Slideshow

சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல் மற்றும் சுகனின் விமர்சனம்.


சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் தேசம்நெட் கண்ட நேர்காணல் கைநூலாக தேசம் நெட் வெளியிட்டிருக்கிறது. அந்த நேர்காணல் நன்றியுடன் இங்கு வெளியிடுவதுடன், சுகன் அனுப்பி வைத்த விமர்சனமும் கீழே இடம்பெறுகின்றது.


இக்கைநூலின் மின்நூலினை நூலகத்திலிருந்து தரவிறக்கிக்கொள்ளலாம்.
நூல் விமர்சனம்: சுகன்

“சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”.


-த.ஜெயபாலன்
‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40

நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல்.


சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ நாட்டின் அதிபராய் வரமுடியும். தமிழ் இந்து சமூகத்தில் ‘ஒரு வண்ணான்’ தமிழ் அரசியற் கட்சியினது தலைவராக வர முடியுமா? ஒரு பள்ளிக் கூடத்தின் அதிபராகக் கூட வரமுடியாது என்று கூறுகிறார் தோழர் செந்தில்வேல்: “இன்றுவரை சிறீ சோமஸ்கந்த கல்லூரியில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்தான் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நாசூக்காகச் சமாதான காலத்திலை சென்று மேல் மட்டங்களிலை அலுவல் பார்த்து இருக்கிறார்கள். 75 ஆசிரியர்கள் கல்வி கற்பிக்கிற ஒரு பாடசாலையில் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட ஆசிரியர், அவரும் தன்னை மறைச்சு அப்படி இப்படி என்று இருக்கிறார். இப்படிக் கன பாடசாலைகளில் அதிபராக வர முடியாது.”


இலங்கை அரசியல் நெருக்கடிக்கான தீர்வுகளையும், வழிமுறைகளையும், தேடல்களையும் நிகழ்த்திக்கொண்டிருக்கிற அய்ரோப்பிய புகலிட சூழலில் தலித்துகள் ஆட்சி செய்யும் இனமாக மாறுதல், வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து அகற்றுதல் போன்ற செயற்திட்டங்களை விவாதப் பொருளாக்கி வருவதும் தலித் மாநாடுகளின் பின்னணியுமான பகைப்புலத்தில் இச் சிறு கைநூல் வெளிவந்துள்ளது.
தலித்துகள் அரசியல் அதிகாரங்களை எப்படிக் கைப்பற்ற முடியும்? ஆட்சி செய்யும் இனமாக எப்படி மாற முடியும்? வெள்ளாளர்களை அதிகாரத்திலிருந்து எப்படி அகற்றவது? போன்ற மிக அடிப்படையான கேள்விகளைத் தவிர்த்து ஏதோ ஒரு இடத்தில் ஏற்பட்ட ‘சாதிக் கலவரத்தை’ எப்படிச் சமாதானப்படுத்தலாம் என்ற மனோபாவமே கேட்கப்பட்ட 50ற்குட்பட்ட கேள்விகளிலும் தொக்கி நிற்கிறது.
உதாரணத்திற்கு பக்கம்: 36ல் “இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் தலித்தியம் என்ற கோசம் அதே கருத்தாக்கத்துடன் இலங்கையிலும் பயன்படுத்தப்படுகிறதே?” என்ற உள்குத்துக் கேள்வி. ‘கோபுரம் அக்மார்க் மஞ்சள் தூள்’, ‘கோபால் பற்பொடி’ மாதிரி தலித்தியம் என்ற கோசம் வட்டுக்கோட்டைச் சந்தியிலுள்ள பெட்டிக்கடையில் விற்கப்படுவதாகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கேட்பவரும் பதில் சொல்பவரும் விவாதிக்கின்றனர்.
தலித்தியம் என்ற தனித்துவத்திற்கு நிறையவே விளக்கமளித்தாயிற்று. ‘தலித்தியக் குறிப்புகள்’ என்று தோழர் சரவணன் சரிநிகரில் காத்திரமான தொடர் எழுதி வந்துள்ளார். தோழர் டொமினிக் ஜீவா ‘தலித்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் தலித்தியம் குறித்து விரிவாகவே பேசியிருக்கிறார். லண்டன் தலித் மாநாட்டில் வாசிக்கப்ட்ட தோழர் ந. இரவீந்திரனின் கட்டுரை தெளிவாகவே இலங்கையில் தலித் அரசியலின் தேவையை முன்னிறுத்துகிறது. கடைசி முட்டாளுக்கும் தலித்தியம் என்பது ‘சாதி ரீதியாக ஒடுக்கப்படுகிறவர்களின்’ கூட்டு விழிப்புணர்வு என்று புரிகிறது. சாதித் திமிரில் இப்படியான கேள்விகளைக் கட்டமைத்து உலாவ விட்டவர்களிடம் கைமாற்றாக வாங்கிப் போகுமிடமெல்லாம் இத்துப்போன கேள்விகளை காவிக்கொண்டு திரிவதை நிறுத்துவது தமது மேற்சாதிய உணர்வுகளை மறைப்பதற்கான புத்திசாலித்தனமான வழிகளில் ஒன்று என நாம் தொகுப்பாளருக்குப் பரிந்துரைக்கிறோம்.


