Slideshow

கலாநிதி சி. சிவசேகரத்துடன் ஒரு உரையாடல் -ஜீவமுரளி


தேசம், மொழி, சாதி, பால், சிறூபான்மையினரின் உரிமைகள் சார்ந்த அரசியற் போராட்டங்களும், அவர்களின் அடையாள அரசியல் போராட்டங்களும் இறுதியில் தோல்வியைத் தழுவிக் கொள்கின்றன என்ற வாதங்களும், அவை தழுவிய உபதேசங்களும் இன்று தொடர்ச்சியாக வலியுறுத்தப் பட்டுக்கொண்டு வருகின்றன. இவை தோல்விகளைத் தழுவிக்கொள்ளும் என்று ஏற்கனவே எங்களுக்குத் தெரியும் என முன்முடிவுகளை அன்று சொன்னவர்களும், இன்று சொல்பவர்களும் பாலஸ்தீனத்தையும், குர்திஸ்தானையும், முள்ளிவாய்க்காலையும் உதாரணங்களாக மீண்டும் வலியுறுத்துகின்றனர். தேசம், அடையாளங்கள் சார்ந்த போரட்டங்களின் தோல்வி என்பன ஏகாதிபத்தியங்களினதும், வல்லரசுகளினதும் சதி என ஒற்றை வரியில் விளங்கப்படுத்தப் படுவனவாயும், ஒற்றைவரியில் விளங்கப்படவேண்டிய சூத்திரமாகவும் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த ஒற்றை வரி விளக்கங்கள் இன்றுள்ள ஒடுக்கப்பட்ட தலித் மற்றும் விளிம்பு நிலை மக்களின் போராட்டங்களையும், பெண்களின் போராட்டங்களையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் விளங்கிக்கொள்ள போதுமானவையா? என்ற கேள்வி என்னைக் கேள்விமேல் கேள்விகளை கேட்க வைக்கின்றன. எனது முதலாவது கேள்விக்கும் அதனைத் தொடந்து வருகின்ற நூற்றி ஓராவது கேள்விக்கும் கிடைக்கும் பதில் ஒரே பதிலாகவும், ஒற்றைவரிப் பதிலாகவுமே இருக்கின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியத்தின் சதி வர்க்கப்போராட்டமும் வர்க்கவிடுதலையுமே எல்லாவற்றிற்குமான சர்வரோக நிவாரணி என்பதே அந்தப்பதிலாக பல முனைகளிலிருந்தும் உபதேசங்களாக வந்து விழுகின்றன
உனது சாதியையும், உனது மனைவியையும், உனது காதலியையும், உனதுவீட்டுப் பெண்களையும், அண்டைவீட்டுப் பெண்களையும் தவிர ஏனையவை எல்லாவற்றையும் சந்தேகம் கொள்க என்றுதான், மாக்ஸின் “எல்லாவற்றையுமே சந்தேகம் கொள்“ என்ற வரிகளைப்புரிந்து வைத்திருக்கிறேன். இந்தப்புரிதலின் தொடர்ச்சியாகவே வரலாறு என்பது மக்களின் போரட்டங்கள் என்ற கோட்பாட்டையும் விளங்கி வைத்திருக்கிறேன். இந்தப் புரிதல்கள் ஒவ்வொன்றும் ஒடுக்கப்பட்ட மக்களினதும் பெண்களினதும் போராட்டங்களை விளக்கங்கிக்கொள்ள போதுமானவையாகத் தோன்றவில்லை.

அடையாளங்களினதும், தேசியவாதப் போராட்டங்களினதும் தோல்வி ஏகாதிபத்தியத்தின் சதி என்ற கோட்பாட்டையும், வர்க்கவிடுதலையே முடிந்த முடிவு என்ற ஒற்றை வரி சர்வரோக நிவாரணிக் கோட்பாட்டையும் தலித் போராட்டங்களுடனும் பெண்ணியப் போராட்டங்களுடனும் தொடர்புபடுத்தி ஒப்பீட்டளவில் முடிவுகளுக்கு வரலாமா என நான் குழம்பிக்கொண்டிருக்கும் பொழுது தான் கலாநிதி சி.சிவசேகரத்தின் "தொடரவேண்டிய போராட்டம்" என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்தபின் தாறுமாறாக் குளம்பிப்போய்விட்டேன். தூக்கமற்ற இரவுகளும் ஒளியே அற்ற ஐரோப்பிய பகல்பொழுதும் என்னை கலாநிதி சிவசேகரத்துடன் ஒரு உரையாடலை செய்யத் தூண்டின. அந்த உரையாடலுக்காக தோழர்கள், மாக்ஸ், லெனின், மாஓ, அம்பேத்கார், ஈ வே ராமசாமி மற்றும் புகலிடங்களிலுள்ள மாக்சிச லெனினிய பற்றாளர்களையும், தமிழ்நாட்டிலிருந்து புதிய காலாச்சார ஜனநாயகக்காரர்களையும், வினவு டொட் கொம்மையும் அழைத்திருந்தேன். எல்லோரும் சமூகமளித்திருந்தார்கள் கூடவே ரோசாலுக்சம்பேர்க், சி மோன் தி பு வா மற்றும் இன்றுள்ள பெண்ணியவாதிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தேன். நீர் உம்மட வேலையைப் பாரும் எங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் என்று தோழமையுடன் மறுத்து விட்டார்கள். என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்கு சொல்வதை விட்டு நீர் என்ன செய்யவேண்டும் என லெனினுக்கு போய் சொல்லும் அல்லது கேட்டுத் தெரிந்துகொள்ளும் என ஒரே குரலில் சொன்னார்கள். நான் முதலில் சங்கடப்பட்டாலும் அவர்கள் சொல்லுவதிலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியவில்லை. இதைப்பற்றி வெளியே மூச்சு விடவில்லை. இதை நம் தோழர்களுக்குச் சொன்னால் மானமும் அவமானமும் சேர்ந்து உரையாடலை திசைதிருப்பி ஏகாதிபத்தியத்தின் சதி வரைக்கும் கொண்டு சென்றுவிடும் என்ற அச்ச உணர்வு காரணமாக தவிர்த்துக்கொண்டேன்.
ஒவ்வொரு தனிநபரினதும், அவரவருக்கே உரிய பாதுகாப்புக் காரணங்கள் கருதி காற்றும், ஒளியும் புகமுடியாத ஒரு அறையில் அருகருகே வட்டமாக இலகுவில் அறுத்தெடுத்துவிட முடியாத இரும்புச்சங்கிலி பிணைச்சல்கள் போல் அமர்ந்திருந்தோம். இந்த அறை ஒரு சிறையை ஒத்திருந்தது. பொலிஸ்காரர்கள் ஒருமனிதனைக் கைது செய்து முன் விசாரணைக்காக தள்ளி பூட்டிவிட்டுப் போகும் அறையைப்போல் தோற்றமளித்தது. அந்த இருட்டு அறையின் ஒரு பக்கச்சுவரில் தடித்த சிறுகண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. மங்கிய ஒளி அந்த தடித்த கண்ணாடி ஊடாக எட்டிப்பார்த்தது.

