Slideshow

வாழ்க தோழர் சங்கமித்தை! - -தோழமையுடன் ஜீவமுரளி-

(ஜெர்மெனில் நடந்த INSD மாநாட்டுக்காக எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்ட கட்டுரை இது)

தோழர்களே!
மாற்றுக்கருத்தாளர்களே!
முன்னைநாள் மாற்றுக்கருத்தாளர்களே!
பௌத்தத்தை தழுவிய சங்கமித்தையையும், அம்பேத்காரையும், அயோத்திதாசரையும், என்னையும் போலல்லாது, மகிந்த சிந்தனையை மட்டும் தழுவியவர்களுக்காக நான் ஓரிரு கதைகளும், ஓரிரு கருத்துக்களும் சொல்ல ஆசைப்படுகிறேன். கூடவே என் கனவுகளையும் சொல்ல அனுமதி தரும்படி உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

பாவங்களை மக்களே சுமக்கவேண்டும் என்ற அறவியல், அறிவியல், அரைஅவியல் விதிகளை உற்பத்தி செய்து கொண்டிருக்கின்ற எல்லாம் வல்ல எல்லாக் கடவுள்களையும் தெய்வங்களையும் தூக்கி எறிந்து விட்டு, பாவங்கள் சுமத்தப்பட்ட மக்களின் சார்பிலும் என் கனவுகளைச் சொல்ல பிரத்தியேக அனுமதியை வேண்டி நிற்கிறேன்.


கொல்லாமை, இல்லாமலில்லாமை என்ற புத்தரின் அளப்பெரிய மானுடத் தத்தவத்தினையும், கனவையும் இலங்கையில் வெள்ளரசங்கன்று ஒன்றை நட்டு சங்கமித்தையும் மகிந்தனும் மக்களுக்கு அறிவித்தனர் என ஒரு வரலாற்றுக் கதையுண்டு. அதை சிறுவயதில் படித்திருக்கிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள்.

துரோகம், தேசத்துரோகம் என்ற இரண்டு அருவருக்கத்தக்க வார்த்தைகள் இலங்கையில் தோன்றுவதற்கு முன்னரும், தமிழ்நாட்டில் உள்ள புலிமார்க் அப்பளத்திலிருந்து புலிச்சின்னத்தை பிராபகரன் பிரதியெடுத்து தமிழ்த்தேசியக் கொடியாக வடிவமைக்கும் முன்னரும், சிங்கக் கொடிகளை மகிந்தவின் அரசு இலங்கையின் மூலை முடுக்கெங்கும் பறக்கவிட முன்னரும், அம்பாந்தோட்டைலயில் சீனத்; துறைமுகமும், இலங்கையில் இந்தியக் கம்பனிகளும், மக்களினதும் மகிந்தவினதும் அதிகாரங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்வது பற்றிய சச்சைகளும் போட்டிகளும் வருவதற்கு முன்னரும், குறிப்பாக வடக்கில் வசந்தமும், கிழக்கில் விடிவும் ஒளியும், தெற்கில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியும் வருவதற்கு நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் புவியில் உள்ள ஜீவராசிகள் எல்லாம் இயற்கையையும், சூரியனையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர். கடவுளர்களாக கொண்டாடினர். இயற்கையின் சீற்றங்களினாலும் விடுவிக்கப்பட முடியா இரகசியங்களினாலும் மனிதர்கள் அவற்றைக் கண்டு அஞ்சி நடுங்கினர். பயம் மனிதர்களை ஆண்டது. மனிதர்கள் இயற்கையை வணங்கினர்.

