Slideshow

சிங்கள சமூக அமைப்பில் இன்றும் தொடரும் ''கன்னி''ப் பரிசோதனை

சரா
கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி வெளியான தி ஐலன்ட் (The Island ) பத்திரிகையின் முற்பக்க செய்தியில் கன்னித்தன்மை பரிசோதிப்பு முறை தென்னாசியாவிலேயே இலங்கையில் தான் நிலவுகிறது என்று பேராசிரியரும் டொக்டருமான சிறியானி பஸ்நாயக்க சாடியமை குறித்து ஐலண்ட் பத்திரிகையில் மே, யூன் மாதங்களில் மீண்டும் விவாதத்திற்கு வந்தது.
அவர் குறிப்பிட்டது இது தான், தென்னாசியாவிலேயே இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாள், மாலைதீவு, பூட்டான் எங்குமே இல்லாத கன்னித்தன்மை பரிசோதிக்கும் முறை இலங்கையில் மாத்திரம் தான் நிலவுகிறது. ஆய்வொன்றின்படி ஒரு பெண் முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போதுதான் பெண்ணுறுப்பு வழியாக இரத்தம் வெளியேறுவதாக இலங்கையில் 85 சதவீதமானவர்கள் நம்புவதாக தெரிவிக்கின்றது. ஆனால் 20-25 சதவீதமான பெண்களுக்கு முதலாவது தடவையாக பாலுறவு புரியும் போது இரத்தம் வெறளியேறுவதில்லை என்பது வஞ்ஞான ரிதியாக உறுதிசெய்யப்பட்ட ஒன்று.
டொக்டர் சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுகையில் தம்மிடம் வரும் தம்மிடம் வரும் பெண்களில் கணிசமானவர்கள், தான் கன்னித்தன்மையை இழக்கவில்லை என்று உறுதிச்சான்றிதழ் தரும்படி வேண்டி வருகின்றனர், பெரும்பாலும் கொழும்பின் இருதயமாக இருக்கிற பகுதியிலிருந்து கூட இந்த உறுதிச்சான்றிதழ் கோரி அதிகளவினர் வருவதாகவும் குறிப்பிடுகிறார், மேலும் அவர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
சமீபத்தில் தாய்யொருவர் தனது 3 வயதேயுடைய சிறிய குழந்தையை கன்னித்தன்மைக்கான சான்றிதழ் தரும்படி அழைத்து வந்தார். அக்குழந்தைக்கு பாலுறுப்பில் ஏற்பட்ட காயமொன்றின் காரணமாக எதிர்காலத்தில் கன்னித் தன்மையை சந்தேகிக்கும் ஒன்றாக மாறிவிடக்கூடாது என்பதற்காக அது காயப்பட்டதனால் ஏற்பட்டது என்று சான்றிதழ் தரும்படி கோரி அந்தத் தாய் வந்திருந்தார். மிகவும் படித்த விடயமறிந்தவர்கள் கூட இப்படி செய்வத ஆச்சரியத்தைத் தருகிறது. சமீபத்தில் ஒரு பேராசிரியர் ஒருவர் கூட தனது மகளுக்கு கன்னித் தன்மையை உறுதி செய்யும் சான்றிதழ் வேண்டி வந்திருந்தார்.” என்கிறார் அவர்.
சிறியானி பஸ்நாயக்க இலங்கையில் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவரும், குடும்பக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனரும், பெண்களின் மருத்துவ சுகாதார விடயங்கள் குறித்து நிறைய எழுதி, பேசி வந்திருப்பவரும் கூட. 10 வருடங்களுக்கு முன் சிங்களச் சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை பற்றிய ஒரு விரிவான கட்டுரையொன்றையும் எழுதியிருந்தார். இக்கட்டுரை பின்னர் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு ”பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே” எனும் நூலில் சேர்க்கப்பட்டிருந்தது.
