Slideshow

நினைவில்...... தோழர் பொன். கந்தையா

கரவைதாசன்

கந்தையாஅன்று சிறுபான்மைத்தமிழர் மகாசபை என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் ஸ்தாபனத்தோடு சேர்ந்து இருபத்தொன்பது பாடசாலைளை உருவாக்கியிருந்தார்.

இந்த இருபத்திஒன்பது பாடசாலைகளில் கிட்டத்தட்ட பதினாறு பதினேழு பாடசாலைகள் சிறுபான்மைதமிழர் மகாசபையின் நேரடி முயற்சில் உருவானவை என்ற வரலாற்றுப் பதிவினை ஈழத்து இடதுசாரிகளின் வரலாறெங்கும் காணலாம். அதனோடு அவரது பருத்தித்துறைத் தொகுதில் உள்ள எல்லாப் பாடசாலைகளுக்கும் வேண்டிய தளபாடங்கள் ஆய்வுகூட உபகரணங்கள் வேண்டிய ஆசிரியர்கள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொடுத்ததோடு நின்றுவிடவில்லை. ஒரு அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தையும் ஏற்படுத்தினார்.


இந்த அரசினர் மத்திய மகாவித்தியாலயத்தை பருத்தித்துறைத் தொகுதியின் மத்தியில் ஏற்படுத்தி எல்லா மக்களுக்கும் பிரயோசனப்படும் வகையில் ஏற்படுத்த முயற்சி எடுத்தார். அதை வல்வெட்டி, பொலிகண்டி, நெல்லியடி, உடுப்பிட்டி போன்ற இடங்களின் மத்தியில், எள்ளங்குளச் சுடலைக்கு மேற்கேயிருந்த தரிசு நிலத்தில் அமைப்பதற்கு அத்தொகுதியிலுள்ள சமூகஅக்கறையாளர்களேடும் கட்சித்தோழர்களோடும் தீர்மானித்து அந்தக் காணியை அரசாங்கம் சுவீகரிப்பதற்கு விண்ணப்பித்து அதைச் செயற்படுத்த முயன்று கொண்­டிருந்தார். மத்தியமகாவித்தியாலயத்தை மாத்திரமல்ல அதற்குப் பக்கத்தில் ஓர் அரசினர் தள வைத்தியசாலையையும் ஏற்படுத்த இருந்தார்.

இதைக் கேள்விப்பட்ட வல்வெட்டியைச் சேர்ந்த நிலக்கிளார்கள் அந்தத் தரிசு நிலத்தில் துரிதகதியில் ஒரு கட்டிடத்தைக் கட்டி அதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரால் பொன்னம்பல சைவவித்திய­சாலையென்று பெயர்வைத்து திரு.ஜீ.ஜீ. பொன்­னம்பலத்தின் துணையோடு அதை

அங்கீகரிக்கவும் செய்துவிட்டனர். அந்தப்பள்ளிக்கூடத்தை அரசினர் பாடசாலையாக்குவதை தடுக்க அவர் முயற்சிக்கவில்லை. எனில் இந்துக்களின் உணர்வுகளைப் அது புண்படுத்துவ­தாகிவிடும் என்பதால் கந்தையா அம்முயற்சியை வேறுவழியிற்செய்ய யோசித்தார்.

ஈற்றில் உடுப்பிட்டி இமையாணன் பொலிகண்டிப் பிரதேசத்திலுள்ள நிலக்கிளார்களிடம் இப்படி ஒரு அரசாங்க மத்தியமகாவித்தியாலயத்தினை உருவாக்குவதற்கு காணிகளை வழங்கும்படி கேட்டிருந்தார்.

ஒருவரும் நிலத்தினை வழங்க முன்வராததால் மாற்றுவழியேதுமின்றி நெல்லியடியில் இருந்த தனது சொந்தத் தோட்டக்காணி முழுவதையும் இனாமாக வழங்கி நெல்லியடியில் அரசாங்க மத்திய மகாவித்தியாலயம் உருவாகுவதற்கு வழிசமைத்தார்.


