Slideshow

சிறிலங்கா: துரோகங்களின் புகலிடம்..........

கோமதி


பெப்ரவரி 4ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் நமக்கு கிடைத்த நாளென திருப்பி திருப்பி புனையப் படுகின்ற ஒரு மிகப் பெரிய கும்பமேளா சிறிலங்காவில் நடப்பதுண்டு. இந்த நாளன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடும் படி பணிக்கப் படுவார்கள். அவ்வாறு தேசியக்கொடி பறக்கவிடாதவர்கள் சந்தேகத்திற் குள்ளா­வார்கள். நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிகள் இந்த நாளில் அமுலுக்கு வரும். ஏனைய நாளை விட சுதந்திரம் பறிக்கப் பட்டவர்களாக அனைத்து மக்களும் பாதுகாப்பு என்கிற பேரில் இம்சைப் படுத்தப்படும் நாளும் அது. ஏன் அரச தலைவர்களும், அதன் பிரிவாரங்களும் கூட அதிக பந்தோபஸ்துடனும் எச்சரிக்கையுடனும் இருக்கும் நாட்களும் அவை தான். சுதந்திர தினமானது இந்தளவு கேலிக்குரியதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும்.. சுதந்திரதினம் இந்தளவு வேடிக்கையாகிப் போனதன் பின்னணியின் வரலாற்றுப் பின்புலம் பலரால் மறக்கப்படுகின்ற ஒன்றாகியும் விடுகிறது. 50வது சுதந்திரப் பொன்விழா 1998இல் இலங்கையில் நடத்தப்பட்ட விதம் மிகப்பெரிய நகைப்புக்கிடமான வகையில் இலங்கையில் நடத்தப்பட்டது. எந்த ஏகாதிபத்திய காலனித்துவ அரசு சிறிலங்காவை அடக்கிவைத்திருந்ததோ. 50 வருடங்களின் பின் அதே அரசின் இளவரசரான சார்ள்சின் தலைமையில் இந்தத் திருவிழா நடத்தப்பட்டது தான் மேலும் நகைப்பிற்கிடமானது.


தமிழ் மக்களைப் பொறுத்தளவில் அவர்கள் முழுவதும் சீரழிக்கப்பட்ட நிலையில், இருப்பதும் இழக்கப்பட்ட, அகதிகளாக, கைதிகளாக, நாடோடிகளாக, காலம் கடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நிமிடமும் மரண பயத்தில் மனோ பயத்தில் வாழ்ந்து வருகின்றனர். ஒட்டு மொத்தத்தில் அடிமை வாழ்வை அனுபவித்து வருகின்றார்கள்.


இந்த அடிமை சாசனத்துக்கு வயது 50. இலங்கை காலனித்துவத்துக்கு முன் தமிழ், சிங்கள அரசுகளாக இருந்த நிலையில் காலனித்துவவாதி­கள் ஒரே ஆட்சியின் கீழ் கொண்டு வந்து பின் விட்டுவிட்டுப் போகும் போது அதிகாரத்தை சிங்கள பௌத்தர்களிடம் வழங்கி விட்டுப் போனதே வர­லாறு. இந்த வரலாறுக்குத் தான் 50 வயது. சிங்கள-பௌத்த-ஆணாதிக்க-சுரண்டும் வர்க்கத்திடம் ஆட்சி கிடைக்க, அவர்களல்லாதவர்கள், அதிகா­ரத்துக்கு பலியாக்கப்பட்டு வந்ததற்கு தான் 50 வருடங்கள். இந்த 50 வருட காலம் என்பது ஒடுக்கு முறையின் மீது தான் வந்துள்ளது. பொன் விழா என்பது அந்த ஒடுக்கு முறையின் காரி நாளாகத் தான் தமிழ் மக்களுக்கு இருந்தது. வட கிழக்கெங்கும் இது வரைகாலம் பெப்ரவரி 4 என்பது ஒரு காரிநாளாகத் தான் அனுட்டிக்கப்பட்டு வந்திரு­க்­கிறது. இந்த தினத்தில் அங்கு கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு, சிங்கள பௌத்த அடக்குமுறையின் சின்னமான தேசியக்கொடி (சிங்கக்கொடி) எரிக்கப் பட்டு தமிழ் கீதம் இசைக்கப்பட்டு வந்திருக்கிறது. அடக்குமுறையின் அளவு கொஞ்சமும் குறைந்த­தில்லை மாறாக நாளுக்கு நாள் மோசமாக்கப்பட்டு வந்து இன்று தமிழ் மக்கள் தங்கள் தலையெழு­த்தை தீர்மானிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்­கும் நிலையில், அடக்கு முறையின் உச்ச கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் 50வது சுதந்திர விழா கொண்டாடப்பட்டது. யாரால் யாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்? எவருக்கு கிடைத்திருக்கிற சுதந்திரம்? நிச்சயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது இங்கு வாழும் ஏனைய சிறபான்மை இனக் குழுமங்களுக்கோ அல்ல.


அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பௌத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாக­வும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைக­ளைக் பிச்சை கேட்கும் தரப்பினராக­வும் மாறியது. தொடர்ச்சியாக இரங்கிப் போய் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்கக்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளு­டன் பேச முற்படுவது வாக்குறுதிகள் வழங்குவது, ஒப்பந்தம் செய்து கொள்வது, தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கி யெறிந்து விடுவது என இவை ஒன்றும் வரலாற்றில் ஒரு முறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பௌத்த அதிகா­ரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதி­ல்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமது விடுதலையைப் பெறுவதைத் தவிர வேறு மாற்று இல்லையென்பது மீள மீள உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.


