Slideshow

மரண தண்டனை குறித்து டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்

டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்

"..... நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே ஒரு வரையறுக்கப்பட்ட பகுதியாக ‘உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் உரிமை' நிர்ணயம் செய்யப்பட வேண்டுமா? அல்லது எத்தகைய கிரிமினல் மேல் முறையீடுகளை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொள்ளலாம் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை, நாம் நமது நாடாளுமன்றத்திடமே அளித்து விடலாமா? இந்தக் கேள்விகளை, தவிர்க்க இயலாத ஒரு நியதியாக உருவாக்க நான் விரும்பவில்லை. மேலும், கேள்விகளுக்கான எனது தீர்மானமான பதில் என்று எதையும் இந்தச் சூழலில் நான் கூற விரும்பவில்லை.

எனக்கென்று தனிப்பட்ட கருத்துகள் உள்ளன. பிரச்சனைகள் எழும்போது, எனது கருத்துகளை நான் அதன் மீது திணிப்பதில்லை. குறை நிறைகளை சீர்தூக்கி, திறந்த மனதுடன்தான் பிரச்சனைக்கான தீர்வினைத் தருகிறேன். கிரிமினல் மேல் முறையீடுகளை விசாரிக்கப் போதுமான அதிகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு நமது நாடாளுமன்றமே வழங்கிவிடலாம்.

உச்ச நீதிமன்றத்திற்கானப் பணியின் அளவையும், உச்ச நீதி மன்றத்தால் எவ்வளவு வேலை செய்ய முடியும் என்பதையும், அங்கு பணியாற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையையும், அதற்கானப் பொருளாதார செலவுகளையும், நமது நாடு சந்திக்க முடியுமா என்பதற்கானப் புள்ளிவிவரம் திரட்டப்பட்டு, அதை நமது நாடாளுமன்றம் ஆய்வு செய்ய வேண்டும்.

மரண தண்டனை மேல் முறையீட்டு வழக்குகளை உச்ச நீதிமன்றமே விசாரிக்கலாம் என்பதற்கு மாறாக, மரண தண்டனையை முழுவதுமாக ஒழித்து விடுவதை நான் ஆதரிக்கிறேன். இந்த முடிவைப் பின்பற்றுவதே சரியானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதனால் பல முரண்பாடுகள் முடிவிற்குக் கொண்டு வரப்படும்.

நமது நாடு அகிம்சையில் நம்பிக்கை கொண்ட நாடு. அகிம்சை நமது நாட்டின் பண்டைய கலாச்சாரம். மக்கள் தற்போது தங்களின் வாழ்வியல் நெறியாக இதனைப் பின்பற்றாமல் இருந்தால்கூட, அகிம்சையை ஒரு நியாயத் தீர்ப்பாக மக்கள் முடிந்தவரை பின்பற்ற வேண்டும் என விரும்புகின்றனர். இந்த உண்மைக்கு மதிப்பளிக்கும் வகையில், நாம் இந்த மக்களுக்கு ஆற்ற வேண்டிய சரியான பணி மரண தண்டனையை ஒட்டுமொத்தமாக ஒழிப்பதுதான்.....'' - 

[டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு': 13, பக்கம் 639]

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More