்ட அடையாளங்கள் மீது உரிமையை கோருவதற்கான அரசியலையும் மறுக்கிறது. பறை மட்டுமல்ல சாதியின் பெயரால் பகுக்கப்பட்ட தொழிலையும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு மறுக்கப்பட்ட அடையாளத்தையும் அனைத்து சாதியினருக்கும் தேர்வுசெய்துகொள்வதற்கான கோரிக்கையோடு செயற்படுவதே சாதிமறுப்பாக இருக்க முடியும். செத்த மாடெடுத்தல் என்ற சுகாதாரப்பணி தலித்துகள் மீது சுமத்தப் பட்டதால் அத்தோலினால் செய்யப்பட்ட பறையும் அவர்கள் மீது சமத்தப்பட்டது.

மலமெடுக்க மறுக்கும் அருந்ததியரின் குலத் தொழில் மலமெடுப்பதுதான் என்பது எத்துணை அவதூறு. "தப்புதான் தலித்கலை என்றால் குழல், யாழ் போன்றவை எமக்கு உரிமையில்லை? அகராதியில் அழிக்கப்பட்ட தமிழ்ச் சொற்கள் கூட இன்னும் தாய்வழி கூட்டத்திற்கு ஊனத்தமிழ்தான் உரிமையா? தலித் இலக்கியம், தலித் கலை, தலித் பண்பாடு என்பதெல்லாம் ஒதுங்குதல், ஒதுக்குதல் அடிப்படையிலான வர்ணதர்ம கோட்பாடே அம்பேத்கர் சொன்ன சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இங்கு வேலையே இல்லை. எனவே தப்பு அடிக்க மறுப்பதை சமத்துவத்திற்குகான போராட்ட அடித்தளமாகவே பார்த்தோம். தப்புகளை செய்ய செத்த மாடுகள் எங்களுக்குத் தேவையில்லை என்று கோஷமிட்டோம்" என்று அவர் விளக்குகிறார். அவரின் இந்தப் பார்வை தலித்துகளின் நீண்ட போராட்ட மரபிலிருந்தும் தலித் மக்களின் விருப்பங்களிலிருந்தும் எடுக்கப்பட்டமையால் தான் தத்துவமானதாக விளங்குகிறது.

இந்நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள மற்றுமொருச் செய்தியும் தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியமானதாகிறது. குடிதாங்கி பிரச்சினைதான் அது. குடிதாங்கி கிராம தலித் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை 'கொள்ளிடக்கரையில்' சுடுகாட்டுக்கு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதுதான். டி.எம். மணி தலைமையிலான இயக்கம் கிளை அமைக்க சென்ற போது அக்கோரிக்கையை வலியுறுத்திய போராட்டத்தைத் தான் முதலில் எடுத்தனர்.

உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று தொடங்கி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை போன்றோரிடமும் பிரச்சினையை கொண்டு சென்றனர். 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23இல் செல்வம் என்பவர் இறந்து தூக்கிச் சென்றபோது நூற்றுக் கணக்கான வன்னியர்களால் தலித்துகள் மறிக்கப்பட்டனர். அதுநாள்வரையில் மறிக்காதவர்கள் மறிப்பவர்களாக மாறியிருந்ததற்கு காரணம் அவர்களிடம் வன்னியர் சங்கம் உருவாகியிருந்ததுதான். பிரச்சினையின் காரணமாக பிண அடக்கத்தை மறுநாளுக்கு ஒத்திவைக்கச் சொன்ன காவல் துறையின் அறிவுரையின் பேரில் அவ்விடத்திலேயே பிணத்தை வைத்துச் சென்றனர் மறுநாள் பிணத்தை காவல்துறையே எங்கோ வீசிவிடுகின்றனர். அதனையட்டி தலித்துகளுக்கும் காவல்துறையினருக்கும் நடந்த மோதலில் காவல் ஆய்வாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். மறுநாள் அங்கிருந்த 9 சேரிகளில் புகுந்த காவல்துறை அவர்களை அடித்து நொறுக்கியது.

குடிதாங்கியைச் சேர்ந்த 22 தலித் பெண்கள் உள்ளிட்ட 104 பேர் மீது கொலைமுயற்சி வழக்கு (307) உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கை பதிந்தனர். இதனால் இடர்பாடுகளுக்கு பின்னும் அம்மக்களின் பிணங்களை பழைய சுடுகாட்டில் புதைப்பதில்லை. பொதுச் சாலையில்தான் எடுத்துச் செல்வோம் என்ற முடிவிலிருந்தும் மாறவில்லை. அதனால் வீதிகளிலும் வாய்க்காலிலும் பிணங்களை புதைக்கவேண்டிய நிலை. இந்த காலக்கட்டத்திலும் பல்வேறு வழக்குகளை அம்மக்கள் சுமந்தனர்.

