Slideshow

பேசாப்பொருளை பேசு பொருளாக்குவதன் அரசியல்!

என்.சரவணன்

முதலில், சமூகத்தில் மிகவும் விரிவாக விரவிநின்று, சமூகத்தில் நிலவுகின்ற பெரும்பாலான ஒடுக்குமுறைகள் எப்படி பேசாப்பொருட்களாக ஆகின்றன எனபதை சிந்திக்க வேண்டாமா? இது வெறும் தற்செயலோ அல்லது எவருமே பேச முன்வராமையினாலோ நடந்தவையல்ல. சில விடயங்களை பேசாப்பொருளாக வைத்திருப்பதிலேயே ஆதிக்க சக்திகளது நலன்கள் தங்கியிருக்கின்றன. எனவே போசாப்பொருளாக ஆக்குவதிலும் அதனை அப்படியே தக்கவைப்பதிலும் ஓர் அரசியல் இருக்கிறது என்பதை குறித்துக் கொள்வோம்.

சமூகத்தில் எங்கும் விரவிநிற்கும் சுரண்டல், பால்வாதம், யாழ்மையவாதம், சைவவேளாள சித்தாந்தம் போன்றவற்றை பேசாப்பொருளாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் பெரிதும் அக்கறையாயுள்ளன. இவற்றை இவ்வாறு வைத்திருப்பதில் மிகுந்த பிரயத்தனங்களை மேற்கொள்கின்றன. இத்தடைகளையும் மீறி இதுவரை எவருமே பேசாமல் இருந்து விட்டதாக கூற முடியாது. அவ்வாறு பேசியவர்களது குரல்கள் எவ்வாறு நசுக்கப்பட்டன என்பதுதான் கவனத்திற்குரிதாகும். இதற்கென ஆதிக்க சக்திகள் கையாளும் பொறிமுறைகள் கவனிக்கப்பட வேண்டியனவாகும்.


சமூகத்தில் நிலவும் ஆதிக்கக் கருத்தாக்கங்களை ஆதிக்க குழுமம் நேரடியாக நிறைவேற்றவேண்டிய அவசியம் கிடையாது. அவ்வாறான ஆதிக்க கருத்தாக்கங்களும், அதன் வடிவங்களும் நேரடியாக பிரயோகிக்க வேண்டுமென்றில்லை. அவை நிறுவனமயப்பட்டுள்ள சூழலில் அதனை அடக்கப்படுவோரும் கூட தாமறியாமலேயே அந்த ஆதிக்க பிரயோகத்தில் பங்குகொள்வர்.


இந்த ஆதிக்க கருத்தியலுக்கு உட்பட்டே அடிமட்ட மக்களின் கருத்துக்களும் இந்தவகையில் அமைந்திரக்கும் என்பதை குறித்துக்கொள்வோம்.


இப்படிப்பட்ட பிரச்சனைகளே சமூகத்தில் இல்லையென்பது போல பாவனை பண்ணிக்கொண்டு, ஒப்பீட்டளவில் முக்கியத்துவமில்லாத அல்லது முற்றிலும் எதிர் விழுமியங்களிற்கு அதீத முக்கியத்துவம் அளிப்பது வெகுஜன தொடர்பு சாதனங்களை கைவசம் வைத்துக் கொண்டுள்ள இந்த ஆதிக்கச் சக்திகளால் இலகுவிலேயே செய்யமுடியும்.

தப்பித்தவறி யாராவது இவற்றை அரங்கிற்கு கொண்டுவர முனைந்தால் அதுதொடர்பாக ஒரு கடுமையான மௌனத்தை மேற்கொள்வர். இந்த குறுகிய நோக்கம் கொண்ட, மிகவும் செயலூக்கமான இந்த மைளனத்தைக் கலைப்பது என்பது சாதாரண தனிநபர் ஒருவருக்கு இலகுவான காரியமல்ல.


இப்படிப்பட்ட பிரச்சனைகளை எழுப்புவர்கள் மரபை மீறிவிட்டதாக, அசிங்கங்களை பேசுவதாக, இலக்கிய நயமற்று இருப்பதாக, சிறிய பிரச்சனைகளை பெரிதுபடுத்துவதாக,,,, இப்படிப்பட்ட பல குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் மிகக் காட்டமாகவும் திரும்பத்திரும்பவும் கூறுவதன் மூலம்சம்பந்தப்பட்டவர் தனது நடத்தை குறித்து சந்தேகப்பட, தலைப்பட வைத்துவிடும்.


சம்பந்தப்பட்டவர்களை ஒதுக்கிவிடுவது தமது குறுகிய வரம்புகளிற்கப்பால் சிந்திக்க முடியாதவர்களாக சித்தரிப்பது தொடக்கம் அவர்களுடனான நட்புறவுகளை துண்டிப்பது உட்பட தொழில் முறையில் இடையூறுகளை ஏற்படுத்துவது வரை இது செல்லலாம்.