அதுவே வடமாகாணத்திற் தோன்றிய முதலாவது அரசினர் மத்திய மகாவித்தியாலயமாகும். அது விடுதியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் வசதியோடு கட்டப்பட்டது. அவ்வழியில் அந்நாட்களில் வெளிமாவட்டங்ளிலிருந்து வந்து பல சிங்கள, முஸ்லீம் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தார். இச்செயற்திட்டங்களில் தேசியஒற்றுமையினை பேணலாம் என அவர் தீர்க்கமாக நம்பிச்செயற்பட்டார்.


அந்த விடுதிகளில் வடமாகாணத்தி­லேயுள்ள பின்தங்கிய பிரதேசத்திலேயுள்ள மாணவர்களும் புலமைப்பரிசில்கள் மூலம் விடுதியில் தங்கிப்படிக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தியிருந்தார். அந்த நெல்லியடி அரசினர் மத்தியமகாவித்தியாலயத்தில் தீவுப்பகுதிகளிலிருந்து புலமைப்பரிசில்கள் பெற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் வந்து தங்கியிருந்து கல்வி கற்றனர். இவையெல்லாம் பாடசாலை தேசியமய­மாக்கலுக்கு முன்பு நடந்தவையாகும். கந்தையா போட்ட அத்திவாரத்தின் பலாபலனாலேயே வடமராட்சிப் பிரதேசம் கல்வியில் முன்னேறியது.

உடுப்பிட்டியில் கட்டப்படவிருந்த தளவைத்தியாசாலை காணிகிடைக்காத காரணத்தினால் ஈற்றில் மந்திகையில் கட்டப்பட்டது. அதுவே இன்று மந்திகையில் அமைந்துள்ள பருத்தித்துறை ஆதார­வைத்தியசாலை ஆகும். இவ்வாதார வைத்தியசாலை இன்று வடமராட்சியில் இயங்கிக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வைத்தியசாலையாகும். இங்கே அமைந்துள்ள மனநோயாளர் பிரிவு கூட அவர் வகுத்து வைத்த திட்டத்தின் தொடர்ச்சியினால் பின்பு உருவானதாகும்.

கந்தையா நாளாந்த வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அரசியலையும் இணைக்கத்தெரிந்த மனிதராகும். அதற்கோர் உதாரணம். ஐம்பதுகளில் சீவல்தொழிலாளர்கள் கள் இறக்கக் கூடாது. கள் இறக்குவது சட்டவிரோதமாகும். கருப்பணியே இறக்கவேண்டும்.

கள்ளை முட்டிகளிலும் போத்தல்களிலும் கொண்டுபோன சீவல் தொழிலாளர்கள் பொலிசாலும் எக்சசை இன்ஸ்பெக்டர் என்று சொல்லப்படும் பாழை வெட்டுபவர்களாலும் பிடிக்கப்பட்டு கோட்டில் வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். கோட்டுத் தண்டத்தினைக் கட்ட இயலாமல் சிறை சென்றவர்கள் அனேகம். கள்ளைக் காவிச்சென்ற சின்னஞ் சிறார்கள்கூட பொலிஸ் நிலையங்களிலுள்ள கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். கள்ளைக் காவிச் செல்லும்பொழுது தற்செயலாகப் பொலிஸ் வந்தாலோ கள்ளுமுட்டியைப் போட்டு உடைத்துவிட்டு சீவல்தொழிலா­ளர்கள் ஓடுவார்கள். ஆனால் சாராயக் குதங்களோ அனுமதி வழங்கப்பட்டு சட்டபூர்வமாக மதுக்கடை வியாபாரத்தினை நடத்திக் கொண்டிருந்தன. கருப்பநீர்தயாரிப்­புக்காக சீவுவது மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. கருப்பனீர் சீவினால் ஒன்றைவிட்ட ஒருநாள் கருப்பனீரை பனைச் சொந்தக்காரான நிலக்கிழார்களுக்குக் கொடுக்கவேண்டும்.. கருப்பனீர் சீவுவதானது கருப்பனீரைக் கொண்டு வந்து காய்ச்சிப் பாணியாக்கிப் பனங்கட்டியாக்கி பனங்கட்­டியை சந்தையில் விற்றபின்னரே அவர்க­ளின் கையில் காசுவரும். அன்றுழைத்து அன்று வாயில்போடும் வறுமையில் வாடும் அந்த மக்களுக்கு கள்ளுச்சீவி விற்பதானது நாளாந்த உணவுக்கான ஜீவனமாகும்.
இந்தத் துன்பத்தை விளங்கிக் கொண்ட கந்யைh அவர்கள். அவர் பாராளுமன்றத்­தில் இந்தப் பிரச்சனையையும் அந்த மக்கள் படும் துயரத்தையும் எடுத்துச் சொல்லி நாலுபோத்தில் கள்ளினை வீட்டில் வைத்திருக்கலாம் என்பதனைச் சட்டபூர்வமாக்கினார்.

