Slideshow

வேட்டையாடுதலும் வேசம்போடுதலும்...

-சுகன்

மார்க்ஸியத்தின் எதிரிகள் மார்க்ஸியத்துட்புகுந்து அதை நீர்த்துப்போகச்செய்யவும் அதன் சாரத்தை அதிலிருந்து பிய்த்தெறியவும் முயல்வது இப்போது புதிதாகத் தொடங்கிய ஒன்றல்ல.


மார்க்ஸியம் எப்போதுமே அதனது உள்ளும் புறமுமான எதிரிகளின் சவால்களுக்கு முகங்கொடுத்து வந்திருக்கிறது.

விமர்சனங்களிற்கு முகங்கொடுக்கவும் கால தேச வர்த்தமானங்களிற்கேற்பத் தன்னை அடையாளப்படுத்தவும் தனது போராட்டப்பாதையைத் தேர்ந்துகொள்ளவும் மக்களையும் மக்களின் எதிரிகளையும் இனங்கண்டு மக்களிலிருந்து கற்றுக்கொண்டும்
கற்றுக்கொடுத்தும் வருகிறது.

பாரில் கடையர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டோர் என தனது அடித்தளத்தில் நின்று அது ஒட்டுமொத்த மானுட மேன்மைக்காக இயங்குகிறது.

காலம் முழுதும் வதுசாரி பிற்போக்கு முதலாளித்துவ முகாங்களிற்குள் இயங்கியவர்கள் அதன் பன்றித் தொழுவத்தில் வாழ்ந்து சுகங்கண்டவர்கள் திடீரென அரற்றியபடி அலமலந்து துள்ளி எழுந்து

"ஐயோ!அம்மா!! நான் மார்க்ஸிஸ்ட்!!""நம்மைவிட கம்யூனிஸ்ட்டுகள் வேறெவர்?"

என்றவாறான பாவலாக்களையும் பச்சோந்தித் தன்மைகளையும் நாம் இன்று நேற்றல்ல , எப்போதுமே கேட்டுவந்துள்ளோம்.

இவ்வகையிற்தான் சாதியின் பேரால் ஒடுக்கப்படுபவர்களின் கூட்டு விழிப்புணர்வாகிய தலித் ஓர்மையையும் எழுச்சிகளையும் போராட்டங்களையும் புகலிடத்தில் ஆதரிப்போர்கட்கும் அதற்காக இயன்றவரை உழைப்போரிற்கும் மார்க்ஸியத்தின் பேரால் அவதூறுபடுத்தி அவர்களைக் கொச்சைப்படுத்தி வேசதாரிகள் என்று அவர்களை எள்ளி நகையாடி கரித்துக் கொட்டி காழ்ப்புணர்ச்சியோடு நீ
ண்டகால அவர்களது மூதாதையரின் சாதி வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கக்கிளம்பியிருக்கிறார்கள் சாதி வெறி தேசியவாத தேசம் நெற்றும் இனிஒருவும்!

அவதூறிற்கும் கிசுகிசுக்களிற்கும் பேர்போன 'தேசம்நெற் இனிஒரு' தனது வால் நிமிராதென்று தொடர்ந்து நிரூபித்துவருகிறது.

நமது ஆசான்கள் இந்த நிலையை இப்படிக் காட்சிப்படுத்துவார்கள்.;

கடவுளோடிருந்த தேவர்கள் பூமியைப்பார்க்க ஆசைப்பட்டார்கள்.

மேலிருந்து எட்டிப்பார்த்தபோது பன்றிகள் பீயிலும் சாக்கடைகளிலும் புரண்டு நெளிந்துகொண்டிருந்தன. தேவர்களுக்கு அந்தக்காட்சி சுவாரசியமாகப் பட்டது.

கடவுளிடம் கேட்டபோது கடவுள் அளித்த விளக்கம் அவர்கள் ஆர்வத்தை அதிகப் படுத்தி தாங்களும் அதுபோல சில நாட்கள் வாழ்ந்து பார்க்கவேண்டு
மென கடவுளிடம் விண்ணப்பித்தார்கள்.

கடவுள் நாட் கணக்கைக் கொடுத்து இத்தனை நாளிற்கப்புறம் நீங்கள் மீண்டுவந்துவிடவேண்டுமெனச்சொல்லி அனுப்பிவிட்டார்.

நாட்கள் மாதங்களாகி வருடங்களாகி யுகங்களாகியும் பன்றிகளிற் கூடுபாய்ந்த தேவர்கள் கடவுளிடம் திரும்பியபாடில்லை.

