Slideshow

'உலாவும் காழ்ப்புணர்வு வைரஸ்'


அறிக்கை -
இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

‘‘சாதியத்திற்கெதிரான போராட்டங்களும் புலம்பெயர்ந்த வேஷக்காரர்களும்‘‘ என்ற தலைப்பிடப்பட்டு சம்புகன் என்பவராலேயே அக்காழ்ப்புணர்ச்சி வைரஸ் பரப்பப்பட்டுள்ளது. இவ்வாறான செய்திகளில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தனிநபர்கள் மீதான தாக்குதலுக்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது.

வழமைபோல இவ்வாறான செய்திகளுக்கு முன்னுருமை கொடுப்பதற்கென்றே தமது வாழ்வை அர்ப்பணித்து தியாகம் புரியும் ‘இனியொரு‘, ‘தேசம்‘ போன்ற இணையங்களிலேயே சம்புகனின் காழ்ப்புணர்ச்சிச் செய்தியும் வெளியாகியுள்ளது.


தேழர் சி.கா.செந்தில்வேல் அவர்களும், தோழர் ந.ரவீந்திரன் அவர்களும் எழுதிய ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ எனும் நூலும், சு. சந்திரபோஸ் அவர்களால் தொகுக்கப்பட்ட ‘எம்.சி. ஒரு சமூக விடுதலைப்போராளி‘ எனும் நூலையும் தலித் சமூக மேம்பாட்டு முன்னணியினராகிய நாம் பிரான்சில் முதலில் அறிமுகப்படுத்தியதோடு அந்நூல் பற்றிய விமர்சன நிகழ்வையும் ஏற்பாடுசெய்தோம். பிற்பாடு லண்டனில் இலங்கை ஜனநாயக ஒன்றிய உறுப்பினர்களுடன் நாமும் இணைந்தே அங்கும் மேற்படி நூல்களின் அறிமுக, விமர்சன நிகழ்வையும் ஏற்பாடு செய்தோம்.


எனவே சம்புகனின் காழ்ப்புணர்வையும் அவரது நிதானமற்ற எழுத்துகளையும் நூல் ஆசிரியர்களுக்கும், தலித் சமூக ஆர்வலர்களுக்கும் விளக்குவது எமது கடமை எனக்கருதியே இதை எழுதுகின்றோம். இதனூடாக ‘சம்புகன்களை‘ வெற்றிகொள்வதென்பதோ, ‘சம்புகன்களிற்கு‘ விளக்கமளிப்பதென்பதோ எமது நோக்கமல்ல.


தோழர் செந்தில்வேல் அவர்களை நாம் பிரான்சில் சந்திக்கும்போது ‘சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும்‘ என்ற நூல் பல புதிய மேலதிக இணைப்புகளுடன் மறுபதிப்பு செய்வதாக அவர் கூறியபோது நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். அப்புத்தகம் ஒன்றே முதல் முதலாக யாழ்ப்பாண சாதிய ஒடுக்குமுறைகளையும் அதற்கெதிரான போராட்டங்களையும் பதிவு செய்த புத்தகம் அது மீளவும் மறுபதிப்பு செய்வது மிக அவசியமானதே எனக்கூறி, அது வெளிவரவேண்டியதன் அவசியம் பற்றியும் அவருடன் கலந்துரையாடினோம். பிற்பாடு அவரே எமக்கு சில புத்தகங்களையும் அனுப்பி வைத்தார்.


