Slideshow

தலித்தின் குறிப்புகள்

அருந்ததியன்
புகலிடத்தில் சாதியம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி அறிவதில் பல்வேறு சமூக ஆய்வாளர்களும் இன்னும் பலரும் ஆர்வமாக இருக்கின்றனர். பறை சஞ்சிகையில் இது குறித்த விடயங்களை இந்த இதழில் சில காரணங்களால் எழுத வேண்டாம் என்றிருந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட நிகழ்வுகளும் சமூக விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் என்று நம்பியவர்கள் மத்தியிலும் கூட இருக்கின்ற குழப்பங்களும் தவறான புரிதல்களும், பிழையான விளக்கங்களும், கசப்பான நடத்தைகளுமே இந்த முறை சிறு குறிப்போடு இது குறித்து தொடங்கத் தூண்டியது.
வெளிநாட்டில் சாதியம் இல்லை என்கிற வாதத்தை வைப்பவர்கள் பெரும்பாலும் தாயகத்தில் சாதியம் எவ்வாறு இயங்கியது என்கிற பார்வையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஆக, இங்கு அது இல்லை என்கிற முடிவுக்கு வருவதைக் காணமுடிகிறது. வெறும் தீண்டாமையும், பெரிய ஏற்றத்தாழ்வைக் கொண்டுள்ள வர்க்க இடைவெளியையும் மட்டுமே கருத்திற் கொண்ட புரிதல் இவை. புகலிடத்தில் சாதியத்தின் பண்பு மாறவில்லை. அதன் வடிவங்கள் மாறியுள்ளன. குறிப்பாக அதுவும் சேர்ந்து இன்று நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. modernize ஆகியிருக்கிறது. அகமணமுறை எவ்வாறு இயங்குகிறது. பிரதேச ரிதியில் அணிதிரள்வதற்கூடாக அது மீளவும் புதிய வடிவில் எப்படி நிறுவனமயப்படுகிறது? கோவில் மற்றும் தேவாலயங்களில் எப்படி அது வேறு வடிவத்தில் அமைப்பாகிறது?
''புகலிடத்தின் சாதியத்தின் பண்பு மாறவில்லை. அதன் வடிவங்கள் மாறியுள்ளன. குறிப்பாக அதுவும் சேர்ந்து இன்று நவினமயப்படுத்தப்பட்டுள்ளன.
பெண்களின் மீதான ”புனிதத் தன்மை” சாதியத்துக்கூடாக எப்படி பட்டை தீட்டப்படுகிறது? இவை எவ்வாற இங்கு பல்வேறு கலாசார, கல்வி,, அரசியல் ரிதியில் நிறுவனமயப்படுகின்ற போது தாக்கம் நிகழ்த்துகிறது. இவற்றின் தலைமைகள் உருவாக்கப்படுகிற போது நடக்கின்ற குழுவாதங்களில் வேறூன்றியிருக்கின்ற சாதிய அம்சம் என்ன? வெளிநாடுளில் உள்ள பிரதேசங்களில் (தெருக்களில் அல்லது தொடர்மாடிகளில்) குடும்பங்களாக, ஊரார்களாக, ஒன்றுபடுவதன் பின்னணியில் இவை கொண்டிருக்கிற சாதிய உறவு மற்றும் வெளிப்பாடு என்ன என்பது குறித்து நிறையவே பேச வேண்டியிருக்கிறது. எப்போதும் போலவே இது குறித்து பேசப்படுகின்ற போது கிளம்பும் எதிர்ப்புக­ளுக்­கும், தனிமைப்படுத்தப்படலுக்கும், பயந்து பலர் பேச முன்வருவதில்லை என்பது தான் இதன் மிகப்பெரிய அவலம். ஆனால் இவை பேசப்பட்டே ஆகவேண்டிய கட்டாயத்திற்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். முக்கியமாக அடுத்த தலைமுறைக்கும் இது கடத்தப்படும் ஆபத்து குறித்த அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். நேரடியாகவோ மறைமுகமாகவோ இவை எப்படி இயங்குகின்றன என்பது குறித்து விளக்கம் கொடுக்கவே முடியாத அளவுக்கு தனிமைப்படவேண்டிய சூழல் இங்கு நிலவுகிறது.
தமது சாதி, ஊர், தொழில், வர்க்கம், மதம், போன்ற இன்னோரன்ன அடையாளங்களை இறுக்கிப்பிடிக்காத இடங்களும் இல்லாமலில்லை. சில இடங்களில் சிறிய எண்ணிக்கையில் இருப்பதால் மற்றவர்களையும் அரவணைத்துப் போவதில் உள்ள வசதிகளை உணர்ந்தாலும் கூட அவை வெடிக்கும் இடங்கள் கடைசியில் இப்படித்தான் இருக்கின்றன. புகலிடத்தில் சாதிய சச்சரவுகள் நேரடியாக நிகழாமல் இருப்பதற்குரிய காரணங்களில் ஒன்று இங்குள்ள சட்டங்களும் அரச கட்டமைப்பும் இடங்கொடுப்பதில்லை. சாதிகளைக் கடந்து வர்க்க ரிதியில் பலரது நிலைகளும் சமப்படுத்தப்படுகின்றன. சொத்துக்கள், கல்வி, தொழில் என்கிற ரிதியில் ஏனைய சாதியினரும் போட்டி போடக்கூடக் கூடிய வசதிகளைக் கொண்டிருந்தாலும், சமூக அந்தஸ்துக்கு இவை போதுமானதான பல இடங்களில் இருப்பதில்லை. சமூக அந்தஸ்துக்கு துணை சேர்க்கும் மிகப் பெரிய காரணியாக பல இடங்களில் சாதி வந்து சேர்ந்து விடுகிறது.
ஒரே சாதி ஒரே வர்க்கமாக இருந்த நிலை மாறி ஒரு சாதிக்குள் பல வர்க்கங்களை உருவாகியுள்ளன. அதே நேரத்தில் ஒரே வர்க்கம் இன்றைக்கு பல சாதிகளின் ஊடாகவும் இயங்கி வருகிறது.ஒன்றை மட்டும் நாம் உணர வேண்டும். தாயகத்திலும் சரி, புகலிடத்திலும் சரி அடக்கப்படும் சாதியினரின் நாகரிகமும் கௌரவமிக்க வாழ்க்கையும் உயர் சாதியினரின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்டபட்டதாக கட்டமைக்கப்பட்டு வருவதை நுணுக்கமாக பார்த்தால் அடையாளம் காணலாம்.
பல்வேறு வடிவங்களைக் கொண்டு இயங்கி பன்முக தாக்கங்களை நிகழ்த்தி வரும் இவை குறித்து இனி வரும் இதழ்களில் எழுதுவோம். இது குறித்த பார்வைகளை நீங்களும் எழுதுங்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More