Slideshow

சொல்லிச் சொல்லி மறந்த கதை......... - அறிவழகன்


பரமக்குடி படுகொலை

மீண்டும் ஒரு குருதிக் கறை படிந்திருக்கிறது தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில், இம்முறை கொல்லப்பட்டது ஏழு மனிதர்களின் உயிர், வழக்கம் போலவே பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்வினைகளும், ஆதரவுக் குரல்களும் எழுந்தவண்ணம் இருக்கிறது, “இவர்கள் கலவரக்காரர்கள் என்றும், சுட்டுக் கொல்லப்பட வேண்டியவர்களே” என்று ஒரு புறமும், “தலித் மக்களைக் குறி வைத்துக் கொன்றிருக்கிறது காவல்துறை” என்று மற்றொரு புறமுமாய் ஏறத்தாழ இரண்டு அணியாய் மாறி இருக்கிறது தமிழ்ச் சமூக மனநிலை.

ஒன்றைத் தெளிவாக இந்நேரத்தில் உணர முடியும், இந்த இரண்டு அணிகளில் ஒன்று “ஒடுக்கப்பட்ட மக்களின் இறப்பை எண்ணிக் கலங்கும், அதிகார வர்க்கத்தின் தொடர் வன்முறைகளை எதிர்க்கும் அணி”, இன்னொன்று “பொதுவாகக் கலவரம் யார் செய்தால் என்ன?, காவல்துறை மீது வன்முறையை ஏவும் நேரத்தில் அவர்களைக் சுட்டுக் கொலை செய்வதும் தவறில்லை என்று வாதிடும் அணி”.

 இப்போது நாம் அனேகமாக இரண்டாகப் பிளக்கப்பட்டிருக்கிறோம், ஆம், மூன்று குற்றம் சுமத்தப்பட்ட மனிதர்களின் விடுதலைக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்த தமிழ் மக்கள் இப்போது சரியான நேரத்தில் பிளவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள், இப்படி நம்மைப் பிளவு செய்யும் ஒரு மிகப்பெரிய காரணியாகவே சாதி பல நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் நிலை பெற்றிருக்கிறது.

முதலில் இந்தக் கலவரச் சூழலை யார் துவக்கி இருந்தாலும் அது மிகப்பெரிய குற்றம் என்பதில் நம் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை, “ஒடுக்கப்பட்ட இளைஞர்கள் செய்தால் எதுவும் குற்றமில்லை, அல்லது அவர்கள் எப்போதும் கலவரங்களில் ஈடுபடுவதில்லை” என்று வாதம் செய்வதல்ல நமது நோக்கம், மாறாக ஒடுக்கப்பட்ட மக்களின் உளவியலுக்குள் நுழையும் போது தான் இப்படிப்பட்ட நிகழ்வுகள் எதனால் உண்டாக்கப்படுகின்றன என்கிற முழு உண்மையை ஒரு நடுநிலை உள்ள மனிதனால் அறிந்து கொள்ள முடியும்.

இந்திய சமூகத்தில் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்போதும் அச்சம் சூழ்ந்ததாகவே இருக்கிறது, எந்த நேரத்திலும் அவனது அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதையும், அவனது கொண்டாட்டங்கள் மறுதலிக்கப்படுவதையும் தன்னுடைய தகுதியாகவே வைத்துக் கொண்டிருக்கும் ஆதிக்க சாதியின் மனநிலையில் தலித் அல்லது ஒடுக்கப்பட்டவன் “தான் கொடுக்கிற உரிமைகளால் அல்லது உதவிகளால் வாழும் மனிதனைப் போலத் தோற்றமளிக்கிற விலங்கு” என்று தான் கற்பிக்கப்படுகிறது.

ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு மிகச் சிறு வயதிலேயே ஒடுக்கப்பட்ட மனிதர்களின் வீடுகள் இருக்கும் பகுதிக்குச் செல்வது ஊறு விளைவிக்கும் குற்றம் என்று சொல்லிக் கொடுக்கப்படுகிறது, ஆதிக்க சாதி மனிதனின் வயல்களுக்கு நடுவே இருக்கும் தன்னுடைய வயல் வெளிகளில் விவசாயம் செய்யும் உரிமையைக் கூடக், கடந்து செல்ல முடியாத காரணத்தால் இழந்து நகர்ப்புறமாக நகரத் துவங்கிய எத்தனையோ குடும்பங்களை எனக்குத் தெரியும்.

பல்வேறு சமூக வெளிகளில் புறக்கணிக்கப்படுகிற அல்லது துரத்தி அடிக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வலியை அறிய முடியாத எவராலும் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிரான அழுத்தமான தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய முடியாது, ஏனென்றால் பல நேரங்களில் அந்த வழியைத் தோற்றுவிப்பவர்களாக அவர்களே இருக்கிறார்கள், விழாக்காலங்களில் தாம் விரும்புகிற தலைவரின் படங்களை மரியாதை செய்கிற உரிமை நமது சமூகத்தில் ஆதிக்க சாதி மக்களின் கைகளில் இருந்தே புறப்படுகிறது.

பிறப்பின் மூலமே கிடைக்கிற இந்தத் தகுதியின் உதவியால் கல்வி அறிவாலும், தனது கடின உழைப்பாலும் மேலெழுந்து வருகிற ஒடுக்கப்பட்ட மனிதனின் வளர்ச்சிப் பாதையை, அவனது சுய மரியாதையைக் கேள்வி கேட்கும் அல்லது சீண்டிப் பார்க்கும் நிலையை அடைகிறான் பிறப்பால் உயர்ந்தவன் என்று சொல்லப்படுகிற மனிதன். இந்தச் சீண்டல் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மனிதனின் உளவியலில் அழுத்தத்தையும், நெருக்கடியையும் உருவாக்குகிறது.

இதனை எதிர்த்துக் குரல் எழுப்புகிற எவரையும், அவர் எப்படியான கருத்தியலைக் கொண்டிருக்கிறார் என்கிற காரணங்கள் ஏதும் அறியாமலேயே ஒரு ஒடுக்கப்பட்ட இளைஞன் பின் தொடர்கிறான், தனது வாழ்க்கையின் மீது சுற்றி வளைத்துக் கட்டப்பட்டிருக்கிற சாதி அடக்குமுறை வடிவங்களைக் கடந்து தான் நிம்மதியாக வாழ்வதற்கு இத்தகைய தலைவர்களில் யாரேனும் ஒருவர் உதவி செய்வார் என்று அவன் முழுமையாக நம்பத் துவங்குகிறான்.

ஆழி சூழ்ந்த நிலப்பரப்பில் அச்சத்தோடு வாழும் இத்தகைய ஒடுக்கப்பட்ட மனிதனின் மனநிலையே ஒரு வழிபாட்டு மனநிலைக்கு அவனைத் தள்ளி விடுகிறது, ஏறத்தாழ கடவுள் கோட்பாட்டினைப் போலவே தன்னால் அவிழ்க்கவே முடியாத சமூகச் சிக்கல்களின் ஒரு முனையைத் தலைவர்களின் மீது கட்டி விட்டு இன்னொரு முனையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறான், தலைவர்களின் கரங்களில் கொடுக்கப்பட்ட மற்றொரு முனையில் சரணடைந்து தன்னுடைய அச்சத்தை முழுமையாக ஒப்படைத்து விட்டதாக நம்பி பெருமூச்சு விடுகிறான்.