பதிலாளர் சொல்கிறார்: “நாங்கள் எங்களுடைய வெளியீடுகளில அந்தச் சொல்லைப் பயன்படுத்துறதில்லை. (பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ?) வேறுசிலர் பயன்படுத்துகிறார்களோ தெரியாது. ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுடைய பிரச்சினைகள் இருக்கு. ஆனால் இவை சொல்லிற அர்த்தத்தில தலித் என்று வியாக்கயானம் கொடுத்து அதுக்கு ஒரு கொள்கை கோட்பாடு வரையறை கொடுப்பது எதுவுமே அங்கு இல்லை”. ( அங்கு என்னதான் இருக்கு தோழர் இயனக் கூட்டையும், ஏறுபட்டி தளநாரையும், பறையையும் தவிர.) ஒரே ஒரு விதிவிலக்கு நடந்திருக்கிறது. ஒரு இழவு வீட்டிற்கு ‘பறைமேளம்’ பிடிக்கப்போய் கேட்டிருக்கிறார்கள். “இந்தா கிடக்கு மேளம் எடுத்துக்கொண்டு போய் அடியுங்கோ” என்று சொல்லியிருக்கிறார் நமது பெரியவர்.


“தாழ்த்தப்பட்டவர்கள் மாத்திரம் என்பார்கள் பிறகு முஸ்லீம்களும் அடங்கும் என்பார்கள்.இப்படிச் சொல்லாடல்கள் இருந்துகொண்டு வருகிறது. இவை சொல்லிற அர்தத்தில யாழ்ப்பாணத்துக்கோ வடக்குக் கிழக்கிற்கோ அது பொருந்தக் கூடியதாய் அந்தச் சமூக நிலைமை இல்லை. தாழ்த்ப்பட்ட மக்களுடைய பிரச்சினை இருக்கு. அதற்குத் தனித்தட்டு வியாக்கியானம் கொடுத்து வேற வேற அர்த்ங்கள் கொடுத்து –அதுவொரு பிழைப்புவாதம், வியாபாரம் என்றுதான் நான் சொல்லுவன்” என்கிறார் செந்தில்வேல்.


தலித் அரசியலை எதிர்க்கும் ‘நபர்’கள் சிரித்துச் சிரித்து பிரான்ஸில் அவ்வளவு உற்சாகமாக இவ்வெளியீட்டைக் கொண்டு திரிவதன் நோக்கம் இந்தக் கேள்வியிலும் பதிலிலும் உள்ளோடியிருக்கிறது. இப்படியான ‘இன்விசிபிள் தியேட்டர்’ (Invivible theatre)களின் பின்னாலிருந்து கள்ளக் குரலில் பேசாமல் நேரடியாகவே அரங்கிற்கு வருமாறு அவர்களை நாங்கள் அழைக்கிறோம்.