"வர்ர நோக்கம் இல்லையோ!" என கடவுள் கேட்டபோது

"என்ன சுகம்! என்ன சுகம்!! இந்தச்சுகானுபவம்!!"

என மீள மறுத்துவிட்டதாக கதை உண்டு.

அவதூறு கிசுகிசு பரபரப்பு என பீயிலும் சாக்கடையிலும் உழலும் பன்றிகள் சிலநாட்கூட அவையின்றி வாழமுடியாத அபத்தமான நிலையில் பொரு
ளாதார ரீதியாகவும் கல்விரீதியாகவும் சமூகரீதியாகவும் தமது பிறப்பினடியாக ஒதுக்கப்பட்ட மக்கள் தமக்குள் ஒருங்குசேர முயற்சிக்கும்போது மார்க்ஸியத்தைத் துணைக்கழைத்து அவர்கள் எத்தனங்களை முளையிலேலே கிள்ள நினைப்பது வேடிக்கை, மேற்சாதிவாடிக்கை.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம் ஒடுக்குமுறையிலிருந்து மீள தமக்குக் கிடைக்கும் எல்லாவகையான ஆயுதங்களையும் பயன்படுத்துவார்கள் என்பது மார்க்ஸியத்தின் அரிச்சுவடி.

சுயமரியாதையையும் தமது தனித்துவத்தையையும் தன்மானத்தையும் எல்லாவற்றிலும் மேலாக தம்மை சமூகத்தில் முதல் மனிதர்களாக சமமானவர்களாக முன்நிறுத்துவதில் "தலித் அரசியல்" பெரும் ஆதர்சத்தையும் ஆறுதலையும் வழங்குகிறதென்றவகையில் அதைப் பற்றிநிற்பதில் எங்கே தவறும் தடுமாற்றமும் இருக்கமுடியும்.

எவ்வளவு தடித்த சாதிகொழுப்பு இருந்தால், தடிப்பிருந்தால் தமக்குரிய சாதிப்பேர்களைக் கடாசிவிட்டு தமக்குத்தாமே சுயமரியாதையுடன் இட்டபேராகிய தலித் என்ற பேரையே வைக்கக்கூடாதென்று இந்த மேற்சாதிநாய்கள் கூறுவார்கள்.

சாதித் திமிரில் வக்கிரத்தில் காலந்தோறும் இட்ட தாங்கள் விழித்துவந்த அவர்கள், பஞ்சமர்கள் என்று கூறும்படி கேட்பார்கள்!

காலங்காலமாக நால்வகை தந்திரங்களுடனும் தத்துவங்களுடனும் ஒடுக்கி அடக்கி வந்தவர்கள்

"தம்புகள் தும்புகள் தம்பட்டக் கம்புகள்" என்றும் "அதுகள்" என்றும் அஃறிணையில் விழித்து வந்தவர்கள் திடீர்க் கரிசன மிகுதியால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று உங்களைச் சொல்லுங்கோ!

உயர்ந்தவர்கள் உயர்த்தப்பட்டவர்கள் என்று நாங்கள் எங்களைச் சொல்லாமல் சொல்லுகிறோம் என்கிறார்கள்.

இன்னும் புத்திசாலிகள், தலித் என்று நீங்கள் ஏன் உங்களை ஒதுக்கிக் கொள்கிறீர்கள் நாங்கள் எல்லோரும் சூத்திரர்கள்தானே ! என்கிறார்கள்.

புத்திசாலித்தனமும் நயவஞ்சகமும் ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்துவரும் முகம் இது.

அடே! உங்களுக்கு உயர் வேளாளர்கள் என்று ஏன் பெயர் வந்தது?

சற்சூத்திரர் என்று ஏன் சொல்லும்படியாயிற்று என உங்களையும் உங்கள் அப்பன்மாரையும் எப்போதாவது நீங்கள் கேட்டதுண்டா?

ஒரு பெயரில் என்ன இருக்கிறது?

ஏதாவது ஒரு பெயரில் ஒரு சமூகம் தங்களைத் தாங்களே சொல்லிவிட்டுப் போகட்டுமே?

இதற்கேன் நாம் மல்லுக்கட்டுவான் என்று ஒரேஒருமுறை நீங்கள்
'சமூக ஜனநாயகத்தின்' பேரால் குழப்பமடைந்ததுண்டா?

இனி ஒருவின் ஓரவஞ்சனையான காட்டுரைக்கு இனி வருவோம்!

இனந்தெரியாதவர்களினால் சுட்டுக்கொல்லப்படுவது தமிழ் அரசியல்!

