Slideshow

களிப்பூட்டும் பொய்யும், கசப்பூட்டும் மெய்யும் !

.பலகோடி ஆண்டுகளாகப் புரையோடிப்போன மரபொன்றினை சமீப காலத்தேயே பகுத்தறிவுவாதத்தால் குறுகியகாலத்தில் வெற்றி பெறச்செய்துவிடமுடியாது

தளத்திலும் புலத்திலும் அரசியலின் நவவடிவம், திசைவழி, அதன் பரிமாணம்

நமது சமூகம் இன்னமும் "யாழ்-சைவ-வேளாள-உயர்வர்க்க-ஆணாதிக்க" அதிகாரத்துவ அமைப்பையே கொண்டிருக்கிறது. வெறும் தமிழ்தேசிய விடுதலை இவை எல்லாவற்றுக்குமான சர்வரோகநிவாரணி ஆகிவிடாது.

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.

Showing posts with label 1வது பறை. Show all posts
Showing posts with label 1வது பறை. Show all posts

ஆசிரியர் தலையங்கம்

ஏழாந்திணையும் தொப்புள்கொடி உறவின் எதிர்காலமும் "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்” என்கிற இயங்கியல் உண்மையை மீளமீள பொதுப்புத்தி மட்டங்களில் கூட ஏற்றுக்கொள்கிற வகையில் பல நிகழ்வுகளைக் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். ”பறை”யை நாங்கள் உங்கள் முன் கொண்டு வரும் இந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கண்டுள்ள பல ”பரிணாமங்களையும்”, ”பரிமாணங்­களை­யும்” கண்டனுபவித்தபடி இருக்கிறோம். போரின் பக்கவிளைவுகளாக உருவெடுத்திருக்கிற பல வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று இந்த புலப்பெயர்வு. புகலிடத் தமிழர்களின் தேவைகள், பண்புகள், வடிவங்கள், திசை வடிவங்கள் இனிவரும் காலங்களில் இதற்கான அரசியல் மூலோபாய தந்திரோபாயங்கள் என்பன பற்றிய சிந்தனைகள் இப்போது தான் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன. ”புலம்பெயர்வு” என்பது இன்று உலகளாவிய கருத்தாக்கமாக வளர்ச்சியுற்றிருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் நாடுகடந்து வாழ்தல் எனும் ”புலப்பெயர் கருத்தாக்கம்” (Exile concept) பலவிதமான அரசியல், சமூக, கலாசார ஊடாட்­டங்களை நிகழ்த்தியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு சமூகங்கள், அவ்வவ் மொழிகளுக்குரிய கலை, இலக்கிய படைப்புகளுக்கூடாகவும், செயற்பா­டுகளுக்கூடாகவும் புலம்பெயர் அரசியல், புலம்பெயர் கலை, புலம்பெயர் இலக்கியம் என இந்த கருத்தாக்கம் வளர்ச்சியுற்றிருக்கிறது. இவை ஏனைய புலம்பெயர் சமூகங்களுக்குமான வழிகாட்டல்களை நிகழ்த்தி­யுமுள்ளன. தமிழ் மரபிலக்கியத்தில் நாம் ஐந்திணைகளைப் பற்றிய கருத்தாக்கத்தை அறிந்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வெட்டவெளி என அழைக்கப்படும் Cyber Space என்பதை ஆறாம்திணையாக சமீப காலத்தில் ஆக்கிக்கொண்டோம். இன்று ஏழாம் திணையாக புலம்பெயர்வினை குறிப்­பிடவேண்டும் என்கிற முன்மொழிவு கூட சமீபகாலமாக முன்வைக்­கப்பட்டு வருகிறது. அது மிகவும் பொருத்தமானதும் கூட.. திணைக்கான குணங்களையும், பண்புகளையும் அதன் திசை வடிவங்களையும் நாம் பகுத்தாராயும் கட்டம் இது. தமிழ்ச் சமூகத்தில் புலம்பெயர் இலக்கியம் என்பதன் முதல் கட்ட வடிவமானது முதலாம் தலைமுறையினர் தாயகத்தை அடியொற்றிய, தொப்புள்கொடி உறவை இறுக பற்றிக் கொள்கிற, அதனை பாதுகாக்கின்ற. தாயகத்தின் மீதான கடமையில் பிரக்ஞை கொண்டிருந்த, தாயகத்தின் எதிர்காலம் மீதான அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஒரு வடிவம். போருக்கு முந்திய பசுமைகளை அப்படியே அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் இவர்களில் அதிகம். அந்த உள்ளடக்கங்களை அப்படியே பிரதிபலித்த கலை இலக்கியங்கள் இது வரை தொடர்ந்தன. இரண்டாம் தலைமுறையினரது உருவாக்கத்தோடு அவர்களின் வாழ்நிலையை நேரடியாக பார்த்துணர்கிற கட்டத்தை முதலாவது தலைமுறையினர் இப்போது அடைந்துகொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை முன்னைய பண்பாட்டு மரபில் காணப்பட்ட அதிக பிணைப்புகளையும், அதிகாரங்களையும், பொறுப்புகளையும், உரிமைகளையும் உள்ளடக்கிய வடிவமாக இருந்த அனைத்தையும் புலம்பெயர் நாடுகளில் அந்த நாடுகளின் வழக்கங்களுக்கேற்றபடி அவை அற்றுப் போவது குறித்த பீதி கடந்த காலங்களில் நிலவின. இன்று அதன் நேரடி நடைமுறைகளை காணமுடிகிறது. அனைத்து புலம்பெயர் சமூகங்களைப் போலவே இது முதலாம் தலைமுறைக்குரிய பிரச்சினை தான். இரண்டாம் தலைமுறை வேறு வடிவத்தில், அளவில் குறைந்த ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் என நம்பப்படுகிறது. இதன் பன்முக விளைவுகளை தற்போது பல வடிவங்களிலும் பலவித அளவுகளிலும் நேரடியாக கண்டுணர்ந்து அனுபிவிக்கிற காலகட்டம் இது. இது போகப்போக முதலாம் தலைமுறையினருக்கு மேலதிகமான அனுபவங்களைத் தரும். இதன் சாதக பாதக விளைவுகள் குறித்த தேடலும், அதன் மீதான பிரக்ஞையும் தமிழ்ச் சமூகத்தில் வரண்டுபோயிருப்பது தான் இன்றைய கவனிப்புக்குரிய விடயம். தற்போதைய புகலிடச் சூழலை எதிர்கொள்கிற போது தமிழ் மொழி, மற்றும் அதன் பண்பாட்டம்சங்கள் சார்ந்த அனைத்தும் எத்தனை காலத்துக்கு தாக்குபிடிக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகத் தானிருக்கிறது. முதலாம் தலைமுறையினரின் ஏக்கங்கள், எதிர்பார்ப்­புகளை தற்போது உள்ள தொடர்புசானங்கள், (தொலைக்காட்சிகள், வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் இணையத்தளங்கள்) முதலானவை தான் கொஞ்ச காலம் பாதுகாக்கும் போலத் தெரிகிறது. இதன் மறைவைப் பின்போடும் பாத்திரமும் இந்த தொடர்புசாதனங்களுக்­குத்தான் இருக்கிறதென பல நிபுணர்களும் கருத்து தொpவித்து வருகிறார்கள். எனவே இன்றைய இந்த தேவைகளையும் அதிக கவனத்திற்கொண்டு அவற்றையும் தாங்கியபடி தான் பறை உங்களுக்கு முழங்கப் போகிறது. இதன் ஒலி உலகம் முழுவதும் கேட்கச் செய்வது மட்டுமல்ல அவற்றின் எதிரொலிகளையும் பறை உள்வாங்கிக் கொள்ளும். அதனையும் செரித்துக்கொண்டு உங்களை வந்தடையும். தேசிய மற்றும் சர்வதேசிய சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார நிலைமைகளோடு நின்றுவிடாது நமது சமூகத்தில் நிலவுகின்ற, யாழ், சைவ, வேளாள, ஆணாதிக்க, மேட்டுக்குடி சித்தாந்தங்களையும், அவை சார்ந்த ஏனைய அதிகாரத்துவங்களையும் 'பறை” எதிர்த்து குரல்கொடுக்கும். அனைத்து அடக்குமுறைகளுக்குகெதிராகவும் ஓங்கி ஒலிப்போம். எம்மோடு கைகோர்க்கும்படி அனைவருக்கும் பறை அறைகூவுகிறது. புகலிடத்தில் வெளிவந்த பல சஞ்சிகைகளும் நின்றுபோய் ஒரு சில மட்டுமே அவ்வப்போது தலைகாட்டி வருகிற நிலைமையை நாம் கவனத்திற்கெடுப்போம். எங்கள் எழுதுகோல்களை கூர்மையாக்கிக்கொண்டு உங்கள் முன் உயிர்க்கிற இந்த வேளை, ரிச்சர்ட் டி சொய்ஸா, சபாலிங்கம், நிமலராஜன், பிரேமகீர்த்தி டி அல்விஸ், குகமூர்த்தி, செல்வி, றோகண குமார என அனைவரது நினைவுகளோடும் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்து மீள உயிர்க்கின்றோம். எங்கள் குரல்கள் என்றும் ஒலிக்க, எங்கள் எழுதுகோல்கள் என்றும் எழுத்தைப் பிரசவிக்க எங்களுக்கான மனவலிமையை (moral) உங்களிடமிருந்து என்றும் எதிர்பார்க்கிறோம்.

நமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் ஊடகங்கள்

என்.சரவணன் 'மத்திய கிழக்கில் ஒஸாமா பின்லாடனின் பேட்டியை எந்த ஊடகமும் வெளியிடக் கூடாது.”இது அமெரிக்கா மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளுக்கு சமீபத்தில் வெளியிட்ட எச்சரிக்கை. உலகின் அதி வல்லமை பொருந்திய அமெரிக்காவா இந்த மத்திய கிழக்கு ஊடக வெளிப்பாட்டுக்கு பயப்படுகிறது என்று ஆச்சரியம் எற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. ”சர்வ வல்லமை படைத்த” சண்டியருக்கும் ஊடகத்தின் பாத்திரம் என்ன என்பது நன்றாகவே தெரியும். இதே வேளை நியுயோர்க்கின் மீதான தாக்குதலை பற்றி ஊதிப் பெருப்பிக்கின்ற காட்சிப்படுத்தல்கள் தொடர்ச்சியாக ஒரு மாதகாலமாக திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்பட்டு அனைவரதும் உணர்ச்சிகளும் தூண்டப்பட்டன. ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதல் இலக்கு தவறாதது என்பதை காட்ட திரும்பத் திரும்ப செயற்கைக் கோளின் படங்களின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட சில படங்கள் மட்டும் திரும்பத் திரும்ப காட்டப்பட்டன. அமெரிக்கத் தாக்குதலில் மாண்டவர்களைப் பற்றி திரும்பத் திரும்ப காட்டடுவதும் அதே வேளை முஸ்லிம்களின் ஆரவாரங்களை மட்டும் காட்டுவதுமான திரிக்கப்பட்ட செய்திகளை காட்சிப்படுத்தல்களுக்கூடாக ஆப்கானிஸ்­தான் மக்களின் மீதான (குறிப்பாக முஸ்லிம் மக்களின் மீதான) ஆத்திரத்தை தந்திரமாக தூண்டிக் கொண்டேயிருந்தது. இதே சாட்டொடு பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் முற்று முழுதாக மூடி மறைக்­கப்­பட்டன. ஈராக் மீதான தாக்குதல்கள் மூடி மறைக்கப்பட்டன. முஸ்லிம் மக்களின் உண்மையான நியுயோர்க் நிகழ்வு பற்றிய யதார்த்தமான அபிப்பராயங்கள் மூடிமறைக்­கப்பட்டன. சம்பவத்தின் பின்னணி குறித்த விபரங்கள் தெரியாத நிலையில் ஒரு நாட்டின் மீதான அனைத்து தாக்குதல்களும் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. நடத்தப் போகும் அட்டுழியத்துக்கான முன்கூட்டிய நியாயங்கள், சோடனைகள் வேகமாக பரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டா­ளிகளான மேற்குலகு உலகிலேயே மிகப்பெரும் பயங்கர ஆயுதமான ஊடகத்­தைத் தான் இவையனைத்துக்கும் நம்பியிருந்தன. 90களில் ஈராக் மீதான அமெரிக்க தாக்குதல்கள், மற்றும் அதன் நியாயப் படுத்தல்கள், நேரடியான ஒளிபரப்புகள் மூலம் ஆற்றிய பாத்திரத்தை இன்னமும் நாம் மறந்திருக்க மாட்டோம். ஊடகம் பற்றிய நாம் இத்தனை தூரம் விளங்க முடியாதளவுக்கு இதே ஊடகங்­களால் நாம் வழி நடத்தப்படுவது கூட நமக்கு தெரியாதபடி நாம் வைத்திருக்கப்பட்டிருப்பது தான் மிகப் பெரும் அவலம். இது குறித்த நமது ஆழ்ந்த பார்வையை மேலும் நாமிங்கு செலுத்துவோம்.
அது என்ன? இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (media) இருக்கப்போகிறது. ஊடகத்தின் நேர்ப்­படியான (positive) பாத்திரத்தைப் போலவே எதிர்மறை(nagative) பாத்திரமும் உண்டு. ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்து­கிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவ­தன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பெரும்போக்கு(mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்­டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலை­நிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.
ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம் அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று அர்த்தம் என்பர் சிலர். இது உண்மையிலும் உண்மை. ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடம் சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு. இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதா­யத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஊடகம் இன்று சகல­வற்றையும் தீர்மானிக்­கின்ற முக்கிய கருவியாக ஆகி­விட்­டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டி­ருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகா­ரத்தை நிலை­நாட்ட இந்த ஊட­கங்­களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாக­வும் கையாண்டு வருகி­ன்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனை­களை, ஆதிக்க சிந்த­னைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இவை, இந்த கைதேர்ந்த ஊடகங்களை கையாள்கின்றன.
ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற வகையில் அதன் சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவ­துமாக அதிகார சக்திகள் செய்து வருகின்றன.
எனவே தான் உலகின் பல்வேறு புரட்சிகர சக்திகள் இன்று ஊடகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முனைப்பு காட்டுகின்றனர். அதுமட்டு­மன்றி இன்றைய புரட்சிகர சமூக மாற்றத்துக்காக போராடும் சக்திகள் எதிரி கொண்டிருக்கும் இந்த ஊடக ஆற்றலை எதிர்த்து நிற்கக்கூடிய வகையில் ஊடக வளங்களை’ஆற்றலை தாமும் கைப்பற்ற முனைகின்றன. இது இன்றைய அதிகாரத்துக்காகப் போராடும் சகல சக்திகளுக்குமான முன்நிபந்த­னையாக - சித்தாந்த மேலாதிக்கத்தை நிலைநாட்­டுகின்ற ஊடகங்கள்- ஆகிவிட்டிருக்கின்றன.
இந்த ஆதிக்க சித்தாந்தங்களை நிலைநாட்­டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிமைத்துவ சமூக அமைப்பை ஏற்படுத்­தவும், அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி வருகின்றன.
நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism ) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடாக மாபியா (Media Mafia ) என்றும் ஊடக வன்முறை (Media Violation ) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்­தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்­துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of power ) பயன்படுத்தப்­படுகின்றன.
ஊடகங்களின் பன்முகத்தாக்கம் பற்றிய கரிசனையானது தகவல்தொழில்நுட்ப வியாபகத்­தோடு அதிகரித்ததெனலாம். இந்நிலையில் தான் ஊடகவியல் பற்றிய சமூகவியல் ஆய்வுகள் இன்று அதிகரித்­துள்ளன. சிவில் சமூகத்தில் அது ஆற்றும் பாத்திரம், உற்பத்தி உறவுகள்- குறிப்பாக மூலதனம் இதில் செலுத்தி வருகின்ற நிர்ப்பந்தங்கள், மூலதனத் திரட்சி ஊடகத்தில் காலூன்ற எடுத்துவரும் முயற்சி, திறந்த பொருளாதாரக் கொள்கையின் விளைவாக பன்னாட்டு நிறுவனங்கள் தரகு முதலாளிக­ளுக்கூடாக ஊடகத்தைக் கைப்பற்றுவதில் எடுத்துவரும் முயற்சிகள், நவீன அரசுகள் தனது அடக்குமுறை இயந்திரங்களில் ஒன்றாக இதனை பயன்படுத்த தலைப்படு­கின்ற போக்கு, அவ்வாறு அடக்குகின்ற மற்றும் அடக்கப்படுகின்ற சக்திகளின் எதிர்காலம் என பல கோணங்களில் இவை குறித்து அலச வேண்டியுள்ளது.
பெரும்பாலும் ஊடகத்தின் உட்கட்ட­மைப்பு (Infraistructure) பற்றியே பெருமளவான ஆய்வுகள் செய்யப்பட்டி­ருக்­கிற நிலையில் அதன் புறநிலை தலையீடு, தாக்கம் எதிர்காலம் குறித்து தற்போதைய ஆய்வுகளில் கூடிய கரிசனை கொள்ளப்­பட்டு வருகிறது.
ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் நிலவுகின்ற ஆதிக்க சித்தாந்தங்களை மீளுறுதி செய்து, அதனை மீள கட்டமைக்கின்ற பணியினை ஆற்றுவதே, ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்தை நிலைநாட்ட முன்நிபந்தனையாக இருக்கிறது. எனவே அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு, அடிமைத்துவத்தை நிலைநாட்டி அதற்கு அடிபணிய வைக்கவோ அல்லது அவற்றுடன் சமரசம் செய்து கொண்டு வாழவும், பழக்கவும் ஏற்கெனவே எமது சமூக அமைப்பில் மதம், கல்வி, பண்பாட்டு கலாசார ஐதீகங்கள், சட்டம் என நிறுவப்பட்டுள்ளன. இவ்வத்தனையையும் ஒருங்கு சேர செய்து முடிக்க இலகுவான வழியாக இன்றைய ஊடகம் ஆற்றல் மிகுந்ததாக உள்ளது. எனவே தான் ஆதிக்கச் சக்திகள் கருவிகள் இதில் அக்கறை செலுத்துவது இன்றிமையாததாக ஆகிவிட்டிருக்கிறது.
அடக்கப்படும் மக்கள் பிரிவினர் முகம் கொடுக்கும் இன்னல்கள் வெகு சாமர்த்தியமாக மூடி மறைக்கும் ஆற்றல் இந்த ஊடகத்துக்கு உண்டு. அதுபோல இல்லாத ஒன்றையும் இருப்பதாக காட்டவோ அல்லது அதனை ஊதிப்பெருப்பிக்கும் ஆற்றலும் இந்த ஊடகத்துக்கு உண்டு. இவ்வாறு மறைப்பதும், ஊதிப்பெருப்பிப்­பதும் ஊடகத்தை தன்னகத்தே கொண்டி­ருக்கும் சக்திகளின் நலன்களிலேயே தங்கியிருக்கின்றன.
கிளின்ரன் மோனிக்கா லிவின்ஸ்கி விவகாரம் பற்றி திரும்பத்திரும்ப பேசிய ஊடகம் உள்நாட்டில் நடந்த கோணேஸ்வரி குறித்தும், கிருஷாந்தி குறித்தும் அதை விட குறைந்த முக்கியத்துவத்­தையே தரும். சிங்கள ஊடகங்கள் அதை விட குறைந்த முக்கியத்துவத்தை தரும் அல்லது ஒன்றும் தராது. கிளின்ரனின் நாய்க்கு சுகமில்லாமல் போனது, சர்வதேச அளவில் செய்தியாகும் அதே வேளை வன்னிப் பட்டினிச் சாவு உள்நாட்டிலும் தெரியாமல் செய்யப்படும்.ஸ
அமெரிக்காவில் ரொனால்ட் ரேகனும், தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா..., இலங்கையில் காமினி பொன்சேக்கா போன்ற வெறும் திரையுலக நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்களாக ஆக்கப்பட்டதும் இந்த சினிமா எனும் ஊடகத்தையும், ஏனைய ஊடகங்களும் ஊதிப்பெருப்பித்து ஏற்படுத்திய மாயை என்பதை நாமெல்லோரும் விளங்கிக் கொள்வோம்.
எப்போதும் எந்த சக்தியும் அல்லது தனிநபரும் தான் கொண்டிருக்கும் அக-புற, ஆற்றல் ’வளங்கள் தக்கவைக்கப்படுவதற்­காக’ அதிகரிக்கப்படுவதற்காக அவை அதிகாரமாக உருவெடுக்க வைக்கின்றன. வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்­துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவை நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். ”மதத்­தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.
இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்­கின்­றன.குறைத்து மதிப்பிடப்படு­கின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடி­யாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்­டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்க­றைக் கிடையாது. இலங்கை தொலைக்காட்­சி சேவைகளில் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்­துக்கு சராசரியாக அறுபதி­னா­யிரம் ரூபா வரை அறவிடப்பட்டு வருகி­றது என்பதைத் தெரிந்தால் அசந்து போவார்­கள். ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்­படு­கி­ற­தென்றால் எத்தனை முறை குறிப்­பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படி­யெனில் எவ்வளவு தொகை கொடுக்கப்பட வேண்டும்? நம்மீது அது எந்த விளை­வையும் ஏற்படுத்தப் போவதில்­லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விள­ம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வா­றெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? என்ன விளைவை ஏற்படுத்தி விடுகிறது? தகவல் களஞ்சியங்களை வைத்திருக்கும் சக்திகளால் உலகு ஆளப்படப் போகிறது எனும் கருத்தாக்கம் வலுவாகி வருகின்றது. இது பற்றிய பல்வேறு ஆராய்ச்சிகள் தற்போது மேற்கொள்ளப்­பட்டு வருவதை இன்டர்நெட் செய்திகள் கட்டுரைகளிலிருந்து அறிய முடிகிறது. எது பற்றிய முடிவுகளுக்கு வருவதற்கும் அடிப்படையில் தரவுகளை-தகவல்களை நம்பி­யிருக்க வேண்டிய தேவை நிலவுகின்ற நிலையில் போட்டி போட்டுக்கொண்டு தகவல்களை முன்கூட்டியே அறிய ’பெற முயற்சிகள் நடக்கி­ன்றன. அது போலவே தகவல்களை களஞ்சியப்­படுத்துவதற்கும் அவற்றைத் தருவதற்காகவும் ’சந்தைப்­படுத்துவதற்காவும் போட்டிகள் நிலவப்­போகின்றன. இந்நிலையில் தகவல் தொழில்­நுட்பத்தின் மீது மூலதனம், ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 'நட்சத்திர யுத்தம்”, ”வான்­வெளி யுத்தம்” என்கிற கருத்தாக்கங்கள் மங்கி இனி வரப்போகும் காலம் தகவல் யுத்தத்துக்கான (IT War) காலம் என்கிற கருத்தாக்கம் வலுவாகி வருகின்றன வெறும் தரவுகள்,தகவல்களை சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற வேலையை ஏற்கெனவே உலகில் முதலாளித்துவ ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டன. அமெரிக்கா இதற்காக தமது உயர்ந்தபட்ச தொழில்நுட்­பத்தையும், வளங்களையும் பயன்படுத்தி வருவது இரகசியமானதல்ல. தரவுகள்,தகவல்கள் பரப்பப்படுவதற்கு/அனுப்பப்படுவதற்கு/விற்பனைசெய்யப்படுவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்று இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்­பட்டு விடுகின்றது. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்­கப்பட்டுவிடுகின்றன. இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இது தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்­கின்றது. இன்னும் சொல்லப் போனால் ஆரம்பித்திருக்கிற மில்லேனி­யத்தின் (ஆயிரம் ஆண்டுகளைக் குறிக்­கின்ற millenium) முதல் நூற்றாண்டை தகவல் புரட்சி நூற்றாண்டு என்கின்றனர். தகவலைக் கொண்டிருக்கிற சக்திகளே அதிகார சக்திகளாக ஆகக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் எனும் கருத்தாக்கம் இன்று நம்பக்கூடியதாக உள்ளது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து, உற்பத்தி செய்­­யப்­பட்ட அத்தகவலை அரசியல்மயப்­படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து,திரி­புபடுத்தி,பெருப்பித்து, சிறுப்­பித்து சந்தைக்கு விடுகின்றன. இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோ­பாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்­போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்கு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தான் சந்தைப்­படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை’ கருத்தாக்கங்­களை’புனைவுகளை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்­துவது, போதைகொள்ளச் செய்வது. இதனை நாம் உன்னிப்பாக அலச வேண்டியி­ருக்கிறது. அடுத்த நூற்றாண்டின் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் இருக்கப்போகிற நிலையில் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருப்பது அவசியத்திலும் அவசியம். மொத்தத்தில் உலகில் ஆளும் வர்க்கங்­கங்­கள்’ சக்திகள் தமது நவகாலனித்­துவத்தை அடுத்த நூற்றாண்டுக்கும் எடுத்துச் செல்வது இந்த தகவல் தொழில்நுட்பத்தை நம்பியே என்பதை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய உலகமயமாதல் போக்குக்கூடாக மலினத்துவத்தை வேகமாக மக்கள் மயப்படுத்துவதற்கும் இந்த தகவல் தொழில்நுட்பத்தை’ஊடகத்தைத் தான் நம்பியிருக்கிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் நவ பாசிசம் என்பதன் புதிய வடிவம் உயர்தொழில்நுட்பம் மிகுந்த தகவல் தொழில்நுட்பத்துக்­கூடாகவே மேற்கொள்ளப்படப் போகிறது. அதுபோல அதனை முறியடிக்க முனையும் எந்த சக்தியும் இந்த இதே ஊடகத்தை கருத்திற் கொள்ளாமல் துரும்பு கூட முன்னேற முடியாது என்பது குறித்து மீள மீள எச்சரிக்கை கொள்ள வேண்டியுள்ளது.