விமர்சனம் என்பது நிறை,குறைகளை பரிசீலிப்பது. அதுவே ஒரு படைப்பாளியின் பன்முக வளர்ச்சிக்குரிய தளம் என்பதுவும் பலர் அறிந்த விடயம். அப்படியான விமர்சனங்கள் சரியாக முன்வைக்கப்பட்டதா இல்லையா என்பது வாசகர்களின் புரிதலின் எல்லைக்குட்பட்டது. இதை நூலாசிரியர்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். காரணம் நூலாசிரியர்களும் அவ்வாறான குறை, நிறை விமர்சனங்களை முன்வைத்தே தமது பார்வைகளை அகலப்படுத்த முனைந்துள்ளார்கள் என்பதை ‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘ எனும் நூலை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வர்.
மீண்டும் சொல்லுகின்றோம் நாம் பிரான்சில் ஏற்பாடு செய்த அறிமுக, விமர்சன நிகழ்வில் விமர்சனம் என்ற நிகழ்வே நடைபெறவில்லை. புத்தகத்திலுள்ள உயர்சாதிய ஒடுக்குமுறை செய்திகள் குறித்தே அதிகமாக பேசப்பட்டது. அந்தவகையில் ‘இலங்கையில் சாதியமும் அதெற்கெதிரான போராட்டமும்‘ என்ற நூலின் அவசியமும் தேவையும் அதன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமே பிரான்சில் உரையாற்றியவர்களின் கவனத்திற்குள்ளானது. ஆனால் சாதியம் குறித்து நூலில் பேசப்படும் அரசியல் குறித்தோ, அதில் பேசப்படும் சாதியப் போராட்ட நடைமுறைகள் பற்றியோ, அந்நூல் ஆசிரியர்கள் பிறர் மீது வைக்கும் விமர்சனங்கள் குறித்தான விவாதங்களோ பிரான்சில் நடைபெறவில்லை. ஆனால் லண்டனில் நடைபெற்ற நிகழ்வானது நூல்பற்றி பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்ப்பட்டதாகவே நாம் நம்புகின்றோம்.


பிரான்சில் நடைபெற்ற நூல் விமர்சனக் குறைபாட்டை அங்கு நடந்த கலந்துரையாடலின்போது சோபாசக்தி அவர்கள் குறிப்பிட்டுப் பேசியதோடு இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் என்ற நூல் மீதான தனது அபிப்பிராயத்தையும் சுருக்கமாகக் கூறினார். ஆனால் . ‘‘ பாரிசில் சோபாசக்தி இந்த நூல் எம்.சி.சுப்பிரமணியம் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்று கூறுவதாகச் சொல்லியிருந்தார் அவர் நிச்சயமாக நூலை வாசிக்கவில்லை என்பேன்‘‘ என்று சம்புகன் குறிப்பிட்டுள்ளார். இதே சோபாசக்திதான் ‘‘இது வந்து மிக முக்கியமான புத்தகம். கிட்டத்தட்ட இலங்கையிலுள்ள சாதியமைப்பின் தோற்றம், அதனுடைய போராட்டங்கள் பற்றிய தகவல் அடங்கிய மிகக் கடுமையான உழைப்பில் உருவாக்கப்பட்ட ஒரு ஆவணம்.....இந்தப் புத்தகம் வந்து ஒரு ஆவணக் களஞ்சியம். கடந்த நூறு வருடங்களாக இலங்கையில் நடந்த தலித் போராட்டங்கள்..., எத்தனை தலித் அமைப்புக்கள் இருந்தன, அவை எங்கே முடக்கப்பட்டன, 1966 இன் ஒக்டோபர் எழுச்சி என்ற பலவகையான விடயங்களைக் கொண்ட ஆவணம். சாதி ஒழிப்புப் போராட்டத்தில் எங்களைப்போல சமூக அக்கறையுடையோருக்கு இது ஒரு கைநூல்...., ஒரு பைபிள்...‘‘. என்றும் சொன்னார். (பார்க்க ) இத்தகைமைகளையும் சம்புகன் மறுப்பதாகத்தானே அர்த்தம்!! ஏனெனில் சோபாசக்தி புத்தகம் வாசிக்கவில்லை எனில் மேற்படி சோபாசக்தி சொன்ன நூலுக்குரிய தகைமைகளும் வெறும் கற்பனைதானோ!!. சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கும், சமூக அக்கறையுடையோருக்கும் உகந்த புத்தகம் இல்லை என்பதாகத்தான் சம்புகன் கருதின்றார்.இப்புத்தகத்தை உன்னிப்பாக படிப்பீர்களாயின் எம்.சி.சுப்பிரமணியம் அவர்களை இந்நூல் கடுமையாக விமர்சிப்பதை நீங்கள் அறிவீர்கள். எம்.சி சுப்பிரமணியம் அவர்கள் சாதி ஒழிப்பிற்காக எதுவுமே செய்யவில்லை என்பதாகக்கூட சொல்லப்படுகிறது.‘‘ என்பதாகவும் சோபாசக்தியின் விமர்சனம் இருந்தது. இந்த நூலில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை குறித்து பதிவு செய்யப்பட்ட ஏழாவது அத்தியாயத்திலிருந்து எட்டாவது அத்தியாயம் வரை பேசும் விடயங்களை அவதானிக்கும் வாசகர்களுக்கு சிறுபான்மைத் தமிழர் மகாசபை மீதும், அதன் முன்னணித்தலைவர்கள் மீதும் நூல் ஆசிரியர்கள் பகைமை பாராட்டுகிறார்கள் எனும் முடிவிற்கு வரும் வாய்ப்புகளும் உள்ளது. அதே நேரம் எம்.சி சுப்பிரமணியத்தின் நற்பண்புகளும், அவர் தலித் சமூகங்களுக்கு ஆற்றிய சேவைகளும் கூட பதிவு செய்யப்படடிருக்கின்றதை வாசகர்கள் அறியக்கூடியதாகவும் உள்ளது.