யாருடைய முகங்களும் தெளிவாக தெரியவில்லையாயினும் அவர்களுடைய முகவெட்டு குரல்கள் அசைவுகள் தாடி நடை உடை பாவனை என்பனவற்றை வைத்து அடையாளம் காணமுடிந்தது. தோழர் சிவசேகரத்தின் தொடர வேண்டிய போராட்டத்தின் கட்டுரை மீதான உரையாடலும் விவாதமும் தொடங்குவதற்கு முன் கூட்டத்தை ஒழுங்கு படுத்தியவர் என்ற நல்லபிப்பிராயத்தில் அதை நெறிப்படுத்த ஒரு தலைமை வேண்டுமென கூடியிருந்தவர்கள் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். எட கடவுளே! ஏன் எனக்கு இப்படி ஒரு சோதனை என நான் தலையில் கைவைத்த பொழுது பின் கதிரையில் இருந்த தோழர் என் முதுகில் தட்டி தோழரே நான் ஒரு வார்த்தை பேசலாமா என்று கேட்டார். நான் என் தலையிலிருந்த கையை எடுத்து ஓம் ஓம் சொல்லுங்க தோழரே என்றேன்.

பிரியத்துக்கும் அன்புக்குமுரிய தோழர்களே! வாழ்த்துகிறேன் உங்களை. கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரை சாதி முறைபற்றியும், தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியும், பெண்களைப்பற்றியும் வர்க்க விடுதலை பற்றியும் பேசுகிறது. ஆனால் இக்கட்டுரையில் தலித்மக்கள் பற்றியும், இந்துமதத்தைபற்றியும், சாதியமைப்பை பற்றியும் ஆய்வுகளையும் போராட்டங்களையும் செய்தவரான பாபாசாகேப் அம்பேத்கர் காணாமல் போய்விட்டார். இது தோழர் சிவசேகரத்தினது தனிப்பெரும் திறமை. ஆகவே அம்பேத்கர் இந்த உரையாடலுக்கு தலைமை தாங்குவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன் என்றார். கூட்டத்தில் சலசலப்பும் கூச்சலும் ஏற்பட்டது.

தோழர்களே அமைதிகாத்து உரையாடலை தொடங்குவதற்கு அனுமதியுங்கள் என்றேன்.
முடியாது அப்பேத்கர் தலைமை தாங்க முடியாது அவர் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி. எங்களின் ஆசான்கள் மூவரை இங்கு அழைத்து விட்டு அவர்களை அவமானப்படுத்துகிறீர் தோழரே என்ற குரல்கள் நான்கு பக்கங்களிலிருந்தும் வந்தன.

என் தலையிலேயே நானே மண்ணள்ளிப் போடுகிறேனோ என்று ஒருகணம் ஆடிப்போய்விட்டேன். இருந்தாலும் சுதாகரித்துக்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்ற பொருள்பட லெனினை கண்களால் பார்த்து கேள்வி கேட்டேன். அவர் கண்ணைச்சிமிட்டி ஒரு கோபம் கலந்த புன்முறுவல்மட்டும் செய்தார்.
ஒரு கோபம் கலந்த புன்முறுவலிருந்து நான் என்ன செய்யவேண்டும் என எப்படி விளங்கிக்கொள்வது?

நானும் பதிலுக்கு புன்முறுவல் கலந்த கோபத்துடன் தோழர்கள் லெனின் மாக்ஸ் மாஓ அவர்களைப்பார்த்து

தோழர் லெனின் அவர்களே தோழர் மாக்ஸ் அவர்களே தோழர் மாஓ அவர்களே நீங்கள் யாராவது ஒருவர் இந்த உரையாடலுக்கு தலைமை தாங்குகிறீர்களா? என்று கேட்டேன்

மார்க்ஸ் கொஞ்சம் தயக்கத்துடன் எழுந்தார்.
அது பொருத்தமாக இருக்காது தோழர்களே ஏகாதிபத்தியம், உலகமயமாக்கம் என் ஜீ ஓக்கள் இவைபற்றி எனக்கோ லெனினுக்கோ எந்த அனுபவும் இல்லை. தலித் போராட்டங்கள் பற்றி எதுவுமே எங்களுக்கு தெரியாது. ஆகவே நாங்கள் உங்களின் உரையாடலை கவனமாகக் கேட்கிறோம். அதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள் ஆவலாயிருக்கிறோம் என்று மறுத்துவிட்டார்கள்.

கூட்டத்திலிருந்து கூச்சலும் சலசலப்பும் முட்டிமோதி எழுந்து வந்தன.
ஏய் வாபஸ் வாங்கு!. வாபஸ் வாங்கு! என்ற கோசம் என் காதை கிழித்தது. நான் திகைத்துப் போய் அந்த அறையின் சிறிய தடித்த கண்ணாடிக்குள்ளால் உட்புகும் மங்கிய ஒளியின் உதவியுடன் வாபஸ் வாங்கு என்று கோசமிடுபவர்களைப்பார்த்து,
ஏன் தோழர்களே எதை வாபஸ் வாங்கச் சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
எங்கள் மாமேதைகளையும் ஆசான்களையும் பார்த்து தோழர் என்று விளித்ததை வாபஸ் வாங்கு என்றனர். நீர் அவர்களை அவதூறு செய்கிறீர் என்றனர். அப்பொழுது தான், நான் என் தலையிலும், வாபஸ் வாங்கச் சொன்னவர்கள் தங்கள் தலையிலும் அவரவர் அளவிற்கேற்ப மண்ணை வாரிப் போட்டுக் கொள்கிறோம் என்பதை உணரமுடிந்தது.

தோழர்களே இதைத்தான் கலாநிதி சிவசேகரம் இக்கட்டுரையில் “வெறுங் கோசங்களாலும் தனிப்பட்ட அவதூறுகளாலும் நோர்மையற்ற விவாதங்களாலும் உண்மைகளை மூடிமறைப்பது என்றென்றைக்கும் இயலுமானதல்ல என அழகாக சொல்லியிருக்கிறார் என்றேன்.
கூச்சலும் சலசலப்பும் கூடவே புளுக்கமும் அந்த மங்கிய ஒளிநிறைந்த அறையைச் சூழ்ந்து கொண்டு உரையாடலை தொடரவிடாமல் தடுத்தது.

இந்த சூழலின் ஆரோக்கியமற்ற தன்மையை புரிந்து கொண்ட மாஓ தோழர்களே அமைதி காத்து உரையாடலை தொடருங்கள். நூறு பூக்கள் மலரட்டும் தோழர்களே என்றபின்தான் அமைதி நிலவியது.

