Slideshow

பாலியல் தொழிலும் ஆண்களின் புனைவு மரபும்!




-ராஜினி

பாலியல் தொழில் பெண்ணுடலை மையப்படுத்தி உருவானதாகும். எந்தக் காலகட்டத்தில் எவ்வாறான சமூகமுறைமையில் உருவானது என்பது பற்றி எங்கல்ஸ் உட்பட இன்றைய பெண்ணிய மற்றும் சமூகவியல் அறிஞர்கள் பலரும் தத்தம் ஆய்வுகளின் வழியில் கருத்து முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் வந்தடைந்துள்ள பொதுவான முடிவு, பெண்ணை ஆண் அடிமை படுத்தத் தொடங்கியதுடன், பெண்ணின் பாலியல் நடவடிக்கைகளின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வரையறைகள் ஏற்படுத்தப்பட்டதுடனும், ஆணின் பாலியல் நலனை முதன்மைப்படுத்தத் தொடங்கியதனதும் விளைவாகத்தான் சமூகத்தில் பெண்களின் ஒரு சாரார் தமது பாலியல் ஆற்றலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதாகும்.


ஈழத்தமிழர் சமூகத்தில் தமிழகத்தில் போன்று தேவதாசி முறைமை நிலவவில்லை என்பது ஈழத்து சமூகவியலாளர் மற்றும் செல்வி திருச்சந்திரன் போன்ற பெண்ணிய ஆய்வளர்களினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சாதிய அதிகாரத்தின் துணைகொண்டு ஆதிக்க சாதிய ஆண்கள் அடக்கப்பட்ட சாதிய பெண்களை பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்குவது நடைபெற்றது. இங்கு பணத்திற்குப் பதில் குடியிருக்க துண்டுக் காணி, கொட்டில், உணவு பொருள் போன்றன வழங்கப்பட்டன. அத்துடன் இந்த முறைமை ஒரு ஆண் பல பெண்களிலிருந்து தெரிவு செய்வது என்பது போல் அல்லாமல் தனது குடும்ப அதிகாரத்திற்கு உட்பட்ட அடிமைச்சாதிய குடும்பங்களது பெண்களுடனானதாக இருந்தது. இப்படியாக, அடக்கப்பட்ட சாதிய பெண்களின் உடல் உழைப்பும், பாலியல் ஆற்றலும் ஆதிக்க சாதிய ஆண்களினால் சுரண்டப்படுவது நடைபெற்றது.



சாதியப் போராட்டங்களின் வளர்ச்சிப் போக்கு காரணமாக இந்த அநாகரிக முறைமை மாற்றமுறத் தொடங்கியது. ஆனால் தற்போது புதிய சூழலில் பாலியல் தொழில் நமது சமூகத்தில் உருவாகியுள்ளது. நம்மீது திணிக்கப்பட்டுள்ள யுத்தத்தின் விளைவுகள் சமூகத்தின் பல்வேறு சாதிய, வர்க்கத் தட்டுகளை சார்ந்த பெண்களையும் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளியுள்ளது. -பாலியல் தொழில் என்பது சுயவிருப்புடன் கூடிய சுதந்திரமான தொழில் தெரிவு- எனும் வரையறைக்குள் அடங்குவதில்லை. சூழ்நிலைமைகளின் திணிப்பாகத்தான் அது உள்ளது.




அடிப்படையில், தமதும் தம்மை சார்ந்திருப்போரதும் அடிப்படை உயிர்வாழ்வுக்கான தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகத்தான் நமது சகோதரிகள் தமது பாலியல் ஆற்றலை விற்க முன்வருகின்றனர். மாறாக, பெண்களின் நிலையில் இது ஒன்றும் மகிழ்ச்சிக்குரிய விவகாரமல்ல. பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களிடம் கதைத்தால் அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வு இந்த உலகையே எரித்து சாம்பளாக்கி விடுமளவுக்கு ஆக்ரோக்ஷமானதாகும்.


மறுபுறம், ஆண்களின் பார்வையில் பாலியல் தொழில் என்பது வேறுவிதமானதாக உள்ளது.

 "பெண் உடல் என்பது ஆணின் பாலியல் இன்பத்திற்கான பண்டம்" எனும் நிலையிலிருந்தே பாலியல் தொழில் ஆணால் அணுகப்படுகிறது. இது பற்றி ஒரு சம்பவத்தை உதாரணத்திற்கு எடுக்க முடியும்.
கடந்த வருடம் கேரளாவில் "அகில இந்திய செக்ஸ் தொழிலாளர் மாநாடு" நடைபெற்றது. இந்த செக்ஸ் தொழிலாளர்கள் அனைவரும் பெண்கள் ஆவார்கள். இவர்களது மாநட்டுக்கு தலைமை தாங்கியவர் ஒரு ஆண். அவர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்:



செக்ஸ் மனித வாழ்வுக்கு அவசியம். பலருக்கு அது ஒழுங்காக கிடைப்பதில்லை. ஆண்கள் பலரும் இதனால் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். செக்ஸ் தொழிலாளிகள் ஆண்களின் பாலியல் தேவைகளையும், மன அழுத்தங்களையும் தணிக்கின்றனர். அவ்வகையில் இப்பெண்கள் சமூகத்திற்கு பெரும் சேவையாற்றுகிறார்கள் என்பதாக அமைந்திருந்தது.