இந்த அரை நூற்றாண்டு வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்­பட்ட வரலாறு தான். அது இந்த அதிகாரம் கைமாறப்­பட்ட 50 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்­திற்கு முற்பட்ட காலந்தொட்டு அந்த நூற்­றாண்டின் ஆரம்பத்திலிருந்து- தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்...


முதலாவது நம்பிக்கைத் துரோகம்

1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந்­தனர். இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் ஒரு இயக்கத்தை அமைத்துக் கொண்டனர்.பூரண சுயாட்சிக்கான முயற்சிகளை செய்யாத இந்த அமைப்பு வெறும் சீர்திருத்தவாத கோரிக்கைகளை பெறுவதற்­கூடாக தனது நோக்கங்களைத் தணித்துக் கொண்டது. இவ்வாறான சீர்திருத்தக் கோரிக்­கையை முன்னெடுப்பதற்கான ஒரு இயக்கமே இவர்களுக்கு அப்போது தேவைப்பட்டிருந்தது. இவ்வமைப்பைத் தொடங்குவதற்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் தமிழ்த் தலைவர்களும் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டனர். யாழ்ப்பா­ணச் சங்கம் ”தமிழ் மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப பிரதிநிதித்துவம்” என்ற கோரிக்கையை முன் வைத்திருந்தது. அதன்படி முடியுமானவரை தமிழ் விகிதாசாரத்திற்கிணங்க பிரதிநிதித்துவமும், மேல்மாகாணத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவமும் வழங்கப்படுவதற்கு தொழிற்படுவதாக 1918இல் இலங்கை தேசிய சங்கத்தின் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் இலங்கை சீர்திருத்த கழகத்தின் சார்பில் ஈ.ஜே.சமரவிக்கிரமவும் யாழ்ப்பாண சங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய சேர்.பொன்.அருணாச­லத்திடம் எழுத்தில் உறுதியளித்தனர்.


1919ஆம் ஆண்டுடிசம்பர் 11ஆம் திகதியன்று இலங்கை தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இச்சங்கத்தினூடாகவே இலங்கையின் படித்த உயர் மேட்டுக்குடித் தலைவர்கள் எல்லோருமாக இலங்­கைக்கான சீர்திருத்த கோரிக்கைகளை விடுத்தக் கொண்டிருந்தார்கள். இ.தே.கா.வின் முதற் தலைவ­ராக சேர்.பொன் அருணாசலம் தெரிவு செய்யப்­பட்டார்.


ஆனால் மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சி­களை ஆங்கிலேய அரசு முயன்று கொண்டிருந்த­போது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படு­வதை இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கியதுடன் அதற்கெதிராகவும் நின்றார். சிங்களத் தலைவ­ர்கள் வாக்குறுதியை மீறியதைத் தொடர்ந்து 1921ஆம் ஆண்டு அருணாசலம் இ.தே.கா.விலிருந்து வெளியேறி தமிழர் மகா சபையை அமைத்துக் கொண்டார். இதன் பின்னர் இ.தே.கா. ஒரு சிங்கள அமைப்பாகவே படிப்படியாக மாறியது. இந்த முதலாவது முறிவு தமிழ் மக்கள் தங்களைப் பற்றி தனித்து சிந்திக்க வைத்தது.
இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இ.தே.கா.வினர் சமரச முயற்சிகளுக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த சமரச முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.


தமிழ்-சிங்கள ஒப்பந்தம்
1921இல் தமிழ் தலைவர்களின் வெளியேற்­றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.கா.வினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினரு­க்­கும் கண்டியச்சிங்களத் தலைமைகளுக்குமிடை­யில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடி­யாகச் சாத்தியப்படவில்லை.1925 யூன் 28ஆம் திகதியன்று தமிழர் மகா சபைக்கும் இ.தே.கா.வின­ருக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது. இதன் போது தான் ”சிங்கள-தமிழ் ஒப்பந்தம்” எனப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி


1.வடக்கு-கிழக்கு பிரதேசத்தி­லும், மேல் மாகாணத்திலும் வழங்க­ப்படும் பிரதிநிதித்துவத்­தில் மூன்றில் இரண்டு பங்கு தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

2. இ.தே.க.வின் முன், வைக்கப்­படும் சகல யோசனைகளையும் பாசீலிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.

இக்கோரிக்கை 1925ஆம் ஆண்டு வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் 3வதாக இருந்தது. ஆனாலும் இவ் ஒப்பந்த விடயங்கள் அடுத்த வருடாந்த மாநாட்டுக்கு ஒத்தி போடப்பட்டது. கட்டாயமாக 1926ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் இது முன்வைக்கப்படுமென பிரான்ஸிஸ் டி.சொய்ஸாவால் கொரயாவுக்கு உறுதியளிக்கப்­பட்டபோதும் அம் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் கூட இது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தேசிய காங்கிரசினர் நம்பிக்கைத் துரோகிகள் என தமிழ் மக்கள் கருதுவார்கள் என அப்போது 'கொரயா' வால் சொல்லப்பட்டது. அதன்படியே நடந்தது. தமிழ் தலைமை இரண்டாவது முறையும் ஏமாற்றப்பட்டார்­கள். இதன் விளைவு தமிழ் அரசியல் தேசிய அரசி­யலிலிருந்து தனித்துச் செல்லத் தொடங்கியது.