‘மார்க்ஸியத்தின் பேரால் முட்டாள்தனமாக மட்டுமே பேசுவோம்’ என்று லெனினில் அடித்துச் சத்தியம் பண்ணியிருப்பார் போலிருக்கிறது. அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களை ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் என்று அணுகாது சாதிரீதியாக தாழ்த்தப்பட்ட மக்களில் ஒருவர் என்ற உணர்வோடு அணுகியிருந்தால் இப்படியான பதில்கள் கூறவேண்டிய தேவையிருந்திருக்காது.


கடந்த அய்ந்து வருடங்களிற்கு மேலாக 2002ற்கு மேல் வடபகுதியில் தென்மராட்சி, வட்டுக்கோட்டை ( வட்டுக்கோட்ட சாதி மோதல்களுக்கு உடனடித் தீர்வு தேவை என்று தினக்குரலில் ‘கொட்டை எழுத்தில்’ செய்தி வந்ததை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.) அராலி, வேலணை என்று நிகழ்ந்துவரும் சாதி எதிர்ப்புப் போராட்டங்களும் மட்டக்களப்பில் சிகை அலங்கரிப்பாளர்களுடைய சலூன் கொழுத்தப்படுவதும், சாவீட்டு மேளம் அடிக்க தலித்துகள் வற்புறுத்தப்படுவதும் மறுப்பதும் தலித் அரசியலின் தேவையை வலியுறுத்துகிறதா? தமிழ்த் தேசியத்தின் தேவையை வலியுறுத்துகிறதா? ‘தலித்’ என்பது தமிழ்ச் சொல்லல்ல என்று சொல்பவர்கள் அங்கேயே நின்று கொட்டைவடி குழப்பியைக் குடிக்க வேண்டியதுதான். போராடும் மக்களுக்கு ஆதரவாகவும் தைரியமூட்டியும் முன்னின்று செயற்படுவதுதான் ஜனநாயகமும் மார்க்ஸியமும்.


மற்றொரு சுவாரசியமான கேள்விக்கு வருவோம்.


தேசம்: “தேசிய ஒடுக்குமறை நிகழ்கின்ற காலகட்டத்தில் சாதிய ஒடுக்குமுறைகளும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் அந்த சாதிய ஒடுக்குமுறைக்கான போராட்டத்தை எந்த அடிப்படையில் கொண்டு செல்வது?”


தோழர் செந்தில்வேல்: “ஒரு எல்லைக்குட்பட்ட அளவில்தான் கொண்டுசெல்ல வேண்டும். போராட்டம் என்ற நிலையைவிட அதனை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பிரச்சாரரீதியாகத்தான் கொண்டுசெல்ல வேண்டும். இது தமிழ்த் தேசிய இனத்துடைய ஐக்கியத்திற்கும் நிலைப்பிற்கும் கருத்தியல்ரீதியில் அதை (சாதியத்தை) உடைப்பதற்கான வேலைகளைச் செய்யும்.அதற்கு அப்பால் போராட்டமாக எடுப்பமாக இருந்தால் ஒட்டுமொத்தமாகவே தமிழ்த் தேசிய இனத்திற்கு பாதகமான விடயங்களைத் தோற்றுவிப்பதாகத்தான் முடியும்.”


நமது தோழர் சங்கானை சாதி எதிர்ப்புப் போராட்டத்தில் அ.அமிர்தலிங்கம் எடுத்த நிலைப்பாட்டை 40 வருடங்கள் கழித்து எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் இவற்றை ஒரு போராட்டமாகக் கூட தோழர் சி.கா. செந்தில்வேல் அவர்கள் இப்போதும் இனியும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. ஒரு மேற்சாதிக்காரத் தமிழ் அரசியல்வாதியினதும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களினதும் முடிவிற்கு மார்க்ஸயத்தின் பேரால் செந்தில்வேல் வருவதை நமது விதி என்று நொந்துகொள்வதா? சதி என்று நொந்துகொள்வதா? ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ போன்ற தலித் அரசியற் கட்சியினது தேவை இப்படியான சொதப்பல்களிலிருந்தே எழுகிறது.