பெண்கள் பாலியல் தொழிலில் செய்வது ஆணின் பாலியல் தேவைகளை தனிப்பதற்காகத்தான் என்பதும், இத்தொழில் சமூகத்திற்கு அவசியமானது என்பதும் ஆணாதிக்க சமூகக் கண்ணோட்டத்திலிருந்து ஏற்கப்பட்ட ஒன்றாகும்.



மறுபுறம், இதே சமூகக் கண்ணோட்டம் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை சமூகத்திலிருந்து ஒதுக்கிவைத்திருப்பது பற்றி நாமொன்றும் புதிதாகக் கதைக்கத் தேவையில்லை.
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் நிலையிலிருந்து பார்ப்போமாயின்,


- தொழில் புரியும் காலத்தில் பாலியல் நோய்களினால் துன்புறுகின்றனர்.

- பேசப்பட்ட பேரத்தொகையை சம்பந்தப்பட்ட ஆண்கள் தராது போவதினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அது பற்றி முறையிட்டு நியாயம் பெற வழியில்லாத நிலை



. - தமது உடலை அனுபவிக்கும் ஆண்களின் அத்துமீறிய துன்புறுத்தல்கள், வன்முறைகளை சகிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலை.

- இதைவிட சமூக, சட்ட துன்புறுத்தல்கள்.


- விடுதிகளில் அடைக்கப்பட்டிருக்கும் பெண்கள் தமது உடல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் தொழிலில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.


- இதனை சகித்துக்கொள்ள அநேகமாக போதைவஸ்துகளை பாவித்து தம்மை அரைமயக்கத்தில் வைத்திருத்தல்.



- பாலியல் தொழிலில் ஈடுபட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே நோய்க்கும் முதுமை தோற்றத்திற்கும் உள்ளாகி சராசரியினரிலும்விட விரைவில் இறக்க நேர்கிறது.

இப்படியாக பெண்களின் உடலையும் மனதையும் சிதைத்து அதன் மீது ஆணின் பாலியல் இன்பம் ஸ்தாபிக்கப்படுகிறது.

பாலியல் தொழில் பற்றிய பெண்ணிய நிலைப்பாடு என்ன? இந்நிலைப்பாடானது, ஒரேபடித்தானதாக இல்லாது, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் நிலையிலிருந்து பல்வேறு கோணங்களில் அணுகப்படுகிறது.

- பெண்ணிய சிந்தனையானது, பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவது பொருளாதார தேவைகளின் பாற்பட்டு என்பதால்,இத்தகைய தொழிலில் பெண்கள் ஈடுபடுவதற்கான சமூக பொருளாதார காரணங்கள் நிலவும் வரையில் பெண்கள் இத்தொழிலில் ஈடுபடுவது நிலவிடும் எனக் காண்கிறது.


- பாலியல் தொழிலை விபச்சாரம், வேசைத்தனம் என ஆணாதிக்க சமூகம் இழிவுபடுத்துவதை பெண்ணிய சிந்தனை எதிர்க்கிறது. அவ்வகையில் பெண் தனது பாலியல் ஆற்றலை விற்கும் செயலை, சமூகத்தில் ஏனைய தொழில்களுக்கு எவ்விதத்திலும் மதிப்புக் குறையாத ஒரு தொழிலாக, பெண் தனது உடலை மூலதனமாகக் கொண்டு மேற்கொள்ளும் தொழிலாக பார்க்கிறது.



- பாலியல் தொழில் செய்யும் பெண்களின் சமூக, சட்ட, பொருளாதார, சுகாதார உரிமைகளுக்காக பெண்ணிய இயக்கம் போராடுகிறது.
பாலியல் தொழிலை ஒரு தொழில் எனும் வகையில் வளர்த்தெடுக்க வேண்டும் எனும் கருத்தாக்கம் பெண்ணிய சிந்தனையில் கிடையாது. பெண்களின் சமூக ஆளுமைக்கு எப்பொழுதும் அச்சுறுத்தலாக இருக்கும் இத்தொழிலை நீண்டகாலத்தில் பெண்கள் தாமாக கைவிடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்பதே பெண்ணிய சிந்தனையாகும்.
மேற்படி பெண்களின் நலனில் நின்று உருவான சிந்தனையை ஆணாதிக்க உலகம் எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறது?