மறுபடியும் மார்க்ஸ் எழுந்தார். தோழர்களே! மதம் என்பது அபின். இந்துத்துவத்துவத்தின் கொடுமைகளையும், சாதிஒடுக்குமுறையின் முழுப்பரிமாணத்தையும் அனுபவரீதியாக கண்டவர்கள் என்ற அடிப்படையில் அப்பேத்கர் அல்லது பெரியார் தலைமை தாங்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.

அதற்கு நான் எழுந்து தோழர் மாக்ஸ் அவர்களே இந்தக்கட்டுரையில் கலாநிதி சிவசேகரம் பெரியார் எனப்படும் ஈ வே ராமசாமி சாதிமுறையை மனமார வெறுத்து நிராகரித்தாலும், அவர் சாதி விரோதநிலைப்பாட்டில் குறைபாடுகள் இருந்திருக்கலாம் என்று சந்தேகத்தை முன்வைத்திருக்கின்றார். சாதி முறையை மனமாற வெறுத்த பெரியார் எப்படி சாதி விரோத நிலைப்பாட்டில் அரசியல் செய்திருக்கலாம் என்ற கேள்வி இங்கே எழுப்பப்படுகிறது. பெரியார் ஒரு சாதியை விரோதித்தார் அவ்வளவுதான் அவரின் அரசியல் அதற்கு மேல் ஒன்றுமில்லை என்பதில் சாதிவிரோத அரசியல் என்ற சொல் இங்கே தொக்கி நிற்கின்றது.

எனவே எதிலுமே சந்தேகம் கொள் என்ற உங்களின் கோட்பாட்டை இங்கே தோழர் சிவசேகரம் கொண்டிருக்கிறார். ஆகவே தோழர் அம்பேத்கர் தலைமை தாங்குவது பொருத்தாமாகவிருக்கும். இக்கட்டுரையில் தோழர் அம்பேத்கரை தோழர் சிவசேகரம் அவர்கள் வசதியாக மறந்து விட்டார். இது கூட தலைமை தாங்குவற்கான நியாயத்தை வலியுறுத்துகிறது என்றேன்.

யார் தலைமை தாங்கினால் என்ன தோழர்களே! உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும் என மார்க்ஸ் கூறிவிட்டு தனது இடத்தில் அமர்ந்துகொண்டார்.
இந்தக்காரணத்திற்காகத்தான் நான் ஸ்ராலினையும், போல்பாட்டையும், பிரபாகரனையும், மகிந்தவையும் இந்த உரையாடலுக்கு அழைக்கவில்லை என சொல்ல வாயெடுத்தேன். தவிர்க்கமுடியாமல் வார்த்தைகளை மென்று விழுங்கிவிட்டேன்.

உரையாடல்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட வேண்டும் என்ற மார்க்ஸின் வேண்டுதலுக்கும் பண்புக்கும் கட்டுப்பட்டு அம்பேத்கர் தலைமை தாங்குவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
தோழர் சிவசேகரத்தின் கட்டுரையை வாசிக்க அதன் மீதான உரையாடலும் விவாதமும் தொடங்கியது.

சாதி முறை என்பது தென்னாசியாவுக்கே உரிய சாபக்கேடு. இந்து தருமம் என்கின்ற பெயரில் அதற்கு தெய்வங்களின் ஆசி வழங்கப்பட்டுள்ளது எனினும் சாதியம் என்பது இந்து மதங்களால் உருவாக்கப்பட்டதல்ல. அவற்றால் அது நியாப்படுத்தப்பட்டது ஏற்கனவே இருந்து வந்த சாதிமுறைகளுடன் ஆரியவருணமுறை இணைந்தே இந்தியாவின் இறுக்கமான சாதியமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்கள் வலுவானவை.

நான் மேலுள்ள கட்டுரையின் முதல்பந்தியை வாசித்த பொழுது தலைமைதாங்கிய அம்பேத்கர் தனது தலையை நான்கு முறை மேசையில் அடித்துக்கொண்டார். வர்ணஅமைப்பு முறையே சாதியமைப்பின் தாய் என தனது கைகளால் மீண்டும் நான்கு முறை மேசையில் ஓங்கி அறைந்தார்.

கூட்டத்திலிருந்து தோழர் ஒருவர் ஆவேசத்துடன் எழும்பினார் பாபாசாகேப் உங்களை வாழ்த்துகிறேன்.

கலாநிதி சிவசேகரத்தின் கூற்றுப்படி இந்துமதத்தின் முன்னர் சாதிகள் இருந்தனவென ஊகிக்க முடிகிறது. சாதி உருவாக்கத்துக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லைத்தானே தோழரே? ஆகவே சாதி உருவாக்கம் என்ற சர்ச்சையில் இந்து மதம் குற்றமற்றது தானே தோழரே? இதைத்தான் கலாநிதி சிவசேகரம் ஒற்றைப்பந்தியில் பூடகமாகவும், விபரமாகவும் சொல்லிலிருக்கிறர் என்றார்.

அம்பேத்கர் இருக்கையை விட்டு எழுந்து நின்றார். அவரின் நூற் தொகுதி ஆறாவதை புரட்டிப் புரட்டிப் பார்த்த்தார்.

நான் எழுந்து நின்று தோழரே குறுக்கிடுவற்கு மன்னிக்கவும். ஆதியும் அந்தமுமில்லாதது இந்து மதம் என்று சொல்கிறார்களே அப்படியானால் ஆதிக்கும் அந்தத்துக்கும் இடைநடுவில்தானே சாதி தோன்றியிருக்க வேண்டும் அல்லது கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய தமிழர்கள் தான் சாதியை தோற்றுவித்திருக்கவேண்டும்...

கூட்டத்திலிருந்து "ஏய் நீ திரிபுவாதி, எதிர்புரட்சிவாதியே டேய் நீ தமிழ் துரோகியடா சென்னதை வாபஸ் வாங்கடா" என கூச்சல்கள் எழுந்தன.

"நரம்பில்லாத நாக்கால நீர் கண்டபடி கதைக்கேலாது கதைக்கிறதை அளந்து கதையும்" என்ற குரல் ஒன்று பின்கதிரையிலிருந்து வந்தது.

சூழ்நிலையை புரிந்து கொண்ட லெனின் மேசையின் மீது துள்ளி ஏறினார் "அமைதி தோழர்களே அமைதி...!"
கூட்டத்தில் அமைதி நிலவியது.
தோழர்களே திரிபுவாதம், எதிர்ப்புரட்சிவாதம் என்ற சொற்பதங்ளை நான் மீள் பரிசிலணை செய்து கொண்டிருக்கிறேன். அது பாவனைக்கு உகந்தல்ல என்ற கருத்து உலாவுகிறது
ஆகவே இதை இங்கு தவிர்த்துக் கொள்வது உரையாடலை தொடர உதவும் நன்றி தோழர்களே என்றபடி மேசையிலிருந்து இறங்கி தனது இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

மாஓ தனது தொப்பியைக் கழற்றி லெனினைப்பார்த்து மரியாதை செலுத்தியபடியே நூறு பூக்கள் மலரட்டுமே என்றார்.

