Slideshow

சுவிஸில் பெண்கள்: சம உரிமைக்கான போராட்டம்!

ஜயந்தி மாலா
சுவிற்சர்லாந்தின் சமஷ்டி அரசானது பெண்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை ,அங்கீகரிக்காததனாலும், தீர்மானங்களை எடுப்பதில் ஆண் ஆதிக்க மரபுவழிச்; சமூகமும், கிறிஸ்தவமதவாதமும் பெண்களைத் தவிர்த்து வந்ததனாலும் 1887 முதல் சுவிஸ்பெண்கள் தமது ,உரிமைகளுக்காகப் போராடி வருகின்றனர். மத்திய ஐரோப்பிய, வடஐரோப்பிய நாடுகளுடன் ,ஒப்பிடும்போது மிகப்பிந்திய காலங்களில்கூட அவர்கள் கடுமையான போராட்டங்களை நடாத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். 1848ம் ஆண்டு சமஷ்டி அரசின் நவீன அரசியல் அமைப்பு வாக்குரிமைக்கான உத்தரவாதத்தினைக் கொண்டிருந்தபோதும் அந்த உரிமையானது ஆண்களுக்கு மட்டுமே உரித்தாக்கப் பட்டது. பெண்கள் வாக்களிக்கின்ற உரிமையற்றவர்களாக அதாவது அடிப்படை ஜனநாயக உரிமைகளுள் ஒன்றான அரசியல் உரிமை அற்றவர்களாக அரசியல் அமைப்பின் மூலம் புறக்கணிக்கப்பட்டனர். தொழில் அடிப்படையில்கூடப் போதுமான கல்வித் தகைமைகளைப் பெண்கள் கொண்டிருந்த போதும், அதற்கான தொழில்சார் பதவிகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. சுவிஸில் சட்டத்துறைப் பட்டத்தினைப் பெற்ற முதலாவது பெண்ணான Emile Kempin -Spiry சட்டத்தரணியாகத் தொழில் புரிவதற்கு அனுமதி மறுக்கப் பட்டது. இதனை ஆட்சேபித்து சூரிச் உயர்நீதி­மன்றத்திற்கு முன்னால் அவர் ஜனநாயகப் போராட்டம் நடாத்தியபோதும், அவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1887ல் நடாத்தப்பட்ட இந்தப்போராட்டமே சுவிற்சர்லாந்தின் வரலாற்றில் பெண்களின் சமஉரிமையை வலியுறுத்தி இடம்பெற்ற முதலாவது போராட்டமாகும். தமது அடிப்படை, ஜனநாயக, மனித உரிமைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் தமது வாக்குரிமை அங்கீகரிக்கப்பட்டுத் தாம் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவேண்டும் என்பதை உணர்ந்த பெண்கள் தொடர்ந்தும் வாக்குரிமைக்கான போராட்டங்களை நடாத்தினர். இதன் அடிப்படையில் 1909ம் ஆண்டு பெண்களின் வாக்குரிமைக்கான அமைப்பு உருவாக்கப்பட்டதுடன் பெண்கள் அரசியல் ரீதியான போராட்டத்திலும் காலடிஎடுத்து வைத்தனர்.1929ல் பெண்களின் வாக்குரிமைக்கான மனு முன்வைக்கப்பட்ட போதும் அது ஒரு பிரச்சார நடவடிக்கை­யாக மட்டுமே வெற்றியளித்தது. அரசியல் ரீதியில் அது ஏற்படுத்திய தாக்கம் மிகக் குறைவாகவே இருந்தது. 