இயற்கையின் அனர்த்தங்களில் இருந்து தப்பிப் பிழைத்தலுக்காகவும், உயிர் வாழுதலுக்காகவும் மனிதர்கள் போராடினர்கள். இயற்கையின் இரகசியங்களை விடுவிக்க முயன்றனர். மனிதர்கள் இயற்கையுடன் போரிட்டு வெல்வது, இயற்கையை அடிபணிய வைப்பது என்ற தொடர் போரியல் வரலாற்றில் நீர் நிலம் காற்று பெண்கள் குழந்தைகள் என்ற மனிதவாழ்வின் ஆதாரங்களை அலட்சியப் படுத்தி விட்டு பொருட்களையும் செல்வங்களையும் அதிகாரங்களையும் குவிப்பதையே குறியாய்க் கொண்டனர். மனிதனை மனிதன் கொல்லாமல் வாழவும், இல்லாமை தீரவும் போராடிய புத்தரின் கனவும், தீண்டாமையை இல்லாதொழிக்க போராடிய அம்பேத்கரின் கனவும், மனதில் பட்டதை பட்டபடியே சொல்லிய அயோத்தி தாசரின் கனவும், எனது கனவும், உங்களது கனவும், பாவமே செய்யாத மக்களின் கனவும் பலிக்காமலே போயின.

கனவுகளை பலிக்க வைப்பதற்காகத் தான் தெய்வங்களும் மன்னர்களும் மீட்பர்களும் மாவீரர்களும் தேசப் பற்றாளர்களும் உருவாகினர் என்ற வாதப் பிரதிவாதங்கள் பல முனைகளிலும் மாற்றுக் கருத்தாளர்களாலும், கடவுள் நம்பிக்கையாளர்களாலும் வைக்கப்படுகின்றன. கொல்லாமை, இல்லாமல் இல்லாமை என்ற மனிதர்களின் கனவுகளை பலிக்க வைக்க மக்களை பலி கொடுப்பது தவிர்க்க முடியாத வரலாற்று முடிவு என மேற்கோள்களுடனும் தொடர்ந்தும் வாதப்பிரதிவாதங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் மாற்றுக் கருத்தாளர்களை, போட்டுத் தள்ளுவது புலிகளுக்கும் ராஜபக்ச குடும்பத்துக்கும் மட்டுமான வழக்கமல்ல, அது இராசதுரோக காலத்திலிருந்து வழிவந்த கலை என கொலையம்சத்துடன் அரசியற் புனைவுகளை செய்யும் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களையும் இந்தப் புவி தாங்கிய படியே சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றது.

சூரியனுக்கும் இயற்கைக்கும் அஞ்சி நடுங்கி அவற்றை கடவுளாக கொண்டாடிய மனிதனின் வரலாறு கொலை காரர்களையும், கொள்ளைக் காரர்களையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற வரலாறாக இன்று மாற்றியமைக்கப் பட்டிருக்கின்றது. அவர்களை கொண்டுடாடுகின்ற வரலாறாக, நம்புகின்ற வரலாறாக, போற்றுகின்ற வரலாறாக இன்று மாற்றியமைக்கப் பட்டுள்ளது.

விடுவிக்கப்படாத இயற்கையின் இரகசியங்களை கடவுளாக கொண்டாடுகின்ற மனிதர்களும் இந்தப் புவியில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல விடுவிக்கப்படாத அரசியல் இரகசியங்களையும் கொலைகளையும் கொள்ளைகளையும் கண்டு அஞ்சி நடுங்குகின்ற மனிதர்களும் இந்தப் புவியில் வாழ்ந்து வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக கொலை காரர்களையும் கொள்ளைக்காரர்களையும்; கட்சித் தலைவர்களையும் கடவுளர்களாக கொண்டாடும்படி பாவப்பட்ட மக்களும் பணிக்கப்பட்டுள்ளனர். “கடவுள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை, கடவுளை நம்புபவன் முட்டாள், கடவுளை கொண்டாடுபவன் காட்டுமிராண்டி” என்ற பெரியாரின் அறிவியல் தத்துவத்தினைக் கற்றுத் தேர்ந்த முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்கள் கூட கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் கடவுளர்களாக கொண்டாடும் ஓர் அரசியற்சூழல் இலங்கையிலும் புகலிடத்திலும் இன்று உருவாகியிருக்கின்றது. அச்சமும் ஆசையும் கையறுநிலையும் கடவுள் மறுப்பை அரசியலாகக் கொண்ட இ.வே.ராமசாமியை குழிதோண்டிப் புதைக்கும் அரசியலில் கொண்டுவந்து விட்டிருக்கிறது.