சிறியாணி பஸ்நாயக்கவின் கருத்து ஐலன்ட் பத்திரிகையில் வெளிவந்ததைத் தொடர்ந்து சில ஆங்கிலம் படித்த சிங்கள ஆண்கள் பதிலளிக்கத் தொடங்கினார்கள். இவர்களின் வாதத்தின் சாராம்சத்தைப் பார்த்தால், இவர்கள் இப்போதும் நிலவும் கன்னித்தன்மை பாpசோதனை முறை பற்றிய தகவல்களை மறுக்கவில்லை. ஆனால் இது சிங்கள சமூகத்தில் ஆரம்பத்திலிருந்து இருக்கவில்லை என்றும் இது ஐரோப்பியரிடம் குறிப்பாக யூத பாரம்பரியத்தில் இருந்ததென்றும், காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதத்தின் செல்வாக்கோடு இதுவும் கூடவே இலங்கை சிங்கள மக்களிடம் ஊன்றிவிட்டதென்றும் வாதம் வைக்கின்றனர். யூத மரபில் இருந்ததற்கு ஆதாரமாக பி.ஏ.ஆரியதிலக்க என்பவர் பைபிள் வாசகங்களையும் ஆதாரம் காட்டுகிறார். 17ஆம் நூற்றாண்டில் ரொபர்ட் நொக்ஸ் எழுதிய குறிப்புகளை ஆதாரம் காட்டி சேர்ந்து வாழ்தல் (Iving together) இரு கணவர்களுடன் ஒரே நேரத்தில் வாழ்தல் போன்ற விடயங்கள் சிங்களவர்களிடம் இருந்திருக்கிறது. அப்படிப் பார்க்கும் போது ஐரோப்பிய நாடுகளில் இப்போது தான் இத்தகைய நடைமுறைகள் வழக்கிலிருக்கின்றன, நாங்கள் எப்போதோ முன்னோடிகளாக இருந்திருக்கிறோம் என்பன போன்ற வாதங்களையும் காட்டத் தவறவில்லை.
சாராம்சத்தில் இவ்வாதங்கள் சிங்கள இனத்தின் பெருமிதத்தை வலியுறுத்துவதாகவும், அது கறைபடியாத அப்பழுக்கில்லாத ”புனிதமான” மரபைக் கொண்டதென்கிற வாதத்தை அடிப்படையாக மட்டுமே இருந்தது.
இது எந்த இனக்குழுமத்திடமிருந்து தொற்றிக்கொண்டதாக இருந்த போதும், இன்றும் சமூக வழக்கிலிருக்கும் ஒரு பாரதூரமான கொடுமை என்பது பற்றியும், இன்று கற்பொழுக்கம் பற்றிய புனைவுகள், ஐதீகங்கள் என்பவற்றை விளங்கிக் கொள்வது, அதனை நீக்குவது என்பனவற்றை இலக்காகக் கொண்ட ஆரோக்கியமாக உரையாடலை மேற்கொள்வது என்பது இன்னமும் வரட்சி நிலையில் தான் இருக்கிறது.
சொத்துடமை சித்தாந்தம் சொத்தை ஒன்றுகுவித்து மையப்படுத்துவதற்காகவும், ஏலவே இருக்கும் சொத்து துண்டாடப்படாமல் இருப்பதற்காகவும், ஏற்படுத்தப்பட்ட குடும்ப அலகும், அதனை சுற்றி கட்டப்பட்ட புனிதத்துவமும், கூட்டுக்குழுமங்களாக ஆக்குவதற்காக ஆக்கப்பட்ட சித்தாந்தங்களும் இவ்வகைப்பட்ட விடயங்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆணாதிக்க சமூக அமைப்பைப் பொறுத்தவரை பெண்ணை உடமையாக வைத்திருப்பதற்கும் குடும்ப அலகை கவனமாகப் பேணவுமாக இந்த கற்பொழுக்கங்கள் என்பனவற்றை கவனமாக கைகொண்டன. ஆனால் இன்றைய நடைமுறையில் இந்த தேற்றங்கள் மேற்தோற்றத்தில் தொpயாவிட்டாலும், குழந்தை, குடும்பம், ஒழுக்க மரபுகள், கற்பு, தூய்மை, புனிதம், கௌரவம், அந்தஸ்து என கற்பிக்கப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகக் காண்போம்.
