Slideshow

பறை


தோழமைக்குரியவர்களே!

நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் உங்களிடம்...

இந்த இடைவெளியினை மறைந்த தோழர் கலைச்செல்வன் ஒரு கோமா நிலையென்றார். இன்று மீண்டும் உயிர்ப்புடன் வெளிவருகிறது என்றால் பறைக்கு பலர் மத்தியிலும்ற இது வரை இருந்த ஆவலும், எதிர்பார்ப்பும் மேலும் அதற்கான தேவையும் தான்.

பறையின் தொடர்ச்சியையும், கிரமத்தையும் பாதித்த அரசியல் நெருக்கடிகள் எமக்கு தகுந்த பாடங்களையும் புகட்டியிருக்கிறது. இனி அதன் தொடர்ச்சிக்கு வாசகர்கள் தமது ஆதரவைத் தருவார்கள் என்று நம்புகிறோம். பறையின் புதிய குழு புது உற்சாகத்துடன் அவரவர் நாடுகளிலும் இருந்து செயற்படுவார்கள். பறை ஒரு சஞ்சிகை என்கிற நிலையினைத் தாண்டி அதற்கப்பாலும் அதனை எடுத்துச் செல்வதே அதன் நோக்கம். நோர்வே சுதந்திர ஊடகம் அமைப்பினை பறையின் முன்னணி அமைப்பாக உருவாக்கிக்கொண்டதும் அந்த நோக்கத்திற்காகவே.

ஜனநாயகம், சுதந்திரம், சமத்துவம் என்கிற அடிப்படை விடயத்தில் உறுதியாக பறை இயங்கும். கூடவே பேசாப்பொருளை பேசுபொருளாக்குவதும் பறையின் அடிப்படை உள்ளடக்கமாக இருக்கும்.

மொத்தத்தில் குரலற்றோருக்கான குரலாக (Voice for voiceless) அது இருக்கும்.

மாக்சியம், தேசியம், பெண்ணியம், தலித்தியம், சூழலியல், சர்வதேசியம், புலம்பெயர் என்கிற தலைப்புகளில் அதிக அக்கறை காட்டும் பறை.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒருதலைபட்ச முறிவு, போரின் ஆரம்பம் மற்றும் இன்றைய உக்கிரம், நோர்வேயின் பின்வாங்கல், மக்களின் அவலம், சர்வதேசத்தின் மௌனம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழக மக்களின் எழுச்சி என்பன இன்றைய பேசுபொருளாகிவிட்டிருக்கிறது. அடுத்த இதழ்களில் அவை குறித்த காத்திரமான கட்டுரைகள் இடம்பெறும் என்பதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த இதழில்

இந்த இதழில் சிங்கள சாதியமைப்பு பற்றிய கட்டுரைத் தொடர் ஆரம்பமாகிறது. சிங்கள சாதியமைப்பு குறித்து வெளியாக இருக்கிற நூலின் அத்தியாயங்களே இவ்வாறு பறையில் தனித்தனியாக வெளியாகிறது. முந்தி பிறந்து பிந்தியும் வாழும் தமிழ் சாதியமைப்பு குறித்து நாம் பலவற்றை அறிந்திருந்த போதும், பிந்தி பிறந்து முந்தி இறக்கும் சிங்கள சாதியமைப்பு இங்கு ஆராயப்படுவதன் நோக்கம், அது சிங்கள பௌத்த போரினவாத உருவாக்கத்திலும், வியாபகத்திலும் செலுத்தியுள்ள தாக்கத்தை ஆராய்வதற்காகத்தான் கூடவே தமிழ்ச் சூழலில் இது வரை சிங்கள சாதியமைப்பு குறித்த எந்த ஆய்வும் வெளிவந்ததில்லை. மேம்போக்காக சாதியம் குறித்த கட்டுரைகளில் சில வரிகளாக மட்டுமே வந்துபோயிருக்கின்றன.

பொருளாதார நெருக்கடியும், பொருளீட்டும் பொறுக்கிகளும் என்கிற ஒல்லாந்திலிருந்து கலையரசனின் கட்டுரை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வீழ்ச்சியை எளிமையாக அம்பலப்படுத்துகிறது. மார்க்ஸ் கூறியது போல முதலாளித்துவம் தனக்குத் தானே சவக்குழியை தோண்டிக்கொள்ளும் என்பதை நமது காலத்தில் காண்கிறோம்.


சுவிஸ்-தில்லை சமீபத்திய பெண் கவிஞைகர்ளில் குறிப்பிடத்தக்கவராக தனது படைப்புகளுக்கூடாக வெளிக்கிளம்பிக்கொண்டிருக்கிறார். கலாவின் கவிதைகள் இரண்டில் கோணேஸ்வரிகள் கவிதை ஏற்கெனவே சரிநிகரிலும் வேறு இடங்களிலும் பதிவாகியுள்ளன. தேவை கருதி இங்கு மீண்டும் பிரசுரமாகிறது.

போரின் கருவியாக பாலியல் வல்லுறவு எனும் கட்டுரை காத்திரமான கட்டுரை. அக்கட்டுரையின் சுருக்கமான வடிவம் சரிநிகரில் ஏற்கெனவே வெளியாகியிருக்கிறது. அக்கட்டுரையின் விரிவான வடிவம் இங்கு சில மேலதிக துணைச் செய்திகளுடன் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம். துரதிருஸ்டவசமாக அக்கட்டுரையை வெளியிடும் துணிச்சல் சில சஞ்சிகைகளுக்கு இருக்கவில்லை. காலம் பிந்தி அது பறையில் வெளிவருகிறது. நிலவும் ஆணாதிக்க சமூக அமைப்பில் அக்கட்டுரைக்கு என்றும் பெறுமதியிருக்கிறது.

தோழர் பொன் கந்தையா பற்றிய டென்மார்க் - கரவைதாசனின் கட்டுரை நீண்ட காலமாக அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட கட்டுரை. பொன் கந்தையா பற்றிய விரிவானதொரு பதிவு இது. அதன் தொடர்ச்சி அடுத்த இதழில் முடியும்.ரெஜிஸ் டேப்ரேயின் பேட்டியை இந்தியாவிலிருந்து தோழர் வளர்மதி மொழிபெயர்த்திருக்கிறார். அதன் அளவு காரணமாக இரண்டு இதழ்களில் அதனை பிரசுரிக்கிறோம். சேகுவேராவுடன் பொலிவியாவில் பணியாற்றிய பிரெஞ்சு மாக்சிய அறிஞரான அவர் தற்கால தேசிய இனப்பிரச்சினையை விளங்கிக்கொள்ள எளிமையான தத்துவார்த்த விளக்கத்தை பேட்டியில் தருகிறார்.குறுகிய காலத்தில் பறையின் அடுத்த இதழையும் வாசகர்களிடம் சேர்த்து விடுவோம்.பறையின் தொடர்ச்சிக்கு உங்கள் ஆதரவினை தொடர்ந்தும் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம்.

-பறை

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More