சுமார் 4 ஆண்டுகாலம் இப்போராட்டம் நீடித்தது. இவை எல்லாவற்றின் பின்னணியில்தான் அப்பிரச்சினை முடிவுக்கு வந்தது. அன்றைக்கிருந்த அதிமுக அரசு சுடுகாட்டுப் பயன்பாட்டுக்காக பொதுப்பாதையை அனுமதித்த சூழல், 82 வன்னியவகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலை. அச்சூழலில்தான் ராமதாஸின் வருகை நிகழ்ந்தது. அப்பகுதி சேரிமக்கள் அவரின் வருகையை விரும்பாத போதும் அவரை சுடுகாட்டுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றவர்களும் தலித்துகளே, ஆனால் இன்றைக்கு குடிதாங்கிப் போராட்டம் என்றாலே அறியக் கூடியவராக ராமதாஸின் பெயராகிவிட்டது.

நான்கு ஆண்டுகால தலித்துகளின் நெடிய போராட்டத்திற்கு கிடைக்காத அங்கீகாரம் தலித் அல்லாத ஒருவரின் சிறிய தலையீட்டிற்கு பெரிய அளவில் கிடைத்து விடுகிறது. தமிழகத்தில் இதுபோன்று சொல்லப்படாத போராட்ட உண்மைகள் ஏராளமுண்டு அண்மைக்கால உதாரணம். கடைசி இரண்டு வருடங்களில் தலையிட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டமாகிவிட்ட பாப்பாப்பட்டி பிரச்சனை.

குடிதாங்கிப் பிரச்சினை குறித்து கள ஆய்வு செய்து வெளியிட்ட நிறப்பிரிகை இதழும் இந்த வரலாற்றுப் பொய்க்கு காரணம் என்று டி.எம். மணி கூறுகிறார். ராமதாஸின் வருகையை தூக்கிப் பிடிப்பதிலேயே கவனம் செலுத்திய அவ்விதழின் கள ஆய்வு விழிப்புணர்வும், போர்க்குணமும் உடைய தலித் அமைப்புகளே அங்கில்லை யென எழுதியிருந்ததை சுட்டிக் காட்டுகிறார். பிறகு திருமாவளவனும் ராமதாஸை தமிழ்க்குடிதாங்கி என்று பாராட்டினார். பிராமணரல்லாதோர். தமிழர் போன்ற பொது அடையாளங்களை காட்டும் வரலாற்றில் இவ்வாறு சிதைந்த வரலாறு அதிகம். இதற்கு மறுதலையாக ராமதாஸ் தலித் தலைவர்களோடு பூண்ட உறவுகுறித்த நோக்கத்தினையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார். எல். இளையபெருமாளின் எதிர்ப்பை சரிக்கட்டும் நோக்கிலேயே அவர் தென் மாவட்டங்களில் செயற் பட்டுக் கொண்டிருநத திருமாவளவன், பசுபதி பாண்டியன் போன்றோரை வடக்கே அழைத்தார். ராமதாஸின் அரசியல் நோக்கத்திற்கு தடையாயிருந்த தலித்துகளும் தாங்கள் எதிரியில்லை என்ற நிலையை உருவாக்குவதற்காக, தன் பிடிக்கு உட்படும் தலித் தலைவர்களை ஆதரிப்பது அவரின் நடவடிக்கையில் இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.

ராமதாஸின் நடவடிக்கைகளை கவனித்துவரும் யாரும் இதை பொய் என்று சொல்ல மாட்டார்கள். தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவனோடு இணைந்து பணியாற்றிய போதும் சாதிஒழிப்பு சார்ந்த தளங்களில் இந்த ஒற்றுமையை விரிவுபடுத்திக் கொள்ளவில்லை என்பது இளையபெருமாள் ராமதாஸோடு 1991 இல் சமாதான உடன்பாட்டை மேற்கொண்டபோது இழிதொழில்களை வலியுறுத்தக் கூடாது என்பதை உடன்பாட்டின் மைய நோக்காக்கி யிருந்தார். உடன்பாடு அப்படியே நின்றுபோனது இளையபெருமாளும் ஏமாற்றப் பட்டார் என்பதே அனுபவம்.

இந்நூல்கள் தரும் தலித்மக்களின் போராட்ட உணர்வுகுறித்த பதிவுகள் இதுவரை தமிழில் சொல்லப்டாதவையாகும். தற்சார்பற்ற வாழ்நிலை, மறுக்கப்பட்ட கல்வியால் நிலைபெறும் அறியாமை போன்றவற்றால் குறுகிக் கிடந்த அம்மக்களிடம் இயல்பாக உள்ள எதிர்ப்புணர்வு, துணிச்சல், இயக்கம் ஒன்றின் பின்னணியோடு வலுப்பெறும் எழுச்சி, இழப்புகளைத் தாண்டி உடனடியாக மறுவாழ்வை நிர்மாணிக்கம் திண்மை என்று நகருகிறது. இப்பிரதிகள் இயக்கம் உருவானபின் இந்துக்களின் வீடுகளில் சோறெடுத்தல், பண்டிகை பலகாரங்கள் வாங்குதல், கோயில் விழாக்களில் கஞ்சி வாங்குதல் போன்றன நிறுத்தப்படுகின்றன.