மாற்றுக்கருத்து என்றால் என்னவென்று மிகத் துல்லியமாக சொல்லிவிட்டுப் போன வோல்டேயர் என்ற மனிதன் சகமனிதன் குறித்த ஆழ்ந்த அக்கறையினால் சொல்லிவிட்டுப் போன அதியற்புதமான தத்துவமான “நான் உனது கருத்துடன் உடன்படாவிட்டாலும் உன் கருத்தை சொல்வதற்கா போராடுவேன் அல்லது உயிரையும் கொடுப்பேன்” என்ற உயிருள்ள வார்த்தைகளை காப்பாற்றுவதை கைவிட்ட முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்கள், கொலை காரர்களையும் கொள்ளைக் காரர்களையும் கட்சித் தலைவர்களையும் கையெடுத்த கும்பிட வேண்டிய துர்ப்பாக்கிய சூழலையும் இன்றைய இலங்கையின் அரசியல் உருவாக்கி தந்திருக்கின்றது.

முன்னைநாள் கொலைகாரர்களும் கொள்ளைக்காரர்களும் மாவீரர்களும் கடவுளர்களுமாகவிருந்த விடுதலைப் புலிகளை, ஆசியாக் கண்டத்தின் மிகப்பெரும் கொலைகாரர்களும் கொள்ளைக்காரரும் அரசியற் சண்டியரும் சேர்ந்து ஒரு இரவு முடியமுன் அழித்திருக்கிறார்கள் என்பது நீங்கள் எல்லோரும் அறிந்த உண்மை. இதற்காக மகிந்த ராஜபக்ச குடும்பத்தை மட்டும் ஏன் பிரத்தியேகமாக கும்பிடச் சொல்கிறார்கள்? ஏன் வணங்கித் துதிபாடச் சொல்கிறார்கள்? இதற்கு விடை காணுவதே அவசரமானதும் அவசியமானதும் பணி என நான் ஒருநாளும் சொல்லப் போவதில்லை. இதற்கான பல விடைகள் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களால் கதைகதையாக சொல்லப்பட்டுக் கொண்டு வருகின்றன. கட்டுரைகளாக எழுதப்படடுகின்றன. இது கூட கடவுள்களால் தண்டிக்கப்படாமல் தப்பிப்பிழைத்தல் அல்லது உயிர்வாழுதல் என்ற வரையறைக்குள் முழுமையாக கொள்ளமுடியாது. இதற்கு மிகச்சரியாக பொருந்தக்கூடிய அரசியற் சொல்லாடல் ஒன்று தமிழிலும் இருக்கின்றது அதை “பிழைப்பு வாதம்” என அழகாகச் சொல்வார்கள். உயிர் பிழைத்து வாழுதல் என்பது மனிதனின் தேவையும் இயல்பும் அடிப்படை உரிமையும் கூட. இதை நான் பிழைப்புவாதம் என்ற அரசியல் அர்த்தத்திலிருந்து பிரித்து வேறுபடுத்தியே பார்க்கிறேன். பாவங்கள் பழிகள் சுமத்தப்பட்ட மக்களை ஒருபக்கத்தில் தூக்கி வைத்துவிடுவோம். உதாரணத்திற்கு ஒரு டக்லஸ் தேவானந்தா, ஒரு சந்திரகாந்தன், ஒரு வினாயகமூர்த்தி முரளிதரன்;, ஒரு சரத் பொன்சேகா, ஒரு சந்திரிகா புலிகளிடமிருந்து தப்பிப் பிழைத்து உயிர்வாழ்ந்து கொண்டிருப்பது “தப்பிப் பிழைத்து உயிர் வாழ்தல்” என்பதற்கான வலுவான குறியீடுகள். மாறாக இந்த நபர்கள் நாங்கள் ஒருபக்கத்தில் தூக்கி வைத்த மக்களின் மீது மிளகாய் அரைப்பதும், கொலைகாரர்களையும் கொள்ளைக்காரர்களையும் பாதுகாப்பதும் அவர்களின் கொலை அரசியலுக்கு நியாங்கள் சொல்வது என்பதும் “பிழைப்பு வாதம்” என்பதற்கான வலுவான குறியீடுகள்.

கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் கருத்துச் சுதந்திர மறுப்புக்கும் மத்தியில் இலங்கையில் டெவலப்மன்ற் நடந்து கொண்டிருக்கின்றன என ஒரு முசுப்பாத்தியான பிரச்சாரம் அரசாலும் முன்னை நாள் மாற்றுக் கருத்தாளர்களாலும் செய்யப்படுகின்றன. இது என்னுடைய தலையை சுற்ற வைக்கிறது. எரிச்சலூட்டுகிறது. பாவங்கள் தலைகளின் மேல் சுமத்தப்பட்ட மக்களின் தலைகளை தொடர்ச்சியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரசும் அதன் பிரச்சார ஊடகங்களும் அரசின் வாரிசுகளும் சொல்லும் “டெவலப்மனற்” என்றால் என்னதான் என்று அறியும் ஆவலில் நான் பல மொழி அகராதிகளையும் புரட்டிப் பார்த்து விட்டேன். ஒரு விசயமும் பிடிபடவில்லை.
தோழனும் புகைப்படம் பிடிக்கும் கலைஞம் கவிஞனுமாகிய தமயந்தியிடம் “டெவலப்” என்றால் என்ன என்று கேட்டேன்.

“ஏன்ரா! உது கூட தெரியாமல்த்தானா இன்னும் உயிரோடை இருக்கிறாய்” என்று கேட்டான்

நானும் “ஓமடா…” என்று வார்த்தையை இழுத்தபடியே

“விளக்கமில்லாதபடியால் தானே கேட்கிறேன்” என்றேன்.

“அது சின்ன விசயமடா. இப்ப பார் இந்தக் கமராவைப் பார் நான் பிடிச்ச போட்டோக்கள் இந்தப் பிலிம் ரோளுக்குள் இருக்குது. இதை வெறும் கண்ணால் பார்த்தால் உனக்குத் தெரியாது. பிலிம் ரோலை கொண்டு போய் பிலிம் கழுவுற கடையில குடுத்தால், கடைக்காரன் அதை -டெவலப்- செய்து கண்ணால் பார்க்கிறமாதிரி கழுவித் தருவான். அதற்கு -நெக்கற்றிவ் என்று பெயர் சொல்வார்கள். அந்த நெக்கற்றிவை ஒரு பேப்பரிலை அச்சடித்தால் அதை -பொசிற்றிவ்- எண்டு சொல்வார்கள்”

எனக்கு உண்மைலிலேயே தலை சுற்றியது “பொறு பொறு எனக்கு உண்மையியேலே விளங்கவில்லை ஒருக்கா திருப்பிச் சொல்லடா”

டேய்! உன்ரை தலையிலை இடி விழ…! அதாவது கண்ணுக்குத் தொரியாத காட்சிகள் இருக்கிற பிலிம் ரோலை கழுவினால் நாங்கள் காணுவது நெக்கற்றிவ். அதை பேப்பரிலை அச்சடித்தால் காணுவது பொசிற்வ். இதுதான் டெவலப்பின்ரை விதிமுறை” என்றான்.

“மச்சான் நான் கேக்கிறனெண்டு கோவிக்காதை பொசிற்றிவ்வை நெக்கற்றிவாய் மாத்தேலாதோடா?”

”போடா போ நெக்கற்றிவ் அப்பிடியேதான்ரா இருக்கும். ஏன் பொசிற்றிவை நெக்கற்றிவ்வாய் மாத்தோணும் எண்டு நினைக்கிறாய்? உனக்கென்ன HIV பொசிற்றிவாடா?” என்று கேட்டான்.
“இதைத்தான் பிலிம் காட்டுவது என்று சொல்வார்களா?” என்று திருப்பிக் கேட்டேன்.

அவனது முகம் கோபத்தால் சிவந்தது “கோவிக்காதை மச்சான் நான் பேப்பரிலை பொசிற்றிவாய் அச்சடித்து விடும் டெவலப்மன்ற் பற்றிக் கேட்கையில்லை ஒரு தேசத்தின் டெவலப்மன்ற் என்றால் என்னவென்ற அர்த்தத்தில்தான் கேட்டேன். இலங்கையிலை டெவலப்மன்ற்; நடக்குதென்று அரசும் அரசின் வாரிசுகளும் முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களும் சொல்கிறார்கள் அதுதான் கேட்டனான்.”