நியுயோர்க் தாக்குதல்: இது முடிவல்ல முடிவின் தொடக்கம்

ரோசா அதிர்ந்தது அமெரிக்க வான்வெளி. புதைந்தது உலகப் பொருளாதார மையம். உலக ஆக்கிரமிப்புக்களைத் திட்டமிடும் தலைமையகமும், அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமுமான பென்டகன் பாதுகாப்புக் கோட்டைகள் பலவற்றைத் தாண்டித் தகர்த்துத் தரைமட்டமாக்கப்பட்டது. தமக்கு அடிபணியாத் தலைவர்களை வேட்டையாட முயன்று வரும், அமெரிகத் தலைமையோ பாதுகாப்பிடம் தேடி ஓடி ஒழிந்தது. மிகக் கச்சிதமான திட்டமிடல். வியப்புற வைக்கும் தாக்குதல் ஒருங்கிணைப்பு. பிசகின்றித் தாக்கித் தரைமட்டமாக்கப்பட்ட பொருளாதார, இராணுவ இலக்குகள். உலகப் புரட்சியைத் தடுத்து நிறுத்தி விட்டோம் என மார்தட்டிக் கொண்ட ஏகாதிபத்திய அரச பயங்கரவாதிகளுக்குக் கிடைத்தது மரண அடி. பொருத்தமான நாளில், உலகப் புரட்சியைக் கனாக் கண்ட, பாரதியின் நினைவுநாளில், உலகப் பயங்கரவாத தலைமை அரசின் மீது விழுந்த பொறிபறக்கும் இவ்வடியானது, அகிலம் பரந்து தம் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு ஒளி வீச்சாகும். அநீதியின் மீது கட்டியெழுப்பப்படும் எந்த கோபுரங்களும் மாடங்களும் தகர்ந்து தவிடுபொடியாகவே விதிக்கப்பட்டவை என்ற உண்மை உலகிலுள்ள ஒவ்வொருவரின் கண் முன்னே நிதர்சனமாகியது, நிஜமாகியது! நியூயோர்க் ஆகட்டும், இலண்டன் ஆகட்டும், டோக்கியோ ஆகட்டும், கொழும்பின் இதயப் பகுதியாகட்டும். வினையும் ஒன்றே விளைபயனும் ஒன்றே. வியந்தனர், அடக்கியொடுக்கப்பட்ட தேசங்களும் மக்களும்! ஆயினும் அம் மனங்களிலோ அங்கு மரணித்த மக்களுக்கான சோக நினைவுகள், ஒரு ஓரமாய்! மரணங்களின் அவலத்தை இழப்புக்களின் சோகத்தை, தினம் தினம் அனுபவிக்கும் நாம் அறியோமோ அவ்அமெரிக்க மக்களின் சோகத்தை! அமெரிக்க அரசின் வரலாற்றுக் கொடுமையினால் விளைந்த தவிர்க்க முடியா வினைக்கு அம் மக்கள் கொடுக்க வேண்டியிருந்த பாரிய விலைக்காக உலக மனித நேய சக்திகளுடன் இணைந்து நம் மனங்களும் கசிகின்றன. ஆக்கிரமிப்பாளர்களே! உங்கள் தோல்விகளையும் அவமானங்களையும் மறைக்கும் நோக்கில், உங்கள் ஆக்கிரமிப்பு நோக்கங்களை எதிர்த்து நிற்கும் தேசங்களையும் மக்களையும் வேட்டையாட இதனை வாய்ப்பாக முனைபவர்களே! உங்களுக்கும் ஒரு எச்சரிக்கை! அதற்கான விலைகளை மறுபடியும் மறுபடியும் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்த செப்ரெம்பர் 11 மீளவும் மீளவும் அறி­விக்கும். எல்லை தாண்டிக் கொடுமை­யிழைக்கும் ஏகாதிபத்திய பயங்கர­வாதத்தின், விதைப்புக்களுக்கான பன்­மடங்கு அறுவடைதான் இது! மேற்கு நாட்டு மக்களே, உங்கள் அரசுகளின் தாங்கமுடியாக் கொடுமைகளின் விளைவுகளே இது. உங்கள் அரசுகளின் பல்வேறு அநாகரிக யுத்த முறைகளுக்கும், இராஜதந்திர கபடத்தனங்களுக்கும் ஊடகத்துறைப் பயங்கரவாதங்களிற்கும் கிடைத்த பொருத்தமான நவீன பதிலடிதான் இது. அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளை கொன்றொழித்து உங்கள் முன்னோர்கள் கட்டியெழுப்பிய ”நாகரீக அரசு”க்குக் கிடைத்த மறக்க முடியாப் பாடமே இது. ஆபிரிக்க மக்களை அன்று அடிமைகளாக்­கிச் செய்த கொடுமைகளுக்கு கொடுத்த விலைதான் இது. இன்று, மூன்றாம் உலக மக்களாகிய எம்மீது விரித்த ஒடுக்குமுறைக் கரங்களின் பதில் விளைவே இது. அக்கிரமக்காரர்களே, உங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த உலக சாதனையை நாகரீகமற்ற செயல் என்று எத்தனைதான் நீங்கள் கூச்சலிட்டாலும், உங்கள் கொடூர வரலாற்றை உலக மக்கள் அறிவர். அன்றும் இன்றும் நீங்கள் நடாத்தும் அரசியல் பித்தலாட்டங்களையும், நிதி மோசடிகளையும், இராணுவக் கொடுமைகளையும் அறிவர். அமைதி பூத்துக்கிடந்த தேசங்களுக்கு இடையில், யுத்தங்களைத் தூண்டிவிட்டு ஆயுங்களை விற்று, கோடிக்கணக்கான மக்களைக் கொன்று குவிக்கக் காரணமாகும் உங்கள் நாகரீகம் பற்றி, அடக்கப்பட்டு வரும் மக்களாகிய நாம் நன்கு அறிவோம். ஒரே நாளில் ஒரு இலட்சம் உயிர்களை ஈராக்கில் பலிகொண்ட உங்கள் நாகரீகங்களையோ அல்லது உங்கள் அணுக்குண்டுகளை பரீட்சித்து அரை நூற்றாண்டுக்குப் பின்பு இன்றும் ஜப்பானில் மனித உயிர்களைச் சிதைத்து வரும் உங்கள் நாகரீகங்களை நாம் காண்கின்றோம். என்னதான் உயர் தொழில் நுட்பங்க­ளாகட்டும், விஞ்ஞான வழிமுறைகளா­கட்டும், உன்னத போராளிகளின் உயிராயுதங்களுக்கு முன் அவை தூசு. கட்டுநாயக்காவிலும், சியோனிசத் தெருக்களிலும் இராணுவ மையங்களிலும், லெபனானிலும், யேமன் துறை முகத்திலும் உலக பயங்கரவாதத்தின் மையங்கள் பலவற்றிலும் இந்த உண்மை துல்லியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. ஒடுக்கும் மூளைகளினதும் இயந்திரங்க­ளினதும் நுண்ணிய வழிமுறைகளை விஞ்சிய உத்திகளை ஒடுக்குமுறைக்­குள்ளாகும் மக்கள் உருவாக்கிக் கொண்டு தான் இருப்பர். ஒடுக்குமுறையாளர்கள் என்னதான் தம்மைப் பாதுகாக்க முயன்றாலும், உயிர்களை அர்ப்பணித்து அவர்களைத் தகர்க்கும் சக்திகள் உருவாகக் காரணமே அக் கொடுங்கோலர்கள்தான். இந்த புதிய போர் மார்க்கம் என்பது உலக சமநிலையை ஆதிக்க அரசுகள் அரச பயங்கரவாதத்தினால் சிதைத்தமையினால் பிறந்த புதிய வகை உத்தியே தவிர வேறென்ன? அவை மங்காத் தாக்குவலிமை பெறு­வதற்கு காரணங்கள் ஒடுக்குமுறையா­ளர்களின் கொடுமைகள்தான். இக் கொடுமைகளுக்கு உட்பட்டுக் கொண்டி­ருக்கும் மக்களின் ஆசுவாசப் பெருமூச்­சுக்களையே மூன்றாம் உலகத்தின் தெருக்களின் கண்டீர்கள்! தமது துன்பம் தொலைக்க ஏதேனும் செய்யப்படும் என்ற நம்பிக்கையின் ஆசுவாசமே அது என்பதைப் புரிந்து கொள்வீர்! எங்கோ இருக்கும் ஆசியர்களும், ஆபிரிக்கர்களும், அராபியர்களும் உங்களை எதிரிகளாகக் கொண்டு தம்முயிர் ஈந்து தம்முடலம் பொசுக்கி உங்களின் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் நிலை ஏற்பட்டது எதனால்? உங்கள் அரசியல், பொருளாதார, இராணுவத் தலைவர்களின் அரச பயங்கரவாத்தினால்தான். அதை மறைக்க அத் தலைவர்களும் ஏன் அங்­குள்ள மக்களும் கூட போராளிக­ளுக்குச் சூட்டுகின்றீர்கள் அப் பயங்கரவாதப் பட்டத்தை! அதிநவீன, அதிஆற்றல் மிக்க அதி பயங்கர எதிரியுடன் பொருத, நீங்கள் கூறும் மனிதப்பண்புப் போர்முறைக்காகக் காத்திருப்­பது போராளிகளைப் பொறிக்­குள் வீழ்த்தும் சாணக்கியமே. ஆக்கிரமிப்பு அரசுகளின் பிரசைகளே, உங்களது அக்கிரம அரசுகள் எங்களைப் பிழிந்து பெற்ற பலாபலன்களில் ஒரு கூறைத்தான் நீங்களும் அனுபவித்து வருகின்றீர்கள்! இப்போது உங்கள் அரசுகளும் முன்­னோர்களும் விதைத்த ஒடுக்குமுறைக­ளினது விளைவின் பலாபலன்களின் இன்னொரு பண்பைத்தான் இப்போது எதிர்கொண்டுள்ளீர்கள். உங்கள் துன்பத்தை உணர்க்கின்றோம். எங்கள் மீதான கொடூரங்களை நீங்கள் உணர்ந்ததுண்டா? ஈராக் மக்கள் மீதான கொடிய தாக்குதலுக்கு அன்று நீங்கள் உங்கள் அரசுக்கு ஒப்புதல் கொடுத்ததை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். எமது நெடிய துயரங்களுக்கும் உங்களது சுகமான வாழ்வுக்கும் எவ்வளவு தொடர்போ, அவ்வளவு தொடர்பு உம் துயரங்களுக்கும் எம் சுதந்திரத்திற்கும் உள்ளது. இதனைப் புரிந்தீர்கள் எனில், எதிர்காலத்தை மாற்றியமைக்க நீங்களும் முன்வரவேண்­டியிருப்பதை உணர்வீர்கள். ஆம், மாற்றம், அடிப்படை மாற்றம் வேண்டும்! அனைவரிடமும் ஏற்பட வேண்டும். அது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். இந்தப் போர்முறை தந்த அதிர்வின் உள அதிர்ச்சி உங்கள் அரசுத் தலைவர்களுக்கு மாத்திரமல்ல. உலகிலுள்ள எல்லா ஒடுக்­குமுறையாளர்களுக்கும் கூட ஒரு பேரடி. கோபுரங்களையும் பாதுகாப்புக் கோட்டை­களையும் அவர்கள் காலி செய்வதைப் பாருங்கள். கொடியவர்களுக்கும் அவர்களை ஆதரித்து நிற்போருக்கு இது படிப்பினையாகட்டும். வரலாறு முழுவதும் நின்று நிலைக்கும் மரண அச்சுறுத்த­லாகட்டும். கோடிக்கணக்கான மக்களின் குருதியைப் பிழிந்து வானுயர் கோபுரங்கள் கட்டி, உலக மக்களைத் தம் காலடியில் என்றென்றைக்கும் கீழ்ப்படுத்தலாம் என்ற கனவில் மிதக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இது ஒரு முடிவான எச்சரிக்கையாகட்டும். உலகமயமாக்கலில் இது ஓரு புதிய அத்தியாயம். வரலாற்றில் ஒரு புதிய திருப்பம். ஒடுக்குமுறையாளர்கள் வென்று விட்டார்கள் என்பதை நிலைமறுத்தது இத்தாக்குதல். இனி, உலக ஒடுக்குமுறையா­ளர்கள் தங்கள் நிலைகளை மீளக் கணக்கிட வேண்டிய காலம். ஒடுக்குமுறைக்கு உள்ளாகுபவர்களுக்கு இன்னும் போராட பல வழிகள் உள்ளன என்று நிறுவப்பட்ட காலம். உலக மக்களின் விடுதலைக்கு இதுவோர் புதிய அத்திவாரம். ஆம்! அத்தகைய ஒரு காலத்தை எமக்குத் தந்தவர்களே இத்தாக்குதலை மேற்கொண்ட போராளிகள்! அவர்களுக்கு நம் அஞ்சலிகள் என்றும்! ஓ முகமறியாப் போராளிகளே! உன்னதமான வீரர்களே! உலகம் நிலைக்கும் வரைக்கும் உங்கள் நினைவுகளால் மனிதகுலம் சிலிர்க்கும். உலகெங்கும் அடக்கியொடுக்கப்படும் மக்களின் பிரதிநிதிகள் நீங்கள். உலக அரச பயங்கரவாதிகளாகிய ஏகாதிபத்தியங்களால் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் உன்னத தலைவர்கள் நீங்கள். உங்கள் வழியில் ஒவ்வொரு சின்னஞ்சிறிய தேசமும், வீறு கொண்ட அதன் ஒவ்வொரு உயிரும் உலக விடுதலை என்ற உங்கள் இலட்சியங்களை அடைய நிச்சயம், தம் பங்காற்றும். உங்களுக்கு மொழியில்லை. நாடு இல்லை. எல்லை இல்லை! ஆனாலும் உங்கள் துடிப்பும் எங்கள் துடிப்பும், உங்கள் எதிர்பார்ப்பும் எங்கள் எதிர்பார்ப்பும், உங்கள் உணர்வுகளும் எங்கள் உணர்வுகளும் ஒன்றே! புரட்சிகர வரலாறு தன் உச்சாணியில் உங்களை வைத்து என்றென்றைக்கும் போற்றிப் புகழும் குதூகலித்துக் கொண்டாடும். தோழர்களே! நீங்கள் ஆறுங்கள். உங்கள் எண்ணங்களை இறுதிவரை நிறைவேற்றும் பல்லாயிரம் உயிர்கள் உருவாக நீங்கள் வித்துக்களானீர்கள். அது வளர்ந்து விரிந்து நிச்சயம் விருத்தி பெறும். அவர்கள், உங்கள் கனவுகளையும் எங்கள் கனவுகளையும் நிறைவேற்றுவர்! ஆனால், இது முடிவல்ல. புதிய தொடக்கம்!

நாதியற்ற நாங்கள்

சுந்து-1983

கைதட்டி சிரிக்க இங்கொன்றும் இல்லை - எனினும் கை கொடுத்துதவுங்கள் இதுவோர் அனாதையின் கதை இதுவோர் அனாதையின் கதை காலங்காலமாய்...
போராடும் இனமொன்றின் கண்ணீர் புஸ்பங்கள் வரிவரியாய் எழுதியவோர் சோகக்கதை!
இதுவோர் சோகக்கதை! அம்மையார் எமையாண்டு அனாதையாக்கி அரசியல் தஞ்சம் புகவைத்தாள் வெளிநாட்டில் சொந்த நாடோ எமக்கில்லை சொந்த மொழியோ செல்லாது சொல்லவோ வெட்கம்!
அம்மையார் மாண்டார் வந்தான் ஓர் அரக்கன் எமையாட்சி செய்ய யாருக்கையா சொல்ல பெற்ற தாயுமில்லை பிறந்த பொன்னாடுமில்லை இருக்கவோ இடமுமில்லை வந்தோம் வெளிநாடு கலைக்கின்றனர் கறுப்பர் என்கின்றனர் யாருக்கு சொல்ல யாருக்கு விளங்கும் எம்நிலை இழப்பதற்கு எதுவுமில்லை வெல்வதற்கு ஈழமுண்டு என்றோ
ஒரு நாள் கிடைக்கின்றன எம் ஈழம் எம்மையெல்லாம் காக்கும். அனாதைப்பிடியிலிருந்து.... அந்நாள் எந்நாளோ!

சிறிலங்கா: துரோகங்களின் புகலிடம்..........

கோமதி


பெப்ரவரி 4ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் நமக்கு கிடைத்த நாளென திருப்பி திருப்பி புனையப் படுகின்ற ஒரு மிகப் பெரிய கும்பமேளா சிறிலங்காவில் நடப்பதுண்டு. இந்த நாளன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடும் படி பணிக்கப் படுவார்கள். அவ்வாறு தேசியக்கொடி பறக்கவிடாதவர்கள் சந்தேகத்திற் குள்ளா­வார்கள். நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிகள் இந்த நாளில் அமுலுக்கு வரும். ஏனைய நாளை விட சுதந்திரம் பறிக்கப் பட்டவர்களாக அனைத்து மக்களும் பாதுகாப்பு என்கிற பேரில் இம்சைப் படுத்தப்படும் நாளும் அது. ஏன் அரச தலைவர்களும், அதன் பிரிவாரங்களும் கூட அதிக பந்தோபஸ்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும் நாட்களும் அவை தான். சுதந்திர தினமானது இந்தளவு கேலிக்குரியதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.. சுதந்திரதினம் இந்தளவு வேடிக்கையாகிப் போனதன் பின்னணியின் வரலாற்றுப் பின்புலம் பலரால் மறக்கப்படுகின்ற ஒன்றாகியும் விடுகிறது. 50வது சுதந்திரப் பொன்விழா 1998இல் இலங்கையில் நடத்தப்பட்ட விதம் மிகப்பெரிய நகைப்புக்கிடமான வகையில் இலங்கையில் நடத்தப்பட்டது. எந்த ஏகாதிபத்திய காலனித்துவ அரசு சிறிலங்காவை அடக்கிவைத்திருந்ததோ. 50 வருடங்களின் பின் அதே அரசின் இளவரசரான சார்ள்சின் தலைமையில் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது தான் மேலும் நகைப்பிற்கிடமானது.


தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் முழுவதும் சீரழிக்கப்பட்ட நிலையில், இருப்பதும் இழக்கப்பட்ட, அகதிகளாக, கைதிகளாக, நாடோடிகளாக, காலம் கடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் மரண பயத்தில் மனோ பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் அடிமை வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்.


இந்த அடிமை சாசனத்துக்கு வயது 50. இலங்கை காலனித்துவத்துக்கு முன் தமிழ், சிங்கள அரசுகளாக இருந்த நிலையில் காலனித்துவவாதி­கள் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பின் விட்டுவிட்டுப் போகும் போது அதிகாரத்தை சிங்கள பௌத்தர்களிடம் வழங்கி விட்டுப் போனதே வர­லாறு. இந்த வரலாறுக்குத் தான் 50 வயது. சிங்கள-பௌத்த-ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சி கிடைக்க, அவர்களல்லாதவர்கள், அதிகா­ரத்துக்கு பலியாக்கப்பட்டு வந்ததற்கு தான் 50 வருடங்கள். இந்த 50 வருட காலம் என்பது ஒடுக்கு முறையின் மீது தான் வந்துள்ளது. பொன் விழா என்பது அந்த ஒடுக்கு முறையின் காரி நாளாகத் தான் தமிழ் மக்களுக்கு இருந்தது. வட கிழக்கெங்கும் இது வரைகாலம் பெப்ரவரி 4 என்பது ஒரு காரிநாளாகத் தான் அனுட்டிக்கப்பட்டு வந்திரு­க்­கிறது. இந்த தினத்தில் அங்கு கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு, சிங்கள பௌத்த அடக்குமுறையின் சின்னமான தேசியக்கொடி (சிங்கக்கொடி) எரிக்கப் பட்டு தமிழ் கீதம் இசைக்கப்பட்டு வந்திருக்கிறது. அடக்குமுறையின் அளவு கொஞ்சமும் குறைந்த­தில்லை மாறாக நாளுக்கு நாள் மோசமாக்கப்பட்டு வந்து இன்று தமிழ் மக்கள் தங்கள் தலையெழு­த்தை தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்­கும் நிலையில், அடக்கு முறையின் உச்ச கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் 50வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. யாரால் யாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்? எவருக்கு கிடைத்திருக்கிற சுதந்திரம்? நிச்சயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது இங்கு வாழும் ஏனைய சிறபான்மை இனக் குழுமங்களுக்கோ அல்ல.


அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பௌத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாக­வும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைக­ளைக் பிச்சை கேட்கும் தரப்பினராக­வும் மாறியது. தொடர்ச்சியாக இரங்கிப் போய் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்கக்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளு­டன் பேச முற்படுவது வாக்குறுதிகள் வழங்குவது, ஒப்பந்தம் செய்து கொள்வது, தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கி யெறிந்து விடுவது என இவை ஒன்றும் வரலாற்றில் ஒரு முறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பௌத்த அதிகா­ரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதி­ல்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெறுவதைத் தவிர வேறு மாற்று இல்லையென்பது மீள மீள உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.