எனவே தனிநபர்கள் என்ற வகையில் ஒருவர் இத்தடைகளைத் தாண்டி தாக்குப்பிடிப்பது அவ்வளவு இலகுவான காரியமல்ல. இதனால் பேசாப்பொருளை என்றென்றும் பேசாப்பொருட்களாக வைத்திருப்பதில் ஆதிக்க சக்திகள் நீண்டகாலம் வெற்றிபெற்று வருகின்றன.


எங்காவது இத்தடைகள் உடைக்கப்பட்டனவாயின் அவை வெறுமனே தனிமனிதர்களின் முயற்சிகளின் விளைவாக அல்லாது வெகுஜன இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை மூலமே சாத்தியப்பட்டன. உம் பெரியாரின் சுய மரியாதை இயக்கம், தலித் இயக்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், பல நாடுகளில் பெண்ணிலைவாத அமைப்புகள், ஓரினச்சேர்க்கையாளர்களின் அமைப்புகள், கறுப்பின மக்களியக்கங்கள்.. என இந் நிலைமையை சாத்தியமாக்கியிருக்கின்றனர்.


பேசப்பட்டே ஆகவேண்டிய ஒரு பொருள், பேசாப்பொருளாக இருக்கின்ற நிலையில், பேசுவதற்கு தளமில்லாத நிலையில், பேசத்தடையிருக்கின்ற நிலையில், பேசத் தயங்குகின்ற நிலையில் பேசத் துணிகின்றோம்.


எந்தவொரு சமுக அமைப்பிலும் ஆதிக்கம் முழுமைபெற்று நிலைபெற்று விடுவதில்லை. ஆதிக்கம் முழுமைபெறாத அந்த இடைவெளி நமது செயற்பாட்டுத்தளமாகிறது. அந்த இடைவெளிகளில் இருந்து தான் எதிர்வினைகளும் வெடித்தெழும்புகின்றன.


சமூகத்தில் பெரும்போக்காக நிலவும் ஆதிக்க கருத்தாக்கங்கள் பொத்தம் பொதுவாக அனைவரதும் கருத்தாக முன்வைப்பதும், அதனை மதம், கடவுள், புனிதம், ஐதீகம் போன்றவற்றால் புனைந்து பட்டைதீட்டி எடுபடும்படியாக திணித்துவிடுவதும் ஆதிக்க சக்திகளின் உத்தியே.


ஆதிக்கக் கருத்தாக்கங்களின் பாதிப்பு அடிமட்ட மக்களின் கருத்தாக்கங்களிலும் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியதே. இந்த சவால்களே அடிமட்ட மக்கள் தமது கருத்துக்களை கூர்மைப்படுத்துவதற்கும், பலப்படுத்துவதற்கும் பேசாப்பொருளை பேசுபொருளாக்கிக் கொண்டிருப்பதை இடையறாமல் செய்ய வேண்டியிருக்கிறது.


நமது விளிம்பு நிலை கருத்துக்களை ஆதிக்கக் கருத்துக்கள் பலம் கொண்டு தனது வளங்களையும், வசதிகளையும், அனைத்து பொறிமுறைகளையும் பாவித்து விழுங்கி வந்தது தான் வரலாறு. இந்த கருத்தாக்கங்களுக்கு எதிரான நமது போராட்டம் விடாப்பிடியான தொடர் செயற்பாட்டின் மூலம் மட்டுமே எதிர்கொள்ளலாம்.


எனவே எமது சமூகத்திலுள்ள பேசாப்பொருட்களை பேசும் பொருட்களாக மாற்றுவதில் உண்மையிலேயே எமக்கு அக்கறையிருந்தால் அவற்றை தனிமனித நடவடிக்கைகளினூடாக அல்லாது மக்கள் திரள் இயக்கங்களுடன் இணைத்துத்தான் முன்னெடுக்க வேண்டும். இதற்தாக இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபடும் தனிமனிதர்களை நாம் உற்சாகப்படுத்தக் கூடாது என்பதல்ல.


எந்தவிடயத்தை பேசுபொருளாக மாற்றுவதற்கும் முதலில் அது தொடர்பான தெளிவான கோட்பாட்டுப் புரிதல் இருந்தாக வேண்டும். முறையான கோட்பாட்டுச் செயற்பாடின்றி இது சாத்தியப்பட போவதில்லை.


ஆதிக்க சித்தாந்தங்களின் வேர்கள் ஆழமாக நிலையூன்றியிருப்பவை. வரலாற்றின் கடுமையான அடக்குமுறையைப் பிரயோகித்தே அது அவற்றை நிலைநிறுத்தியுள்ளது. நாமும் அதன் ஆழத்தில் நின்றுதான் சமரிடவேண்டும். அது எளிமையான விடயமல்ல. நமது உறுதியும், நேச சக்திகளின் ஒன்றிணைவும், நமக்கு அவசியம்.


பேசாப்பொருளை பேசுபொருளாக்குவதில் நமக்கு இருக்கிற கடமையும் பொறுப்பும் அதிகம். தொடர்வோம்....

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More