அம்பேத்கர் தனது கட்டுரைத்தொகுதி ஆறாவதைப் புரட்டிப்பார்த்தபின் தளதளத்த குரலில் பேசத்தொடங்கினார்
தோழர்களே நான் இந்துமதம் பற்றியும் அதன் சமூக அமைப்பு அதன் அடையாளங்கள் கோட்பாடுகள் பற்றிம், மனுவின் வர்ணக்கோட்பாடும் சாதிஅமைப்பும் அதன் படிநிலைகள் பற்றியும், ஆய்வுகளையும் கட்டுரைகளையும் செய்திருக்கிறேன் என்னால் கூட சாதி அமைப்பு முறை இந்துமதத்தால் உருவாக்கப்படவில்லை என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியவில்லை. கலாநிதி சிவசேகரம் அவர்கள் துணிந்து இக்கருத்தை முன் வைப்பதால் அதற்குள் ஏதோ ஒன்று இருக்கின்றது என்று மட்டும் தோன்றுகிறது. ஆனால் தோழர்களே ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன் மனுவின் வருணப் படிநிலையே சாதியமைப்பின் தாய் இந்த சொற்பதத்திற்காக நான் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சாதியமைப்பின் மூலவராக மனு இல்லையென்றாலும் அதன் தோற்றத்திற்கான மூலவராக மனு இருந்திருக்கின்றார் என உறுதியாகச் சொல்கிறேன் என்றார்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த தோழர் ஒருவர் மனு எந்த மதத்தை சேர்தவர் தோழரே என்ற கேள்வியை எழுப்பினார்.

தோழர் அம்பேத்கர் அதிர்ச்சி தாங்காமல் வாய்விட்டு சிரிக்கத் தொடங்கினார். பெரியார் எட வெங்காயமே என்றபடி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். அறையே சிரிப்பொலியால் அதிர்ந்தது. மார்க்ஸ் லெனின் மாஓ மூவரும் ஒருவரையொருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டார்கள். அவர்களால் இந்த நகைச் சுவையை அனுபவிக்கமுடியவில்லையே என நான் வருந்தினேன்.
தொடர வேண்டிய போராட்டம் என்று சீரியசாக எழுதப்பட வேண்டிய கட்டுரையை கலாநிதி சிவசேகரம் அவர்கள் நகைச்சுவையாக எழுதிவிட்டார். ஆகவே அவரின் கட்டுரைகளிருந்து சில மேற்கொள்களை வாசித்து உரையாடலை தொடர விரும்புகிறேன் என்றபடி அம்பேத்கரை பார்த்தேன்.

ஆகட்டும் தோழரே என்றபடி தனது தொகுப்பிலுள்ள "இந்து மதத்தின் அடையாளங்கள்" என்ற எழுதி முடிக்கப்படாத கடைசிக் கட்டுரையை கவலையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
நான் எனது குற்றப்பத்திரிகையை வாசிக்கத் தொடங்கினேன்

முதலாவதாக பக்தி இயக்கக்காலத்தில் ராமானுஜர் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து அவர்களை பிராமணராக்கி புரட்சிசெய்ய முயன்றார். இருப்பினும் இந்து என்ற அடையாளத்தை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தாலும் சாதியைத் தாண்டமுடியவில்லை என்கிறார் கலாநிதி சிவசேகரம். தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி முன்முடிவகளுடன் தனது கட்டுரைக்கான இலக்கை அடைவதற்காக ஒரு முரண்நகையான வாதத்தை இங்கே வைக்கிறார். கலாநிதி சிவசேகரத்தின் கட்டுரையின் நகைச்சுவையே இங்கிருந்துதான் தொடங்குகின்றது.

இண்டாவதாக நவீன உற்பத்திமுறை நகரங்களின் பெருக்கமும் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கமும் சாதி ஏற்றத்தாழ்வின் நீக்கத்திற்குச் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கியதென்றும் எனினும் இந்த புதிய சூழல் சாதியபோராட்டங்களை வெற்றி பெறச்செய்ததென்றும், இருப்பினும் சாதிமுறையை தகர்க்க முடியவிலையே எனவும் ஆதங்கப்படுகிறார்.

வாஸ்தவம் தான் தோழர்களே!
மேலும் தாழ்த்தப்பட்ட சாதியினர் அஞ்சாது போராடினர்கள் என்றும் போரட்டத்தின் வெற்றிகளுக்கு பின்னும்
அவர்களின் குடிசைகள் தீ மூட்டப்பட்டன
கலப்புத்திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டன
கல்வி கற்று பதவிகள் பெற்றமைக்காக குடும்பத்தோடு கொல்லப்பட்டனர்
ஊராட்சிகட்கு தெரிவு செய்யப்பட்டோர் பதவி ஏற்கவியலாதவாறு வன்முறைகள் மேற்கொள்ளப் பட்டன என மீண்டும் ஆதங்கப்படுகிறார்.

இந்த ஆதங்கத்தின் பின் இப்படிப்பட்ட தீய செயல்களை செய்வோர் யார்? வன்முறைகளைச் செய்வோர் யார் என்ற கேள்வி கலாநிதி சிவசேகரம் அவர்களுக்கு எழுகின்றது. அந்தக்கேள்விக்கு பதிலாக நரேந்திர மோடியை பதிலாக முன்வைக்கின்றார். நரேந்திரமோடி உயர்சாதியை சேர்ந்தவர் அல்ல என்றும் கண்டுபிடிக்கின்றார்.

குஜராத் படுகொலைகளை வன்முறையாகவே மட்டும் காணும் கலாநிதி சிவசேகரம் அவர்கள், அந்தக் கலவரங்களின் பொழுது தாழ்த்தப்பட்ட சாதியினர் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினரை கொன்றது உயர்சாதிப்பிராமணரோ அல்லது பிராமணருக்கு அடுத்த நிலையில் உள்ள உயர்சாதியினராரோ அல்ல. அது தாழ்ந்தவர்களால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது செய்யப்பட்ட வன்முறை என்ற முடிவை கண்டடைகிறார்.

