Slideshow

தலித் பெண்ணியம்: எல்லோருக்கும் "ஒன்று" என்பது சுத்த அபத்தம்! - ரூத் மனோரமா

நேர்காணல் - என்.சரவணன்

சர்வதேச மனித உரிமைகள் சாசனம் 50 வருடங்களாக உலக மனித உரிமைகளைப் பேணி வருகிறதாம். இந்தியா அந்நியர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 50 வருடங்களையும் அடைந்து விட்டதாம். ஒவ்வொரு மணித்தியாலமும் இரண்டு தலித்துகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் 3 தலித் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தினந்தோறும் 2 தலித்துகள் கொல்லப்படுகின்றனர். ஒவ்வொரு தினமும் இரண்டு தலித் வீடுகள் அழிக்கப்படுகின்றன.

தலித்தியப் போராட்டமானது இன்றைய சூழலில் தவிர்க்க இயலாததும், காட்டமானதுமாக பரிணமித்துவிட்டிருக்கிற நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயற்பட்டுவரும் பல்வேறு தலித் இயக்கங்களும் ஒன்று சேர்ந்து 1998 10-11 ஆகிய தினங்களில் கூடி தலித் மக்களின் மனித உரிமைகளுக்கான தேசிய செயற்திட்டம் ஒன்றை வரைந்தன. அதனை சென்ற வருடம் (ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் 50வது வருட பூர்த்தி தினமான) டிசம்பர் 10 அன்று தொடக்கம் (அம்பேத்கார் பிறந்த தினமான) 14 ஏப்ரல் 1999 வரையான காலத்திற்குள் உலக அளவில் தலித் மக்களின் பிரச்சினைகளின் பால் கவனத்தை ஈர்ப்பதற்கும், தலித் மக்களின் அவலங்களையும் உரிமைகளையும் பற்றி பிரசாரப்படுத்தும் காலமாகப் பிரகடனப்படுத்தி செயற்பட்டனர். தலித் விஞ்ஞாபனம், தலித்களின் உரிமைகளும் மனித உரிமைகளே எனக்கூறும் தலித் மனித உரிமைகள் சாசனம், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள், கையெழுத்து சேகாpப்பு, இந்திய அரச தரப்பினருக்கு விதந்துரைக்கவென கோரிக்கைகள் என பல்வேறு ஆவனங்களை உள்ளடக்கிய ஒரு கோவையையும் விநியோகித்து வருகின்றனர். ஐநாவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையில் ”மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்களாகக் கருதி” தலித் மக்களின் பிரச்சினைகளை ஐ.நாவில் பிரதிநிதித்துவப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும்படியும், இப்பிரச்சினைகளுக்கென விசேட ஐ.நா அறிக்கையாளர் (Special Rapporteur ) ஒருவரை நியமிக்கும்படியும் கோரியுள்ளனர். இப்பிரச்சாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வந்து ஒரு கூட்டத்தையும் ஒழுங்கு செய்திருந்தனர். இலங்கையில் இனத்துவ கற்கைக்கான சர்வதேச நிலையத்தினர் இதனை ஒழுங்கு செய்திருந்த போதும் இது ஒரு சில ”புத்திசீவிகள்” மட்டுமே கலந்து கொண்ட நிகழ்ச்சியாக குறுகிப்போனது வேறுவிடயம்.

தலித் மக்களின் பிரச்சினைகளையும் அப்போராட்டங்களை ஒன்றிணைக்கும் பணியாகவும், மேற்கொள்ளப்படுகின்ற இந்த முயற்சியில் சகலரையும் இணைக்கும் வகையில் வெப் தளம் ஒன்றும் இவ்வமைப்பினரால் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் தலித் மக்கள் பற்றிய பல்வேறு விபரங்கள், ஆய்வுகள், விவாதங்கள், செய்திகள், கட்டுரைகள் என்பன உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், இதிலிருந்து இன்னும் பல தலித், மற்றும் மனித உரிமைகள் பற்றிய வெப் தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன் இலங்கை வந்திருந்த இவ்வியக்கத்தின் கர்நாடக மாநிலத்தில் இயங்கிவரும் தலித் அமைப்பைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளரான திருமதி. ரூத் மனோரமாவுடனான நேர்காணல் இங்கு பிரசுரமாகிறது. இந்திய தேசிய அளவில் முதன் நிலை தலித் செயற்பாட்டாளராக அறியப்பட்டவர் இவர். வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும், மாற்று நோபல் விருது உட்பட பல விருதுகள் இவரது தலித்திய செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.