இந்த வகையில் தான் கற்பொழுக்கம் பற்றிய மதவழி புனைவுகள், இலக்கியங்கள், அரச யந்திரம் கொண்டிருக்கிற சட்டங்கள், பிரச்சார சாதனங்கள், கல்வி வாயிலாக மிகக் கவனமாக நம்பச்செய்யப்பட்டிருக்கின்றன. ஆதிக்க அதிகார அமைப்புகளின் இருப்பு இவ்வாறான புனைவுகளை நம்பவைத்தலில் தான் தங்கியிருப்பதை நாம் அறிவோம்.
கற்பொழுக்கம் பற்றி தமிழ் மரபில் இருக்கின்ற இலக்கியங்கள், இதிகாச, புராணங்கள், மரபொழுக்கங்கள் என்பனவற்றைப் பற்றி புதிதாகக் கூறத்தேவையில்லை. இந்த கற்பொழுக்கம் பற்றிய எதிர்பார்ப்பு என்பது சர்வவியாபகமான ஒட்டுமொத்த ஆணாதிக்க கட்டமைப்பும் வேண்டிநிற்கும் ஒன்று. எனவே தான் ஆண்கள் கையிலிருந்த கடந்த அதிகார அமைப்புகள் எல்லாமே இலகுவாக கற்பொழுக்கத்தை வலியுறுத்தும் சித்தாந்தங்களை உற்பத்தி செய்து வடிவமைத்து பரப்ப முடிந்தது.
அந்த வகையில் கன்னித்தன்மை பரிசோதனை முறையென்பது பல நாடுகளில் பண்பாட்டு அம்சங்களோடு இணைக்கப்பட்டும், பல நாடுகளில் வெளித்தெரியாத மரபுகளாகவும் வழக்கிலிருந்து வருகின்றன. சமீபத்தில் துருக்கி செய்திப் பத்திhpகையொன்றில் வெளியான செய்தி இதனை உறுதி செய்தது. (பார்க்க பெட்டிச் செய்தி)
சிங்கள சமூக அமைப்பில் நிலவிவரும் கன்னித்தன்மை பரிசோதனை முறையை இந்த பின்புலம்கொண்டே ஆராய வேண்டியுள்ளது.சிங்கள சமூகத்தில் நிலவும் கன்னித்தன்மை பரிசோதனை முறையானது சிங்கள சாதியமைப்பை மறுதலித்துவிட்டு பார்க்க முடியாது. கன்னித்தன்மை பரிசோதனையில் இன்றும் இலங்கையில் கொவிகம (சிங்கள சாதியப் படிநிலையில் முதலாவது சாதியாக இருத்தப்பட்டுள்ள இந்த சாதி தமிழ்ச்சமூகத்தில்; வெள்ளாருக்கு சமமான விவசாயத்தை சார்ந்த சாதி) சாதியிலும், அதன் கிளைச்சாதிகளான ரதல, கொவி, பட்டி போன்றசாதிகளே அக்கறை காட்டி வருவதாக சிங்கள சாதியம் பற்றி ஆய்வு செய்பவர்கள் குறிப்பிடுகின்றனர். அதிலும் குறிப்பாக உயர் மத்தியதரவர்க்கத்தினாpடம் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது. சம்பிரதாய பூர்வமாக கோலாகலமான முறையில் திருமணத்தை நடத்த தகுதியுள்ள சிங்கள பௌத்தர் உயர் மத்தியதர வர்க்த்தினாpடமே திருமணச் சடங்குகளில் ஒன்றாக இந்த கன்னித்தன்மை பரிசோதனை நடக்கிறது. இந்த கன்னித்தன்மை பரிசோதனையை மேற்கொள்வதும் சிங்கள சாதியமைப்பில் பிற்படுத்தப்பட்ட சாதியான N‘ன எனும் சாதியைச் சேர்ந்தவர்களே. இச்சாதியினர் தமிழ்ச்சமூகத்தில் வண்ணார் சாதிக்கு