பண்டா-செல்வா ஒப்பந்தம்
இந்த இடைக்காலத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து முடிந்திருந்தன. டொனமூர் (1931), சோல்பரி(1947) ஆகிய அரசியல் திட்டங்கள் பெயரளவில் சில ஏற்பாடுகளை செய்திருந்தபோதும் நடைமுறையில் அவை தமிழ் மக்களுக்கு எந்த பாதுகாப்பையும் அளிக்கவில்லை. டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் தான், தனிச்சிங்கள மந்திரி சபை அமைக்கப்பட்டது. இந்திய வம்சாவழி மக்களைப் பாதிக்கக் கூடிய பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.


இதற்கிடையில் 1948இல் ”சுதந்திரமும்” வழங்கப்­ பட்டது. சோல்பரி அரசியல் திட்டம் தொடர்ந்து (1972 குடியரசு அரசியலமைப்பு வரை) அமுலிலிருந்தது சுதந்திரம் கிடைத்ததுமே மலையகத் தமிழர்களின் உரிமை பறி போனது. 1948இல் பிரஜாவுரிமைச் சட்டத்தின் மூலம் மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்திய பாகிஸ்தானிய சட்டமும் கொண்டு வரப்பட்டது. 1952ஆம் ஆண்டு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வந்ததன் மூலம் இறுதியாக மலையக மக்களின் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. தேசியக் கொடி அமைக்கப்பட்ட போது அது சிங்கள பௌத்தர்க­ளின் தேசியக் கொடியாக அமைக்கப்பட்டது. விவசாய அபிவிருத்தித் திட்டம் என்ற பேரில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் அமைக்கப்­பட்டன. இந்திய வழ்சாவழி மக்களுக்கெதிரான நாடு கடத்தும் ஒப்பந்தம் (நேரு-கொத்தலாவல-1954) செய்து கொள்ளப்பட்டது.


இதற்கிடையில் 1956ஆம் ஆண்டு தேர்தற் பிரச்சாரத்தின் போது ஐ.தே.க.தமது களனி மாநாட்டில் சிங்களம் மட்டும் அரச கருமமொழி தீர்மானத்தை நிறைவேற்றியது. தாம் அதனை விட தீவிர சிங்கள பௌத்தர் என்பதைக் காட்டுவதற்கு ஸ்ரீ ல.சு.க. தாம் ஆட்சிக்கு வந்தால் 24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்தது. அதே போல் தேர்தலில் வெற்றி பெற்றதும் பண்டாரநாயக்காவால் சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழரசுக் கட்சியினர் கொடுரமாக தாக்கப்பட்டு கலைக்கப்பட்டதுடன் அது கலவரத்தில் வந்து முடிந்தது. 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட­னர். 1957 சுதந்திர பகிஷ்கரிப்பு செய்து, கறுப்புக் கொடியேற்ற முனைந்த நடராசன் எனும் இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டார்.


இந்த நிலையில் 1957 யூலை 20 திகதியன்று ஒரு மாபெரும் சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கான எற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையில் தான் பண்டாரநாயக்கா தமிழ் மக்களின் எதிர்ப்பை கண்டு சமரசத்துக்கு வரத் தொடங்கினார்.
1957ஆம் ஆண்டு யூலை 27ஆம் திகதி நள்ளிரவு பண்டாரநாயக்கா-செல்வநாயகம் ஆகியோருக்­கிடையில் காணப்பட்ட இடைக்காலத்திற்கு தீர்வு தரக்கூடிய இவ் உடன்படிக்கையின் படி குறிப்பாக...

1. சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தம்

2. தேசிய சிறுபான்மை மொழியாக தமிழ் உத்தியோக அங்கீகாரம் பெறும்.

3. தமிழ் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிர்வாக மொழியாக இருக்கும்.

4. நாட்டில் தமிழ் மக்கள் தம் கருமங்களை தமிழில் ஆற்றவும் தமிழில் தமது பண்பாட்டை வளர்க்­கும் உரிமையும் பாதுகாக்கப்படும்.

5. பிரதேச சபைகள் சட்டத்தின் மூலம் பெரும­ளவு ”பிரதேச சுயாட்சி” மக்களுக்கு வழங்கப்படும்.

என்ற இவ்வொப்பந்தத்தைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சி நடாத்தவிருந்த மாபெரும் ஹர்த்­தால் நிறுத்­தப்பட்டது. இவ்வொப்பந்தம் கைச்சாத்­திடப்பட்ட­வுடன் தென்னிலங்கையில் ஆங்காங்கு தாக்குதல்­கள் நடந்தன. ஒக்டோபர் 4இல் ஒப்பந்தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜெயவர்தனா தலைமையில் கண்டிக்கு பேரினவாத யாத்திரை சென்ற போது அது இம்புல்கொடவில் வைத்து அரச சக்திகளினால் முறியடிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களாக இவ்வொப்பந்தத்தை நடைமுறைப் படுத்துவதில் இழுத்தடிக்கப்பட்டது. 1958 ஏப்ரல் 8 அன்று பண்டார­நாயக்காவின் றோஸ்மீட் பிளேஸ் இல்லத்துக்கு முன் அரசாங்கத்தைச் சேர்ந்தவர்க­ளும் பிக்கு எக்ஸத் பெரமுனவைச் சேர்ந்த பிக்குமாரும் சத்தியாக்கி­ரகம் இருந்ததைத் தொடர்ந்து அவர்களின் முன்னால் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டதுடன். ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டதாக அன்றே பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற இந்த துரோகத்தனம் சிங்கள அரசாங்கத்தின் முதற் துரோகமாகவும் அமைந்தது. இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலைக்கு இது கொண்டு சென்றது. மேலும் 1957இல் ”ஸ்ரீ” சட்டம் கொண்டு வரப்பட்டது. இவற்றை எதிர்த்து சாத்வீக முறையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து 1958 இனக்கலவரம் நடந்தேறியது தமிழ் மக்களுக்­கெதிரான பலாத்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. பல தமிழர்கள் இதில் கொல்லப்­பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. அகதிகளாக்­கப்பட்டனர். தமிழரசுக் கட்சி தடை செய்யப்பட்ட­துடன் தொண்ட­ர்கள் பலர் தடுத்து வைக்கப்பட்டனர், சுதந்திரன் பத்திரிகையும் தடை செய்யப்பட்டது.
இதற்கிடையில் பண்டாரநாயக்காவும் பிக்கு­வால் கொலைசெய்யப்பட்டு 1960 மார்ச் தேர்தலுக்­கான ஆயத்தங்கள் நடந்தன. தமிழரசுக் கட்சி இரு பெரும் கட்சிகளிடம் நான்கம்சக் கோரிக்கைகளை முன்வைத்தது. இவ்வொப்பந்தம் பண்டா-செல்வா ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.