அதே தர்க்கத்தின் அடிப்படையில் இனந்தெரியாத தன்னை வெளிக்காட்ட திராணியற்ற ஒரு சுயமரியாதையற்ற மனிதனின் அவதூறிற்கும் அபத்தத்திற்கும் நாம் கவனம் கொடுத்து பதில் சொல்லவேண்டுமா என்பது

நமக்குக் கொடுக்கப்பட்ட சவால்!

ஆனால் மார்க்ஸியத்தைக் கேவலப்படுத்த அந்த அனாமதேயம் முடிவெடுத்தபின் மார்க்ஸீயத்தின் பேரால் நாம் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கம்யூனிஸ்ட் அகிலத்தின் பெரும் தலைவர்களில் ஒருவரான காவு
ட்ஸ்கியை லெனின்

"ஓடுகாலி;தெருவில் அலையும் விபச்சாரி!"

என்றெல்லாம் விமர்சித்திருக்கிறார் ஆனால் அது தனது சொந்தப்பெயரில், அறியப்பட்ட பெயரில்!

அந்த நேர்மையாலேயே மார்க்ஸியம் இன்றும் வாழும் ஒரு தத்துவமாக இருக்கிறது.

ஆனால் யாரிட்ட சாபமோ ! இப்படியான முகமூடிகளையும் இரும்புக்கை மாயாவிகளையும் மார்க்ஸியத்தின் பேரால் நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாயாவிகள் நமக்குப் பரிச்சயமானவர்கள்.

இராவணேஸ்வரன் நாடகத்தில் மாயாவி ஒரு அதிமுக்கியமான பாத்திரம்.

புராணப்பாத்திரங்களுடன் தம்மை அடையாளப்படுத்துவது நல்ல அறிமுகம்தான்.
சம்புகன் இராமனால் கொல்லப்பட்ட ஒரு சூத்திரன்.


அந்த சம்புகனைக் கேளடா ! நாம் இந்துவா நீ சொல்லடா?

என்று கே.ஏ.குணசேககரனின் ம க இ க பாடல் நாம் எல்லோரும் கேட்டதுதான் .

குணசேகரன் தலித் அரசியலிலும் பண்பாட்டுத்துறையிலும் பெரும் பங்களிப்பை நல்கும் அறிஞர்.


திராவிட அரசியலும் தலித் அரசியலும் இத்தகைய புராணப்பாத்திரங்களுக்கு கொடுத்த அங்கீகாரத்தையும் மதிப்பையும் வரலாற்றுத் தொன்மையையும் நாம் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

இங்கே சம்புகன் தலைகீழாக நடந்து வருகிறார் ஒரு மேற்சாதிக்காரனின் லாவகத்தோடும் நுட்பத்தோடும்.


நமக்கு இது ஒன்றும் புதிதல்ல.


சில நேரங்களில் நமது குசினிக்குள் வெள்ளம் தண்ணி வந்தால் அம்மிக்கல்லுக்குள் அடியில் ஒழித்திருக்கும் தேள் நட்டுவாக்காலி வெளிவருவதில்லையா! அப்படித்தான்.

இப்போதெல்லாம் இது ஒரு பாஸன்.

ஒடுக்குபவர்கள், சூத்திரர்கள் என்ற முகத்தோடுதான் வேட்டையாட வருகிறார்கள்.


இலங்கையில்,இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் பல இருந்தபோதும் புதிய ஜனநாயகக் கட்சிக்கு குறிப்பாக பிரான்சில் திடீரென ஆச்சரியப்படத்தக்கவகையில் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டது ஏன் என்பதை நீண்டகாலமாக புகலிட அரசியற்போக்குகளை அவதானிப்போர் அறிந்திருப்பர்.
புதிய ஜனநாயகக்கட்சி புகலிடத்தில் பொதுமட்டத்தில் அறியப்பட்டு இருக்கவில்லை. அது அறியப்பட்டதெல்லாம் அதனது தலித் அரசியல் எதிர்ப்பிற்காகவே.


கம்யூனிஸ்டுகளான அண்ணாமலை, விஜயானந்தன்,வினோதன் போன்றோர் கொல்லப்பட்டும் மணியண்ணர் போன்றோர் சிறைவைக்கப்பட்டுமிருந்த சூழலில்
கம்யூனிஸ்டுகள் அதன் சரியான அர்த்தத்தில் புலிஎதிர்ப்பாளர்களாகவே ஏக தேசம் அறியப்பட்டிருந்தனர்.


புலிகள்; வலதுசாரி, குறுந்தேசியவாத, பாஸிச, பயங்கரவாத, மக்கள்விரோத, மார்க்ஸிய விரோத, ஜனநாயகவிரோத....இன்னோரன்ன அடையாளங்களுடன் புகலிட பத்திரிகைகளில் சஞ்சிகைகளில் கருத்தரங்குகளில் சந்திப்புகளில் அறியப்பட்டிருந்தார்கள்.

