Slideshow

வீரயடி

எல்லாமே முடிந்து அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்... தியாகு செய்ய வேண்டிய கடமைகள் முடிந்தவுடன் அவனை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடுவந்திருந்தான் பிரபு. தாய், மரணித்த செய்தி தியாகுவிற்கு சொல்லப்பட்டதும் லண்டனிலிருந்து உடனே பயணித்துவிட்டான் அவன். நான்கு வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் மரணத்திற்கு கூட அவனால் செல்ல முடியவில்லை. அப்போது அவனுக்கு பயணிக்க முடியாத சூழ்நிலை இருந்தது. இப்போது தாயின் மரணத்திற்காவது தான் சென்று தன் கடமைகளைச் செய்யவேண்டும் என்று துடித்ததினால் புறப்பட்டுவந்து இறதிக் கடமைகளை முடித்துக்கொண்டு வீடுவந்து சேர்ந்திருந்தான். மயானத்திலிருந்து அவர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள்..? ஊரிலுள்ளவர்கள்-உறவினர், நண்பர்கள்... எல்லோரும் வந்து தியாகுவின் வீட்டில் நின்றிருந்த மாமரங்களின் நிழல்களின் கீழ் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து கொள்கின்றார்கள். அவர்களுக்கு சுடச்சுட கோப்பி, பால்த்தேனீர், சிகரெட், சுருட்டு, பீடி, வெற்றிலைப்பாக்கு போன்றவை கொடுக்கப்படுகின்றன. இரவுச்சாப்பாடுகள் உறவினர் சிலரால் கொண்டுவரப்படுகின்றன. பெரிய வீடு. வீட்டோடு சேர்ந்த விசாலமான முன்பிளெட். எல்லாத் திசைகளிலும் பளீரென்ற மின்சார ஒளி. தியாகு நான் சாகிறதுக்கிடையில பெரிய வீடு ஒன்று கட்டிவிட்டுத்தான் சாவேன்” என்று அப்பா சொன்னது நினைவுக்கு வந்தது. அப்பிடிப்பார்க்கும்போது அப்பாவின் ஆசை நிறைவேற்றப்பட்டிருக்கின்றதென்று தியாகு எண்ணிக்கொண்டான். வருடங்களுக்குப் பின்பு பார்க்கும் முகங்கள். எல்லாம் தியாகுவிற்கு பரிட்சயமான முகங்களாகவே தெரிந்தன. சிலரைப் பார்த்ததும் அடையாளம் கண்டுகொண்டான். பலர் தங்களைத் தாங்களாகவே வந்து அறிமுகம் செய்து கொண்ட பின்பே அவனால் ஊகிக்க முடிந்தது. ஒன்று இரண்டு வருடங்களா? பதினேழு வருடங்களுக்குப் பின்பு அல்லவா அவனால் பிறந்த மண்ணை மிதிக்க முடிந்தது. மரண வீட்டுக்கு வந்த பலபேர், தியாகுவைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்தவர்கள். அவர்கள் எல்லாம் அவனைச் சந்தித்து விடைபெற்றபோது தியாகு மிகவும் வருந்தினான். அந்த நேரத்தில் அவனுக்கு ஒரு ஜெர்மனிய பழமொழி நினைவுக்கு வந்தது. ”பகிர்ந்து கொள்ளப்படும் இன்பம் இரட்டிப்பாகின்றது., பகிர்ந்துகொள்ளப்படும் துன்பம் பாதி குறைகின்றது.” இதில் அவன் எதை எடுத்துக்கொள்வது? ஊரவர், உறவுகளைக் கண்ட இன்பத்தையா? அல்லது தாயை இழந்து நிற்கும் துன்பத்தையா? நிலை தடுமாறி நின்று கொண்டு, தன்னிடம் வந்து விடைபெற்றுச் செல்பவர்களை