அவனின் கோபம் இன்னும் அதிகரித்தது முகத்தை திருப்பிக் கொண்டான். கேட்கக் கூடாத கேள்வி ஒன்றை கேட்டுவிட்டேனோ என்று பயந்துவிட்டேன். எனக்கு அவனை சமாதனப் படுத்தும் வழி தெரியவில்லை என் கேள்விக்கு விடை அறியும் ஆவலில் மீண்டும் தொடர்ந்து பேச்சுக் கொடுத்தேன்

“இல்லையடா இலங்கையிலை பாரிய நெடுஞ்சாலைகள் போடப் படுகின்றனவாம். இந்துக் கோயில்களெல்லாம் புனரமைக்கப் படுகின்றதாம். இன்னும் கேளன், திருகோணமலையிலை முப்பது வருசமா திறக்காத ஆலயம் திறக்கப் பட்டிருக்காம், மீள் குடிறே;றம் செய்யப்பட்ட மக்களுக்கு விசுக்கோத்தும் வீடு கட்ட காசும் கொடுக்கப்படுகிறதாம். இதைப் பார்த்தால் இலங்கையிலை டெவலப்மன்ற் நடக்கிற மாதிரித்தான் தெரியுதடா” என்றேன்.

ஏன்ரா பன்னாடை! விசுக்கோத்து!! விசுக்கோத்து குடுத்தா டெவலப்மன்ராடா? என்று தன் கையில் வைத்திருந்த கமறாவை நிலத்தில அடித்து நொருக்கினான். நான் கூனிக் குறுகிப் போய் அப்படியே உட்கார்ந்து விட்டேன்.


“டேய் டேய்… கதையாதை. உப்புக்கு வழிலில்லாத அரசாங்கமும் அவையளின்ரை ஆக்களும் டெவலப்மன்ரைப் பற்றிக் கதைக்க வந்திட்டினம். சனம் உப்புக்கு வழியில்லாமல் திரியுதடா. அது தெரியுமா உனக்கு..? இவரும் டெவலப்பெண்டு விசுக்கோத்துத் தனமா கதைக்க வந்திட்டாராம்! போடா பன்னாடை” என்றான் கோபம் தணிந்த குரலில்.

கட்டப்படுகின்ற நெடுஞ் சாலைகளில் எல்லாம் வல்ல கடவுளர்களை ஊர்வலமாக நடத்தி வந்து ஆலயங்களில் இருத்திவைத்து மக்ளை இரட்சிப்பதற்கு முயற்சி செய்யும் ஒரு அரசிடம் எப்பிடி உப்பு இல்லாமல் போகும் என்ற கேள்வி என்னை குடைந்தெடுத்தது.

”என்னால் நம்ப முடியவில்லை மச்சான். உப்புக்கு வழியில்லாத அரசாங்கம் உலகத்தில எங்கேயாவது இருக்குதா நீ பகிடி விடாதே தமயந்தி” என்றேன்.

”அப்ப ஏன்ரா பிடிச்ச மீனுகள் எல்லாத்தையும் சனம் கடலிலை திருப்பிக் கொட்டுதுகள்? சனத்துக்கு என்ன விசரே..?” என்று திருப்பி கேட்டான்.

”எனக்கு தலை சுத்துது தமயந்தி விளக்மாக சொல்லு” என்றேன்.

”எடேய் முப்பது வருசமா அரசு மீன் பிடிக்கத் தடை போட்டதாலை வடகடலில், மன்னார், தீவுக்கடலில் மீன் விளைஞ்சுபோய்க் கிடக்குது. அதுதான்ரா டெவலப் பண்ணிப் போய்க் கிடக்குது. இப்ப சனம் இரவிலையும் பகல்லையும் மீன் பிடிக்குதுகள். நல்ல மீன் கிடைக்குது. கிடைக்கிற மீனை சந்தைப்படுத முடியாமல் சனம் கடலிலை கொட்டுதுகள்”

”என்ன கடலிலை கொட்டுதுகளோ? அப்ப சனத்துக்கு விசர்தான்” என்றேன்.

