Slideshow

இலங்கை அரசியல் பிரச்சினையில் கிழக்கு நிலையும், அதன் முக்கியத்துவமும்

பெளசர் இலங்கையுடன் தொடர்புபட்ட பல்வேறு விடயங்களைப்பற்றி கலந்துரையாடுவதற்கு நாம் கூடியுள்ளோம். இங்கு நான் கிழக்கு மாகாண விவகாரத்தை முக்கியத்துவப்படுத்தி எனது கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். கிழக்கு பிராந்திய விவகாரத்திற்கு இந்த அரங்கில் ஏன் அதிக முக்கியத்துவம் அளிக்கிறேன் என்பதை உரையின் ஊடாக தெளிவுபடுத்துவதே நோக்கமாகும். கிழக்கு மாகாணத்தை எப்படி பார்க்க வேண்டும், நீண்ட தொடர்ச்சியான இலங்கை தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் கிழக்கின் முக்கியத்துவம் என்ன, கிழக்குப் பிராந்தியத்தை முன்மாதிhpயாகக் கட்டியெழுப்புவதன் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வில் எந்த வகையில் முன்மாதிரியாக விளங்கலாம், கிழக்கில் உள்ள சமூக, பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புக்கள், மூவினங்களுக்கிடையிலான உறவும் பரஸ்பர உரையாடலுக்குமான தளம் என்பன இங்கு முக்கியத்துவமாகிறது. இந்த விடயங்களில் உள்ள நம்பிக்கைகள், நம்பிக்கையீனங்கள், எதிர்காலத்தில் உடனடியாக செய்யப்பட வேண்டியவைகள் பற்றிய எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கிழக்குப் பிராந்தியத்தின் கடந்தகால, நிகழ்கால நிலைமைகள் உங்களில் கணிசமானோருக்கு நன்கு தெரிந்ததுதான் - ஆகவே அதுபற்றி நான் விபரிக்க விரும்பவில்லை. கிழக்கின் எதிர்காலம் தொடர்பானதும் அதன் அரசியல், சமூக நிலைகளின் இருப்பும் தொடர்பாக உள்ளூர் மட்டத்திலும், சர்வதேச ரிதியாகவும் பல்வேறு எதிர்வுகூறல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கிழக்கு, வடக்கிலிருந்து சுயாதீனமாக இருப்பது குறித்த சாதகமான பாதகமான அபிப்பிராயங்களும் கருத்துக் கூறல்களம் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கிறது. தமிழர் அரசியலில் இதுவொரு முக்கியமான விவாதப் பொருளாகவும் உள்ளது. அத்துடன் இந்த விவாதத்திற்கு வெளியே, கிழக்கில் இன்று நடைபெறுகின்ற சம்பவங்கள் எழுப்புகின்ற சாதக, பாதக அம்சங்களும் நமக்கு முக்கியமாகி உள்ளன. கிழக்குப் பிராந்தியத்தில் அக ரீதியாக நிகழ்கின்ற பாதகமான அம்சங்கள் அதன் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடியதாக இருப்பின், அச்சூழ்நிலைகளை, அதற்கான காரணிகளை இனங்கண்டு மாற்றியமைப்­பதில் அதிக அக்கறை செலுத்தப்படல் வேண்டும். இவைபற்றி நியாயமான விமர்சனங்கள், மாற்றுக்குரல்கள் எழுப்பப்படல் வேண்டும். இதில் அரசாங்­கமோ, அங்குள்ள ஆயுதக்குழுக்களோ, தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ விதிவிலக்கானவர்கள் அல்ல. கடந்த 30 வருடத்திற்கு மேற்பட்ட இலங்கையின் சமூக அரசியல் நிலவரங்கள் இன முரண்பாடுகளாகவும், மேலாதிக்க அதிகாரத்துவமாகவும் அசமத்துவங்­களாகவும் உருவெடுத்து நிற்கிறது. தேசிய வாதத்தின் இனத்துவ மேலாதிக்கத்தின் அடியாக மேற் கிளம்பி நிற்கும் அரசியல் போக்கும் அதிகாரத்துவ செயற்பாடும் இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையையோ சமாதானத்­தையோ வழங்கவில்லை. மாறாக அனுபவித்து நின்ற நிம்மதியையும் தொலைத்தவர்களாக, உயிரழிவு, உடமையழிவு, இடப்பெயர்வு, ஜனநாயக மறுப்பு, மனித குலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய மனித உhpமை மீறல்களையும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. ஆகவே