துஸ்யந்தி
தமிழீழ விடுதலை போராட்டத்தின் மிகவும் அரசியல் திருப்பகரமான கட்டத்திலேயே ஏக பிரதிநிதித்துவம் எனும் முழக்கம் அரங்கிற்கு வந்தது. ”தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு ஈழத்தமிழரின் ஏக பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும்” என்பது விடுதலை புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மாத்திரமல்ல, அதுவே ஈழத்தமிழர் அனைவரதும் பொது நிலைப்பாடாயுமுள்ளது. தமது இந்நிலைப்பாட்டை 2001 டிசம்பர் பொதுத் தேர்தலில் ஈழத்தமிழ் மக்கள் உலகுக்கு பகிரங்கமாக அறிவித்து விட்டனர்.
இவ்வாறானதொரு நிலைப்பாடு தமிழீழ விடுதலை போராட்டத்தில் உருவானது வெறுமனே விடுதலை புலிகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக அல்ல. அதற்கு பின்னால் ஆழமான அரசியல், இராஜதந்திர காரணிகள் வேரோடியுள்ளன. விடுதலை புலிகள் அமைப்பை தவிர ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகள் சந்தர்ப்பவாத சமரச அரசியல் நிலைப்பாட்டினை இன்றுவரை கொண்டிருப்பது யாரும் அறிந்த உண்மையாகும். 1994 சந்திரிகா தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது (அதற்கு முன்னரான யு.என்.பி. ஆட்சியிலும்) இந்த அரசியல் அமைப்புகள் தாமும் தமிழரின் பிரதிநிதிகள், தம்மையும் பேச்சுவார்த்தைகளில் இணைக்க வேண்டும் என கூறி வந்தனர்.
2000 ஏப்ரல் ஆனையிறவு படைத் தளத்தை விடுதலை புலிகள் கைப்பற்றியதுடன் அரசியல் சமநிலை விடுதலை புலிகளுக்கு சாதகமாக மாற்றமடைய இவர்களும் தமது நிலைப்பாடுகளை அவசர அவசரமாக மாற்றிக் கொண்டு தம்மை விடுதலை புலிகளினதும் ஈழத் தமிழர்களினதும் ஈழத்தமிழரினதும் நலன் காப்பவர்களாக காட்டத் தொடங்கினார்கள்.
இந்த அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் தனித்தனியே சர்வதேச அரசியல் தொடர்புகள் உண்டு. இவர்கள் தமது நலன் சார்ந்து எந்த அந்நிய சக்திகளின் நலன்களுக்கும் ஏற்ப செயற்படக் கூடியவர்கள்.( கடந்த காலம் இதை நிரூபித்து வந்துள்ளது). மக்கள் வாக்குகளால் பாராளுமன்றத்தில் இடம் பிடித்துக் கொண்டிருக்கும் இவர்கள் எதிர்காலத்தில் ஈழப்போராட்டத்திற்கு விசுவாசமாக செயற்படுவார்கள் என்பது நிச்சயமில்லை. இவர்களை பயன்படுத்தி தமது நலன்களை முன்னெடுக்கவென்றே அந்நிய சக்திகள் முயற்சித்து வருகின்றன. ”விடுதலை புலிகளை மாத்திரம் நாம் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக கொள்ள முடியாது” என அமெரிக்க உதவி அரசு செயலர் கிறிஸ்டினா ரொக்கா கூறியதன் பின்புலத்தை இதனுடன் தொடர்புபடுத்தி பார்க்கலாம். அதேபோல் தமிழர் விடுதலை கூட்டணி முதல் வரதராஜ பெருமாளை ஒரிஸாவில் சிறப்பு விருந்தினராக ஊட்டி வளா;த்து வந்தது வரையிலான இந்திய அரசின் நோக்கங்களும் புரிந்துகொள்ளக் கூடியதே.
இந்நிலையில், இத்தகைய சந்தாப்பவாத அரசியல் சக்திகளை ஈழத்தமிழரின் பிரதிநிதிகளாக அடையாளப்படுத்துவது தற்கொலைக்கு ஒப்பானதாகும். இவர்களைக் கொண்டு அந்நிய சக்திகள் தமது சொந்தத் திட்டங்களை முன்னெடுக்க விடாது விடுதலையை பாதுகாக்க வேண்டுமானால் விடுதலை புலிகள் ஈழத்தமிழரின் ஏக பிரதிநிதிகளாக அடையாளம் பெறுவது இன்றைய நிலையில் அவசியமானதாகும். இந்த பின்புலத்திலேயே இன்று ஈழத்தமிழர் அரசியல் அரங்கில் ஒலிக்கும் ஏக பிரதிநிதித்துவம் எனும் கொள்கையை பார்க்க வேண்டும்.
ஒரு விடுதலைப் போராட்டத்தைப் பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள ஏகபிரதிநிதித்துவம் எனும் கொள்கையை சிலர் துஷ்பிரயோகம் செய்ய விளைந்துள்ளனர்.
கடந்த மேதின செய்தியில் இ.தொ.க. தலைவர் ஆறுமுகம் தொண்டமான் ”பிரபாகரனால் அங்கீகரிக்கப்பட்ட மலையக தமிழரின் ஏக பிரதிநிதி நானே” என குறிப்பிட்டிருக்கிறார். இதன் அர்த்தம் என்ன?
சிங்கள இனவெறியால் நசுக்கப்படும் மலையக தமிழர்கள், அந்த இனவெறியை எதிர்த்து முன்னெடுக்கப்படும் தமிழீழ விடுதலை போராட்டத்தை உணர்வு பூர்வமாக ஆதரிக்கின்றனர்.