தலித் பெண்ணிய செயற்பாட்டாளரான இவர் பெண்கள் மீதான அனைத்து ஓரங்கட்டல்களையும் கண்காணிப்பதற்கான இரண்டாவது தென்னாசிய பெண்கள் மாநாடு கடந்த மே மாதம் இலங்கையில் நடந்தபோது அவர் தலைமை வகிக்கும் ”பெண்களின் குரல்” (Women's veice) இயக்கத்தின் சார்பில் அதில் கலந்துகொண்டிருந்தார். அப்போது பெறப்பட்டது இந்த நேர்காணல். இது சரிநிகரில் வெளிவந்தது.



தலித் அரசியலின் சமகால வடிவத்தைப் பற்றி கூறுங்களேன்.

முன்னர் போலல்லாது இன்று பல்வேறு அரசியல் தலைமைகள் தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து செயலளவில் இல்லையென்றாலும் பேசத் தள்ளப்பட் டுள்ளனர். ஏலவே இருக்கின்ற கூலி விவசாயிகளின் இயக்கங்கள், தொழிற்சங்க இயக்கங்கள் ஏன் சில இடங்களில் மாக்சிய இயக்கங்களையும் விட பலமாக வந்து கொண்டிருக்கிறது தலித் இயக்கம். இதற்கான காரணம் தலித் அரசியலானது வெறுமனே சாதிய அடக்குமுறைகளுக்கு எதிரான இயக்கமாக செயற்படவில்லை. விதிவிலக்கானவற்றைத் தவிர பெருமளவில் சகல அடக்குமுறைகளையும் எதிர்த்துத்தான் தலித் அரசியல் நிறுவப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் தலித் பெண்ணியம் பற்றி பேச நிர்ப்பந்தித்த காரணிகள் என்ன?

தலித்துகளில் அலைவாசிப்பேரான பெண்களின் பிரச்சினைகள் குறித்த விசேட கவனம் கொள்ளப்பட்டு வருவது கடந்த பத்தாண்டு காலமாகத் தான். இதற்கு காரணம் சமூகத்தில் விளிம்பில் இருக்கும், இறுதியாக ஓரங்கட்டப்பட்டவர்கள் என கருதப்படும் தலித்துகளிலும் ஆண் தலித் துகளால் பெண் தலித்துகளை ஒடுக்கப் படுவதை விசேடமாக கருத்திற் கொண்டே தலித் பெண்ணியம் குறித்த கருத்தாக்கம் வளரத் தொடங்கியது. சகல அதிகாரத்துவ நிலைகளின் மீதும் போர் தொடுக்கின்ற தருணத்தில் ஆண் அதிகாரம் மட்டும் தப்பி, தமது அதிகாரத்தின் மீதான கவனத்தை திசை திருப்பி விடுகிறது என்றே சொல்வேன்.

பெண்கள் மீதான ஆணாதிக்க அதிகாரம் என்பது வர்க்க, சாதிய, இனத்துவ அரசியல்களைக் கடந்தது. ஒரு புறம் வர்க்க, சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து போராடுகிற ஆண்கள் சக தலித் பெண்ணின் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகின்றனர். தலித் பெண்களைப் பொறுத்தளவில் ஆணாதிக்கம், சாதியம் பொருளாதார, கலாசாரம் என சகல வழிகளிலும் ஒடுக்கப்படுகின்றனர்.

தலித் பெண்கள், ஒரே நேரத்தில் அம்பேத்கார் பொது எதிரியாக சுட்டிக் காட்டிய பார்ப்பனியம் மற்றும் முதலாளித் துவம் என்பவற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெண்ணியப் போராட்டம் சாதிய ஒடுக்குமுறையை மறுதலித்து வந்திருக்கிறது என்று கருதுகிறீர்களா?

ஒரு புறம் பெண்கள் என்பதற்காகவே பிரத்தியேகமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துவரும் அதே நேரம் இன்னொரு புறம் தலித் பெண்ணாக இருப்பதால் விசேடமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அப்பிரச்சி னைகளை எதிர்த்துப் பேச முடிவதில்லை. மிஞ்சிப் பேசினால் என்னோடு படுத்தவள் தானே என்று பேச்சை அடக்கும் நிலை உள்ளது. இன்று படுத்தால் தான் நாளை வேலை என்கின்ற நிலை பல கிராமங்களில் இன்று நிலவுகிறது. இப்படிப்பட்ட நிலையில் உயிரியல் ரீதியில் நாங்கள் எல்லோரும் ஒன்றுதான் என்றும் பெண்கள் எல்லோரும் பெண்கள் தான் என்றும் பேசுவதெல்லாம் சுத்த அபத்தம். பெண்கள் அமைப்புகளில் கூட நிலவுகின்ற சாதிய ஓரங்கட்டல்களை இங்கு காணலாம்.