அதற்கு எதிர்நிலையாக புலிஎதிர்ப்பாளர்கள் அறியப்பட்டிருந்தார்கள்... இடதுசாரி.. சர்வதேசிய .. ஜனநாயக...இப்படி.

அப்போதும் புதியஜனநாயகக் கட்சி அறியப்பட்டிருக்கவில்லை.

தனது கம்யூனிஸ்ட் கட்சி (இடது) எனும் பெயரைக் கடாசிவிட்டு புதியஜனநாயகக் கட்சி எனும் பெயரேற்றுக்கொண்டதற்கான காரணங்களையும் சூழல்களையுமிங்கு யாரும் அப்போது தேடுவாரில்லை.


எப்போது அவர்கள் இங்கு தேவைப்பட்டார்களெனில் நிறப்பிரிகை தொடக்கி வைத்த அம்பேத்கர் நூற்றாண்டு, அதை ஒட்டிய தலித் அரசியல் தமிழ்ச்சூழலில் பேசுபொருளாகிய பின்னணியில் புகலிடத்தில் அதை ஒட்டிய தேடலும் கரிசனமும் ஆதரவும் தோன்றியபோது வெள்ளாள தமிழ்த்தேசிய இயக்கப் பின்னணியிலிருந்து வந்த நபர்கள்,

"தலித் அரசியல் தமிழர் ஒற்றுமையையைக் குலைக்கும்,தொழிலாளர் வர்க்கத்தைப் பிளக்கும்" என்றமாறான முன்நோக்குகளை முன்வைத்தார்கள்.

இன்றும்கூட கிழக்குமாகாணத்தின் அரசியல் சுயாதீனத்தை மறுப்பவர்கள் தலித் அரசியல் எதிர்ப்பாளர்களாகவும் இருப்பதை இத்தோடு தொடர்புபடுத்தலாம்.

தம்மைத் தமிழ்த்தேசியத்தின் மூலவர்களாகவும் தமிழ்மக்களின் தலைவர்களாகவும் எதிர்காலத்தில் கற்பனை செய்து வைத்திருப்போர்க்கு அவர்கள் ஆதிக்கசாதிப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால்,யாழ்ப்பாணப் பின்னணியிலிருந்து வந்தகாரணத்தால் மற்றெல்லோரையும்விட அவர்கள் தலித் அரசியலை மிகவும் புரிந்துகொண்டிருந்தார்கள்.

எப்படியெனில் தலித் அரசியல் தலித்துகளின் அரசியல் தலைமையை வலியுறுத்துகிறது.நாங்கள் தலித்துகள் அல்ல,வெள்ளாளர்கள், அப்படியானால் நமக்கான இடம் என்ன?


நாம் சொன்னோம் "" ஏன் தலித்துகளின் தலைமையை ஏற்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

அவர்கள் சொன்னார்கள்;தமிழ்த்தேசிய இனத்தின் போராட்டத்தைத் திசை திருப்பிவிடும்!"

"அப்போது தலித்துகள் தொடர்ந்து பனை ஏறவேண்டியது தானா?"
" நாம் அவர்களுக்கு நவீன முறையில் தொழில்நுட்ப சாதனங்களைப் பனை ஏற அறிமுகப் படுத்துவோம்", "அவர்கள் தொழிலாளர் வர்க்கம்"

நீங்கள் சொன்னால் நம்பமாட்டீர்கள்! நமது வெள்ளாளர்கள் தமிழ் அரசியலில் தலித்துகளிற்கு இப்போதும் இந்தத் தீர்வினைத்தான் வைத்திருக்கிறார்கள்.
புலிகள் சொன்னார்கள்;நாம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவோம்!

*****************
அப்போது தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ,திராவிட இயக்கங்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொண்டிருந்தது மட்டுமல்ல தம்மைச்சுய விமர்சனமும் செய்துகொண்டிருந்தார்கள்.
பெரியார்..அம்பேத்கர் என்று தம்மை விரிவுபடுத்திக்கொண்டார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளில் தலித்துகள் கெளரவத்தோடும் மரியாதையோடும் போற்றப்பட்டார்கள்,அதன் முக்கிய பொறுப்புகளிற்கு

வந்தார்கள்,கட்சிகளுக்கு புதிய தார்மீக பலம் கிடைத்தது.

ஆனால் நமது புதிய ஜனநாயகக் கட்சி கிணற்றுக்குள் இருக்கவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.