தமிழரசுக்கட்சி-ஸ்ரீ.ல.சு.க. உடன்படிக்கை
1.பிரதேச சபைகளை அமைத்தல், குடியேற்றங்­களை நிறுத்தல்,
2.தமிழ் மொழிக்கு சட்ட அந்தஸ்து
3.பிரஜாவுரிமைச் சட்டத் திருத்தம்
4.குடியுரிமைப் பிரச்சினை தீரும் வரை 6 நியமன உறுப்பினர்களில் 4ஐ மலையகத் தமிழர்களுக்கு வழங்குவது. இவ்வாறு ஏற்றுக்கொண்ட விடயங்கள் சிம்மாசனப் பிரசங்கத்தில் இடம்பெற வேண்டும்.


இதனை எழுத்தில் பெற்றுக் கொண்ட டட்லி பின்னர் நிராகரித்தார்.
ஆனால் ஸ்ரீ.ல.சு.க. ஏற்றுக் கொண்டது. அக்கோரிக்கைகள் பண்டா செல்வா ஒப்பந்தத்தை ஒட்டியிருப்­பதால் அதனை தாம் ஏற்பதாக சிறிமா தமது பிரதிநிதிகளின் மூலம் அறிவித்தார். இவ்வுடன்படிக்கை­யின்படி சிம்மாசனப் பிரசங்கத்தின் போது தமிழரசுக் கட்சி எதிர்த்து வாக்களித்ததைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலகியது.


ல.ச.ச.க. கம்யூனிஸ்ட் கட்சி என்பவற்றுடன் சேர்ந்து ஸ்ரீ.ல.சு.க. ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்து மகாதேசாதிபதிக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட போதும் பாராளுமன்­றம் கலைக்கப்பட்டு 1960 யூலை தேர்தலுக்கு வழிவகுத்­தது. தேர்தலில் ஸ்ரீ.ல.சு.க. வெற்றி பெற்றதும். உடன்பட்ட விடயங்களை அமுல் நடாத்துவதற்கான பேச்சுவார்த்தை பிரதமர் சிறிமாவின் தலைமையில் நடந்தது. இப்பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்­கும் போதே எவ்வித முன்னறிவிப்புமின்றி சிங்களம் நாடு முழுவதும் நீதிமன்ற மொழியாக்குவதற்கான சட்டம் பாராளு­மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்­ந்து அரசுக்கும் தமிழரசுக் கட்சிக்குமிடையிலான உறவு முறிவடைந்தது. இது தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்று சம்பவங்களில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.


அது மட்டுமன்றி 1961ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் வடக்கு-கிழக்கு உட்பட நாடு முழுவதும் தனிச்சிங்களச் சட்டம் பூரணமாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்­ந்து த.க.வினால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்­கிரகப் போராட்டங்கள் இராணுவம் கொண்டு அடக்கப்பட்டதுடன், அவசரகால சட்டம் போடப்­பட்டு ஊரடங்குச் சட்டம் என்பவை பிறப்பிக்கப்பட்டது. பலர் இராணுவ முகாம்களில் தடுத்து வைக்கப்­பட்டனர்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தம் (1964-10-30) கொண்டு வரப்பட்டு இந்திய வம்சாவழி மக்கள் பலாத்காரமாக நாடு கடத்தப்பட்டனர். அதே வேளை அரசாங்கம் பாராளுமன்றத்­துக்கு ஏரிக்கரைப் பத்திரிகை மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது தமிழரசுக்கட்சி அதனை எதிர்த்து வாக்களித்த­தைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி கவிழ்ந்தது.


டட்லி செல்வா ஒப்பந்தம்
1965 தேர்தலுக்கான ஆயத்தங்கள் நடந்தன. ஸ்ரீ.ல.சு.க. வை தோற்கடிப்பதற்காக டட்லி செல்வநாயகத்துடன் ஒரு இரகசிய உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்.


இவ்வுடன்பாட்டை அறிந்த ஸ்ரீ.ல.சு.க. ”டட்லி-செல்வா இரகசிய ஒப்பந்தம்” என தேர்தற் பிரச்சாரம் செய்தது. டட்லி, ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க முற்பட்டாலும் இறுதியில் தமிழரசுக் கட்சியின் ஆதரவில்லாமல் ஆட்சியமைக்க முடியாத நிலை­யில் ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தைக் காட்டி ஆதரவு வேண்டியது. டட்லி பதவியேற்பதற்கு முன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) இவ்வுடன்படிக்கை பகிரங்கமாக கைச்சாத்திடப்பட்டது. இவ்வொப்­பந்தம் அடிப்படையில் பண்டா-செல்வா ஒப்பந்த­த்தை ஒத்திருந்தது என்று சொல்லப்பட்டாலும் கூட இம்முறை தமிழ்மக்களின் உரிமைகள் சில விட்டுக்கொடுக்கப்பட்டன என்றே சொல்லலாம்.