தலித் விடுதலைக்கு தலித் பெண்ணின் விடுதலை இன்றியமையாதது என்றா கூறுகிறீர்கள்?

ஆம், எப்படி இன்று இந்திய உபகண்டத்தில் தலித் விடுதலையில்லாமல் புரட்சிகர சமூக மாற்றம் சாத்தியமில்லையோ அதுபோல பெண் விடுதலை பெறாத தலித் விடுதலையும் சாத்தியமில்லை. இந்த வகையில்தான் தலித் விடுதலைக்கு பெண்களின் விடுதலை முன்நிபந்தனை யாகின்றது. அது போல தலித் விடுதலையை உள்ளடக்காத பெண் விடுதலையும் சாத்தியமில்லை எனும் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். தலித் அரசியல் பற்றிப் பேசுகின்ற சில நட்பு சக்திகள் கூட தலித், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இணைவினை முக்கி யப்படுத்தி செயற்படுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களையோ, தலித் பெண்களையோ ஒரு சக்தியாக கருதி அதில் இணைக்காமல் இருப்பது துரதிருஸ்டவசமானது.

தலித் பெண்கள் தனியாக நிறுவனமயப்படுதல் அவசியம் என்கிறீர்களா?

இன்றைய நிலையில் தலித் பெண்களை தலைமையாகக் கொண்ட ஒரு அமைப்பு உருவாவது அவசியம். இன்றைய ஆதிக்க அமைப்புமுறையினால் ஓரங்கட்டப்பட் டவர்களும் இவர்கள் என்பதால் இவர்க ளால் தான் இதனை மாற்றவும் முடியும். எனவே அப்படிப்பட்ட தலைமை தாங்கு தலுக்கு தலித் பெண்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். அது சுலபமான விடயமல்ல. அதற்கு சில விலைகளைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த வித சமரசங்களும் செய்துகொள்ளத் தேவையில்லை.

உயர் சாதியினர், உயர் வர்க்கத்தினர் என்போர் எப்படிப்பட்ட ஆணாதிக்க அடக்குமுறையை பிரயோகித்து வருகி ன்றனரோ அதுபோலவே தலித் பெண்கள் மீது தலித் ஆண்கள் பிரயோகித்து வரும் அடக்குமுறை கிஞ்சித்தும் குறைவில்லாத வகையில் நடைமுறையிலிருந்து வருகி ன்றன. எனவே தான் தலித் பெண்கள் தனி யாக அணி திரள வேண்டிய, தனியாக தலைமை வகிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். பெண்களின் பேரம் பேசும் அற்றலைப் பலப்படுத்தவும் இது தான் வழி. அப்படி இருக்கும்பட்சத்தில் தான் பெண்களின் கோரிக்கைகளை வென்றெ டுக்கலாம்.

பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்தே நாங்கள் தலித் மக்கள் பற்றிய விபரங்களை சேகரிக்கத் தொடங்கினோம். அது ஏறத்தாழ 1987 ஆக இருக்கும். அதிலிருந்து 1995 ஆகும் போது நாங்கள் தலித் மக்களின் தேசிய சம்மேளனம் (National Federation of Dalits) என்ற அமைப்பை ஆரம்பித்து அதன் கீழ் இந்தியா தழுவிய தலித் இயக்கங்களை மையப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆறு மாதங்களாக தேசிய அளவில் பல பாசறைகளை நடத்தி இருக்கிறோம். அதன் மூலம் தேசிய செயற் திட்டம் ஒன்றையும் வரைந்துள்ளோம். தலித் பெண்களின் விஞ்ஞாபனம் ஒன்றையும் வரைந்துள்ளோம். முதலில் 5 வருடத் திட்டம் ஒன்றைத் தொடக்கியுள்ளோம். இயக்கத்தில் பெண்களை தலைமைத் துவப்படுத்துவது. ஏனைய இயக்கங் களுடன் ஒன்று சேர்ந்து வேலை செய்வது எந்த அடிப்படையில் என்பன போன்ற வற்றில் அக்கறை செலுத்தி வருகிறோம்.

இன்று தலித் மக்களின் பிரச்சினைகளில் கர்நாடகம் தமிழ்நாடு போன்ற மாநிலங் களிலும் நிலப்பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் பஞ்சமி நில மீட்பு விடயத்தை தலித் இயக் கங்கள் முன்னெடுத்து வருகின்றன. இதில் முகம் கொடுக்கின்ற முக்கிய பிரச்சினை என்னவென்றால் பல தலித் இயக்கங்கள் சாதிவாரியாக பிரிந்து செயற்படுகின்ற போக்கும் இல்லாமல் இல்லை. பறையர், பள்ளர், சக்கிலியர் என சாதிவாரியாக பிரிந்து காணப்படுகின்றனர்.