வாசல் வரை வந்து வழியனுப்பிக்கொண்டிருந்தான். விநாயகபுரத்து பிரதானவீதியில் முதலாவது வீடு. பெரிய வளவு. தென்னை மரங்களும், மாமரங்களும் நிறைந்த விசாலமான வளவு. இருபது வருடங்களுக்கு முன்பு, இளம்பிள்ளைத் தென்னைகளாக இருந்தவையெல்லாம், நெடிந்துயர்ந்து குலைகாட்டி அழகாகக் காட்சியளித்தன. தியாகு ஆசையோடு அக்கரைப்பற்று சந்தையில் வாங்கிக்கொண்டு வந்து நட்ட ஒட்டுமாமரங்கள், கறுத்தகொழும்பானும், பிலாட்டும் நன்றாக கிளைவிட்டு, பரந்து கிடந்தன. மெயின் றோட்டுக்கு எதிரேயிருந்த சின்னத்தோட்டம், அங்கே இருந்த பங்களா, ஒன்றுமே இப்போது அங்கே இல்லை. தியாகுவின் அப்பாவின் கடை. கடைக்குமுன் வீதியோரம் நின்றிருந்த வீரமரம் எதுவுமே இப்போது இல்லை. தியாகுவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தபொழுது. கையில் கோப்பிக் கிண்ணத்துடன் வந்தான் பிரபு. பிரபு, தியாகுவின் பள்ளித்தோழன். அவ்வப்போது ஊரைப்பற்றி தியாகுவிற்கு கடிதம் எழுதுபவன். ”என்ன தியாகு உனக்கு எல்லாம் ஆச்சரியமாக இருக்கின்றதா? எல்லாம் மாறிப் போச்சுடா. காலம் காலமாக நாம் வாழ்ந்த மண் இப்போது கோலம்மாறி போச்சி. சோத்துப்பாட்டுக்கே பெரிய பாடாக இருக்கு. புழைப்பு நடத்த சனங்களுக்கு ஒரு வழியுமில்ல.”பிரபு சொல்லிக்கொண்டே, தன் கையிலிருந்த கோப்பிக் கிண்ணத்தை தியாகுவிடம் கொடுத்தான். அதை வாங்கிக் கொண்ட தியாகு, ” பிறகு ஏண்டா இப்படி..” என்று கேட்பதற்கு முதலே, பிரபு பதில் சொல்ல முந்திக் கொண்டான்.”எல்லாம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கஸ்டமான நிலைதான் காரணம். சொந்த மண்ணிலே சுதந்திரமாக வாழ முடியாதநிலை. வயிற்றுப்பசிக்கு அன்றாடம் தொழில் பார்த்தவர்கள் கூட, அரைவயிறு கஞ்சிக்கே வழியின்றி அவதிப்படுகின்றார்கள். கடற்தொழில் செய்வது கூட கஸ்டம். ஆற்றில் மீன்பிடிப்பதற்கு கட்டுப்பாடு. வேளாண்மை, பயிர்ச்செய்கை எல்லாம் செய்கை பண்ண முடியாத நிலை. ஒரு கடை கண்ணிவைத்து வியாபாரம் பண்ணத்தடை. இப்படி எல்லாமே முடக்கிவைக்கப்பட்டிருக்கும் போது, ஊரில் பசியும், பஞ்சமும் தலைவிரித்ததாடாமல் என்ன செய்யும். ஏதோ உனக்கு நல்ல காலம். உன் தலையெழுத்து நல்லாயிருந்ததால் ஊரைவிட்டுப்போயிட்டாய். நாங்கள் பட்ட, படுகின்ற கஸ்டங்கள் உனக்குத் தெரியாது. ””ச்சே! ச்சே!! அப்படிச் சொல்லாதே பிரபு. தாய், தந்தையையும் தாய் மண்ணையும் விட்டுப் பிரிந்து போய் அந்நிய மண்ணில் அகதிகளாக வாழ்கின்ற கொடுமையை நான் அனுபவித்தவன். இந்த மண்ணின் வாசத்தையும் புழுதி மணத்தையும், செக்கச் செவேலென்று செம்பருத்தி பூத்திருக்கும் என் வீட்டு முற்றத்தையும் இழந்த குற்ற உணர்வு எனக்கு உண்டு. ஏதோ ஒரு வேகத்தில் தாய் மண்ணைப் பிரிந்து போனது என்னவோ உண்மைதான். ஆனால் அந்த பிரிவு தந்த துன்பம், துயரம் இருக்கே.. அது மிகக் கொடியது. அதை நான் இந்த பதினேழு வருடங்களாக அனுபவிக்கின்றேன். தாய் நாட்டின் சேதிகள் நாற்தோறும் கேட்டு, கண்கள் குளமாகி நெஞ்சம் தடுமாறி, எப்போ எமக்கு விடியல் வரும் என்று ஏங்கி விம்மி வெதும்பி தூக்கமின்றி துடிதுடித்த இரவுகள் ஏராளம்..””