தோழாகளே தலைவர் அவர்களே நன்றாகக் கவனியுங்கள் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களே தாழ்த்தப்படடவர் மீது வன்முறையை செய்தனர் என தெளிவாக குறிப்பிடுகிறார்.
இந்த இடத்தில் தாமிரபரணி ஆத்தங்கரையில் தலித்மக்களை கொன்றது போலிஸ்காரர்களுக்கு உள்ளேயே உள்ள உயர்குலப் போலிஸ்காரர்கள் அல்ல தலித்சமூகத்தை சேர்ந்த தாழ்ந்த போலிஸ்காரர்கள் என்ற உண்மையைச் சொல்வதற்கு கலாநிதி சிவசேகரம் அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதை தோழர்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். காந்தியை ஏன் தலித்துக்கள் நம்பக்கூடாது என பாபாசாகேப் அம்போத்கர் அவர்கள் ஒரு கட்டுரையையும் எழதியிருக்கிறார் . என்பதையும் இந்த இடத்தில் தோழர்களுக்கு நினைவு படுத்திக்கொள்ள விரும்புகிறேன்.

மூன்றாவதாக தோழர்களே!

ஒடுக்கப்படுவோர் தமது நிலைபற்றி போதிய தெளிவும் அறிவும் இல்லதவர்களாகவும் தாம் ஒடுக்கப்படுவதை நியாப்படுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். அவர்கள் கல்விமற்றும்; பொருளாதார ரீதியாக மேன்நிலையாக்கம் அடைந்தாலும் கூட உயர்சாதியினருடன் சேந்து கொண்டு தாழ்த்ப்பட்டவர்களை ஒடுக்க துணைபோகின்றனர். இருப்பினும் உயர்சாதியிலுள்ளோர் பலரும் தாழ்த்தப்பட்டடோரின் போராட்டங்களில் முன்வரிசையில் நின்று போராடினர் ஆகவே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை பாதிக்கப்பட்டவர்களே முன்னெடுக்க வேண்டும் என்ற பார்வை தவறானது நாங்கள் நேச சக்திகளை இழந்துவிடக் கூடாது மாறாக இன்று தலித்தியம் பெண்ணியம் பின்நவீனத்துவம் என ஏகாதிபத்தியங்கள் என் ஜீ ஓக்கள் மூலம் சதிசெய்கின்றன என்றும் குறிப்பிடுகின்றார் கலாநிதி சிவசேகரம்
அப்பெழுது தோழர் வினவு டொட் கொம் எழுந்தார்
வாழ்க தோழர் சிவசேகரம்.
பெண்விடுதலை என்ற பெயரில் பெண்கள் பத்துப்பேருடன் படுக்க அலைகிறார்கள். இது ஏகாதிபத்தியத்தின் சதி. வர்க்ப் போராட்டத்துக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியது. பெண்ணியவாதிகள் தினவெடுத்து கட்டற்ற பாலுறவுக்காக அலைகிறார்கள். இதை அனுமதிக்க முடியாது என சொல்லி முடிக்க ஒவ்வொரு குரல்களாக மெல்ல மெல்ல மேலே எழுந்தன. எழுந்த குரல்களின் அதிர்வில் பரிவு நிலை ஏற்பட்டது. வாசற்கதவு தகர்ந்தது வெளிச்சம் பரவியது.

வாஸ்தவம் தான் தோழர்களே! என ஒரு குரல் அசரீதியாக ஒலித்தது. அறையின் வாசற்கதவை உடைத்துக்கொண்டு ராமனுஜர் ஒரு கையில் பூத்தட்டுடனும் அதன் நடுவே அலங்கரிக்கப்பட்ட விரலளவேயான லிங்கத்துடனும் மறு கை நிறைய பூணுலுடனும் உள்ளே வந்தார். வாசற்கதவின் ஊடாக சூரியஒளி அறையை நிறைத்தது குங்கிலியப் புகை மயக்கத்தை தந்தது. மணியோசைகள் கர்ண கடுரமாக ஒலித்தன. உரையாடலை கலைந்து ராமானுஜர் மாமேதைகளுக்கு அருகே சென்றார். அவர்கள் மூவருக்கும் பூணூல் அணிவித்தார். பின் மிச்சமுள்ள பூணூலை அவர்களின் கைகளில் திணித்தார். தோழர்கள் மாமேதைகளிடம் பூணூலை பெற்றுக்கொண்டனர். அம்பேத்கரும் ஈ வே ராமசாமியும் பூணூலை வாங்கி கழுத்தில் சுருக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பூணூல் மாக்சிஸ்டுகளும் பூணூல் லெனினிஸ்டுகளும் புரட்சியை வென்றெடுக்கவும், ஏகாதிபத்தியத்தின் சதியை குங்கிலியப் புகையால் முறியடிக்கவும் வர்க்கப்போராட்டத்தை லிங்கங்களைக் கொண்டு வெற்றி கொள்ளவும் ராமானுஜர் ஒரு யாகத்தீயை அங்கே வளர்த்தார். தீ நின்று பற்றி மேலெழுந்து எரிந்தது. குங்கிலியப் புகையும் மணி ஓசைகளும் வாசற்கதவினைத் தாண்டி காற்றினிற் கலந்தன.
----------------------------------------------------------------------------------

மேலே உள்ள எனது உரையாடலை குறைந்தபட்சம் புரிந்துகொள்ள சில குறிப்புக்களை வாசகர்களுக்கு தந்துதவுகிறேன். தோழர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் இருபத்தைதாவது ஆண்டு நினைவு மலரில் எனது தந்தையார் ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதை இரசித்து பலதடவைகள் வாசித்திருக்கிறேன்.

எனது தந்தையார் ஒரு தமிழாசிரியர். கடவுள் நம்பிக்கையற்றவர் வயது எழபத்தைந்து ஆகிறது ஆறு பிள்ளைகளின் தந்தை.