1945ல் சமஷ்டி அரசியல் அமைப்பில் குடும்பப் பாதுகாப்­புப்பிரிவு இணைக்கப்பட்டதுடன் இது பெண்களுக்கான பிரசவக்காப்புறுதி ஒன்றையும் வலியுறுத்தியது. இன்று 60 ஆண்டுகளை எட்ட இருக்கின்ற நிலை­யிலும் இந்தப்பிரசவக்காப்புறுதி இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. இதற்காகத் தொடர்ச்சியான போராட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. சுவிஸ் சமஷ்டி அரசியல் அமைப்பா­னது எந்தவொரு சமூக, பொருளாதார, அரசியல் நடவடிக்கைக்கும், தேசிய, மாநில, பிரதேச மட்டத்தில் சர்வஜன வாக்கெ­டுப்பை வலியுறுத்துகின்றது. மேலெழுந்த­வாரியாக ஜனநாயகச் செயற்பாடுகளின் ஒரு முக்கிய அம்சமாக இது தெரிகின்றபோதும் உண்மையில் அதற்கு மாறாக, நியாயமான உரி­மைகளை மறுப்பதற்கு சர்வஜனவாக்­கெ­­டுப்பு பலதடவைகளில் பயன்படுத்­தப்பட்டு வந்துள்ளது. ஆண்களின் கரங்களில் வாக்குரிமை இருந்தகாலங்களில் மட்டுமன்றி இந்தப்போக்கு இன்றுவரைத் தொடர்கின்றது.1959ல் பெண்களின் வாக்குரிமையை அங்கீகரிப்பதற்கான சர்வஜனவாக்கெடுப்பு முதன்முதலாக நடாத்தப்பட்டது. கிறிஸ்த­வமத மரபுவாத ஆண் ஆதிக்கச்சக்திகள் தங்களிடம் மட்டுமே இருந்த வாக்குரி­மையைப் பயன்படுத்திப் பெண்களுக்கான வாக்குரிமையை மறுத்தனர். 20ம் நூற்­றாண்டில் சர்வதேசத்தினை உலுப்பிய கடைந்தெடுத்த ஆண்ஆதிக்கச் செயற்பா­டாக இது பதிவாகியது. பெண்களுக்கான உரிமைகளைத் தீர்மானிப்பதில் எந்த உரிமையும் ஆண்களுக்கு இல்லாதபோதும், தம்மால் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பின் ஊடான சர்வஜனவாக்கெ­டுப்பைப் பயன்படுத்தி இந்த ஜனநாயக மறுப்பை மேற்கொண்டனர்.புதிய பெண்கள் இயக்கம் என்ற அமைப்பு 1968ல் உருவாக்கப்பட்டது. முன்னைய பெண்கள் அமைப்பிலிருந்து வேறுபட்ட ஒன்றாக தன்னை அறிவித்த இந்தஅமைப்பு பெண்களின் சமஉரிமைப் போராட்டத்தினை மற்றைய பெண்கள் அமைப்புக்களுடன் இணைந்து முன்னெ­டுத்­தது. இவ்வாறான தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக 1971ல் சமஷ்டி அரசில் தமது வாக்குரிமையைப் பெண்கள் வென்றெடுத்தனர். இந்த ஆண்டு இடம் பெற்ற சுவிஸ் பாராளுமன்றத்தின் தேசியசபைக்கான தேர்தலில் பத்துப்பெண் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். 200 பிரதிநிதிகளைக்கொண்ட தேசிய சபையில் இதன்மூலம் 5வீதமான பிரதிநி­தித்துவம் பெண்களுக்குக் கிடைத்தது. இந்தநிலையானது 1976ல் பெண்களின் சமஉரிமைகளுக்கான சமஷ்டி ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படு­வதற்கு வழிவகுத்தது. இதுவே பெண்களின் சம உரிமைகளைப்பேணும் வகையில் சுவிஸில் அமைக்கப்பட்ட முதலாவது அரச அமைப்பாகும். இதேஆண்டில் பெண்கள் கருவுற்று 12வாரங்களுக்குள் கருக்கலைப்புச் செய்வதைச் சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்­பட்டது. அப்போது கருக்கலைப்புச் செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. கருக்கலைப்பைச் சட்டரீதியாக்கு­வதற்கு 1977ல் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. இதனை எதிர்த்து வாக்களித்ததே இதற்குக் காரணம். 1971ல் சமஷ்டி அரசினால் பெண்களுக்கான வாக்குரிமை அங்கீகரிக்­கப்­பட்டிருந்தபோதும் மாநில அரசுகளால் இது அங்கீகரிக்கப்படவில்லை. 