நாம் புதிய வழிமுறையில் புதிய அணுகுமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினையை அணுகுவதற்கு முயற்சிக்க வேண்டும். சிங்களத் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ, தமிழ்த் தேசியவாத கருத்து நிலையின் ஊடாகவோ இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வும் காணமுடியாது, அமைதி சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்பதே இலங்கையின் இதுவரையான அனுபவம். புதிய வழிமுறையில் முன்செல்ல பரிட்சார்த்தமான பிராந்தியமாக கிழக்கைக் கொள்ள முடியும் என்பதே எனது கருத்தாகும். இலங்கையின் இனச்சிக்கல், ஆயுதமோதல் முரண்பாடுகளுக்கு மத்தியில் தனியாக இயங்கத் தொடங்கியுள்ள கிழக்கு மாகாணத்தின் எதிர்காலம் தொடர்பாகவும் அதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் புதிய பார்வைகளையும், ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் ஆரோக்கியமாக முன்வைப்பது முதலில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும். இதனை இராணுவ ரிதியாக எத்தரப்பும் எதிர்கொள்ள முயற்சிக்கக் கூடாது. கிழக்கு மாகாணம் பன்மைத்துவமான பிராந்தியம், மூவின மக்களும் அங்கு வாழ்வதோடு பல்கட்சி ஜனநாயகம் நிலவும் பிரதேசம். இனப்படுகொலைகளும் உள் இயக்கப் படுகொலைகளும் மோசமாக நடந்த, நடந்துகொண்டிருக்கும் மண், தமிழ் தேசிய வாத்தின் அடியாக மேற்கிழம்பிய தமிழ் முஸ்லிம் பிரச்சினையின் நிலக்களமாகவும் கிழக்குப் பிராந்தியம் உள்ளது. 2007 ஜனவரி 1ம் திகதி கிழக்கு மாகா­ணம் தனிப் பிராந்தியமாக பிரிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்­களை எட்டப் போகிறது. இக்காலத்திற்குள் அங்கு பல்வேறு மாற்றங்கள், புதிய நிலைமைகள், ஆரோக்கியமான போக்­குகள், ஆரோக்­கியமற்ற செயற்பாடுகள் நடந்துள்ளன. கிழக்குப் பிராந்தியம் தற்போது அரசியலமைப்பு ரிதியாக தனியான பிராந்தியம், யாழ் அதிகாரத்து மேன்நிலைக்குள் அது இல்லை. அண்மைய நிகழ்வுகளை மதிப்பிடுகின்ற போது எதிர்காலத்தில் வடமாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றுதான் நான் கருதுகிறேன். இதற்கான பல்வேறு காரணங்கள் உங்களுக்கும் தெரியும். சமகால யதார்த்தத்தின் அடியே கிழக்கை வடக்குடன் இணைத்துப் பார்ப்பது சாத்தியமானதாகத் தெரியவில்லை. கிழக்கைப் பற்றி தனியாக யோசிக்க வேண்டியுள்ளது. இன்று இந்த விடயத்தில் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்திலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவர பணியாற்றுவோரும் ஆக்கபூர்வமான எதிர்காலத்தை எப்படி உருவாக்கலாம் என்பதில் அக்கறை கொண்டோரும் தவிர்க்கவியலாமல் கிழக்குப் பிராந்திய விவகாரத்தில் அதிக கவனக் குவிப்பை செய்ய வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தை - இனங்களுக்கிடையிலான ஒற்றுமை, சமமான வாய்ப்பு, சமத்துவ உரிமைகள், உத்தரவாதப்படுத்தப்படும் பிராந்தியமாக கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கை மக்க­ளுக்கும் சர்வதேசத்துக்கும் நம்பிக்கைய­ளிக்கக் கூடிய பூமியாக, தேசிய இனப்பிரச்­சினைத் தீர்வுக்கு சாத்தியமான பதிலை வழங்கக் கூடிய பிராந்தியமாக கொள்ள முடியும். இலங்கை அரசாங்கம் இந்த விடயத்தில் பல்வேறு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. அரசுக்கே இதில் அதிக பொறுப்புள்ளது. இதில் பிரதானமானது பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர்களின் வாழ்வுhpமையையும், காப்பதும் அதிகாரப் பகிர்வை அர்த்தபூர்வமாக உறுதிப்படுத்துவதுடன் கிழக்கில் அரசியல் நோக்கத்துடன் திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்துவதுமாகும். தமி;ழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் இதில் அதிக பொறுப்புள்ளதுடன் சிவில் சமூகம் அதிகம் பங்களிக்க வேண்டியுள்ளது. கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலைமை என்ன? எதிர்காலத்தில் கிழக்கில் அமைதியையும் சமூக சமத்துவத்தையும் உருவாக்குவதற்கு செய்ய வேண்டியுள்ள பணிகள் என்ன என்பது குறித்து பேசப்படவும் விவாதிக்கப்படவும் வேண்டும். இது முக்கியமானது என வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையின் சமூக அரசியல் வரலாறானது மனிதா;களிடையேயும் அங்கு வாழ்கின்ற சமூகங்களிடையேயும் மோசமான கசப்புணர்வுகளையும் முரண்பாடுகளையும் வளர்த்துவிட்டுள்ளது. இலங்கைக்குள் நிலவுகின்ற இந்த இன, மத, மொழி வேறுபாடுகள் நாட்டின் அனைத்துப் பிராந்தியங்களிலும் ஏதோவொரு வகையில் அகமாகவும் புறமாகவும் தொழிற்பட்டே வருகிறது. அதிகாரப்போட்டியும் இன மேலாதிக்கமும் வளப்பங்கீடு தொடர்பான அதிருப்திகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இலங்கை சமூக அரசியலின் பிரதிபலிப்பான இனங்களுக்கிடையேயான கசப்புகளும் முரண்பாடுகளும் கிழக்கில் உள்ளன. கிழக்கு மாகாண மக்கள் நீண்ட காலமாய் தமது அடிப்படை உரிமைகளை இழந்து நிற்கின்றனர். 25 வருடத்திற்கு மேலான தொடர்ச்சியான போரின் கொடூரம் கிழக்கை பாரிய அளவில் பாதித்துள்ளது. கிழக்கு தனிப்பிராந்தியமானதன் பின்னும், அங்கு மாகாண நிர்வாகம் ஏற்பட்டதன் பின்னும் மனித உரிமைகள் மீறப்படுகின்­றன, துப்பாக்கிகளின் அதிகாரமும் கொலைகளும் தொடர்கின்றன, அதே­வேளை ஆயுதவழி நின்றோர் ஜனநாயக வழியில் பயணிப்பதற்கான முயற்சிகளும் செயற்பாடுகளும் அழுத்தங்களும் உள்ளன. கிழக்கு மக்களின் இன்றைய நிலை ஜனநாயகம், மனித உரிமைகளுடன் கூடிய வாழ் உரிமையுடன் தொடர்புபட்ட விடயமாகவுள்ளதுடன் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையுடன் நேரடியாக தொடர்புபட்டும் உள்ளது. கிழக்குப் பிராந்தியத்தை நாம் தனித்த அரசியல், நிர்வாக புவியியல் பிரதேசமாகக் கொள்கிறோம் என்றால், அங்கு வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களின் உணர்வுக­ளுக்கு மதிப்பளித்தாக வேண்டியுள்ளது. அம்மக்களின் கருத்துக்கள் கேட்டறியப்­படுவதுடன் அவர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தீர்க்கப்படுவதும் வேண்டும். உண்மையில் அன்றிலிருந்து (1987 இலங்கை இந்திய ஒப்பந்தம்) வடக்கு கிழக்கு பிரிக்கப்படல் வேண்டும் என்பதே மாறி மாறி பதவிக்கு வந்த அரசுத் தலைமைகளின் விருப்பமாக இருந்துள்ளது. தமிழ் தேசிய வாதத்துக்குள் நிலவிவருகின்ற யாழ் மேலாதிக்கம் காரணமாகவும் விடுதலைப் புலிகளுக்குள் நிகழ்ந்த பாரிய உடைவின் காரணமாகவும் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் பிரச்சினை காரணமாகவும் கிழக்கு தனிப்பிராந்திய­மாகிவிட்டதே உண்மை. தமிழ்ஈழ விடுதலைப்புலிகள் வலியுறுத்துகின்ற வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட தமிழ் ஈழத்திற்குள் அல்லது ஏனைய தமிழ் அரசியல் தலைமைகள் வலியுறுத்துகின்ற சமஸ்டி பிராந்தியத்துக்குள் கிழக்கு முஸ்லிம்கள் தாம் உள்ளடக்கப்படுவதற்கான