கந்தையா பாராளுமன்றத்தில் கொண்டு வந்த இந்தப் பிரச்சினை அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருந்தது. அன்றிரவே உடுப்பிட்டிச் சந்தியிலுள்ள பிள்ளையார் கோவில் மதிலில் நளக்கந்தையாவே வருக! என்று சிவத்தபெயிண்டால் எழுதி அதற்குப் பக்கத்தில் அரிவாளும் சுத்தியலும் சின்னத்தைக் கீறியிருந்தார்கள் சாதிவெறித் தமிழர்கள். கந்தையா அவற்றைச் சட்டைசெய்பவரல்லர்.

ஒருநாளும் மற்றவர்களை ஓடுக்காத, ஒருநாளும் மற்றவர்களைச் சுரண்டாத, ஒருநாளும் மற்ற மக்களைக் கீழாகப் பார்க்காத அந்த மக்களின் பெயரால் அழைப்பதை அவர் ஒரு பெரிய கௌரமாகவே ஏற்றுக்கொண்டார்.

அதனோடு கந்தையா நிற்கவில்லை. அவர் பொலிகண்டியென்­னுமிடத்தில் கருபனீரிலிருந்து சீனிசெய்யும் தொழிற்சாலையை உருவாக்கினார். அதற்கான இயந்திரமானது அந்நாள் சோவியத்நாட்டிலிருந்து இறக்கப்பட்டதாகும். இது கந்தளாய் சீனித்தொழிற்சாலை ஏற்படமுன்னரே ஏற்படுத்தப்பட்­டதாகும்.