சாதியப் போராட்டங்களில் முன்நின்றவர் கம்யூனிட் கார்த்திகேசனின் கட்சித்தோழர் தோழர் சண்முகதாசனை கண்டபடி விமர்சித்தது எனக்கு இன்னும் ஞாபகத்தில் இருக்கின்றது. அவர் ஒரு நாள் பீக்கிங் தமிழ்வானொலி செய்தியைக் கேட்டு அழுதுகொண்டிருந்தார். அவர் அழுவதை பார்த்து தாங்கமுடியாமல் அம்மாவிடம் அப்பா ஏன் அழுகிறார் எனக் கேட்டேன். அம்மா சிரித்தபடியே கொப்பாவின்ரை கடவுள் செத்துப்போய்விட்டாராம். அவருக்கு விசர் பிடிச்சிட்டுது என்றார். யார் என்று கேட்டேன். அம்மா மாஓவின் படத்தைக்காட்டினார்.
மார்க்ஸ் லெனின் மாஓ ஸ்ராலின் ஆகியோரது பெரிய பிரேம் போட்ட படங்கள் எங்கள் வீட்டுச் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். அவர் கட்சிக் கூட்டங்களுக்கு போகும் போது அம்மா கோவில் கும்பிடப் போவார். சாமி கும்பிடும் விடயம் தெரிந்தால் அப்பா கோபித்துக் கொள்வார் என்று அம்மா சொல்வார். நாங்கள் கோவில் திருவிழாக்களுக்குச் செல்வதை அவர் விரும்புவதில்லை. அவர் வெளியே போய் வீடுதிரும்ப இரவு ஒன்பது மணியாகும். அந்த இடைவெளியில் நான் சில கோயில் திருவிழாக்களை என் தாயின் அனுமதியுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். சிலதடவைகள் தந்தையார்pடம் அகப்பட்டு அடிவாங்கியிருக்கிறேன். அடியாதமாடு படியாது என்பதிலும் அவருக்கு அன்று நம்பிக்கையிருந்தது. எனது பதினேழாவது வயதிற்குள் குறைந்தது ஆயிரம் அடிகைளயாவது வாங்கிக் கட்டியிருக்கிறேன். அவரை பழிவாங்குவதற்காகவே வீட்டைவிட்டு ஒடிப்போய் தமிழ் ஈழவிடுதலை இயக்கத்தில் சேர்ந்து கொண்டேன். அந்த பழிவாங்கலை எண்ணி இன்னமும் வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சீனாவிற்கு போகவேண்டும் மாஓவை சந்திக்கவேண்டும் என்ற தீராத ஆசை அவர்மனதில் இருந்தது. ஐரோப்பாவிற்கு நான் வந்து இருபத்தி இரண்டு வருடங்களாகிறது அவரை அழைத்துக் கொண்டு சீனாவுக்கு போகவேண்டுமென்ற ஆசை இன்னும் என்னைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்றுவரைக்கும் முடியவில்லை. ஆசியர் தொழிலில் இருந்து ஒய்வு பெற்றபின் கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு மேலாக வீட்டுத்தோட்டம் செய்து வருகிறார்.
சீனாவும் ஒரு ஏகாதிபத்திய நாடாகி விட்டது என்ற உண்மையை நான் எப்படி என் தந்தைக்கு எடுத்துரைப்பேன்?

7-5-2010
ஜீவமுரளி
-------------------------------------------------------------------------------------

தோழர் கம்யூனிட் கார்த்திகேசனின் 25 வது ஆண்டு
நினைவுத் தொகுப்பிலிருந்து-

மக்கள் தோழர் காத்தி
வ. சின்னத்தம்பி

"உயிர் கொடுப்பான் தோழன்" என்பது பொன்மொழி. தோழமை உணர்வின் அதி உயர்ந்த பண்பு, தியாக வாழ்வின் மிக உயர்ந்த செயல் வடிவம், தன்நலமற்ற வாழ்வின் உயர்ந்த பண்பு, சுயநலத்தை துடைத்து தூக்கி வீசிவிட்டு அடக்கி ஒடுக்கப்படும் மக்களுக்காக, அவர்களின் விடிவுக்காக, விடுதலைக்காகப் போராடும்போது, போராட்ட வாழ்க்கை வாழும்போது மக்களின் தோழனாகின்றான். மக்களை நேசித்து மக்களுக்காக வாழுகின்றான். அவர்களின் நலன்களுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்யவும் தயங்கான். இது கொம்யூனிஸ உணர்வு. இந்த உணர்வு கொண்ட இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் சிறந்த தோழர் காத்தி. யாழ் மக்களால் மிகவும் மதிக்கப்பட்டவர். மக்கள் பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட அதியுயர்பட்டம் "கொம்யூனிஸ்ட் கார்த்திகேசன்". அதனால் அவர் மக்கள் தோழனாக மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தொன்பதில் (மாதம், திகதி ஞாபகமில்லை) கரவெட்டி கிழக்கில் ஒரு கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதற்கு தோழர் கார்த்திகேசன் மாஸ்ரரும் வருகிறார் என அறிவிக்கப்பட்டது. அதில் கலந்து கொண்டதன் மூலம் தோழர் காத்தியை முதன் முதலாக சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தோழர் காத்தியின் ஆசீர்வாதத்துடன் அவர் பற்றிநின்ற இலட்சியப் பாதையில் முழுமையாக இணைந்து செயலாற்ற முடிந்தது. அன்று தொடங்கிய அவருடனான தோழமை உறவும், இலட்சியச் செயற்பாடும் அவரின் இறுதிக் காலம்வரை தொடர்ந்தது. திரிபுவாதம், சீர்திருத்தவாதம், "தத்துவம் ஒன்று நடைமுறை வேறு" என்ற செயற்பாடு என்பன ஒன்றுமே தோழர் காத்தியையும் எம்மையும் பிரிக்க முடியாமற் போனது. ஏனெனில் தோழர் காத்தி இவற்றிற்கெல்லாம் எதிரான உறுதியான போராளி.

கம்யூனிஸ்டுக்கள் தோழர்களாக, முன்பின் அறிமுகமில்லாமல் ஐக்கியமானவர்கள். அவர்கள் தேசத்தின் விடிவுக்காக மக்களின் நல்வாழ்வுக்காக சுரண்டலற்ற வர்க்க பேதமற்ற பொதுஉடமை சமூக அமைப்பை உருவாக்க ஒன்றிணைந்தவர்கள். நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், குடியேற்றவாதம், நவகுடியேற்றவாதம், ஏகாதிபத்தியம் என்பனவற்றிற்கெதிரான போராளிகள். ஒடுக்கப்படும், சுரண்டப்படும், நசுக்கப்படும் மக்களின் உரிமைகள பெறுவதற்காக ஒன்றிணைந்த தோழர்கள். தோழர் காத்தி இவர்களில் ஒருவர். கம்யூனிஸ்டுக்களின் இலட்சியத்தைப் பெற்றெடுப்பதற்காக இலங்கையில் குறிப்பாக வடமாநிலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

தோழர் காத்தி மார்க்ஸிச- லெனினிஸ- மாஓசேதுங் சிந்தனையை வழிகாட்டும் தத்துவமாக ஏற்றுக் கொண்டவர். அவர் இந்தத் தத்துவத்தை உறுதியாக இறுதிவரையும் பற்றி நின்று செயற்பட்டவர். திரிபுவாதத்திற்கு எதிரான உறுதியான போராட்டம் நடத்தியவர். யாழ்.பிரதேசத்தில் திரிபுவாத நச்சுக்களைப் பரப்பாமல் தடுக்கத் தோழர்களுடன் முன்நின்று உழைத்தவர். சோவியத் யூனியனின் ஆட்சியதிகாரத்தை குருசோவ் கைப்பற்றியபின் கம்யூனிஸ்ட் இயக்கத்தை திரிபுவாத மார்க்கத்தில் நெறிப்படுத்தி முதலாளித்துவ மீட்சிக்கான பாதையில் வழிநடத்த முனைந்தான். தோழர் மாவோ தலைமையிலான சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இதனை எதிர்த்துப் போராடியது. குருசோவ் முதலாளித்துவ மீட்சிக்கான "சமாதானமும் சகவாழ்வும்" எனும் 'ஐயா' மார்க்கத்தை மேற்கொள்ள, அதனை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சி புரட்சிகர பாட்டாளிவர்க்கப் பாதையில் கம்யூனிஸ்ட் இயக்கங்களை அணிதிரட்டியது. இந்த சித்தாந்தப் போராட்டம் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் அனைத்தையும் பாதித்தது. பிளவுபடுத்தியது. இல்லை, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் ஊடுருவிய பாட்டாளி வர்க்கத்தின் எதிரிகளை, கூட இருந்து குழி வெட்டுபவர்களை இனங்காட்டியது. இந்தப் போராட்டம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியையும் பாதித்தது. யாழ்.பிரதேசத்திலும் எதிரொலித்தது.