ஆனாலும், தனது பிறப்பின் அதிகாரத்தைப் பறிக்கவே தோற்றம் கொண்டவர்கள் இந்தத் தலைவர்கள் என்று நம்புகிற பிறவி ஆதிக்க சாதி மனிதனால் ஒடுக்கப்பட்ட மனிதனின் நிம்மதிப் பெருமூச்சைப் பொருக்க முடிவதில்லை, தனக்குச் சேவகம் செய்யும் ஒரு கீழான நிலையிலேயே ஒடுக்கப்பட்ட மனிதன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதை எழுதப்படாத சட்டமாக எண்ணுகிற ஒவ்வொரு ஆதிக்க சாதி மனிதனும் அதற்கான அடிப்படை வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில் எப்போதும் முனைப்புடன் இருக்கிறான், அவன் மட்டுமன்றி அவனது சந்ததியும் அப்படியே இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்கிறான்,

பிறப்பால் தனக்குக் கிடைத்திருக்கும் இந்த உரிமையை இழப்பதையோ, விட்டுக் கொடுப்பதையோ அவமானமாய் உணரும் ஆதிக்க சாதி மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனை ஒரு சக மனிதன் என்றோ, சக உயிர் என்றோ உணரத் தலைப்படுவதே இல்லை, சக மனிதனை தன்னோடு இப்பூவுலகில் வாழும் இன்னொரு உயிர் என்கிற உயிரியல் அல்லது வாழ்வியல் உண்மையை வசதியாக மறந்தே போகிறான், அது தான் இறுதியாக இந்த மனித குலம் அடையத் துடிக்கும் உண்மையான நாகரீகம் என்பதை அவனது மதமும், சாதியும் அவனுக்குக் கற்றுக் கொடுப்பதே இல்லை.
பரமக்குடி கலவரம்

இனி பரமக்குடி நிகழ்விற்கு வருவோம்,

தொடர்ந்து நான்கைந்து நாட்களாக பரமக்குடி சுற்றுப் புறங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ஒழுங்குப் பாதுகாப்பு (பெயருக்கு) என்கிற பெயர் கொண்ட ஆதிக்க மனப்போக்கு அப்பகுதி இளைஞர்களிடையே ஒரு விதமான கிளர்ச்சியான சூழலை உண்டாக்கி இருக்கிறது, தான் தலைவராக ஏற்றுக் கொண்டவரை அவரது நினைவு நாளை அல்லது பிறந்த நாளைக் கொண்டாடும் உரிமையைக் கூட இந்தச் சமூகம் எனக்கு வழங்கவில்லை என்கிற தார்மீகக் கோபமே ஒரு வன்முறை மனநிலையை நோக்கி இந்த இளைஞர்களைத் தள்ளி இருக்கிறது.

பிள்ளையாருக்கும், பிள்ளையார் ஊர்வலங்களுக்கும் இருக்கும் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு ஒழுங்கு முறைகள் ஒடுக்கப்பட்ட மனிதர்கள் கூடும் இது போன்ற இடங்களுக்கு இல்லை என்பதே இந்தச் சமூகத்தின் மாற்றாந்தாய் மனநிலையை நாம் அறிந்து கொள்ள உதவி செய்கிறது, காவல் நிலையங்களில் பெயர்களைப் பதிவு செய்யச் சொல்லி வற்புறுத்திய காவலர்கள், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் சென்று விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று கட்டளையிட்ட அதிகாரிகள் இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
இந்த நிகழ்வில் ஏழுக்கும் அதிகமான மனித உயிர்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறது, அது காவலரோ அல்லது ஒடுக்கப்பட்ட மனிதனோ, தமிழனோ, தெலுங்கனோ, மலையாளியோ என்கிற ஆய்வுகளுக்கு முன்னாள் இறந்து போனவை நம்மைப் போலவே உடலுக்கும், உள்ளத்துக்கும் இடையே கட்டப்பட்டிருக்கிற மனித உயிர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதே நிகழ்வு மற்றொரு சாதி அணிவகுப்பில் அல்லது தலைவரின் நினைவு நாளில் நிகழ்ந்து அங்கேயும் ஏழு மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்குமேயானால் சக மனிதனாகக் குரல் கொடுக்கும் பண்பாட்டை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
சமூகத்தின் மனநிலையைப் போலவே அரசின் ஒவ்வொரு அடுக்கும் செயல்படும், காவல் துறையில் பணியாற்றும் மனிதராகட்டும், அமைச்சரைவையில் பணியாற்றும் மனிதராகட்டும் நீங்களும் நானும் என்ன சிந்திக்கிறோமோ அதனையே எதிரொலிக்கிறார்கள், சாதி ஒழிப்பிற்கும், வர்க்க வேறுபாடுகளுக்கும் பகல் முழுதும் குரல் கொடுக்கும் பல தலைவர்கள் இரவு நேரங்களில் தமது சொந்த சாதி நலன்கள் குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக நாம் அவர்களை மாற்றி வைத்திருக்கிறோம், நாமே நமது சொந்தக் குழந்தைகளுக்கு ஒரு மிகக் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியேறும் ஆற்றலை வழங்க ஒப்புவதில்லை, மாற்று சாதி அல்லது பக்கத்துக்கு வீட்டு மனிதன் குறித்த வன்மத்தையே பல நேரங்களில் நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கிறோம்.