”அப்பிடி இல்லையடா.. உள்@ரிலை சந்தைப்படுத்திற மீனை விட மீதியையும் கெட்டுப்போகாமல் சந்தைப்படுத்த வேணும். உதாரணத்துக்கு கொழும்புக்கு மீன் அனுப்பி சந்தைப் படுத்துறதெண்டால் ஐஸ் வேணும். வடக்கிலை ஒரு ஐஸ் செய்யிற தொழிற்சாலைகளும் இல்லை. மீனைப் பதப்படுத்தி சந்தைப்படுத்த இன்னொரு வழிதான் கருவாடு போடுறது. கருவாடு போடுவதற்கு உப்பு வேணும் அங்கை சமைக்கவே உப்புக் காணது”

”ஏன் தமயந்தி ஊரிலை புளி கூடவா இல்லை?” என்று கேட்டேன்

”ஏன் கேட்கிறாய்?” என்றான்

”இல்லை புளியிருந்தால் புளியாணம் போட்டு மீனைப் பதப்படுத்தலாம்தானே?” என்றேன்.
அவன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான்.

நான் வெட்கத்தால் ஆகாயத்தையும் சூரியனையும் மாறிமாறிப் பார்த்தேன். உப்பு மழையாகக் கொட்டக்கூடாதா என்று ஏங்கினேன். உப்பை உற்பத்தி செய்வதுதான் சூரியனின் அவசியமானதும் அவசரமானதும் பணியென எனக்குள்ளேயே நினைத்துக் கொண்டேன்

-எனது பொருளை நான் உன்னிடம் விற்க முடியாவிட்டாலும் கூட, உனது பொருளை விற்பதற்கான உரிமைக்காக நான் உயிரையும் கொடுப்பேன்- என ஒரு அரசு சொல்லுமாயின் அங்கே டெவலப்மன்ற் நடக்கின்றது எனக் கொள்ளலாம்.

வோல்டெயரின் வார்த்தைகளை சூரியன் தனது கதிர்களில் தாங்கி புவியில் விதைத்தபடியே வலம் வந்து கொண்டிருப்பதை முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களும், கொலைகாரர்களும், கொள்ளைக் காரர்களும் நன்கு அறிவார்கள். வோல்டேயரை சமூக விரோதியாக்கவும், சூரியனைச் சுட்டு விழுத்தவும் எடுக்கப்பபட்ட முயற்சிகள் யாவும் வெளிச்சத்துக்கு வந்தபடியேதான் இருக்கின்றன.

ஒருவேளைச் சோற்றிற்கும், குடிக்கத் தண்ணீருக்கும், படுத்துறங்க ஒரு குடிசைக்கும், உப்புக்கும் வழியற்ற இலங்கைத் தனித்தீவின் பாவப்பட்ட மக்களுக்கு நெடுஞ்சாலைகள் எதற்காக போடப்படுகின்றன? டெவலப்மன்ற் என்றால் என்னவென்று விளங்கிக் கொள்வது இன்னும் கடினமாக்கப் பட்டிருக்கிறது.

நிலநடுக்கத்தால் எல்லாவற்றையும் இழந்துபோன கெயிட்டி அகதிகளுக்குக் கூட பன்னாட்டு அரசுகள் விசுக்கோத்தும் கைநிறை காசும் கொடுப்பதாக செய்திகளும், செய்திப் படங்களும் வந்து கொண்டே இருக்கின்றன. கைநிறைய வைத்திருக்கும் காசை வைத்து வீடுகள் கட்ட முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதை வைத்துக் கொண்டு மேலும் சில காலம் உயிர் வாழுவதற்கான விசுக்கோத்துப் பெட்டிகளை பன்னாட்டு அரசுகளிடமிருந்தும் நிறுவனங்களிடமிருந்தும் கெயிட்டி மக்கள் இறக்குமதி செய்யமுடியும் என்று மட்டும் தோன்றுகிறது.