எதிர்ப்பினை 1990க்குப் பின் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தி வந்திருக்கின்றனர். வடக்கு கிழக்கின் அதிகாரம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்படுவதானது முஸ்லிம் மக்களை மோசமாக ஒடுக்குவதற்கும் இனச் சுத்திக­ரிப்பு செய்வதற்கும் வாய்ப்பான சூழலை வழங்கும் என முஸ்லிம்கள் நம்பினர். கடந்த காலத்தில் முஸ்லிம்கள் தொடார்பில் விடுதலைப்புலிகள் நடந்துகொண்ட முறையானது இந்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்பிற்கும் எதிர்ப்பிக்கும் வலுவான ஆதாரங்களாக உள்ளன. இந்த நிலையின் காரணமாக கிழக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் தென்கிழக்குப் பிரதேசத்தை மையப்படுத்தி முஸ்லிம் பெரும்பான்மை மாகாண அதிகாரத்தைக் கோரி வந்துள்ளன. சிங்களத் தேசியவாதம் தமிழ் தேசியவாதத்தை உற்பத்திவித்தது போன்று, 1990க்குப் பின் கிழக்கில் தமிழ் தேசியவாதம் முஸ்லிம் தேசியவாத கருத்து நிலையை ஏற்படுத்தி இருந்தது இங்கு கவனிக்கத்தக்கது. தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் சிங்கள தமிழ் இன விவகாரம் மட்டுமன்றி, முஸ்லிம் இன விவகாரமும் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரம் கிழக்குப் பிராந்தியத்தைப் பொறுத்தவரை முதன்மையானதும் பிரதானமானதுமாகும் - கிழக்கு மாகாணம் தனித்து இயங்கத் தொடங்கியதன் பின், முஸ்லிம்கள் தங்களுக்கான தனி மாகாண அதிகாரம் தொடர்பான நிலைப்பாட்டின் குரலை அதிகம் வலியுறுத்தவில்லை என்பது இங்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய அம்ச­மாகும். கிழக்கில் தமிழ் மேலாதிக்கமோ, அல்லது முஸ்லிம் மேலாதிக்கமோ துரதிருஸ்டவசமாக ஏற்படின், இரு இனங்களின் நிலைப்பாட்டிலும் மாற்றமான கோரிக்கைகள் எழும் என்பது எதிர்பார்க்கக்கூடியதே. கிழக்கு மாகாணத்தில் நிலைமைகளில் மாற்றங்க­ளைக் கொணர்வதற்கு ஏலவே நாம் கூறியதுபோல் அரசாங்கம் தொடக்கம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்­புகள் ஆற்றவேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. இதிலுள்ள பல்வேறு பணிகளின் வலியுறுத்தல்கள் கிழக்கு மாகாணத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பொருந்தக் கூடியதே.
அரசாங்கத்துக்கு முன்னுள்ள முக்கிய பணிகள்
முதலில் இலங்கை அரசானது பௌத்த பேரினவாத சிந்தனையிலிருந்து தன்னை விலக்கி, பல்லினங்களின் அரசாக மீள் உருவாக்கம் கொள்தல் அவசிய­மானதாகும். அரசின் நிர்வாக அரசியல் கட்டமைப்புகள் பல்லினங்களின் நலனை பிரதானப்படுத்தியே செயற்படுத்தப்படல் வேண்டும். மகிந்த ராஜபக்ஷவின் அரசானது இதுவரையில்லாத, முன்மாதிரியே காட்ட முடியாத பௌத்த சிங்கள மேலாதிக்க உணர்வை தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகின்றது. அண்மையில் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, 'இலங்கை சிங்களவருக்குச் சொந்தம்” என கருத்து வெளியிட்டதும் அதனை ஆமோதிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவை சகா சம்பிக்க ரணவாக்க, 'இலங்கை வாழ் தமிழ் முஸ்லிம் மக்கள் வந்தேறு குடிகள் என்றும் இராணுவத்தளபதி கூறிய கருத்து சரியா­னது என்றும் சிறுபான்மை மக்களை பிரதிநி­தித்­துவப்படுத்தும் அரசியல் தலைமைகள் தேசத் துரோகிகள்” எனவும் வர்ணித்தது மிகவும் கண்டிக்­கத்­தக்கது. இக்கூற்றுகள் மிக வெளிப்படையாகவே அரசின் கொள்கை நிலைப்பாட்டை ஏதோவொரு