ஒரு மிக நுட்பமான சமூகத்தின் ஒழுங்கைப் பராமரிக்கும் பணியில் இருக்கிறோம் என்கிற உள்ளுணர்வு இல்லாத காவல்துறை அதிகாரிகளின் கவனக் குறைவால் இந்தக் கொடுமையான நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது என்பதில் துளியும் ஐயம் இல்லை, தலைமைப் பண்புகளும், ஆளுமைத் திறனும் இல்லாத சில குறிப்பிட்ட மனிதர்களின் தவறுகளால் ஏழு உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது, மேலும் ஆதிக்க மனப்போக்கும் அதிகார மையங்களும் ஒருங்கிணைகிற காவல் துறையின் மனசாட்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

பொது மக்களின் கூடுதலின் போதும், போராட்டங்களின் மீதும் கட்டவிழ்க்கப்படுகிற இந்த அரச வன்முறையை ஒரு மிகப்பெரிய தேசத்தின் சட்டங்கள் எப்படிக் கையாள்கின்றன என்பதை மீள்பார்வை செய்யும் ஒரு சிக்கலான பாடத்தை இந்த நிகழ்வு நமக்கு வழங்குகிறது. இத்தகைய இக்கட்டான தருணங்களில் யார் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அல்லது அனுமதியை வழங்குகிறார்கள்?, யார் வழங்கினார்கள்?, மனித உயிர்களை அரசுகள் கொல்வது இத்தனை எளிதானதா? போன்ற சட்டக் கேள்விகளை நாம் தீவிரமாக எதிர் கொண்டாக வேண்டும்.

காவல்துறையினர் உடனோ அல்லது ஆதிக்க சாதி மனிதர்கள் உடனான முரண்பாடுகளின் போதோ எப்படியான நடைமுறைகளைக் கையாள வேண்டும் என்கிற அடிப்படை ஒழுக்கத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கங்களும், அவற்றின் முன்னணித் தலைவர்களும் தங்களின் தொண்டர்களுக்கு கற்றுக் கொடுத்தே ஆக வேண்டும். மிகப் பெரிய இழப்புகளில் இருந்தும், தேவையற்ற முரண்பாடுகளில் இருந்தும் எளிய மக்களைக் காக்கும் மிகப் பெரிய பொறுப்பு தங்களுக்கு இருப்பதை எந்த ஒரு அரசியல் கட்சியின் அல்லது இயக்கங்களின் தலைவர்களும் உணர வேண்டும்.

இந்த நிகழ்விற்கு அடிப்படைக் காரணமான ஒரு பள்ளிச் சிறுவனின் மரணத்துக்கு பின்னே மனித நேயத்தோடும், நமது பதவிக்கான உயர் தகுதி அடையாளங்களோடும் நாம் பணியாற்றினோமா என்கிற கேள்வியை ஒவ்வொரு காவலரும் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டும்.