பெண்களின் பிரச்சினைகளை தலித் பிரச்சினையோடு சேர்த்து விசேட கவனத்துக்குள்ளாக்கியது போல தலித் பிரச்சினையுடன் வர்க்கப் பிரச்சினையை எவ்வாறு ஒன்றிணைத்து செயற்பட்டுகிறீர்கள்?

இன்னமும் பல இடதுசாரி அணிகள் தொழிற்சங்கங்கள் என்பன பெண்கள் பிரச் சினையைக் கூட தனித்த ஒரு பிரச்சினையாக அடையாளம் காணாத சூழ்நிலையில் தலித் மக்களின் பிரச்சினை பற்றிய விடயத்திலும் அது போன்ற நிலை காணப்படுகிறது தான். இன்றும் வர்க்கப் பிரச்சினையின் கீழ் மாக்சீய இயக்கங்களில் அணிதிரண்டிருக்கின்ற அடிமட்ட அங்கத்தவர்களில் பெரும்பான் மையோர் தலித்துகள் தானே. தலித்துகள் அனைவரும் வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இலக்காபவர்கள் தானே. நாங்கள் கூறுவது அந்த சுரண்டலை விட விசேட மான சுரண்டல்களுக்கு தலித்துகள் பலியாக்கப்படுகிறார்கள் என்பதும், தலித்துகளிலும் தலித் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவருகிறார்கள் என்பதையும் தான். பெண்கள் பிரச்சினையையும் பொருளாதாரப் பிரச்சினையாக இனங் கண்டு வந்ததைப்போல தலித் பிரச்சினையும் வர்க்கப் பிரச்சினையோடு மட்டும் குறுக்கிப் பார்க்கும் போக்கிலிருந்து இன்னமும் பல சக்திகள் விடுபடவில்லை. தற்போது சில மாற்றங்கள் தென்பட்டு வருகின்றன. என்றாலும் தலித் பெண்கள் தங்களின் பிரச்சினையை தனித்து அடையாளம் காண்பதைப்போல தலித் ஆண்கள் தலித் பெண்களின் பிரச்சினைகளை உணர்ந் ததில்லை. அப்படி எதிர்பார்க்கவும் முடியா திருக்கிறது. அங்கு தான் தலித் பெண்ணி யத்தின் தனித்துவம் தங்கியிருக்கிறது.

தலித் பெண்கள் எவ்வாறு தங்களின் முன்னெடுப்புகளை விரிவுபடுத்தி வருகின்றனர்?

தலித் மக்களின் போராட்டமும் இன்று விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வெறுமனே தீண்டாமைக்கு எதிராக மட்டும் நிற்கவில்லை. அது போல அம்பேத்கார் சிலையை உடைத்து விட்டார்கள் என்ப தற்காக மட்டும் போராடப் புறப்படு வதில்லை. இன்று தலித் மக்கள் தலித் அரசி யலின் கீழ் நிறுவனமயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் என்பதைத்தான் இன்றைய ஆரோக்கியமான விளைவாகக் காண வேண்டும். இனி நம்பிக்கையுடன் முன்செல்லலாம்.

தலித்துகள் அடிமட்டத்தில் உள்ள, வர்க்கச் சுரண்டலுக்கு அதிகமாக இரையாகின்றவர்கள். பெருமளவான தலித்துகள் விசாயிகள். கூலி விவசாயிகள். முன்னர் நிலம் இருந்தது இப்போது நிலம் இல்லை. நிலம் இருப்பவர்களுக்கோ பயிர்ச்செய்கைக்கு மூலதனம் இல்லை. இவர்கள் வங்கிக் கடனும் பெற முடியாத நிலை. தலித்துகள் தங்களின் நிலங்களை மீளப் பெறுவதற்கான போராட்டங்கள் எழுந்து வருகின்றன. காலனித்துவ காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் - இதனை விற்பது என தீர்மானிக்கும் பட்சத்தில் அது இன்னொரு தலித்துக்கு தான் விற்கப்பட வேண்டு மென்பது சட்டம். ஆனால் நிலச்சுவாந் தர்கள் பலர் இவர்களிடமிருந்து கபடத் தனமாக அந்நிலங்களைப் பறித்து பினாமி பெயர்களில் வைத்துக் கொண்டிருக் கின்றனர். தற்போது அந்த பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்.

இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். இன்று அவர்களின் செயலில், சிந்திப்பில் மாற்றம் காணத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரத்தில் அண்மையில் மரத்வாடா பல்கலைக் கழகத்திற்கு டாக்டர் அம்பேத்காரின் பெயரை வைக்குமாறு அங்குள்ள தலித்துகள் கோரினார்கள். போராடினார்கள். அதன் போது மக்களை அடித்து துன்புறுத்தி, சொத்துக்களை நாசமாக்கி, துப்பாக்கிச் சூடு பிரயோகித்து அடக்கினார்கள். ஆனால் அதற்காக அது போன்ற போராட்டங்கள் நின்று விடவில்லை. நின்றுவிடப்போவ துமில்லை. ஒரு புறம் தீணடாமைக் கொடுமை, இன்னொருபுறம் வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வி, சுகாதாரப் பிரச்சினைகள், அரசின் எந்தவித நிர்வாகமும் இவர்களைச் சேராத நிலை இப்படிப்பட்ட நிலையில் தலித் மக்கள் சூனியத்துக்குள் வாழ்ந்து வருகிறார்கள். பீகாரில் சமீபத்தில் 22 தலித்துகளை ஒரே ராத்திரியில் வெட்டிக்கொன்றனர். இன்று பீகாரில் தலித் மக்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உருவெடுத் துள்ளது. பிகாரின் நிலைமை தவிர்க்க முடியாத ஆயுதப் போராட்டத்துக்கு தலித்துக் களைத் தள்ளிவிட்டுள்ளது. தலித் பெண்கள் பலர் இரகசிய தலித் அரசியல் இயக்கங்களில் இணைந்து துப்பாக்கிகளை கையிலெடுத்துள்ளனர்.

அரசியல் சக்திகளை நிர்ப்பந்தப்படுத்துகின்ற பலத்தைக் கொண்டிருக்கிறீர்களா? பேரம் பேசும் ஆற்றலை பொருட்படுத்தும் நிலை எப்படி இருக்கிறது?

இன்றைய தலித் விஞ்ஞாபனம் இனி வரும் தேர்தல்களில் தேசிய அளவில் கட்சிகளிடம் முன்வைக்கப்படப்போகும் கோரிக்கையாக அமையப்போகிறது. தலித் மக்களை நிறுவனமயப்படுத்தி வருகின்ற இந்த நிலையில் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் இவற்றின் விளைவுகளை உடனடியாக எதிர்பாhக்க முடியாது.

தலித் பெண்களின் கோரிக்கைகள் இப்படிப்பட்ட பாராளுமன்ற அரசியலில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றன?

முன்னர் குறிப்பிட்ட தலித் தேசிய விஞ்ஞாபனத்தில் தலித் பெண்கள் குறித்த கோரிக்கைகளும் அடங்குகின்றன. இனி பேச்சுவார்த்தைகளுக்கு களம் அமைக்க வேண்டியேற்படப் போகிறது. தேர்தல் அரசியலில் 25 கோடி தலித் மக்களின் வாக்குகளானது அவர்களின் கோரிக் கைகளை கருத்திற் கொள்ளச் செய்யப் போகிறது. ஆனால் இதனை பெரிதாக எதிர்பார்க்கத் தேவையில்லை. எமது இலக்கில் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைக்கிறோம் அவ்வளவு தான்.

2 comments:

தாழ்த்த பட்டோரின் அடையாளமான நாடார் சமூகம் பஞ்சமருக்கு ( பச்சை தமிழருக்கு ) சமூக பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அவர்களை நாடார் உறவின் முறையாக அறிவிக்க வேண்டும். இதுவே பெருவாரியான நாடார் மக்களின் விருப்பம்.

நாடார் சமூகம் உடனடியாக பள்ளர், பாராயர், நாவிதர், வண்ணார், சக்கிலியாறை நாடாராக அறிவிக்க வேண்டும்.

தலித்தை சங்கராச்சாரியாராக ஆக்குங்கள் !

[தலித்தான] கே. கே. ஸகட் என்பவரை ஓராண்டிற்கு சங்கராச்சாரியாரின் இருக்கையில் அமர்த்துங்கள். புனே நகரின் சித்பவான் என்ற தீவிரப் பிராமண வகுப்பினர் நூறுபேர் அவருக்குப் பாதபூஜை செய்யட்டும்.


இப்படி எல்லாம் அம்பேத்கர் பேசி இருக்கிறார் !! ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

அம்பேத்கரின் இந்த கருத்து பற்றிய முழு விவரம் இங்கே: http://www.tamilhindu.com/2011/07/why_ambedkar_converted_to_buddhism-09/

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More