- பெண்ணிய இயக்கம், பெண்கள் தமது உடலை மூலதனமாக்கி மேற்கொள்ளும் தொழிலை ஒரு தொழிலாக அழுத்துவதன் காரணம் இத்தொழிலில் ஈடுபடும் பெண்களின் உரிமைகள் எனும் நிலையிலிருந்தாகும்.



- ஆணாதிக்க சமூக அதிகார கட்டமைப்புகள் இத்தொழிலை ஊக்கப்படுத்துவதன் காரணம் ஆண்களின் பாலியல் நலன் எனும் அடிப்படையிலிருந்தாகும்.


இப்படியாக இரு தரப்பு சிந்தனைகளும் ஒன்றுபோல் மருவித் தோன்றினாலும் அடிப்படையில் இருதரப்பு சிந்தனைகளும் ஒன்றுக்கொன்று முரணானவையாகும்.

பெண்கள் தமது பாலியல் ஆற்றலை விற்க உரிமையுடையவர்கள் என பெண்ணிய இயக்கம் அழுத்துவது பெண்களின் உரிமை என்பதிலிருந்தாகும். ஆனால் ஆணாதிக்க உலகு இதை தமக்கு சாதகமானதாக மாற்றிக்கொள்கிறது.

ஆணாதிக்க அரசுகள் பாலியல் தொழிலை ஊக்கப்படுத்துவதன் மூலம் அந்நிய செலவாணியை திரட்டுகின்றன. ஐந்து நட்சத்திர ஹோட்டலகள், உடரடிஇ உயளiழெ ....என பாலியல் தொழிலுக்கு அனுமதிபெற்ற இடங்களில் உடமையாளர்கள் பெண்களின் உடலை விற்கச்செய்து மூலதனம் திரட்டுகின்றனர்.

மறுபுறம் பாலியல் தொழில்ச் சட்டங்களில் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், பெண்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர்.

இப்படியாக பாலியல் தொழிலானது இருவேறு தரப்பினரின் இருவேறு நலன்பாட்பட்ட விடயமாக உள்ளது.

மிக வளர்ச்சி பெற்ற ஐரோப்பிய நாடுகளில் செல்வச் செழிப்பில் வாழும் பெண்கள் இத்தகையத் தெரிவுகளைக் கொண்டுள்ளனர் என்பது உண்மையே. இவ்வாறான தெரிவுகளுக்கு பெண்களில் சிலர் செல்வதற்குக் காரணம் வெறும் பாலியல் தேவை மாத்திரமா? அதைவிட ஆணாதிக்க உலகில் ஆண்களுடனான அதிகாரப் போட்டியில் தம்மை அதிகாரமுடையவர்களாக ஆக்க ஆண்களைப் போல் பெண்களும் வாழ்வது அவசியம் எனும் நிலைக்கு சில பெண்கள் வருகின்றனர். ஆண்களைப் போல் உடையணிதல், தலைமயிர் வெட்டுதல், புகைபிடித்தல், போதை ஏற மதுவருந்துதல் என ஆண் உலகிற்குள் பெண்கள் பிரவேசிக்க முயல்கின்றனர். இவ்வழியில், தமது பாலியல் தேவைகளுக்கு ஆணின் பாலியல் ஆற்றலை விலைபேசுவதானது தம்மை அதிகாரமுடையவர்களாக்குகிறது என கருதுகின்றனர்.
அத்துடன் இவ்வாறு ஆண்களில் மிகச் சிலர் செய்யும் பாலியல் தொழிலை பெண்கள் செய்யும் பாலியல் தொழிலுடன் எவ்விதத்திலும் சமப்படுத்திவிட முடியாது. இரண்டும் பண்பளவில் பெரிதும் மாறுபட்டவை.

ஆண்கள் தமது ஆணாதிக்க சட்டகத்திற்குட்பட்ட பாலியல் நலன்களை தற்காத்துக்கொள்வதற்காக, தாம் பெரிதும் தாரளமனதுடனும், சமத்துவமானதும் ஜனநாயகமானதுமான வழியில் சிந்தனை செய்வது போல் பிரஸ்தாபிக்கின்றனர்.

தாம் எத்தகைய பாலியல் வாழ்வை வாழ்வது என்பதை தீர்மானிப்பது பெண்களல்லவா, ஆண்கள் யார் இதில் கைவைப்பதற்கு?

சீனப் புரட்சி வெற்றிபெற்ற கட்டத்தில், செஞ்சேனையின் ஆண்களைப் பார்த்து மாவோ கூறினார், சீனாவில் லட்சக்கணக்கான பெண்கள் பாலியல் தொழிலாளர்களாகவும், எதிரிகளினால் வன்புணர்ச்சிக்கு உள்ளானவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை செஞ்சேனை ஆண்கள் திருமணம் செய்து கொள்ள முன்வரவேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
இது சீன கம்யுனிஸ்ட் கட்சி தலைமையின் புரட்சிகர நிலைப்பாடு

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More