சோபாசக்தியின் விமர்சனம் தவறு எம்.சி அவர்களை நூல் ஆசிரியர்கள் உதாசீனப்படுத்தவில்லை என்று வாதாடுவதற்கான வாய்ப்புகளும் நூலில் இருக்கின்றது. சம்புகன் அதற்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. மாறாக இந்த நூலையும், இதன் ஆசிரியர்களையும் தனிநபர்கள் மீதான தனது வஞ்சகங்களைத் தணிப்பதற்காகவே பயன் படுத்துகின்றார். நூலைப் பிரதானமாக முன்வைத்து அதன் அடிப்படையில் தனிபர்கள் விமர்சிக்கபடுவதென்பது ஒருவகை. ஆனால் சம்புகனுக்கோ நூலின் முக்கியத்துவம் இரண்டாம் பட்சமாகவே இருக்கிறது.

நூலில் எம்.சி குறித்தும், சிறுபான்பைத் தமிழர் மகாசபை குறித்தும் எழுதப்பட்ட பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டி எழுதப்பட்டிருக்கவேண்டும். உதாரணமாக எம்.சி அவர்களின் சேவை குறித்து: ‘‘...இக் கால கட்டத்தில் மகாசபையின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவரான எம்.சி சுப்பிரமணியம் மகாசபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். எம்.சி அவர்கள் மகாசபையின் ஆரம்ப உறுப்பினர் மட்டுமன்றி வடபகுதியில் மு.கார்த்திகேசன் அவர்களோடு இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியை முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர்களில் ஒருவர். எம்.சி சுப்பிரமணியம் மிகவும் கஷ்டப்பட்ட தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர். ஆங்கிலக்கல்வியில் மெற்றிக்குலேசன் வரை படித்து சித்தி பெற்றவர். இளைமைக்காலம் தொட்டு திராவிடக் கருத்துக்களால் கவரப்பட்டுப் பின் மார்க்சியவாதியாகி மிகத்துடிப்புடன் செயலாற்றி வந்த ஒருவர். தன் இளைமைக் காலத்தை தாழ்த்தப்பட்ட மக்களின் விமோசனத்திற்காக அர்ப்பணித்து செயலாற்றி வந்தவர்.‘‘ (பக்கம் 125 இரண்டாம் பந்தி) என ஆசிரியர்கள் எழுதியுள்ளதைக் சுட்டிக்காட்டியிருக்கவேண்டும். ஆனால் சம்புகன் ‘‘இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்‘‘ எனும் தலித்தியப் பிரதியை தனது தனிநபர்கள் மீதான பகைமையை (அது அரசியல் பகை, கருத்தியல் பகை, சொந்தப் பகை என எந்தப்பகைமையாகவும் இருக்கட்டும்) வெளிப்படுத்துவதற்காக பயன் படுத்தியிருக்கிறார் என்பதே உண்மை. நூலிலிருந்து எவ்விதமான மேற்கோள்களையும் ஆதாரங்களையும் பயன்படுத்த அவர் முயற்சிக்கவில்லை. இந்த நூலின் அவசியமும் தேவையும் கருதுபவர்கள், அதன் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதிப்பவர்கள் மனங்களிலிருந்து இவ்வாறான காழ்ப்புணர்வு செய்திகள் வெளிவரமுடியாது தனிநபர்கள் மீது தமக்கிருக்கும் காழ்ப்புணர்விற்காக ‘இலங்கையில் சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும்‘‘ எனும் நூலை பயன்படுத்த நாம் அனுமதிக்க முடியாது.
சம்புகன் சரவணன் மீதான தனது காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு ஏதோவெல்லாம் எழுதிவிட்டு (பார்க்க) ...