நிலங்களை உரிமையாக்குதல், மடத்துக்கு சொந்தமான குளத்தில் நீரெடுத்தல் என்று போராட்டங்கள் விரிவாயின. மடத்திற்கு சொந்தமான குளத்தில் நீரெடுக்கும் போராட்டம் நடந்தபோது தலித்துகளுக்கு எதிராக நில ஆதிக்கம் கொண்டிருந்த வெள்ளாளர்களுக்கு ஆதராவான பிற்பட்ட வகுப்பினர் கலவரத்தில் இறங்கினர். இருந்தும் தோல்வியைப்பற்றி நினையாமல் அம்மக்கள் போராடினர். அம்மோதலின் ரவுடிப் பட்டியலில் இருந்த ராஜேந்திரன் என்பவர் இறந்துபோனார். ஏற்கனவே தாக்கப்பட்டு மருத்துவமணையில் சேர்க்கப்பட்டிருந்த தலித் தரப்பு மோகன் என்பவரை ஆத்திரத்தினால் ஆதிக்க வகுப்பினர் கொன்று விடக்கூடும் என்று மனம் வருந்தி நின்றபோது உடல் முழுவதும் வியர்த்தவாறு 4 இளைஞர்கள் ஓடிவருகிறார்கள்.

ராஜேந்திரன் கொலையானதும் ஆதிக்க வகுப்பினர் சிதறி ஓடிய தருணத்தில் மருத்துவமனையிலிருந்த மோகனை தூக்கிக் கொண்டு பின்புறச் சுவற்றில் ஏறிக்குதித்து மறைவான இடத்தில் வைத்து விட்டு அந்நால்வரும் வருகிறார்கள். இச்சம்பவத்தை எழுதும் டி.எம்.மணி "எப்படி இவ்வளவு தைரியமாக இவர்களால் சாதிக்க முடிந்தது?" என்று வியக்கிறார். சாதி, சாதியின் செயற்பாடு போன்றவற்றை அனுபவிக்கும் இம்மக்களிடம் அத்தளத்தில் ஒன்று நடந்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகித்துக் கொள்ள முடிகிறது டி.எம்.மணி அரசு அலுவலர் ஒருவரை சந்திக்க செல்லுகிறாரென்றால் அக்குறிப்பிட்ட அலுவலர் தங்களிடம் என்னவெல்லாம் சொல்லுவார் என்று தங்கள் தோழர்களிடம் சொல்லிச் செல்லுவாராம். அவர் சொல்லிச் சென்றது போலவே அலுவலர் பேசுவாராம்.

இச்செய்தியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் என்னிடம் நேர்பேச்சில் குறிப்பிட்டார். இது எப்படி சாத்தியம்? சாதிரீதியான அணுகு முறையில் சாதி இந்துக்களும், அதிகாரிகளும் வழமையாய் சொல்லும் காரணம் ஒரே மாதிரி இருப்பதும், வாக்குறுதிகளின் ஏமாற்றம் போன்றவற்றை சந்தித்துப் பழகிப்போன இம்மக்களுக்கு சூழலை வாசிப்பது எளிமையாகிவிடுகிறது. அதற்கு எண்ணும் எழுத்தும் கற்க தேவையில்லை.

காவற்கூடம் என்னும் ஊரில் செத்த மாட்டை அப்புறப்படுத்த வெட்டியான் வரவில்லை என்பதற்காக வெட்டியான் குடிசைகளை ஆதிக்கவகுப்பினர் கொளுத்தினர். இதனை காவல்துறையில் புகார் செய்த 'குற்றத்திற்காக' அவ்வூரைச் சேர்ந்த 40 சேரிக் குடிசைகளை எரித்தனர். கட்சி பிரமுகர்கள். காவல்துறை, தாசில்தார், துணை கலெக்டர் போன்றோர் எரிக்கப் பட்ட குடிசைகளை கணக்கில் கொள்ளாமல் சாதி இந்துக்களுக்கு ஆதரவாக பேசினாலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த கலெக்டர் 'கங்கப்பா' என்பவரின் வழிகாட்டுதலோடு இந்துக்களின் தெருவழியே போகாத வண்ணம் முற்றிலும் புதிய இடத்தில் வீடு கட்ட இடத்தை வழங்கியபோது 52 குடிசைகளையும் உற்சாகத்தோடு கட்டிகொண்டனர். இழப்புதரும் வலியிலிருந்து மாறி மற்றுமொரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்கின்றனர். குடிசைகள் கட்டப்பட்ட பகுதிக்கு நன்றியோடு கங்கப்பா நகர் என்று பெயரும் சூட்டிக்கொண்டனர் அம்மக்கள்.