“கொம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டதால் சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகம் அடைந்தது. நாங்கள் பாராளுமன்றப் பாதையைக் கைவிட்டு புரட்சிகரப் பாதையைத் தெரிவு செய்தவர்கள். அது போராட்டத்திற்கு உந்துதலை அளித்தது” என்ற தோழரின் கூற்று மிகவும் அபத்தமானது (பக்: 4) .


சாதி எதிர்ப்புப் போராட்டம் உத்வேகத்துடன் நடைபெறுவதற்கு கொம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டிருக்க வேண்டுமா என்பது முதலாவது கேள்வி.


தேர்தல்பாதை திருடர்பாதை
புரட்சிப்பாதை மக்கள்பாதை


என்று தலித்துகளிற்குக் கோசத்தைக் கொடுத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வெள்ளாளர்கள் போகக் கட்சி உடைந்து போனது கடந்த காலம். கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவால் வலதுசாரிகள் அரங்கிற்கு வந்ததும் தலித் மக்கள் உரும்பிராய் போன்ற இடங்களில் கட்சியின் பேரால் மோதிக்கொண்டதும்; சொற்பமாயினும் சிறந்ததாக இருந்த ‘சிறுபான்மைத் தமிழர் மகாசபை’ செயலிழந்து போனதும் (கொம்யூனிஸ்ட் கட்சியின் பிளவோடு அது செயலிழந்து போனதாகத் தோழர் கூறுகிறார் பக்:6) பல்வேறு தலித் அமைப்புகள் இயங்க முடியாமற் போனதற்கும் கம்யூனிஸ்ட் கட்சிப் பிளவும் ஒரு காரணமாகயிருந்தது என்பதே கடந்த காலம். கட்சியிலிருந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பவுத்ததிற்கு மாறியதைக் குறித்துக் கட்சி எடுத்த நடவடிக்கைகள் (பக்கம்: 15) இன்னும் மிகப்பெரிய அபத்தம்.


நூலின் தலைப்பு “சாதியப் போராட்டம்: சில குறிப்புகள்” உண்மையில் தலைப்பு “சாதி எதிர்ப்புப் போராட்டம்: சில குறிப்புகள்” என்று இருந்திருக்க வேண்டும். இது கவனக்குறைவால் விடப்பட்ட தவறாகத் தெரியவில்லை. பல்லாயிரம் முறை சாதி எதிர்ப்பு என்றும் தீண்டாமை ஒழிப்பு என்றும் பேசியும் எழுதியும் வந்தாயிற்று. சாதி எதிர்ப்பிலுள்ள எதிர்ப்பைத் தவிர்ப்பது திட்டமிட்டு கவனமாகத் தவிர்க்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.


பக்: 39ல் ‘சமூக நீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்று இருக்கிறது. அது ‘சமூக நீதிக்கான மக்கள் இயக்கம்’ என்று இருந்திருக்க வேண்டும். ‘எதிர்ப்பு’ வரவேண்டிய இடத்தில் வராமலும் வரக்கூடாத இடத்தில் வந்தும் இருக்கிறது. ‘சமூக அநீதிக்கு எதிரான மக்கள் இயக்கம்’ என்றும் வந்திருக்கலாம். திருத்தப்பட்டிருக்க வேண்டிய சொற்பிழையும் பொருட்பிழையும்.


பக்: 5ல் “வெள்ளாளரைப் போல் கரையார சமூகத்தை ஆதிக்க சமூகமாகப் பார்க்க முடியுமா?” என்று கேள்வியாளர் கேட்கிறார். அது ‘கரையார் சமூகம்’ என்றிருந்திருக்க வேண்டும். ‘தமிழர் சமூகம்’ என்பதைப் போல. ‘கரையாரச் சமூகம்’ என்பது ‘கரையாரப் பயல்’, ‘வண்ணாரப் பயல்’ என்ற இழித்துரைப்புடன் தொடர்புபட்டது. தோழர். செந்தில்வேலும் ‘கரையாரச் சமூகத்தை’ என்றே பாவிக்கிறார். தனது சாதியைக் குறிப்பிடும்போது ‘வண்ணார் சமூகத்தில்’ என்று விழிப்புணர்வுடன் கவனமாகவே குறிப்பிடுகிறார். பக்கம் 24ல் ‘தமிழர் சமூகம்’ என்பதை வெள்ளாளர் சமூகமாகவே குறித்துக்காட்டுகிறார்.