கந்தையா பாராளுமன்றம் சென்றவுடன் வடமராட்சிப் பகுதிக்கு ஒரு கிராமிய விவசாய ஆலோசகரை நியமித்தார். அவர் விவசாயிகளுக்கு உரம் பாவிப்பதையும் கிருமிநாசினிகளைப் பாவிப்பதையும் அறிமுகப்படுத்தினார். காண்டாவனம் போல் வெய்யில் கொழுத்தியெறியும் கெந்தக பூமியான யாழ்குடாநாட்டில் விவசாயிகள் பட்டை துலா மூலம் நீர் இறைத்தே விவசாயம் செய்தனர். நீர் இறைக்கும் இயந்திரங்களின் பிரயோகத்தையும் அதானல் கிணத்துநீருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதனையும் பெருத்த சிரமங்களுக்கு மத்தியில் வடபுலத்து விவசாயிகளுக்கு விளங்கப் படுத்தினார். முதன் முதலில் அந்நாளில் கொம்யூனிஸ்டாக இருந்து தன் பிள்ளைகளுக்கு லெனின் என்றும் ஸ்டாலின் என்றும் பெயர் வைத்த ஈஸ்வரலிங்கப் பெருமாள் என்பவரே முதலில் நீர் இறைக்கும் இயந்திரத்தை வாங்கிப் பாவித்தார். இரண்டொரு வருடங்களில் அனேக விவசாயிகள் நீர் இறைக்கும் இயந்திரங்களை வாங்கி உபயோகப்­படுத்தினர். அதனோடு அவர் நிற்கவில்லை. சந்தைப் படுத்துவதற்காக ஒரு வெங்காயச் சங்கத்தை ஏற்படுத்தினார். இந்த வெங்காயச் சங்கம் வெங்காயத்தைக் கொள்வனவு செய்து கொழும்புக்கு ஏற்றுமதி செய்தது. வடமராட்சி விவசாயிகள் பயிர்ச்செய்கைக் காலத்தில் செல்வந்தர்களிடம் வட்டிக்குக் காசைக் கடனாகப் பெற்று அறுவடைகாலத்தில் கடனை இறுப்பதானது விவசாயத்தின் மூலம் புதுக்காசைப் பழங்காசாக்குவ­தாகவே இருந்தது. இந்தச் சுரண்டலிலிருந்து பாதுகாப்பதற்காக வெங்காயச் சங்கத்தை பலநோக்குக் கூட்டுறவுச்சங்கமாக மாற்றி இந்தப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் பயிர்ச்செய்கைக் காலங்களில் விவசாயி­களுக்கு விவசாய சிறுதெiகைக்கடனை வழங்கி அக்கடனை அறுவடைக்காலங்க­ளில் வெங்காயம், நெல் போன்ற அறுவ­டைப் பொருட்களை கொள்வனசெய்து கடனை மீளப் பெற்றுக்கொண்டது. கந்தையா பொருளாதாரத்தை இலண்டனில் படித்தது மாத்திரமல்ல தனது முதுமாண்­பரீட்சையின் ஆய்வுக் கட்டுரையாக கூட்டுறவு முறை பற்றி சமர்ப்பித்ததோடு பலமுறை சோவியத் நாட்டிற்குச் சென்று அந்நாள் சோவியத்நாட்டில் அங்கே நடைமுறையிலிருந்த கூட்டுறவு முறைகளைக் கற்று வந்து அதை வடமராட்சியில் பரீட்சித்தர்ர்.

கந்தையா கொழும்பில் இருக்கும் நாட்களெல்லாம் கொம்யூனிஸ்ட் கட்சியின் தோட்டத்தொழிலாளர்களின் தொழிற்சங்கமான யூபி.டபிளியூ வின் காரியாலயக் கட்டிடத்திலே தங்கிநின்று தொழிற்சங்கக் கணக்குவழக்குகளைக் கவனிப்பதோடு தொழிற்சங்கங்களைக் கட்டிவளர்ப்பதிலும் பெரும் பங்கு வகுத்தார். அவர் சோவியத்நாட்டுக்கு அழைத்துச்சென்ற பதின்னாங்கு தமிழர்களில் தோட்டத்தொழிலாளர் தொழிற்சங்கவாதியான நாவலப் பிட்டியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரும் ஒருவராவர்.

இந்தியக் கொம்யூனிஸ்டான ப.ஜீவனந்தம்,மலேசியாவிலிருந்து வந்திருந்த தெல்லிப்பழையைச் சேர்ந்த மலேசியக்கனகசிங்கம் போன்ற தோழர்கள் இலங்கைக்கு வந்து தலமறைவு வாழ்வு வாழ்ந்த காலங்களில் அவர்களை தொட்டத் தொழிலாளர்களின் இல்லங்களுக்கு அழைத்துச்சென்று தொழிற்சங்கங்களை மேலும் அணிவகுத்தார். பாராளுமன்றத்­திலே நெற்காணிச்சட்டம் வந்தபோது மிகுந்த குதூகலிப்போடு பேசி அதை ஆதரித்து வாக்களித்த ஒரேயொரு தமிழ் பாராளுமன்ற அங்கத்தவராவார். பாடசாலைகளைத் தேசியமயமாக்கும் விவாதத்தின் போது மேலும் உற்சாகத்தோடு ஆதரித்துப்பேசினார். அதை ஆதரித்து வாக்களித்த ஓரே தமிழர் அவராகும். அதை எதிர்த்து வாக்கழித்த திரு செல்வநாயகம் அடங்காலான குறுந்தமிழ்தேசிய பாராளுமன்றவாதிக­ளுக்கு எதிராக வடமாகாணம் முழுவதிலும் எண்ணற்ற கூட்டங்களை அணிவகுத்துப் பேசி அவர்களின் பிற்போக்குத்தனங்களை அம்பலப்படுத்தினார். பாடசாலைகள் தேசியமயமாவதால் திரு செல்வநாயகத்­திற்கோ தமிழ்மக்களுக்கோ என்ன நட்டம் ஏற்பட்டது என்ற கேள்வியை ஒவ்வொரு கூட்டங்களிலும் கேட்டார்.