கட்சியின் மேல்மட்டத்தில் இருந்த ஒரு சிலர் புரட்சிகர மார்க்ஸிச, லெனினிஸ மார்க்கத்துக்கு எதிரான திரிபுவாத பாதையை தேர்ந்தெடுத்து தமது வர்க்க நிலைப்பாட்டை வெளிப்படுத்தினர். யாழ்.பிரதேச கட்சி திரிபுவாத சகதிக்குள் சிக்காமலும், சீர்குலைந்து போகாமலும் தடுப்பதற்கான செயற்பாடுகளில் தோழர் காத்தி, தோழர் வி.ஏ.கந்தசாமி ஆகியோர் முன்நின்று வழி நடத்திச் சென்றனர். இவர்களுடன் சேர்ந்து கட்சியின் அடிமட்டத் தோழர்கள் மிகப் பெரும்பான்மையினர் புரட்சிகர மார்க்கத்தை முன்னெடுத்துச் செல்வதில் வெற்றி கண்டனர். கட்சியின் எல்லா மட்டங்களிலும் சித்தாந்த அறிவை வளர்க்க தோழர் காத்தி தமது பங்கை அர்ப்பணிப்புடன் செய்தார். இதனால் கட்சியின் எல்லா மட்டங்களிலும் தத்துவார்த்த அறிவும் அரசியல் அறிவு வளர்ச்சியும் மேலோங்கியது. தத்துவார்த்த நடைமுறையுடன் இணைத்துச் செயற்படும் தன்மையும் தோழர்களிடையே மேலோங்கிக் காணப்பட்டது. யாழ்ப்பாணத்தில் புரட்சிகரக் கட்சியின் வளர்ச்சி மேலோங்கியது.

குருசோவ் திரிபுவாதம் தோன்றிய ஆரம்ப கட்டத்தில் அடிமட்டத் தோழர்களில் பெரும்பாலோர் தத்துவ அரசியல் அறிவின் சூனிய நிலையிலேயே இருந்தனர். சித்தாந்த முரண்பாடு கட்சிக்குள் ஏற்பட்டதும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். தோழமை உணர்வோடு ஒன்றுபட்டவர்கள் எதிரிகளாகி விடுவோம் என்ற பயம். திரிபுவாதப் பாதையை தேர்ந்து எடுத்தவர்கள் ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஆள்பிடிப்பதற்கு பயன்படுத்தியது தோழர் ஸ்ராலினுக்கு எதிரான பிரச்சாரம். அத்துடன் புரட்சி மார்க்கத்துக்கு எதிராகவும், பாராளுமன்ற பாதை மூலம் சோஷலிசத்தைப் பெறலாம் என்ற மாயையுமாகும். இதில் முதன்மையானது தோழர் ஸ்ராலின் எதிர்ப்புப் பிரசாரம்.

ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவரும் யாழ்.பிரதேசத்தின் பிரசாரப் பீரங்கியுமான தோழர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரால் தோழர் ஸ்ராலின் அவதூறுப் பிரசாரம் செய்யப்பட்டது. அதற்கு முன்பு அவரால் போற்றப்பட்டவர் ஸ்ராலின். ஏகாதிபத்திய, பிற்போக்குவாதிகள் விமர்சிப்பதுபோல், இவராலும் தோழர் ஸ்ராலின் விமர்சிக்கப்பட்டார். விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாததால் "முன்பு இக்குறைகள் உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று கேட்டபொழுது அவர் ஆத்திரப்பட்டார். "நீங்கள் அதிகம் படித்துவிட்டீர்கள்" என்றார். "நீங்கள் படிக்கவில்லை, நாங்கள் படிக்கத் தொடங்கிவிட்டோம்" எனக்கூறி தோழர் காத்தியை சந்திக்கச் சென்றேன். வண்ணார்பண்ணையில் அவர் இருந்த வாடகை வீட்டில் சந்தித்தேன். நடந்த துக்ககரமான சம்பவத்தை கூறியபோது அவரது முகம் சோர்வடைந்தது. மனம் கவலையடைந்தது. சிறிதுநேர மௌனத்தின் பின் அவர் சொன்னார் "தோழர்களைப் பிளவு படுத்தும் வேலையச் செய்வதற்காகவோ, தோழர்கள் மத்தியில் பகைமையை ஏற்படுத்துவதற்காகவோ, கட்சியை சீர்குலைப்பதற்காகவோ நான் கட்சியில் சேரவில்லை. அதை ஒருபொழுதும் என்னால் செய்யவும் முடியாது. சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது உங்கள் கடமை. அது உங்களின் உரிமையும்கூட. உங்கள் சொந்தக் கருத்துப்படி நடவுங்கள்". அதன் மூலம் கட்சியியையும் தோழர்களையும் மதிக்கும் தோழர் காத்தியின் உயர்ந்த உன்னத பண்பு வெளிப்பட்டது. அவர் தோழர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மதிக்கப்பட்டதன் இரகசியம் புலப்பட்டது.

தோழர்களின் வியர்வையாலும், இரத்தத்தாலும், உழைப்பாலும் கட்டி எழுப்பப்பட்டு வளர்க்கப்பட்ட புரட்சிகரக் கட்சி திரிபுவாதத்தால் சீர்குலைந்து போவதையோ அதைச் சீர்குலைப்பவர்களையோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. கட்சியை உறுதியான புரட்சிகரக் கட்சியாக புனரமைக்கும் வழிகாட்டியாகவும் தொண்டனாகவும் ஆசிரியராகவும் செயற்பட்டார்.