இந்த அரை நூற்றாண்டு வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்­பட்ட வரலாறு தான். அது இந்த அதிகாரம் கைமாறப்­பட்ட 50 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்­திற்கு முற்பட்ட காலந்தொட்டு அந்த நூற்­றாண்டின் ஆரம்பத்திலிருந்து- தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்...


முதலாவது நம்பிக்கைத் துரோகம்

1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந்­தனர். இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் ஒரு இயக்கத்தை அமைத்துக் கொண்டனர்.பூரண சுயாட்சிக்கான முயற்சிகளை செய்யாத இந்த அமைப்பு வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை பெறுவதற்­கூடாக தனது நோக்கங்களைத் தணித்துக் கொண்டது. இவ்வாறான சீர்திருத்தக் கோரிக்­கையை முன்னெடுப்பதற்கான ஒரு இயக்கமே இவர்களுக்கு அப்போது தேவைப்பட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடங்குவதற்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். யாழ்ப்பா­ணச் சங்கம் ”தமிழ் மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம்” என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. அதன்படி முடியுமானவரை தமிழ் விகிதாசாரத்திற்கிணங்க பிரதிநிதித்துவமும், மேல்மாகாணத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதற்கு தொழிற்படுவதாக 1918இல் இலங்கை தேசிய சங்கத்தின் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் இலங்கை சீர்திருத்த கழகத்தின் சார்பில் ஈ.ஜே.சமரவிக்கிரமவும் யாழ்ப்பாண சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய சேர்.பொன்.அருணாச­லத்திடம் எழுத்தில் உறுதியளித்தனர்.


1919ஆம் ஆண்டுடிசம்பர் 11ஆம் திகதியன்று இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தினூடாகவே இலங்கையின் படித்த உயர் மேட்டுக்குடித் தலைவர்கள் எல்லோருமாக இலங்­கைக்கான சீர்திருத்த கோரிக்கைகளை விடுத்தக் கொண்டிருந்தார்கள். இ.தே.கா.வின் முதற் தலைவ­ராக சேர்.பொன் அருணாசலம் தெரிவு செய்யப்­பட்டார்.


ஆனால் மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சி­களை ஆங்கிலேய அரசு முயன்று கொண்டிருந்த­போது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படு­வதை இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கியதுடன் அதற்கெதிராகவும் நின்றார். சிங்களத் தலைவ­ர்கள் வாக்குறுதியை மீறியதைத் தொடர்ந்து 1921ஆம் ஆண்டு அருணாசலம் இ.தே.கா.விலிருந்து வெளியேறி தமிழர் மகா சபையை அமைத்துக் கொண்டார். இதன் பின்னர் இ.தே.கா. ஒரு சிங்கள அமைப்பாகவே படிப்படியாக மாறியது. இந்த முதலாவது முறிவு தமிழ் மக்கள் தங்களைப் பற்றி தனித்து சிந்திக்க வைத்தது.
இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இ.தே.கா.வினர் சமரச முயற்சிகளுக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த சமரச முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.


தமிழ்-சிங்கள ஒப்பந்தம்
1921இல் தமிழ் தலைவர்களின் வெளியேற்­றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.கா.வினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினரு­க்­கும் கண்டியச்சிங்களத் தலைமைகளுக்குமிடை­யில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடி­யாகச் சாத்தியப்படவில்லை.1925 யூன் 28ஆம் திகதியன்று தமிழர் மகா சபைக்கும் இ.தே.கா.வின­ருக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. இதன் போது தான் ”சிங்கள-தமிழ் ஒப்பந்தம்” எனப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி


1.வடக்கு-கிழக்கு பிரதேசத்தி­லும், மேல் மாகாணத்திலும் வழங்க­ப்படும் பிரதிநிதித்துவத்­தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

2. இ.தே.க.வின் முன், வைக்கப்­படும் சகல யோசனைகளையும் பாசீலிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கை 1925ஆம் ஆண்டு வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் 3வதாக இருந்தது. ஆனாலும் இவ் ஒப்பந்த விடயங்கள் அடுத்த வருடாந்த மாநாட்டுக்கு ஒத்தி போடப்பட்டது. கட்டாயமாக 1926ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் இது முன்வைக்கப்படுமென பிரான்ஸிஸ் டி.சொய்ஸாவால் கொரயாவுக்கு உறுதியளிக்கப்­பட்டபோதும் அம் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் கூட இது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தேசிய காங்கிரசினர் நம்பிக்கைத் துரோகிகள் என தமிழ் மக்கள் கருதுவார்கள் என அப்போது 'கொரயா' வால் சொல்லப்பட்டது. அதன்படியே நடந்தது. தமிழ் தலைமை இரண்டாவது முறையும் ஏமாற்றப்பட்டார்­கள். இதன் விளைவு தமிழ் அரசியல் தேசிய அரசி­யலிலிருந்து தனித்துச் செல்லத் தொடங்கியது.


பண்டா-செல்வா ஒப்பந்தம்
இந்த இடைக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தன. டொனமூர் (1931), சோல்பரி(1947) ஆகிய அரசியல் திட்டங்கள் பெயரளவில் சில ஏற்பாடுகளை செய்திருந்தபோதும் நடைமுறையில் அவை தமிழ் மக்களுக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை. டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் தான், தனிச்சிங்கள மந்திரி சபை அமைக்கப்பட்டது. இந்திய வம்சாவழி மக்களைப் பாதிக்கக் கூடிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதற்கிடையில் 1948இல் ”சுதந்திரமும்” வழங்கப்­ பட்டது. சோல்பரி அரசியல் திட்டம் தொடர்ந்து (1972 குடியரசு அரசியலமைப்பு வரை) அமுலிலிருந்தது சுதந்திரம் கிடைத்ததுமே மலையகத் தமிழர்களின் உரிமை பறி போனது. 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தானிய சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1952ஆம் ஆண்டு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இறுதியாக மலையக மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தேசியக் கொடி அமைக்கப்பட்ட போது அது சிங்கள பௌத்தர்க­ளின் தேசியக் கொடியாக அமைக்கப்பட்டது. விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்­பட்டன. இந்திய வழ்சாவழி மக்களுக்கெதிரான நாடு கடத்தும் ஒப்பந்தம் (நேரு-கொத்தலாவல-1954) செய்து கொள்ளப்பட்டது.


இதற்கிடையில் 1956ஆம் ஆண்டு தேர்தற் பிரச்சாரத்தின் போது ஐ.தே.க.தமது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கருமமொழி தீர்மானத்தை நிறைவேற்றியது. தாம் அதனை விட தீவிர சிங்கள பௌத்தர் என்பதைக் காட்டுவதற்கு ஸ்ரீ ல.சு.க. தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் தேர்தலில் வெற்றி பெற்றதும் பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சியினர் கொடுரமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதுடன் அது கலவரத்தில் வந்து முடிந்தது. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட­னர். 1957 சுதந்திர பகிஷ்கரிப்பு செய்து, கறுப்புக் கொடியேற்ற முனைந்த நடராசன் எனும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்த நிலையில் 1957 யூலை 20 திகதியன்று ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான எற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் எதிர்ப்பை கண்டு சமரசத்துக்கு வரத் தொடங்கினார்.
1957ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி நள்ளிரவு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஆகியோருக்­கிடையில் காணப்பட்ட இடைக்காலத்திற்கு தீர்வு தரக்கூடிய இவ் உடன்படிக்கையின் படி குறிப்பாக...

1. சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தம்

2. தேசிய சிறுபான்மை மொழியாக தமிழ் உத்தியோக அங்கீகாரம் பெறும்.

3. தமிழ் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக இருக்கும்.

4. நாட்டில் தமிழ் மக்கள் தம் கருமங்களை தமிழில் ஆற்றவும் தமிழில் தமது பண்பாட்டை வளர்க்­கும் உரிமையும் பாதுகாக்கப்படும்.

5. பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெரும­ளவு ”பிரதேச சுயாட்சி” மக்களுக்கு வழங்கப்படும்.

என்ற இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடாத்தவிருந்த மாபெரும் ஹர்த்­தால் நிறுத்­தப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத்­திடப்பட்ட­வுடன் தென்னிலங்கையில் ஆங்காங்கு தாக்குதல்­கள் நடந்தன. ஒக்டோபர் 4இல் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு பேரினவாத யாத்திரை சென்ற போது அது இம்புல்கொடவில் வைத்து அரச சக்திகளினால் முறியடிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களாக இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இழுத்தடிக்கப்பட்டது. 1958 ஏப்ரல் 8 அன்று பண்டார­நாயக்காவின் றோஸ்மீட் பிளேஸ் இல்லத்துக்கு முன் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்க­ளும் பிக்கு எக்ஸத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குமாரும் சத்தியாக்கி­ரகம் இருந்ததைத் தொடர்ந்து அவர்களின் முன்னால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன். ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாக அன்றே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த துரோகத்தனம் சிங்கள அரசாங்கத்தின் முதற் துரோகமாகவும் அமைந்தது. இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு இது கொண்டு சென்றது. மேலும் 1957இல் ”ஸ்ரீ” சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றை எதிர்த்து சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 1958 இனக்கலவரம் நடந்தேறியது தமிழ் மக்களுக்­கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல தமிழர்கள் இதில் கொல்லப்­பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. அகதிகளாக்­கப்பட்டனர். தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்ட­துடன் தொண்ட­ர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டனர், சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டது.
இதற்கிடையில் பண்டாரநாயக்காவும் பிக்கு­வால் கொலைசெய்யப்பட்டு 1960 மார்ச் தேர்தலுக்­கான ஆயத்தங்கள் நடந்தன. தமிழரசுக் கட்சி இரு பெரும் கட்சிகளிடம் நான்கம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. இவ்வொப்பந்தம் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.


தமிழரசுக்கட்சி-ஸ்ரீ.ல.சு.க. உடன்படிக்கை
1.பிரதேச சபைகளை அமைத்தல், குடியேற்றங்­களை நிறுத்தல்,
2.தமிழ் மொழிக்கு சட்ட அந்தஸ்து
3.பிரஜாவுரிமைச் சட்டத் திருத்தம்
4.குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 6 நியமன உறுப்பினர்களில் 4ஐ மலையகத் தமிழர்களுக்கு வழங்குவது. இவ்வாறு ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும்.


இதனை எழுத்தில் பெற்றுக் கொண்ட டட்லி பின்னர் நிராகரித்தார்.
ஆனால் ஸ்ரீ.ல.சு.க. ஏற்றுக் கொண்டது. அக்கோரிக்கைகள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஒட்டியிருப்­பதால் அதனை தாம் ஏற்பதாக சிறிமா தமது பிரதிநிதிகளின் மூலம் அறிவித்தார். இவ்வுடன்படிக்கை­யின்படி சிம்மாசனப் பிரசங்கத்தின் போது தமிழரசுக் கட்சி எதிர்த்து வாக்களித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலகியது.


ல.ச.ச.க. கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் சேர்ந்து ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து மகாதேசாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட போதும் பாராளுமன்­றம் கலைக்கப்பட்டு 1960 யூலை தேர்தலுக்கு வழிவகுத்­தது. தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. வெற்றி பெற்றதும். உடன்பட்ட விடயங்களை அமுல் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தை பிரதமர் சிறிமாவின் தலைமையில் நடந்தது. இப்பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்­கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களம் நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்குவதற்கான சட்டம் பாராளு­மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்­ந்து அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையிலான உறவு முறிவடைந்தது. இது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்று சம்பவங்களில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.


அது மட்டுமன்றி 1961ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச்சிங்களச் சட்டம் பூரணமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்­ந்து த.க.வினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்­கிரகப் போராட்டங்கள் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டதுடன், அவசரகால சட்டம் போடப்­பட்டு ஊரடங்குச் சட்டம் என்பவை பிறப்பிக்கப்பட்டது. பலர் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்­பட்டனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964-10-30) கொண்டு வரப்பட்டு இந்திய வம்சாவழி மக்கள் பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். அதே வேளை அரசாங்கம் பாராளுமன்றத்­துக்கு ஏரிக்கரைப் பத்திரிகை மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழரசுக்கட்சி அதனை எதிர்த்து வாக்களித்த­தைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி கவிழ்ந்தது.


டட்லி செல்வா ஒப்பந்தம்
1965 தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடந்தன. ஸ்ரீ.ல.சு.க. வை தோற்கடிப்பதற்காக டட்லி செல்வநாயகத்துடன் ஒரு இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.


இவ்வுடன்பாட்டை அறிந்த ஸ்ரீ.ல.சு.க. ”டட்லி-செல்வா இரகசிய ஒப்பந்தம்” என தேர்தற் பிரச்சாரம் செய்தது. டட்லி, ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முற்பட்டாலும் இறுதியில் தமிழரசுக் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலை­யில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் காட்டி ஆதரவு வேண்டியது. டட்லி பதவியேற்பதற்கு முன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) இவ்வுடன்படிக்கை பகிரங்கமாக கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்­பந்தம் அடிப்படையில் பண்டா-செல்வா ஒப்பந்த­த்தை ஒத்திருந்தது என்று சொல்லப்பட்டாலும் கூட இம்முறை தமிழ்மக்களின் உரிமைகள் சில விட்டுக்கொடுக்கப்பட்டன என்றே சொல்லலாம்.


1. மாகாண சபைகளை அமைப்பது,
2.வட-கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியை அமுலா-­ க்குவது,
3.சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது. என்பன அடிப்படையாக இருந்தது. மொழி குறித்த விடயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டதாகவே இருந்தது.


இவ்வொப்பந்தம் பிரிவினைவாதத்தின் முதற்படி­யென பிரச்சாரம் செய்தனர் எதிர்க் கட்சியினரும் பிக்குமாரும். அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்­களே நேரடியாக எதிர்க்கத் தொடங்கியதால் 1968இல் ஒப்பந்தம் கைவிடப்பட்ட­தாக அறிவிக்கப்­பட்டது. மீண்டும் ஏமாற்றப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
இதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் போராட்ட வீச்சும் கீழிறங்கத் தொடங்கவே மறுபுறம் தீவிர போராட்டத்தை நோக்கி இளைஞர் இயக்கங்கள் தோற்றம் பெற்றன.


1970ஆம்ஆண்டு சிறிமா தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டதும்முதலில் செய்தது தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது தான். அதனைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு இருந்த பெயரளவுப் பாதுகாப்பு கூட இல்லாது செய்யப்பட்டதுடன் சிங்கள பௌத்த கட்டமைப்­புக்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதே வேளை தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கை­களும் ஆங்காங்கு தொடங்கின. 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு குழப்பப்பட்டு 9 பேர் கொல்லப்பட்டனர்.


1977 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி ஐ.தே.க ஆட்சியிலமர்ந்ததும் நடந்த 1977 இனக் கலவரம் தமிழ் மக்களை அதிளவு பாதித்த கலவரமாக அமைந்தது. பயங்கரவாதத்தடைச் சட்டம், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் தடை செய்யப்பட்டது. 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் பலவற்றைப் பறித்தது. 1981 ஆம் ஆண்டு இன்னொரு இனக் கலவரம் நாடெங்கிலும் இடம் பெற்றதில் தமிழ் மக்கள் மீண்டும் அவலங்களை அனுபவித்தார்கள். 1983 இனக்கலவரம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் தமிழர்கள் கொலை செய்யப்பட்­டனர். பலர் சகலவற்றையும் இழந்து இந்தியாவுக்கு அகதிகளா­கப் போய்ச் சேர்ந்தார்கள். வெலிக்­கடையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


இணைப்பு ”சி” திட்டம்
இந்த நிலையில் தான் கூட்டணி-இலங்கை அரசு-இந்திய அரசு என்பவற்றின் இணக்கத்தின் அடிப்­படையில் 1983 நவம்பர் 17இல் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் ஐந்து மாத கால பேச்சுவார்த்தை­யின் பயனாக ”இணைப்பு சி” திட்டம் தயாரிக்கப்­பட்டது.