1978ல் சுவிற்சர்லாந்தின் 26வது மாநிலமாக உரு­வாக்­கப்பட்ட துரசய மாநிலமே முதன்முதலில் பெண்களுக்கான வாக்குரிமையை அங்கீகரித்தது. இதற்குப்பின்னரும் முழுமாநிலங்களும் இதனை அங்கீகரிக்க மேலும் 12ஆண்டுகள் பெண்கள் போராட வேண்டியிருந்தது. 1990ல் கடைசிமாநிலமாக Appenzell- Innerhoden மாநிலம் பெண்­களின் வாக்குரிமையை அங்கீகரித்தது. ஆண்-பெண் சமஉரிமையை அங்கீக­ரிக்கும் அரசியல்அமைப்பத் திருத்தம் 1981ம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பின்மூலம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதனைஅடுத்து சமஷ்டிப் பேரவை எனப்படும் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட சுவிஸ் அமைச்சரவைக்கு முதன்முதலாக ஒருபெண் வேட்பாளர் போட்டியிட்டார். எனினும் Lilian Uchten hagen என்ற அந்தப்பெண் வெற்றிபெறவில்லை. பாராளுமன்றத்தின் 200 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சபையிலும், 46 உறுப்பி­னர்­களைக் கொண்ட மாநிலங்கள் சபை­யிலும் ஆண்கள் அறுதிப்பெரும்பான்மை யினைக் கொண்டிருந்தமையினால் இவரைத் தோல்வியுறச் செய்தனர். 1983ல் இடம் பெற்ற இச்சம்பவத்திற்காகப் பாராளுமன்றம் பெண்களின் கடுமையான விமர்சனங்­களையும் கண்டனங்களையும் எதிர்நோக்­கியது. இந்தநிலையில் 1984ல் சுவிஸ் அமைச்சரவையின் முதல் பெண் அமைச்ச­ராக Elisabeth Kopp பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். சமஷ்டி அரசியல் அமைப்பில் பெண்க­ளுக்கான பிரசவக்காப்புறுதி பற்றி 1945ல் குறிப்பிடப்பட்டுள்ள போதும் இதுவரை அந்த இலக்கு அடையப்படவில்லை. 1984ல் கொண்டுவரப்பட்ட தாய்மார் பாதுகாப்பு முன்மொழிவும், 1987ல் கொண்டுவரப்பட்ட பிரசவக்காப்புறுதி முன்மொழிவும் சர்வ­ஜனவாக்கெடுப்பில் தோல்வியடைந்தன. 1998ல் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்­கப்பட்ட இந்த முன்மொழிவு மக்கள்முன் சர்வஜனவாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது நிராகரிக்கப்பட்டது. சுவிற்சர்லாந்தின் பெண்கள் உரிமைகளுக்கான போராட்ட வரலாற்றில் 1991ம்ஆண்டு ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகின்றது. யூன் மாதம் 14ம்திகதி அணிதிரண்ட இலட்சக் கணக்­கான பெண்கள் மாபெரும் வேலை நிறுத்­தத்­தையும், ஆர்ப்பாட்டப் பேரணியையும் நடாத்தினர். பெண்களுக்குச் சமஉரிமை வழங்குவதற்கான சகல நடவடிக்கைக­ளையும் துரிதப்படுத்த வேண்டிய கட்டா­யத்திற்குள் ஆணாதிக்க சுவிஸ்அரசியலைத் தள்ளிவிடுவதாக இப்போராட்டம் அமைந்தது. இத்தனைக்கும் மத்தியிலும் 1993ல் இடம்பெற்ற நிகழ்வொன்று அரசியல் அநாகரிகமாக அமைந்தது. அமைச்சர­வைக்­கான பெண் வேட்பாளராகப் போட்டியிட்ட Christiane Brunner அரசியலுக்கு அப்பால் விமர்சிக்கப்பட்டார். அவர் அமைச்சராவதைத் தடுப்பதற்கு வலது சாரிகளும், மரபுவாதிகளும் அநாகரிகப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர் விவாகரத்துப் பெற்றவர் என்றும், அழகற்ற