     போராட்டக் களங்களில் ஏற்படும் ஏமாற்றங்கள், கிராம அமைப்பொன்று சாதியை தக்கவைத்துக் கொள்ளும் சாதுர்யம் அசாதாரண சூழலில் பரப்பப்படும் சொல்லாடல்கள் குறித்த புரிதல் போன்றவை தலித்மக்களுக்கு அத்துப்படி. காவற்கூடம் கிராமங்களில் நடத்தப்பட்ட வன்முறையை எழுதத் தொடங்கும் டி.எம். மணி "முதல் நாள் செய்தித்தாளில் கோஷ்டி மோதல், தீவைப்பு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. பெரும்பாலும் கோஷ்டி தலித்துகளாகவும், அது பாதிக்கப்பட்ட தரப்பினராகவும் இருப்பர் என்பது தலித்துகளுக்கு பரிந்து பேசுபவராக வந்து தலித் இளைஞர் ஒருவரின் நடத்தை 'மீறலால்' மோதல் எழுந்தது என்றும் அரிஜனங்களே தங்களின் சில குடிசைகளுக்கு தீவைத்துக் கொண்டனர் என்றும் சொல்லுவதோடு சமாதானமாக போய்விடலாம் என்று சொல்ல தலித்துகளுக்கென சில உதவிகளையும் செய்ய முன் வருகிறார். ஆனால் தலத்துகள் தாங்களே தீவைத்துக் கொண்டதாக புகார் கூறியவர்களிடம் தீப்பெட்டியைக் கொடுக்கும் கலெக்டர் கங்கப்பா, "எங்கே உன்குடிசையை நீயே கொளுத்திக்கொள் பார்ப்போம்" என்று சொன்னபோது அவர்கள் பின்வாங்கினர். இந்த இடத்தில் கலெக்டர் கங்கப்பா தலித்வகுப்பினர் என்பதையும் ராமகிருஷ்ணன் வன்னியர் என்பதையும் டி.எம்.மணி குறிப்பிடுகிறார்.

வேறுசில இடங்களில் தலித் அதிகாரியாக இருப்பதாலேயே தலித் ஆதரவு முத்திரையால் தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சும் அதிகாரிகளைக் குறிப்பிடும்போது அவர்களின் சூழலை யோசித்துப் பார்க்கும் போக்கும் இவர்களிடம் வெளிப்படுகிறது. இந்த சூழல் குறித்து வேறொரு இடத்தில் எழுதும் டி.எம்.மணி "தலித்துகள் தாக்கப்படும் போதும், கொடுமைக்குள்ளாகும் போதும் அனுதாபப்படுவதற்கும் ஆதரவுக்குரல் கொடுப்பதற்கும் மற்ற சாதியில் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகள் எதிர்தாக்குதல் நடத்துவதை அவர்கள் விரும்புவதில்லை" என்பதை நெடிய அனுபவத்திலிருந்து சொல்லுகிறார்.

கிராமங்களின் ஒற்றுமை என்பது அந்தந்த சாதிக் கடமையை அவரவர் செய்யவேண்டும் என்பதே போன்றவற்றை துல்லியமாக சொல்லும் சாதிகளின் சாதியச் செயற்பாடுகளை குறைத்துவிடாமலும், மிகைப்படாமலும் எழுதுகிறார். பிராமணர் எதிர்ப்பு அவருக்கிருந்தாலும் பிராமணர் அல்லாத சாதிகளன தலித்வெறுப்பை குறைத்து மதிப்பிடவோ, அதன் மூலம் சாதிய பலன்களிலிருந்து அவர்களை தப்பவைக்கவோ அவர் முயற்சிக்க வில்லை.

கொலை வழக்கு, சிறை என்று பயணித்த டி.எம்.மணி குறைவான எண்ணிக்கையினரோடு இசுலாம் தழுவி இன்று உமர் ஃபாரூக் ஆகி விட்டார். அதற்கான காரணம். மதம் தழுவியவர்களின் படங்கள் என்று சாதி ஒழிந்தது நூலின் இறுதியையும்,'தமிழ் தேசியத்தால்' உள்வாங்கப்பட்ட இன்றைய தலித் அரசியலை குறித்து செந்தமிழ் நாட்டுச் சேரிகள் நூலின் இறுதியையும் எழுதியுள்ளார். இந்நூல்களை வாசித்து முடிக்கிற போது பெரும் துயரமும், ஆற்றாமையும் நம்மை சூழ்ந்துக் கொள்கிறது. நூலின் இறுதிப்பகுதியில் அவர் முன்னெடுக்கும் விவாதத்தில் யாரும் உடன்படவோ, மாறுபடவோ செய்யலாம். ஆனால் அவர் முன்வைக்கும் அனுபவத்தை யாரும் அத்துணை எளிமையாய் கடந்துவிட முடியாது.