இத்திட்டம் அடிப்படையில் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் கருத்துக் கணிப்பொன்­றின் மூலம் இணைந்து பிராந்திய சபை உருவாக்கப்­படலாம், முதலமைச்சர் ஜனாதிபதி­யால் நியமனம். குடியேற்றங்கள் விகிதா­சாரப்படி... போன்ற விடயங்­கள் அடக்கப்பட்டி­ருந்தன. இந்த உடன்படிக்கையை தயாரிப்பதிலும் நிர்ப்பந்திப்பதிலும் இந்திய அரசே கூடிய அக்கறை செலுத்தியிருந்தது. ஜே.ஆர்.உட­னடியாக உடன்ப­டாவிட்டாலும் வட்டமேசை மாநாட்டில் இதனை பேசுவதாகக் கூறி 1984 ஜனவரி 10இல் வட்டமேசை மாநாட்டை ஆரம்பித்தது.


இணைப்பு-ஏ:முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்­தைகள் பத்திரிகை அறிக்கைகள் அடங்கியது. இணைப்பு-பி:நிகழ்ச்சி நிரல், இணைப்பு-சி: தீர்வுக­ளைக் கொண்டது. மாநாட்டில் இது குறித்து பேச முன்பே எம்.ஈ.பி. அதிலிருந்து வெளியேறியது. பிரதான எதிர்க் கட்சி பெப்ரவரி 6இல் வெளிநடப்பு செய்தது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஆதரித்த போதிலும் எதிர்ப்பின் மத்தியில் ஜே.ஆர் கூட யையெழுத்திடாத நிலையில் இது கைவிடப்பட்டது. இந்த ஏற்பாடுகள் தமிழ் தரப்பால் முன்வைக்கப்­படாத போதும் தமிழ் தரப்பு பரிசிலிக்கத் தாயாராக இருந்தது. அதனை ஏற்கவும் செய்தது. ஆனால் அழைத்த தரப்பே எதிர்த்து நின்றது.


வட்டமேசை மாநாடு
இந்தியா-இலங்கை ஆகிய அரசுகள் மேற் கொண்ட முயற்சியின் விளைவாக இரண்டாவது சபைத் திட்டம் ஒன்று வட்ட மேசை மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 1984 யூலை 23 ஜே.ஆரால் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி பாராளுமன்ற­த்தில் 25 மாவட்டங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது சபையை அமைப்பது என்றும் இந்த சபைகளுக்கான முதலமைச்சர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் இதனுடைய அதிகாரங்களை மாநாட்டில் தீர்மானிக்கலாம் என்றும் பேசப்பட்டது. இத்திட்டத்தையும் மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க் கட்சிகள் யாவும் ”இது தென்னிந்தியாவின் தலையீட்டை ஏற்படுத்தும் முயற்சி” என்று கூறி நிராகரித்தன. இம் முயற்சியும் கைவிடப்பட்டது.


1985 திம்பு மாநாடு
இந்தியாவுக்குச் சென்று கூட்டணியினர் ஒரு புறமும் ஜே.ஆர் மறுபுறமுமாக பேச்சு வார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் ஏற்பாட்­டின் போரில் பூட்டான் தலைநகரான திம்புவில் 1985 யூலை 8 அன்று ஐந்து தமிழ் இயக்கங்களும் கூட்டணியும் சேர்ந்து இலங்கை அரசின் பிரதிநி­தியாக கலந்து கொண்ட ஜே.ஆரின் சகோதரர் எச்.டபிள்யு. ஜயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
அதன்படி,
1.தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரித்தல்.

2. தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல்.

3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

4. இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை

இக்கோரிக்கைகள் ஜே.ஆரால் நிராகரிக்கப்­பட்டன. அத்துடன் இலங்கையில் நூற்றுக்கணக்­கான தமிழர்கள் படையினரால் கொலை செய்யப்­பட்ட சம்பவமும் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் இயக்கங்கள் வெளிநடப்பு செய்தன. பேச்சு வார்த்தையும் முறிந்தது.


டில்லிப் பேச்சுவார்த்தை
திம்புப் பேச்சுவார்த்தை முறிவடையாமல் தொடர்வதற்காக இந்தியா தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து பேச முற்பட்ட போதும் அவை அதனை தட்டிக்கழித்தன. இதே வேளை இலங்கை அரசின் பிரதிநிதி எச்.டபிள்யு.ஜயவர்தனா இன்னொரு திட்டத்தை சமர்ப்பித்தார்.


இத்திட்டத்தின்படி வட பகுதியில் ஒரு மாகாண சபை அமைக்கப்படும். ஆனால் கிழக்­கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படும். வட கிழக்கை துண்டா­டும், குறைந்த அதிகாரங்களைக் கொண்டதுமான இந்தத் திட்டத்தை போராளி இயக்கங்கள் நிராகரித்தன. அதே வேளை கூட்டணி வடக்கு கிழக்கு மொழிவாரியாக இணைந்த சமஷ்டி வடிவிலான மாநிலமொன்று உருவாக்குவது தொடர்பான திட்டத்தை டில்லியில் முன்வைத்தது. 1986 ஜனவரி 30இல் இத்திட்டத்தை இலங்கை அரசு முற்றாக நிராகரித்தது.


சிதம்பரம்-ஜெயவர்தனா யோசனை
1986 ஏப்ரலில் இலங்கை வந்த இந்திய அமைச்சர் சிதம்பரம் நட்வார்சிங் ஆகியோர் ஜனாதிபதியுட­னும் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியது. இதன்படி இலங்கை அரசால் உருவாக்கப்பட்டு இந்திய அரசிடம் கையளிக்ப்பட்ட திட்டத்தின சாராம்சமாக...

1. இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இலங்கையின் அரசியலமைப்பு வடிவத்தக்கு உட்பட்டதாக அதிகாரப் பரவலாக்கம்.

2. வடக்கு கிழக்கு பரஸ்பரம் அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்குரிய அமைப்பு ரிதியான ஏற்பாடுகள். (இதன் உள்ளர்த்தம் வடக்கு கிழக்கு இணைப்பு இருக்காது)

இத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தை இழுபறிப்­பட்டு இணக்கம் ஏற்படாத நிலையில் இறுதியில் கைவிடப்பட்டது.
பெங்கர் பேச்சுவார்த்தை

1986 நவம்பரில் பெங்களூரில் நடத்தப்பட்ட சார்க் மாநாட்டிற்கு சென்றிருந்த வேளை ஜே.ஆர் ராஜிவுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு முன்வைத்திருந்த மாற்று யோசனைகளின்படி கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் யோசனை முன்வைக்­கப்பட்டது. இவ் யோசனை இணக்கம் கான்பதற்காக பிரபாகரனை அழைத்து எம்.ஜீ.ஆருடனும் ராஜிவு­டன் ஜே.ஆரும் பேசிய போதும் (குறிப்பாக வடக்கு கிழக்கு துண்டாடல்) இதில் இணக்கம் காணப்படாத நிலையில் இம் முயற்சி தோல்விய­டைந்தது.


இலங்கை-இந்திய ஒப்பந்தம்
இலங்கை அமெரிக்காவுடனான உறவை பலப்ப­டுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் கவனத்தை அதிகரித்தது. இலங்கையின் மீது சட்டரிதியான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் இயக்கங்களையும் பயன்படுத்த விளைந்தது. 1987 மே 26 இல் ”ஒப்பரேஷன் லிபரேஷன்” எனும் வடமராட்சித் தாக்குதலையும் பொருளாதாரத் தடையையும் விதிக்கத் தொடங்கிய போது தமிழ் பிரதேசங்களில் யுத்த விமானங்களின் மூலம் உணவுப் பொருட்க­ளைப் போட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்ததோடு இலங்கை அரசு இந்திய அரசிடம் அடிபணிய நேரிட்டது. இதன் விளைவு இனப் பிரச்சினையை தீர்க்கத்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவைப் பொறத்தளவில் இலங்கை அரசிட­மிருந்து அமெரிக்கா கால் பதிக்காத வண்ணம் இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசிடமிரு­ந்து கையெழுத்தில் உத்தர­வாதம் வாங்கிக் கொண்டதன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்­றியது. இலங்கை அரசாங்­கத்தைப் பொறுத்தளவில் தென்னிலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசத்தையும் வடக்கில் தமிழ் இயக்கங்களை சரணடையச் செய்வதிலும் வெற்றி கண்டது. தமிழ் இயக்கங்க­ளைப் பொறுத்தளவில் இவ்விரு அரசுகளினதும் தலைமையிலிருந்த நபர்களை நம்பி ஆயுதங்க­ளைக் களைந்து சரணாகதியானது. மாகாண சபையையும் ஏற்றுக் கொண்டது. தாம் ஏமாற்றப்­பட்டமையை மாகாணசபை அனுபவமும் இந்திய இலங்கை அரசுகளின் நடவடிக்கைகளின் மூலமும் காலங்கடந்தே உணர்ந்தன. புலிகள் இயக்கம் இவ்வியக்கங்கள் மீது மேற்கொண்ட தடை, வேட்டையாடல் என்பன அவர்களை அரசின் விசுவாசிகளாகவும் பின் புலி எதிர்ப்பாளர்களாகவும் மாறி இறுதியில் போராட்டத்தையே விற்றுப்பிழை­க்கும் துரோகமிழைக்கும் கும்பல்களாகிப் போனார்கள்.

மொத்தத்தில் இந்திய-இலங்கை அரசுகள் வெற்றி கண்டன. தமிழ் இயக்கங்கள் மண் கவ்வின.


பிரேமதாச-புலிகள் பேச்சுவார்த்தை
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மூலம் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினரை, தான் ஆட்சிக்கு வந்தால் விரட்டி விடுவதாகக் கூறி ஆட்சிக்கமர்ந்த பிரேமதாசா, வடக்கில் இருந்த படையினரை தென்னிலங்கைக்கு திசை திருப்பி ஜே.வி.பி.யினரையும் அழித்துவிடக் கூடிய வகையில் போடப்பட்ட திட்டம் தான் புலிகள் -பிரேமதாசா பேச்சுவார்த்தை. பிரேமதாச எதிர்பார்­த்தபடி இந்தியாவை ஆத்திரமூட்ட புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, அந்தக் காலப்பகு­திக்குள் படையினரை தென்னிலங்கக்கு வரவழை­த்து ஜே.வி.பி.யினரை வேட்டையாடிக் கொன்றொழி­த்தது. இந்திய படையினரை விரட்டியது. இந்தியப்படையை எதிர்க்கவென பிரேமதாச, புலிகளுக்கு ஆயுதம் பணம் என்பவற்றையும் வழங்கினார்.


பிரேமதாசவுடனான பேச்சுவார்த்தையின் போது முக்கியமாக இந்தியப் படையினரை வெளியேற்று­வது, வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது, 6வது திருத்தச் சட்டத்தை நீக்குவது என்பவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. ஆனாலும் இக்காலப்பகுதிக்குள் புலிகள் தங்களை பலப்ப­டுத்திக் கொள்ள சிறந்த அவகாசத்தையும் இந்தியப் படையினரை அனுப்புவதிலும் வெற்றி கண்டது. பிரேமதாசவின் நோக்கமும் நிறைவேறி­யது. மற்றும்படி மாகாணசபை, 6வது திருத்தச் சட்டம் எல்லாமே ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இரு தரப்பினரதும் நோக்கங்கள் நிறைவேறியதும் பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன புலிகள் ஆயுதத்தை கீழே போடும்வரை மாகாண சபை தேர்தல் நடக்காது என்று மிரட்டினார். இந்த 14 மாத கால பேச்சுவார்த்தை இறுதியில் 1990 மே 7 படையினரின் ஷெல் தாக்குதலினால் 12 மாணவிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இந்தப் பேச்சுவார்த்தையைப் பொறுத்தளவில் அடிப்படை­யில் பிரேமதாச அரசாங்கம் கூட தனது நலன்களுக்­காகவே இப்பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தியது.

தெரிவுக்குழு

பிரேமதாசவினால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொ­ன்று நியமிக்கப்பட்டது. இதனை அமைப்பதற்கான யோசனையைக் கொண்டு வந்திருந்த ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர் மங்கள முனசிங்கவே இதன் தலைவரா­கவும் நியமிக்கப்பட்டார். புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்கள் கலந்து கொண்ட இக்குழுவின் யோசனகளை எதிர்க்கட்சியும், ஏனைய சிங்கள அமைப்புகளும் பலமாக எதிர்த்து வந்ததி­னால், இது இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புக்கள் ஒவ்வொன்றாக வெளியேறின. இறுதியில் இவ்வமைப்பு செயலிழந்து போனது தான் மிச்சம்.


புலிகள்-பொ.ஐ.மு பேச்சுவார்த்தை
பிரேமதாச 1993 மே தினத்தன்று கொல்லப்பட்ட­தன் பின் பதவியேற்ற டி.பி.விஜேதுங்க தமிழ் மக்களுக்­கெதிரான சிங்களப் பேரினவாத பிரச்சார­ங்களை செய்து வந்தார். இது 1994 பொதுத் தேர்தலின் போது சந்திரிகா தலைமையிலான பொ.ஐ.மு.வுக்கு சாதகமானவற்றில் ஒன்றாக மாறியது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற கோஷங்களுடன் பதவியிலமர்ந்த பொ.ஐ.மு புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடக்கியது. இப் பேச்சுவார்­த்தையின் போது முக்கியமாக அத்தியாவசியப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் என்ற இரு கட்டங்கள் என்ற வகையில் அமைந்திருந்தது. இது நடந்து கொண்டிருக்கும் போதே அரசு யுத்தத்தி­ற்கான படை சேர்ப்பு, தளபாடக் கொள்வனவு என்பவற்றைச் செய்ததுடன், உறுதி கூறியபடி பொருளாதாரத் தடைகளை முற்றாக நீக்காமல் போக்குக் காட்டியது. அரசின் இந்த அணுகு முறை குறித்து எச்சரிக்கை செய்திருந்தும் சந்திரிகா அரசாங்கம் அலட்சியமாக இருந்ததைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையும் முறிந்தது. 1995 ஏப்ரல் 24ஆம் திகதி 3வது ஈழ யுத்தம் ஆரம்பமானது.


ஒட்டுமொத்தத்தில் நியாயமான உரிமைகளை வழங்குவது என்ற நோக்கிலல்லாமல் தமது நலன்களுக்காக மாத்திரமே பேச்சுவார்த்தை, தீர்வு முயற்சி, உடன்படிக்கை (அல்லது திணிப்பு) என்றெல்லாம் பம்மாத்து விடுவதும் அதே சந்தர்ப்பவாத நலன்களுக்காக எதிர்த்தரப்பில் இருக்கும் கட்சி ஆளுங்கட்சி கொண்டுவருவன­வற்றையெல்லாம் எதிர்ப்பதும் இன்று சலித்துப்போன ஒன்று. இன்றைய நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்­றப்பட்டுவந்துள்ள தமிழ் மக்களின் மீது புறையோடிப்­போயுள்ள சந்தேகங்களுக்கும், எச்சரிகைக்கும் நியாயமான காரணங்கள் உண்டு தமது கறை படிந்த கரங்கள் இன்று சுத்தமானவை தான் என்பதை நிரூபிக்கவேண்டிய வேண்டிய தார்மீக பொறுப்பும், கடமையும் அரசுக்கே உள்ளது.