பற்களைக்கொண்டவர் என்றும் கூட மிகவும் அரசியல் வங்குரோத்துத்­தனமான பிரச்சாரங்கள் இடம்பெற்றன. இந்தநிலையில் அமைச்சரவையில் ஒருபெண் இடம்பெறவேண்டும் என்பதில் பெண்கள் அமைப்புக்கள் உறுதியாகப் போராடியதனால் அவருக்குப்பதிலாக மற்றொரு பெண்ணான Ruth Dreifussஐத் தெரிவுசெய்வதில் பெண்கள் வெற்றிய­டைந்தனர். சுவிஸ் அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டாவது பெண்ணான இவர் பிரசவக் காப்புறுதிக்காகக் கடந்த 20வருடங்களாகப் போராடி வருகின்ற போதும் சர்வஜன வாக்கெடுப்பு என்ற ஆயுதத்தினால் அந்த இலக்கு ஆண்களால் தடுக்கப்பட்டே வருகின்றது. இன்று சுவிஸ் அமைச்சரவையில் இரு பெண்களும்( 7:2 ) பாராளுமன்றத்தில் 34 பெண்களும் ( 246:34) இடம்பெறுகின்றனர். 1996ல் ஆண்-பெண் சமஉரிமையை அங்கீகரிக்கும் சமஷ்டிச் சட்டம் நடை­முறைக்கு வந்தது. இது பெண்களுக்கு எதிரான புறக்கணிப்பைத் தடைசெய்ததுடன் சமமான தொழிலைச்செய்யும் ,இருபாலா­ருக்கும் சம சம்பளத்தையும் வலியுறுத்தியது. அண்மையில் வெளியான ஆய்வொன்று சுவிஸில் பல சட்டஏற்பாடுகளுக்கு மத்தி­யிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சம்பள வேறுபாடு அதிகமானது எனத் தெரிவித்துள்ளது. 2000மாம் ஆண்டில் ஆண் ஒருவரை விடவும், பெண் ஒருவர் சராசரியாக 21.3 வீதமான சம்பளத்தைக் குறைவாகப் பெற்றிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்­கின்றது. ஓரு சுவிஸ் ஆண் 5600 சுவிஸ் பிராங்குகளை மாதச்சராசரிச் சம்பளமாகக் கொண்டிருந்தபோது, ஒரு சுவிஸ்ப்பெண் 4406 சுவிஸ் பிராங்குகளையே பெற்றுள்ளனர். உயர்தொழில் முதல் சாதாரண தொழில் வரை வேறுபட்ட அளவில் இந்தப் புறக்கணிப்பும், சமத்துவமின்மையும் காணப்படுகின்றது. ஆண்டில் 42.8 வீதமான பெண்கள் 3000 சுவிஸ்பிராங்குகளுக்குக் குறைவானதும் 68.1 வீதமானபெண்கள் 4000 சுவிஸ்பிராங்குகளுக்கும் குறைவானதுமான சம்பளத்தைப் பெற்றிருப்பதாக அவ்வாய்­வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எம்மைப் பாதிக்கும் இன்னொரு விடயம் சுவிஸ்பெண் ஒருவருக்கும், வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கும் இடையிலான சம்பள வேறுபாடாகும். வெளிநாட்டவர்கள், உள்நாட்டவர்களை விடவும் 15வீதம் குறைவான சம்பளத்தை அதே வேலைக்காகப் பெறுகின்றனர். இதன்படி பெண்கள் ஒரு சந்தர்ப்பத்தில் ஆண்களுக்குக் குறைவாகவும், மற்றொரு சந்தர்ப்பத்தில் உள்நாட்டவர்களைவிடக் குறைவாகவும் சம்பளம் பெறுகின்றநிலை காணப்படுகின்றது. அதாவது வெளிநாட்டுப் பெண்கள் சம்பளவிடயத்தில் இரு தடவைகள் புறக்கணிக்கப்பட்டு, இரு தடவைகள் சமசம்பள உரிமை மறுப்புக்கு உள்ளாகின்றனர். சுவிஸில் இடம்பெறும் 60வீதமான சம்பள வேறுபாட்டிற்கு அப்பட்டமான புறக்கணிப்பே காரணம் என இந்த ஆய்வு சுட்டிக் காட்டியுள்ளது.