பல்வேறு காரணங்களுக்காக ஒருங்கிணைந்து குரல் கொடுக்கும் இன்றைய தமிழ் இளைஞர்களின் உளவியலில் இந்த நிகழ்வு ஒரு மிகப்பெரிய வீழ்ச்சியைக் கொடுக்காதபடி வழி நடத்திச் செல்கிற தங்கள் பொறுப்பை ஒவ்வொரு சாதியின் தலைவரும் உணர்ந்து இறந்து போன மனித உயிர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

எல்லாவற்றையும் கடந்து இறந்த மனிதர்கள் அனைவரும் போராட வந்தவர்களா?, இல்லை வேடிக்கை பார்த்தவர்களா?, கல்லெறிந்தவர்கள் மட்டுமே குண்டடிபட்டிருக்கிறார்களா? என்கிற பல உண்மைகளை நாம் அறிய வேண்டியிருக்கிறது, காயமடைந்த காவலர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சக மனிதர்களாகவும், சக உயிர்களாகவுமே நாம் உணர வேண்டியிருக்கிறது.
பல்வேறு விழாக்கள், ஒன்று கூடல்கள், தலைவர்களின் பிறந்த நாட்களின் போதெல்லாம் நிகழாத வன்முறையும், துப்பாக்கிச் சூடுகளும் தலித் மக்களின் ஒன்று கூடல்களின் போது தவறாது நிகழ்வதன் பின்னிருக்கும் சமூக மன நிலையை அல்லது அரசியல் காரணங்களை அறிந்து அவற்றை நீக்குவதற்கான மிக அடிப்படையான பலவேறு செயல்பாடுகளில் நாம் ஒருங்கிணைய வேண்டிய ஒரு கட்டாயம் நிகழ்ந்திருக்கிறது,

இறந்த மனிதர்களின் குழந்தைகளை, அவர்களின் அழுகுரலை, அந்தக் குடும்பங்களில் நிகழவிருக்கிற அவலங்களை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள், அந்த அழுகுரலும், அவலங்களும் மரணத்தின் பெயரால் எல்லா மனித உயிர்களுக்கும் பொதுவானது, நாம் தூக்கிலடப்படும் மூன்று உயிர்களைக் காக்கத் தன்னெழுச்சியாகப் புறப்பட்டவர்கள், நமது மண்ணில் உயிர்களைப் பலியிடும் அரச நடைமுறைக்கு எதிராகக் கிளர்ந்தவர்கள், நாம் வரலாறு நெடுகிலும் நாகரீகத்தின் பல்வேறு கூறுகளை விதைத்து முன்னேறியவர்கள், தொடர்ந்தும் அப்படியே இருப்போம் நண்பர்களே.........

“நாம் இப்படி சண்டையிட்டுக் கொள்வதையே நமது எதிரிகள் விரும்புகிறார்கள், ஏனென்றால் நமது வலிமையும், பலவீனமும் என்னவென்பதை அவர்கள் நம்மைவிட நன்கறிவார்கள்.”

நன்றி - கை.அறிவழகன்

1 comments:

தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைதுசெய்வதும், தலித்துக்களால் பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைதுசெய்வதும், தமிழகப் பொலிசாரின் கொள்கையாக இருக்கின்றது!!
தமிழக அரசியல்வாதிகள் ஜாதியின் பெயரால் வாக்குகளை வாங்க எதுவும் செய்வார்கள்!!
இம்மானுவேல்சேகரனின் குருபூஜையை தடுத்து நிறுத்தி முத்தராமலிங்கத்தின் குருபூஜைக்கு இணையாக தமிழகத்தில் வளரவிடக் கூடாது என்பதுதான் அதிமுக அரசின் நோக்கமாக இருக்கிறது!!
- நல்லையா தயாபரன்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More