கடந்த கால ஏமாற்றங்கள் ஒன்றும் நபர்களால் ஏமாற்றப்பட்டதல்ல. ஒரு பண்டாரநாயக்கவோ, ஜே.ஆரோ, பிரேமதாசவோ அல்ல இங்கு பிரச்சினை. மாறாக இந்த கட்ட­மைப்பே. இந்த சிங்கள பௌத்த கட்டமைப்புக்கு எவர் தலைமை தாங்கினாலும் இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது. இதனைக் களைவதே உண்மையில் தீர்வை உண்மையில் நேசிக்கும் சக்­திகள் கடக்க வேண்டிய முன்நிபந்­தனையான விடயம். வரப்போகும் ”சுதந்திர தினத்”திலாவது போதாவது சிங்களப் பௌத்தம் தன்னை மீட்டுப் பார்க்குமா? தமது குறைகளைக் களையெடுக்குமா? அல்லது சிங்கள தமிழ் மக்களின் இடைவெளி மேலும் விரிசலடைய வழிவகுக்குமா என்பதே இன்றைய கேள்வி..

மனம்பேரி: ஒரு போராளியின் 30 வருட நினைவுகள்

சரா
இக்கட்டுரை ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியான 1971 கிளர்ச்சியின் 25 வருடங்கள் பற்றிய நினைவு கூரல் நாடெங்கிலும் நடந்து கொண்டிருந்த வேளை அதில் கொல்லப்பட்ட மனம்பேரியை நினைவு கூருகிறது. இக்கட்டுரை எழுதுவதற்கென்று முன்னாள் ஜே.வி.பி.யின் உறுப்பினர்களுடன் கதிர்காமத்திலுள்ள மனம்பேரியின் வீட்டுக்குச் சென்று வீட்டா­ருடனும் உரையாடினேன். கதிர்காமத்தில் மனம்­பேரி கொல்லப்பட்ட இடத்தையும் சென்று பார்வை­யிட்டேன். மனம்பேரி வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான எலடினையும் போய் சந்தித்தேன். அது தவிர 71 கிளர்ச்சி பற்றி விசாரணை செய்த விசேட நீதிமன்ற நீதிபதி ஏ.சி.அலஸ் எழுதிய நூலில் இருந்த தகவல்கள் சில கட்டுரை இக்கட்டுரைக்கு உதவிற்று. மேலும் மனம்பேரி வழக்கு இடம்பெற்ற (1973 - மே) காலப்பகுதியில் வெளியான பத்திரிகைகளை தேசிய சுவடிகூடத் திணைக்களத்தில் சில நாட்கள் இருந்து திரட்டிய தகவல்கள் என்பவற்றின் அடிப்படையில் இக்கட்டுரை தயாரிக்கப்பட்டது. இலங்கையில் முதன் முதலில் ஆயுதப் போராட்டத்தை முன்­னெ­டுத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணி­யினர். 1971 ஏப்ரல் கிளர்­ச்சி என அழைக்கப்­பட்ட இது அரசாங்கத்தின் கொடுர ஒடுக்குமுறையி­னால் அடக்கப்­பட்டது. இக்காலப் பகுதியில் கொல்லப்பட்ட ம.வி.மு. பெண் போராளி மனம்­பேரி பற்றி இந்த இருபத்­தைந்து வருட நினை­வில் சில குறிப்புகள்.... அவள் கொல்லப்பட்டு 25 வருடங்­கள். 20,000க்கும் மேற்பட்ட அவளின் தோழர்கள் கொல்லப்­பட்டு 25 வருடங்கள். அவளையும் அவளது தோழர்களையும் கொன்றழித்த அந்த அரசமைப்பு மட்டும் இன்னமும் வாழ்கிறது. அவர்களது போராட்டம்...? 1971 ஏப்ரல் கிளர்ச்சியின் போது அரச படையினால் கொல்­லப்பட்ட பெண் போரா­ளிக­ளில் அவளும் ஒருத்தி. இருபதாயிரத்துக்­கும் மேற்ப்பட்ட இளம், ஆண், பெண் போராளி­களை அரச யந்திரம் கொன்றொழித்தது. ஆனால் அத்த­னைக்கும் நியாயம் கற்பித்த அரசு, ஒரே ஒரு கொலையை மாத்திரம் படையினரின் அதிகார துஷ்பிரயோகச் செயல் எனக் கூறி கண்துடைப்­புக்­காக விசாரணையை நடத்தியது. அவ்விசா­ரணை தான் புகழ்பெற்ற பிரேமவதி மனம்பேரியின் கொலை விசாரணை. இதிலுள்ள இன்னொரு முக்கிய அம்சம் என்ன­வெனில் படையினருக்கு எதிரான விசாரணை­யொன்றில் அவர்களு­க்கு தண்டணை வழங்கப்பட்ட விசாரணையும் இதுவொன்றே.
கதிர்காமத் தாக்குதல் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி ஜே.வி.பி.யினர் (மக்கள் விடுதலை முன்னணி) திட்டமிட்­டபடி நாடெங்கிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களை நள்ளிரவில் ஒரே நேரத்தில் தாக்கினர். யாத்திரைப் புகழ் பெற்ற கதிர்காமத்தில் அமைந்­து­ள்ள பொலிஸ் நிலையமும் இதே நேரத்தில் தாக்கப்பட்டது. இதன் போது இரண்டு ஜே.வி.பி. உறுப்பினர்கள் கொல்லப்­பட்டனர். எனினும், தாக்குதல் மறுநாள் 6ஆம் திகதியும் இடம் பெற்றது. கதிர்காமப் பொலிஸார் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் பின்வாங்கியோடினர்.இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் நாட்டின் கிளர்ச்சித் தளங்களுக்கு அனுப்பப்பட்டனர். கதிர்காமத்தில் லெப்டி­னன்ட் விஜேசூரிய தலை­மையி­லான குழுவொன்று ஏப்ரல் 15ஆம் திகதியன்று முகாம் அமைத்தது. இம்முகாம் இ.போ.ச.­வுக்கு சொந்தமான ஓய்வு நிலையத்திலேயே அன்று அமைக்கப்பட்டிருந்தது. இம்முகாம் அமைக்கப்பட்­ட­தன் பிறகு கதிர்காமப் பொலிஸ் நிலையமும் புனரமைக்கப்­பட்டது.இம்முகாமை அமைத்­த­வு­டனேயே லெப்டினன்ட் விஜேசூரிய முதல் வேலை­­யாக கிளர்ச்சி­யாளர்களை வேட்டையா­டு­தல் எனும் போர்வையில் கதிர்காமத்தில் பல பெண்­களைக் கைது செய்தும், கடத்தியும் கொண்டு வந்து முகாமில் தடுத்து வைத்த­துதான். ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி மனம்பே­ரியின் வீட்டுக்குச் சென்று அவளையும் கடத்திச் சென்றனர்.
அழகு ராணி மனம்பேரி
பிரேமவதி மனம்பேரிக்கு அப்போது வயது 22. ஜே.வி.பி.யின் ஐந்து வகுப்புக்களையும் ஆர்வமாக முடித்தவள். கிளர்ச்சியின் போது கதிர்காமத்தில் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கியவள். ஜே.வி.பி.க்கான சீருடை தைக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தவள். தகப்­பனார் வனப்பாதுகாப்புத் திணைக்­களத்தில் கண்காணிப்பாளர். மனம்பே­ரியுடன் கூடப்பிறந்தவர்கள் பத்துப்பேர். குடும்பத்தில் மூத்தவள். கதிர்காம வித்தியாலயத்தில் க.பொ.த. (சா-த) வரை கற்று முடித்துவிட்டு விட்டு பௌத்த பாடசாலையில் ஆசிரி­யராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். 1969ம் புதுவருட அழகு ராணிப் போட்டியில் இரண்­டாவதாக தேர்ந்தெடுக்கப்பட்டாள். 1970 ஏப்ரல் 16ம் திகதி நடத்தப்பட்ட புது வருட அழகு ராணிப் போட்டியில் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டாள். அடுத்த வருடம் அதே நாள் கொலைஞர்க­ளால் கடத்தப்பட்டாள்.
கடத்தலும் வதையும்
1971 ஏப்ரல் 16ம் திகதி காலை 9 மணிய­ளவில் மனம்பேரியின் வீட்டுக்குள் புகுந்த லெப்டினன்ட் விஜேசூரிய தலைமையிலான குழு வீட்டிலுள்ள பொருட்களைக் கிண்டிக் கிளறி தூக்கியெ­றிந்தது. மனம்பேரியை அடித்து தலை முடியுடன் இழுத்துச் சென்றனர். தாய் லீலாவதி ”பெட்டப்பிள்­ளையப்பா ஒண்டும் செஞ்சு போடாதீங்கோ ஐயா!” என கதறி அழுத வண்ணம் பின் தொடர்ந்த போது காலால் உதைத்துத் தள்ளிவிட்டு மனம்பேரியை தூக்கிக் கொண்டு வாகனம் பறந்தது.அன்றைய இரவு முழுவதும் மனம்பேரி சித்திரவதை செய்யப்பட்டாள். அடுத்தநாள் 17ம் திகதி மனம்பேரியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.”ஐந்து வகுப்புகளிலும் கலந்து கொண்டாயா?”மௌனம்”ஜே.வி.பி.யுடன் எவ்வளவு காலம் தொடர்பு வைத்திருந்தாய்?””.........””நீ என்னென்ன நடவடிக்கைகளுடன் தொடர்பு கொண்டிருந்தாய்?”இதற்கும் மௌனம் சாதிக்கவே தங்களது வக்கிர இயல்பை வெளிக்காட்டினர். மனம்பேரி விசாரணை வழக்கின் போது வெளிவந்த தகவல்கள் இவை.”சரி... நான் சொல்வதை அவதானமாகக் கேள். சொல்வதைச் செய்யாவிட்டால் உனது உயிர் போகும்.” இது லெப்டினன்ட் விஜேசூரிய. அவர் தொடர்ந்தும் ”உனது ஆடைகளைக் ஒவ்வொன்றாகக் கழற்று...””ஐயோ.. சேர், வேண்டுமென்றால் சுட்டுப் போடுங்கள். ஆடையைக் கழற்றச் சொல்லாதீங்க...” என மனம்பேரி கண்ணீர் விட்டுக் கதறினார்.”அது எனது வேலை. நான் சொல்வதை மட்டும் நீ செய்” என துப்பாக்கியைத் தலையில் அழுத்தி மிரட்டிய போது அழுகையுடன் மேலாடைகளைக் கழற்றி உள்ளாடையுடன் இருந்தாள். மீண்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கி உள்ளாடைக­ளையும் கழற்றி விட்டு நிர்வாணம் ஆக்கினர். தனது கைகளால் மனம்பேரி மறைவிடங்களை மறைத்தாள்.மனம்பேரியை லெப்டினன்ட் விஜேசூரிய முதலில் பாலியல் வல்லுறவு புரிந்தான். அதன் பின் மாறி, மாறி ஏனைய சில இராணுவத்தினரும் பாலியல் வல்லுறவு புரிந்தனர். இதே வேளை அதே முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏனைய இளம் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானார்கள்.ஒரு அறையில் இந்த அட்டுழியங்கள் நிகழ்ந்து கொண்­டிருக்கும் போது பக்கத்து அறையில் ”வெடகிட்டி கந்த பாமுல விகாரை”யின் பிக்குவும் இதே முகாமில் வதைக்குள்­ளாக்கப்பட்டுக் கொண்டிருந்தார். இப்பிக்குவை தடுப்பிலுள்ள பெண்கள் மீது பலாத்காரமாக பாலியல் வல்லுறவு புரிய வைத்தனர். இறுதியில் இந்த பிக்குவையும் தோண்டி வைக்கப்பட்டிருந்த குழிக்கு அருகில் நிறுத்தி வைத்து சுட்டு வீழ்த்தினர். ”புனித பூமி” என சொல்லப்படுகின்ற கதிர்காமத்­தில் தான் இந்த கொடுமைகள் நிறைவேற்றப்பட்டன.
உயிர் பிரிந்தது.
எல்லாவற்றையும் முடித்த பிறகு மனம்பேரியை கைகளிரண்டையும் மேலே தூக்கச் சொல்லி மீண்டும் பணிக்கப்பட்டது. திரும்பியவாறு வீதியில் நடக்க கட்டளை பிறப்பித்தனர். அரை மயக்க நிலையில் தள்ளாடியபடி துப்பாக்கி முனையில் வீதியில் நடத்தப்பட்டாள் நிர்வாணமாக. சார்ஜன்ட் அமரதாச ரத்னாயக்காவின் துப்பாக்கி முனையிலேயே மனம்பேரி வீதியில் நடத்தப்பட்டாள். மனம்பேரியை முன்னே செல்ல விட்டு துப்பாக்கி தோட்டக்களால் முதுகைத் துளைத்தான் சார்ஜன்ட் அமரதாச. கீழே விழுந்த மனம்பேரியை மீண்டும் உலுக்கி நிறுத்தி நடத்தினான் மீண்டும் அவனின் துப்பாக்கிக் குண்டுகள் மனம்பேரியின் உடலைத் துளைத்தன.”தண்ணீர் தண்ணீர்...” என முனுகிய மனம்பேரிக்கு எலடின் எனப்படும் வியாபாரி ஒருவர் தண்ணீர் கொடுக்க முற்பட்டபோது ”விலகிப் போ! உதவி செய்ய முற்பட்டால் நீயும் கொல்லப்படுவாய்” என அச்சுறுத்தப்­படவே அவரும் விலகிச் சென்றார். நடுவீதியில் சூட்டுக் காயங்களுடன் விழுந்து கிடந்த மனம்பேரியை அப்படியே விட்டுவிட்டு திரும்பினர். இராணுவத்தினர். பின்னர் ஊர் வாசிகளான எலடின் (இவர் இன்னமும் உயிருடன் இருக்கிறார். மனம்பேரியின் வழக்கில் முக்கிய சாட்சிகளில் இவரும் ஒருவர். இவரைச் சந்திக்க ”சரிநிகர்” கதிர்காமத்துக்கு சென்ற நேரத்தில் ”மன்னியுங்கள் அந்த கொடுர சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவர விரும்பவில்லை” என அது பற்றி கருத்துரைக்க மறுத்து விட்டார்.)காதர், பெருமாள் ஆகிய ஊர் வாசி­களை அழைத்து பிணங்களைப் புதைப்ப­தற்கான குழிகளைத் தோண்டும்படி கட்டளையிட்டனர். அவர்கள் தோண்டினர். மனம்பேரியின் முனகலைக் கேட்ட எலடின் அருகில் சென்ற போது :அந்த பையனிடம் (பெருமாள்) எனது காதணிகள் இருக்கின்றன அதனைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து தங்கைக்கு அதனை கொடுக்கச் சொல்லுங்கள். நான் ஒருவருடனும் கோபமில்லை காமினி பாஸ் தான் குழுப்பிப் போட்டார்...” (கிளர்ச்சியின் போது கதிர்காமத்தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர் தான் காமினி பாஸ்) எனக் கூறிக் கொண்டே தண்ணீர் கேட்டிருக்கிறாள். உடனே தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு இராணுவ முகாமுக்குச் சென்று ”உயிர் இன்னமும் இருக்கிறது. எனவே புதைப்பதற்கு முடியாது.” என்ப­தைத் தெரிவித்தார். உடனே இருவரை அனுப்பி உயிரைப் போக்கும்படி பணித்­தான் லெப்டினன்ட் விஜேசூரிய. அவர்கள் இரு­வரும் அப்பாவச் செயலை செய்ய முடியாது என திரும்பி விடவே இன்னொ­ருவன் அனுப்பப்பட்­டான். அவன் போய் இறுதியாக மனம்பேரியின் நெற்றிப் பொட்­டில் சுட்டான். மனம்பேரி புதை குழியில் சாய்ந்தாள். (இறு­தி­யாக சுட்ட நபர் இறுதி வரை அடையாளம் காணப்படவில்லை.)முன்னைய வருடம் இதே நாள் அழகுராணியாக காட்சியளித்த அதே தபால் நிலையத்திற்கருகிலேயே மனம்பேரியின் உயிரும் பிரிந்தது. அதே இடத்தில் மனித புதைகுழிக்குள் புதைந்தது. அவளது உடல்.மனம்பேரியின் படுகொலை தொடர்பான பொலிஸ் முறைப்பாடுகள் சிலவற்றின் பின்னர் கண்துடைப்புக்காகவே அன்றைய சிறிமா அரசாங்கம் மனம்பேரியின் வழக்கை சிசாரணைக்கு எடுத்துக் கொண்டதென்றால் அது மிகையில்லை.
கொலைஞர்களின் முடிவு.
1971ம் ஆண்டு மே மாதம் 24ம் திகதி முற்பகல் 10.30க்கு மனம்பேரியின் சடலம் புதைகுழியிலிருந்து மீள எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. 1973 மே மாதத்தில் இவ்வழக்கு விசாரணை 11 நாட்கள் நடந்தது. வழக்கின் இறுதியில் லெப்டினன்ட் அல்பிரட் விஜேசூரிய சார்ஜான்ட் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவருக்கும் பதினாறு வருட கடுழிய சிறைத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது. 1973ம் ஆண்டு மே மாதம் 30ம் திகதி இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டணை வழங்கப்பட்ட இரு இராணுவத்தினரும் தங்கள் மீதான தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்தனர். இம்மேன்மு­றையீட்டு வழக்கு 1973 ஒக்டோபாரில் நடத்தப்பட்டது. இவ்வழக்கிலும் சரியானதே என தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.அவர்களில் லெப்டினன்னட் விஜேசூரிய சிறையில் நோயுற்று மரணமானான். சார்ஜன்ட் அமரதாச தண்டனை முடிவுற்று விடுதலையான பின் 1988இல் ஜே.வி.பி.யினரால் கொல்லப்பட்டான்.