இலங்கைப் பெண்கள் சுவிற்சர்லாந்தைப் பொறுத்தமட்டில் இலங்கைப் பெண்களின் நலன்களைச் சிறப்பாகப் பேணக்கூடிய வகையில் இலங்கைப்பெண்கள் அமைப்பு எதுவும் இதுவரை இல்லை. தனிப்பட்ட வகையில் மிகக்கணிசமான அளவு இலங்கைப் பெண்கள் பொதுவான அமைப்புக்களில் செயற்படுகின்றனர். இதுகூட சுவிஸில் வாழும் மற்றையநாடுகளின் பெண்களின் பங்களிப்புடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதாகும். ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பெண்கள் அமைப்பொன்று சுவிஸில் செயற்பட்டு வருகின்றது. மூன்றாம்மண்டல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இங்குஎதிர் நோக்கும் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுக்க இந்த அமைப்பு மேலும் பலப்படுத்தப்படவேண்டிய ஒன்றாக உள்ளது. எனினும் இலங்கைப் பெண்கள் தமது தனித்துவமான பிரச்சனைகள் சார்ந்து தனியான அமைப்பொன்றை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. இந்த அமைப்பு மற்றைய, பிராந்திய, தேசிய, சர்வதேசியப் பெண்கள் அமைப்புக்களுடனும் தொடர்புகளைப் பேணக்கூடியதாகக் கட்டி எழுப்பப்பட வேண்டும். இலங்கைப் பெண்களின் கடந்த 20 ஆண்டுகால சுவிஸ் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் உரிமைக்கான போராட்டங்கள் எதிலும் எமது பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பு எதனையும் வழங்கவில்லை. மாறாக மற்றைய பெண்களின் போராட்டங்களினால் கிடைத்த ,உரிமைகளை அனுபவிப்பவர்களாக உள்ளோம். இந்தநிலை மாற்றப்பட்டுப் பெண்ணுரிமைப் போராட்டத்தின் பங்கா­ளிகளாகவும் இலங்கைப்பெண்கள் மாறவேண்டும். இலங்கைப்பெண்கள் பொதுவாகப் பெண்கள் என்ற அடிப்படை­யில் எதிர்நோக்கும் உரிமை மறுப்புக்­களுக்கு எதிராகவும் அதேவேளை வெளி­நாட்­டுப்­பெண்கள் என்ற விஷேட உரிமைமறுப்பிற்கு எதிராகவும் போராட வேண்டியுள்ளது. நண்பர்களே! புலம்பெயர் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சமகால எதிர்கால சிக்கல்கள் குறித்து அவ்வவ் நாட்டு அனுபவங்களிலிருந்து எழுதப்படும் கட்டுரைகளை ”பறை” வரவேற்கிறது.படைப்புக்கள் படைப்பாளிகளின் கருத்துக்களையே முன்வைக்கின்றன. A & B ஒன்றியத்தினுடையது அல்ல.ஆ.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More