மீண்டும் பஸ் கொம்பனிகளின் தேசியமயமாக்கல் போன்ற எல்லா முற்போக்கு நடவடிக்கைகளையும் ஆதரித்து வாக்களித்தார்.

கந்தையா மிகவும் துணிந்த மனிதர். அவர்பேசும் கூட்டங்களை எண்ணற்ற தடவை குறுந்தமிழ்த்தேசியவாதிகள் கல்லெறிந்து குழப்பியிருக்கிறார்கள். அவர் அணுவளவும் பின்வாங்கியது கிடையாது.

அவரை எவராலும் ஆத்திரமூட்ட முடியாது. கல்லெறி விழவிழ எந்தவித விகாரமும் இல்லாமல் நா தளதளக்காமல் தொடர்ந்து மேடையில் பேசிக்கொண்டேயி­ருப்­பார். அவர் பயிற்றியெடுத்த தோழர்களும் கூட்டத்திலே எந்த வித சலனமும் இல்லாமல் அமைதியாக இருப்பர். அவர் அடிவாங்கவும் திட்டல்வாங்கவும் தன்னை இழக்கவும் தயாரான மனிதர். அவர் ஏழைமக்களோடு சேர்ந்து ஒன்றாகக் கூழ்காய்ச்சி குடித்த சம்பவங்கள் அனேகம்.

அவர்கூலித்தொழலாளர்களோடு சேர்ந்து கைப்பந்து விளையாடின சம்பவங்கள் அனேகம். அவர் மக்களோடு மக்களாக தானும் வாழ்ந்த சம்பவங்கள் அதிகம். கந்தையா கிராமங்களுக்கு வரப்போகிறார் என்று ஒரு தடவை கன்பொல்லை கிராம கரப்பந்தாட்டக் குழுவுக்கும் தென்இலங்கையிலுள்ள கம்பகா கிராமத்து சிங்கள கரப்பந்தாட்டக் குழுவுக்கும் சிநேகபு+ர்வமான கரப்பந்தாட்டப் போட்டியினை ஏற்பாடு செய்து சிங்களத்தோழர்களை கன்பொல்லைக் கிராமத்திற்கு அழைத்து வந்திருந்தாராம். சிங்களத்தோழர்கள் தங்களது வேகமான சேவிஸால் முதல் சுற்றில் வென்றுவிட்­டார்களாம். அடுத்த சுற்றில் கன்பொல்லைக் கிராம கரப்பந்தாட்ட அணியைச் சேர்ந்த லிங்கம், சதாசிவம் என்ற இரண்டு வீரர்கள் அவர்களைப்போலவே வேகமான கம்பகா சேவிஸினைப்போட்டு வென்றார்களாம். இந்த கரப்பந்தாட்ட வீரர் சதாசிவம் அவர்கள் வாழும் காலத்தில் நானும் அவரைக் கண்டு கதைத்து பழகியிருக்­கின்றேன். அவாpன் வயதினை ஒத்தவர்கள் அவரை கம்பகா என்று அழைப்பதையும் என் செவி வழி கேட்டிருக்கின்றேன். ஆனால் அவரை கம்பகா என்று அழைப்பதற்கான காரணத்தினை இக்கட்டுரை எழுதுவதற்­கான தகவல்களை சேகரிக்கும்போதுதான் கேட்டறிந்துகொண்டேன்.