தனது அரசியலில் சுயாட்சி,சுயநிர்ணய உரிமை இவற்றிற்கு அதிக அழுத்தம் கொடுக்கத்தொடங்கியது.இன்றுவரை புதிய ஜனநாயகக்கட்சி கிழக்கின் அரசியல் சுதந்திரத்தை மறுப்பதன் பின்னணி அதனது தமிழ்த்தேசிய அடிபணிவுதான். இந்தலட்சணத்தில் ஆதிக்க சாதியினரின் தமிழ் அரசியலிற்கு ஆபத்பாந்தவனாக கிடைத்த சிறுதுரும்புதான் புகலிடத்தில் புதிய ஜனநாயக (யாழ்ப்பாணக்) கட்சி.

(முன் கதைச் சுருக்கம்)

ஆனால் புகலிடத்தில் இடதுசாரிய மரபு இருக்கவில்லையா என நீங்கள் கேட்பீர்களாயின்; இருந்தது தோழர்களே!

தோழர்,பரா இடதுசாரி மரபிலிருந்து பிறழாமல் தலித் அரசியலை ஆதரித்த குற்றத்திற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டார். விமர்சிக்கப்பட்டார்.

தோழர்.சிவலிங்கம் நிலை இன்னும் பரிதாபகரமானது.அவர் இணைந்திருந்த எஸ்.எல்.டி.எவ் தலித்முன்னணியை ஆதரித்த குற்றத்திற்காக அவரும் வஞ்சத்தில் வீழ்ந்தார். எஸ்.எல்.டி.எவ் தலித் முன்னணியை ஆதரிக்காமல் இருந்திருந்தால் அதற்கு எந்தப்பிரச்சனையும் வந்திராது.

ஈ.என்.டி.எல்.எவ் முஸ்தபா வுடன் ரேடியோவில் தோழர்.சிவலிங்கம் அவர்கள் கடைசிவரை அரசியல் ஆய்வு நடத்துமட்டும் அவர் வஞ்சத்தில் வீழவில்லை.ஆனால் அவர் அமைப்பு தலித் மாநாட்டை லண்டனில் நடத்தும்போதுதான் அவர் வஞ்சத்தில் வீழ்ந்தார்.

இப்போது நித்தி.

சரவணனும் அப்படியே!

அன்றுமுதல் இன்றுவரை சரிநிகரையும் சரவணனையும் ஏந்தி இருந்தவர்கள் அவர் தலித் நெற் என்னும் இணையத்தளம் தொடங்கியபோதுதான் அவரைத் தொம்மெனக் கீழே போட்டார்கள்.அவர் புலிகளிடம் அடிவாங்கியபோது ஐயோ!!

அம்மா!! நான் நிர்வாணமாக நிற்கிறேன் என்றவர்கள் அவர் தலித் நெற் தொடங்கியபோது புலியிலும் மோசமாக அவர்களால் எதிர்கொள்ளப்படுகிறார்.
இத்தகைய தனிமைப்படுத்தல்களுக்கு நீண்ட தொடர்ச்சியுண்டு.

சிறூபான்மைத் தமிழர் மகாசபையிலிருந்து தலித் நெற்வரை இது தொடர்கிறது.
சரி இவர்கள் தலித் அரசியலை ஏற்றுக்கொள்ளவேண்டாம்,தலித் அரசியலுக்கு மாற்றாக இவர்கள் போக்குக்காட்டும் கம்யூனிட்ஸ்கட்சிகளுடன் உறவு எப்படி இருக்கிறது?

பூச்சியம்தான் .ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சியுடன் உங்களை இணைத்துக்கொண்டதுண்டா?

தமிழ்த்தேசியத்தைத் தவிர.

தமிழ்த்தேசிய விடுதலை இயக்கங்கள் அனைத்துடனும் கள்ள உறவு. புலிகளே இவர்களது ஆதர்சம்.

பிரபாகரனின் பேட்டி போடுவதும் லோகநாதனைக் காட்டிக்கொடுப்பதும், வரலாறு எல்லாவற்றையும் குறித்துத்தான் வைத்திருக்கிறது!

காட்டுரைக்கு வருவோம்!

சாதி ஒடுக்குமுறையைத் 'தணிப்பதில்'அந்நியத்தலையீடு பங்காற்றிய அளவிற்கு பெளத்தமும் பங்காற்றியுள்ளது.

இந்திய, யாழ்ப்பாணச் சூழலில் இந்துத்துவத்தின் பிடிப்பைப் பேசுபொருளாக்குவதைத் தவிர்ப்பதற்காக தென்னிலங்கையில் பெளத்தத்தைத் தவிர்ப்பது மொள்ளமாறித் தனம். ஏமாற்று.