1. மாகாண சபைகளை அமைப்பது,
2.வட-கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழியை அமுலா-­ க்குவது,
3.சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பது. என்பன அடிப்படையாக இருந்தது. மொழி குறித்த விடயங்கள் விட்டுக் கொடுக்கப்பட்டதாகவே இருந்தது.


இவ்வொப்பந்தம் பிரிவினைவாதத்தின் முதற்படி­யென பிரச்சாரம் செய்தனர் எதிர்க் கட்சியினரும் பிக்குமாரும். அரசாங்கத்தைச் சேர்ந்த அமைச்சர்­களே நேரடியாக எதிர்க்கத் தொடங்கியதால் 1968இல் ஒப்பந்தம் கைவிடப்பட்ட­தாக அறிவிக்கப்­பட்டது. மீண்டும் ஏமாற்றப்பட்ட நிலையில் தமிழரசுக் கட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெற்றது.
இதன் பின்னர் தமிழரசுக் கட்சியின் போராட்ட வீச்சும் கீழிறங்கத் தொடங்கவே மறுபுறம் தீவிர போராட்டத்தை நோக்கி இளைஞர் இயக்கங்கள் தோற்றம் பெற்றன.


1970ஆம்ஆண்டு சிறிமா தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டதும்முதலில் செய்தது தரப்படுத்தல் முறையை அறிமுகப்படுத்தியது தான். அதனைத் தொடர்ந்து 1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களுக்கு இருந்த பெயரளவுப் பாதுகாப்பு கூட இல்லாது செய்யப்பட்டதுடன் சிங்கள பௌத்த கட்டமைப்­புக்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டது. இதே வேளை தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கை­களும் ஆங்காங்கு தொடங்கின. 1974ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாடு குழப்பப்பட்டு 9 பேர் கொல்லப்பட்டனர்.


1977 பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி ஐ.தே.க ஆட்சியிலமர்ந்ததும் நடந்த 1977 இனக் கலவரம் தமிழ் மக்களை அதிளவு பாதித்த கலவரமாக அமைந்தது. பயங்கரவாதத்தடைச் சட்டம், புலிகள் உட்பட தமிழ் இயக்கங்கள் தடை செய்யப்பட்டது. 1978 இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு தமிழ் மக்களின் உரிமைகள் பலவற்றைப் பறித்தது. 1981 ஆம் ஆண்டு இன்னொரு இனக் கலவரம் நாடெங்கிலும் இடம் பெற்றதில் தமிழ் மக்கள் மீண்டும் அவலங்களை அனுபவித்தார்கள். 1983 இனக்கலவரம் எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல் தமிழர்கள் கொலை செய்யப்பட்­டனர். பலர் சகலவற்றையும் இழந்து இந்தியாவுக்கு அகதிகளா­கப் போய்ச் சேர்ந்தார்கள். வெலிக்­கடையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.


இணைப்பு ”சி” திட்டம்
இந்த நிலையில் தான் கூட்டணி-இலங்கை அரசு-இந்திய அரசு என்பவற்றின் இணக்கத்தின் அடிப்­படையில் 1983 நவம்பர் 17இல் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் ஐந்து மாத கால பேச்சுவார்த்தை­யின் பயனாக ”இணைப்பு சி” திட்டம் தயாரிக்கப்­பட்டது.


இத்திட்டம் அடிப்படையில் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் கருத்துக் கணிப்பொன்­றின் மூலம் இணைந்து பிராந்திய சபை உருவாக்கப்­படலாம், முதலமைச்சர் ஜனாதிபதி­யால் நியமனம். குடியேற்றங்கள் விகிதா­சாரப்படி... போன்ற விடயங்­கள் அடக்கப்பட்டி­ருந்தன. இந்த உடன்படிக்கையை தயாரிப்பதிலும் நிர்ப்பந்திப்பதிலும் இந்திய அரசே கூடிய அக்கறை செலுத்தியிருந்தது. ஜே.ஆர்.உட­னடியாக உடன்ப­டாவிட்டாலும் வட்டமேசை மாநாட்டில் இதனை பேசுவதாகக் கூறி 1984 ஜனவரி 10இல் வட்டமேசை மாநாட்டை ஆரம்பித்தது.


இணைப்பு-ஏ:முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்­தைகள் பத்திரிகை அறிக்கைகள் அடங்கியது. இணைப்பு-பி:நிகழ்ச்சி நிரல், இணைப்பு-சி: தீர்வுக­ளைக் கொண்டது. மாநாட்டில் இது குறித்து பேச முன்பே எம்.ஈ.பி. அதிலிருந்து வெளியேறியது. பிரதான எதிர்க் கட்சி பெப்ரவரி 6இல் வெளிநடப்பு செய்தது. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஆதரித்த போதிலும் எதிர்ப்பின் மத்தியில் ஜே.ஆர் கூட யையெழுத்திடாத நிலையில் இது கைவிடப்பட்டது. இந்த ஏற்பாடுகள் தமிழ் தரப்பால் முன்வைக்கப்­படாத போதும் தமிழ் தரப்பு பரிசிலிக்கத் தாயாராக இருந்தது. அதனை ஏற்கவும் செய்தது. ஆனால் அழைத்த தரப்பே எதிர்த்து நின்றது.