அங்கீகரிக்கப்படாத டி.எம்.மணி போன்றோரின் போராட்ட பலனால்தான் இன்றைய தலித் சமூகம், தலித் இயக்கங்களும் தங்களை ஆசுவாசப்படுத்தக் கொள்கின்றன. பெரும் இயக்கபலம் இல்லாவிட்டாலும் அவர் இன்றும் எழுதுகிறார், செயற்படுகிறார், ஏனெனில் அவர் பெற்றுக் கொண்டுள்ள கருத்தியல் தன்னளவில் விடுதலை பெற்றவராக அவரை உணரவைத்துள்ளது. தன்னளவில் விடுதலை பெறாத யாரும் எத்தகைய கூட்டத்தை திரட்டினாலும் யாரையும் விடுவிக்க முடியாது.

நன்றி http://arunthathiyan.blogspot.no

அருந்ததியர் அவலமும் தூங்கா நகரின் துயரமும்



மதுரை, தமிழகத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரங்களில் ஒன்று. பல்வேறு மத, இன, மொழியாளர் கலந்து வாழும் நகரம். கோயில் நகரம் என்று தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட மதுரைக்கு தூங்கா நகரம் என்ற சிறப்பும் உண்டு. பாண்டியர்கள், நாயக்கர்கள், முஸ்லிம்கள், ஆங்கி லேயரின் ஆட்சிக் காலங்களில் மதுரை முக்கிய இடம் பெற்றுள்ளது. எனினும், சமூக வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமையும் அதன் கொடுமைகளும் மதுரையின் நெடுந் தொடரான காலபடித்தரத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

மதுரையின் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் நுழைய தீண் டத்தகாத சமூகத்தவர்களுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது. அந்த காலக்கட்டத்தில்   ஏ.வைத்தியநாத ஐயர், தலித் மக்களை வெற்றிகரமாக கோயிலுக்குள் வழிநடத்திச் சென்ற வர். இச்சம்பவம் நடைபெற்று 70 வருடங்கள் உருண்டோடிய பின்னரும் உண்மையான சமூக விடுதலை என்ப தும் தலித் சமூகத்திற்கு எட்டாக் கனியாக உள்ளது.

மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் தீண்டாமை இன்னும் உயிர்வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. பல தலைமுறைகளாக தொடரும் தீண்டாமை கொடுமை பற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பு 21 தலித் குடியிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை தயாரித்திருக்கிறது.

தலித்கள் தனிமைப்படுத்தப்பட் டுள்ள கிராமங்களில் இந்த பாகு பாட்டை அனுபவிக்கிறார்கள். இச் செயல் குறைந்தும் வருகிறது என்ற உண்மையை இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.

இந்தப் பிரச்சினையில் இடதுசாரி கள் தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிக்கும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பதையும் இந்த அறிக்கை குறிப்பிட்டுச் சொல்கிறது. இந்த ஆய்வறிக்கை 2009 டிசம்பர் 18&ம் தேதியில் வெளியானது.

ஆரோக்கியமின்மை (ஜீஷீஷீக்ஷீ லீமீணீறீtலீ) மட்டகரமான வாழ்க்கை முறை இவற்றால் மதுரை மாவட்ட தலித் மக்கள் சூழப்பட்டுள்ளனர். அவர்களுக்கு முறையான குடியிருப்பு வசதிகள் கிடையாது. கல்விக்கான முறையான சூழல் கிடையாது, வேலை வாய்ப்புகள் கிடையாது, சுய வேலைவாய்ப்புக்கான நிதிவுதவிகள் பெற வழியில்லை, முதியோர் ஊதியம் உள்ளிட்ட நல உதவிகள் பெறுவதில் தாமதம் உள்ளிட்ட சிக்கல்கள் அவர்கள் வாழ்க்கை முன்னேற்றத் திற்கு பெரிய தடைகளாக உள்ளன என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்.

முப்பது வருடங்களுக்கு மேலாக இந் நகரத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலப்பட்டா வழங்கவில்லை என்பது மற்றொரு பிரச்சினை சுடுகாடுகள் மற்றும் செருப்பு தைக்கும் சுகாதாரம் தொடர்பான பணியில் ஈடுபடும் அருந்தியர் அவலத்தையும் இந்த அறிக்கை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

மதுரை மாநகரில் தலித்துக்கள் சந்திக்கும் மற்றுமொரு முக்கியப் பிரச்சினை குடியிருப்பு. மதுரையின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதத்திற்கு குறைவான விகிதத் தில் தலித்துக்கள் உள்ளனர். இவர்கள் அருள்தாஸ்புரம், செல்லூர், முனிசிலை, திடீர் நகர், சதாமங்கலம், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட 19 பெரிய தொகுப்பு சேரிகளில் வசிக்கின்றனர். இவை நகரத்தின் 72 நகர்மன்ற தொகுதிகளை உள்ளடக்கி யுள்ளன. இவைகளில் ஒரு தொகுதி நகர மேயரையும், துணைமேயரையும் தந்துள்ளது.