பெளத்தத்தின் நால்வருண முறைக்கெதிரான போராட்டத்தின் விழுமியம் இன்னும் தென்னிலங்கைப் பெளத்தத்தில் உண்டு.அரசியல் அதிகாரத்திற்கு வருவதற்கு தென்னிலங்கையில் பிறப்பும் சாதியும் ஒரு தடையாய் அமைவதில்லை.

யாழ் குடாநாட்டில் சகல துறைகளிலும் வலுவாக இருந்த சாதியத்தின் பிடிப்பு யாரால் ? எதன்பேரால் ?எந்தச்சாதியின் பேரால் என்று சொல்வதற்கு சம்புகனுக்கு என்ன தயக்கம்?

ஏனிந்த ஒழிப்பு மறைப்பு?

யாரைக்காப்பாற்ற?

'இருந்த' என்று இறந்தகாலத்தில் குறிப்பிடுவதை நிகழ்காலம் குறித்துத்தான் வைத்திருக்கிறது.

'சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களு'மென்ற முதற்பதிப்புத் தலைப்பில் இலங்கையில் என்று சேர்க்கவேண்டி வந்ததற்கான காரணத்தை ரொம்பவும் சின்னப்புள்ளத்தனமாகச் சம்புகன் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் பதிப்பிக்கப்பட்டதால் அப்படி ஆகிவிட்டதென்று.

தமிழகத்தின் தலித் எழுச்சி,அதை ஒட்டி எழுந்த தலித் அரசியல் ,தலித் இலக்கியம் ,தலித் பண்பாடு இவை குறித்த ஆயிரக்கணக்கான வெளியீடுகளும் ஆய்வுகளுந்தான் ஈழச்சூழலில் சாதியம் குறித்த கரிசனையை மீளக் கொண்டுவந்தது.

ஈழத்தில் சாதியம் குறித்த பல்வேறு ஆய்வுகள் தமிழகத்தில் கவனம் பெற்றது. டானியல் தலித் இலக்கியத்தின் மூலவராகப் போற்றப்பட்டார்.(இதில் அ.மார்க்ஸின் பங்களிப்பிற்காகவே இன்றுவரை கூட்டுச்சேர்ந்து தாக்கப்படுகிறார்.)

முக்கியமான ஒரே ஒரு வரலாற்று ஆவணம் என்ற ரீதியில் 'சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' முதற்பதிப்பு தேடியும் கிடைக்காத அளவிற்கு பிரபல்யமானது.அதனது குற்றங்குறைகளுடன் எல்லோராலும் தேடப்பட்டது.

நான் பலருக்கு அதைப் பரிந்துரை செய்திருக்கிறேன். 1990இல் நாங்கள் பாரிசில் அதை எடுத்து வினியோகித்துப் போதாமல் போட்டோக்கொப்பி அடித்து வினியோகித்தோம்.

அதனது விற்பனை நோக்கங்களுக்காக, 'இலங்கையில்' என்று முன்னொட்டு சேர்க்கப்பட்டதேயல்லாமல் தமிழ்நாட்டில் பதிப்பிக்கப்பட்டதாலல்ல.

அதை வண்ணார்பண்ணையில் பதிப்பித்தாலும் இந்தியாவில் விற்பனைக்குப் போகும்போது இலங்கைக்குரிய அடையாளம் இருந்துதான் தீரும்.

தமிழகத்தில் அதைப் பரவலாகுவதற்கான எத்தனமே அப்பெயர்மாற்றம்.

இன்னும் சரியாகக் கேட்போமானால்" அப்போது இலங்கையில் இருக்கும் வாசகர்களுக்காக இரண்டாம் பதிப்புப் போடவில்லையா??" என்று கேள்வி எழுமே!

என்ன சொல்வீர்கள்?

மட்டக்களப்பில் திருகோணமலையில் மலையகத்தில் என்று பதிப்புகள் போடும்போடு மாறி மாறித் தலைப்பையும் மாற்றவேண்டியிருக்குமே?

'இந்தியாவில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்' என்று ஈழத்தில் பதிப்பு ஒன்று போடவேண்டியிருக்குமே?

ரொம்பவும் சின்னப்புள்ளைத்தனமாகவெல்லோ உங்கள் சால்யாப்பு இருக்கிறது.
"தமிழகத்தில் தலித் அரசியல் ஏற்படுத்திய, இலங்கையில் சாதியம் குறித்த தேடல், டானியலின் நூல்கள் மற்றும் ஈழத்து இலக்கியம் இவை குறீத்த கரிசனம் மீண்டும் இரண்டாம் பதிப்பைக் கொண்டுவரக் காரணமாயிற்று..."