வகையில் பிரதிபலிப்பதுதான். ஏனெனில் இதுவரை இவர்கள் இருவாpன் கருத்தையும் மறுத்துரைக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எவ்வித கருத்தையும் கூறாமல் இருப்பது அரசுத்தலைவரின் பொறுப்பற்ற, இனவாத சார்பு நிலைப்பட்ட தன்மையைக் காட்டுகின்றது. கடந்த காலத்தைப்போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் பெரும்பான்மையைக் குறைக்க சிங்களக் குடியேற்றங்களை கிழக்கில் திட்டமிட்டு நடாத்தியது போன்று, மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கும் தெளிவான சிங்களக் குடியேற்றத்திற்கான நிகழ்ச்சி நிரல் உள்ளது. இதற்கான திட்டமி­டல்கள் ஆரம்ப செயற்பாடுகள் கிழக்கில் தொடங்கப்பட்டுள்ளன. இப்ப­டியான குடியேற்­றங்கள் செய்யப்படுவதை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். அரசாங்கம், கிழக்குப் பிராந்தியத்­துக்கான அதிகாரப்பகிர்வை பூரணமாக நிறைவேற்ற வேண்டும். 13வது திருத்தத்­தின் அடிப்படையில்தான் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டது. நடைமுறை அனுபவத்தில் 13வது திருத்தம் பெருமளவு போதாமைகளையும் குறைபாடுகளையும் கொண்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு காரணமான ஆழமான குறைபாடுகளை அகற்றுவதற்கான வலுவான உள்ளடக்­கத்தை இத்திருத்தம் கொண்டிருக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்­கிடையி­லான அதிகாரப் பகிர்வு என்பது 13வது திருத்தத்திற்கு மேலாக செய்யப்பட வேண்டியதொன்று. நாட்டின் ஏனைய 07 மாகாணங்களின் பிரச்சினையை விட, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரச்சினை வேறுபட்டதும், இதற்குத் தீர்வாக ஆழமானதும் உறுதியானதுமான அரசியல் சமத்துவத் தீர்வை வேண்டி நிற்பதுமாகும். தற்போதைய கிழக்கின் அரசியல் தலைமைகளும் கூட, மாகாணசபையை செயற்படுத்துவதில் மத்திய அரசின் தலையீட்டை அனைத்து விடயங்களிலும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். ஒரு கையால் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்கியுள்ள இந்த ஏற்பாடு, மறுகையால் அவ்வதிகாரங்களை மத்திய அரசு கையகப்படுத்தி கட்டுப்படுத்துகிறது. 13வது திருத்தத்திலுள்ள 3வது நிரல் (Concurrent list) மறு எழுத்தாக்கம் செய்யப்படுவது அவசியமானதாகும். இலங்கை, இந்தியா தவிர உலகின் வேறு எந்த நாட்டிலும் இப்படியானதொரு 3வது நிரல் இல்லையென அரசியலமைப்பு வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து இனப்பிரச்சினைத் தீர்வுக்காக அரசால் கூட்டப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவி­னால் முன் வைக்கப்பட்ட, வெறுமனே 2 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஏமாற்றத்தை தரும் ஒரு ஆவணமாகவே உள்ளது. இன்னுமொரு உதாரணமும் இங்கு முக்கியமானது. வடக்கு கிழக்கு மாகாணங்­கள் உட்பட இலங்கை முழுவதிலும் தமிழும் அரச கரும மொழி என்பது இன்னமும் அமுலுக்கு வரவில்லை, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்பட்ட அறிக்கையில்கூட, மொழிகள் தொடர்பான அரசியலமைப்பின் 4வது அத்தியாயத்தை முழுமையாக அமுல்படுத்த பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அரசாங்கம் முன்வரவேண்டுமென கேட்கப்பட்டது மிகவும் துரதிருஷ்ட வசமானது. அரசியலமைப்பில் உள்ள தமிழ் மொழியும் அரச கருமமொழி என்பதை அமுல்படுத்த ஏன் இந்த தயக்கம்? பாராளு­மன்றத்தில் ஏன் இதற்கு