டெவலப்மன்ற் என்ற பெயரில் புதிய கடவுள்களையும், கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் அபிவிருத்தி செய்வதற்காக கோயில்களும் புனரமைக்கப்படுகின்றன. கோபுரங்கள் கட்டப்படுகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காகவும் உல்லாசப் பிரயாணத்துறையை வடக்கிலும் கிழக்கிலும் வளர்த்தெடுக்கும் முயற்சியிலும் லிட்டில் எயிட் அன்ட் தேசம்நெற் கோ என்ற லண்டன் கம்பனியொன்று முயற்சிகளை எடுத்து வருகிறது. காற்றுள்ள போதே கம்பனிகள் தூற்றிக்கொள்ளவது அபிவிருத்தியென்று நாங்கள் கொள்ள முடியுமா? ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்குள்ள நெடுஞ்சாலைகளினதும்; கோவில்களினதும் எண்ணிக்கைகளையும் வைத்துத்தான் கணிப்பிட முடியும் என யாராவது சொல்லியிருக்கிறார்களா? ஆம், தேசம்நெற் இணையத்தளத்தின் ஆசிரியர் ஒருவர் சொல்லியிருக்கிறார். உப்பு மூடைகளுக்கு வழியற்ற ஒரு அரசு எப்பிடி ஒரு தேசத்தை, தேசம் நெற்றையும் டெவலப் பண்ணப் போகின்றது என்ற கேள்விகள் எங்களின் முன்னே கிடக்கின்றன.

உங்களினதும், எனதும் பாவங்கள் சுமக்கப் பணிக்கப்பட்ட மக்களினதும், புத்தரின் கனவுகளுமாகிய கொல்லாமை இல்லாமை தீண்டாமையை கொலைகாரர்களினாலும் கொள்ளைக் காரர்களினாலும் கடவுள்களினாலும் எப்படி இல்லாதொழிக்க முடியும் என்ற கேள்விக்கு சரத் பொன்சேகாதான் விடை என நீங்கள் யாரும் கணிப்பிட்டிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதேபோலத்தான் சிறுபான்மையின மக்களும் கணிப்பிட்டிருக்க மாட்டார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தும் ஏன் சரத் பொன்சேகா என்ற கொலையாளிக்கும் கொள்ளைக் காரனுக்கும் சிறுபான்மை இனங்களின் வாக்குகள் அதிகம் கிடைத்தன என்று கேள்வி கேட்டால் கொலைகளையும் கொள்ளைகளையும் யார் கூடுதலாக செய்வது?, யார் குறைவாகச் செய்வது என்ற ஒப்பீட்டு அடிப்படையில் அவர்கள் முடிவுகளுக்கு வந்திருக்கலாம். அல்லது மகிந்தவை பழிவாங்கும் தெரிவாகக் கூட இருக்கலாம். எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், நடமாடும் சுதந்திரம் அற்ற மக்கள் கடவுளர்களிடமும், கொலைகாரர்களிமும், கொள்ளைக்காரர்களிடமும் நம்பி மோசம் போவதும் மோட்சம் அடைவதும் புதியவிடயங்கள் அல்ல! நான் பௌத்தத்தை தழுவியதில் மிகவும் பெருமை அடைகிறேன்.

மரியாதைக்குரிய தோழர்களே, மாற்றுக் கருத்தாளர்களே! வணக்கத்துக்குரிய முன்னைநாள் மாற்றுக் கருத்தாளர்களே! மகிந்த மன்னர்களிகனால் துரத்தியடிக்கப்பட்ட ஊடகவியலளர்களே!, கொல்லாமை, இல்லாமை, தீண்டாமையை இல்லாமல் செய்ய கனவு காணும் பௌத்தத்தை தழுவுவதில் நான் மிகவும் மகிழுச்சி அடைகிறேன்.

இலங்கையின் இனமுரண்பாட்டு அரசியலில் உள்ள சிக்கல்களின் முடிச்சுகளை எப்படி அவிழ்ப்பது என நீங்களும் அக்கறையுடன் வாதப் பிரதிவாதங்களை செய்து கொண்டிருக்கிறீர்கள். இதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களைப் போலவே நானும் சிறுபான்மை இனங்களின் அடிப்படை அரசியல்கள் உரிமைகள் குறித்தும் விவாதித்தும் கனவுகளும் கண்டு வருபவன்.