என்று பெருமிதத்துடன் கூறுவதற்கு என்ன பிரச்சனை? ஏன் தயங்கவேண்டும்?
அப்படியாயின் தேசிய கலை இலக்கியப்பேரவை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும் அல்லவா 'இலங்கையில்' என்று முன்னொட்டுக் கொடுத்திருக்கவேண்டும்.

டானியலின் காலத்தில் தலித் அரசியல் தமிழகத்திலும் தமிழ்ச்சூழலிலும் பேசுபொருளானதில்லை என்ற சாதாரண உண்மைகூட சம்புகனுக்குத் தெரியவில்லை. "டானியல் தலித் என்ற சொல்லை ஏற்றுக்கொள்ளவில்லை,தமது நூல்களில் பயன்படுத்தவில்லை" என்று கூறும் சம்புகன் டானியல் எப்போது இறந்தார் என்பதையாவது அறீந்திருப்பாரா ?

டானியல் இறந்தது 1984 இல்!

அம்பேத்கர் நூற்றாண்டையொட்டி தலித் அரசியல் பேசுபொருளானது 1992இல்!

சரி டானியலை விடுவம், இப்போது டொமினிக் ஜீவாவும் சரவணனும் தேவதாஸனும் பயன்படுத்துகிறார்களே! ஏற்றுக்கொள்ளவேண்டியதுதானே!

எப்படி மார்க்ஸியத்தின் பேரால் தலித் அரசியலைத் தவிர்த்துத் திண்டாடுகிறார்களோ அதே அடிப்படையிற்தான் அப்போது சிறூபான்மைத்தமிழர் மகாசபை, எம்;சி,கொம்யூனிஸ்கட்சி (மொஸ்கோ சார்பு)இவற்றின் பங்களிப்பையும் வரலாற்றையும் தவிர்ப்பதில், அதீத அக்கறை காட்டி வந்துள்ளார்கள். சண்முகதாசனை நூலில் 'மன்னித்தவர்கள்' எம்.சி.யை மன்னிக்கவில்லை.கடைசியில் எம்.சி.சாதி எதிர்ப்புப்போராட்டத்தில் ஒரு துரோகியாகவே நூலில் சித்தரிக்கப்படுகிறார்! சரவணன் சொன்ன கட்சிப்பிரச்சார நூலாகத்தானே, அப்பட்டமாக புதிய ஜனநாயகக்கட்சியின் தலித் அரசியல் விரோத பிரச்சார நூலாகத்தானே இரண்டாம் பதிப்பு வந்துள்ளதைப் பார்க்கக்கூடியதாக உள்ளது.

இதன் மறுபக்கமாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட வரலாறாக தற்சமயம் வந்துகொண்டிருக்கிற புதிய வெளியீடுகளான

1) ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி(என் .கே.ரகுநாதன்)
2)வாழ்வும் வடுவும்(இ.வே.செல்வரட்ணம்)
3)எம்.சி ஒரு சமூக விடுதலைப் போராளி(எஸ்.சந்திரபோஸ்)
4)எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்(டொமினிக் ஜீவா)
5)வரலாற்றில் வாழ்தல்(எஸ்.பொ)

போன்ற தன்வரலாற்று நூல்கள் சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் பல்வேறு பக்கங்களையும் இருட்டடிப்புச்செய்யப்பட்ட பக்கங்களையும் சுட்டிச் செல்கிறதே!
"1964ற்குப்பிறகு தமிழர்களிடையே சாதி எதிர்ப்புப் போராட்டத்தை மார்க்ஸிய லெனினிய வாதிகளே முன்னெடுத்தனர்" என்று தலித்துகள் வேறாகவும் மார்க்ஸிய லெனினிய வாதிகள் வேறாகவும் இன்றுவரையும் இருக்கின்ற நிலையை 'மார்க்ஸியம்' ஏற்றுக்கொள்கிறதா?

இதே அளவுகோலையும் ஆவேசத்தையும் மைய,மேற்சாதிய கட்சிகளுக்குப் பாவித்ததுண்டா?

மாதவி தலித் அரசியலின் மிகவும் அடிப்படையான விடயத்தை தொட்டுச் சென்றார்; தலித் அரசியலின் வெளிச்சத்தில் தலித் உளவியலைப் புரிந்தோர்க்கு மாதவியின் கருத்தில் பிரச்சனை ஏதுமிருக்கவில்லை.