மேலும் ‘சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்’ என்று நூலின் தலைப்பிருக்கிறது. 50 வருடங்களாக இடதுசாரி இயக்கத்திலும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலும் இருக்கும் சமூகத்தின் முதற் பிரதிநிதி என்ற வகையில் ஒரு மரியாதையுடன் அவர் பெயரைக் குறித்திருக்கலாம். ‘தோழர். சி.கா. செந்தில்வேல் அவர்களுடன்’ என்றோ வேறுவிதமாகவோ.


தலைவர். அ.அமிர்தலிங்கம் அவர்கள், தந்தை செல்வநாயகம் அவர்கள் என்பதைப்போல முன்னட்டையில் கனம் பண்ணியிருக்கலாம். மேலைத்தேய மரபில் இதற்கு முக்கியத்துவம் குறைவானாலும் நமது மரபில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. தவிர்ப்பது எங்கோ இடிக்கத்தான் செய்கிறது. யாழ் பல்கலைக்கழகத்தில் தோழர் டொமினிக் ஜீவாவிற்கு கௌரவம் மறுக்கப்பட்டதும் ஞாபத்தில் உறுத்துகிறது.


இறுதியாக சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என்று சதா வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம். “வருந்தி அழைத்தாலும் வாராது வாரா! பொருந்துவன போமின்றால் போகா” என்பது அவ்வையார் வாக்கு. வடக்குக் கிழக்கில் தலித்துகளிற்கு ஒரு சர்வதேச சமூகம் இருக்குமென்றால் அது இலங்கை அரசுதான். அது கடந்த காலங்களில் சமூகக் குறைபாடுகள் ஒழிப்புச் சட்டத்தை நிறைவேற்றியது. தலித் மக்களிடையே கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கி பொருளாதாரரீதியில் சற்றேனும் கைதூக்கி விட்டது. தலித் மக்களின் குடியிருப்புகளில் பாடசாலைகளை உருவாக்கியது. அது சாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்தும் தேசவழமைச் சட்டங்களையும் பெருமளவில் முடிவுக்குக் கொண்டுவந்தது. மேயர் செல்லன் கந்தையன் அவர்களை துணைமேயர் ரவிராஜ் சாதி சொல்லித் தாக்கியது போன்ற தருணங்களில் புதிய தேசவழமைச் சட்டங்கள் மீண்டு வரத்தான் செய்கின்றன. சர்வதேசச் சமூகத்திற்கு பிரச்சனைகள் எடுத்துச் சொல்லப்பட வேண்டும்.


எரிக் பிறீட்டின் (1921- 1988) கவிதையுடன் இந்த நூல்விமர்சனத்தை முடிக்க விரும்புகிறேன்:
பொஸ்டனிற்கு ஒரு இறுதிக் கடிதம்
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்குத் தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிவேனாயின்
சிலவேளை
அது அர்த்தமற்றுப் போகலாம் ஆனால்
அர்த்தம் ஒன்று இருக்குமெனில்
என் தொடர்ந்த போராட்டத்தினால் மட்டுமே
அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாமென்பது
அப்போது எனக்குத் தெரிய வரக்கூடும்.
எதற்காக நான் போராடுகிறேன் என்று
எனக்கு எதுவுமே தெரியாதிருக்கிறது என்பதை
நான் அறிய விரும்பவில்லையாயின்
என் தொடர்ந்த போராட்டம்
என் அறிய விரும்பாமைக்கு மட்டுமே
அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் அவ்வாறான போராட்டம்
அதன் அர்த்தம் பற்றிக் கேள்வி எழுப்புவதற்கெதிராகப்
போராடுகிறது.
நான் தொடர்ந்து போராட விரும்பாவிடின்
எனது தொடர்ந்த போராட்டத்தினது
அர்த்தத்தினை
நான் அறியவே முடியாது போகலாம் என்றுதான்
நான் நினைக்கிறேன் என்பதறிவேன்…/

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More