புலிகளின் ஆயுத அரசியலின் அழிவின்முன், தமிழ்த்தேசப்பற்றின் காரணமக கட்டாய உறக்கத்தில் கிடந்த சிறுபான்மை இனங்களுக்குள்ளேயேயான சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் மெல்ல டெவலப்பண்ணத் தொடங்கிவிட்டன. பிரான்சிலுள்ள தலித் முன்னணியின் தலைவர் தேவதாசன் முயற்சியால் «சிறுபான்மை மக்கள் மாகா சபை» மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. தலித்துக்கள் அமைப்பாவதன் முக்கியத்துவம் பற்றி விவாதிக்கப் பட்டிக்கின்றது. நான் ஒரு தலித் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற அரசியல் அடிப்படையில் அதை வரவேற்கிறேன். ஆதிக்க சாதிகளெல்லாம் தமிழத்தேசிய கூட்டமைப்பினூடாகவும், பழையமாணவர் சங்கங்கள் மூலமாகவும், பத்திகைகள் மூலமாகவும் இணையத் தளங்கள் மூலமாகவும் அமைப்பு வடிவம் பெறும் பொழுது, ஏன் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் «ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்பு» ஆகக் கூடாது? இந்த முயற்சியில் முன்பு சாதி எதிர்ப்பு போரட்டங்களில் பங்குபற்றிய தோழர்களும், எனது தமிழாசிரியர்களில் ஒருவருமான தெணியான் அவர்களும் இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

அந்த மகிழ்ச்சி தலித் மேம்பாட்டு முன்னணி அமைப்பினர் மக்களை உப்புக்கண்டம் போடும் மகிந்தவின் அரசை புகழ் பாடுவதை நினைத்தால் அடுத்த கணமே காணமல் போய்விடுகிறது. அப்படி புகழ் பாடுவதால் தலித் சமூகமே மகிந்த அரசின் பின் அணிவகுத்து நிற்கின்றது என்று யாரும் பொருள் கொள்ளத் தேவையில்லை. அப்படிப் பார்த்தால் புலிகள் யாழ் இசுலாமிய சமூகத்தை துரோகச் சமுகமாக அறிவித்தது சரியென்று ஆகிவிடும். இது அறிவுபூர்வமான லொஜிக் அல்ல. ஆரோக்கியமான லொஜிக்குமல்ல காணமல் போகும் சிங்கள் ஊடகவியலாளர்கள் பற்றியோ கொல்லப்படும் ஊடகவியலாளர்கள் பற்றியோ நாட்டைவிட்டு தப்பியோடும் ஊடகவியளர்கள் பற்றியோ எந்த அக்கறையுமின்றி அதற்குப் பின்னால் உள்ள அரசின் ஜனநாயக மறுப்பைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், விசுக்கோத்து டெவலப்மென்ற் இலங்கையில் நடைபெறுவதாக கூறுவதும், மகிந்த அரசை புரட்சி அரசாக வர்ணிப்பதும் என்ன மண்ணாங்கட்டி லொஜிக் என்றுதான் விளங்கவில்லை.

தோழர்களே!
இந்திய தேசம் எங்களுக்கு பல பாடங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்திருக்கிறது. தலித் போராட்டங்கள் ஒரு பக்கமாயும் தெடர்ச்சியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தலித் தலைமைகள் அதிகரங்களுடனும் இந்துத்துவ வாதிகளுடனும் கூட்டுச் சேர்ந்து ஆட்சி செய்கின்றன. ஒரு பிரதியை பல பிரதிகளாக வாசிகத் தெரிந்த நாங்கள் இந்திய தேசத்திலிருத்து எல்லாவற்றையும் பிரதி செய்ய வேண்டிய தேவை இல்லை என்றே கருதுகிறேன். மேலும் இலங்கைத் தலித் மக்களுக்கு ஒரு மாயாவதியோ, ஒரு திருமாவளவனோ தேவை இல்லை என்றும் கருதுகிறேன் புலிகளின் அழிவின்பின் மலையகத் தலித் மக்களின் சம்பள உயர்வுப் போராட்டமும் அதன் வெற்றியும் இலங்கையில் உள்ள தலித் மக்களுக்கும், சிறுபான்மை இனங்களுக்கும் பெரும்பான்மை இனத்திற்கும் மிகப்பெரிய படிப்பினையாக உள்ளது. வாழ்க பௌத்த தத்துவம்! வாழ்க தோழர் சங்கமித்தையின் நாமம்!!

நன்றி தோழர்களே.

-தோழமையுடன் ஜீவமுரளி-

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More