Slideshow

ஆசிரியர் தலையங்கம்

ஏழாந்திணையும் தொப்புள்கொடி உறவின் எதிர்காலமும் "தோன்றி வளர்ந்து சிதைந்து மறைந்து மறுபடியும் மறுபடியும் புதியன தோன்றும்” என்கிற இயங்கியல் உண்மையை மீளமீள பொதுப்புத்தி மட்டங்களில் கூட ஏற்றுக்கொள்கிற வகையில் பல நிகழ்வுகளைக் தாண்டிப்போய்க்கொண்டிருக்கிறது தமிழ்ச் சமூகம். ”பறை”யை நாங்கள் உங்கள் முன் கொண்டு வரும் இந்த வேளையில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் கண்டுள்ள பல ”பரிணாமங்களையும்”, ”பரிமாணங்­களை­யும்” கண்டனுபவித்தபடி இருக்கிறோம். போரின் பக்கவிளைவுகளாக உருவெடுத்திருக்கிற பல வெளிப்பாடுகளில் முக்கியமான ஒன்று இந்த புலப்பெயர்வு. புகலிடத் தமிழர்களின் தேவைகள், பண்புகள், வடிவங்கள், திசை வடிவங்கள் இனிவரும் காலங்களில் இதற்கான அரசியல் மூலோபாய தந்திரோபாயங்கள் என்பன பற்றிய சிந்தனைகள் இப்போது தான் வெளிக்கிளம்ப ஆரம்பித்திருக்கின்றன. ”புலம்பெயர்வு” என்பது இன்று உலகளாவிய கருத்தாக்கமாக வளர்ச்சியுற்றிருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் நாடுகடந்து வாழ்தல் எனும் ”புலப்பெயர் கருத்தாக்கம்” (Exile concept) பலவிதமான அரசியல், சமூக, கலாசார ஊடாட்­டங்களை நிகழ்த்தியுள்ளது. இதன் விளைவாக பல்வேறு சமூகங்கள், அவ்வவ் மொழிகளுக்குரிய கலை, இலக்கிய படைப்புகளுக்கூடாகவும், செயற்பா­டுகளுக்கூடாகவும் புலம்பெயர் அரசியல், புலம்பெயர் கலை, புலம்பெயர் இலக்கியம் என இந்த கருத்தாக்கம் வளர்ச்சியுற்றிருக்கிறது. இவை ஏனைய புலம்பெயர் சமூகங்களுக்குமான வழிகாட்டல்களை நிகழ்த்தி­யுமுள்ளன. தமிழ் மரபிலக்கியத்தில் நாம் ஐந்திணைகளைப் பற்றிய கருத்தாக்கத்தை அறிந்திருக்கிறோம். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வெட்டவெளி என அழைக்கப்படும் Cyber Space என்பதை ஆறாம்திணையாக சமீப காலத்தில் ஆக்கிக்கொண்டோம். இன்று ஏழாம் திணையாக புலம்பெயர்வினை குறிப்­பிடவேண்டும் என்கிற முன்மொழிவு கூட சமீபகாலமாக முன்வைக்­கப்பட்டு வருகிறது. அது மிகவும் பொருத்தமானதும் கூட.. திணைக்கான குணங்களையும், பண்புகளையும் அதன் திசை வடிவங்களையும் நாம் பகுத்தாராயும் கட்டம் இது. தமிழ்ச் சமூகத்தில் புலம்பெயர் இலக்கியம் என்பதன் முதல் கட்ட வடிவமானது முதலாம் தலைமுறையினர் தாயகத்தை அடியொற்றிய, தொப்புள்கொடி உறவை இறுக பற்றிக் கொள்கிற, அதனை பாதுகாக்கின்ற. தாயகத்தின் மீதான கடமையில் பிரக்ஞை கொண்டிருந்த, தாயகத்தின் எதிர்காலம் மீதான அதிக ஈடுபாடு கொண்டிருந்த ஒரு வடிவம். போருக்கு முந்திய பசுமைகளை அப்படியே அனுபவித்துக் கொண்டிருந்த நிலையில் புலம்பெயர்ந்தவர்கள் இவர்களில் அதிகம். அந்த உள்ளடக்கங்களை அப்படியே பிரதிபலித்த கலை இலக்கியங்கள் இது வரை தொடர்ந்தன. இரண்டாம் தலைமுறையினரது உருவாக்கத்தோடு அவர்களின் வாழ்நிலையை நேரடியாக பார்த்துணர்கிற கட்டத்தை முதலாவது தலைமுறையினர் இப்போது அடைந்துகொண்டிருக்கிறது. குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை முன்னைய பண்பாட்டு மரபில் காணப்பட்ட அதிக