ஒப்பான சலவைத் தொழிலை மேற்கொள்ளும் சாதியாக இருத்தப்பட்டுள்ளது. இந்த சாதியினர்; எண்ணிக்கையில் சிறியதாக இருந்தாலும் நாட்டில் பல பாகங்களில் பரந்து வாழும் சாதியினர். இவர்களுக்கு அரச மற்றும் நிலப்பிரபுத்துவ பரம்பரையினருக்கு மாத்திரமே துணி துவைப்பது சாதித்தொழிலாக வைக்கப்பட்டது. ஆண் பெண் என இருபாலாரும் குறிப்பிட்ட உயர் சாதியினரின் வீடுகளுக்குச் சென்று துணிகளைச் சேகரித்து துணிகளில் கட்டி தலையில் சுமந்துகொண்டு சென்று துவைப்பர். ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரின் துணிகளை இவர்கள் துவைக்க மாட்டர்கள். ”பலி” எனும் சாதியினரே அதனை செய்வரென பேராசிரியர் ருல்ப் பீரிஸ் குறிப்பிடுவார். உயர் சாதியினருக்கு இவர்களின் தேவை இந்த துணி துவைப்பதை விடவும் வேறு வழிகளிலும் தேவைகள் இருந்தன. பிறப்பு, பூப்படைதல், திருமணம், மரணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் ஹேன மாமாவின் அல்லது ”றெதி நெந்தா” (துணிமாமி) ஆகியோரது உதவி தேவைப்படுகிறது. இவர்களின் இந்த சேவை பற்றி சமூகத்தில் பொதுவாக கேலி செய்யும் போக்கும் நிலவுவதாக கொள்ளப்படுகிறது.
திருமண முதலிரவின் போது திருமணக் கட்டிலில் விரிப்பதற்காக வெள்ளை விரிப்பொன்று மணமக்களுக்கு வழங்கப்படும். முதல் பாலுறவின் போது மணப்பெண்ணிடமிருந்து சிறிதளவு இரத்தம் இந்த வெள்ளை விரிப்பில்படுவது அவள் கன்னி என நிரூபிக்கும் மிகச் சரியான சான்றென கருதப்படும்.
எனது சிங்கள நன்பி ஒருவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தன்னோடு பயின்றவரை திருமணம் முடித்த போது கன்னித்தன்மை பரிசோதனை முறையிலிருந்து தப்ப செயற்கையாகவே இரத்தக்கறையை வெள்ளைத் துணியில் படவைத்தார்கள். இன்று ஒரு சிங்களச் சூழலில் பெண்ணிய எழுத்தாளராக இருக்கும் இவர், சம்பிரதாயங்கள் எப்படி விடயமறிந்தவர்களையும் இழுத்துவைத்துக் கொள்கிறது என்பதை அடிக்கடி குறிப்பிடுவார். இவ்வாறு மணமகன் கன்னித்தன்மையை எதிர்பார்க்கிறானோ இல்லையோ, தமது மகள் கன்னித்தன்மையைக் கொண்டவள் என்று பெண்வீட்டாரும், தனது மகன் கன்னித்தன்மையுள்ள பெண்ணைத்தான் திருமணமுடித்தார் என்பதை மாப்பிள்ளை வீட்டாரும் பெருமிதம்கொள்ளும் சடங்காகவும் இது இருக்கிறது. இந்தச் சடங்கை செய்யாவிட்டால் சமூகத்தில் கௌரவத்திற்கு இழுக்கு நேரிடும் என்று பயம்கொள்வதையும் காணமுடிகிறது.