தலித்துகளிடமிருந்து கற்றுக்கொள்ள வெள்ளாளர்களுக்கு மட்டுமல்ல, முதலாளித்துவக்கட்சிகட்கும் கம்யூனிஸ்ட் கட்சிகட்கும் நிறைய இருக்கிறது.

எஸ்.ரி.என்.நாகரத்தினம் அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அவரது படத்தைத் தாங்கிய முதற்பதிப்பு முக்கியமான விடயத்தைச் சொல்கிறது.

பறையர் சமூகத்தைச் சேர்ந்த எஸ்.ரி.என்.சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கு ஒரு கட்டத்தில் தலைமை தாங்கியது தலித் அரசியல் முன்வைக்கும் 'தலித் தலைமை' என்ற முன்நிபந்தனையுடன் தொடர்புள்ளது.

தலித்துகளின் தலைமையை தொட்ர்ந்து சகிக்கப்பழகாத மனநிலையே இரண்டாம் பதிப்பில் எஸ்.ரி.என் படத்தை அகற்ற வேண்டிய முடிவிற்கு வந்தது.

வாசகர்கள் இவ்விடத்தில் தலித் தலைவர்களின் படங்களை சிலைகளை அகற்றியும் சேதப்படுத்தியும் மேற்சாதி வெறீயர்கள் தமிழகத்தில் நடத்தும் வன் கொடுமையை இவ்விடத்தில் நினைவுபடுத்தவும்.

தம்மை நளவன் என்றும் தலித் என்றும் பொது அரங்குகளில் சந்திப்புகளில் மாநாடுகளில் பிரகடனப்படுத்தும்போது வெள்ளாளர்கள் கூனிக் குறுகித்தான் போகிறார்கள். குற்ற உணர்ச்சி கொள்கிறார்கள்.

அவை ஏற்படுத்தும் 'சங்கடங்களிலிடருந்து' தப்புவதற்கு தலித் என்று சொல்லாதே என எழுத்திலும் பேச்சிலும் முறையிடுகிறார்கள்.

அதுவும் மார்க்ஸியத்தின் பேரால்.

நம் காலத்தின் மிகப்பெரும் மார்க்ஸியரான தோழர் டொமினிக் ஜீவா சொல்கிறார்:

தலித் என்ற சொல் மிகமிக வலிமை வாய்ந்தது. ஆழமானது. அகலமானது.
அர்த்தபுஸ்டி வாய்க்கப்பெற்றது.

இந்தச்சொல் ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட, பஞ்சப்பட்ட ,தாழ்த்தப்பட்ட சகல மக்கள் பகுதியினரையும் உள்ளடக்கிய சொல்லாக -இலக்கியம் அங்கீகரித்த சொல்லாக- புழக்கத்தில் வந்துவிட்டது.

இந்தத் தலித் என்ற சொல்லின் விரிவும் வீரியமும் மராட்டியத்திலும் கன்னடத்திலும் ஆந்திரத்திலும் பரவலாகவும் தமிழகத்தில் சிறப்பாகவும் இன்று உணரப்பட்டு வந்துள்ளது. இதன் உள்ளடக்கக் கருத்து பலராலும் புரிந்துகொள்ளக்கூடியதாக வியாபித்து நிலைத்துவிட்டது.

அந்தச்சொல்லின் வலிமை என்னையும் ஆட் கொண்டகாரணத்தினாலேயே நான் எனது சுய சரிதையை நூலாக எழுதி வெளியிட முன்வந்தேன்.


" நாங்களும் மனுசங்கடா"

தலித் இயக்கம் கற்றுத்தந்த மூல மந்திரம் இது!********************************


அடிக்குறிப்பிற்காக!


  • அநாமதேயப் பெயர்களில் தனிமனித தாக்குதல்களையும் அவதூறுகளையும் நடத்தி அவர்களே கட்டுரை எழுதிவிட்டு தமது சொந்தப்பெயர்களில் யோக்கியவான்களாக அதைக் கண்டித்து பின்னூட்டம் விடுவது மனித மாண்புமல்ல மார்க்ஸியமுமல்ல.
  • நூல்வெளியீடுகளும் விமர்சனக்கூட்டங்களும் அந்த நூல்களைப் பிரபல்யப்படுத்தவும் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மேலும் மேலும் நம்மைச் செழுமைப்படுத்தவும் முக்கியமானவை.
  • "சுதந்திரம் என்பதே எப்போதும் மாற்றுக்கருத்திற்கான சுதந்திரந்தான் "என்பார் ரோசா லுக்ஸம்பேர்க்
  • களங்கமற்ற மனது மிகச்சிறந்த அறிவாற்றலைவிட மேலானது(இஸ்ரவேல் பழமொழி)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More