வட்டமேசை மாநாடு
இந்தியா-இலங்கை ஆகிய அரசுகள் மேற் கொண்ட முயற்சியின் விளைவாக இரண்டாவது சபைத் திட்டம் ஒன்று வட்ட மேசை மாநாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. 1984 யூலை 23 ஜே.ஆரால் சமர்ப்பிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி பாராளுமன்ற­த்தில் 25 மாவட்டங்களினதும் பிரதிநிதிகளைக் கொண்ட ஒரு இரண்டாவது சபையை அமைப்பது என்றும் இந்த சபைகளுக்கான முதலமைச்சர்களை ஜனாதிபதியே தீர்மானிப்பார் என்றும் இதனுடைய அதிகாரங்களை மாநாட்டில் தீர்மானிக்கலாம் என்றும் பேசப்பட்டது. இத்திட்டத்தையும் மாநாட்டில் கலந்துகொண்ட எதிர்க் கட்சிகள் யாவும் ”இது தென்னிந்தியாவின் தலையீட்டை ஏற்படுத்தும் முயற்சி” என்று கூறி நிராகரித்தன. இம் முயற்சியும் கைவிடப்பட்டது.


1985 திம்பு மாநாடு
இந்தியாவுக்குச் சென்று கூட்டணியினர் ஒரு புறமும் ஜே.ஆர் மறுபுறமுமாக பேச்சு வார்த்தை நடாத்தியதைத் தொடர்ந்து இந்தியாவின் ஏற்பாட்­டின் போரில் பூட்டான் தலைநகரான திம்புவில் 1985 யூலை 8 அன்று ஐந்து தமிழ் இயக்கங்களும் கூட்டணியும் சேர்ந்து இலங்கை அரசின் பிரதிநி­தியாக கலந்து கொண்ட ஜே.ஆரின் சகோதரர் எச்.டபிள்யு. ஜயவர்த்தனாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
அதன்படி,
1.தமிழர்களை ஒரு தனித் தேசிய இனமாக அங்கீகரித்தல்.

2. தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல்.

3. தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல்.

4. இலங்கையிலுள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை

இக்கோரிக்கைகள் ஜே.ஆரால் நிராகரிக்கப்­பட்டன. அத்துடன் இலங்கையில் நூற்றுக்கணக்­கான தமிழர்கள் படையினரால் கொலை செய்யப்­பட்ட சம்பவமும் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் இயக்கங்கள் வெளிநடப்பு செய்தன. பேச்சு வார்த்தையும் முறிந்தது.


டில்லிப் பேச்சுவார்த்தை
திம்புப் பேச்சுவார்த்தை முறிவடையாமல் தொடர்வதற்காக இந்தியா தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து பேச முற்பட்ட போதும் அவை அதனை தட்டிக்கழித்தன. இதே வேளை இலங்கை அரசின் பிரதிநிதி எச்.டபிள்யு.ஜயவர்தனா இன்னொரு திட்டத்தை சமர்ப்பித்தார்.


இத்திட்டத்தின்படி வட பகுதியில் ஒரு மாகாண சபை அமைக்கப்படும். ஆனால் கிழக்­கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படும். வட கிழக்கை துண்டா­டும், குறைந்த அதிகாரங்களைக் கொண்டதுமான இந்தத் திட்டத்தை போராளி இயக்கங்கள் நிராகரித்தன. அதே வேளை கூட்டணி வடக்கு கிழக்கு மொழிவாரியாக இணைந்த சமஷ்டி வடிவிலான மாநிலமொன்று உருவாக்குவது தொடர்பான திட்டத்தை டில்லியில் முன்வைத்தது. 1986 ஜனவரி 30இல் இத்திட்டத்தை இலங்கை அரசு முற்றாக நிராகரித்தது.


சிதம்பரம்-ஜெயவர்தனா யோசனை
1986 ஏப்ரலில் இலங்கை வந்த இந்திய அமைச்சர் சிதம்பரம் நட்வார்சிங் ஆகியோர் ஜனாதிபதியுட­னும் கூட்டணியுடனும் பேச்சுவார்த்தை நடாத்தியது. இதன்படி இலங்கை அரசால் உருவாக்கப்பட்டு இந்திய அரசிடம் கையளிக்ப்பட்ட திட்டத்தின சாராம்சமாக...

1. இலங்கையின் ஒற்றையாட்சிக்கும் இலங்கையின் அரசியலமைப்பு வடிவத்தக்கு உட்பட்டதாக அதிகாரப் பரவலாக்கம்.

2. வடக்கு கிழக்கு பரஸ்பரம் அக்கறையுள்ள விடயங்களில் இணைந்து செயற்படுவதற்குரிய அமைப்பு ரிதியான ஏற்பாடுகள். (இதன் உள்ளர்த்தம் வடக்கு கிழக்கு இணைப்பு இருக்காது)

இத்திட்டம் குறித்த பேச்சுவார்த்தை இழுபறிப்­பட்டு இணக்கம் ஏற்படாத நிலையில் இறுதியில் கைவிடப்பட்டது.
பெங்கர் பேச்சுவார்த்தை

1986 நவம்பரில் பெங்களூரில் நடத்தப்பட்ட சார்க் மாநாட்டிற்கு சென்றிருந்த வேளை ஜே.ஆர் ராஜிவுக்கிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கை அரசு முன்வைத்திருந்த மாற்று யோசனைகளின்படி கிழக்கு மாகாணத்தை மூன்று மாகாணங்களாகப் பிரிக்கும் யோசனை முன்வைக்­கப்பட்டது. இவ் யோசனை இணக்கம் கான்பதற்காக பிரபாகரனை அழைத்து எம்.ஜீ.ஆருடனும் ராஜிவு­டன் ஜே.ஆரும் பேசிய போதும் (குறிப்பாக வடக்கு கிழக்கு துண்டாடல்) இதில் இணக்கம் காணப்படாத நிலையில் இம் முயற்சி தோல்விய­டைந்தது.


