Slideshow

தானா

வ.ஐ.ச.ஜெயபாலன் தானாவை பார்த்தேன் ஒருவருள் ஒருவர் பாய்ந்த தருணத்தில். கண்டதில்லையா நீங்கள் தானாவின் மனசு பற்றும் நிர்வாணம். அந்தக் கண்ணாடி மேனியில் என் ஆத்ம முகத்தை அடைந்திருந்தேன். துருவத்துப் பனி ஆறு என அலட்சியம் செய்து விடாதீர்கள். தானாவைத் தொடு கணத்தில் தாடி வெண்மயிர் கறுக்க எதிர் விதியில் மிதந்தேனே. நதி கால வெளியில் இருப்பதை முன்னும் வாழ்வதைப் பின்னுமாக அடித்துச் செல்கிறது. கொம்புகள் உரசிச் சடசடக்கும் பனி மான்களோடு முன் நகரும் சறுக்கு வண்டி. அங்கிருந்து காலம் உடைய நாற்புறமும் பாய்கிறது ஒரு லாப்பியனின் பாடல். நூற்றாண்டு முன்னாடி துப்பாக்கியும் பைபிளுமாய் வந்து யேசுவையே மீண்டும் சிலுவை அறைந்தவர்களால் கொல்லமுடியாது போன பாடல் அது. சமிக்ஞை மொழியாக தொலைந்த சந்ததிகளை தேடுகிறது அப்பாடல். தறிபட்ட கலாச்சாரத்தின் விதை அது. நதிகளின் ஆழத்திலிருந்து மீழ்கிறது தலை மறைந்த வாழ்வு தானாவின் சரளைக் கற் கரைகளில் என் அகதி மனசு சிந்துகிறது. எல்லைகள் நூறு தாண்டினாலும் என்னைச் சூழ எரிகிறதே யாழ் நூலகம். பாலி ஆற்றம் கரைகளில் பாடும் மீன் வாவியில் பசும் ஆதிசேடனாகப் படமெடுக்கும் தேயிலை மலைகளில் முட்டாக்கு தலை மறைத்து முழு நிலவு கவிபாடும் வயல் வெளிகளில் அலைகிறது எம் மூதாதையரின் பாடல் பூமிப்பந்தின் புழுதியான எம்மை கூவி அழைத்தபடி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More