அருந்ததியர்கள் தெலுங்கு மொழி பேசுகின்றனர். இவர்கள், விஷ்வநாத நாயக்கரின் ஆட்சி காலத்தில் (16&ம் நூற்றாண்டு) மதுரைக்கு வந்துள்ளனர். மதுரையின் புறநகர் பகுதிகளில் தங்கியுள்ளனர். நாயக்கர்கள் காலத்தில் (16 மற்றும் 17&ம் நூற்றாண்டில்) மேலவாசல், கீழவாசல், தெற்கு வாசல், வடக்கு வாசல் ஆகிய நான்கு முக்கிய நகரின் நுழைவாயில்களுக்கு வெளியே தலித்துகள் வசித்துள்ளனர். பழங்கால வருவாய் பதிவேட்டில் “பள்ளர் மயானம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மயானம் பழங்காநத்தம் அருகே இருந்துள்ளது.

சேரிவாழ் மக்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையினர் சுகாதாரப் பணியில் (sணீஸீவீtணீக்ஷீஹ் ஷ்ஷீக்ஷீளீs) உள்ளனர். இவர்கள் அனைவரும் அருந்ததி சாதிப்பிரிவினர். சாதிப் பட்டியலில் ஆக கீழ்மட்டத்தில் இடம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் உடல் உழைப்பு செய்யும் தினக்கூலி தொழிலாளர்கள், குப்பை பொறுக்கு பவர்கள், பாதைசாரி வியாபாரிகள் (லீணீஷ்ளீமீக்ஷீs) சுமை தூக்குபவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள்.

தலித்துகளின் வீதிகள் கூட சாதி வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன. தத்தனேரி பகுதியில் தெருக்களுக்கு கூட பட்டியல் சாதியினரின் துணை பிரிவுகளின்¢ கீழ் பெயரிடப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக மாற்றுப் பெயர்கள் இடப்பட்டுள்ளபோதும், பொதுவிநியோகம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வழங்கியுள்ள குடும்பஅட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ளபடி சில பொது வினியோக கடைகள் “ஹரிஜன் கூட்டுறவு நியாய விலை கடைகள்” என்று பெயரிடப் பட்டுள்ளன.

தலித்துகள், தங்கள் சொந்த சமூகத்தவர்களின் அண்டையிலேயே வசிக்க விரும்புகின்றனர். தங்கள் வாழ்விடங்களுக்கு வெளியே குடியேறுவது பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணுகின்றனர். நகர்ப்புற விரிவாக்கத் திட்டமும் இவர்களின் அச்ச உணர்வை போக்கவில்லை. இத்திட்டத்தினால் தலித்துகளுக்கு எந்தவித ஆதாயமும் இல்லை என்கிறார். தென்னிந்திய வரலாற்று பேரவையின் பொது செயலாளர் பி.எஸ்.சந்திரபாபு. 

குடிநீர் வினியோக பற்றாக்குறை, மற்றும் சுகாதார வசதிகள் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை ஆகியவை இதர பிரச்சினைகள். நெருக்கடியான இந்த சேரிப்பகுதிகளில் தலித்துகள் பன்றிகள் மற்றும் நாய்களுடன் தான் வசிக்க வேண்டியுள்ளது. இந்த குடியிருப்புகள், தமிழ்நாடு சேரி பகுதிகள் (மேம்படுத்தல் மற்றும் சுத்தப்படுத்தல்) சட்டம் 1971 பிரிவு 3-&ன் கீழ் பொருந்திப்போகிறது.

அவை (1) எந்த வகையிலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்த மற்றவை.

(2) இடிபாடுகள், அதிக நெருக்கடி, தவறான கட்டிட அமைப்புகள், தவறான குறுகலான வீதி அமைப்புகள், காற்றோட்ட வசதியில்லாமை, வெளிச் சமின்மை, சுகாதார வசதிகள் இல்லாமை, இக்காரணிகள் தனித்தோ, கூட்டாகவோ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக ஒழுக்கத்திற்கு கெடுதி யாக (பீமீtக்ஷீவீனீமீஸீtணீறீ) உள்ளது.

இந்த சேரிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் குறுகலான சந்து அமைப்புகளுடனும், 10/10 அடி அல்லது அதற்கும் குறைவாக அளவு கொண்ட ஒற்றை அறை கொண்டதாகவும் இருக்கிறது. தலித்மக்கள் அதிலும் குறிப்பாக அருந்தியினர் இடப்பற்றாக்குறை காரணமாக கூட்டு குடும்ப முறைப்படி வாழ வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது 10 தலித்துகள் வசித்து வருகின்றனர்.