சம்பிரதாய பூர்வமான குடும்பங்களில் வெள்ளைத் துணியை பரிசோதித்துப் பார்க்கும் நிகழ்ச்சி திருமணத்திற்கு அடுத்த நாள் நடக்கும். இறுதியும்; உறுதியுமான முடிவைத் தெரிவிக்க விபரங்களுடன் முடிவு கூறுவதற்காக, திருமணத் தம்பதியரின் உறவினப் பெண்களுடன் ”றெதி நெந்தா” அழைத்துச் செல்லப்படுவார். சில சந்தர்ப்பங்களில் இரண்டாம் பயணம் எனப்படும் ”தெவனி கமன” வின் போது (அதாவது தேனிலவு கழிப்பதை முதல் நாளும் வெள்ளைத் துணி பார்ப்பது மறுநாளைக்கு மாற்றப்படும்.) இது மேற்கொள்ளப்படும். இதற்குரிய சம்பிரதாயங்கள் பின்வருமாறு மேற்கொள்ளப்படும்.
மணமகள் இரண்டாம் பயணத்திற்கு சிவப்பு ஆடையால் அலங்கரிக்கப்­படுவாள். மணமகனின் தாயார் சிவப்பு மலர்ச் செண்டு கொடுத்து மணமகளை வரவேற்பார்.
மணமகனின் குடும்பத்தினர், மணப் பெண்ணின் பெற்றோருக்கு சிவப்பு பூக்களை அனுப்பி வைப்பார்.
மணப்பெண், மணமகள் வீட்டுக்கு வரும்போது றபான் அடித்து பட்டாசு கொளுத்தப்படும். மணமகனின் தயார், விசேட பரிசுகளைக் கொடுத்து மணப் பெண்ணை வரவேற்பாள். வெள்ளை விரிப்பில் இரத்தக்கறை காணப்படாவிடில், அதாவது மணப்பெண் பரிட்சையில் தோல்வியடைந்தவளென்றால், அப்பாவிப் பெண் பகிரங்கமாகவே அவமதிப்புக்குள்ளாவாள். அத்தகைய தருணத்தில் மணப்பெண் நடாத்தப்படும் விதமானது இரண்டாம் பயணத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்திலும், குறிப்பிட்ட குடும்பங்களினதும் பிரதேசங்களதும் சம்பிரதாயங்களைப் பொறுத்தும் வேறுபடும். இரண்டாம் பயணத்தின்போது ”பரிட்சையில் தேறாத” மணப்பெண் தொடர்பாக கடைபிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சில. 1. இரண்டாம் பயணத்திற்கு ஆடம்பரமற்ற வௌ;ளைச் சேலை உடுத்தும்படி மணப்பெண்ணை வற்புறுத்துதல்.
2. மணமகனின் தாயார் வெள்ளை மலர்களுடன் மணமகளை எதிர்கொள்வாள்.
3. மணமகனின் தாய் வரவேற்காமல் மணமகனின் தந்தை அல்லது யாரும் ஒரு ஆணைக்கொண்டு மணமகளை வரவேற்பது.
4. சுவரில் மாட்டியிருக்கும் படங்களை மறுபக்கமாகத் திருப்பித் தொங்கவிடல்.
5. மணமகனின் உறவினர் மணப்பெண்ணின் உறவினர்களை உபசரிக்க மாட்டர்கள். அவர்களை அவமதிக்கும் விதமாக திருமண அலங்கார மேசையைத் தவிர்த்து ஓரமாகப் போடப்பட்டிருக்கும் மேசையில் உணவருந்தும்படி அவர்களுக்குத் தெரிவிப்பது. 6. உபசரிப்பதற்கு முன் கொண்டைப் பலகாரங்களின் கொண்டையை உடைத்து விடுவது.