சாதியை ஒழிக்க கடவுளை ஒழி.........

பெரியார்
நான் என்ன சொல்லுகிறேன் என்றால், ”நம் கடவுள் நம்பிக்கை என்பதே கடைந்தெடுத்த முட்டாளின் அறிகுறி”யாக ஆகிவிட்டது. காரணம் என்னவென்றால், ”கடவுள் என்றால் ஆராய்ச்சியே செய்யக்கூடாது”, நம்பவேண்டும்”, அப்படியே ஒப்புக்கொள்ளவேண்டும்” என்பதாகிவிட்டது. அது மாத்திரமல்ல, அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி, ”கடவுள் என்றால் என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்காக இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? எதுமுதல் இருக்கிறார்? அவர் சக்தி எவ்வளவு? நம் சக்தி எவ்வளவு? அவரால் ஏற்பட்டது எது, நம்மால் ஏற்பட்டது எது? எது எதை அவருக்கு விட்டுவிடலாம்? எது எது நாம் செய்யவேண்டியது? அவரில்லாமல் ஏதாவது காரியம் நடக்குமா? எதையாவது செய்யக் கருதலாமா?” என்பது போன்ற (இப்படிப்பட்ட) நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஒரு விஷயத்தைக்கூட தெளிவாகத் தெரிந்து கொண்டவன் எவனும் கடவுள் நம்பிக்கைக்காரர்களில் இல்லை. இல்லை என்றால் அறவே இல்லை என்று சவால்விட்டுக்கூறுவேன். நான் இதை 60-70 ஆண்டாகச் சிந்தித்து, சிந்தித்து அறிவில் ஆராய்ச்சி அனுபவத்தில் கண்டுகொண்ட உறுதியினால் கூறுகிறேன். இவ்விஷயங்களில் மக்களுக்கு விஷயம் தெரியாது என்று சொல்லுவதற்கும் இல்லாமல் தெரிந்துகொண்டிருப்பது குழப்பமானதும், இரட்டை மனப்பான்மை கொண்டதுமாக இருப்பதால், மனிதனுக்கு இவ்விஷயத்தில் அறிவு பெற இஷ்டமில்லாமல் போய்விட்டது. தோழர்களே! நான் சொல்லுகிறேன், கடவுள் நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் சாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்றால் அதில் அறிவுடைமையோ, உண்மையோ இருக்க முடியுமா? கடவுள் இல்லாமல் எப்படி சாதி வந்தது? மத நம்பிக்கைக்காரன் ஒருவன் ” நான் சாதியை ஒழிக்கப் பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? மதமில்லாமல் எப்படி சாதி வந்தது? சாஸ்திர நம்பிக்கைக்காரன் ஒருவன் ”நான் சாதியை ஒழிக்கப்பாடுபடுகிறேன்” என்று சொல்ல முடியுமா? சாஸ்திரம் இல்லாமல் எப்படி சாதி வந்தது?ஆகவே இந்த சாதி ஒழிப்புக் காரியத்தில் கடவுள், மத, சாஸ்திர நம்பிக்கைக்காரர்கள் இருந்தால், அவர்கள் மரியாதையாய் வெளியேறி விடுவது நாணயமாகும். இதனாலேதான் ”சாதி கெடுதி, சாதி சுடாது” என்று சொல்லத்தான் சில ”பெரியவர்கள்” முன் வந்தார்களே ஒழிய, அதை ஒழிக்கப் பாடுபட இன்றுவரை எவரும் முன்வரவில்லை. ஆகவே, தோழர்களே! உங்களுக்கு நான் சொல்லுகிறேன், வணக்கமாகச் சொல்லுகிறேன். நீங்கள் சாதியை ஒழிக்கப் பிரியப்பட்டீர்களேயானால் இந்த இடத்திலேயே சாஸ்திரத்தையும் ஒழித்துக்கட்டுங்கள்! ஒழித்துவிட்டோம் என்று சங்கநாதம் செய்யுங்கள்! கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய மூன்றும் ஒழிந்த இடத்தில்தான் சாதி மறையும், சாதி ஒழியும் மற்ற இடம் எப்படிப்பட்டதானாலும் அங்கு சாதி சாகாது. ஆகவே, சாதி ஒழியவேண்டும் என்பவர்கள் முதலில் நாத்திகன் ஆகுஙகள். நாத்திகம் என்பது அறிவு, ஆராய்ச்சி, அனுபவம் கொண்டு தெளிவடைவது தான். இத்தெளிவு அடைந்த இடத்தில் இம்மூன்றும் (கடவுள், மதம், சாஸ்திரம்) தலைகாட்டாது. ஆகையால், இப்படிப்பட்ட நீங்கள் நாத்திகர் என்று சொல்லிக்கொண்டாலும் ஒன்றுதான், பகுத்தறிவுவாதி என்று சொல்லிக்கொண்டாலும் ஒன்றுதான். தோழர்களே! சாதி ஒழிப்புக்காரர்கள் வீட்டில் உருவச்சின்னங்களோ, மதக் குறியோ, சாஸ்திர சம்பிரதாய நடப்போ இருக்கக் கூடாது, கண்டிப்பாய் இருக்கக்கூடாது. (12.08.1963 அன்று பாண்டிச்சேரியில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையில் ஒரு பகுதி - ”விடுதலை” - 17.08.1962)நாதியற்ற நாங்கள் கைதட்டி சிரிக்க இங்கொன்றும் இல்லை - எனினும்கை கொடுத்துதவுங்கள் இதுவோர் அனாதையின் கதை. இதுவோர் அனாதையின் கதை காலங்காலமாய்...போராடும் இனமொன்றின் கண்ணீர் புஸ்பங்கள் வரிவரியாய் எழுதியவோர் சோகக்கதை!இதுவோர் சோகக்கதை! அம்மையார் எமையாண்டு அனாதையாக்கி அரசியல் தஞ்சம்புகவைத்தாள் வெளிநாட்டில் சொந்தநாடோ எமக்கில்லை சொந்த மொழியோ செல்லாது சொல்லவோ வெட்கம்! அம்மையார் மாண்டார் வந்தான் ஓர் அரக்கன் எமையாட்சி செய்யயாருக்கையா சொல்ல பெற்ற தாயுமில்லை பிறந்த பொன்னாடு மில்லை இருக்கவோ இடமுமில்லை வந்தோம் வெளிநாடு கலைக்கின்றனர் கறுப்பர் என்கின்றனர் யாருக்கு சொல்லயாருக்கு விளங்கும் எம்நிலை இழப்பதற்கு எதுவுமில்லை வெல்வதற்கு ஈழமுண்டு என்றோ ஒரு நாள் கிடைக்கின்றன எம் ஈழம் எம்மை யெல்லாம் காக்கும்.அனாதைப்பிடியிலிருந்து....அந்நாள் எந்நாளோ!

வீரயடி

எல்லாமே முடிந்து அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்... தியாகு செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தவுடன் அவனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடுவந்திருந்தான் பிரபு. தாய், மரணித்த செய்தி தியாகுவிற்கு சொல்லப்பட்டதும் லண்டனிலிருந்து உடனே பயணித்துவிட்டான் அவன். நான்கு வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் மரணத்திற்கு கூட அவனால் செல்ல முடியவில்லை. அப்போது அவனுக்கு பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது தாயின் மரணத்திற்காவது தான் சென்று தன் கடமைகளைச் செய்யவேண்டும் என்று துடித்ததினால் புறப்பட்டுவந்து இறதிக் கடமைகளை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்திருந்தான். மயானத்திலிருந்து அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்..? ஊரிலுள்ளவர்கள்-உறவினர், நண்பர்கள்... எல்லோரும் வந்து தியாகுவின் வீட்டில் நின்றிருந்த மாமரங்களின் நிழல்களின் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கு சுடச்சுட கோப்பி, பால்த்தேனீர், சிகரெட், சுருட்டு, பீடி, வெற்றிலைப்பாக்கு போன்றவை கொடுக்கப்படுகின்றன. இரவுச்சாப்பாடுகள் உறவினர் சிலரால் கொண்டுவரப்படுகின்றன. பெரிய வீடு. வீட்டோடு சேர்ந்த விசாலமான முன்பிளெட். எல்லாத் திசைகளிலும் பளீரென்ற மின்சார ஒளி. தியாகு நான் சாகிறதுக்கிடையில பெரிய வீடு ஒன்று கட்டிவிட்டுத்தான் சாவேன்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பிடிப்பார்க்கும்போது அப்பாவின் ஆசை நிறைவேற்றப்பட்டிருக்கின்றதென்று தியாகு எண்ணிக்கொண்டான். வருடங்களுக்குப் பின்பு பார்க்கும் முகங்கள். எல்லாம் தியாகுவிற்கு பரிட்சயமான முகங்களாகவே தெரிந்தன. சிலரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான். பலர் தங்களைத் தாங்களாகவே வந்து அறிமுகம் செய்து கொண்ட பின்பே அவனால் ஊகிக்க முடிந்தது. ஒன்று இரண்டு வருடங்களா? பதினேழு வருடங்களுக்குப் பின்பு அல்லவா அவனால் பிறந்த மண்ணை மிதிக்க முடிந்தது. மரண வீட்டுக்கு வந்த பலபேர், தியாகுவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தவர்கள். அவர்கள் எல்லாம் அவனைச் சந்தித்து விடைபெற்றபோது தியாகு மிகவும் வருந்தினான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு ஜெர்மனிய பழமொழி நினைவுக்கு வந்தது. ”பகிர்ந்து கொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகின்றது., பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதி குறைகின்றது.” இதில் அவன் எதை எடுத்துக்கொள்வது? ஊரவர், உறவுகளைக் கண்ட இன்பத்தையா? அல்லது தாயை இழந்து நிற்கும் துன்பத்தையா? நிலை தடுமாறி நின்று கொண்டு, தன்னிடம் வந்து விடைபெற்றுச் செல்பவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிக்கொண்டிருந்தான். விநாயகபுரத்து பிரதானவீதியில் முதலாவது வீடு. பெரிய வளவு. தென்னை மரங்களும், மாமரங்களும் நிறைந்த விசாலமான வளவு. இருபது வருடங்களுக்கு முன்பு, இளம்பிள்ளைத் தென்னைகளாக இருந்தவையெல்லாம், நெடிந்துயர்ந்து குலைகாட்டி அழகாகக் காட்சியளித்தன. தியாகு ஆசையோடு அக்கரைப்பற்று சந்தையில் வாங்கிக்கொண்டு வந்து நட்ட ஒட்டுமாமரங்கள், கறுத்தகொழும்பானும், பிலாட்டும் நன்றாக கிளைவிட்டு, பரந்து கிடந்தன. மெயின் றோட்டுக்கு எதிரேயிருந்த சின்னத்தோட்டம், அங்கே இருந்த பங்களா, ஒன்றுமே இப்போது அங்கே இல்லை. தியாகுவின் அப்பாவின் கடை. கடைக்குமுன் வீதியோரம் நின்றிருந்த வீரமரம் எதுவுமே இப்போது இல்லை. தியாகுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தபொழுது. கையில் கோப்பிக் கிண்ணத்துடன் வந்தான் பிரபு. பிரபு, தியாகுவின் பள்ளித்தோழன். அவ்வப்போது ஊரைப்பற்றி தியாகுவிற்கு கடிதம் எழுதுபவன். ”என்ன தியாகு உனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கின்றதா? எல்லாம் மாறிப் போச்சுடா. காலம் காலமாக நாம் வாழ்ந்த மண் இப்போது கோலம்மாறி போச்சி. சோத்துப்பாட்டுக்கே பெரிய பாடாக இருக்கு. புழைப்பு நடத்த சனங்களுக்கு ஒரு வழியுமில்ல.”பிரபு சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த கோப்பிக் கிண்ணத்தை தியாகுவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட தியாகு, ” பிறகு ஏண்டா இப்படி..” என்று கேட்பதற்கு முதலே, பிரபு பதில் சொல்ல முந்திக் கொண்டான்.”எல்லாம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கஸ்டமான நிலைதான் காரணம். சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ முடியாதநிலை. வயிற்றுப்பசிக்கு அன்றாடம் தொழில் பார்த்தவர்கள் கூட, அரைவயிறு கஞ்சிக்கே வழியின்றி அவதிப்படுகின்றார்கள். கடற்தொழில் செய்வது கூட கஸ்டம். ஆற்றில் மீன்பிடிப்பதற்கு கட்டுப்பாடு. வேளாண்மை, பயிர்ச்செய்கை எல்லாம் செய்கை பண்ண முடியாத நிலை. ஒரு கடை கண்ணிவைத்து வியாபாரம் பண்ணத்தடை. இப்படி எல்லாமே முடக்கிவைக்கப்பட்டிருக்கும் போது, ஊரில் பசியும், பஞ்சமும் தலைவிரித்ததாடாமல் என்ன செய்யும். ஏதோ உனக்கு நல்ல காலம். உன் தலையெழுத்து நல்லாயிருந்ததால் ஊரைவிட்டுப்போயிட்டாய். நாங்கள் பட்ட, படுகின்ற கஸ்டங்கள் உனக்குத் தெரியாது. ””ச்சே! ச்சே!! அப்படிச் சொல்லாதே பிரபு. தாய், தந்தையையும் தாய் மண்ணையும் விட்டுப் பிரிந்து போய் அந்நிய மண்ணில் அகதிகளாக வாழ்கின்ற கொடுமையை நான் அனுபவித்தவன். இந்த மண்ணின் வாசத்தையும் புழுதி மணத்தையும், செக்கச் செவேலென்று செம்பருத்தி பூத்திருக்கும் என் வீட்டு முற்றத்தையும் இழந்த குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஏதோ ஒரு வேகத்தில் தாய் மண்ணைப் பிரிந்து போனது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பிரிவு தந்த துன்பம், துயரம் இருக்கே.. அது மிகக் கொடியது. அதை நான் இந்த பதினேழு வருடங்களாக அனுபவிக்கின்றேன். தாய் நாட்டின் சேதிகள் நாற்தோறும் கேட்டு, கண்கள் குளமாகி நெஞ்சம் தடுமாறி, எப்போ எமக்கு விடியல் வரும் என்று ஏங்கி விம்மி வெதும்பி தூக்கமின்றி துடிதுடித்த இரவுகள் ஏராளம்..””தம்பி.. தியாகு.. இங்க வாராசா.. உன்னைப் பார்க்க சோட்டையா இருக்கு.. எவ்வளவு காலம் மனே உன்னைப் பாத்து..” நான் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். தங்கமணி மாமி... வீட்டினுள்ளே நின்று கூப்பிட்டுக் கொண்டிருந்தா. பிரபுவை கூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன், தங்கமணி மாமியின் அருகில் சென்றதும். அவர் கட்டிப்பிடித்து ஓவென்று ஒப்பாரி வைச்சுட்டா. சற்று நேரத்திற்குப் பின் அது அடங்கியதும்.. அந்த மகராசி இருக்கும் வரைக்கும் அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துபோவேன். இனி ஆரு இருக்கா.” தங்கமணி மாமி மூக்கைச் சிந்தி அம்மாவின் பாசத்தை, பிரிவை சொல்லச்சொல்ல, இவ்வளவு நேரமும் என்னுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் தொண்டைவரை வந்து, 'ஓவென்று நானும் அழுதுவிட்டேன். ”அழுராசா.. நல்லா அழுதிடு.. வாய்விட்டு அழுதிடு... உங்கம்மா உன்னை ஏழு வயசுவரைக்கும் இடுப்பிலே தூக்கிச் சுமந்தவள். வயல் என்றும், வரப்பென்றும் ஆண்வேலையும், பொண்வேலையும் செய்து, உன்ர அப்பனுக்கு துணையா இருந்தவள். நான் இங்க வரும்போதெல்லாம் 'தம்பி கடுதாசி போட்டிருக்கான் மச்சாள். காசி அனுப்பியிருக்கிறான் மச்சாள்' எண்டு சொல்லி சுடச்சுட குடிக்க தேத்தண்ணி தந்து, வாயிலபோட வெத்தில பாக்கும் தந்து அனுப்பும் அந்த சீவன் போயிட்டாளே... இனி நானெல்லாம் எதுக்கு கிடந்து கஸ்டப்படணும்.. என்ர ஆசை மச்சாள் என்னையும் கூட்டிக்கோடீ..” என்று அம்மாவின் மேல் தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்திய