இலங்கை-இந்திய ஒப்பந்தம்
இலங்கை அமெரிக்காவுடனான உறவை பலப்ப­டுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தியாவின் கவனத்தை அதிகரித்தது. இலங்கையின் மீது சட்டரிதியான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழ்த் தேசியப் போராட்டத்தையும் இயக்கங்களையும் பயன்படுத்த விளைந்தது. 1987 மே 26 இல் ”ஒப்பரேஷன் லிபரேஷன்” எனும் வடமராட்சித் தாக்குதலையும் பொருளாதாரத் தடையையும் விதிக்கத் தொடங்கிய போது தமிழ் பிரதேசங்களில் யுத்த விமானங்களின் மூலம் உணவுப் பொருட்க­ளைப் போட்டு இலங்கை அரசை எச்சரிக்கை செய்ததோடு இலங்கை அரசு இந்திய அரசிடம் அடிபணிய நேரிட்டது. இதன் விளைவு இனப் பிரச்சினையை தீர்க்கத்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தியாவைப் பொறத்தளவில் இலங்கை அரசிட­மிருந்து அமெரிக்கா கால் பதிக்காத வண்ணம் இவ்வொப்பந்தத்தின் மூலம் இலங்கை அரசிடமிரு­ந்து கையெழுத்தில் உத்தர­வாதம் வாங்கிக் கொண்டதன் மூலம் அதன் நோக்கத்தை நிறைவேற்­றியது. இலங்கை அரசாங்­கத்தைப் பொறுத்தளவில் தென்னிலங்கையில் ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்க அவகாசத்தையும் வடக்கில் தமிழ் இயக்கங்களை சரணடையச் செய்வதிலும் வெற்றி கண்டது. தமிழ் இயக்கங்க­ளைப் பொறுத்தளவில் இவ்விரு அரசுகளினதும் தலைமையிலிருந்த நபர்களை நம்பி ஆயுதங்க­ளைக் களைந்து சரணாகதியானது. மாகாண சபையையும் ஏற்றுக் கொண்டது. தாம் ஏமாற்றப்­பட்டமையை மாகாணசபை அனுபவமும் இந்திய இலங்கை அரசுகளின் நடவடிக்கைகளின் மூலமும் காலங்கடந்தே உணர்ந்தன. புலிகள் இயக்கம் இவ்வியக்கங்கள் மீது மேற்கொண்ட தடை, வேட்டையாடல் என்பன அவர்களை அரசின் விசுவாசிகளாகவும் பின் புலி எதிர்ப்பாளர்களாகவும் மாறி இறுதியில் போராட்டத்தையே விற்றுப்பிழை­க்கும் துரோகமிழைக்கும் கும்பல்களாகிப் போனார்கள்.

மொத்தத்தில் இந்திய-இலங்கை அரசுகள் வெற்றி கண்டன. தமிழ் இயக்கங்கள் மண் கவ்வின.


பிரேமதாச-புலிகள் பேச்சுவார்த்தை
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் மூலம் இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்தியப் படையினரை, தான் ஆட்சிக்கு வந்தால் விரட்டி விடுவதாகக் கூறி ஆட்சிக்கமர்ந்த பிரேமதாசா, வடக்கில் இருந்த படையினரை தென்னிலங்கைக்கு திசை திருப்பி ஜே.வி.பி.யினரையும் அழித்துவிடக் கூடிய வகையில் போடப்பட்ட திட்டம் தான் புலிகள் -பிரேமதாசா பேச்சுவார்த்தை. பிரேமதாச எதிர்பார்­த்தபடி இந்தியாவை ஆத்திரமூட்ட புலிகளுடன் பேச்சுவார்த்தையை நடாத்தி, அந்தக் காலப்பகு­திக்குள் படையினரை தென்னிலங்கக்கு வரவழை­த்து ஜே.வி.பி.யினரை வேட்டையாடிக் கொன்றொழி­த்தது. இந்திய படையினரை விரட்டியது. இந்தியப்படையை எதிர்க்கவென பிரேமதாச, புலிகளுக்கு ஆயுதம் பணம் என்பவற்றையும் வழங்கினார்.


பிரேமதாசவுடனான பேச்சுவார்த்தையின் போது முக்கியமாக இந்தியப் படையினரை வெளியேற்று­வது, வடகிழக்கு மாகாண சபை கலைக்கப்படுவது, 6வது திருத்தச் சட்டத்தை நீக்குவது என்பவை முக்கிய கோரிக்கைகளாக இருந்தன. ஆனாலும் இக்காலப்பகுதிக்குள் புலிகள் தங்களை பலப்ப­டுத்திக் கொள்ள சிறந்த அவகாசத்தையும் இந்தியப் படையினரை அனுப்புவதிலும் வெற்றி கண்டது. பிரேமதாசவின் நோக்கமும் நிறைவேறி­யது. மற்றும்படி மாகாணசபை, 6வது திருத்தச் சட்டம் எல்லாமே ஒரு எதிர்பார்ப்பின் அடிப்படையில் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இரு தரப்பினரதும் நோக்கங்கள் நிறைவேறியதும் பாதுகாப்பமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன புலிகள் ஆயுதத்தை கீழே போடும்வரை மாகாண சபை தேர்தல் நடக்காது என்று மிரட்டினார். இந்த 14 மாத கால பேச்சுவார்த்தை இறுதியில் 1990 மே 7 படையினரின் ஷெல் தாக்குதலினால் 12 மாணவிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து படையினருக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இந்தப் பேச்சுவார்த்தையைப் பொறுத்தளவில் அடிப்படை­யில் பிரேமதாச அரசாங்கம் கூட தனது நலன்களுக்­காகவே இப்பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தியது.