தம்பி.. தியாகு.. இங்க வாராசா.. உன்னைப் பார்க்க சோட்டையா இருக்கு.. எவ்வளவு காலம் மனே உன்னைப் பாத்து..” நான் குரல் வந்த திசையை திரும்பிப் பார்த்தேன். தங்கமணி மாமி... வீட்டினுள்ளே நின்று கூப்பிட்டுக் கொண்டிருந்தா. பிரபுவை கூட்டிக்கொண்டு உள்ளே வந்தேன், தங்கமணி மாமியின் அருகில் சென்றதும். அவர் கட்டிப்பிடித்து ஓவென்று ஒப்பாரி வைச்சுட்டா. சற்று நேரத்திற்குப் பின் அது அடங்கியதும்.. அந்த மகராசி இருக்கும் வரைக்கும் அடிக்கடி இந்த வீட்டுக்கு வந்துபோவேன். இனி ஆரு இருக்கா.” தங்கமணி மாமி மூக்கைச் சிந்தி அம்மாவின் பாசத்தை, பிரிவை சொல்லச்சொல்ல, இவ்வளவு நேரமும் என்னுள் அடக்கி வைக்கப்பட்டிருந்த துக்கம் தொண்டைவரை வந்து, 'ஓவென்று நானும் அழுதுவிட்டேன். ”அழுராசா.. நல்லா அழுதிடு.. வாய்விட்டு அழுதிடு... உங்கம்மா உன்னை ஏழு வயசுவரைக்கும் இடுப்பிலே தூக்கிச் சுமந்தவள். வயல் என்றும், வரப்பென்றும் ஆண்வேலையும், பொண்வேலையும் செய்து, உன்ர அப்பனுக்கு துணையா இருந்தவள். நான் இங்க வரும்போதெல்லாம் 'தம்பி கடுதாசி போட்டிருக்கான் மச்சாள். காசி அனுப்பியிருக்கிறான் மச்சாள்' எண்டு சொல்லி சுடச்சுட குடிக்க தேத்தண்ணி தந்து, வாயிலபோட வெத்தில பாக்கும் தந்து அனுப்பும் அந்த சீவன் போயிட்டாளே... இனி நானெல்லாம் எதுக்கு கிடந்து கஸ்டப்படணும்.. என்ர ஆசை மச்சாள் என்னையும் கூட்டிக்கோடீ..” என்று அம்மாவின் மேல் தான் வைத்திருந்த பாசத்தை வெளிப்படுத்திய

போது என் மனம் கனத்தக்கொண்டது. ஒரு நிமிட நேர நிசப்தம் நிலவியது. ”தியாகு! நான் புறப்படுறன் ஆறு மணிக்கு மேல சென்ரிப் பொயிண்டைத் தாண்டிப்போக விடமாட்டாங்கள் அவங்கள். பிரயாணத்தால் வந்த உடல் களைப்பு அத்தோடு மனக்களைப்பு என்று சோர்ந்து போயிட்டாய். படுத்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள். நான் காலையில வந்திடுறன்” என்று என் காதோரம் சொன்னான் பிரபு. நான் அவனை வழியனுப்பிவிட்டு ஹோலுக்குள் வந்தபோது மருமகள் மலர்விழி சொன்னாள் ”மாமா உங்களுக்கு சாமி அறைக்குள் கடுக்கை போட்டிருக்கு. சாப்பிட்டுட்டு தூங்கிடுங்க” என்று. ”இல்ல.. எனக்கு ஒண்ணும் வேண்டாம். சரி நான் பாத்திக்கிறன்.” என்று அவளை அனுப்பி விட்டு சாமி அறைக்குள் நுழைந்தேன். அப்பாவின் நிழற்படம் சாமிபடங்களுடன் சேர்ந்திருந்தது. அதற்கு