போது என் மனம் கனத்தக்கொண்டது. ஒரு நிமிட நேர நிசப்தம் நிலவியது. ”தியாகு! நான் புறப்படுறன் ஆறு மணிக்கு மேல சென்ரிப் பொயிண்டைத் தாண்டிப்போக விடமாட்டாங்கள் அவங்கள். பிரயாணத்தால் வந்த உடல் களைப்பு அத்தோடு மனக்களைப்பு என்று சோர்ந்து போயிட்டாய். படுத்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள். நான் காலையில வந்திடுறன்” என்று என் காதோரம் சொன்னான் பிரபு. நான் அவனை வழியனுப்பிவிட்டு ஹோலுக்குள் வந்தபோது மருமகள் மலர்விழி சொன்னாள் ”மாமா உங்களுக்கு சாமி அறைக்குள் கடுக்கை போட்டிருக்கு. சாப்பிட்டுட்டு தூங்கிடுங்க” என்று. ”இல்ல.. எனக்கு ஒண்ணும் வேண்டாம். சரி நான் பாத்திக்கிறன்.” என்று அவளை அனுப்பி விட்டு சாமி அறைக்குள் நுழைந்தேன். அப்பாவின் நிழற்படம் சாமிபடங்களுடன் சேர்ந்திருந்தது. அதற்கு சந்தணமாலை, அணிவிக்கப்பட்டிருந்தது. மண்டியிட்டு வணங்கிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவில்லை. நெஞ்சு நிறை துக்கம் இருந்தது. அப்பாவின் கம்பீரமான உருவம், அகன்ற நெற்றி, அள்ளிப்பூசிய விபூதி, கபடமில்லாத சிரிப்பு, அத்தனையும் என் கண்முன் நிழலாட, அம்மாவின் ஆவி சுற்றிச்சுற்றி வந்து என்னை தழுவிக்கொள்வதைப் போல் ஒரு பிரமை. எந்தவித பிரக்ஞையுமில்லாமல் கண்களை மூடிக்கொண்டேன்... அப்பாவும் அம்மாவும் அன்பாக வாழ்ந்தவர்கள். நான் அறிந்தவகையில் அவர்கள் ஒரு போதும் ஒரு பிரச்சினையும் பட்டதில்லை. மனத்தாங்கல் கூட ஏற்பட்டதில்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு அன்பாக வாழ்க்கை நடத்தினார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் ஒரு நாள் கூட பிரிந்திருந்ததில்லை. அவ்வளவு அந்நியோன்யம் அவர்களுக்கிடையே இருந்தது. வயல் விதைப்பு, அறுவடை, சூடுமிதிப்பு என்று எல்லா வேலைகளிலும் அம்மா, அப்பாவுடன் இணைந்தே இருந்தா.விநாயகபுரத்து வீரயடிக்கடை என்றால் பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் தெரியும். அதிகாலை நான்கு மணிக்கே அம்மா எழுந்து கடைவாசல் பெருக்கிவிட்டு கைகால் அலம்பி சாமி கும்பிட்டுவிட்டுவந்து பொயிலருக்கு கரிபோட்டு தண்ணியை சூடாக்கி விட்டு அப்பாவை எழுப்பிவிடுவா. ”இஞ்சாருங்கோ! எழும்பயில்லையே.. இக்கணம் பால்க்காரக் கந்தண்ணர் வந்து கூப்பிடப்போறார்... எழும்பயில்லயே...””ம்ம்..ம்.. நான் முழிச்சிட்டுத்தான் படுத்திருக்கிறன்.” என்று அப்பா எழுந்து கொள்வார்.”நீயென்ன நேரத்தோட எழும்பிட்டியாக்கும்” அப்பா கேட்பார்.”இரவு முழுக்க நான் கண்ணோட கண் மூடவே இல்ல. இவன் தம்பி படுக்கிற அறைக்குள்ள சரியான நுளம்பு. அவன் யன்னலைத் திறந்து போட்டு படுத்திட்டான் நல்லா கடிச்சித் தின்றிருக்குமே.””ஓமெண்ணுறன். பிறகு நான் உரிமட்டை பற்றவைச்சு அதில வேப்பமிலைகளைப் போட்டு புகைச்சு அறை முழுக்க பிடிச்சபிறகுதான் நுளம்புகளும் கலைஞ்சது. தம்பியும் அதுக்குப் பிறகுதான் படுத்தான்.””இரவு காத்தே இல்ல. ஒரு கொத்துக்குழைகூட உசும்பயில்ல. காத்திருந்தா நுளம்பு காலைஞ்சு போயிருக்கும்”எ ன்று சொல்லிக்கொண்டே முகம் கழுவி, சாமி கும்பிட்டு கடைதிறக்கும் அலுவலில் இறங்குவார். வீட்டோட கடையும் அமைந்திருந்ததால், கடையிலிருந்து வரும் சாம்பிராணி புகை வாசமும் ஊதுபத்தி மணமும் நித்தரையில் இருக்கும் எனக்கு இதமாக இருக்கும். இடைக்கிடையே அப்பாவின் பேச்சுக்குரல் கேட்கும்.” வா... வா... குஞ்சித்தம்பி. என்ன விதைச்சுப்போட்டியோ?””அத என்னத்தக் கேக்கிற ராசண்ணே... முதல்ல காப்போத்தல் பால் தாங்கோவன்” ”சரி.. சரி இந்த சுடச்சுடக் குடிராப்பா.. உன்ர விதைப்பாடு எப்படிப் போச்சு...””இண்டைக்கு எண்டிருந்தது. அதுவும் முடியல. அடைமழை புடிச்சு தெண்டால் ஒண்ணும் பண்ண முடீயாது. எப்படியும் பத்துமணிக்கு மேலதான் மெசின் எவரும்” ஏண்டாம்பி. நீ கணபதியண்ணன்ட மெசினுக்குத்தானே காசகட்டினதாச் சொன்னாய். அந்தாள் கண்டபடி நிறையப்பேரிட்ட காசுவாங்கிப் போட்டு இண்டைக்கு நாளைக்கு எண்டு சொல்லுற மனிசனில்லையே... நானும் அவர்ர மெசினத்தான் அஞ்சி வருசமா புடிச்சு வயல்வேலை பாக்கிறன்.” ”ஓமண்ணே அவர் நல்ல மனிசன்தான். என்ர போதாத காலம் நேற்று விதைச்சுக்கொண்டிருந்த மெசின்ர ” அக்சல்” உடைஞ்சு போட்டுதாம். அதை இனி அக்கறைப்பற்றுக்கு கொண்டுபோய் வால்டிங்பண்ணிக்கொண்டு வர நேரமாயிடும். அதுதான் நான் கொஞ்சம் வெள்ளண்ணேயே பூமிக்குள் போனால் வக்கடையள வெட்டிக்கிட்டி ஆயத்தபடுத்திறநேரம் மெசினும் வந்திடும்.”இந்த கிழமைக்குள்ள விதைச்சு முடிச்சிரவேணுமெண்டு வட்டானை சொல்லிப் போட்டார்.” ”ஓம் ஓம் பிறகு முந்தி விதைச்சவன்ர வயலுக்குள்ள முளைகிளம்பினா அவன்ர வயலுக்குள்ளால மெசின்கொண்டுபோக விடமாட்டானுகள். எனக்கு றோட்டோரப் பூமி என்றபடியால் இந்தப் பிரச்சினையே கிடையாது...” என்று சொல்லுவார் அப்பா. அப்பாவுக்கு றோட்டோரப் பூமி என்று சொல்லிக்கொள்வதில் மிகப்பெரிய சந்தோசம் இருந்தது. மெயின்றோட்டைவிட்டு இறங்கிகால் வைப்பது அவர் தனது வயலுக்குள்தான். தான் வாலிப வயதில் காடுவளைந்து வெட்டி, பிறகு நாட்டுக்கட்டை, வேர் பிடுங்கி காணியாக்கிய கதைகளை மிக சுவாரஸ்யமாகச் சொல்லுவார்.

தண்ணிபாய்ச்சும் போதோ அல்லது உரம் எறியும் போதோ அப்பாவுக்குத் துணையாக நான் போவதுண்டு. அம்மா மத்தியானம் சோறு சமைச்சி பனையோலைப் பெட்டியில் சுடச்சுடப்போட்டு இறுக்கிக்கொண்டு கீரிமீன்கருவாட்டோடு உருளைக்கிழங்கும் போட்டு குளம்பு வைச்சி மரவள்ளிக் கிழங்கும் தக்காளியும் போட்டு சொதி வைத்தெடுத்து, தபால் பஸ்சில் வந்து இறங்குவா. அம்மாவை கண்டதும் உரம் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருந்தாலும், அதை அப்பிடியே வரம்பில் வைத்துவிட்டு ஓடிக்சென்று சோற்றுப்பெட்டியை தூக்கிக்கொண்டு வந்து, வயலின் நடுவில் நின்ற வேப்பமரநிழலில் வைத்துவிட்டு, அப்பிடியே வயலின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் கைகால் கழுவி வந்து அம்மா பரிமாற அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் சந்தோசம் இருக்கே.. அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மகா அற்புதமான அனுபவங்கள்... அதிகாலை வேளையில் அப்பாவின் கடையில் ஒரே சத்தமும் சந்தடியுமாக இருக்கும். ஆனேகமான ட்ராக்டர்கள், வண்டில்கள் எல்லாம் அவரின் கடையில் வந்து நின்று அப்பம் இடியப்பம் சாப்பிட்டு, பால், தேத்தண்ணி குடித்து, பீடி, சுருட்டு, வெத்திலை பாக்கு வாங்கி வயல்கட்டுக்கு போய்க்கொண்டே இருப்பார்கள்.விடிந்தவுடன் வேறு ஒரு சுறுசுறுப்பு வீரயடிக்கடையில் உருவாகும். அக்கரைப்பற்றிலிருந்து முஸ்லிம் மீன் வியாபாரிகளெல்லாம் சைக்கிளில் பெட்டிக்கட்டிக் கொண்டும், கார்களைவாடகைக்கு அமர்த்திக்கொண்டும் வந்து சேர்ந்து விடுவார்கள். கோரைக்களப்பு ஆற்றில் பிடிக்கும் இறால், மீன், நண்டு என்றால் ஏகப்பட்ட கிராக்கி. எல்லாம் மொத்தமாக வாங்கிக்கொண்டு போவது இந்த வியாபாhpகளின் வழக்கம். இனி வீட்டுத் தோட்டம் செய்பவர்கள் கொண்டுவரும் காய்கறிகள், வெடிக்காரத் தம்பியர் சுட்டுக்கொண்டுவரும் மான் இறைச்சி அல்லது மரை இறைச்சி, குறவர் வாடியிலிருந்து வரும் காட்டுப்பன்றி, உடும்பு போன்ற இறைச்சி வகை, இனி கோமாரித்தேன், கஞ்சிகுடிச்சாறு, கருவாடு என்று பொருட்கள் வந்து சங்கமமாகும் இடம்தான் அப்பாவின் வீரயடிக்கடை. காலையில் அம்மா கடையைப் பொறுப்பேற்றவுடன் அப்பா தனது கொமிசன் வியாபாரத்தில் இறங்கிவிடுவார். ஊரிலுள்ள குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு முற்பணம் கொடுத்து வைத்திருப்பார். அவர்களிடம் இருந்து வாங்கி அப்படியே முஸ்லிம் வியாபாரிகளுக்கு கைமாறிவிடுவார். அனைத்து வியாபாரிகளும் ராசண்ணன் என்று அவரில் மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்கள்... அவ்வளவு பிரபல்யமான அந்த வீரயடிக்கடை, நான் இன்று காலையில் வந்து இறங்கிய போது இருந்தஇடம், அடையாளம் எதுவுமே தெரியவில்லை. வீரமரமும் இல்லை. அங்கு கடையுமில்லை...போரின் அனர்த்தத்தினால், அவர்கள் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்களாம். அந்த அதிர்ச்சி தாங்காமல் தான் அப்பா படுக்கையில் விழுந்து, பின்பு உயிரை விட்டவர். இப்போது என் அம்மா...அப்பாவின் மூச்சு இருக்கும் வரைக்கும், அம்மா உறுதியாக இருந்தா. அவருக்குப் பிறகு அவ மிகவும் உடைஞ்சுபோய் இன்று எல்லோரையும் விட்டுச் சென்று அப்பாவுடன் சேர்ந்துகொண்டார். இப்போது நான் அவர்கள் இருவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். என்னைச் சுற்றுச் சுற்றி வந்த அம்மாவின் ஆவியுடன், இப்போது அப்பாவும் சேர்ந்துகொண்டார். இருவரும் என் முகவாயை பிடித்து, தொட்டுக் கொஞ்சுவது போல் ஒரு பிரமை எனக்கு...”மாமா! மாமா! எழும்புங்கோ.. எழும்பி வாயலம்பிட்டு கோப்பி குடியுங்கோ” என்று மருமகள் மலர்விழி எழுப்பும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்துக்கொண்டேன். அத்தோடு அம்மாவின் எட்டாஞ்சடங்கு முடிந்தவுடன் நான் லண்டன் திரும்பியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது தான் என் நெஞ்சை நெருடுகிறது.... கோவிலூர் செல்வராஜன்-

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More