Slideshow

சூரியனைத் தேடி

-செல்வி
நிராசைகளால் சூழப்பட்ட எனது ஆன்மா
வாழ்வுக்காகத் துடிக்கிறது.
எங்கு நான் திரும்பினும்
ஆதி மனிதனாய்
சதையைப் பிளந்து இரத்தம் குடிக்கும்
மஞ்சள் பற்களின் அழுக்கு வாய்கள்
எச்சிலை வழிய விட்டபடி
கோர நகங்களும் குரூரக் கண்களுமாய்...
வென்றுவிட்ட எக்களிப்பில்
கும்மாளமடிக்கும்
மேதா விலாசங்கள் ஒன்றும் புதியதல்ல.
நட்சத்திரக் கனவுச் சிந்தனைகளில்
சிம்மாசனங்களைத் தேடி
கால்களை இழந்தாயிற்று
பௌர்ணமிகள் வருவதாய் பலமுறை
ஏமாந்து
சலிப்புத்தான் மிஞ்சியது.
வானிருந்து தேவர்கள் வழங்கும் ஆசிகளை
எண்ணிப் பூரித்த கற்பனைகள்
காலைப் பனியும் உலர்ந்து போன
பின் கருகிய புற்களாயின.
போரடிக்கும் எருதுகளாய், முடிவில்லாது
எத்தனை நாள்களாய் வளைய வருவது...
ஆர்ப்பாட்டமான கொச்சைத் தனத்துள்
அமிழ்ந்து போவது எவ்வாறு...?
பிரகாசமான பகல் பொழுதுகளைக்
காண்பது சுலபமில்லைத்தான்
ஆனாலும்,
மந்தார வானத்துள்ளும்
சூரியனை நான் தேட வேண்டும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More