குடியிருப்பு வசதிகள் போதாமை காரணத்தால் தாழ்த்தப்பட்டோர் அல்லாத சேரிவாழ் மக்களும் துயர் அடைகின்றனர். சேரிகளுக்கு வெளியே தாழ்த்தப்பட்டோர் குடி யேறுவதில் மற்றுமோர் சிக்கல் உள்ளது. தலித் அல்லாத மக்கள் தலித்துகளுக்கு வீடு விற்கவோ, வாடகைக்கு தரவோ மறுக்கின்றனர். சொத்து வர்த்தகத்தின் (ஸிமீணீறீ ணிstணீtமீ) காரணமாக நிலமதிப்பு தாறுமாறாக எகிறியிருப்பதால் தலித்துகள் நன்கு தரமான வீடு களை வாங்க முடிவதில்லை. அவர்களது குடியிருப்புகளின் சந்தை மதிப்பு அடுத்துள்ள தலித் அல்லாதவர்களின் குடியிருப்புகளின் சந்தை மதிப்புக்கு இணையாக இல்லை என்கிறார். அனைந்திந்திய காப்பீட்டு தொழிலாளர் கழகத்தின் தென் மண்டல பிரிவின் பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன்.

மஞ்சள் மேடு, மேல பொன்னகரம், மினிகாலனி, சுப்ரமணியபுரம், கீழ் மதுரை, அனுப்பாமை, கரும்பாலை, விராட்டிபத்து மற்றும் அரசரடி பகுதிகளில் உள்ள தலித்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட ஒருங் கிணைப்பாளரும், மதுரை முனி சிப்பல் மாநகராட்சி சுகாதாரப் பணியாளர் ஒன்றியத்தின் பொதுச் செயலாருமான ஆர்.ராஜகோபால்.

கரும்பாலை சேரியில் 2000 வீடுகள் இருக்கின்றன. ஒரு சில வீடுகள் தவிர மற்றவற்றிக்கு பட்டா வழங்கப்படவில்லை. 30 வருடங் களுக்கு மேலாகவே அவர்கள் அங்கு வசித்து வருகிறார்கள். கழிவு நீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள போதும் தனித்தனியாக வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்படாத காரணத்தால் சாக் கடை நீக்கம் திட்டத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கடன்களை முறையாக செலுத்தாத காரணத்தால் சேரி ஒழிப்பு வாரிய அதிகாரிகள் இன்றும் பட்டா வழங்காமல் உள்ளனர்.

கோமேஸ்பாளையம் பகுதியில் இருந்து துணைமேயர் வந்திருக்கிறார். எனினும் மற்ற சேரிப்பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் எதுவும் அடைந்திடவில்லை. மாநகராட்சி கழிவறைகளை கட்டிவந்த போதிலும், தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் கட்டிட பணிகளை நிறுத்தியுள்ளது. அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் குடிநீர் வரத்து நின்றுவிடும். திறந்த வெளி சாக்கடைகள் காரணமாக எப்பொழுதும் வீட்டை சுற்றிலும் சகதி கள் காணப்படும்.

சேரி ஒழிப்பு வாரியம் (slum clearence board) தங்களுக்கு புதிதாக வீடுகள் கட்டி கொடுக்கும் என்பதில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். திடீர் நகரில் தலித்துகளை குடியமர்த்த 240 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை ஒதுக்கீடு செய்வதிலும் குழப்பம் நிலவுகிறது. திடீர் நகரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு வில்லாபுரத்தில் தற்காலிக தங்குமிடம் வழங்கப்பட்டிருக்கிறது. கிருதம்மாள் நதிக்கு அருகில் உள்ளது கீராநகர். மேலவாசல் பகுதியில் உள்ள பெரிய கழிவு நீர்கால்வாய் பயங்கரமானது. இந்த கால்வாயின் மற்றொரு புரம் நகர்புற கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதன் துர்நாற்றங்களை (stக்ஷீமீநீலீ) சகித்துக் கொள்வதை தவிர இங்கு வசிப்போருக்கு வேறு வழியில்லை. வெள்ளப்பெருக்கை தடுக்க கால்வாய் ஒட்டி சுவர் எழுப்பும் திட்டத்தை அதிகாரிகள் இன்னும் தொடங்கவே இல்லை. இந்த வார்டின் ஒரு பகுதியான சுப்ரமணியபுரம். மேயர் இப்பகுதியில் இருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் இதன் நிலைமையும் மிக மோசமாக இருக்கிறது. இங்கு 450 வீடுகள் பட்டாவுக்காக காத்திருக்கின்றன.

மதுரை முனிசிபல் மாநகராட்சி காலனியில் 1500&க்கும் மேலான மக்கள் வசிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர் களுக்காக மிகச்சிறிய பகுதியில் 90 வீடுகள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. தண்டல்காரன்பட்டி சேரிப்பகுதியில் திறந்தவெளி கழிவு நீர் கால்வாயும், அழுகிய வீண் பொருள்களின் குவியல்களும் இங்குள்ள வாழ்க்கைச் சூழலை சிக்கலுக்குள்ளாக்குகிறது.