தீர்மானம் நிறைவேற்­றப்படல் வேண்டும்? கிழக்கு மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டங்­களிலும் பொலிஸ் நிலையங்களில் இன்றும் சிங்களமே கருமமொழியாகவுள்ளது. அதேபோல் திருக்கோணமலை, அம்பாறை மாவட்டங்களின் செயலகங்களில் (கச்சேரி) இன்றும் சிங்களமே கரும மொழியாக­வுள்ளது. அதிகாரப் பரவலாக்கத்தின் முக்கிய குறைபாடுகள் தீர்க்கப்படல் வேண்டும். கிழக்கு மாகாணசபை சுயாதீனமாக செயற்படுவதற்கான அதிகாரங்கள் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்படுவது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசியல் பேச்சுவார்த்தை மார்க்கத்தில் கண்டடையலாம் என்பதில் நம்பிக்கையை வளர்ப்பதுடன் அதிகாரப் பகிர்ந்தளிப்பில் முன்மாதிரியான பிராந்தியமாகவும் முன்னிலைப்படுத்த முடியும் என்பது கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். கிழக்கு மாகாணத்தில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் மக்களின் ஜனநாயக, வாழ்வுரிமைகளை பாதுகாப்பதற்கும் அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு ஆயுதப்பிரயோகம், அதன் ஆதிக்கம் நிறுத்தப்படல் வேண்டும். கிழக்கு மக்களின் பிரச்சினையில் முக்கிய அக முரண்பாடாக உள்ள தமிழ் முஸ்லிம் மக்களுக்கிடையிலான முரண்பாடுகள் எப்படி மாற்றம் கொள்கிறது, எவ்வகையான வடிவங்களை எடுக்கிறது, அதன் விளைவுகள், இன்றைய போக்குகள் குறித்து நாம் விரிவாகவே பார்க்க வேண்டும். அதற்கான கால அவகாசம் இப்போது இல்லை. சுருக்கமாக இந்த இடத்தில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அம்சமாக, கிழக்கில் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டிற்கு வழி ஏற்படுத்தும் காரணியாக வளப்பிரச்சினை உள்ளது. குறிப்பாக நிலம் (விவசாய, குடியிருப்பு, வர்த்தக நிலையங்கள்) தொடர்பான போட்டியே பிரதான காரணமாக விளங்கி வருகிறது. அத்துடன் கல்வி, பொதுத்து­றைகள், அரச தொழில் வாய்ப்புகளில் உள்ள பங்கீடு. இந்த முரண்பாட்டு நிலையை, அங்குள்ள ஆயுதக்குழுக்களும், தழிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை விரும்பாத சக்திகளும் காலத்திற்கு காலம் பயன்படுத்தி வருகிறது. கிழக்கு மாகாணத்தை முன்னிலைப்­படுத்தி தமிழ் முஸ்லிம் மக்களுடைய வாழ்வில் சமத்துவமும் ஐக்கியமும் பஸ்பர உறவையும் மீளக்கட்டியெழுப்புவதற்கான பணியை முன்மாதிரியாகக்கொண்டு செயற்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். யதார்த்தத்தில் கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கான அரசியல் தீர்வையும் சமூக இனபண்பாட்டுபொருளாதார உறவுகளை கட்டியெழுப்புவதற்கான மிகச் சிறந்த பரிட்சார்த்த களமாகும். இந்தப் பணியைச் செய்வதில் அரசாங்கத்தினாலோ அங்குள்ள பெரும்பாலான அரசியல் தலைமைகளி­னாலோ முடியாமல் போய்விட்டுள்ளது. இதனை சாத்தியப்படுத்துவதற்கு நமக்கு புதிய சிந்தனை செயற்திட்டங்கள் அவசியமாகியுள்ளது. முடிவாக இலங்கையில் இனங்களுக்­கிடையே ஒருங்கிணைந்த வாழ்வையும் பல்லின சமூகங்களுக்கும் பொருத்தமான அதிகாரங்களை வழங்கி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி தனித்துவங்கள் ஏற்கவைக்கப்படுவது நம் அனைவருக்கும் முன்னுள்ள சவாலாகும். இவைகள் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல பெரும் மானிடப் பிரச்சினையு­மாகும். அறம் சார்ந்த துயரங்களுமாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More