சந்தணமாலை, அணிவிக்கப்பட்டிருந்தது. மண்டியிட்டு வணங்கிவிட்டு படுக்கையில் சாய்ந்தேன். தூக்கம் வரவில்லை. நெஞ்சு நிறை துக்கம் இருந்தது. அப்பாவின் கம்பீரமான உருவம், அகன்ற நெற்றி, அள்ளிப்பூசிய விபூதி, கபடமில்லாத சிரிப்பு, அத்தனையும் என் கண்முன் நிழலாட, அம்மாவின் ஆவி சுற்றிச்சுற்றி வந்து என்னை தழுவிக்கொள்வதைப் போல் ஒரு பிரமை. எந்தவித பிரக்ஞையுமில்லாமல் கண்களை மூடிக்கொண்டேன்... அப்பாவும் அம்மாவும் அன்பாக வாழ்ந்தவர்கள். நான் அறிந்தவகையில் அவர்கள் ஒரு போதும் ஒரு பிரச்சினையும் பட்டதில்லை. மனத்தாங்கல் கூட ஏற்பட்டதில்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொண்டு அன்பாக வாழ்க்கை நடத்தினார்கள். ஒருவரைவிட்டு ஒருவர் ஒரு நாள் கூட பிரிந்திருந்ததில்லை. அவ்வளவு அந்நியோன்யம் அவர்களுக்கிடையே இருந்தது. வயல் விதைப்பு, அறுவடை, சூடுமிதிப்பு என்று எல்லா வேலைகளிலும் அம்மா, அப்பாவுடன் இணைந்தே இருந்தா.விநாயகபுரத்து வீரயடிக்கடை என்றால் பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் தெரியும். அதிகாலை நான்கு மணிக்கே அம்மா எழுந்து கடைவாசல் பெருக்கிவிட்டு கைகால் அலம்பி சாமி கும்பிட்டுவிட்டுவந்து பொயிலருக்கு கரிபோட்டு தண்ணியை சூடாக்கி விட்டு அப்பாவை எழுப்பிவிடுவா. ”இஞ்சாருங்கோ! எழும்பயில்லையே.. இக்கணம் பால்க்காரக் கந்தண்ணர் வந்து கூப்பிடப்போறார்... எழும்பயில்லயே...””ம்ம்..ம்.. நான் முழிச்சிட்டுத்தான் படுத்திருக்கிறன்.” என்று அப்பா எழுந்து கொள்வார்.”நீயென்ன நேரத்தோட எழும்பிட்டியாக்கும்” அப்பா கேட்பார்.”இரவு முழுக்க நான் கண்ணோட கண் மூடவே இல்ல. இவன் தம்பி படுக்கிற அறைக்குள்ள சரியான நுளம்பு. அவன் யன்னலைத் திறந்து போட்டு படுத்திட்டான் நல்லா கடிச்சித் தின்றிருக்குமே.””ஓமெண்ணுறன். பிறகு நான் உரிமட்டை பற்றவைச்சு அதில வேப்பமிலைகளைப் போட்டு புகைச்சு அறை முழுக்க பிடிச்சபிறகுதான் நுளம்புகளும் கலைஞ்சது. தம்பியும் அதுக்குப் பிறகுதான் படுத்தான்.””இரவு காத்தே இல்ல. ஒரு கொத்துக்குழைகூட உசும்பயில்ல. காத்திருந்தா நுளம்பு காலைஞ்சு போயிருக்கும்”எ ன்று சொல்லிக்கொண்டே முகம் கழுவி, சாமி கும்பிட்டு கடைதிறக்கும் அலுவலில் இறங்குவார். வீட்டோட கடையும் அமைந்திருந்ததால், கடையிலிருந்து வரும் சாம்பிராணி புகை வாசமும் ஊதுபத்தி மணமும் நித்தரையில் இருக்கும் எனக்கு இதமாக இருக்கும். இடைக்கிடையே அப்பாவின் பேச்சுக்குரல் கேட்கும்.” வா... வா... குஞ்சித்தம்பி. என்ன விதைச்சுப்போட்டியோ?””அத என்னத்தக் கேக்கிற ராசண்ணே... முதல்ல காப்போத்தல் பால் தாங்கோவன்” ”சரி.. சரி இந்த சுடச்சுடக் குடிராப்பா.. உன்ர விதைப்பாடு எப்படிப் போச்சு...””