சரவணன் இந்நூலை கட்சிப்பிரச்சார நுலாக காட்ட முயன்றிருக்கிறார். இதில் அதிசயம் என்ன? என்று மமதை கொள்கிறர். நூலில் பெரும்பகுதிகளில் அதன் ஆசிரியர்கள் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைகளும், அதன் பணிகளுமே சாதி ஒழிப்பப் போராட்டத்திற்காகன முன் நிபந்தனைகள் என்பதையே வலியுறுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்கள் எழுத்துகளில் ஸ்தூலமாக படிந்திருக்கிறது. அதை இனம் காண்பதொன்றும் கடினமானதல்ல. இந்நூலின் முதல் பதிப்பிற்கு மதிப்புரை எழுதியுள்ள பேராசிரியர் தில்லைநாதன் அவர்களே தனது பதிப்புரையில் . இந்த அத்தியாயங்களில் ஒரு பிரச்சாரத்தொனியையும் உணர்ச்சி வேகத்தையும் உணரமுடிகிறது. சரியானஎன்ற சொல் அடிக்கடி பயன்பட்டமையும் சில இடங்களில் ஏறத்தாழ நேரடியான வர்ணனையும் இருப்பது நூலாசிரியர்கள் இப் போராட்டங்களில் நேரடியாகவே பங்கு பற்றினர் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. (ப.14.) என தனது அபிப்பிராயத்தை பதிவு செய்திருக்கின்றார். இது எந்தவகை விமர்சனம் என்பதை வாசகர்கள் உணரவேண்டும்.
குறிப்பாக நூலின் ஏழாவது அத்தியாயத்திலிருந்து எட்டாவது அத்தியாயம் வரை மகாசபையின் பணிகள் அதன் முன்னணித் தலைவர்கள் பற்றியெல்லாம் பலவாறாகப் பேசப்படுகிறது. பின்பு 1964 ஆண்டில் கம்யயூனிஸ்ட் கட்சிப்பிளவு படும் தருணத்திலிருந்து ஆசிரியர்கள் தாம் சார்ந்த கட்சியின் நிலைப்பாட்டிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைப் போராட்டத்திற்கான நியாயத்தைக் கூறுவதோடு மகாசபையின் பணிகள் அனைத்தையும் அலட்சியப்படுத்தும் போக்கையும் காணக் கூடியதாக உள்ளது. உதாரணம்: ‘‘1967ம் ஆண்டு நடுப்பகுதியில் சாதி அடக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிராக நடைமுறைப் போராட்டங்களை எவ்வாறு ஆரம்பிப்பது என்ற பிரச்சனை கட்சியின் முன்னால் எழுந்தது. தேநீர்க் கடைகளிலும் ஆலயங்களிலும் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்பட வேண்டுமென்று கட்சி தீர்மானித்தது. ஏனெனில் சிறுபான்மைத் தமிழர் மகாசபையின் கீழ் இயங்கி வந்தவர்கள் இக்காலத்தில் கிராமங்களில் சலூன், சலவைத் தொழில் நிலயங்களில் முதலில் சமத்துவத்தை நிலைநாட்ட முற்பட்டுக் கொண்டனர். (அழுத்தம் இ.த.ச.மே.மு) இதனைக் கட்சி எதிர்த்தது. உண்மையில் சாதி அடக்குமுறையினதும் தீண்டாமையினதும் பிரதான மையங்களாகப் பெரும் ஆலயங்கள், பிரதான தேநீர்க் கடைகள் உணவகங்கள் என்பனவே திகழ்கின்றன. அவற்றைச் சுற்றியே சாதிவெறிப் பிற்போக்கு வாதிகள் அணிதிரண்டுள்ளனர் என்பதே யதார்த்தமாக இருந்தது. ஆதலால் பலமான அந்த மையங்களில் சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடுத்து வெற்றி பெறுவதே பிரதானமானது. அத்தகைய போராட்டம் வெற்றி பெறுங்கட்டத்தில் சலூன், சலவை நிலையங்கள் போன்றவை தாமாகவே சமத்துவ நிலையை வந்தடையமுடியும் என்பதையே கட்சி வலியுறுத்தியது. அவ்வாறின்றி சலூன், சலவை நிலையங்களில் மோதுவது பலமான எதிரி எங்கோ இருக்க உரிமைகள் பல மறுக்கப்பட்ட உயர் சாதிவாதிகளின் தயவில் தொழில் புரியும் சலவை, சலூன் தொழிலாளர்களுடன் மோத முனைவது தவறான தந்திரோபாயம் மட்டுமன்றி ஐக்கியப்படவேண்டிய சக்திகளைப் பகைத்து தம்மை தாமே பலவீனப்படுத்திக் கொள்வதாகவே அமையும் என்பதை கட்சி சுட்டிக்காட்டி நின்றது இது சாதிய ஒடுக்குமுறையின் முரண்பாட்டின் தன்மையையும் போராட்டத் தந்திரோபாயத்தினையும் தெளிவாக வரையறுத்துக் காட்டியது.‘‘ (ப.154)


இதுபோன்று கட்சியின் நலன்களிலிருந்தே சாதிய ஒடுக்கு முறைக்கான தீர்வுகளையும் முன்வைத்து எழுதியுள்ளார்கள்.