கட்சியைக் கட்டி எழுப்பும் மார்க்கத்தை மேற்கொண்டது புரட்சித் தலமை. இதன் அடிப்படையில் யாழ் பிரதேசத்தில் தமிழர் மத்தியில் உழுத்துப்போய் இருந்த தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிராகப் போராட கட்சியின் வழிகாட்டியின்கீழ் "சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்" என்ற கோஷத்தை தாரக மந்திரமாகக் கொண்ட தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் உருவாக்கப்பட்டது. இதில் ஒடுக்கப்பட்ட மக்கள் மட்டுமல்ல தமிழ் மக்கள் மத்தியில் இருந்த முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இணைந்து செயற்பட்டனர். இதுவரை திறக்கப்படாத தேனீர் கடை, ஆலயப் பிரவேசப் போராட்டம் சாதி வெறியர்களின் மூர்க்கத்தனமான எதிர்ப்பைப் பெற்றது. தேசியரீதியிலும், சர்வதேசரீதியிலும் தமிழ் தலைவர்கள் எனத் தம்பட்டம் அடித்தவர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தியது. தமிழர்கள் தங்களுக்குள் ஒரு பகுதியினருக்கு அடிப்படை மனித உரிமைகளை வழங்காது அவர்களை அடக்கி ஒடுக்குவது வெளிச்சத்துக்கு வந்தது. அந்தப் போராட்டத்தில் சங்கானை குமரேசு வீரத் தியாகியானார். சாதிவெறியர் தேனீர் கேட்டவர்களுக்குத் தோட்டா கொடுத்தார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழுந்தார்கள். போராட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிய தமிழ் தலைமை தட்டுத்தடுமாறியது. சாதியொடுக்கு முறைக்கெதிரான போராட்டத்தை திசை திருப்ப பாராளுமன்றத்தில் தானைத் தளபதி திரு. அமிர்தலிங்கம் "சங்கானையில் வியட்நாம் போர் நடக்கிறது" என அரசுக்கு முறையிட்டார். இதன் மூலம் அரச ஆயுத இயந்திரத்தைக் கொண்டு அடக்கியொடுக்க முனைந்தார். புரட்சிகர சித்தாந்தத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட சுயநலமற்ற மக்கள் போராட்டத்தால் மக்கள் வெற்றி பெற்றார்கள்.

அடுத்து மாவிட்டபுர ஆலயப் பிரவேசப் போராட்டம் நடந்தது. "மாவிட்டபுர ஆலயத்துள் மனிதரை விடமாட்டோம்" என 'அடங்காத்தமிழன்' சி.சுந்தரலிங்கம் தலைமையில் சாதிவெறியர் கூட்டம் கச்சை கட்டி நின்றது. பின்னால் தமிழ் தலைவர்களின் மறைமுகமான ஆதரவும், அரச பொலிஸ் இயந்திரமும் போராட்டத்தை எதிர்த்த பெரிய மனிதர்களுக்கு பக்கபலமாய் இருந்தது. வெகுஜன இயக்கத் தலைவர் எஸ்.ரி.என்.நாகரட்ணம் தலைமையில் விடாப்பிடியான போராட்டம், மக்கள் போராட்டம் நடந்தது. மக்கள் போராட்டத்தினால் சாதி வெறிக்கும்பல் பின்வாங்கியது. மக்கள் வெற்றி பெற்றனர். இந்தப் போராட்டங்களில் தோழர் காத்தி மக்களுடன் ஐக்கியமாகி உந்து சக்தியாக இருந்தார். தோழர் காத்தி, கட்சியில் இணைந்த ஆரம்ப காலத்தில் இருந்தே ஒடுக்கப்பட்ட மக்கள் நடாத்திய அடிப்படை மனித உரிமைக்கான போராட்டங்களை ஆதரித்தவர். ஐக்கியமானவர். இதனால் பஞ்சமரில் உள்ள ஒரு சாதிக்குடும்பத்தின் பட்டத்தை சாதிவெறியர்கள் காத்தியுடன் இணைத்து அழைத்தனர். அவர் சாதி வெறியர்களின் சிம்ம சொப்பனமாக விளங்கினார். ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழராக மிளிர்ந்தார்.

தீண்டாமைக்கெதிரான போராட்டத்தோடு ஓய்ந்துவிடாமல் தேசிய ஒடுக்குமுறைக்கெதிரானதும், பேரினவாதத்திற்கும் பிரிவினைக்கும் எதிரான வெகுஜன இயக்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி' என்ற வெகுஜன இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் அமைப்பு வேலைகளிலும் தோழர் காத்தி விரைந்து செயற்பட்டார். அவர் செயற்பாடு நிறைவேறுமுன் இயற்கை அவரை எம்மிடமிருந்து பிரித்துவிட்டது. தோழர் காத்தி தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிலைப்பாடு உடையவர். தமிழ் மக்கள் வாழும் பிரதேசம் அவர்களின் உரிமைப் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்டு பிரதேச சுயாட்சியை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்டாகக் கட்சியில் செயற்பட்டவர்.

தோழர் காத்தி ஒரு புத்திஜீவி. ஊசலாட்டமற்ற புத்திஜீவி. பாட்டாளிவர்க்க நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட மார்க்ஸிச, லெனினிஸ போராளி. வர்க்கப் போராட்டத்தின் மூலமே தேசத்தின் பிரச்சனைகளும், தேசிய இனங்களின் பிரச்சனைகளும் நிரந்தரமாகத் தீர்க்கப்பட முடியும் என உறுதியாக நம்பி செயற்பட்டவர். சோஷலிசம், கம்யூனிஸம் அவரின் இலட்சியம். தோழர் காத்தியை நூல் வடிவில் காண்பதுடன், அவர் இலட்சியங்களை வென்றெடுப்பதற்கான வேலைகளை செய்வதன் மூலம் வரலாற்றில் தோழர் காத்தியை வாழவைக்க வேண்டும். சொல் அல்ல செயல் வேண்டும். இதுதான் அவரின் நடைமுறை.

தோழர் காத்தியின் சித்திரத்தைத் தீட்டுவது மிகச் சிரமம். மீனின் அழகு தோற்றத்துக்கு அவற்றின் செதில்கள் ஒரு பகுதியாக அமைவது போல், அவரின் வார்த்தைகள், செயற்பாடுகள், அவரின் புறத் தோற்றத்தின் ஒரு பகுதியாக அமைந்திருந்தன. எதையும் எளிமையாகவும் நகைச்சுவையோடும் நேரடியாகவும் சொல்வது அவரின் பிரதான அம்சம். அவருடைய சாதனைகள் பற்றிய ஒளிவட்டம் எதுவும் பிரகாசிக்கவில்லை. உலகப் பாட்டாளி வர்க்கப் புரட்சி அறிஞனிடம் காணப்பட்ட பராக்கிரமம் அவரிடம் காணப்பட்டது. இந்த பராக்கிரமத்தை மக்கள் அறிவர்.

உலக சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் சகல சுகபோகங்களையும் துறந்து, கர்வங் கொள்ளாது, தியாக வாழ்க்கையை வாழ்வதுதான் புரட்சிகர புத்திஜீவியின் பராக்கிரமம். இந்தப் பராக்கிரமம் தோழர் காத்தியிடமும் காணப்பட்டது. இதனால் மக்கள் தோழனாகினார்.

வ.சின்னத்தம்பி
நீண்டகால கட்சித் தோழரும்,
ஓய்வு பெற்ற ஆசிரியரும் ஆவார்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More