இண்டைக்கு எண்டிருந்தது. அதுவும் முடியல. அடைமழை புடிச்சு தெண்டால் ஒண்ணும் பண்ண முடீயாது. எப்படியும் பத்துமணிக்கு மேலதான் மெசின் எவரும்” ஏண்டாம்பி. நீ கணபதியண்ணன்ட மெசினுக்குத்தானே காசகட்டினதாச் சொன்னாய். அந்தாள் கண்டபடி நிறையப்பேரிட்ட காசுவாங்கிப் போட்டு இண்டைக்கு நாளைக்கு எண்டு சொல்லுற மனிசனில்லையே... நானும் அவர்ர மெசினத்தான் அஞ்சி வருசமா புடிச்சு வயல்வேலை பாக்கிறன்.” ”ஓமண்ணே அவர் நல்ல மனிசன்தான். என்ர போதாத காலம் நேற்று விதைச்சுக்கொண்டிருந்த மெசின்ர ” அக்சல்” உடைஞ்சு போட்டுதாம். அதை இனி அக்கறைப்பற்றுக்கு கொண்டுபோய் வால்டிங்பண்ணிக்கொண்டு வர நேரமாயிடும். அதுதான் நான் கொஞ்சம் வெள்ளண்ணேயே பூமிக்குள் போனால் வக்கடையள வெட்டிக்கிட்டி ஆயத்தபடுத்திறநேரம் மெசினும் வந்திடும்.”இந்த கிழமைக்குள்ள விதைச்சு முடிச்சிரவேணுமெண்டு வட்டானை சொல்லிப் போட்டார்.” ”ஓம் ஓம் பிறகு முந்தி விதைச்சவன்ர வயலுக்குள்ள முளைகிளம்பினா அவன்ர வயலுக்குள்ளால மெசின்கொண்டுபோக விடமாட்டானுகள். எனக்கு றோட்டோரப் பூமி என்றபடியால் இந்தப் பிரச்சினையே கிடையாது...” என்று சொல்லுவார் அப்பா. அப்பாவுக்கு றோட்டோரப் பூமி என்று சொல்லிக்கொள்வதில் மிகப்பெரிய சந்தோசம் இருந்தது. மெயின்றோட்டைவிட்டு இறங்கிகால் வைப்பது அவர் தனது வயலுக்குள்தான். தான் வாலிப வயதில் காடுவளைந்து வெட்டி, பிறகு நாட்டுக்கட்டை, வேர் பிடுங்கி காணியாக்கிய கதைகளை மிக சுவாரஸ்யமாகச் சொல்லுவார்.

தண்ணிபாய்ச்சும் போதோ அல்லது உரம் எறியும் போதோ அப்பாவுக்குத் துணையாக நான் போவதுண்டு. அம்மா மத்தியானம் சோறு சமைச்சி பனையோலைப் பெட்டியில் சுடச்சுடப்போட்டு இறுக்கிக்கொண்டு கீரிமீன்கருவாட்டோடு உருளைக்கிழங்கும் போட்டு குளம்பு வைச்சி மரவள்ளிக் கிழங்கும் தக்காளியும் போட்டு சொதி வைத்தெடுத்து, தபால் பஸ்சில் வந்து இறங்குவா. அம்மாவை கண்டதும் உரம் அள்ளிக்கொடுத்துக்கொண்டிருந்தாலும், அதை அப்பிடியே வரம்பில் வைத்துவிட்டு ஓடிக்சென்று சோற்றுப்பெட்டியை தூக்கிக்கொண்டு வந்து, வயலின் நடுவில் நின்ற வேப்பமரநிழலில் வைத்துவிட்டு, அப்பிடியே வயலின் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றில் கைகால் கழுவி வந்து அம்மா பரிமாற அப்பாவுடன் அமர்ந்து சாப்பிடும் போது ஏற்படும் சந்தோசம் இருக்கே.. அதைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. மகா அற்புதமான அனுபவங்கள்... அதிகாலை வேளையில் அப்பாவின் கடையில் ஒரே சத்தமும் சந்தடியுமாக இருக்கும். ஆனேகமான ட்ராக்டர்கள், வண்டில்கள் எல்லாம் அவரின் கடையில் வந்து நின்று அப்பம் இடியப்பம் சாப்பிட்டு, பால், தேத்தண்ணி குடித்து, பீடி, சுருட்டு, வெத்திலை பாக்கு வாங்கி வயல்கட்டுக்கு போய்க்கொண்டே இருப்பார்கள்.