இது தவிர்க்க முடியாத ஒன்றாகவே நாம் இனம் காண்கின்றோம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மக்கள் நலன் குறித்து எதை செய்தாலும் தாம் சார்ந்த கட்சியின் நலன் கருதியும், அதன் தனித்துவம் கருதியும் தமது கட்சிப் பிரட்ச்சாரத்தையும் புகுத்த முனைவதென்பது அனைத்துக் கட்சி மட்டங்களிலும் நடைபெறும் நிகழ்வாகவே இருந்து வருகின்றது. அத்தோடு புரட்சிகரக் கம்யூனிஸ்ட கட்சியின் ஒரு ஸ்தாபனமாகவே ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்‘ இயங்கியது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தலித் சமூகமேம்பாட்டு முன்னணியைப் பொறுத்தவரையில் மகாசபைமேற்கொண்ட பணிகளும், தீண்டாமை வெகுஜன இயக்கம் மேற்கொண்ட பணிகளும் தலித் சமூகங்களுக்கு ஆற்றிய அளப்பெரிய சேவையாகவே கருதுகின்றது. எமக்கு கட்சிகள் முக்கியத்துவம் அல்ல சாதியொழிப்புப் போராட்டத்திலும், தலித் மக்கள் நலன்களுக்காகவும் செயல்பட்ட மனிதர்களையும் தியாகிகளையும் தான் நாம் மதிக்கின்றோம்.


அப்போதைய கம்யூனிஸ் கட்சியும் இடதுசாரிச் சிந்தனையுமே சாதி எதிர்ப்புப் போராட்டத்திற்கான உந்துதலை கொடுத்ததென்பதையும் யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால் எமது இன்றைய பார்வையில் பிற கட்சிச் சித்தாந்தம், கோட்பாடுகள் என்பன தலித் சமூக விடுதலைக்கு ஒரு இடையூறாகவே நமக்குத் தோன்றுகின்றது. கட்சிகளின் வரலாறுகள் அனைத்தும் தம், தம் கட்சி நலன்களுக்கே முன்னுருமை கொடுத்து செயல்பட்டு வரும் வரலாறாகவே இருந்து வருவதால் தலித்துக்களுக்கு என்று ஒரு கட்சியிருந்து அது தனது நலன்சார்ந்து செயல்படுவதொன்றும் தவறில்லை என்பதே எமது அபிப்பிராயமாகும். இதற்கு தலித்துகளெல்லாம் சாதிக்கட்சிகளாகவே பிரிந்து நிற்குதே என்று வியாக்கினம் பண்ணினால் எந்தக்கட்சிக்குள் பிளவில்லை என்று கேட்கின்றோம். கம்யூனிசக் கட்சிகளுக்கிடையே ஏன் பல பிரிவுகள் இருக்கின்றது, இடது சாரிகள் எனப்படுவோர் ஏன் ஓர் அணியில் திரள முடியாமல் போனது? அந்தப் பிளவுகளையும், முரண்பாடுகளையும் சம்புகனின் வைரஸ் செய்தி ரெக்னிக்கை பயன்படுத்தி நிறுத்தச் சொல்லுங்கள் நாமும் சாதிக் கட்சிகளெல்லாம் சிதறி ‘வெயிலிலும் மழையிலும் அலையாமல்‘ அவர்களை ஒரு ‘குடைக்குள்‘ கொண்டு வந்து நிறுத்துகின்றோம்.

