Slideshow

நான் லிங்கமாலா ஆனேன்


ஜுனில் வெளிவந்த ராவய பத்திரிகையில் அதன் ஆசிரியர் குழுவிலுள்ள மஞ்சுள வெடிவர்தன எழுதி, செல்வர் என்பவரால் தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கவிதை இது. சிங்கள வாசகர்களை நோக்கி எழுதப்பட்ட இந்த கவிதை மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கவிதை. சிங்கள பேரினவாத சக்திகள் மத்தியில் சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருந்த கவிதை இது. மஞ்சுள வெடிவர்தனவின் கன்னி மரியா எனும் சிறுகதைத் தொகுதி சென்றவருடம் இலங்கை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. அது இன்னமும் நீதிமன்ற விசாரணையில் சிக்கியிருக்கிறது. ”பறை” வாசகர்களுக்காக மீண்டும் அவரது கவிதை.


வெசாக்தின முழுநிலவு தலையில்
கைவைத்து அழுகிறது
அதன் மூக்குச் சளி
சாரளம் வழியால்
தெறிக்கின்றது
அயல் வீட்டில்
இன்னும் வாடவில்லை
ஐந்நூற்று ஐம்பது
புராணக் கதைகளை
சுருக்கி, நவீனப்படுத்தி
தூரத்தில் அமைத்த
வெசாக் பந்தலில்
இடைக்கிடை
விருது பாடுவது கேட்கின்றது
என்முன்
வெற்றுக் காகிதத் தாள்
கவிதைக்காக
விழித்திருக்கின்றது
சடுதியாக எங்கிருந்தோ
மிதந்து வந்த
இறைச்சித் துண்டமொன்று
காகிதத்தில் வீழ்ந்து
யோனியின் வடிவமைந்தது
கோணேஸ்வரியினுடையது
அம்பாறையிலிருந்து
கொழும்பு வர
இத்தனை நாளா?
எவ்வளவு தூரத்தில்
நம்
கண்களில் கண்ணீர்
குளிர்கின்றது
கண்ணீருக்கு மத்தியில் நான்
அங்குலி மாலாவாக அல்ல
லிங்க மாலா வாகினேன்
எனக்கு விரல்கள்
தேவையில்லை
ஆண்குறிகளே தேவை
வெகு பக்தியாக வலது கரத்தில்
இறைச்சியையும்
மறு கரத்தில் இறுக்கமாக
ஆயுதத்தினையும்
எடுத்துப் புறப்படலானேன்
வழியில் சந்திக்கும்
வீடுகளை தட்டி
சகல சிங்கள ஆண் குறிகளையும்
வெட்டி நூலாகக் கோர்த்து
இறுதியில் எனது
ஆ..........
வேதனையை தாங்கிக் கொண்டு
ஸ்ரீபாத மலையின் கழுத்திற்கு
ஆண்குறிகளை மாலையாய்
சூட்டினேன்
என்னை தடுத்து நிறுத்த போதி
மாதவன் இல்லாததால்
நான் இதனைச் செய்தேன்
சகோதர பாசமற்ற
உணர்வு அற்ற
இனம் ஒன்று எதற்கு
என் முன் வெற்றுக்
காகிதம் அதன் மீது
இரத்தக்கறை
இது ஒரு தமிழ்க் கவிதை
அதனால் சிங்களவருக்கு
இது புரியவில்லை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More