பிணைப்புகளையும், அதிகாரங்களையும், பொறுப்புகளையும், உரிமைகளையும் உள்ளடக்கிய வடிவமாக இருந்த அனைத்தையும் புலம்பெயர் நாடுகளில் அந்த நாடுகளின் வழக்கங்களுக்கேற்றபடி அவை அற்றுப் போவது குறித்த பீதி கடந்த காலங்களில் நிலவின. இன்று அதன் நேரடி நடைமுறைகளை காணமுடிகிறது. அனைத்து புலம்பெயர் சமூகங்களைப் போலவே இது முதலாம் தலைமுறைக்குரிய பிரச்சினை தான். இரண்டாம் தலைமுறை வேறு வடிவத்தில், அளவில் குறைந்த ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும் என நம்பப்படுகிறது. இதன் பன்முக விளைவுகளை தற்போது பல வடிவங்களிலும் பலவித அளவுகளிலும் நேரடியாக கண்டுணர்ந்து அனுபிவிக்கிற காலகட்டம் இது. இது போகப்போக முதலாம் தலைமுறையினருக்கு மேலதிகமான அனுபவங்களைத் தரும். இதன் சாதக பாதக விளைவுகள் குறித்த தேடலும், அதன் மீதான பிரக்ஞையும் தமிழ்ச் சமூகத்தில் வரண்டுபோயிருப்பது தான் இன்றைய கவனிப்புக்குரிய விடயம். தற்போதைய புகலிடச் சூழலை எதிர்கொள்கிற போது தமிழ் மொழி, மற்றும் அதன் பண்பாட்டம்சங்கள் சார்ந்த அனைத்தும் எத்தனை காலத்துக்கு தாக்குபிடிக்கும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகத் தானிருக்கிறது. முதலாம் தலைமுறையினரின் ஏக்கங்கள், எதிர்பார்ப்­புகளை தற்போது உள்ள தொடர்புசானங்கள், (தொலைக்காட்சிகள், வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகள், மற்றும் இணையத்தளங்கள்) முதலானவை தான் கொஞ்ச காலம் பாதுகாக்கும் போலத் தெரிகிறது. இதன் மறைவைப் பின்போடும் பாத்திரமும் இந்த தொடர்புசாதனங்களுக்­குத்தான் இருக்கிறதென பல நிபுணர்களும் கருத்து தொpவித்து வருகிறார்கள். எனவே இன்றைய இந்த தேவைகளையும் அதிக கவனத்திற்கொண்டு அவற்றையும் தாங்கியபடி தான் பறை உங்களுக்கு முழங்கப் போகிறது. இதன் ஒலி உலகம் முழுவதும் கேட்கச் செய்வது மட்டுமல்ல அவற்றின் எதிரொலிகளையும் பறை உள்வாங்கிக் கொள்ளும். அதனையும் செரித்துக்கொண்டு உங்களை வந்தடையும். தேசிய மற்றும் சர்வதேசிய சமூக, அரசியல், கலாச்சார, பொருளாதார நிலைமைகளோடு நின்றுவிடாது நமது சமூகத்தில் நிலவுகின்ற, யாழ், சைவ, வேளாள, ஆணாதிக்க, மேட்டுக்குடி சித்தாந்தங்களையும், அவை சார்ந்த ஏனைய அதிகாரத்துவங்களையும் 'பறை” எதிர்த்து குரல்கொடுக்கும். அனைத்து அடக்குமுறைகளுக்குகெதிராகவும் ஓங்கி ஒலிப்போம். எம்மோடு கைகோர்க்கும்படி அனைவருக்கும் பறை அறைகூவுகிறது. புகலிடத்தில் வெளிவந்த பல சஞ்சிகைகளும் நின்றுபோய் ஒரு சில மட்டுமே அவ்வப்போது தலைகாட்டி வருகிற நிலைமையை நாம் கவனத்திற்கெடுப்போம். எங்கள் எழுதுகோல்களை கூர்மையாக்கிக்கொண்டு உங்கள் முன் உயிர்க்கிற இந்த வேளை, ரிச்சர்ட் டி சொய்ஸா, சபாலிங்கம், நிமலராஜன், பிரேமகீர்த்தி டி அல்விஸ், குகமூர்த்தி, செல்வி, றோகண குமார என அனைவரது நினைவுகளோடும் அவர்களின் சாம்பல் மேடுகளிலிருந்து மீள உயிர்க்கின்றோம். எங்கள் குரல்கள் என்றும் ஒலிக்க, எங்கள் எழுதுகோல்கள் என்றும் எழுத்தைப் பிரசவிக்க எங்களுக்கான மனவலிமையை (moral) உங்களிடமிருந்து என்றும் எதிர்பார்க்கிறோம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More