நகர்மயமாதலில் 15 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடுதான் முதலிடம் வசிக்கிறது. சரிகாணப்படாத, தீவிரமான நகர்மயமாக்குதலால் மாசு படுதல், உபகரணங்கள், இடங்கள் தேவைப்படுவதன் சவால்களை மாநகராட்சி நிர்வாகம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர் கள்.    மதுரையின் நகர்மயமாதலின் எதிர்விளைவுகளை தலித்கள் மற்றும் பொதுவான சேரிவாழ் மக்கள் சுமக்க வேண்டியுள்ளது.

தினந்தோறும் மதுரையில் 450 டன்கள் கழிவு பொருட்கள் சேகரமாகின்றன.  

தலித் அல்லாதவர்கள் சுகாதாரப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு அலுவலக உதவி யாளர்கள் போன்ற பணிகள் கொடுக்கப் படுகின்றன. சில டீ கடைகளில் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி குவளைகளில் (ஜீறீணீstவீநீ நீuஜீs) சுகாதாரப் பணியாளர்களுக்கு டீ கொடுக்கப்படுகின்றது என்று குற்றம் சாட்டுகிறார் ராஜகோபால்.

தலித்துகளுக்கு கடன்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்க தமிழ்நாடு ஆதிதிராவிடர் குடிமனை மற்றும் மேம்பாட்டு கழகம் பல்வேறு முன்நிபந்தனைகளை விதிப்பதன் காரணமாக அம்மக்கள் தனியார் கடன் தருவோரிடம் செல்ல நேர்கிறது. அவர்கள் அதிகளவு வட்டி வசூலிக்கின்றனர். கடனை திருப்பிச் செலுத்தாத போது தலித் பெண்கள் துன்பத்துக்கு ஆளாக்கப்படுகின்றனர். வட்டிக்காரர் களின் கரங்களில் சிக்கிபாலியல் தொந்தரவுக்கும் ஆளாகின்றனர். தலித்களின் நலன்களை மேம்படுத்த செயல்படுத்தப் படும் திட்டங்களை சரியாக கண் காணிக்க வேண்டும் அவர்களது வசிப்பிடங்களின் உள்கட்டு மானங் களை மேம்படுத்த வேண்டும் என்கிறார் ராஜகோபால்.

தலித்துகளின் மிக முக்கியமான மற்றுமொரு பிரச்சினை கல்வி. படிப்பை பாதியில் நிறுத்தும் தலித் சமூக குழந்தைகள் எண்ணிக்கை அதிகம். இதுவே அருந்ததியர் சமூகத்தில் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகும். அவர்களது பெற்றோர்கள் இடையறாது பணிக்கு செல்வதே காரணம். 96 சதவீத அருந்ததியின் குழந்தை கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கப்படுவதாக அன்னை தெரஸா கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை (கிஜிஸிஞிஜி) மேற்கண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை ஐந்தாம் வகுப்பில் 60 சதவீதமாகவும், எட்டாம் வகுப்பில் 45 சதவீதமாகவும் குறைகிறது. 20சதவீதத்திற்கு மேல் அருந்ததியர் குழந்தைகள் பத்தாம் வகுப்பை தாண்டுவதில்லை. மிகச் சிறிய அளவு சதவீதத்தினரே இந்த சமூகத்தில் மேற்கொண்டு படிக்கின் றனர். பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து கல்லூரிக்குப் போகின்றனர். குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் திடீர் மரணமும் அக்குழந்தைகள் உடனடியாக படிப்பை கைவிட நேர்கிறது.

அருந்ததி சமூகத்தினர் தினப் பணிகளுக்காக அதிகாலை 5 மணிக்கே வீட்டைவிட்டு செல்ல நேர்வதால் தங்கள் குழந்தைகளின் கல்வி விசயத்தில் அக்கறை காட்ட முடிவதில்லை. இதன் காரணமாகவே, சுகாதாரப்பணியாளர்களுக்கு ஷிப்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்களில் ஒருவர் வீட்டில் இருந்து குழந்தைகளின் கல்வியை கவனிக்க முடியும்.

பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றாலும் பெரிய அளவில் நிதி தேவைப்படுவதால் அருந்ததியர் பிள்ளைகள் கல்லூரி வாசல்களை தாண்ட முடிவதில்லை. குறிப்பாக தனியார் கல்லூரிகளில் அவர்களால் சேர முடிவதில்லை. மதுரை மாநகரின் தலித் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்த இருக்கிறது. இந்த சமூகத்தின் மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு அருகில் பயிற்சி முகாம் களை நடத்த இருக்கிறது.

தொடர்ந்து 5 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தாழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, இழிவுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சமூகத்தை மேம்படுத்த அனைத்து சமூகத்தினரும் அக்கறை காட்ட வேண்டும். அரசும் பாரபட்சமற்ற வகையில் அருந்ததியினர் சமூக மேம்பாட்டுக்கு ஆவண செய்ய வேண்டும்.

-ஜி.அத்தேஷ் 

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More