அக்காலத்தில் கந்தையா அவர்கள் பெயர் மாற்றும் இயக்கம் ஒன்றினை நடத்தி வந்தார். அதன் வழியில் முதலில் ஒடுக்கப்பட்ட கிராமங்களின் பெயர்களையும் இக்கிராமங்களில் அமைந்துள்ள கீழ்ப்படுத்தப்பட்ட தொனியில் அமைந்திருந்த வீதிகளின் பெயர்களையும் மாற்றினார் என்பதனை இக்கட்டுரையின் தொடக்கத்­திலேயே குறித்திருந்தேன். இதன் தொடர்ச்சியாகத்தான் கன்பொல்லைக் கிராமத்தில் மூத்தண்ண என இக்கிராமத்து மக்களால் அழைக்கப்படும் க.இராசரத்தினம் அதிபர் (யா.கரவெட்டி ஸ்ரீநாரதவித்தியாலய ஸ்தாபகர்) அவர்கள். கல்லோடை என்னும் இயற்பெயரை கனுவில் என்ற அரசபதிவுப்பெயரையும் கொண்ட சிறுபான்மைத்தமிழர்கள் வாழும் கிராமத்தினை சாதிவெறியர்கள் கல்லோலை என அழைத்து வந்தபோது 1966ம் தீண்டாமைக் கெதிரான போராட்டகாலத்தில் கன்பொல்லையென உத்தியோகபூர்வமாக மாற்றினார். க.இராசரத்தினம் அவர்கள் கந்தையாவின் பாசறையில் வளர்ந்து வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஏலவே கந்தையா அவர்கள் இக்கிராமத்தில் கந்தன்,பூதன் போன்ற பெயர்களையும் நாகன் என்ற பெயரைக் கொண்டவரை சிவபாதமெனவும் ஆழ்வான் என்ற பெயரைக் கொண்டவரை தவராசா எனவும் இப்படியாக சாதிய அடையாளத்தினைக் கொண்ட பலரின் பெயரை உத்தியோகபூர்­வமாக மாற்றிக் கொடுத்தார்.

கந்தைய அவர்கள் வந்து இறங்கிய­துதான் தாமதம் திடீரென்று தன்னிச்சையாக மக்கள் அவரைச் சூழ்ந்து விடுவார்கள். சன நெரிசலில் அவரால் நடக்க முடியாது போகவே அவரைத் தோழில்தூக்கிக்­கொண்டு போவார்கள். அவருக்காக மக்கள் தினைக்கொழுக்கட்டை பனங்காய்பணியாரம் குரக்கன்கழி போன்ற எண்ணற்ற உணவு வகைகளைச் சமைத்துக்கொணடு வருவார்கள். அவரது கலந்துரையாடல் கூட்டங்களுக்கு மனைவி மக்களையும் கூட்டிக்கொண்டுவருவார்கள். கந்தையா அவர்கள் சிதறி உதிரியாக இருந்த தொழிலாளர்களை ஒரு பெரிய காந்தம் கவர்வதுபோலக் கவர்ந்து கொம்யூனிசத்­தைச் சூழ அணிவகுத்தார். அவர் மேடைகளிலே மணிக்;கணக்காகப் பேசுவார்: அவர் ஒரே விடயத்தைப்பற்றி வெவ்வேறு மேடைகளிலே பேசும்போழுது ஒவ்வொன்றும் புதுமையான பேச்சு நடையாக இருக்கும். அந்தப் பேச்சானது நாளாந்த வாழ்வுப் பிரச்சனைகளுக்கும் அரசியலுக்கும் பாலம்போடுவதாக இருக்கும். அவர் தனிச்சிங்களச் சட்டம் வந்தபிறகும் அச்சட்டத்தினை எதிர்த்த போதும் சிங்களமக்களோடு ஐக்கியப் படவேண்டும் என்ற அரசியல் தேவையை உரக்கக் கத்திக் கூறிய மனிதராவார்.