7. அனைத்து விருந்தினர்களின் முன்நிலையிலும் மணமகனின் தாயார் ஐசிங்சீனியினால் செய்யப்பட்ட வெள்ளை றோசாப்பூவொன்றை கேக்கிள் வைப்பாள். 8. வாழைப்பழத்தை அடியிலிருந்து தோலுரித்தல். 9. விருந்தினர்கள் முன்னிலையில் மணமகன் குடும்பத்தார் தமது அதிருப்தியை தொpவிக்கும் விதமாக சிறு சொற்பொழிவை நடாத்துதல். (இது மிக அhpதாகவே நடக்கும்.) ”தூய்மை”யான மணப்பெண் கிடைக்காததையிட்டு தமது வருத்தத்தைத் தெரிவிக்கும் சொற்பொழிவை ஆற்றிவிட்டு அவர்களை வரவேற்பதும் நிகழும். மணப்பெண் ”கன்னி” இல்லை என்று கூறி மீளவும் மணப்பெண்ணின் பெற்றோரிடம் ஒப்டைக்கும் நிகழ்ச்சிகளும் இதன் போது நிகழ்ந்துள்ளன. இந்த சம்பிரதாயங்களை மேற்கொள்ளாத இடங்களில் கூட முதலிரவின் போது இரத்தம் வெளியேறாவிட்டால் கடந்தகால ஒழுக்கத்தை சந்தேகித்து மனைவியின் மீது விரக்திகொள்ளும் நிலைமையும் தொடர்கிறது.
சிங்கள திருமண விளம்பரங்களைப் பார்க்கையில் பெரும்பாலான விளம்பரங்கள் தமது ”தூ}ய்மையான”, ”கன்னித்தன்மையுள்ள மகளுக்கு” போன்ற விடயங்கள் மணமகன் தேவை விளம்பரங்களின் போது மணமகள் தரப்பு விளம்பரங்களில் காணலாம். ஆனால் மணமகள் கோரி விடுக்கப்படும் விளம்பரங்களில் மணமகன் கற்பொழுக்கமுள்ளவன் என்று குறிப்பிடப்படுவதில்லை. அதேவேளை, அதே விளம்பரத்தில் கற்புள்ள பெண் கோரப்படும். அது போல சிங்கள சஞ்சிகைகள் பத்திரிகைகள் என்பவற்றில் மருத்துவ மற்றும் பாலியல் குறித்த பிரச்சினைகளை வாசகர்கள் மத்தியில் இருந்து கேள்வி பதில் பகுதிக்கு கிடைக்கப்பெறுபவற்றில் பெருமளவானவை மணமாகாத பெண்களிடமிருந்து என்பதும், அவர்களிடமிருந்து அதிகம் எழுப்பப்படும் கேள்வி கன்னித்தன்மையுடன் தொடர்புடையவை என்றும் டொக்டர். சிறியாணி பஸ்நாயக்க குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.
”கன்னி” என வழக்கில் உள்ள அர்த்தப்படுத்தப்பட்டுள்ள கருத்து:- திருமணமாகாத இளம்பெண், கன்னிகழியாத பெண், திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவள் போன்றன. ஆனால் இதை விட இன்னொன்றும் மேற்படி நிலைமைகளின்படி தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. அது தான் ”முதலாவது பாலுறவின் போது இரத்தம் வெளியேறும் பெண்ணே கன்னித்தன்மையுடையவள்” என்பது. எனவேதான் திருமணத்திற்கு முன் இளம் பெண்கள் மத்தியில் கன்னித்தன்மை பரிசோதனையில் தாம் தோற்றுவிடுவோமோ என்கிற அச்சமும், பீதியுமாக ஒரு உளச்சிக்கலுக்கு ஆட்பட்டு வாழ நே­ரிட்­டுள்ளது. குறிப்பாக கன்னிச்சவ்வு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற அச்சம், இது விளையாட்டின் போது அல்லது சைக்கிள் ஓட்டும் போது, கடினமான வேலை­க­ளின் போது, அல்லது ஏதாவது ஒரு முறையில் ஏற்பட்ட காயங்களின் விளைவாக இது ஏற்பட