அடுத்து மு.நித்தியானந்தன் பேசிய விடயங்கள் அதிகமாக புத்தகத்தில் எழுதப்பட்டவைகளை வாசித்துக்காட்டியே அவர் தனது விமர்சனத்தை மேற்கொண்டார். ‘‘...அம்பேத்கர், ஈ.வெ.ரா போன்றோர் சாதிய ஒடுக்குமுறையுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ள வர்க்க ஒடுக்குமுறையை ஏதோ வகையிற் புறக்கணித்ததால் பரந்துபட்ட ஐக்கியத்தின் வழியில் சாதி ஒடுக்குமுறைக்கும் சாதியத்திற்கும் எதிரான வெகுஜனப் போராட்டத்தை அவர்களால் முன்னெடுக்க இயலாது போயிற்று. (அழுத்தம் இ.த.ச.மே.மு) அதனாலேயே அவர்களது பேரைச் சொல்லிக்கொண்டு தலித்தியம் என்ற பேரில் சாதிய அரசியலை சிலரால் முன்னெடுக்க இயலுமாயிற்று. (ப.8) ‘‘ என திரு.சிவசேகரம் அவர்கள் எழுதியதைச் சுட்டிக்காட்டியே பெரியார், அம்பேத்கர் வெகுஜனபோராட்டங்களில் ஈடுபடவில்லை என்பது சிவசேகரத்தின் வஞ்சக நோக்கம் என்று நித்தியானந்தன் கூறினார். இதற்கு சம்பகன்‘‘பெரியார், அம்பேத்கர் போன்றோர் வெகுஜனப் போராட்டம் செய்யாதவர்கள் என்று சிவசேகரம் கூறுவதாக இன்னொரு புலுடா. அந்த விதமான சாடையிற் கூட எதுவும் எங்கும் சொல்லப்படாத போது, ஏன் இந்தப் பொய்? ஏன் இந்த வன்மம் பிடித்த அயோக்கித்தனம்?‘‘ என்று சொல்கிறார். (பார்க்க) (தயவு செய்து சம்புகனுக்காக காவடி எடுக்கும் இணையங்களையும் இந்தப் புத்தகத்தை ஒரு தடவையாவது வாசிக்கும்படி கேட்டுக் கொள்கின்றோம்.) இப்படியெல்லாம் தனது தனிநபர் விரோதங்களைக் காட்டும் ஒரு பையித்தியத்திற்கு எமது தலித் புத்தகங்கள்தானா பலிக்கடா? சம்புகன்தான் ஒரு மனநோயாளி அவருக்கு கடைவிரித்து வியாபாரம் பண்ணும் ‘தேசம்‘இனியொருஇணையத்திற்கும் என்ன மதி, மீண்டும், மீண்டும் ஏன் எங்களை வெள்ளாளப் புத்தி, உயர்சாதி திமிர் என்றெல்லாம் சொல்ல நிர்ப்பந்திக்கின்றீர்கள்.நித்தியானந்தன் ‘இலங்கையில் சாதியத்திற்கும் அதற்கெதிரான போராட்டங்ளும்‘ எனும் புதிய பதிப்பையும் முன்னைய பதிப்பான ‘சாதியமும் அதெற்கெதிரான போராட்டங்களும் எனும் இரண்டு நுல்களையும் காண்பித்துத்தான் உரையாற்றியவர். முன்னைய பதிப்பில் கெளரவிக்கப்பட்ட எஸ்.ரி.என்.நாகரத்தினம் ஏன் இரண்டாவது பதிப்பிலும் கெளரவிக்கப்படவில்லை என்ற மு.நித்தியானந்தனின் கேள்வி எமக்கும் நியாயமாகவே படுகின்றது. அன்றைய சுழலில் சமூக விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் எந்தக் கட்சி சார்பும் இல்லாமல் ஒரு ‘முன்னணிப் போராளியாக‘ செயல்பட்டதாக நாம் காணமுடியாதிருக்கின்றது. ஆனால் ஓர் முன்னணிப் போராளியாக கட்சி அங்கத்தவர் இல்லாமல் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்துடன் எஸ்.ரி.என். நாகரத்தினம் அவர்கள் செயல்பட்டது ஆச்சரியமாகவே உள்ளது. எனவே அந்தவகையிலும் நாம் அவரைத் தொடர்ந்து கெளரவிக்க வேண்டியது ஒரு வரலாற்றுக் கடடமையாகவே கருதுகின்றோம்.


சம்புகனின் காழ்ப்புணர்வுச் செய்தியின் சில விடயங்களுக்கே நாம் விளக்கமளித்துள்ளோம். அவர் புசத்திய பிற விடயங்களுக்கெல்லாம் நாம் பதிலளிப்பதற்கு அதொன்றும் விமர்சனம் அல்ல என்பதை நூல் ஆசிரியர்களுக்கும் தலித் சமூக அக்கறையுடையோருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.


இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More