அவர் காலனித்துவ நாடான இலங்­கையில் ஜனனாயகப் புரட்சியின் கடமைகளை சீர்திருத்தவாதம் மூலம் செய்யலாம் என்ற கொள்கையை உடையவர். இ;துவே அவரது பலவீன­மாகும். அவர் வெகுசன ஆதரவோடு கொம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினால் சோஷலிசநாடுகளின் உதவியோடு தொழிற்துறைகளைப்போட்டு முன்னேறிவிடலாம் என்ற எண்ணங்­கொண்டவர். உலகம் பரந்த கொள்கையான கொம்யூனிசத்தை மக்கள் கட்டாயம் பின்பற்றுவர்ர்கள் என்ற நம்பிக்கையில் அசையாத நம்பிக்கை கொண்டவர். அவர் மரணமான சிலநாட்களுக்குப் பிறகு அவரோடு கொம்யு+னிஸ்டாக இ;ருந்த வைத்திலிங்கம் என்ற தோழர்,

இவர் தொடர்ந்து கிராமசபைத்தேர்தலில் கொம்யூனிச வேட்பாளாரகத் தொடர்ந்து போட்டியில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். தானும் தற்கொலைசெய்து கொண்டார். அவர் தற்கொலை செய்யமுன்பு அரிவாழும் சுத்தியலும் நட்சத்திரச் சின்னத்தை சேட்டில் குத்தி போட்டோ எடுத்து விட்டு தான் மறுபிறவியில் சோவியத்நாட்டில் பிறப்பேன் என்ற மரணசாசனம் எழுதி வைத்துவிட்டு பொலிடோல் குடித்து இறந்துவிட்டார். அந்தப்போட்டோவும் அந்தப் படத்தையும் இப்பொழுதும் நாம் பார்வையிடலாம். காந்தையாவின் ஆளுமையையும் அவர் ஏற்படுத்திய தாக்கத்தையும் இதைப்போன்ற பல உதாரணங்களால் காட்ட முடியம். கந்தையா ஒரு உதாரணம். கந்தையா ஒரு சகாப்தம். அவர் உரைத்துப்பார்க்க முடியாத பொன்.

தொழிற்சாலைகளோ தொழிற்துறைப் பாட்டாளிகளோ தொழிற்சங்களோ இல்லாத பிரதேசத்தில் கொம்யூனிசத்திற்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர். காலனித்துவ நாடாக இலங்கை இருந்ததால் அங்கே தேச உருவாக்கம் நடைபெற­வில்லை. தொழிற்துறைப் புரட்சி தீர்க்க வேண்டிய எந்தக் கடமைகளும் நிறைவேறவில்லை. முதலாளித்துவமே வரலாற்றால் தேசிய எல்லைகளையும் தேசிய எல்லைகளால் கட்டுப்படுத்த முடியாத உற்பத்திச் சக்திகளையும் படைத்தது. தேசப் பற்றையும் தேசிய எல்லைகளையும் சிதறப்பண்ணுமளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்வதாலேயே கொம்யூனிசம் வரவிருந்தது. தேசம் கடந்த தேசிய எல்லைக்குள் கட்டுப்படாத கொம்யூனிசத்­திற்காக முன்முயற்சிசெய்த ஓர் உதாரணத் தலைவன் பொன் கந்தையா ஆகும். அவர் விட்டுச் சென்ற சம்பிரதாயங்கள் இன்னும் வெளிக்கொணரப் படவில்லை. வாழ்வின் ஈற்றின் கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். தனது இறுதிக் கணத்தில் தன் துணையாக வாழந்தவரையும் தனது கடசித்தோழர் சண்முகதாசன் அவர்களையும் சேர்ந்து வாழவேண்டுமென்று கேட்டுக்கொண்டவர். பொதுவுடமைக் கூறுகளில் குடும்பம் உதிரும் என்பதினை தன் இயல்பான வாழ்வில் எமக்கெல்லாம் காட்டிச்சென்றவர். அவரோடு போராட்டத்தில் வாழ்ந்த இன்னும் சிந்தனைத் திறன் பலவீனப்பட்டுப் போகாத டொமினிக் ஜீவா போன்றோரிடம் கந்தையாபற்றிய நினைவுகளை எழுதும்படி நாம் கேட்டுக்கொண்டால் நாம் எமது வரலாற்றுக் கடமையைச் செய்தவராவோம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More