தெரிவுக்குழு

பிரேமதாசவினால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கென பாராளுமன்றத் தெரிவுக்குழுவொ­ன்று நியமிக்கப்பட்டது. இதனை அமைப்பதற்கான யோசனையைக் கொண்டு வந்திருந்த ஸ்ரீ.ல.சு.க. உறுப்பினர் மங்கள முனசிங்கவே இதன் தலைவரா­கவும் நியமிக்கப்பட்டார். புலிகள் இயக்கம் தவிர்ந்த ஏனைய தமிழ் இயக்கங்கள் கலந்து கொண்ட இக்குழுவின் யோசனகளை எதிர்க்கட்சியும், ஏனைய சிங்கள அமைப்புகளும் பலமாக எதிர்த்து வந்ததி­னால், இது இரண்டு வருடங்கள் இழுத்தடிக்கப்பட்ட நிலையில் தமிழ் அமைப்புக்கள் ஒவ்வொன்றாக வெளியேறின. இறுதியில் இவ்வமைப்பு செயலிழந்து போனது தான் மிச்சம்.


புலிகள்-பொ.ஐ.மு பேச்சுவார்த்தை
பிரேமதாச 1993 மே தினத்தன்று கொல்லப்பட்ட­தன் பின் பதவியேற்ற டி.பி.விஜேதுங்க தமிழ் மக்களுக்­கெதிரான சிங்களப் பேரினவாத பிரச்சார­ங்களை செய்து வந்தார். இது 1994 பொதுத் தேர்தலின் போது சந்திரிகா தலைமையிலான பொ.ஐ.மு.வுக்கு சாதகமானவற்றில் ஒன்றாக மாறியது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, பேச்சுவார்த்தை, சமாதானம் என்ற கோஷங்களுடன் பதவியிலமர்ந்த பொ.ஐ.மு புலிகள் இயக்கத்துடன் பேச்சுவார்த்தையை தொடக்கியது. இப் பேச்சுவார்­த்தையின் போது முக்கியமாக அத்தியாவசியப் பிரச்சினைகள் அரசியல் பிரச்சினைகள் என்ற இரு கட்டங்கள் என்ற வகையில் அமைந்திருந்தது. இது நடந்து கொண்டிருக்கும் போதே அரசு யுத்தத்தி­ற்கான படை சேர்ப்பு, தளபாடக் கொள்வனவு என்பவற்றைச் செய்ததுடன், உறுதி கூறியபடி பொருளாதாரத் தடைகளை முற்றாக நீக்காமல் போக்குக் காட்டியது. அரசின் இந்த அணுகு முறை குறித்து எச்சரிக்கை செய்திருந்தும் சந்திரிகா அரசாங்கம் அலட்சியமாக இருந்ததைத் தொடர்ந்து இப்பேச்சுவார்த்தையும் முறிந்தது. 1995 ஏப்ரல் 24ஆம் திகதி 3வது ஈழ யுத்தம் ஆரம்பமானது.


ஒட்டுமொத்தத்தில் நியாயமான உரிமைகளை வழங்குவது என்ற நோக்கிலல்லாமல் தமது நலன்களுக்காக மாத்திரமே பேச்சுவார்த்தை, தீர்வு முயற்சி, உடன்படிக்கை (அல்லது திணிப்பு) என்றெல்லாம் பம்மாத்து விடுவதும் அதே சந்தர்ப்பவாத நலன்களுக்காக எதிர்த்தரப்பில் இருக்கும் கட்சி ஆளுங்கட்சி கொண்டுவருவன­வற்றையெல்லாம் எதிர்ப்பதும் இன்று சலித்துப்போன ஒன்று. இன்றைய நிலையில் தொடர்ச்சியாக ஏமாற்­றப்பட்டுவந்துள்ள தமிழ் மக்களின் மீது புறையோடிப்­போயுள்ள சந்தேகங்களுக்கும், எச்சரிகைக்கும் நியாயமான காரணங்கள் உண்டு தமது கறை படிந்த கரங்கள் இன்று சுத்தமானவை தான் என்பதை நிரூபிக்கவேண்டிய வேண்டிய தார்மீக பொறுப்பும், கடமையும் அரசுக்கே உள்ளது.


கடந்த கால ஏமாற்றங்கள் ஒன்றும் நபர்களால் ஏமாற்றப்பட்டதல்ல. ஒரு பண்டாரநாயக்கவோ, ஜே.ஆரோ, பிரேமதாசவோ அல்ல இங்கு பிரச்சினை. மாறாக இந்த கட்ட­மைப்பே. இந்த சிங்கள பௌத்த கட்டமைப்புக்கு எவர் தலைமை தாங்கினாலும் இது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது. இதனைக் களைவதே உண்மையில் தீர்வை உண்மையில் நேசிக்கும் சக்­திகள் கடக்க வேண்டிய முன்நிபந்­தனையான விடயம். வரப்போகும் ”சுதந்திர தினத்”திலாவது போதாவது சிங்களப் பௌத்தம் தன்னை மீட்டுப் பார்க்குமா? தமது குறைகளைக் களையெடுக்குமா? அல்லது சிங்கள தமிழ் மக்களின் இடைவெளி மேலும் விரிசலடைய வழிவகுக்குமா என்பதே இன்றைய கேள்வி..

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More