அப்போராட்டத்தை முன்னின்று நடாத்தும் விடுதலை புலிகளையும் அதன் தலைவர் பிரபாகரனையும் நேசிக்கின்றனர். அவர் மீது மிக்க மதிப்பு வைத்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளுக்கும் மலையக தமிழர்ளுக்கும் இடையிலான உறவு, பிரபாகரனுக்கும் மலையக தமிழர்களுக்குமிடையிலான உறவு முற்றிலும் அரசியல் தார்ப்பரிமிக்க உறவாகும்.
ஆனால் ஆறுமுகம் தொண்டமானோ சோவினிசத்தினால் அடக்குமுறைக்குள்ளாகும் இரு தேசங்களுக்கிடையிலான உறவிற்கு பின்புலமாயிருக்கும் அரசியல் காரணிகளின் அரிவரிகளையே புரிந்துகொள்ளாது அதே கங்காணி கலாச்சாரத்துடன் அரசியல் நடாத்திடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார். விடுதலை புலிகளுக்கும் மலையக தமிழர்களுக்குமிடையிலுள்ள அரசியல் பிணைப்பை இ.தொ.க.வும் ஆறுமுகம் தொண்டமானும் தமது குறுகிய அரசியல் நலன்களுக்காக பயன்படுத்திக்கொள்ள முயல்கின்றனர். பெரியதுரை அப்படிச் சொன்னார்... சின்னதுரை இப்படிச் சொன்னார் என துரைமாரைக்காட்டி தொழிலாளரை இயக்குவிக்கும் கங்காணியின் அடிமைத்தன சிந்தனை முறையைத்தான் ஆறுமுகம் அரசியலிலும் கடைபிடிக்கிறார். மலையக தமிழரின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்தும் ஏக குத்தகை முதலாளியாக இருந்து இம்மக்களை தொடர்ந்தும் தமக்கான வாக்களிக்கும் அடிமைகளாக வைத்திருப்பதற்காக, மலையக தமிழரின் அன்புக்குரிய பிரபாகரனின் பெயரை ஆறுமுகம் தேவையற்று உபயோகித்திருப்பது கண்டிக்கத் தக்கதாகும. அடிப்படையில் இரு தேசங்களுக்கிடையிலான அரசியல் உறவை அசிங்கப்படுத்திய குற்றத்தை ஆறுமுகம் செய்திருக்கிறார்.
மலையக தமிழர் என்போர் தனியான தேசம். தாம் எத்தகைய அரசியலை முன்னெடுப்பது, தமக்கான அரசியல் தலைமை யார் என்பதை தீர்மானிப்பது அனைத்தும் மலையக தமிழர் சார்ந்த விடயமாகும். இது சமூகத்தின் ஒவ்வொரு சாதாரண பிரஜையும் நன்கறிந்த அரசியல் அரிவரியாகும்
. மலையக தமிழரின் தலைவர் என கூறிக்கொள்ளும் ஆறுமுகம் தொண்டமானுக்கு இந்த உண்மை தெரியாது போனதெப்படி? இதிலிருந்து ஒரு தலைமையாக செயற்படும் தலைமையை ஆறுமுகம் இழந்துவிட்டிருப்பது தானனே தெரிகிறது.
ஆறுமுகம் போன்றே முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும் தன்னை வடக்கு கிழக்கு முஸ்லீம்களின் ஏக பிரதிநிதியாக சித்தரித்து வருகிறார்.
மலையக மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிறுபான்மை தேசங்களின் கூட்டுக்குள் இருப்பதால் மிக இலகுவாக ஏகபிரதிநிதித்துவ கொள்கையை தாமும் கடைபிடித்திடலாம் என நினைக்கிறார்கள். ஏகபிரதிநிதித்துவ கொள்கையை சிறுபான்மை தேசங்களின் அரசியலின் வகைமாதிரியாக்க முனைகிறார்கள். இது எத்தனை அபத்தமானது?
தமிழீழ விடுதலை போராட்டத்தில் இன்று கடைபிடிக்கப்படும் ஏகபிரதிநிதித்துவம் எனும் கொள்கையானது தற்காலிகமானதுதான். அதுவே ஈழத்தமிழர் அரசியலில் நிரந்தரமானதல்ல. எதிர்காலத்தில் பல்வேறு தேசபக்த சக்திகளும் சுதந்திரமாக தேச அரசியலில் பங்குபற்றும் ஜனநாயக தன்மை நோக்கி அது நகர்வதுதான் இன்று மேற்கொண்டிருக்கும் சரியான நிலைப்பாட்டின் மிகச்சரியான தொடர்ச்சியாக இருக்கமுடியும்.
தெற்காசிய சமூக வாழ்வில் ஜனநாயகம் என்பது சமூகத்தின் எந்த கூறிலும் கடைபிடிக்கப்படாத, இல்லாத ஒன்றாகவே இருக்கிறது. இச்சமூகங்களில் ஜனநாயகம் என்பது அரசியல் அரங்கிற்கூடாகத்தான் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட வேண்டியதாக இருக்கிறது. அதிலும் விடுதலை போராட்ட அரசியலுக்கூடாக மேலும் உயர்ந்த பண்பில் ஜனநாயகம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்திட முடியும். அரசியல் தளத்தில் ஜனநாயகத்திற்கான கதவுகள் அடைக்கப்படுமாயின் சமூக வாழ்வு மேலும் இறுக்கமானதாக, வன்முறையும் அதிகாரத்துவ அடக்குமுறைகளும் மிக்கதாக மாறும். எனவே ஏகபிரதிநிதித்துவ அரசியல் கொள்கையானது ஜனநாயக அரசியல் கொள்கைக்கு என்றும் எதிரானதாகவே இருக்கிறது.



0 comments:
Post a Comment