Slideshow

அக்கினிக் குஞ்சாய் உயிர்த்தெழு!

அவ்வை

சிறிய மலராய் விரிந்து மலரும்
என் மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை
மாசு மறுவற்ற பச்சைக் குழந்தை
காற்றை எல்லாம் தென்றலென்றெண்ணி
கற்பனையில் சஞ்சரித்து
ஒலியெல்லாம் சங்கீதமென
வாழ்வை இனிதாகவே காணத்தெரிந்த
கன்றுக்குட்டி
என் சிறு பெண்
வாழ்வின் முழுமைக்கு
பெண் குழந்தை வேண்டுமென்று
பேரவாக் கொண்டிருந்த என் தாய்மை
பிறந்த நாள் முதலாய்
இளஞ் சிவப்பு வர்ணத்தில்
சட்டைதைத்து
பொட்டு வைத்து காதுகுத்தி
பெண்ணாய் அவளை நினைத்த
என் தாய்மை ....
பெண்ணென்று பிறந்ததற்காய்
பெருமைப்பட வேண்டுமென்று
கனவுகளில் நினைத்திருந்த
என் தாய்மை ....
சிறகொடிக்கப்பட்ட ஒரு
ஒற்றைத் தும்பியாய்
திகைத்து போய் மிரண்டு கிடக்கிறது.
வக்கிரம் நிறைந்த விலங்குணர்வின்
குரூரம் நிறைந்த கயமையின் முன்னால்
சிதறிப் போயிற்று சில்லம் பல்லமாக
சிதறிப் போயிற்று
என மகளுக்கு
எப்படிக் காட்டுவேன்
இந்த உலகை .....
மூன்று வயதினும்
பால் முலையருந்தும் பவளவாற்க் குருத்துக்கள்
கொஞ்சி குலவி
நிலாக் காட்டச் சிரிக்கும்
சின்ன வயதிலும்
ஆண் குறிகளால் துளைக்கப்படுவதை
எப்படிக் காட்டுவேன் அள்ளி அணைக்கின்ற அப்பாவோ
ஆசையுடன் கொஞ்சுகின்ற மாமாவோ ஆயினும்
அடி வயிற்றில் துளையிடும்
ஆண்குறியர்களாகிக் போய்விடக் கூடிய
இந்த உலகை
எப்படிக் காட்டுவேன்.
சூழவுள்ள உலகம் முழுவதும்
விறைத்துப்போன
ஆண்குறிகளாய்
அச்சம் தருவதை
எப்படித் தவிர்ப்பேன்
காற்றெல்லாம் தென்றலென்றும்
ஒலியெல்லாம் கீதமென்றும் எண்ணியபடி
சிறகுகளை அகல விரித்து
சிறகடிக்க முடியாது என் பெண்ணே
வெந்து புண்ணாய்
வலியெடுக்கும் இதயத்துடன்
வாழ்தலும் முடியாது
எழு !
உள்ளே அனலாய்
எரிந்து கொண்டிருக்கும்
பூமியின் வடிவாய்
விரித்தெழு
பொட்டும் பிறவும்
அலங்காரிக்கும்
மேனியழகு உன் அழகல்ல
வெறியும்
திமிரும்
அவர்களுக்காய் மலரட்டும் !
அதிகாரமும்
உடைந்து சிதற எழுந்து நில்
உன்னை மீறிய எந்தக் குறியும்
-உனது உடலை தீண்டாதவாறு
அக்கினிக் குஞ்சாய்
உயிர்த்தெழு
இந்த உலகின்
பெண்மை வடிவம்
இது வென்றெழுது

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More