விடிந்தவுடன் வேறு ஒரு சுறுசுறுப்பு வீரயடிக்கடையில் உருவாகும். அக்கரைப்பற்றிலிருந்து முஸ்லிம் மீன் வியாபாரிகளெல்லாம் சைக்கிளில் பெட்டிக்கட்டிக் கொண்டும், கார்களைவாடகைக்கு அமர்த்திக்கொண்டும் வந்து சேர்ந்து விடுவார்கள். கோரைக்களப்பு ஆற்றில் பிடிக்கும் இறால், மீன், நண்டு என்றால் ஏகப்பட்ட கிராக்கி. எல்லாம் மொத்தமாக வாங்கிக்கொண்டு போவது இந்த வியாபாhpகளின் வழக்கம். இனி வீட்டுத் தோட்டம் செய்பவர்கள் கொண்டுவரும் காய்கறிகள், வெடிக்காரத் தம்பியர் சுட்டுக்கொண்டுவரும் மான் இறைச்சி அல்லது மரை இறைச்சி, குறவர் வாடியிலிருந்து வரும் காட்டுப்பன்றி, உடும்பு போன்ற இறைச்சி வகை, இனி கோமாரித்தேன், கஞ்சிகுடிச்சாறு, கருவாடு என்று பொருட்கள் வந்து சங்கமமாகும் இடம்தான் அப்பாவின் வீரயடிக்கடை. காலையில் அம்மா கடையைப் பொறுப்பேற்றவுடன் அப்பா தனது கொமிசன் வியாபாரத்தில் இறங்கிவிடுவார். ஊரிலுள்ள குறிப்பிட்ட தொழிலாளர்களுக்கு முற்பணம் கொடுத்து வைத்திருப்பார். அவர்களிடம் இருந்து வாங்கி அப்படியே முஸ்லிம் வியாபாரிகளுக்கு கைமாறிவிடுவார். அனைத்து வியாபாரிகளும் ராசண்ணன் என்று அவரில் மரியாதையும், மதிப்பும் வைத்திருந்தார்கள்... அவ்வளவு பிரபல்யமான அந்த வீரயடிக்கடை, நான் இன்று காலையில் வந்து இறங்கிய போது இருந்தஇடம், அடையாளம் எதுவுமே தெரியவில்லை. வீரமரமும் இல்லை. அங்கு கடையுமில்லை...போரின் அனர்த்தத்தினால், அவர்கள் எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்களாம். அந்த அதிர்ச்சி தாங்காமல் தான் அப்பா படுக்கையில் விழுந்து, பின்பு உயிரை விட்டவர். இப்போது என் அம்மா...அப்பாவின் மூச்சு இருக்கும் வரைக்கும், அம்மா உறுதியாக இருந்தா. அவருக்குப் பிறகு அவ மிகவும் உடைஞ்சுபோய் இன்று எல்லோரையும் விட்டுச் சென்று அப்பாவுடன் சேர்ந்துகொண்டார். இப்போது நான் அவர்கள் இருவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். என்னைச் சுற்றுச் சுற்றி வந்த அம்மாவின் ஆவியுடன், இப்போது அப்பாவும் சேர்ந்துகொண்டார். இருவரும் என் முகவாயை பிடித்து, தொட்டுக் கொஞ்சுவது போல் ஒரு பிரமை எனக்கு...”மாமா! மாமா! எழும்புங்கோ.. எழும்பி வாயலம்பிட்டு கோப்பி குடியுங்கோ” என்று மருமகள் மலர்விழி எழுப்பும் சத்தம் கேட்டுத்தான் கண்விழித்துக்கொண்டேன். அத்தோடு அம்மாவின் எட்டாஞ்சடங்கு முடிந்தவுடன் நான் லண்டன் திரும்பியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது தான் என் நெஞ்சை நெருடுகிறது.... கோவிலூர் செல்வராஜன்-

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More