வாய்ப்புண்டு. இப்படியான சந்தர்ப்பங்களால் தான் சம்பந்தப்பட்ட பெண்ணோ அல்லது பெற்­றோர்களோ இது இன்ன காரணத்தினால் ஏற்பட்டது எனும் மருத்துவ சான்றிதழைப் பெற முனைகி­றார்கள். சிறியாணி பஸ்நாயக்க தனது கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு நாள் தாயொருத்தி தனது மூன்று வயதுடைய மகளை என்னிடம் கொண்டு வந்து மகளின் கன்னிததன்மை அழிந்து விட்டதா எனப்பரிசோதித்தப் பாhக்கும்படி அழுதவாறு கெஞ்சினாள். தாய் சமயல­றையில் கீழே உட்கார்ந்திருந்து கத்தியால் காலால் அழுத்தியபடி கீரை அரிந்திருக்­கிறாள். சிறுமி அவ்வழியாக ஓடும் போது கத்தியின் மெல் விழுந்து பிட்டத்தை வெட்டிக் கொண்டாள். காயத்தினால் குழந்தையின் எதிர்காலத்திற்கு எதுவித திங்கும் நேராது என நான் கூறியபோது அந்தத் தாயின் முகத்தில் ஏற்பட்ட ஆறுதலையும், மகிழ்ச்சியையும் அதைப் பார்த்த ஒருவரால் தான்நம்பமுடியும். அதன் பின்னர் தனது குழந்தை கன்னி தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் தரமுடியுமா என்று கேட்டாள். இவ்வாறான கன்னித்தன்மை சான்றிதழ்கள் இருப்பதாக எனக்கு தெரியாது. என்றாலும் இவ்வாறான சான்றிதழ் கோரப்படாமல் எனக்கு ஒரு வாரம் கழிவது அபூர்வமானது.” என்கிறார்.
இலங்கையில் நிலவும் கொடிய பிரச்சினைகளுக்கு முன்னால் இத்தகைய மோசமான சம்பிரதாயங்களும் நடை­முறையில் நிலவத்தானே செய்கிறது. புனிதம், தூய்மை, தீட்டு, துடக்கு போன்ற ஐதீகங்­களும், மூடநம்பிக்கைகளும் புனைவுகளாக ஆக்கி அவற்றுக்கு நிறுவன வடிவம் கொடுத்து அதன் தொடர்ச்சியைப் பேணுவதில் வெற்றி கண்டு வந்துள்ள ஆணாதிக்க சமூக அமைப்பை வெறும் வர்க்க சமூக அமைப்பால் தலைகீழாக புரட்டிவிடமுடியாது. அதற்கு போதிய சித்தாந்த பலம்பொருந்திய பண்பாட்டுப் புரட்சியும் அவசியமானது. இறுதியாக சிறியாணி பஸ்நாயக்க கூறிய கூற்றோடு முடிக்கலாம். ”ஆய்வுகளின்படி 76 வீதமான ஆண்கள் கன்னிப் பெண்களையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். திருமணத்தின் போது இந்த அத்தனை ஆண்களுக்கும் கன்னிப்பரிசோதனை நடாத்தப்பட்டால் எத்தனை பேர் சித்தியடைவார்கள்? 1. the island 2000 மே,யூன் பத்திரிகைகள். 2. என்.சரவணன் - சிங்கள சாதியமைப்பு பற்றி 1999 ஒக்டோபர், டிசம்பரில் வெளிவந்த சரிநிகர்
3. பெண் உடல் ஐதீகங்களிலிருந்து உண்மைக்கு வெளியே - பெண்கள் அபிவிருத்தி நிலைய வெளியீடு 4.உபுல் ராஜித்த - கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை கற்கைக்காக சமர்ப்பிக்கப்பட்ட சிங்கள மொழி ஆய்வுக்கட்டுரை 5. காலிங்க டியுடர் சில்வா - சாதியம், வர்க்கம் மற்றம் மாறிவரும் இலங்கைச் சமூகம் - மூலம் சிங்களம். க்ரியா தற்கால தமிழ் அகராதி.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More